Skip to content
Home » வாழ நினைத்தால் வாழலாம்-4

வாழ நினைத்தால் வாழலாம்-4

அத்தியாயம்..4

சந்தியா வழக்கம் போல் ஜன்னலை திறக்கிறாள். காலை மணி ஐந்து தான் ஆகியிருந்தது. தெரு விளக்குகள் இன்னும் எரிந்து கொண்டு தான் இருந்தன. சிலு சிலுவென்று மழை தூரிக் கொண்டிருந்தது. மேகங்களின் அடர்த்தியால் நட்சத்திரங்கள் காணாமல் போயிருந்தன.

எதிர் வீட்டை பார்க்கிறாள். புதிதாக பெயின்ட் அடித்து பார்க்க அழகாக இருக்கிறது. அவர்கள் தோட்டம் பராமரிக்க பட்டிருப்பதால் பூச் செடிகளின் செழுமையில் பூக்கள் பூத்து குலுங்கி இருந்தது. ஒரு ஊஞ்சல் தொங்கியது….அதில் விளையாடும் சிறுமிகளை அவள்   பார்த்திருக்கிறாள். இப்படி ஒரு ஊஞ்சலை தோட்டத்தில் வைக்க வேண்டும் என்று அந்த நாளில் ஆசைப்பட்டாள்.

“சந்தியா ஊஞ்சல் எல்லாம் வேண்டாம். அது சோம்பேறிகளின் ஆட்டம். நான் டென்னிஸ் லான் ஏற்பாடு பண்ணுகிறேன்….” என்றான்

ஆட்களை கூட்டி வந்து அமைத்து விட்டான். பிறகு டென்னிசும் கற்றுக் கொடுத்தான். குழந்தைகளும் டென்னிஸ் ஆட பழக்கினான். அந்த இடம் இப்பொழுது புல் முளைத்து காடு போல் ஆகிவிட்டது.

“ஆள் வைத்து சுத்தம் பண்ண வேண்டும்….” என்று நினைத்துக் கொள்கிறாள். ராஜகோபால் வீழ்ந்து விட்டப் பிறகு, தோட்டத்தை பராமரிக்க முடியவில்லை. முன்பு அவனே எல்லாம் செய்வான்.  அதற்குரிய உபகரணங்கள் இருந்தது. இப்பொழுது அவள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். அவளை இப்போ உள்ள ராஜகோபால் அங்கே இங்கே நகர விடுவதில்லை. ஏய்..ஏய் என்று கூப்பிட்டுக் கொண்டே இருக்கிறார்.

ஆள் வைத்தாவது பண்ண வேண்டும். சுத்தம் செய்ய ஆயிரம் ரூபாய் கேட்கிறார்கள்….கோபியிடம் சொல்லியிருக்கிறாள்.

மனசில் மலை உட்கார்ந்து இருப்பது போல் இருக்கு. சோர்வும் சலிப்பும் கூடிக் கொண்டே போகிறது. இயந்திர கதியில் அவள் வேலைகளை செய்கிறாள். மணி ஏழு அடிக்கிறது. அவர் எழுந்து கொள்ளும் நேரம். அவர் அறைக்குள் செல்கிறாள்.

“வந்திட்டியா.? இன்னைக்கு ஸ்பாஞ் பாத்தா.?” என்கிறான் சலிப்புடன். அதற்கு சற்று எழுந்து கொள்ள வேண்டும். செயல் படாத பாகம் ஒத்துழைக்காதலால்..சிரமங்கள் கூடும்….

அவரின் பற்களை சுத்தம் செய்து….சூடாக காப்பி கொடுத்தாள். தலையை கோதி விட்டாள். காலைக் கடன்கள் முடிக்க உதவினாள்.

“இருங்க….வெது வெதுப்பா சுடு நீர் கொண்டு வரேன்….”

“அய்யோ….வேண்டாம்.”

“அடம் பிடிக்காதீங்க. அப்புறம் உடம்பு நாறும்.”

“ஆமாடீ நாறும்….அதை உன்னாலே பொறுத்துக்க முடியலை என்னை சித்தரவதை செய்யற….” என்றார். அவள் பதில் பேசவில்லை. பேசினால் யுத்தம் வரும்.

கொண்டு வந்த வெதுவெதுப்பான நீரில் மெல்லிய துணியை முக்கி அவனை ஒருக்களித்து படுக்க வைத்தாள்.

“சீக்கிரம் முடி….வலிக்குது. இது ஒரு நரக வேதனை. ஏய்….மெதுவா டீ….தண்டமேன்னு காரியங்கள் செய்யாதே. நான் மனுஷன். பொம்மை இல்லை….” என்கிறார்.    

முதுகுப்புறம் புண்கள் இருக்க, மிருதுவாக நீரால் துடைத்தாள். கொஞ்சம் கண்ணீரும் அந்த முதுகில் விழுந்தது. அது அவருக்குத் தெரியாது,. ஏனென்றால் நீரும் வெதுவெதுன்னு தானே இருக்கு.?

எப்படி இருந்தவர் இப்படி ஆகிவிட்டார்.! அவர் வாய் பாட்டுக்கு அர்ச்சனை செய்து கொண்டே இருக்க, அவள் பதில் பேசாமல் செவிடாகி ஊமை போல் துடைத்து முடித்தாள்.

வேறு புதிய ஷர்ட் போட்டுவிட்டு, லுங்கியும் கட்டி விட்டாள்.

“கைக் கண்ணாடி குடு….”

கொடுத்தாள். நல்ல கையால் அதை பிடித்துக் கொண்டு முகத்தை ஆராயிந்து பார்த்து…. புலம்பத் தொடங்கினார்….

“தாடி முளைத்து அசிங்கமா இருக்கு. எல்லாத்துக்கும் உன்னை எதிர்பார்க்க வேண்டியிருக்கு….” என்று நீளமாக வார்த்தைகளை அடுக்கினார். ஷேவிங் செட் எடுத்து வந்தாள். ஷேவ் செய்து விட்டாள். “இப்ப பாருங்க….ஜோரா இருக்கீங்க.” என்றாள்.

“கிண்டல் பண்ணு….நீ குண்டா இருக்கேன்னு சொன்னேன் பாரு. அதுக்கு இந்த தண்டனை.”

“ஏன் இப்படி நெகடிவ்வா பேசறீங்க.? இந்த வயசுக்கு நல்லாத் தான் இருக்கீங்க. சும்மா புலம்பாதீங்க. எரிச்சலா இருக்கு.” என்று சொல்லிவிட்டாள். வந்தது வினை. கடவுள் என்னை பாரமா வச்சிட்டார் என்பது தொடங்கி….ஒப்பாரி வைக்க சந்தியா நாக்கை கடித்துக் கொண்டாள். பேசக் கூடாதுன்னு கட்டுப்பாட்டுடன் இருந்தாலும். சமயத்தில் ஏதாவது சொல்லிவிடுகிறாள்.

“பாட்டு போடட்டுமா.?” அவர் தலையாட்ட சினிமா பாடல்கள் போட்டாள். இந்தப் பாடல் தானா முதலில் ஒலிக்க வேண்டும்..?

“சட்டி சுட்டதடா…. கை விட்டதடா.

புத்தி கெட்டதடா .. நெஞ்சை தொட்டதடா..”

“சந்தியா இங்கே வா..” பாட்டு பாடியபடி இருக்க

“என்னங்க….” என்று அருகில் வந்தாள் சந்தியா.
“கொஞ்சம் குனி….”

ஏதோ சொல்ல வருகிறார் என்று குனிந்தாள். நன்றாக இருந்த ஒரு கையால் அவள் கன்னத்தில் சப்பென்று அறைந்தார். வலுவற்ற அடி தான். உடலில் வலு இருந்தால் தானே.? ஆனால் வலுவான இதய வலியை கொடுத்தது.

“எதுக்கு இப்ப அடிக்கிறீங்க.?”

“என்னைக் குத்திக் காட்டத் தானே இந்தப் பாட்டை போட்டே.? புத்தி கெட்டதடா….சட்டி சுட்டதடா….பேசாம என்னை கொன்னுடு சந்தியா….என்னை மனைவியே கிண்டல் பண்ணும் போது நான் எதுக்கு வாழணும்.?”

அவர் உடல் கிடுகிடுவென ஆடியது. மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்கியது. “தண்ணி தண்ணி….” என்றார். அவள் ஓடிப் போய் தண்ணீர் எடுத்து வந்தாள். அவர் வாயில் சிறிது சிறிதாக ஊற்றினாள். நெஞ்சை தடவி விட்டாள்.

“உணர்ச்சி வசப் படாதீங்க. நான் எதுக்கு உங்களை கேலி செய்யப் போறேன்.? யதார்த்தமா வந்த பாடல். இருங்க முருகன் பாட்டு போடறேன்.” சொல்லிவிட்டு அவள் நன்றாக பார்த்து ஒரு பாட்டு போட்டாள். “கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன்…..”

கேட்டுக் கொண்டே அவர் அமைதியாக கண் மூடிக் கொண்டார். அப்பாடா என்ற நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

“டிபன் கொண்டு வரேன்….சற்று பொறுங்க….”

இட்லி மாவை ஊற்றிக் கொண்டிருக்கும் போதே அவளுக்கு அழுகை வந்தது. காந்தி அடிகள் மூன்று குரங்கு பொம்மைகள் காட்டினார். ஒன்று கண்ணை மூடிக் கொண்டிருக்கும். ஒன்று காதை மூடிக் கொண்டிருக்கும். ஒன்று வாயை பொத்திக் கொண்டிருக்கும். தீயதை பார்க்காதே….தீயதை கேட்காதே… தீயதை பேசுவதை கேட்காதே….

அவள் ஒரு வருஷமாக தீயதை பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும்….பேச்சு வாங்கிக் கொண்டும் இருக்கிறாள்…… 

சீக்கிரம் ஞானி ஆகிவிட வேண்டும். இதெல்லாம் பாதிக்காத மனசை கொடு ஆண்டவனே என்று பிரார்த்தித்தாள்.

நான் கை கால் விளங்காமல் விழுந்தால் பார்ப்பியா மாட்டியா என்று அவன் அன்று கேட்டான்….எதுக்கு இளமையிலேயே அவனுக்கு இப்படி கேட்கத் தோணுச்சுன்னு அவள் அன்று நினைத்தாள்…. அன்று நடந்தது….

அதற்கு விடை சொல்வதாக சொன்னான்.

“நான் இப்படி கேட்க ஒரு காரணம் இருக்கு.”

“என்ன காரணம்.?

“சொல்றேன்…… சொல்லிவிட்டால் நீ என்னை புழு போல் நினைச்சிடுவே….”

“நினைக்க மாட்டேன். நான் அப்படி பட்டவள் இல்லை. நமக்குள் ரகசியம் கூடாதுன்னு சொன்னது நீங்க தான்…. “

“சொல்றேன்….இப்ப கோவிலுக்கு கிளம்பு. அங்க வச்சு சொல்றேன்.”

சாமி கும்பிட்டார்கள். பிரகாரத்தில் உட்கார்ந்தார்கள்.

“இப்ப சொல்லுங்க என்றாள்.”

அதற்குள் அவன், இரு ஒரு நிமிஷம் என்று சொல்லிவிட்டுப் போனான். பிரசாத கடையில் நின்று கொண்டிருந்த ஒரு நபரிடம் சென்றான். ஏதோ பேசினான். அவனிடம் பாக்கெட்டிலிருந்து பணம் எடுத்துக் கொடுத்தான்….விடை பெற்று வந்துவிட்டான்.

“யாருங்க அது.?”

“அது வந்து….தெரிஞ்சவங்க..”

“அவனுக்கு எதுக்கு பணம் கொடுத்தீங்க.?”

“என் பணம்….நான் கொடுக்கிறேன். நீ வா வீட்டுக்குப் போலாம்.”

அவன் முகத்தின் கடுமை பார்த்து அவள் மேற்கொண்டு எதுவும் கேட்காமல் எழுந்து அவனுடன் நடந்தாள்.

அவன் நல்ல மூடில் இருக்கும்போது அவள்….

“கோவிலில் பார்த்த அந்த ஆள் யாருங்க.?” என்று கேட்டுப் பார்த்தாள்.

“ஒரு ஹோம் நடத்றான். டொனேஷன் கொடுத்தேன். எதுக்கு ஏதோ நான் தப்பு பண்ணிட்டா மாதிரி கேள்வி கேக்கற.?”

பொய் சொல்கிறான் என்று பட்டது. சரி அவனாக சொல்லும் போது  சொல்லட்டும் என்று விட்டுவிட்டாள். ஆனால் அது அவள் மனசுக்குள் நெருடலாகவே இருந்தது. அவன் ஏதோ மறைக்கிறான்….

ஒரு நாள் காலை எழும் போது வாந்தி வருவது போல் இருந்தது அவளுக்கு. நாம் மாசமாக இருக்கிறோமோ என்று தோன்றியது. டாக்டரைப் பார்க்கச் சென்றாள். செக் பண்ணிவிட்டு கங்கராட்ஸ் நீங்க அம்மாவாகப் போறீங்க.. மூன்று மாசம்….கருவின் வளர்ச்சி நன்றாக இருக்கு என்றாள் டாக்டர் அகிலா. முதலில் இந்தச் செய்தியை அவள் தன் அக்காவிடம் தான் சொன்னாள்.

“கிரேட் நியூஸ். ரெகுலரா செக்-அப்புக்கு போனும். வீட்டுக்கு வா. உனக்கு பிடிச்சதை செஞ்சு தரேன்.” என்று அக்கா குதூகலம் அடைந்தாள். பிரபா உடனே ராஜகோபாலுக்கு ஃபோன் செய்து..

“கங்கராட்ஸ் தம்பி. அப்பாவாகப் போறீங்க….ரொம்ப சந்தோஷம். தங்கச்சியை ஜாக்கிரதையாக பார்த்துக்கோங்க.” என்றாள்.

“கண்டிப்பா..” என்று சொல்லியவனுக்கு கோபம் தலைக்கெறியது. சந்தியாவிடம் வந்து குதித்தான்.

“என்னிடம் தான் நீ முதலில் சொல்லியிருக்கனும். என்னை விட உனக்கு அக்கா தான் பெருசு இல்லே.? அவங்க சொல்லி நான் தெரிஞ்சுக்க வேண்டியிருக்கு….அவ்வளவு தான் உனக்கு நான்.”

“அது வந்து….அக்கா எனக்கு அம்மா மாதிரி. அதான் அவ கிட்டே..”

“அது சரி….எல்லோரும் முதல்லே புருஷன் கிட்டே தான் சொல்வாங்க. நான் உனக்கு யாரோ தானே.?” என்று எரிந்து விழுந்தான். அது பெரும் சண்டையாக மாறியது.

“எனக்கு எங்க அக்கா தான் எல்லாம். அவ கிட்டே சொன்னதுக்கு நீங்க இப்படி கோவிக்கிறீங்க.?” என்றாள்.

“என் கூட இனிமே பேசாதே….” என்றுவிட்டு….கோபமாக அவன் மொட்டை மாடியில் போய்  நின்று கொண்டான். முதல் சண்டை பயந்து போனாள் சந்தியா.

1 thought on “வாழ நினைத்தால் வாழலாம்-4”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *