Skip to content
Home » வாழ நினைத்தால் வாழலாம்-13

வாழ நினைத்தால் வாழலாம்-13

அத்தியாயம்.. 13

முதலில் அவள் அழட்டும்….மனசு ஆற்றட்டும்…. பிறகு பேசட்டும் என்று விவேக் காத்திருந்தார்.

மெல்ல மெல்ல விடியத் துடிக்கும் வானம் போல் அவள் தன் வலியை கொட்டிவிட்டு, அவள் அவளாக நின்றாள்.

அவர் மெதுவாக தன் போனை உயிர்ப்பித்து. அந்த வாட்ஸ் அப் செய்தியை காண்பித்தார்……

விவேக்….என் ஒற்றை கையும் காலும் போய் பதினெட்டு மாசம் ஆயிடுச்சு டா. உனக்குத் தெரியும் இந்த நிலையில் இருந்த என் அப்பாவை பார்க்க நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன்னு. ஹோமில் சேர்க்க விரும்பாமல் நானே பார்த்தேன்….

கடைசியில் அவருக்கு டிமென்சியா வந்து…. சமாளிக்க முடியாமல் அவரை ஹோமில் சேர்த்தேன்.

இப்ப எனக்கும் அதே கதி. டிமென்சியா மட்டும் இல்லை. சந்தியா வாழணும். என்னை கட்டிக்கிட்டு அவள் என்னைப் போல் சிறைக் கைதியாக வாழக் கூடாது. அதான் அவளை டார்ச்சர் பண்ணிக்கிட்டே இருந்தேன். அப்படியும் அவள் என்னை ஹோமில் சேர்க்கலை….அப்புறம் பொறுமை இழந்து நானே போய் சேர்ந்துக்கப் போறேன். என் ஒற்றை கை உனக்கு டெக்ஸ்ட் பண்ண உதவியிருக்கு. நான் பட்ட கஷ்டம் சந்தியா படக் கூடாது. அவளுக்குப் புரிய வை.

சேர்ந்து வாழ்ந்தோம். சேர்ந்து போக போவதில்லை. என் ஆயுசு பரியந்தம் இந்த முடம் எனக்கான விதி. இனிமேல் என்ன இருக்கு சேர்ந்து வாழ.?

என்னை மனுஷனாக்கி அன்பில் குளிப்பாட்டி அவள் என்னை பார்த்துக்கிட்ட நாட்களை எண்ணிக் கொண்டே நான் வாழ்ந்திடுவேன்.

மலர் பாதையில் அவள் நடக்கட்டும். இந்த முடவன் பாதையின்  முள்ள மேல் அவள் கால் பட வேண்டாம். புரிய வை நண்பா…. நீ வரும் போது நான் அன்னை தெரசா ஹோமில் இருப்பேன்….

“படிச்சிட்டியா.? நீ என்ன நினைக்கிறே.?”

“அண்ணா….என்னை செருப்பால அடிச்சுக்கணும் போல இருக்கு. அவரை நான் புரிஞ்சுக்கவே இல்லையே.? அவரை கொடுமை படுத்தும் கணவனா தப்பா நினச்சுட்டேன். அவர் அங்கே தனிமையில் வாடும் போது நான் இங்கே மகிழ்ச்சியா இருக்க முடியுமா அண்ணா.? உடல் தானே முடமாச்சு.? மனசு இல்லையே.? இந்த நிலையிலும் சேர்ந்து மகிழ்ச்சியா வாழலாம்னு அவருக்கு புரிய வச்சு கூட்டி வாங்க அண்ணா.” என்றாள் சந்தியா கண்ணீரோடு.

“சந்தியா….அது அவ்வளவு சுலபமில்லை. அவன் அப்பாவை அவன் பார்த்துக்கிட்ட போது….அது ஒரு எமோஷனல் போராட்டமா இருந்துச்சு. இவன் அப்பா முடியாம விழுந்த போது, அம்மா பேச்சைக் கேட்டுக்கிட்டு இவன் அம்மா அவரை தவிக்க விட்டிட்டு போயிட்டாங்க. அதான் அவனுக்கு அம்மா மேலும், பாட்டி காந்தம்மை மேலும் அளவில்லாத கோபம். வெறுப்புன்னு சொல்லலாம்.”

“ஓரளவு தெரியும் அண்ணா.”

பாட்டி பற்றி சொன்னாள் சந்தியா.

“செல்வம் போய் இறுதியா அம்மாவும் மகளும் வறுமையில் வாழ்ந்த கதையையும் சொன்னாங்க. அம்மாவின் இறுதி சடங்குக்கு கூட அவர் போகல. பாட்டி சொன்னாங்க. மன்னிப்பு கேட்டுக்கிட்டு தான் உயிரை விட்டாங்க பாட்டி.” என்றாள் சந்தியா.

“ராஜகோபாலின் தாத்தா பாட்டி செல்வந்தர்கள் தான். ஆனால் தாத்தா செத்த பிறகு தான் கடன் இருந்தது தெரிஞ்சுது. சொத்துக்களை விற்று கடனை அடைக்க வேண்டியதா போச்சு. வறுமை வந்துச்சு. காந்தம்மை பாட்டி மகளை கணவனுடன் நன்றாக வாழ விடலை. வீடே ரணகளம் தான்.  ராஜகோபால், அப்பா அம்மாவின் சண்டையை பார்த்தே வளர்ந்தான். அம்மா இறுதியா விட்டுவிட்டு போனதும் இவன் பொறுப்பு அதிகமானது. அந்த ஸ்ட்ரெஸ் அவன் மனதை தைச்சுது…..”

“அதான்….தானும் இப்படி விழுந்ததும்….நான் பார்த்துக்கிட்டு கஷ்டப்பட வேண்டாமுன்னு முடிவுக்கு வந்திட்டார் போல. இப்ப புரியுது. ஆனா நான் அவர் அம்மா மாதிரி இல்லைன்னு அவருக்கு புரியாம போச்சே! எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை அண்ணா.”

“சந்தியா….. தமிழ் இலக்கியத்திலெ ஒரு பாட்டு உண்டு. பாலைவனத்திலே ரெண்டு மான்கள் நீர் நிலை ஒன்றை கண்டுபிடிச்சுதாம். பெண் மான் நீர் குடிக்கட்டும்ன்னு, ஆண் மான் சும்மா வாயை உறுஞ்சுவது போல் பாசாங்கு செஞ்சுச்சாம். ஆண் மான் நீர் குடிக்கட்டும்ன்னு பெண் மானும் அதே தான் செஞ்சுச்சாம். காதலின் இலக்கனமாக இதை சொல்வாங்க. அந்தக் கதையா தான் இருக்கு உங்க கதை. உங்க லவ் புரியுது….ஆனா அது செத்துப் போகக் கூடாது இல்லையா.? சொல்லு நான் என்ன செய்யட்டும்.?”

“அவரை வீட்டுக்கு கூட்டி வந்திடுங்க அண்ணா. எந்த நிலையிலும் அன்போடு வாழ முடியும்ன்னு புரிய வையுங்க. ரெண்டு மானும் நீர் குடிக்காம செத்துப் போகும். அப்படி நாங்க மரிச்சுப் போகனுமா.? ஐ வான்ட் டு லிவ் வித் ஹிம்……உடல் ஊனம் தடை இல்லே.”

“சந்தியா….உன் அனுமதியோட நான் ஒன்று செய்யலாமா.?”

“சொல்லுங்க அண்ணா..”

“ஊட்டியில் எங்க வீடு ஒண்ணு இருக்கு. அதை விக்கணும். அதுக்கு தான் வரணும்னு இருந்தேன். அதுக்குள்ளே இவன் மெசெஜ் வேறு வந்துது. அதான் உடனே புறப்பட்டு வந்தேன். அவனுக்கு ஒரு சேஞ் தேவை. அவனை ஊட்டி கூட்டிப் போக அனுமதிப்பியா.? அங்க பேசி புரிய வைக்க முடியும்னு நம்பறேன்…..என்ன சொல்றே.?”

சந்தியா உடனே ஒப்புக் கொண்டாள்.

“மிஷின் ரிபேர் ஆனா சரி பண்ணற மாதிரி, இப்ப மனுஷனுக்கும் சில ரிபேர்களை சரி பண்ண வேண்டி இருக்கு. தேங்க்ஸ் சந்தியா என்னை நம்பி அவனை அனுப்ப சம்மதிச்சதுக்கு. டவ்வான காரியம் தான். நான் முயற்சி பண்ணறேன்.” என்றார் விவேக்.

ராஜகோபாலை தன் காரிலேயே ஊட்டிக்கு கூட்டிப் போனார் விவேக். நீ அவனை இப்ப பார்க்க வேணாம்….என்று சந்தியாவை தடுத்து விட்டார். சந்தியா தூரத்திலிருந்து கணவனை பார்த்து மானசீகமாக டாட்டா காண்பித்து அனுப்பி வைத்தாள்.

கடவுளே எங்கள் உறவை புதுப்பித்து கொடு என்று வேண்டிக் கொண்டாள். அம்முவை கைபிடித்து அன்புடன் வீட்டுக்கு வந்தாள்.

“டீச்சர்….உங்க சாருக்கு நல்லா ஆயிடும். சீக்கிரம் வந்திடுவார்.” என்றாள்.

“பெரிய மனுஷி மாதிரி பேசறயே. தாங்க்யூ. நீ நல்ல படிக்கணும் என்ன.? அப்பா போனது வருத்தமான விஷயம் தான். அதுக்காக முடங்கி கிடந்து ஆப் ஆயிடாதே.”

“அம்மா மாதிரி பேசறீங்க. உங்களுக்கு தான் நான் தேங்க்ஸ் சொல்லணும். அப்பா கடுமையா உழச்சாங்க. ஹார்பரில் கப்பலில் லோட் ஏத்தற வேலை. கஷ்டமான வேலை. அப்பாவுக்கு ஹார்ட் பிரச்சனை….வைத்தியம் பார்க்க காசு இல்லே….அதான்.”

சிறுமியின் கண்ணில் நீர் தேங்கியது. அதை சுண்டி விட்டாள் சந்தியா. அவள் கையை பிடித்து தன்னுள் வைத்த போது, அவளுக்கும் ஒரு ஆறுதல் கிடைத்தது.

இந்தச் சிறுமிக்கு, அவள் பிறந்ததுமே அம்மா இறந்து போனாள். அம்மாவின் அணைப்பை அவள் கண்டவள் இல்லை. பார்வை இல்லாதவர்களுக்கு ரோஜாவின் வாசமும், அழகும் தெரியாதது போல். சிறுமிக்கு அம்மாவின் அன்பு எப்படி இருக்கும்னு தெரியாது….

“அம்மு….மனசிலே எதுவும் வச்சுக்காதே. இது உன் வீடு மாதிரி நினச்சுக்கோ. என்ன வேணுமோ கேளு. அப்பா வேணும்னு மட்டும்  கேட்றாத.” என்றாள் சந்தியா.

“டீச்சர்….நீங்க கூட்டி வராட்டி, நான் தங்க இடமில்லை. வீட்டு வாடகை மூணு வருஷமா பாக்கி….நான் அனாதையா நின்னேன்..”

“பீல் பண்ணாதே….விடு. நீ என் உயிரை காப்பாத்தினே..நான்..”

“என் மனசை காப்பாத்தினீங்க. இருக்க இடம் கொடுத்தீங்க. பசியிலே உயிர் போகும். மூணு நாள் சேர்ந்தாப்பிலே கூட சாப்பிடாம இருந்திருக்கோம் டீச்சர். அப்பா லோட் இறக்கினா தான் எங்களுக்கு ஒரு நேர சாப்பாடு. அதான் அப்பா நல்லா படி….நல்லா படின்னு  சொல்லிட்டே இருப்பார். டீச்சர்……கடவுளுக்கு நன்றி சொல்லணும். கோவிலுக்கு போலாமா.?’

சிறுமியுடன் சந்தியாவின் நேரம் அர்த்தமுள்ளதாக மாறியது. இந்தக் குட்டிப் பெண்ணால் தன் உலகம் இவ்வளவு லகுவாக மாறும் என்று அவள் நினைக்கவே இல்லை.

மன அமைதி என்பது அன்பில் மட்டும் தான் கிடைக்கும். ஆடம்பரத்திலோ, பணத்திலோ இல்லை….

சிறுமி எல்லா வேலையிலும் உதவி செய்தாள். வீடு பெருக்குவது. பாத்திரம் கழுவுவது….ரசம் கூட அவளுக்கு வைக்கத் தெரிந்திருந்தது.

“நீ எல்லாம் வேலை பார்க்கவே கூடாது அம்மு. விடு நான் பார்த்துக்கிறேன்..” என்றால் அவள் விடுவதில்லை. படிப்பிலும் கெட்டி. பள்ளிக்கு அழைத்து போவாள். நிறைய உடைகள் வாங்கித் தந்திருக்கிறாள். அம்மு பூசினாற் போல் பொலிவு பெற்றாள்.  சந்தியாவின் வாழ்வில் இது ஒரு சின்ன வசந்தம்.

அவர் இப்ப எப்படி இருக்காரோ என்ற கவலை அவளுக்கு அடிக்கடி வந்தது. அப்பொழுதெல்லாம் மௌனமாக இருப்பாள்….

“டீச்சர்….கவலைப்படாதீங்க…. சாமிக்கு பூ போட்டு பார்த்தேன். மல்லிகை பூ வந்துச்சு. சார் ஹாப்பியா வருவார்….”

வாழ்வின் ஒரு புது அத்தியாயம் தொடங்கியது போல் இருந்தாலும்.. கணவனுக்காக அவள் கவலைப்பட்டாள்.

“என் உயிரை காப்பாத்தியது இந்த சிறுமி தான் சரசு…. அவள் வந்து கதவை தட்டாவிட்டால் நான் எல்லா மாத்திரைகளையும் முழங்கி இருப்பேன். நடப்பது எல்லாதுக்கும் ஒரு அர்த்தம் இருக்கு இல்லே.? விவேக் அண்ணா வந்தது எனக்கு கிடைத்த வரம்.” என்றாள் தோழியிடம்.

இங்கே ஊட்டி மலை சூழலில் ராஜகோபால் இளைப்பாறிக் கொண்டிருந்தார்.

“உனக்கு பாரமா இருக்கேன் டா….”

“பயித்திக்காரன் மாதிரி உளராத. இந்த ஜூஸ்சைக் குடி.”

“நான் இதுக்கு அருகதை உள்ளவனா.?”

“முட்டாள். இப்படி நினைத்து தான் உன்னை நீயே அழிச்சுக்க பார்த்த.” என்றார் விவேக்.

இங்கு வந்து ஒரு மாசம் ஓடிவிட்டது. விவேக் பிஸியோதிரபிஸ்ட் ஏற்பாடு பண்ணியிருந்தார்.

“ஒழுங்கா மரியாதையா அவங்க சொல்றா மாதிரி ஒத்துழை. பலன் எல்லாம் உடனே கிடைக்காது. மெதுவாத் தான் சரியாகும். டாக்டர் உனக்கு ஸ்பைனில் பிரச்சனை இல்லைன்னு சொல்றார். உனக்கு நர்வ்ஸ் ரொம்ப வீக்காம். அதனால் வந்த பிரச்சனை தான். குணமாக வாய்ப்பு இருக்கு.”

“நிஜமாவா சொல்றே.?”

“பின்னே.? கை கால் போச்சுன்னா, உடனே அவ்வளவு தான் வாழ்க்கைன்னு முடிவு பண்ணிட்டியா.? கஷ்டமா தான் இருக்கும். ஜாலியா நடந்துக்கிட்டு, உன் வேலையை நீயே பார்த்துக்கிட்டு இருந்தே. இப்ப வேற ஒருத்தரை டிபென்ட் பண்ணி வாழணும்னா எரிச்சல் தான் வரும். அதுக்காக நீ சந்தியாவை இப்படியா டார்ச்சர் பண்ணுவே.? அவ என்னடா பண்ணினா.? நீ படிச்சவன். உன்னாலே உன் ஊனத்தை அக்சப்ட் பண்ணிக்க முடியலை இல்லே.?”

ராஜகோபால் எதுவும் பேசவில்லை. 

“சந்தியாவிடம்  ஊசி குத்துவது போல் வாயாடினியே. இப்ப எங்க போச்சு உன் வாய்.? உனக்கு வாய் கோணாமா போச்சே அதுக்கு கடவுளுக்கு நன்றி சொல்லணும்.”

“வாய் கோணி பேச முடியாம போயிருந்தா கூட நல்லது தான்னு நினைக்கறேன் டா. சந்தியாவை திட்ட முடியாம  இருந்திருப்பேன் இல்லையா.?” என்றார் ராஜகோபால். அதில் அவ்வளவு வலி இருந்தது. ஒரு உண்மையை புரிந்து கொண்டார் விவேக்.

அத்தியாயம்—14

வானம் சட்டென்று இரவின் இருட்டிலிருந்து வெளிச்சமாய் விடிந்து விடுவதில்லை. மெல்ல மெல்ல தான் கிழக்கு வெளுக்கிறது. ராஜகோபால் ஊனமும் மெல்ல மெல்ல தான் தெரியது. விவேக்கின் அன்பும் ஆதரவும் மட்டுமல்ல அதுக்குக் காரணம், டாக்டரின் பங்களிப்பும் அதில் இருக்கிறது.

ராஜகோபாலின் விளங்காத கை லேசான செயல்பாட்டுக்கு வந்தது.

“நீ மட்டும் முதலிலேயே கோவாப்பரேட் பண்ணியிருந்தா….உன் கை முழுக்க சரியாகியிருக்கும்…”

டீ கப்பை அந்தக் கையால் எடுத்து கொள்ள ராஜயகோபாலால் முடிந்தது. அவருக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. ஆனால் கையை மேலே தூக்க முடியவில்லை.

“இந்த இம்புருவ்மெண்ட்டே எனக்கு வரப்பிரசாதமா இருக்கு. இது சாத்தியமாகும்ன்ணு நான் நினைக்கவே இல்லை.” என்றார் மகிழ்வுடன். கால் மட்டும் அந்தளவு முன்னேற்றம் அடையவில்லை.

காலின் இரு புறமும் பிரேசஸ் போட்டு இழுத்து இழுத்து நடக்க முடிந்தது. அதுவே ராஜகோபாலுக்கு சொர்க்கத்தை கண்டது போல் இருந்தது. “நீ லக்கி டா. எல்லோருக்கும் இந்த அளவு சரியானதாக சொல்ல முடியாதுன்னு டாக்டர் சொல்றார். தசைகளின் வீக்னஸ் தான் உன் வியாதி. மெடிக்கல் டெர்ம் என்னவோ சொல்றார். வாயில் நுழையலை. அது எதுக்கு நமக்கு.? மாத்திரைகளை விடாமல் சாப்பிடனும். சரியா.?”

“சந்தியாவை பார்க்கணும்.” என்றார்.

“இப்ப வேண்டாம் இன்னும் மூணு மாசம் போகட்டும். உன் மனசு அதுக்கு தயாராகனும்.” ராஜகோபால் முகம் வாடியது.

1 thought on “வாழ நினைத்தால் வாழலாம்-13”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *