அத்தியாயம்-4
இங்கு அழுது கொண்டே வந்த சாந்தனு அட்சரன் பேசியதையும் திட்டியதையும், கூறி போதாதற்கு டிவி ரிமோட்டை பிடுங்கியதையும் விவரித்தான்.
மேகாவோ சாந்தனு பேசியதை மொத்தமும் கேட்டுவிட்டு சங்கடமாய் நிலாவை பார்த்தாள்.
நிலாவோ “சாந்தனு…. இங்க பாரு அப்பா உனக்கு ரீடிங் டேபிள் வாங்கறதா சொன்னார். அப்படி வாங்கறதா இருந்தா உனக்கு என்ன கலர் வேண்டும். சொல்லு பார்க்கலாம்” என்று மனதை திசைத்திருப்ப கேள்விகளை கேட்டதும் குழந்தை மனம் அட்சரன் பேசியதை அந்நேரம் அடியோடு மறந்து, “நான் பாய் அதனால ப்ளூ கலர் இல்லைனா பர்பிள் வாங்கலாம் மம்மி” என்றான்.
“ஓகே ஓகே வாங்கலாம். இப்ப சாப்பிட்டு தூங்கு.” என்று அழைத்து சென்றார்.
மேகாவோ ‘என்னால பாவம் குழந்தை எல்லாம் திட்டு வாங்குது. அட்சரன்… வாயை வச்சிட்டு சும்மா இருக்க மாட்டியா.’ என்று அவனை மனதுக்குள் வறுத்தெடுத்தாள்.
“அச்சு… அட்சரா..” என்று அவனின் எண்ணிற்கு வாட்ஸப்பில் கொஞ்சல் மொழியில் எப்பொழுதும் போல அனுப்பிவிட்டு அவன் பேசமாட்டானென அறிந்தும் காத்திருந்தாள்.
பத்து நிமிடமானது அவன் பார்த்துவிட்டானென இரண்டு ப்ளூ டிக் காட்டியது. ஆனாலும் திரும்ப பதில் வந்து சேரவில்லை.
“ஊமைக்கொட்டான்… எப்ப தான் பேசுமோ.” என்றவள் அறைக்குள் இருக்கவும் தன் கழுத்தில் இருந்த தாலியை எடுத்து முத்தமிட்டபடி, தன் திருமணத்தை நினைவுப்படுத்திக் கொண்டாள்.
☆திருமணநாளன்று……. முன்பு நிகழ்ந்தவை ☆
தன் அருகே குழப்பமாய் அமர்ந்தவன் திகைத்து அவனின் பெற்றோர் பேச்சில் தாலியை கட்டினான்.
அதன் பின் கூட அவன் பெற்றோர் கூறியதை கேட்டு அச்சு பிசகாமல் சடங்கை செய்தான்.
இரவு பெண் வீட்டில் சாந்தி முகூர்த்தம் என்று ஏற்பாடு நடக்க, தலையை தாங்கி பிடித்து மேகா நுழையவும் எழுந்து நின்றான்.
மேகாவுக்கு சன்னமாய் சிரிப்பு தோன்றவும் முறுவலிக்க, அதன் பிறகு பேசினான்.
“உனக்கு சிரிப்பா இருக்கு. எனக்கு இப்ப வரை எனக்கு மேரேஜ் என்றதை நம்ப முடியாம இருக்கேன்.
ஆக்சுவலி இந்த சடங்கு மனமும் உடலும் இணையறதுக்கு தானே.” என்றதும் மேகா ஸ்தம்பித்தவளாய் தலையை மெதுவாய் தலையாட்டினாள்.
“முதல்ல மனசு விட்டு பேசிடலாமா…” என்று கேட்டு மேகாவின் பதிலை வேண்டி நின்றான்.
மேகா “பேசலாம்” என்று ஒற்றை வார்த்தையை தொண்டையிலிருந்து சத்தமின்றி உதிர்த்தாள்.
அட்சரனோ “உன் பெயர் மேகாவா?” என்றதும் மேகா ‘ஆம்’ என்று தலையாட்டினாள்.
“மேகா… நான் நேத்து தான் ஊர்ல இருந்து வந்தேன். நான் என்னோட ஆபிஸ் ட்ரிப்காக ஒருவாரம் பெங்களுர் போக வேண்டியது.
அம்மா போன்ல இருந்து திடீரென போன் வந்துச்சு. அவங்களுக்கு ஆக்சிடெண்ட் ஆச்சுனு கடைசியா நேர்ல பார்க்கணுனு சொன்னாங்க.
ஆபிஸாவது மண்ணாங்கட்டியாவதுனு அம்மாவை பார்க்க வந்தேன். இங்க என்னடானா வீட்ல பந்தக்கால், சாமினார், வீடே லைட் போட்டு வீட்டுக்கு பெயின்ட் அடிச்சி கல்யாண வீடா இருக்கு.” என்றான்.
மேகா புரியாமல் தற்போது விழித்து அட்சரனை நோக்கினாள்.
“ஆமா… எனக்கு கல்யாணம் என்றதே இரண்டு நாள் முன்ன தான் தெரியும்.
உனக்கு புரியலைல… விளக்கமா சொல்லறேன்.
அப்பாவுக்கு நான் படிப்பு முடிச்சி அவரோட இருப்பேன்னு ஆசைப்பட்டார். நான் சென்னையில ஐடி ஜாப் பார்க்கவும் என்னிடம் பேசமாட்டேனு கோபப்பட்டார். அப்பத்திலயிருந்து என்னிடம் பேசறதில்லை. ஒரு வருஷமா அப்பா என்னிடம் பேசறதா இருந்தா அம்மா மூலமா தான் பேசுவார். நானுமே அப்படி தான்.
உன் போட்டோவை என்னோட சென்னை வீட்டு அட்ரஸுக்கு அனுப்பி கல்யாணம் எல்லாம் பேசிட்டோம். பிடிச்சிருக்கானு லெட்டர்ல அப்பா கேட்டிருக்கார். பொண்ணை பிடிச்சா போன்லயோ அவரிடம் பேச சொல்லியும் அனுப்பினார்.
அப்பாவே அம்மாவிடம் ‘அவனா பதிலுக்கு போன் போட்டு ஓகே சொல்லட்டும். இந்த முறை நீ எங்களுக்குள் நடுவுல பேச வைக்க பாடுபடாதேனு சொல்லியிருக்கார்.’ ஆனா இந்த போட்டோ லெட்டர் எதுவும் எனக்கு வரலை. ஆனா அப்பாவிடம் என் கையெழுத்துல ஒரு லெட்டர் போய் சேர்ந்திருக்கு.
அதுல என்ன எழுதியிருந்ததுனா… ‘எனக்கு கல்யாணம் வேண்டாம் பொண்ணு பிடிக்கலை… அதுவும் நீங்க பார்த்த பொண்ணை கட்டிக்க மாட்டேன். அம்மா போன்ல இதை பத்தி கேட்டா அம்மாவிடமும் பேசமாட்டேன். அப்பறம் ஊர்பக்கமே வரமாட்டேன். போன் பண்ணினா இதை பத்தி பேசாம இருந்தா மட்டும் போன் பண்ணுங்க’னு எழுதியிருந்தது.
நான் கொஞ்சம் சொன்னா சொன்னதை செய்யற டைப். அதனால அம்மா போன்ல அதுக்கு பிறகு பொண்ணு பிடிச்சிருக்கா, போட்டோ பிடிச்சிருக்கா எதுவும் கேட்கலை. ஆக்சுவலி லெட்டர் வந்த அன்னைக்கே என் போன் வேற மிஸ்ஸாகிடுச்சு. வீட்ல இரண்டு வாரம் கழிச்சி தான் கிடைச்சது.
சோ எனக்கு கல்யாணம் பார்த்ததோ, கல்யாணம் முடிவானதோ தெரியாது. ஏன் எனக்கு வந்த லெட்டரை யார் கையெழுத்து போட்டு வாங்கினா? யார் பதில் லெட்டர் போட்டா? இப்படி என் கையெழுத்து அச்சுல அப்படியே எழுதியது யாரு? எதுவும் தெரியலை. இங்க வந்து இரண்டு நாள்ல கல்யாணம் என்ற ஷாக்கை விட, எனக்கு இப்படி யார் செய்திருப்பானு தான் மனசு முழுக்க ஓடுது.’ என்றான்.
“மாமா அத்தை ஒரு தடவை கூட போன்ல போட்டோ பத்தியோ கல்யாணத்தை பத்தியோ பேசலையா?” என்று மேகா கேட்டாள். தற்போது இருக்கும் கலியுகத்தில் போன் வசதியில் இதை போட்டோ அனுப்பி கேட்டிருக்கலாமே என்பது அவள் எண்ணம்.
“பச்… கேட்கலையே… அப்பாவுக்கு என்னனா… நான் அவர் மேல இருக்கற கோபத்துல அப்படி கல்யாணத்தை அவாய்ட் பண்ணறதா நினைச்சிட்டார்.
இங்க கல்யாணத்தை நிறுத்தாம இப்படி அம்மாவுக்கு சீரியஸ்னு போன் பண்ணி அழைச்சி என்னை யோசிக்க விடலை. அம்மாவும் அப்பா சொன்னதை வேதவாக்கா நம்பிட்டு என்னிடம் போன்ல உன்னை பத்தி கேட்கலை. ஒரு வேளை கேட்டிருந்தா எல்லாம் தெளிவாகியிருக்கும். இப்படி இங்க குழம்பி இருக்க மாட்டேன்.
அம்மா மேல பாசம் இருந்தா தாலி கட்டுனு கைதியா நின்றுட்டேன்.” என்றான் அட்சரன்.
மேகா முதலிரவு அறையை சுற்றி அலங்கரித்திருப்பதை கண்டாள். தொண்டையில் எச்சியை விழுங்கி, “உங்களுக்கு என்னை பிடிக்கலையா? கட்டாயப்படுத்தி மேரேஜ் நடந்ததா பீல் பண்ணறிங்களா?” என்று கேட்டு கவலையாய் நின்றாள். அவளுக்கு அட்சரன் தன்னை பிடிக்கவில்லையென கூறப் போகின்றானோ என்ற கவலை வெகுவாய் தாக்கியது.
அட்சரன் அவளை ஏறெடுத்து பார்த்து, “எங்கப்பா அம்மா பார்த்த பொண்ணு நீ. உனக்கென்ன குறைச்சல். எனக்கு உன்னை பிடிச்சிருக்கு.
பிடிக்காம எல்லாம் தாலி கட்டலை. பிடிச்சி தான் தாலி கட்டினேன்.” என்றதும் மேகாவுக்குள் உதடு விரிந்து முறுவல் தோன்றியது.
“மேகா… என் லைப்புல எனக்கானவளை தேர்ந்தெடுத்து எங்கப்பா அம்மா போட்டோவுல காட்டியதை, யார் தடுத்து இப்படி பண்ணியதுனு தெரியணும். அதுவரை என் மைண்ட் டிஸ்டர்பா இருக்கும்.” என்று தயங்கினான்.
“புரியுது.” என்று மெத்தையில் படுத்து கொண்டாள்.
அட்சரன் உறங்காமல் மின்விசிறியையே பார்க்க, “என்ன யோசனை?” என்று கேட்டாள்.
“இல்லை… என் கூட என் காலேஜ் பிரெண்ட்ஸ் நாலு பேர் ஸ்டே பண்ணியிருக்காங்க. அதுல யாரோ தான் இப்படி பண்ணியிருக்கணும். அது யாராயிருப்பாங்கனு திங்க் பண்ணமுடியலை.” என்று கூறினான் அட்சரன்.
“ஏன் நாலு பேரையும் நிற்க வச்சி கேட்டுடலாமே.” என்று மேகா யோசனை கூறினாள்.
“மேலோட்டமா பார்த்தா இப்படி நடந்ததுக்கு அப்படி கேட்டாலே விடை கிடைச்சிடும் மேகா. ஆனா நாலு வருஷ பழக்கம்…? நாலு பேர்ல ஒருத்தன் தான் இதை செய்திருக்கணும். அதுவும் என் மேல பொறாமை குணத்துல இருந்து என்னோட வாழ்க்கையை நான் நல்லா வாழக்கூடாதுனு நினைக்கிறவன் அப்படி செய்திருக்கணும்” என்றதும் மேகா ஆமோதிப்பாய் தலையசைத்தாள்.
“உண்மை தான். கல்யாணம் என்றது லேசுபட்ட விஷயமா… அதுல போய் ஒருத்தன் தலையிட்டு இருக்கான். இதே இந்த இடத்துல நீங்க எனக்கு தாலிக் கட்டாம இருந்தா எத்தனை பெரிய அவமானமா போயிருக்கும்.
இது ஒருத்தனோட கஷ்டமில்லை. ஒரு மனுஷனோட அடுத்த கட்ட வாழ்க்கையில கையை வச்சிருக்கான். அதோட அந்த குடும்பத்தினை வருத்தப்பட செய்திருக்கான்.
எனக்கு கல்யாணம் நின்றிருந்தா இது இரண்டு குடும்பத்தோட மானப்பிரச்சனை. இரண்டு குடும்பத்தில இருக்கற மனுஷங்களோட மனசுல எவ்ளோ பெரிய வேதனையை கொடுக்கும். நீங்க சொல்லவர்றது சரிங்க. இப்படிப்பட்டவனை எப்படி கண்டுபிடிக்கறது.” என்றாள் மேகா.
“கண்டுபிடிக்கணும்…. இங்கிருந்து போனதும் கொரியர் ஆபிஸில போய் என் பெயர்ல வந்த கொரியரை யார் வாங்கினானு கேட்கணும். போட்டோ காமிச்சா அவங்களா சொல்லிடுவாங்க.” என்று கூறினான் அட்சரன்.
நான்கு நாட்கள் மேகா வீட்டில் அட்சரன் இருக்கவும் அவளிடம் பேசி பழகினான்.
பெரும்பாலும் நண்பர்கள் நண்பர்கள் என்ற அந்த வட்டத்திற்குள்ளே வந்தவனை பார்க்க பாவமாக இருந்தது.
இப்படி நேசம் வைத்த நண்பனின் வாழ்வில் விளையாட துணிந்தவனை யாரென தெரியாவிட்டாலும் திட்டி தீர்த்தாள்.
தாய் தந்தையிடம் தன் நலத்தை கெடுப்பவன் எவனென அறிந்தப்பின் மேகாவை அழைத்து செல்வதாகவும் அதுவரை இங்கே இருக்கட்டும் என்று கூறினான்.
வசந்தியோ திருமணம் முடித்து மகளை அழைத்து செல்லாமல் போகும் மாப்பிள்ளையிடம் காரணம் கேட்டார்.
அட்சரனோ மேகாவிடம் கூறியதை போல தன்னிலையை கூறினால் அஞ்சுவாரென வெவ்வேறு காரணம் உரைத்தான்.
ஆனால் வசந்தியோ “உங்களுக்கு என் மகளை பிடிக்கலையா. என்ன வரதட்சனையில குறையேதாவது இருக்கா” என்று திரும்ப திரும்ப கூறவும் மேகாவே அன்னையை தனியாக அழைத்து கூறி முடித்தாள்.
போதாதற்கு ‘அட்சரனோடு நானும் போறேன் மா” என்றதும் அட்சரன் மறுக்க, மேகா ‘போவேன்’ என்று வாதடினாள்.
கணவன் மனைவியின் அழகிய சண்டையை அட்சரனின் தாய் தந்தையான வித்யாதரன் கனிமொழி ரசித்து பார்த்தனர்.
இங்கு வந்தப்போதும் எப்படியாவது ‘எமோஷனல் பிளாக்மெயில்’ செய்து தான் மகனை மணக்க கூற வேண்டுமென எண்ணினார். ஆனால் அவன் மேரேஜ் பண்ணிக்கறேன். ஆனா நீங்க போட்ட லெட்டரோ போட்டோவோ எனக்கு வரலையே.’ என்று தான் விழித்தான்.
நீங்க பொண்ணு பார்த்ததோ திருமணம் முடிவு பண்ணியதோ எனக்கு பிரச்சனையில்லைப்பா. நீங்க பேசறது போதும்.
எனக்கு என்னை விட நீங்க பார்த்து முடிவு பண்ணின பெண் சிறந்தவளா தான் இருப்பா” என்று பேசினான்.
என்ன மகனின் கூடவே இருந்து அவனின் நலத்தை விரும்பாமல் பொறாமை கொள்ளும் தோழன் யாரென அவருக்கும் கலக்கம் இருந்தது.
இனி அட்சரன் மேகா பாடு என்று வசந்தியிடம் ”அவர்கள் கணவன் மனைவி சண்டையை போடட்டும். நீங்க வேடிக்கை பாருங்க சம்மந்தி” என்று கிண்டலாய் மொழிந்தார்.
கடைசியில் அட்சரன் நான் கூட்டிட்டு போக மாட்டேன். அங்க பேட்சுலர் வேற தங்க வேண்டாம் என்று கூற அப்பொழுது தான் விஸ்வா நிலாவை பற்றி வசந்தி கூறியது.
தூரத்து சொந்தம் மேகாவோட அப்பாவுக்கு ஒன்று விட்ட தம்பி மகன் விஸ்வா. கல்யாணத்துக்கு வரமுடியாதென சொன்னாங்க. ஆனா முந்தாநாள் தான் ஊருக்கு வந்தாங்க.
அவங்க வீட்டுக்கு பக்கத்துல உங்க வீடு என்றதும் விசாரிச்சோம். ரொம்ப நல்லா பையன்னு நிலாவும் விஸ்வாவும் சொன்னாங்க. அதனால தான் கண்ணை மூடி மேகாவை கட்டிக்க கேட்டதும் சம்மதிச்சது.” என்றார் வசந்தி.
அட்சரனுக்கோ நிலாவும் விஸ்வாவும் இந்த குறிப்பிட்ட நாட்களில் பார்த்து சிரித்தது இதற்கு தானா? என்று தலையை தாங்கினான்.
அவர்களாவது ஒருவார்த்தை சகஜமாக பேசியிருந்தால் தனக்கு திருமணம் என்றவொன்றை முன்கூட்டியே அறிந்திருப்பான்.
தலைவிதி என்பது இது தானா என்று நொந்தான்.
அதே நேரம் நிலா விஸ்வா மட்டும் வசந்தி வீட்டிற்கு வந்தார்கள்.
சாந்தனு உறங்குவதாக கூறியதும் அட்சரனோ அமைதியிலேயே இருக்க வசந்தி மாப்பிள்ளை அட்சரன் நிலையை ஒப்பித்தார்கள்.
அட்சரனுக்கு அது பிடிக்கவில்லை. தன் நண்பர்களின் செய்கை ‘தமுக்கம்’ அடித்து செல்வதாக தோன்றியது. ஆனால் வேறு வழியில்லை. சென்னையில் தனக்கு பக்கத்திலிருக்கும் அவர்களிடம் சிங்கிள் மதராக இருந்த வசந்தி பேசி விவரிப்பதும் தவறாக தோன்றவில்லை.
விஸ்வாவும் ‘யாரா இருக்கும் அட்சரன். உங்க லைப்ல விளையாடியது.’ என்று கேட்க ”தெரியலைங்க சென்னை போய் கொரியர் ஆபிஸ்ல கேட்டா மேபீ தெரிய வரலாம்” என்றான்.
அன்றே கிளம்புவதாக அட்சரன் மேகவிடம் தனிமையில் கூற, மேகாவோ நானும் வர்றேன். நான் இப்ப உங்க மனைவி. அந்த துரோகி யாருனு பார்க்கணும்’ என்றவளை முறைத்தான்.
“வேண்டாம்னா வேண்டாம். எனக்கு கொஞ்சம் டைம் கொடு. யாருனு தெரிந்ததும் பிறகு அவனிடமிருந்து விலகிட்டு உன்னை அழைச்சிட்டு போறேன். அதுவரை இங்க ஊர்ல இரு.” என்று மூக்கை நிமிட்டினான்.
அட்சரன் அடுத்த நாளே தாய் தந்தையிடம் கூறிவிட்டு சென்னை வந்தான். ஆனால் கொரியர் ஆபிஸ் வந்ததும் நண்பர்களோடு எடுத்த புகைப்படம் காட்டி கேட்டதற்கு அந்த கொரியர் பையனோ, “அண்ணா… கையெழுத்து போட்டப்பவும் என்னிடம் வந்து கொரியர் வாங்கியதும் மாஸ்க் போட்டிருந்தார். என்னால ஆளை பார்க்க முடியலை.” என்றதும் அட்சரன் நொந்துவிட்டான்.
சோர்வாய் வீட்டுக்கு வந்த நேரம் “நான் விஸ்வா அண்ணா வீட்ல வந்து தங்க போறேன். அவன் எப்படியும் என்னை பார்த்து ஷாக் ஆவான். எப்படியும் பூனை கிச்சனை உருட்டி வெளியே வரும்.” என்று சொல்ல அட்சரன் மறுத்தும் கேளாது சென்னைக்கு வந்துவிட்டாள்.
“நீ இங்க வந்த நான் உன்னிடம் பேச மாட்டேன் டி” என்று அட்சரன் மிரட்டியும் மேகா அதை காதில் வாங்கவில்லை.
இதோ இங்கு வந்து இருபது நாள் ஆகின்றது. ஆனாலும் எந்தவித முன்னேற்றமும் இல்லை. அட்சரனின் கூடவேயிருந்து இத்தனையும் செய்யும் அவன் யார்? என்று மேகா எரிச்சலில் கிடந்தாள்
Super super interesting 👌👌👌👌
Super. Intr?esting. Who is that culprit
Interesting