Skip to content
Home » வாழ நினைத்தால் வாழலாம்-8

வாழ நினைத்தால் வாழலாம்-8


அத்தியாயம்—8

வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால் மனைவியிடம் தோற்று விடு என்று சொல்வார்கள். வீட்டு உறவுகளை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ளும் மனைவிக்கு விட்டுக் கொடுப்பதில்….தோற்றுப் போவதில் தவறில்லை என்று எண்ணுபவர்   தான் ராஜகோபால். அதனால் அவர் சந்தியாவின் விருப்பப்படி பாட்டிம்மாவை இருக்க அனுமதித்தார். ஆனால் பாட்டியிடம் ஒரு வார்த்தை பேசியதில்லை. முகத்தை கூட பார்க்க விரும்பியதில்லை.

“நான் போயிடறேன் சந்தியா கண்ணு. உன் புருஷனுக்கு பிடிக்கலை.”

“பாட்டிம்மா….போக போக சரியாயிடும்.. “

போகப் போக சரியாகவில்லை.

“என்னங்க….பாவம் வயசானவங்க.. பேசுங்க.”

“சந்தியா….உன் திருப்திக்காக மட்டுமே அந்த மனுஷியை அனுமதிச்சேன். நீ எவ்வளவு வேணா கொஞ்சி குலாவு. என்னை  விட்டிடு. புரியுதா.?”

“அப்படி என்ன கோபம்.? சொல்லுங்க. நீங்க அப்படிபட்டவர் இல்லையே….மனக் காயங்களுக்கு மருந்தே மன்னிப்பது தான்.”

“விஷத்தை விழுங்கி இருக்கேன். சாகாம இருக்கேன்னா அதுக்கு என் மன திடம் தான் காரணம் சந்தியா.”

“உங்களுக்குத் தெரியுமா.? பாம்பின் விஷத்தை எடுத்து மருந்தா பயன்படுத்தறாங்க. கேன்சர் டிரீட்மெண்ட், இன்னும் பெயின் கில்லர்ஸ் மற்றும் பல வித நோய்களுக்கு சிறிய அளவில் அதன் விஷம் பயன்பாட்டில் உள்ளது. அதுவே மருந்தாகும் போது, உறவுகள் விஷமா ஆனாலும் அதை அன்பெண்ணும் மருந்துடன் சேர்த்தால் விஷம் மருந்தாகும்.” என்றாள்.

“தத்துவம் நல்லா இருக்கு சந்தியா. உனக்கு அந்த பாட்டியின் உண்மை முகம் தெரியாது. நான் அவளிடம் பட்ட கொடுமையை நீ பட்டிருந்தா….அவளை உள்ளேயே அனுமதிச்சிருக்க மாட்டே. நானாவது உனக்காக அனுமதிச்சேன்.” என்றார்.

சரி அவர் விருப்பம் போல் இருக்கட்டும் என்று விட்டுவிட்டாள் சந்தியா. பிரபு பிறந்தான். அடுத்து மூன்று வருட இடைவேளையில் திவ்யா பிறந்தாள். வயது முதிர்ந்த நிலையிலும் பாட்டிம்மா ரெண்டு பிரசவத்துக்கும்….பிள்ளை வளர்பிலும் அப்படி ஒரு உதவி செய்தார். அவர் மூச்சை விடும் போது சந்தியாவிடம்….

“உங்க சித்தி ஏவி விட்டு தான்….உனக்கு கெடுதல் பண்ண வந்தேன். உன் கருவை கலைக்கச் சொன்னாள். உன் அன்பும் பண்பும்  என்னை  மனுஷியா மாத்திடுச்சு. என்னை மன்னிச்சிடு சந்தியா….” மன்னிப்பாளோ மாட்டாளோ என்று அவள் திகைத்து, கடைசி மூச்சை விடும் போது சந்தியா சொன்னாள்….

“பாட்டி….நீங்க முள்ளை மனசில் வச்சுக்கிட்டு வந்தீங்க. ஆனா நீங்க மலரா மாறி என்னை கவனிச்சீங்க. முள் எதுக்கு.? மலரை எடுத்துக்கிறேன். பிரீயா இருங்க. உங்க சேவையை நான் உயிருள்ளவரை மறக்க மாட்டேன்.” என்று இறுதி மரியாதை செலுத்தினாள். கிழவி மனதின் விகசிப்பு அவர் முகத்தில் தெரிந்தது.

“ஆயிரத்தில் ஒருத்திமா நீ.” என்றார். நல்லாயிரும்மா என்பது போல கையை உயர்த்திய படியே உயிரை விட்டார் காந்தம்மை பாட்டி.

பிள்ளைகள் பிரபு, திவ்யா இருவரும் பள்ளி செல்ல ஆரம்பித்த பிறகு சந்தியா டீச்சர் வேலையை தொடர்ந்தாள்.

குழந்தைகளின் பிறந்த நாட்களை கொண்டாடினார்கள். குடும்பத்தோட எங்காவது குட்டி டூர் போனார்கள். அதில் முக்கியமானது கொடைக்கானல் மலைராணியை தரிசித்தது.

இப்போ வருகிற கும்பல் மாதிரி அப்போ அவ்வளவு கும்பல் இல்லை. பளிங்கு போன்ற ஏரியில் படகு சவாரி ஆனந்தமாக இருந்தது. புறாக்கள் போல் ரெண்டு குழந்தைகளும் அருகில் விரிந்த கண்களும்..அகன்ற சிரிப்புமாக சொர்க்கத்தை தரைக்கு கொண்டு வந்தார்கள். கணவனின் தோளில் சாயிந்து கொண்டு அவள் ஒரு மகாராணி போல் உணர்ந்தாள்.

“திவ்யா….ஸ்வட்டர் போட்டுக்கோ. குளிருது  பார்..” என்பான்.

“பிரபு ஓடாதே….குரங்குகள் கிட்டே போகாதே… நான் படம் எடுக்கிறேன்.” மகனையும் மகளையும் அவன் கவனித்துக் கொண்ட மாதிரி எந்த தகப்பனும் கவனித்திருக்க முடியாது என்று நம்பினாள்.

சுற்றிப் பார்த்துவிட்டு ஹோட்டல் அறைக்கு வந்தார்கள். களைப்புடன் படுத்தார்கள். குழந்தைகள் உடனே தூங்கி விட்டார்கள்.

“சந்தியா….நீயும் திவ்யா, பிரபு மாதிரி குழந்தையா.? கம்பளியை போர்த்திக்கிட்டு தூங்கு…?” அவனே போர்த்தி விட்டான்.

“ரொம்ப செலவாயிடுச்சு இல்லீங்க.?” அவன் கழுத்தோட முடங்கிக் கொண்டு, முணுமுணுத்தாள்.

“சில செலவுகள் நமக்கு வரவுகள் மாதிரி. இந்த ஆனந்தம் எவ்வளவு பெரிய வரவு.!” அவன் சொன்னது அவளுக்கு இனித்தது.

ஒரு முறை ஊட்டி கூட்டிக் கொண்டு வந்த சித்தி சரோஜா..

“அப்பப்பா உங்களாலே எவ்வளவு செலவு.? பார்த்ததெல்லாம் கேக்றீங்க. இனிமே உங்களை எங்கும் கூட்டி வர மாட்டேன்.” என்று கத்தினது நினைவுக்கு வந்தது.

“அவள் என்ன நம்ம அம்மாவா? செலவை கணக்கு பார்க்கும் வியாபாரி. குழந்தைகள் குதூகலம் அழகான வரவு என்று அவளுக்கு எப்படி தோன்றும்.? விடு சந்தியா.” என்றாள் அக்கா பிரபா.

ராஜகோபால் எவ்வளவு வித்தியாசமானவர்!. அவர் நெற்றியில் மென்மையாக காதலுடன் முத்தமிட்டாள்.

எல்லா இடங்களும் சுற்றி பார்த்துவிட்டு அவர்கள் கிளம்பும் போது ஆண்டவன் சந்தியாவுக்கு ஒரு சர்பிரைஸ் கொடுத்தார்.

சந்தியாவின் தோழி சரசு தன் குடும்பத்துடன் வந்திருந்தாள். அவர்கள் தங்கிய அதே ஹோட்டலில் தங்க வந்தார்கள். சரசுவுக்கு ரெண்டு பிள்ளைகள். கவின், துர்கா.

“ஹாய் சரசு….வாட் ஏ சர்பிரைஸ்? நாங்க புறப்படறோம் நீங்க வர்ரீங்க. கொஞ்சம் முந்தி வந்திருக்கக் கூடாதா.?”

ராஜகோபாலும் சரசுவின் கணவன் ரமேஷ்சும் அறிமுகப்படுத்திக் கொண்ட பின்….

“சந்தியா….வா நாம கிளம்பலாம்..” என்றான்.

“ராஜகோபால் சார்….சந்தியாவும் குழந்தைகளும் எங்களோட இன்னும் ரெண்டு நாட்கள் இருக்கட்டுமே….” என்றாள் சரசு. சந்தியாவின்  கண்களும் கெஞ்சியது. “சரி….பிள்ளைகள் பத்திரம். ரெண்டு நாள் கழித்து நானே வந்து கூட்டிப் போறேன். என்ஜாய்….” என்றுவிட்டு விடை பெற்றான்.

நாலு குழந்தைகளும் சேர்ந்து லூட்டி அடித்தார்கள். ரமேஷ் பாடு திண்டாட்டமாகி விட்டது. தோழிகள் இருவரும் உலகை மறந்து ஒருவர் நட்பில் ஒருவர் லயித்துப் போனார்கள்.

“உன் கணவர் ஒரு ஜெம். உன்னை விட்டிட்டு போயிருக்கார். உன் வாழ்க்கை சீரா அமைஞ்சு போச்சு. ரொம்ப சந்தோஷம் சந்தியா.”

“ஆமா சரசு…. நான் ரொம்ப கொடுத்து வச்சவ. சித்திக் கிட்டே நான் பட்ட கஷ்டங்களுக்கு நிவாரணம் மாதிரி, ஆண்டவன் என்னை காவல் காக்கிற தெய்வமான இவரிடம் சேர்ப்பித்திருக்கார்.”

ரெட்டை ரோஜாக்கள் போல் இருவரும் கொடைக்கானல் ரோஜாக்களை  பார்வையிட்டார்கள். குறுஞ்சி ஆண்டவர் கோவிலில் நின்று இந்த நட்பு என்றென்றும் நீடிக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்கள். குழந்தைகள் நால்வரும் கூடிப் பழகினார்கள்.

சொன்னபடி திரும்ப வந்து சந்தியாவையும் குழந்தைகளையும் அழைத்து கொண்டு போனான் ராஜகோபால்.

“நல்ல என்ஜாய் பண்ணியா.? உன் முகத்தைப் பார்த்தாலே தெரியுதே. அப்படியே சந்தோஷம் அந்த சில்வர் பால்ஸ் மாதிரி வழியுது.”

“தேங்க்ஸ்சுங்க…. ரெண்டு நாள் எக்ஸ்டென்ஷன் கொடுத்துக்கு.” அதற்கு மேல் சொல்லத் தெரியாமல் அவள் நெகிழ்ந்து, அவன் தோளில் சாயிந்தாள். நல்ல கணவன் கிடைப்பது பூர்வ ஜன்ம புண்ணியம்.!

சரசுவும் அவளும் எப்பொழுதும் எங்கிருந்தாலும் ஃபோன் மூலம் தொடர்பில் இருந்து கொண்டே தான் இருந்தார்கள்.

அதே போல் ராஜகோபாலும் அவன் நண்பன் விவேகானந்தரும்  தொடர்பில் இருந்து கொண்டே தான் இருந்தார்கள். பிள்ளைகள் சிறுசாக இருக்கும் போது விவேக்கின் குடும்பம் திருச்சியில் தான் இருந்தது. விவேக்கின் மகன் முரளி மிகவும் கெட்டிக்காரன். அவன் அவருக்கு ஒரே மகன்.

குழந்தைகள் பள்ளிப் படிப்பு முடித்து கல்லூரியில் சேர்ந்தார்கள். அந்த சமயம் சந்தியாவின் அப்பா காலமானார்.

அதை அடுத்து சித்தி சரோஜா நோய் வாய்ப்பட்டு கிடக்க, அவளைப்  பார்க்க அவள் சொந்தங்கள் யாரும் பொறுப்பெடுத்து வரவில்லை.

“எப்படி இருக்கே சரோஜா.? உன் பையன் வந்து பார்த்தானா.? அவன் தான் பொறுபேத்துக்கணும்…. “ என்று சொல்லி நழுவி விட்டார்கள். சந்தியாவின் அண்ணன்..

“என் கடமை சித்தியை வீட்டுக்கு கூட்டி வந்து பார்த்துக்கணும். கூட்டி வரலாம்.” என்றான்.

“கூடவே கூடாது. அவள் வந்தால் நான் வீட்டில் இருக்க மாட்டேன். அவ ஒரு ராசி இல்லாதவ. இவள் வந்து பார்த்த போது தான் என்  குழந்தை இறந்து போனது…..அவள் இங்கு வரக் கூடாது. வேணுமானால் காசை விட்டெறியுங்கள்.” என்று அண்ணனின் மனைவி ரஞ்சனி சொல்லிவிட….சரோஜாவை பிரபாவும் சந்தியாவும் தான் பார்த்துக் கொண்டார்கள்.

“என் சொந்தங்கள் எல்லோருக்கும் எவ்வளவு உதவி செஞ்சேன்.  எனக்கு உடம்பு சரி இல்லன்னதும் நழுவிட்டாங்க. உங்களுக்கு கெடுதல் மட்டுமே பண்ணினேன்…..ஆனாலும் நீங்க தான் பார்த்துக்கிட்டீங்க.. ஒரு சித்தியா இருந்து உங்கள நான் கரிச்சுக் கொட்டினேன். நீங்க இப்ப எனக்கு தாயா இருந்து பார்த்துக்கிட்டேங்க.” என்று சாகும் தருவாயில் உணர்ந்து சொன்னாள் சரோஜா. என்னை மன்னிச்சிடுங்க….

“எதுக்கு மன்னிப்பு எல்லாம்.? சித்தி அமைதியா இருங்க. இது எங்க கடமை.” என்றனர் பிரபாவும் சந்தியாவும். குற்ற உணர்வோடு இறந்தாள் சரோஜா. வாழத் தெரியாமல் வாழ்ந்தால் இந்த கதி தான். பலருக்கும் இது புரிவதில்லை. இறுதி சடங்கின் போது அண்ணன் வந்து கொள்ளி வைத்துவிட்டுப் போனான்.

ஒரு தலைமுறையின் முடிவில் அடுத்த தலைமுறையின் வாழ்க்கை ஒட்டம் ஆரம்பமானது.

ராஜகோபாலின் சிக்கல் இங்கே தான் ஆரம்பமானது. அடிக்கடி அவர் புலம்பத் தொடங்கினார்….

சந்தியாவின் உள்ளத்தில் லேசான பயம் வந்து அப்பிக் கொண்டது

1 thought on “வாழ நினைத்தால் வாழலாம்-8”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *