அத்தியாயம்-2
சாந்தனுவும் மேகாவும் மொட்டை மாடியில் பந்து விளையாடிக் கொண்டிருந்தனர். இங்கு இருந்து அடுத்த வீட்டிற்கு எப்படி செல்வதென யோசித்து கொண்டே விளையாடினாள் மேகா.
அட்சரன், கமலேஷ், பாலா, மனேஜ், நிஷாந்த், என்று ஒவ்வொருத்தராய் வந்தார்கள். காலையில் செல்லும் போது அட்சரன் காரில் அனைவரும் சென்றாலும் திரும்பும் போது பாலா மட்டுமே அட்சரனோடு வருவான். மற்றவர்கள் எப்படியும் அவரவர் பணி முடித்து வர நேரங்கள் முன்னும் பின்னும் ஆகும்.
ஐடி பீல்ட் என்றாலுமே ஒவ்வொருத்தர் ஒவ்வொரு அலுவலகம் என்று பிரிந்தவறாயிற்றே.
கல்லூரி படிக்கும் போது எப்படி ஒரு வீட்டை பிடித்து அனைவரும் தங்கினார்களோ அதே போல அலுவலகமும் அப்படியே தொடர்ந்தார்கள்.
ஐவரும் வந்து விட்டதை உறுதிப்படுத்தி கொண்டு, பந்து விளையாடிய மேகா, சாந்தனு கைக்கு அகப்படாது பந்தை வேண்டுமென்றே அட்சரன் வீட்டுப்பக்கம் தூக்கியெறிந்தாள்.
“அத்தை.. பந்து அட்சரன் அங்கிள் வீட்டுல விழுந்துடுச்சு. இருங்க… நான் போய் வாங்கிட்டு வர்றேன்.” என்று தன் பிஞ்சு பாதத்தில் படியில் நடந்தவனை தடுத்து, நானும் வர்றேன்” என்று இன்றே அந்த வீட்டில் காலடி எடுத்து வைக்கும் முடிவில் கை கோர்த்தாள்.
அழைப்பு மணியோசை அழுத்திவிட்டு சற்று தள்ளி நின்றாள். கதவு லென்ஸ் வழியாக காணும் நேரம் சாந்தனு மட்டும் தெரியட்டும் என்று.
கமலேஷ் வந்து கதவை திறந்தான்.
“யார் மச்சி?” என்று பாலா இருந்த இடத்திலேயே இருந்து கேட்டான்.
“நம்ம பக்கத்து வீட்டு குட்டி பிரெண்ட்டா” என்றவன் சாந்தனுவை உள்ளே அழைத்தான்.
“டேய் கூட்டிட்டு வா டா அந்த வெள்ளை முயலை பற்றி இன்டேரக்டா விசாரிப்போம்” என்று மனோஜ் கூறவும் வாசலில் இருந்து மேகா தலை தென்படவும் செருமிக்கொண்டு, “நிஷாந்த்… தண்ணி” என்று குடிநீரை அவசரமாய் தேவைப் போல நடித்தான்.
கமலேஷோ மேகாவை கண்டு, “என்ன வேணும்?” என்று சாந்தனுவிடம் கேட்டான்.
“அங்கிள் எங்க வீட்டு பந்து உங்க பின் வாசல்ல இருக்கு. கொஞ்சம் எடுத்து தர்றிங்களா?” என்று சாந்தனு கேட்டதும் “போய் எடுத்துங்கோடா” என்று கமலேஷ் கூறவும் சாந்தனு வீட்டுக்குள் ஓடினான்.
“எக்ஸ்கியூஸ் மீ… பந்து மரத்துல மாட்டியிருக்கு. நான் வேண்டுமின்னா உள்ள போகவா? சின்ன பையனுக்கு எட்டாது பாருங்க” என்று வாசல் வரை வந்தவள் வீட்டுக்குள் நுழைய அனுமதி வேண்டி நின்றாள்.
கமலேஷ் திகைத்தவனாய் நின்று பேச்சற்று பதில் வராதிருக்க, நிஷாந்தோ “உள்ளவாங்க” என்றான்.
மேகா உள்ளே நுழையும் நேரம் அட்சரன் செருக்கோடு தங்கியிருந்த அறையிலிருந்து வெளிவந்தான்.
ஒவ்வொருத்தரின் பார்வையை தன் மனதில் பதிவேற்றி பின் வாசல் வழியாக வந்து சாந்தனு குதித்து குதித்து எடுக்க முயல்வதை கண்டு அவளாக பந்தை எடுத்தாள்.
அங்கே கற்றாழை செடியிருக்க, மஞ்சள் வண்ண ரோஜா பூச்செடியும் இருக்க, வருடிக் கொண்டு திரும்ப, பாலா, மற்றும் மனோஜ் நின்றிருந்தார்கள்.
“ஹாய்… நீங்க நிலாவுக்கு என்ன சொந்தம். இதுக்கு முன்ன உங்களை பார்த்ததே இல்லை” என்று பேச்சு தொடுத்தான் மனோஜ்.
“நான் நிலா அண்ணிக்கு சொந்தமில்லை. விஸ்வா அண்ணாவுக்கு தூரத்து சொந்தம்.” என்று அங்கிருந்து வெளிவர எண்ணுபவளாக தரையை பார்த்து நடந்தாள்.
கமலேஷ் அந்த நேரம் குழந்தை சேனலை வைத்தான். “அத்தை நான் இங்க இருக்கேன்” என்று தானாய் சாந்தனு சோபாவில் அமர்ந்து கொண்டான்.
“டேய்… எட்டு மணிக்குள்ள வந்துடு. எங்க ஊர்ல எட்டுக்குள்ள சாப்பிட்டு தூங்கிடுவேன். நீ வரலை உன்னை விட்டுட்டு நானே சாப்பிட்டுடுவேன்” என்று மற்றவரை கண்டு சிநேகமாய் சிரித்து நழுவினாள்.
அவள் சென்றதும் அட்சரன் சோபாவில் அமர்ந்து, போனில் மெயில் செக் பண்ண ஆரம்பித்தான்.
“ஏன்டா அது யாரு?” என்று மனோஜ் கேட்க பாலா அருகே வந்து அமர நிஷாந்த், கமலேஷ், அட்சரன் மூவரும் சாந்தனு பேசுவதை கேட்க தயாரானார்கள்.
“எங்க அப்பாவோட தங்கச்சி. தூரத்து சொந்தம். அவங்க ஊர்ல படிப்பை முடிச்சி வந்துட்டாங்க. அவங்களுக்கு கல்யாணம் தடைப்பட்டுடுச்சுனு அம்மாவிடம் அப்பா சொன்னார். அத்தை அந்த மாப்பிள்ளையோட போட்டோவையே பார்க்கலையாம். கல்யாணம் வேண்டாம் வேலை பார்க்க விடுங்கனு அங்கிருந்து இங்க வந்துட்டாங்களாம். அம்மா கூட பொட்டிக் பார்த்துக்க ஆள் குறைவா இருக்கா.. ஆச்சியும் கொஞ்ச நாள் மனசு நிம்மதியா இருக்கட்டும்னு சொல்ல.. அத்தை இங்கயே கொஞ்ச நாள் இருக்கறதா சொன்னாங்க.
எங்கம்மா கூட தான் பொட்டிக்கு பார்ட்னரா வேலை பார்க்க போறாங்க.” என்று விவரித்தான்.
அட்சரனோ “எந்தவூர் டா உங்க அத்தை. எங்கயோ பார்த்த மூஞ்சி மாதிரி இருக்கு” என்றான்.
நிஷாந்தோ “என்னடா நீ மூஞ்சி அதுயிதுனு சின்ன பையனிடம், அப்படியே போய் சொல்லப் போறான். இப்பவே பாரு விஸ்வா நிலாவிடம் பேசியதை எப்படி புட்டு புட்டு வைக்கிறான். ஒழுங்கா பேசு.” என்று மென்குரலில் கடிந்தான்.
“எங்க அத்தை தஞ்சாவூர்ல இருந்து வந்துயிருக்கு. அவங்க ஊர்ல தலையாட்டி பொம்மை கூட இருக்கே… கையில தட்டி விட்டா அழகா டான்ஸ் ஆடும்.” என்று பீற்றினான்.
தஞ்சாவூர் அட்சரனின் ஊராக இருக்க “உங்க ஊர் டா. அதனால எங்கயாவது பார்த்திருப்ப?” என்று மனோஜ் கூறினான்.
“ஏன் மச்சி அந்த பொண்ணை எங்கயாவது பார்த்திருக்கியா?” என்று கேட்டான் நிஷாந்த்.
“பச் இல்லை. ஆனா ஊர் மூஞ்சினு நல்லா தெரியுது” என்றவன் நின்று யோசனையோடு அறைக்குள் சென்றான்.
மேகாவும் இங்கு வந்ததும் அங்கிருந்த ஒவ்வொருத்தவனின் முகப்பாவனையை மனதில் குறித்தாள்.
அவளுக்கு அத்தனை பேரின் முகத்தை தாண்டி அட்சரன் முகம் அச்சு பிசகாது கண்ணில் வந்து மோதியது.
“இடியட்.. இவன் முகமே வந்தா… அடுத்தவன் முகம் என்ன ரியாக்ஷன்ல இருந்ததுனு எப்படி கண்டுபிடிப்பேன்.
அடுத்த தடவை ஒவ்வொருத்தனையும் தனி தனியா சந்தித்து நோட் பண்ணணும்.” என்று கலைப்புற்றாள்.
வசந்தி சரியாய் உறங்கும் நேரம் மேகாவிற்கு அழைப்பை தொடுத்தார்.
“போன் போட்டுட்டியா… இங்க பாரும்மா அழாம பேசறதா இருந்தா பேசும்மா.” என்று எடுத்ததும் வேகமெடுத்தாள்.
“ஏன்டி… காலையிலருந்து ஒரு போன் போட்டேனா… எதுக்கு இப்படி பேசற” என்று செல்லமாய் கோபித்தார் மேகாவின் அன்னை வசந்தி.
“அம்மா… நீ எப்படியும் நிலா அண்ணிக்கு போன் போட்டு பேசியிருப்ப தானே?” என்று சிடுசிடுத்தாள்.
“ஆமாடி… மனசு திக்கு திக்குனு இருக்காதா. தஞ்சாவூர் தாண்டி போகாதவ. அந்தவூர்ல என்ன பண்ணறியோ. ஏதோ இப்ப தான் அந்த வீட்டுக்கு போயிட்டு வந்தனு நிலா சொன்னா… மனசு கேட்கலை டி.” என்று அழாத குறையாய் குறைப்பட்டார்.
“அம்மா…. எல்லாம் அங்க தான் இருந்தாங்க. பஞ்சப்பாண்டவர்கள் மாதிரி. அதுல அவன் யாருமா… என் வாழ்க்கையை விளையாட பார்த்தவன். என்னோட கணவருக்கு துரோகம் பண்ண நினைக்கிறவன்.
நான் வேண்டுமின்னா என் கணவரோட வாழாம தாலி வாங்கிட்டு இங்க வந்துயிருக்கலாம். அவர் அடுத்த கோவில் திருவிழாவுக்கு வர்றதுக்குள்ள அவனை கண்டுபிடிச்சிடுவேன் மா.” என்று அழுத்தமாய் கூறினாள்.
மேகா குரலில் இருந்த அத்தனை அழுத்தம் வசந்தியை பதற வைத்தது.
மகளை இங்கோ அனுப்பிவிட்டு அவளுக்கு மற்றவரால் கெடுதல் நிகழ்ந்திடுமோயென்று. ஆனால் மேகா சொல்வதை கேட்பவளும் இல்லை.
தன்னந்தனியாக மகளை வளர்த்து நல்ல மாப்பிள்ளையிடம் கரம் பற்றி கொடுத்தாலும் ஏனோ இது போன்ற பிரச்சனை கேள்விப்பட்டதிலிருந்து மேகாவின் தந்தை உயிரோடு இருந்து மகளை காத்திருக்கலாம் என்று தோன்றியது. ஆனால் அவர் தான் மேகா பத்தாவது படிக்கும் போதே உடல்நிலை சரியில்லாமல் இயற்கை மரணத்தை தழுவி விட்டாரே.
“அம்மா… அம்மா… சாப்பிட்டியா இல்லையா…?” என்று மேகா பல தடவை கத்தியதும் நடப்பிற்கு வந்தார் வசந்தி.
“ஆச்சு.. அதான் உன் தோழி ரம்யா வந்து சாப்பிட வச்சி பிறகு தான் போனா.” என்றதும் மனதில் தோழிக்கு நன்றி நவில்ந்தாள் மேகா.
“சரிம்மா பயப்படாம தூங்கு. உன் மாப்பிள்ளை கட்டின தாலி என் கழுத்துல தான் இருக்கு. கழட்டிலாம் வைக்கலை… அது இருந்தாலே எனக்கு யானை பலம் கிடைக்குது போதுமா.” என்று ஊரிலிருந்து வரும் போது மேகாவுக்கும் வசந்திக்கும் ஏற்பட்ட வாதத்திற்கு பதில் தந்தாள்.
“இப்பவும் சொல்லறேன் மேகா. தாலி வேலி தான். அது கழுத்துல இருந்தா எவனும் வாலாட்ட மாட்டாங்க. அதே கழுத்துல இல்லைனா… கண்ட கண்ட நாயுங்க கண்ணு நம்ம மேல மேயும். இது உங்கம்மாவோட சொந்த அனுபவத்தில நேர்ந்த உண்மையை வச்சி சொல்லறேன்.” என்று கூறினார் வசந்தி.
“சரிம்மா. நீ தூங்கு.. நான் அடிக்கடி போன் போட்டு பேசறேன்.” என்று போனை வைத்து விட்டு தனக்கு கொடுக்கப்பட்ட அறையில் வந்து ஜன்னலில் எட்டி பார்த்தாள்.
அடுத்த நாள் திட்டம் இன்றே உதிக்க, மகிழ்ச்சியாய் நாளை காய் நகர்த்திட கற்பனையில் ஒத்திகை பார்த்து உறங்க போனாள்.
தொடரும்.
Interesting
Super super super super super super super super super super super
Super👍😍😍😍