அத்தியாயம்.. 2
பல ஆண்டுகளின் நினைவிலிருந்து மீண்டாள் சந்தியா. எக்ஸ்பிரஸ் போல் சென்ற அவள் வாழ்க்கை இன்று குட்ஸ் வண்டி போல் பாரத்துடன் ஓடுகிறது. முதுமையின் ஆரம்பத்தில் இருக்கும் பலருக்கும் இந்த கதி தான். ஒரு தேக்கமான நிலை வந்துவிடுகிறது.
ஜன்னல் வழியே சூரிய வெளிச்சம் இளம் சூட்டோடு கட்டிலில் படுத்திருந்த ராஜகோபால் மேல் விழுந்து அவரை எழுப்பிவிட்டது. அவர் கண் கூசியது. ஜன்னலை யார் திறந்துவிட்டது.? வேறு யார் அந்த சந்தியாவாத் இருக்கும். இங்கு வேறு யார் இருக்கிறார்கள்.? இடியட்.. கொஞ்சம் கூட காமன் சென்ஸ்செ இல்லை….”
“ஏய்….இங்கே வா..” என்று சத்தம் போட்டார்.
காலண்டர் முன் நின்று பழய நினைவுகளில் மூழ்கி இருந்த சந்தியா திடுக்கிட்டு நிகழ் உலகத்துக்கு வந்தாள்.
கூப்பிட்டுவிட்டாரா….ஆரம்பமாகிவிட்டது போதாத வேளை. இனி நாள் பூரா தூங்கப் போக்கும்வரை புதிய புதிய அர்ச்சனை சொற்களை தேடி வைவார்…… வயசு அறுபத்தி ரெண்டை தாண்டிக் கொண்டிருந்தார்……இளமையான முதுமை தான். ஆனால் மனசு தான் முதிர்ந்து கடினப்பட்டு விட்டது.
“ஏய்….காதிலே விழலை. இங்க வந்து தொலை….”
என் பேர் ஏய் இல்லே…. என்று அவள் சொன்னாள் தான். ஆனால் இந்த ஒரு வருஷமாக அவர் இப்படித் தான் கூப்பிடுகிறார். மனம் நிறைய சுருக்கங்கள். யார் ஐயர்ன் பண்ணுவது.? வயதாக வயதாக தோலில் தான் சுருக்கங்கள் வரும். இவருக்கு கூடவே நல்லாயிருந்த மனசில் சுருக்கங்கள் விழுந்துவிட்டது. எல்லாம் அவர் கட்டிலில் விழுந்த பின் தான்……
“இதோ வந்திட்டேன்….” அவர் அறைக் கதவை திருந்து கொண்டு அவர் முன் நின்றாள்.
“என்ன வேணும்.? இங்கே தானே இருக்கேன். மெதுவா பேசலாமே. எதுக்கு கத்றீங்க?….”
“புருஷனை கவனிக்க துப்பில்லை. வாய் மட்டும் எட்டு முழத்துக்கு இருக்கு. காப்பி கொண்டு வா. ஒரு கை ஒரு கால் தான் விளங்கலை. நாக்கு ஒண்ணும் செத்துப் போகலை….எதுக்கு ஜன்னலை திறந்து வச்சே? மூஞ்சிக்கு நேரே சுள்ளுன்னு அடிக்குது வெயில்……சே. “
“சுத்தமான காலைக் காத்து வீசட்டுமேன்னு தான் ஜன்னலை திறந்தேன். அதுக்கு போய் இப்படி ஆர்ப்பாட்டம் பண்றீங்க.”
“ஜன்னலை மூடித் தொலை. உன் கரிசனம் போதும். ஆமா….அங்க என்ன பண்ணிக்கிட்டு இருந்தே.?”
“ஒண்ணுமில்லே……காலண்டரை பார்த்தேன். இன்னிக்கு நம்ம கல்யாண நாள். நியாபகம் இருக்கா.?” என்றாள் மகிழ்ச்சிக் குரலில்.
அவர் பெரிதாக சிரித்தார்.
“கல்யாண நாள்…..கருமாதி நாள். அன்று தானே ரிசெப்ஷன் போது மயங்கி விழுந்தே.? எவனோ ஒரு பொரம்போக்கு உன்னை தாங்கிப் பிடிச்சான். நீயும் சினிமா ஹீரோயின் மாதிரி அவன் கையில் விழுந்து கண்ணை பார்த்து சிரிச்சிட்டு இருந்த.? அந்தக் கல்யாண நாளை கொண்டாடனுமாக்கும்……”
அவள் கணவனா இப்படி பேசுவது.? அன்று அவள் மயங்கியது பார்த்து பதறிய முகமா இது.?
இது மாதிரி சம்பந்தம் இல்லாமல் பேசி அவளுக்கு சிறு சிறு ரணங்களை ஏற்படுத்துவதில் அவருக்கு உற்சாகம் இருப்பதாகப் பட்டது அவளுக்கு.
சரசுவுக்கு வரும் வழியில் ஆக்சிடெண்ட ஆகி அவள் ஐ. சி. யூ வில் இருப்பதாக அவள் அப்பா பதறிப் போய் போனில் சொன்னார். அது கேட்டு அவள் மயங்க….ஜூஸ் கொடுத்துக் கொண்டிருந்த பையன் அங்கு வர, ஜூஸ் கப்புகள் அடங்கிய டிரேயை போட்டு விட்டு அவளை கீழே விழாமல் பிடித்துக் கொண்டான்…..இல்லை தரையில் டம்மென்று விழுந்திருப்பாள். அக்கா ஓடி வந்தாள்….
“ஒண்ணுமில்லே டீ. சரசுவுக்கு ஒண்ணும் ஆகாது..ரிலாக்ஸஸ்.” அக்கா வந்து அவளை வாங்கிக் கொண்டாள். அக்கா ஆறுதல் சொல்ல அவள் ஒருவாறு சமாளித்து சோபாவில் அவன் அருகே போய் உட்கார்ந்தாள். ரிசெப்ஷன் எப்ப முடியும் என்று காத்திருந்தாள். சரசுவின் அப்பாவுடன் பேசவேண்டுமே!….ஜூஸ் பையன் அருகில் வந்து ‘அக்கா ஆர் யு ஆல்ரைட்?’ என்றான்….அவள் தலை ஆட்டினாள். அவ்வளவு தான் அன்று நடந்தது.
“என்னாச்சு சந்தியா.? ஆர் யூ ஓ. கே.?” என்று கனிவுடன் இளம் கணவன் கேட்ட போது அவள் உள்ளம் பூரித்தது. இன்று குதர்க்கமான பேசுகிறார்.
“ஏங்க இது தான் உங்களுக்கு நியாபகம் வருதாக்கும்.? நாம இருபது வருஷம் சந்தோஷமாகத் தானே வாழ்ந்தோம்.? ரெண்டு பிள்ளைகளை பெற்றோம். எதுக்கு ஏடா கூடமா பேசறீங்க.?”
“என்னமோ தெரியலை டீ….எனக்கு கோபம் கோபமா வருது. சந்தியா எவ்வளவு நாள் தான் இப்படி நான் முடங்கிக் கிடப்பது.? பாரு என்னை விட நீ அஞ்சு வயசு சின்னவ….ஜாலியா நடக்கிறே….ஓடற சாடற….நான் இந்தக் கட்டிலோட விழுந்து கிடக்கேன்….” ஆற்றாமை கண்ணீர் முட்டி நின்றது.
சில சமயம் இப்படித்தான் சுய பச்சாதாபம் மேலிட குழந்தை போல் அழுவார் பரிதாபமாகத் தான் இருக்கும். என்ன செய்வது.? விதி கொடுத்திருக்கும் வாழ்க்கையை ஏற்று தானே ஆகணும்… ..
“சந்தியா….பேத்திக்கு இன்னிக்கு பிறந்த நாள். வீட்டுக்கு வாயேன். அப்படியே கோவிலுக்குப் போயிட்டு வரலாம்….” என்பாள் அக்கா.
“என்னங்க….நான் போயிட்டு வரட்டுமா.? அக்கா பேத்தி ஸ்வாதி……” இது அவர் விழுந்த புதிதில் நடந்தது. அக்கா பெண் சுதாவின் மகள் ஸ்வாதி. அக்கா பையன் பாலன் குடும்பமும் வந்திருக்க, எல்லோரையும் பார்க்கலாம் என்ற ஆவலில் கேட்டாள்.
அன்று ஆரம்பித்தது தான் ஏய் என்ற அடைமொழி.
“ஏய்….என்ன சொல்றே நீ.? புருஷன் இங்கே படுத்த படுக்கையா இருக்கான், உனக்கு வீதி உலா கேக்குதோ.?.” கத்தினார்.
“கோவப்படாதீங்க. ஒரு ரெண்டு மணி நேரம் தான். போயிட்டு சுருக்கா வந்திடுவேன். எவ்வளவு நேரம் இந்த வீட்டையே சுத்தி சுத்தி வாரது?. எனக்கு மூச்சு முட்டுது….”
அவர் நம்பாமல் அவளைப் பார்த்தார். இரக்கமில்லாமல் அவரை தனியே விட்டு விட்டு உல்லாசமா போகப் ஆசைப்படுக்கிறாள். இவள் எல்லாம் ஒரு மனைவியா.?….
“நான் உன் புருஷன் டீ. தாலி கட்டியது எதுக்கு.? எனக்கு பணிவடை செய்யாம தப்பிக்க பாக்கிறே.? இது உன் கடமை. மகாபாரதத்திலே காந்தாரி புருஷனுக்கு கண் தெரியாதுன்னு தன் கண்களை கட்டிக்கிட்டு வாழ்ந்த பூமி டீ இது…….நீ நீ ஊரு சுத்த கிளம்பிட்டே… இப்படி எண்ணை வச்சுக்கிட்டு….”
அன்றிலிருந்து அவள் வீட்டோடு தான் கிடக்கிறாள்….
“உன்னை நம்பி ஆண்டவன் என்னை வச்சிட்டான் பாரு. கை கால் விளங்காம கிடைக்கேன். நீ போனதுக்கப்புறம் நான் கீழே விழுந்து தொலச்சா.? அப்படியே நீ வரும் வரை தரையில் கிடக்கணும். இன்னொரு காலும் கையும் விளங்காம் போயிடனும். அப்படியே நான் செத்துப் போயிடனும். அதானே உன் ஐடியா.?”
“அப்படியெல்லாம் இல்லீங்க. வள்ளியை உங்களை பார்த்துக்க வச்சிட்டு தான் போலாமுன்னு……”
“கேவலம் பாத்திரம் விளக்கும் வேலைக்காரியிடம் நான் மானம் கெட்டு, ஒண்ணுக்கு ரெண்டுக்கு போகாணும்னு சொல்லி நிக்கணும் நல்லா இருக்குடீ உன் ஐடியா….”
“அய்யோ….வேலைக்காரி இல்லீங்க. அவங்க ஒரு நர்ஸ். அக்கா ஏற்பாடு பண்ணட்டுமான்னு கேட்டா. இப்படி எந்த நல்லது பொல்லதுக்கும் போகாம இருந்தா எப்படி.? நமக்கும் நாலு பேர் வேணுமில்லே?. புருஞ்சுக்கோங்கன்னு தான் சொல்றேன்.”
ராஜகோபால் புரிந்து கொள்ள விரும்பியதே இல்லை. மனைவிக்கும் ஒரு ரிலாக்ஸ் தேவை என்று அவர் நினைத்ததே இல்லை. உடனே அழுவார்….புலம்புவார். திட்டுவார்….இப்படியாக அவர் மனம் கோணிப் போனது. சந்தியாவுக்கும் முதலில் ஒரு குற்ற உணர்வு இருந்தது. பெங்களூரில் இருக்கும் மகளிடம் சொல்வாள்….
“நீ இப்படி குற்ற உணர்வுடன் இருக்க வேண்டாம் அம்மா. பேசாம யாரையாவது ஏற்பாடு பண்ணு. ஆண் நர்ஸ் இருப்பாங்க தானே.?”
“அவர் சொல்வதிலும் நியாயம் இருக்கு தானே.? மனைவி தவிர வேறு யாரிடம் ப்ரீயா இருக்க முடியும்.?….”
“ஆமா….நீ இப்படியே சொல்லிட்டு இரு. நீ கொடுக்கும் இடம் தான் அவர் இப்படி சுயநலமா இருக்கார்.” என்பாள் திவ்யா.
மகள் திவ்யா மேல் அளவு கடந்த அன்பு வச்சவர். அவளை தரையில் நடக்க விடாமல் கொண்டாடியவர்….அவள் இப்படி சொல்லும் அளவுக்கு நிலைமை இருக்கு. என்னிடம் அனுப்பி விடுமா நான் பார்த்துக்றேன் என்று சொன்னாள் தான். அவர் போக மறுத்துவிட்டார்.
“என்னுடய இடம்..நீ இருக்கும் இடம் தான் சந்தியா. மகளுக்கு கஷ்டம் கொடுக்க நான் விரும்பலை. நீ முடியாதுன்னு சொல்லு, நான் ஹோமில் சேர்ந்துக்கறேன்..” அவர் திட்ட வட்டமான பதில் இது தான். மனைவி மட்டும் தான் பார்த்துக்க கடமைப்பட்டவள் என்பது அவர் எண்ணம்.
மகன் பிரபு அமெரிக்காவில் இருக்கான் மனைவி குழந்தைகளோடு.
“அம்மா….அவரை ஹோமில் சேர்த்துவிடு. நான் பணம் அணுப்பறேன். உனக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கும்மா. மனசால நீ முடம் ஆகிவிடக் கூடாதும்மா….இல்லே அவரை இங்கு அனுப்பி வைம்மா. நான் பார்த்துக்கிறேன்.” என்பான்.
“மருமகள் தயவில் நான் எதுக்கு இருக்கணும்.? அதெல்லாம் சரி பட்டு வராது. அங்கே உள்ள ஹோமில் தள்ளிவிடுவார்கள். சந்தியா….அவங்க கிட்டே சொல்லிடு….அப்பாவுக்கு நான் இருக்கேன்னு. சும்மா சும்மா இது பற்றி பேச வேண்டாமுன்னு. ஒருத்தன் விழுந்துட்டா போதுமே ஆளாளுக்கு நாட்டாமை பண்ண ஆரம்பிச்சுடுவாங்க.” என்று விட்டார்.
இதனால் மகனிடம் அவள் ‘சரிடா….பார்த்துக்கலாம்….” என்றாள்.
வேறு என்ன சொல்ல.?
தாலி கட்டி இருக்கேன்….உன் கடமை இது….என்று மிரட்டும் மனிதனிடம் என்ன சொல்லி புரிய வைப்பது.? அவள் பள்ளி ஆசிரியையாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவள்..
ஓய்வு பெற்றது இனி வரும் பென்ஷனை வைத்துக் கொண்டு, அங்கே இங்கே என்று டூர் போக பிளான் வைத்திருந்தாள். ராஜகோபால் ஏற்கனவே மத்திய சர்க்கார் வேலை பார்த்து பென்ஷன் வாங்கிக் கொண்டிருந்தார். மகன் கையையோ மகள் கையையோ அவர்கள் எதிர்பார்த்து இருக்கவில்லை.
“ரீடையர்ட் லைப்பை ஜாலியா கழிக்கணுமுங்க..” என்ற அவள் எண்ணத்தில் மண் விழுந்தது.
பத்து நாள் டெல்லி டூர் போய்விட்டு வந்தார்கள்….
அதுவரை சிரிப்பும் அன்புமாக இருந்த ராஜகோபால் மாறிப் போனார்.
“அடுத்த டூர் கல்கத்தா போகணும் சந்தியா….” என்று சிரித்தார். அதுவே அவரின் கடைசி சிரிப்பாக மாறிவிட்டது.
அவ்வளவு தான் உனக்கு, என்பது போல், டில்லி போய்விட்டு வந்த அடுத்த நாளே ராஜகோபால் காலையில் எழுந்து கொள்ள முடியாமல் “சந்தியா சந்தியா….” என்று அலறினார். காப்பி போட்டுக் கொண்டிருந்த சந்தியா என்னங்க என்று கத்திக் கொண்டு அவர் படுக்கை அருகே சென்றாள். அவர் அலங்கோலமாக விழுந்து கிடந்தார். அந்தக் காட்சியை பார்க்கவே சந்தியாவின் உடல் நடுங்கியது….
ராஜகோபால் எழுந்து கொள்ள முடியாமல் கண்ணீர் பெருக, பயம் கண்களில் தெரிய குழறிய அரைகுறை வார்த்தையில்….
“இடது கையையும் காலையும் அசைக்க முடியலை டீ.” என்றார்.
“பயப்படாதீங்க. ஒரே பக்கமா ராத்திரி பூரா படுத்திருப்பீங்க. ஒண்ணுமில்லே. சரியாயிடும்.”
இடது கையையும், காலையும் வேகமாக நீவி விட்டாள்.
“மரக்கட்டை போல் இருக்கு….அய்யோ எனக்கு என்னாச்சு.?’
டாக்டர்….ஆஸ்பத்திரி….மருந்துகள் என்று ஒரு மாசம் ஓடியது. பக்கவாதம் என்ற பூதம் பாதிக்கபட்டு அவர் செயல் இழந்து போனார்.
“உனக்கு பாரமா விழுந்திட்டேனே….கடவுளே இது என்ன சோதனை.?”
“மனசை விட்றாதீங்க. பிஸியோ திரப்பிஸ்ட் வருவார். அவர் சொல்வது போல் எக்ஸர்சைஸ் செய்தால் விரைவில் குணமாகும். நம்பிக்கை வையுங்க.” என்றாள் சந்தியா.
பிஸியோதிரபிஸ்ட் சொன்ன எதையும் செய்ய மறுத்து விட்டார் ராஜகோபால். “வலி தாங்க முடியலை. என்னால் முடியாது.”
“அப்புறம் எப்படிங்க சரியாகும்.? பிளீஸ்….”
“என்னை நீ கொல்லப் பார்க்கிறே. அந்தாளை போகச் சொல்லு.” என்று கத்தி ஆர்பாட்டம் பண்ணி விரட்டி விட்டார்.
“அவரை விரட்டி விடலாம். வியாதியை விரட்ட முடியுமா.? இப்படி அழிச்சாட்டியம் பண்ணினா எப்படி குணமாகும்.?”
“நீ தான் இனிமே எனக்கு கையும் காலும்.” என்றுவிட்டார்.
அவளுக்கு பழைய நினைவுகள் வந்தது.
Arumai👌🏻.
உடல் சரியாக இருக்கும் வரை எல்லாமே சரியாக இருக்கும்.உடல் நிலை கெட்டால் எல்லாமே மாறிவிடும்
அருமை