Skip to content
Home » விலகும் நானே விரும்புகிறேன்-1

விலகும் நானே விரும்புகிறேன்-1

அத்தியாயம்-1

    காலை வேளை என்றாலும் அந்த சிக்னலில் மக்கள் கூட்டம் அலை மோதியது.

      பள்ளி, கல்லூரி, அலுவலகம் என்று செல்வோர் தேனீ போல சுறுசுறுப்பாய் புறப்பட்டுயிருந்தனர்

   எப்பொழுதும் போல சிலர் சாலையை கடக்கும் கோட்டை தாண்டியே இருசக்கர வாகனத்தை நிறுத்தி இருந்தார்கள்.

    ஏதோ பந்தயத்திற்கு தயாராய் இருந்தது போல மக்கள் ‘உற்உற்’யென்று முறுக்கியபடி பச்சை விளக்கின் ஒளிக்காக அதனையே பார்வையிட்டனர்.

      நாயகி மேகா மட்டும் விதிவிலக்கு அல்ல. அவளும் வெள்ளை கோட்டில் தான் நிறுத்தி சிக்னலில் பச்சை வண்ண நிறம் மாற காத்திருந்தாள்.

    பின்னாலிருந்த நிலாவோ “மேகா… நீ எத்தனை நாள் வேண்டுமென்றாலும் தங்கிக்கோ. எனக்கு அது பிரச்சனையில்லை. ஆனா உனக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது. அது தான் எனக்கான கவலையே.” என்று கூறவும் மேகா எந்தவித எதிர்வினையும் காட்டவில்லை.

    சிக்னல் மாறியதும் வண்டியை முறுக்கி கொண்டு பாடி மேம்பாலத்தில் கவனமாய் பயணிப்பதே கடமையாய் கருத்தில் கொண்டாள் 

     மேம்பாலம் இறங்கியப் பின்னரே, “எனக்கு என்ன ஆபத்து வந்துடப் போகுது. எதுனாலும் இனி இங்க தான் என் வாழ்க்கை மலரப்போகுது.

    எங்கம்மா இங்க அனுப்பியதே அதிசயம். அதெல்லாம் கூட்டி கழிச்சி கணக்கு போட்டு, சரியான திட்டத்தோட தான் வந்திருக்கேன். நீங்க கவலைப்படாதிங்க அண்ணி.” என்று நிலா கூற கூற வண்டியை சந்து பொந்தில் லாவகமாக ஓட்டினாள்.

   புதுயிடம் ஆனாலும் அச்சமின்றி இந்த சென்னையில் வண்டி ஓட்டி கோயம்பேட்டில் இருந்து இதோ இங்கே வில்லிவாக்கம் வரை வந்துவிட்டாள் மேகா.

    இத்தனைக்கும் ஊரில் டவுனுக்கு காலேஜ் படிக்க மட்டும் சென்று வந்தவள். கல்லூரி தவிர வேறெங்கும் சென்றிட தாய் அனுமதி வழங்கவில்லை.

    அப்படிபட்ட வட்டத்திற்குள் சுற்றி சுழன்றவள் இதோ இந்த சிக்னலில் சமாளித்ததே பெரிய விஷயமாக தோன்றியது நிலாவிற்கு. அதனாலோ என்னவோ இனி அனைத்தும் அவள் சமாளிப்பாள் என்ற எண்ணம் மனதை இலகுவாக்கியது.

     அவள் மனம் எப்படி இலகுவாகிடலாமென கடவுள் சின்னதாய் சாலையில் கல்லெறிந்தார்.

    மேகா பந்து அளவிற்கு இருந்த கல்லில் ஏறி இறங்க, வண்டி தாறுமாறாய் ஓடியது.

    நேராய் ஒரு பைக் மேல் மோதியது. அதில் அமர்ந்து காதில்
காதுகேள் கருவி மூலமாக யாரிடமோ பேசிக் கொண்டிருந்த நடுத்தர வயது ஆண்மகன், “ஏம்மா… வண்டி ஓட்ட தெரியுமா தெரியாதா. நின்றுட்டு இருக்குற வண்டில வந்து இடிக்கிற. அழகாயிருந்தா திட்டமாட்டாங்கனு நினைப்பு.” என்று கத்தினார்.

    “சாரி சார். அந்த கல்லு இடறவும் பேலன்ஸ் பண்ண முடியாம இடிச்சிட்டேன்.” என்று தன்மையாய் மேகா கூற அது அவர் காதில் வாங்காது “காலையிலயே தூக்க கலக்கத்துல சரியா கூட முகம் கழுவாம மேக்கப்பை அள்ளிப் போட்டு வந்துட வேண்டியது.” என்று திட்டிவிட்டு நகர்ந்தார்.

மேகாவோ “நான் தெரியாம இடிச்சேன்னு சொல்லறேன். அந்தாளு புலம்பறான். நான் எங்க மேக்கப் போட்டிருக்கேன். நானே பஸ்ல வந்த டயர்டுல முடியெல்லாம் பறந்துட்டு பேய் மாதிரி வந்திருக்கேன்” என்று கத்தினாள்.

    “மேகா வந்ததும் வம்பை விலைக்கு வாங்காதே. இங்க எல்லாம் இடிச்சிட்டு அமைதியா திட்டு வாங்கிட்டு கண்டுக்காம போயிடணும். காதுல வாங்கி பதில் சொன்னா நமக்கு தான் நேரம் விரயமாகும். இவராவது பரவாயில்லை சிலர் அசிங்க அசிங்கமா திட்டுவாங்க.” என்று நிலா அறிவுறுத்தினாள்.

     “ஏதோ வந்ததும் வம்பு வேண்டாம்னு கடமைக்கு கட்டுப்படறா இந்த தஞ்சாவூர் ஜில்லாகாரி” என்று மேகா குறும்பாய் பதில் தந்தாள்.

     “நிலா அண்ணி… ரைட்டா லெப்டா.” என்றதும் “வலது பக்கம் ஏழாவது வீடு மெரூன் கேட் இருக்கும்” என்றதும் மேகா சரியாய் வண்டியை நிறுத்தினாள்.

     ஸ்கூட்டியை வீட்டின் முன் நிறுத்தி சைட் லாக் போட்டுவிட்டு தனது உடமைகளை எடுத்து இறங்கினாள்.

    நிலா ஒரு பேக்கை எடுத்து கொள்ள, மேகா ஒரு லக்கேஜ் பேக் என்று இறங்கினாள்.

    சரியாய் அதே நேரம் பக்கத்து வீட்டில் கதவு திறந்து அவர்கள் வந்தனர்.

     நிஷாந்த், கமலேஷ், பாலா, மனோஜ், என்று நால்வரும் கேட்டில் கை வைக்க, பக்கத்து வீட்டில் ரதிதேவி தோற்றுப் போகும் அளவிற்கு பெண்ணவள் மேகாவை கண்டு நால்வரும் திகைத்து நின்றனர்.

      “போங்கடா… அப்படியே பேயை பார்த்தது போல நிற்கறிங்க” என்று அதட்டினான் அட்சரன்.

    மற்றவர்கள் பெண்ணவளை மொய்த்து கிசுகிசுத்து நடக்க, அங்கிருந்த அட்சரனோ “ஹலோ… மிஸ்ஸஸ்.விஸ்வா ஸ்கூட்டியை இப்படி வச்சா காரை எப்படி எடுப்பாங்க?” என்று அட்சரன் குரல் கொடுக்கவும், நிலா மற்றும் மேகா திரும்பி பார்த்தனர்.

    அதன் பின்னே நிலா ஸ்கூட்டியை கவனித்து பார்த்து “சாரி அட்சரன்… டூ மினிட்ஸ்” என்றவள்  மேகாவிடம் திரும்பி “மேகா சாவி கொடு” என்றதும் அவள் கொடுக்க, வண்டியை அவர்கள் கேட்டிலிருந்து தங்கள் கேட்டின் முன் நகர்த்தினாள் நிலா.

   அட்சரனை தவிர்த்து நால்வரும் மேகாவை பார்த்திருக்க, மேகாவோ “ஆமா… இத்துணூன்டு இடம் இதுக்கு வழிவிடணுமாம். ஏன் அப்படியே காரை எடுத்துட்டு போக தெரியாது.’ என்று மனதில் கடுகடுத்தாள்.

     நால்வர் ஒருத்தியை பார்க்க, பெண்ணவள் ஒருவனை பார்த்து முனங்க, அட்சரனோ தன் நண்பர்களை தோளில் தட்டி காரில் ஏற கூறினான்.

    காரில் ஏறிய பின்னர் ஆளாளுக்கு திரும்பி பார்த்து “புதுசா தெரியுது?” யாரா இருக்கும் டா” என்று மனோஜ் ஆரம்பித்தான்.

    “எவளா இருந்தா உனக்கென்ன?” என்று அட்சரன் கூறவும் மனோஜ் அமைதியடைய, “பார்க்க நல்லா பொம்மை மாதிரி அழகாயிருக்கா.” என்றான் கமலேஷ்.

     “அழகு ஆபத்தானது” என்று அட்சரன் கூறவும் பாலாவோ “எது தான் ஆபத்தில்லை. மச்சி நிலாவுக்கு தங்கச்சியா இருக்குமா டா?” என்று கமலேஷிடம் கேட்டான்.

      “நிலா ஒரே பொண்ணு டா. அவங்க ஹஸ்பெண்டுக்கு கூட கூடப்பிறந்தவங்க யாருமில்லை. இவ ஏதாவது பிரெண்டா இருக்கலாம்” என்று கமலேஷ் அனுமானித்தான்.

     “அந்த பொண்ணு பேரு மேகாவாம் டா.” என்று மனோஜ் மீண்டும் ஒரு சுற்று பேசினான்.

       “இப்ப அவளை பற்றி ரொம்ப முக்கியம். காலையிலயே எவளோயொருத்திய பத்தி பேசிட்டு” என்று நிஷாந்த் பேசவும் மற்றவர்கள் கப்சிப்பென்று ஆனார்கள்.

    அட்சரனோ, சாலையில் வண்டியை செலுத்தி கொண்டு “இராஜ இராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீ தான்” என்று பாடலை செவிக்குள் இதமாய் நுழைத்து மூளைக்குள் பதிவாகி இரத்த நாளங்களுக்குள் இசையோடி கைகளால் தாளமிட்டான்.

     இங்கு தன் ஒருத்தியால் மூவர் திட்டு வாங்க, ஒருவனோ கண்டுக் கொள்ளாமல் திரிய, ஒருவனோ நண்பர்களை வழிநடத்திட, மேகா என்பவளோ நிலா கொடுத்த அறையில் வந்து மெத்தையில் விழுந்து உருண்டாள்.

    நிலாவோ “பார்த்தியா… எல்லாரோட கவனம் உன் மேல இருந்தாலும் அட்சரன் கண்டுக்கவே மாட்டார். அவரை போய் ஆட்டிபடைக்க வந்திருக்க” என்றதும், மேகாவோ, “அதெல்லாம் என்னை கண்டுக்காம போனான்னு என்னால நம்ப முடியலை.” என்று மேகா திமிராய் மொழிந்தாள்.

    மேகாவை குளிக்க கூறிவிட்டு, நிலா சாப்பிட எடுத்து வைத்தாள். மேகா குளித்து முடித்து சாப்பிட அமரும் நேரம் வந்து சேர்ந்தான் நிலாவின் கணவன் விஸ்வா.

     “ஹாய் மேகா வந்துட்டியா. ஹௌ இஸ் ஜெர்னரி?” என்று கை அலம்பி சாப்பிட  அமர்ந்தான்.

    “நாட் பேட் அண்ணா… எங்க சாந்தனுவை ஸ்கூல்ல விட்டுட்டு வர்றிங்களா?” என்று கேட்டு உணவை உண்ண ஆரம்பித்தனர்.

   “ஆமா மா. எப்பவும் நிலா கொண்டு போய் விடுவா. இன்னிக்கு நீ வர்றேன்னதும் என்னை அனுப்பிட்டா. ஓர்க் ப்ரம் ஹோம்ல இதுவொரு வசதி. கடைக்கு வீட்டுக்கு ஸ்கூலுனு போக நம்மை அனுப்பிடறா” என்று பதிலளித்தான் விஸ்வா.

     “ஆமா.. கடைக்கு போயிட்டாலும். போர் அடிக்குனு நெட்பிளிக்ஸில் படம் பார்க்கறார் உங்க அண்ணா.” என்று நிலா கிச்சனில் இருந்தவாறே விஸ்வாவை வாறினாள்.

   கணவன் மனைவியின் அழகான சண்டையை ரசித்து சிரித்தவள் “சாந்தனு எப்ப வருவான் அண்ணா?” என்று கேட்டாள்.

     “இதோட ஈவினிங் இரண்டறைக்கு கூப்பிட போகணும்மா.” என்றான் விஸ்வா.

      “என்ன மேகா… வந்ததும் மாட்டப்போற..” என்று நிலா சூடான தோசையோடு வந்து தட்டில் வைத்து மேகாவின் கழுத்தில் மின்னிய தங்க தாலியை தொட்டு காண்பித்தாள்.

   “குளிச்சிட்டு வந்ததும் பின் குத்தி மறைக்கணும்னு நினைச்சேன் கவனிக்கலை அண்ணி. பரவாயில்லை நம்ம வீட்டுக்குள்ள தானே.

    அங்க இருக்கறவன் என் கணவரோட துரோகி அவனோட முகத்திறையை கிழிக்கிற வரைக்கும் இந்த தங்க தாலி மறைந்து தான் இருக்கணும் வேற வழியில்லை.” என்று கண்ணில் ஒற்றி மறைத்து கொண்டாள்.

     “ஒரு கம்பிளைன் கொடுத்தா போதாதா.” என்று நிலா ஆயிரெத்தெட்டாவது முறை கேட்டு வைத்தாள்.

    “அங்க இருக்கறவன்ல ஒருத்தன் துரோகி. மற்றவர்கள்… நகையும் சதையுமா இருக்குற நட்பு. அப்படியிருக்க. துரோகியை கண்டுபிடிக்கிறேன்னு போய் உன்னதமான நட்பை சந்தேகிக்க முடியாது.

    இங்க தானே இருக்க போறேன் அவன் முகத்திரையை கிழிச்சி என் கணவர் முன்ன நிறுத்துவேன்.” என்றவள் தோசையை சுவைக்க ஆரம்பித்தாள்.

     “அங்க இருக்கற பஞ்சபாண்டவர்கள் இங்க வருவாங்களா?” என்று கேட்டு நிலாவை பார்த்தாள்.

     “இதுவரை சாந்தனு தான் எப்பவும் அங்க போய் விளையாடுவான். அதை தவிர அவங்க இங்க வந்ததில்லை. ஆனா இந்த கொரியர் வந்தாலோ, கேஸ் வாங்கணும்னாலும் என்னிடம் பணம் கொடுக்க வாங்கனு வருவாங்க. அதனால இங்க இருந்தாலும் நீ ஜாக்கிரதையா இரு. அதோட சாந்தனு மட்டும் தாலியை பார்த்தான் அதை அங்க போய் உளறிடலாம்.” என்று நிலா கூறவும் மேகா “நான் பார்த்துக்கறேன் அண்ணி” என்று கை அலம்பி அறைக்குள் சென்றாள்.

    கண்ணாடியில் புது மணமகளாக ஜொலித்து மங்களகரமாக காட்சியளிக்க வேண்டியது. இப்படி தாலியை மறைத்து சாதாரண மணமாகாத பெண் போல வேடமிட எரிச்சலாய் இருந்தது.

     இன்று மட்டுமே என்றால் தாலியை பின் குத்தி மறைத்திடலாம் ஆனால் தினமும் என்றால் ஒரு நேரம் போல இல்லாமல் மாட்டிவிட வாய்ப்புண்டு என்று முதல் வேலையாக காலர் வைத்த சுடிதாராகவே வாங்கி வைத்திட நிலாவிடம் கூறி அவளையும் அழைத்து, பாடி சரவணாவுக்கு ஸ்கூட்டியில் பறந்தாள்.
   
     திரும்பி வரும் நேரம் சாந்தனுவை அழைத்து ஐஸ்க்ரீம் பார் சென்று தோழனாக மாற்றிவிட்டாள்.

    “அம்மா இந்த மேகா அத்தை நம்ம கூட தான் இனி இருப்பாங்களா?” என்று சாக்லேட் வழிய கேட்டவனிடம், “ஏன்டா… இனி சாக்லேட் திங்க கூட்டு சேர்ந்துக்கவா?” என்று மகனின் உதட்டோரம் வழிந்த இனிப்பை துடைத்து விட்டாள்.
    
    “அத்தை நீங்க இங்க எதுக்கு வந்திங்க” என்று கேட்டு வைக்கவும், “உங்க மம்மியோட சேர்ந்து ப்ளவர் பொக்கே ஷாப்ல ஒர்க் பண்ணப் போறேன். எனக்கு டிபரண்ட் டிபரண்டா பொக்கே ரெடி பண்ண தெரியும். உனக்கு தெரிந்த பிரெண்ட்ஸ், பக்கத்து வீட்டு அங்கிள், டீச்சர் எல்லாருக்கும் சொல்லு” என்று விளையாட்டாய் கூறினாள்.

      “டீச்சருக்கு எல்லாம் சொல்ல முடியாது. என் பிரெண்ட்கிட்ட பக்கத்து வீட்ல அங்கிள்ஸ் இருக்காங்க அவங்ககிட்ட சொல்லறேன்.” என்று கட்டை விரலில் உயர்த்தி காட்டினான் சாந்தனு.

     நிலாவோ பையன் மூலமாக கூட விக்கெட் எடுக்கும் மேகாவை கண்டு தலையாட்டி “அது சரி ஒரு ஃபார்ம்ல இருக்க… நீ கலக்கு” என்று வாழ்த்தினாள்.

    தான் வந்த நோக்கத்திற்கு எறும்பை கூட துணைக்கு வைத்து கொள்ள தயங்காது துணிந்திருந்தாள் மேகா.

4 thoughts on “விலகும் நானே விரும்புகிறேன்-1”

  1. Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr superrrrrr Superrrrr sis 👌👌👌👌👌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *