அத்தியாயம்-7
நண்பர்கள் ஐவரும் வீட்டிற்கு வந்து அவரவர் அறைக்கு சென்று தாழிட்டனர். பாலா வீட்டிற்கு வந்ததும் நேராக அட்சரன் அறைக்கு வந்து நின்றான்.
“எதுக்கு டா அமைதியா போற. அவன் தானே… அந்த நிஷாந்த் தானே?” என்று சந்தேகத்தை தெளிவாக்க கேட்டான்.
“மனோஜானு கேட்ட, இப்ப நிஷாந்தா… என்ன அடுத்து கமலேஷை கேட்பியா?” என்று ஷர்டை கழட்டி ஹாங்கரில் மாட்டினான்.
“மனோஜ் இன்னோசென்ட் நிஷாந்த் தான் ஒரு மார்க்கமா இருந்தான். நீ வேற வெளிநாடுனு சொன்ன. மனோஜ் போகறதுக்கு ஒரு மாதம் இருக்கு. இந்த நிஷாந்த் தான் அடுத்த வாரம் போறான். நீ அப்ப சொன்ன எனக்கு நினைவிருக்கு. சொல்லு டா?” என்று கேட்டு முன்னே முன்னே வரவும், “டிரஸ் மாத்த விடுடா” என்று பாத்ரூமுக்கு சென்று ஜீனிலிருந்து ஷார்ட்ஸுக்கு மாறியிருந்தான்.
பாலா அதே இடத்தில் நின்று கைகட்டி கோபமாய் நின்றான்.
ஜீனையும் ஹாங்கரில் மாட்டி, “அதான் நோட் பண்ணிட்டியே” என்றான் அட்சரன்.
“எப்படி டா… அவனை விட்டு வச்சிருக்க? ப்பா.. அந்த கண்ணுல என்னவொரு வெறி. டேய் அவனை இப்படி பார்த்தது முதல் தடவை இதுக்கே அல்லு விட்டுடுச்சு.
உன் லைப்ல புகுந்து விளையாடியிருக்கான். இன்னமும் என்னடா வேடிக்கை பார்க்குற” என்று திட்டினான் பாலா.
“மச்சி… அவன் நண்பன் டா. இப்ப நீ ஏதாவது தப்பு செய்தா, அடிச்சி விரட்டியா விட முடியும். என்ன காரணம் எதுக்கு இந்த துரோகம் பழிவெறி, அப்படி என்ன பண்ணினேன். யோசிக்க மாட்டோமா? இதுல அவன் என்னவோ பாதிக்கப்பட்டிருக்கான் டா. அதனால தான் இப்படி நடந்துக்கறான். அதுயென்னனு தெரிந்துக்கணும். அதோட அவன் மனதை மாத்தணும் டா. அதானே நண்பனுக்கு அழகு.” என்று கூறினான்
“விளக்கெண்ணெய்… அவன் உன் லைப்பை அழிச்சிட்டு குற்றவுணர்வே இல்லாம இருக்கான்.
நீ தான் அவனை எப்படி ஹாண்டில் பண்ணறதுனு யோசிக்கற. அவன் அடுத்தவாரம் ஓடிப்போயிடுவான்.” என்று பாலா கத்தினான்.
“டேய் என்னடா சத்தம்?” என்று மனோஜ் வரவும், “நத்திங்டா” என்று அட்சரன் கூறி முறைத்து பேச்சை நிறுத்து என்றான்.
“என்னடா நத்திங். மச்சான் மறைக்கிறான் டா.” என்றதும் அட்சரன் “பாலா சும்மா இருக்க மாட்ட” என்று கர்ஜித்தான் அட்சரன்.
அதற்குள் நிஷாந்த் கமலேஷ் ஹாலுக்கு வர, அட்சரனோ பாலைவை அவன் அறையில் சென்று பேச தனியாக இழுத்து செல்ல, “கையை விடுடா. என்னடா மறைக்கணும் எதுக்கு மறைக்கணும்? நிஷாந்த் ஏன்டா இப்படி பண்ணின?” என்று பாலா கேட்டதும் நிஷாந்த் விழிக்க, அட்சரனோ “சும்மாயிரு பாலா போய் தூங்கு” என்றான்.
“எங்க தூங்க சொல்லற… மச்சான்… எனக்கு தூக்கம் வராது டா. ஒரு நண்பன் துரோகியாவும், ஒரு நண்பன் பீல் பண்ணிட்டு இருக்கறதும் பார்த்து.
டேய்… எதுக்கு டா அட்சரனுக்கு வந்த கொரியர் லெட்டரை மறைச்ச? ஏன் அவன் மேரேஜை டிராப் பண்ணின.?” என்றதும் அட்சரனோ முகத்தை மூடி நிஷாந்தை பார்க்க, நிஷாந்தை திகைத்தவனாய் எப்படி தெரிந்தது என்று விழித்தான். ஆனால் போட்டோவில் பார்த்த மேகா நேரில் வந்ததும் அச்சத்தோடு தான் சுழன்றான். இத்தனை நாள் தப்பித்து விட்டதால் இந்த ஒருவாரமும் தப்பித்து விடலாமென்று எண்ணம் இருந்தது.
இன்று தன் நண்பன் கேட்கவும் பதற்றமாய் நின்றான்.
“டேய் என்ன பேசற. புரியுற மாதிரி பேசறியா” என்று மனோஜ் கேட்டான்.
“டேய் கொஞ்ச நாளுக்கு முன்ன அட்சரன் அப்பா இவனுக்கு கொரியர்ல லெட்டர் போட்டிருக்கார். உங்களுக்கே தெரியும் அட்சரன் இங்க வேலை செய்யறதால அவங்க அப்பா இவனிடம் பேசறது இல்லை.. இந்த கலியுகத்திலயும் போன் போட்டு பேசாம, பொண்ணு போட்டோ அனுப்பி பிடிச்சிருந்தா சொல்லு டா கல்யாணம் செய்ய நாள் குறிச்சிடலாம். நீ சென்னையிலயே கூட இருந்துக்கோ. உன் மேல இருக்கற கோபத்தை கூட மறந்துடறேன்னு சொல்லி அனுப்பியிருக்கார். அதுவும் ரெஸ்பான்ஸ் பண்ணற வரை போன்ல இதை பத்தி கேட்கமாட்டேனு சொல்லி அனுப்பியிருக்கார்.
நிஷாந்த் அந்த கொரியரை இவன் சைன் போட்டு வாங்கி போட்டோவை கிழிச்சி, எனக்கு பொண்ணை பிடிக்கலை, போன்ல இது பத்தி கேட்காதிங்க. கேட்டா ஊருக்கே வரமாட்டேனும் போனும் அட்டன் பண்ண மாட்டேனும் பேசயிருக்கான்.
வித்யாதரன் அங்கிள் அந்த பதிலை பார்த்துட்டு அதோட திரும்பவும் அட்சரனோட பேசலை. ஆன்ட்டி கூட கொஞ்ச நாள் போனே போடலை. போட்டாலும் சரியா பேச மாட்டறாங்கடானு புலம்பினான் நினைவிருக்கா.
இவன் தான் டா இவனுக்கு அமையுற கல்யாணத்தை நிறுத்திட்டான்.
அப்படியென்ன கோபம் வெறுப்பு? பொய்யுனு மட்டும் சொல்லாதே. ஹோட்டல்ல பில் கொடுக்கறப்ப உன் முகமே சொல்லுச்சு அட்சரன் மேல செம கோபமா இருப்பதை.
ஏன்டா அப்படி பண்ணின. அந்த பொண்ணு பாவம் தெரியுமா. ஏன் அட்சரனுக்கு வந்த லெட்டரை மறைச்ச? ஏன் அப்படி எழுதி அனுப்பின? என்ன தான் கோபம் வெறி?” என்றதும் அட்சரன் அமைதியாக தான் சோபாவில் அமர்ந்திருந்தான்.
நிஷாந்தோ இதற்கு மேல் மறைக்க இயலாதென்று அறிந்தான். பாலாவின் பேச்சில் தன் வன்மத்தை வெடிக்க ஆரம்பித்தான். “கோபம் தான் வெறி தான்.
எப்பவும் என்னை விட எதுலையும் முதல்ல நிற்கறதை பார்த்து வெறியாகுது.
கமலேஷ் நீ நானும் தானே முதல்ல பிரெண்ட் ஆனோம். இரண்டு மாசம் ஜாலியா இருந்தது. காலேஜ்ல இவனோட கை குலுக்கி பிரெண்ட் ஆனதும் இங்க ஒன்னா ரூம் ஷேர் பண்ணவும், நீ கமலேஷ் என்னை அம்போனு விட்டுட்டிங்களே டா.
எப்பவும் இவனுக்கு தான் முதல்ல மணி ஆர்டர் வரும். வீட்டு வாடகை இவன் தான் கொடுப்பான். நாம அப்பறம் பதினைந்தாவது நாள்ல தான் இவனிடம் கொடுப்போம்.
காலேஜ் பீஸூம அப்படி தான்.” என்று மூச்சு வாங்க பேசினான் நிஷாந்த்.
“ஏன்டா வித்யாதரன் அங்கிள் முதல்லயே இவனுக்கு பணம் அதிகமா தருவார். இவனே ஒரு முறை அவங்க அப்பாவிடம் மத்தவங்களுக்கு காசு வந்து சேர நாளாகுது பா. அதுவரை என்னிடம் பணம் இருந்தா நாங்க எங்களுக்குள் மேனேஜ் பண்ணுவோம்னு சொன்னதால தானே அங்கிள் டான்னு கொடுப்பார்.” என்று பாலா புரிய வைக்க முயன்றான்.
“அதை விடுடா… நீயும் கமலேஷும் இவனுக்கு வலது கை இடது கையா மாறிட்டிங்க. நான் போறேன்னு இவன் எழுந்தா, ‘நான் போறேன் மச்சி நீ உட்காருனு போறிங்க. அதே நான் எங்கயாவதுனா எவனும் வரமாட்டேங்கறிங்க.” என்றான் நிஷாந்த்.
“டேய் அவன் காரை ஓட்டறதுக்காக தான் நாங்க பறந்துட்டு ஓடுவோம். மத்தபடி அவனுக்காக இல்லை. ஏன் இது அட்சரனுக்கே தெரியும். அவன் வர்றப்ப அவன் தான் வண்டியை ஓட்டுவான். மற்ற நேரம் தான் சாவியை தருவான். அதுக்கு தான் நாங்க போறோம்னு கார் ஓட்ட ஆசையா போவோம். அதை ஏன்டா தப்பா எடுத்துக்கிட்ட?” என்று இம்முறை மனோஜ் கூறினான்.
“சரிடா… அதையும் விடுங்க… காதல்… நான் விரும்பின அஞ்சலி. அவளும் இவனை தானே விரும்பினா. இத்தனைக்கும் நான் அவளை லவ் பண்ணறது அவளுக்கு தெரியும். ஆனாலும் அவ இவனை தான் பார்ப்பா.” என்று கடுகடுத்தான்.
கமலேஷோ கோபமாய் “அடுக்குமா டா அட்சரன் அவளிடம் நேரா போய் நீ எனக்கு தங்கை மாதிரி. என் பிரெண்ட் நிஷாந்த் உன்னை விரும்பறான்னு அவளிடம் வெளிப்படையா சொன்னான். உனக்கு தெரியலைனு இவனை தப்பா பேசாதே. சாதாரணமா கூட அந்த பொண்ணிடம் அதுக்கு பிறகு அவன் பேசியதில்லை.” என்றான்.
“ஆமாடா… அவளை அறைந்து போடினு கத்தினா அவ எப்படி என்னை விரும்புவா.? இவன் அடிச்சதால அவ கொஞ்ச நஞ்சமும் என்னை பார்க்கலை தெரியுமா?” என்றான் நிஷாந்த்.
“அவ லவ் பண்ணறேன்னு சொல்லி கட்டி பிடிச்சா. அதுக்கு தான் அடிச்சான். ஏன் டா இத்தனையும் தப்பா எடுத்திருக்க?” என்று கமலேஷ் கூறினான்.
“அட்லிஸ்ட் வேலைக்கு போனப் பிறகாவது ஹோட்டலுக்கு எங்கயாவது போனா என்னை பில்பே பண்ண விடறானா. அப்பவும் நான் பணக்காரன்னு முன்ன முன்ன பணத்தை நீட்டறான்.” என்றதும் மனோஜ் நிஷாந்தை பிடித்து அவன் பக்கம் திருப்பினான்.
“டேய் அட்சரனிடம் இதுக்கு ஒரு தடவை நானே கேட்டேன் டா. ஏன்டா நீயே காசு தர்ற. நாங்களும் கொடுக்கறோம்னு சொன்னதுக்கு, ‘இல்லை டா நிஷாந்த் இப்ப தான் வேலைக்கு சேர்ந்து நல்ல பதவில வர்றான். இப்பவே பணம் செலவழித்தா அவனுக்கு கைல பணம் நிற்காது டா. அவன் சேமிச்சு நல்லா வரணும்டா. முன்ன தான் பணத்தால நிறைய கஷ்டப்பட்டான். பீஸ் கூட லேட்டா கட்டுவான். இனி அப்படி பணத்தை சேகரிக்கணும் டா. அதனால தான் நான் செலவு செய்யறேன்.
எங்க வீட்ல அப்பா வருமானம். என்னை வீட்ல வந்து உட்கார்ந்து சாப்பிட சொல்லறாங்க.
இல்லைனா அங்கயே ஏதாவது பண்ண சொல்லறாங்க. எனக்கு இங்க சொந்த கால்ல நிற்கணும்டா.’ சொன்னவன் டா அவன். அவனை போய்…” என்று மனோஜ் பேசி முடித்தான்.
“சரி தான் இப்பவும் அவனுக்கு நீ செய்தது தப்பா தோணலை அப்படி தானே. எப்படி டா பிரெண்டா இருந்துட்டு கோபத்தை காட்ட முடியுது. அப்படின்னா வேலை கிடைத்ததும் தனியா போயிருக்க வேண்டியது தானே. எதுக்கு கூடவேயிருந்து இப்ப கல்யாணத்தை நிறுத்தின?” என்றான் பாலா.
“அஞ்சலியை விட அழகியா இருந்தா, அதெப்படிடா அவனுக்கு மட்டும் நல்ல வாழ்க்கை, அன்பான பணக்காரனா அப்பா அம்மா, அழகான மனைவி வந்து சேரணுமா. அதனால தான் கெடுத்து விட்டேன். அவங்க அப்பாவோட இன்னமும் சண்டை வளரட்டும் முடிவுப் பண்ணினேன்.
எப்படியும இங்கயிருந்து ஒரு மாதத்துல போயிடுவேன். பிறகு இங்க என்ன நடந்தாலோ எப்படி தெரிந்தாலோ நான் மாட்ட மாட்டேனு இருந்தேன். ஆனா இப்ப தான் புரியுது. அதெல்லாம் எப்பவோ விஷயம் தெரிந்துக்கிட்டானு. இல்லைனா இந்த பொண்ணு இங்க இருக்குமா? இப்பவும் போல தோற்று போய் நிற்கறேன்.” என்று வாசல் பக்கம் கை நீட்டி கூறி முடித்தான்.
அங்கே மேகா அட்சரனையும் நிஷாந்தையும் பார்த்து வீட்டுக்குள் வந்தாள்.
“இங்க எதுக்கு வந்த?” என்றான் அட்சரன்.
“ஏன் வரக்கூடாது உங்களுக்கு வேண்டுமின்னா பிரெண்ட் முக்கியம் நாலு வருட பழக்கம் முக்கியம்னு இருங்க. அங்க கல்யாணத்தை வச்சிட்டு, நீங்க வந்து தாலி கட்டி எனக்கு கல்யாணம் என்பதே தெரியாதுனு சொன்னதும் என் மனசு எப்படி துடிச்சது தெரியுமா? இதே பொண்ணு பிடிக்கலைனு போயிருந்தா என் நிலை என்ன? ஒத்தையா வளர்த்த எங்கம்மா நிலை என்ன?
இவனோட தாழ்வு மனப்பான்மை, கோபம் பழிவெறி, ஏற்றத்தாழ்வு மனபான்மை வச்சிட்டு உன் வாழ்க்கை கெடுத்தது போதாதுனு எனக்கு கிடைச்ச நல்ல வாழ்க்கையும் தட்டி போக பிளான் பண்ணிட்டான் இவனை” என்று அடிக்க போக, அட்சரன் தடுத்தான்.
“ஏய்… அவன் என் பிரெண்ட் டி. அவன் மனசு புரிஞ்சுக்காது நடந்தது என் தப்பு.” என்று மேகாவை தன் பக்கம் நிறுத்தி கத்தினான்.
Super super. Intresting
Very interesting
Super super super super super
Interesting