அத்தியாயம்-6
எதையும் கூறாமல் அலுவலக தளம் நோக்கி நடக்கும் அட்சரனை கண்டு பின் தொடர்ந்து லிப்டில் வந்தடைந்தான் பாலா.
“டேய்… உனக்கு யாருனு தெரியும் தானே. நான் இல்லை… அப்போ… அப்போ… மனோஜ் நிஷாந்த் கமலேஷ் மூன்று பேர்ல யாரு டா?
அட்சரன்… இது மன்னிக்கிற தவறில்லை டா. கூடவேயிருந்து அழகான பொண்ணை வேண்டாம்னு நீ சொல்லற மாதிரி உன் லைப்பை அழிக்க முயற்சி பண்ணிருக்கான். துரோகி டா… யார் டா அந்த துரோகி” என்று நிறுத்தி கேட்டான்.
லிப்டில் யாரும் இல்லை என்றதும் பாலாவிற்கு கேட்க தயக்கமில்லை, கிட்டதட்ட கத்தினான்.
அட்சரனோ “துரோகி தான் டா. ஆனா நண்பன் துரோகியா எதுக்கு மாறணும். என்ன காரணம்? அது தெரிந்து அவன் மனசுல எனக்கு நல்லது நடக்க கூடாதென்ற சைக்கோ எண்ணங்களை எடுத்து என் நண்பனா மாத்தணும். மாத்துவேன்” என்று கூறினான். கதவு திறக்க அட்சரன் அவன் பணியை பார்க்க அமர்ந்தான்.
பாலா அருகே வந்து, “எப்படி டா? உனக்கு ஒருத்தன் கெடுதல் செய்யறான்னு தெரிந்தும் அவனோட பழகுற. இதே நானா இருந்தா என்ன பண்ணுவேன் தெரியுமா. அந்த நாயை அடிச்சி வீட்ல இருந்து வெளியே துரத்துவேன். ஏன்… பிரெண்ட் என்ற மற்றவர்களையும் இந்நேரம் வெளியேத்தியிருப்பேன்.
யாருனாவது சொல்லேன் டா.” என்று பாலா கேட்டு நின்றான்.
“ஏன்… அவனிடம் சமயம் கிடைக்கிறப்ப முஞ்சிலடித்தாப்ல பேசவா.? ஒன்னும் வேண்டாம்.. உன் வேலையை பாரு. நான் பார்த்துப்பேன்.” என்று அட்சரன் கூறவும் பாலா பத்து நிமிடம் அங்கேயே அசையாது நிற்க, “எவ்ளோ நேரமானாலும் சொல்ல மாட்டேன் டா மச்சி.” என்று சிரித்தான் அட்சரன்.
பாலா கால் மணி நேரம் வரை நின்றவன் மற்றவர்களின் பார்வைகள் துளைக்க, அவனிடம் அடைந்தான்.
ஆனால் நண்பன் மீது கோபமாய் இருந்தான். யார் அட்சரனுக்கு இப்படி செய்வான்? என்று பைத்தியம் பிடிக்காத குறையாக சுற்றினான்.
அட்சரன் மட்டும் டீ பிரேக் அப்பொழுது டீயை பருகிக் கொண்டு தனது நண்பர்களோடு பஞ்சதந்திரமாக, ஐந்தாம்படையாக எடுத்த புகைப்படத்தில் இருந்தவனை கண்டு ‘ஏன்டா இப்படி பண்ணின? எனக்கு கொரியர் ஆபிஸ் போனப்பவே தெரிந்துடுச்சு.
கையெழுத்து என்னை மாதிரி போட்டுயிருக்க, கொரியர் பையனுக்கும் ஹெல்மெட் போட்டு மாஸ்க் போட்டிருந்த உன்னை அடையாளம் தெரியாம போகலாம். ஆனா லெப்ட் ஹாண்ட்ல கையெழுத்து போட்டார் சார்னு சொன்னப்பவே தெரிந்துடுச்சு டா. அது நீ தான்னு.
என் மேல என்ன கோபம்? எனக்கு அப்பா பார்த்த வரனை, வர போற பெண்ணை ரிஜக்ட் பண்ணி கமுக்கமா லெட்டர் போட்டு என் வாழ்வை அழிக்க நினைச்சிருக்க.’ என்று அவனை பார்த்து கேட்டபடி பெருமூச்சை வெளியிட்டான்.
பாலா இந்த பெருமூச்சை நண்பன் அடிக்கடி வெளியிடுவதை பார்த்து துவண்டு போனான்.
எப்படி இத்தனை நாள் தெரிந்தும் சும்மா இருக்கான். எப்படி இருக்க முடியுது என்று புறப்படும் வரை எண்ணிக் கொண்டிருந்தான்.
காரில் கிளம்பவும், “யார்னு சொல்வியா மாட்டியா டா?” என்று மிரட்டி பார்த்தான் பாலா.
“டேய்… அவனா வெளியே வந்து தப்பை உணர்வான். சும்மா கேட்டுட்டு இருக்காதே. அப்பறம் மத்த பிரெண்ட்ஸ் ஹர்ட் ஆவாங்க” என்று காரை நிறுத்தினான்.
மனோஜ் ஏறவும் பாலாவின் கண்கள் இவனா இருக்குமோ என்று சந்தேகத்தோடு கோபமாய் பார்த்தான்.
“என்ன மச்சி கோபமா இருக்க? பானிப்பூரி வேண்டுமா? சாரி டா தரமாட்டேன். எனக்கே எனக்கு” என்று வாயில் போட்டான்.
‘ஒரு பானிப்பூரியை கூட தரமாட்டான். இவன் தான் அந்த சுயநலவாதியோ’ என்று பார்க்க, அட்சரன் மந்தகாச புன்னகையோடு வண்டியை செலுத்தினான்.
‘இந்த ரணகளத்திலும் எப்படி இவன் சிரிக்கறான்’ என்று ஆச்சரியம் கொண்டு நண்பனை பார்த்தான்.
அடுத்தடுத்து கமலேஷ் நிஷாந்த் என்று காரில் ஏறினார்கள்.
மனோஜை குற்றவாளியாக துரோகியாக கற்பனை செய்ததற்கே மனம் வலிக்க மற்ற இருவரையும் அப்படி காண பிடிக்காமல் பாலா அமைதியாக வந்தான்.
வீட்டிற்கு வந்த நேரம் வாசலில் மேகாவும் சாந்தனுவும் விளையாடியபடி வாசலில் கேட்டில் நின்று தெருவை நோட்டமிட்டார்கள்.
அட்சரனுக்கு வந்தது கோபம். இவயென்ன வேண்டுமின்னே ரோட்ல நிற்கறா. திமிரு பிடிச்சவள்’ என்று காரை பார்க் செய்யவும் பந்து சரியாய் கார் கதவின் முன் வந்தது.
பாலா எடுத்து வந்து கொடுக்க முயல, “அய்… ரீடிங் டேபிள் வந்துடுச்சு” என்று குதித்து பந்தை வாங்காமல் ஓடினான்.
“இந்தாங்க சிஸ்டர்” என்று பாலா கொடுக்க, அவனிடமிருந்து வாங்கினாள்.
“என்ன மச்சி சிஸ்டர்னு சொல்லிட்ட” என்று மனோஜ் கிசுகிசுக்க மற்றவர்கள் மேகா கையெழுத்துயிட்டு ரீடிங் டேபிளை வாங்கி சாந்தனுவிடம் “உனக்கு தான் வாங்கினேன். வெயிட் சாந்தனு” என்று செல்வது நடந்துக் கொண்டே பார்த்துவிட்டு வந்தனர்.
நண்பர்கள் மூவரும் இருப்பதால் “சிஸ்டர் தானே டா சொல்லணும். கல்யாணம் ஆகப்போகுதுனு சொன்னாங்களே. இப்ப நம்ம பிரெண்ட் ஒருத்தன் கல்யாணம் பண்ணறான்னா உடனே அந்த பொண்ணு நமக்கு தங்கச்சி ஆகறதுதானே.” என்று கூறி ஒதுங்கினான்.
பாலா பேசியதில் “மச்சான் என்னவோ பீலிங்ல இருக்கனு நினைக்கிறேன். ஏன்டா.. அந்த பொண்ணை லவ் பண்ணினியா” என்று மனோஜ் கேட்டதும் அட்சரன் சிரிக்க பாலா முறைத்தான்.
“போடா அங்குட்டு வந்துட்டான். பானிபூரி கூட கொடுக்கலை.” என்று அறைக்குள் சென்றான்.
“என்னவாம் டா அவனுக்கு ஒரு பானிப்பூரி தரலை அதுக்கு என்னோட கோச்சிட்டு இருக்கான்.” என்று மனோஜ் கவலையோடு நகர்ந்தான்.
சாப்பிடும் நேரம் மேகா அட்சரனிடம் “நாங்க ஹோட்டலுக்கு வந்திருக்கிறோம். சாந்தனுவோட, நிலா அண்ணி விஸ்வா அண்ணா கூட இருக்கார். நீங்க தான் இல்லை.” என்று கவலையாய் கூறினாள்.
“என்ன பலமான ட்ரீட்டா… சாந்தனுவுக்கு ரீடிங் டேபிள். இப்ப ஹோட்டல்.” என்று அட்சரன் பேசியபடி கடிகாரத்தை பார்த்து உடைமாற்றினான்.
“நீங்க தான் இல்லை அச்சு” என்று சோகமாய் வார்த்தை வடித்தாள்.
“டேய் வர்றியா இல்லையா?” என்று கமலேஷ் கூறவும் “இருடா கார்ட் எடுத்துட்டு வர்றேன்” என்று தலைவாறினான்.
“எங்க கிளம்பறிங்க” என்று கேட்டாள்.
“ம்ம். சொல்ல முடியாது போடி” என்றான். பக்கத்தில் பாலா “சிஸ்டரா டா” என்றதும் அட்சரன் தலையாட்டினான்.
“பேசிட்டு வாடா… பாவம்” என்று பாலா கூறினான்.
அட்சரனோ பேசிக்கொண்டே போகலாமென சைகை செய்தான்.
அட்சரன் வண்டியை செலுத்திக்கொண்டே “ம்ம் அப்பறம் பேசட்டுமா” என்று கூறி கத்தரித்தான்.
“போடா” என்று சலித்தவாறு கத்தரித்தாள் மேகா.
ஐவரும் ஒரு ஹோட்டலுக்கு வந்தனர். கமலேஷ், மனோஜ், நிஷாந்த் சென்றதும் பாலாவோ நான் இவனோட பார்க் செய்துட்டு வர்றோம் டா” என்று அனுப்பினான்.
“ஏன் மச்சி பஸ்ட் நைட் நடந்ததா.?” என்றதும் அட்சரன் முறைக்கவும் “இல்லைடா… தெரிஞ்சுக்க கேட்டேன். தப்பா…?” என்று பாலா கேட்டதும், “மேரேஜ் ஆனதும் நாலு நாள் அங்க தான் இருந்தேன். ஆனா பேசினேன் அவளிடம் பிரச்சனையை சொன்னேன். சால்வ் பண்ணிட்டு லைப்பை ஸ்டார்ட் பண்ணலாம்னு சொன்னேன். அதனால இங்க அப்படியே வந்துட்டேன்.” என்றவன் கார் பார்க் செய்துவிட்டு இறங்கினார்கள்.
“பாவம் டா சிஸ்டர். உன்னை பார்க்க அங்கிருந்து தனியா வந்துயிருக்காங்க. அதுவும் முப்பதாவது நாளை செலிபிரேட் பண்ணி சாந்தனுவுக்கு ரீடிங் டேபிள் வாங்கி கொடுத்து, காலையிலேயே ஸ்வீட் செய்து, மதியம் உன்னை தேடி வந்தாங்க. இப்படி எமோஷனலே இல்லாம இருக்க. அந்த பொண்ணை கையில தாங்க வேண்டாமா?” என்று கேட்டான்.
“தாங்குவேன் டா. வாழ்க்கை முழுக்க தாங்கப் போறேன். கொஞ்ச நாள் தான் அவன் வெளிநாட்டுக்கு போகறதுக்குள்ள அவனிடம் கேட்டுடுவேன்.” என்று வாயை விட்டான்.
நாக்கை கடித்து பாலாவை பார்க்க, “அப்போ மனோஜ் இல்லைனா நிஷாந்த் அப்படி தானே டா” என்று கேட்டதும் நண்பர்கள் முன் நின்றனர்.
“என்னது டா நான் இல்லைனா நிஷாந்த்” என்று மனோஜ் வில்லன் போல முன் நிற்கவும் பாலாவோ அதிர்ந்தான்.
அட்சரனுக்கு சிரிப்பு தாளாமல் “பில் பே பண்ணறதை சொல்லறான் டா” என்று அழைத்து சென்றதும் பாலாவோ “மனோஜ் தானே?” என்று திரும்ப திரும்ப அட்சரனிடம் கேட்டான்.
“என்னடா?” என்று சலித்து திரும்பினான்.
“உனக்கு வந்த லெட்டரை மாத்தி கையெழுத்து போட்டு உங்கப்பாவுக்கு லெட்டர் போட்டு தங்கச்சியை கட்டிக்க முடியாம சதி செய்த துரோகி மனோஜ் தானே?” என்று மூச்சு வாங்க கூறவும், அட்சரனோ எதிரே தான் வந்ததும் பூவாய் மலர்ந்த தன்னவளை கண்டு மென்னகை புரிந்து எதிர் டேபிளில் அமர்ந்தான்.
“சொல்லு டா அவன் தானே.. மனோஜ் தானே?” என்று கத்தவும் அட்சரன் கடுப்பாய் திரும்பினான்.
“நான் தான்டா… நான் தான். நீ பே பண்ண தேவையில்லை. நானே பே பண்ணறேன்” என்று குறைப்பட்டான் மனோஜ்.
சாப்பாடு ஆர்டர் தந்துவிட்டு காத்திருக்க கமலேஷோ “மச்சி பக்கத்து வீட்டு ஆட்களும் இங்க தான் டா சாப்பிட வந்திருக்காங்க” என்று கமலேஷ் கூறவும் சாந்தனு “ஹாய் அங்கிள்” என்று கையசைத்தான்.
மேகா அழகாய் புன்னகைத்து கொண்டாள். அவளுக்காக அவன் இங்கு வந்ததாக கருதினாள். உண்மையும் அதுதான் அட்சரன் அவளுக்காக வந்தான்.
சாப்பிடும் போது நிஷாந்த் பார்வை மேகாவை விழுங்கவும், அதே அணலோடு அட்சரனை காண கண்களை திருப்பினான்.
அட்சரனோ நிஷாந்தை பார்க்க நிஷாந்த் பயந்தவனாக தலையை கவிழ்த்தான்.
‘ஏன் நிஷாந்த் என் மேல என்ன வன்மம்? இந்தளவு அணல் பார்வை எதுக்கு? இத்தனை நாள் இந்த வன்மமான பார்வையை எப்படி கவனிக்க தவறினேன்’ என்று சிந்தித்தான் அட்சரன்.
பேரர் பில் கொண்டு வந்து கொடுக்க, மனோஜ் பையிலிருந்து எடுக்கும் முன், “நான் பே பண்ணறேன் மச்சி. எப்படியும் அடுத்த வாரம் அமெரிக்க போயிடுவேன்.” என்று தரவும் மனோஜோ “ஓகே டா எவன் கொடுத்தா என்ன? நமக்குள்ள…” என்று சாப்பிட்டான்.
பாலாவின் பார்வை மனோஜிடமிருந்து நிஷாந்த் பக்கம் திரும்பியது.
அட்சரனும் அதே நேரம், “இன்னிக்கு நான் பே பண்ணறேன் டா. நான் தானே பிளான் பண்ணாம உங்களை கூட்டிட்டு வந்தது. இது என்னோட ட்ரீட்டா இருக்கட்டும்” என்று நிஷாந்த் பர்ஸ் எடுக்கும் முன் கார்டை தேய்த்து முடித்தான்.
அட்சரன் இலகுவாக கை அலம்ப செல்லவும், ஸ்பூனால் சாப்பிட்ட நிஷாந்தோ பற்கடிக்கும் சத்தம் பாலா கேட்க, அட்சரனை கண்டு நிஷாந்தை கண்டும் அதிர்ச்சியாய் இருந்தான்.
நிஷாந்த் முகத்தில் இத்தனை கடுமையா? என்று முதல் முறையாக பாலா அதிர்ந்தான். நிஷாந்திற்கு பெரும்பாலும் கல்லூரியில் பீஸ் கட்ட இயலாத நிலையிலும் தாமதாகவும் அந்த நேரமெல்லாம் அட்சரன் வீட்டிலிருந்து வரும் பணத்தை தான் கட்டி விடுவான்.
அப்படியிருக்க நன்றி என்றதை மறந்தானே என்ற அதிர்வு அப்பட்டமாய் பாலா முகத்தில் தெரிந்தது.
Interesting