Skip to content
Home » விலகும் நானே விரும்புகிறேன்-9

விலகும் நானே விரும்புகிறேன்-9

அத்தியாயம்-9

     அட்சரன் அலுவலகம் போகும் வழியில் மற்றவர்களை விட்டுவிட்டு பாலாவோடு அட்சரன் தனது அலுவலகம் நுழைந்தான்.

     அவன் கணிப்பொறியை உயிர்பித்த சில விநாடிகளிலேயே தந்தை வித்யாதரனிடமிருந்து தொலைப்பேசி அடித்தது.

     காதில் ப்ளூ டூத் போட்டுவிட்டு, “சொல்லுங்கப்பா.” என்றான் விஷயத்திற்கு.

    “மருமக போன் பண்ணினா… நிஷாந்த் தம்பியாடா இதெல்லாம் பண்ணியது.” என்றதும் ஒரு நொடி மௌனம் கொண்டு ‘மேகா ஓட்டவாய்.’ என்று மனதில் திட்டினான். ஆனால் என்றேனும் கூறவேண்டியது தானே என்ற எண்ணம் எழவும், “அப்பா அதுக்குள்ள உங்க மருமக தம்பட்டம் அடிச்சிட்டாளா” என்று கேட்டான்.

     “அவ மனசு கலங்கிடுச்சுல. நீ வேற அவனை விரட்டாம வீட்ல வச்சி அழகு பார்க்குறனு ஒரே புலம்பல்.

    என்னயிருந்தாலும் பொம்பள பிள்ளைடா. நீ வேற அடிச்சதா விஸ்வா சொன்னார். எங்கயிருந்து படிச்ச பொம்பள புள்ளைய கை நீட்டறதுக்கு. உங்க அம்மைய கல்யாணம் கட்டி முப்பது வருஷமாகுது. நான் இதுவரை அடிச்சதேயில்லை.

   நீ என்னடானா முப்பது நாள்ல மருமகளை அடிச்சியிருக்க, சம்பந்திம்மாவுக்கு தெரிந்தா கஷ்டப்படுவாங்க டா. ஒத்தப்பிள்ளையை கட்டிக் கொடுத்து நிம்மதியா இருக்க விடுடா.” என்று பேசிக்கொண்டே போகவும், “ப்பா.. ப்பா.. நிறுத்தறிங்களா. இங்க உங்க மருமக கஷ்டப்படுறாளா.” ‘நல்லா பீட்சா பர்கருனு திண்ணு பெருத்து இருக்கா.’ என்றவன் மனதில் ஒடியதை அடக்கிவிட்டு, “அவளும் சந்தோஷமா தான் இருக்காப்பா. நேத்து கூட ஹோட்டலுக்கு போனோம்.” என்றான்.

    “சேர்ந்து போனியா டா. அவளை கார்ல அழைச்சிட்டு” என்றதும் தந்தைக்கு அனைத்தும் அப்டேட் செய்கின்றாளென தாமதமாய் புரிந்து கொண்டான்.

    “அப்பா… அதான் உங்க மருமக புட்டு புட்டு சொல்லறாள. இப்ப நான் ஆபிஸ் வந்துட்டேன். என் டைம் வேஸ்ட் பண்ணாதிங்க. எல்லா பிரச்சனையும் முடிஞ்சி ஒரு வாரத்துல வீட்டுக்கு கூப்பிட்டுப்பேன் போதுமா.” என்றான். தந்தைக்கு இந்த பதில் தான் தேவையென்றதாக நாசுக்காய் கூறிவிட்டான்.

    “இது போதும்டா வேலையை பாரு” என்ற் துண்டித்து விட்டார்.

   ‘இந்த மாதிரி ஒரு போனை போட்டு வாட்சப்ல போட்டோ அனுப்பினா பிரச்சனை பூதகரமா வெளிய தெரிந்திருக்காது. ஆனா அப்பா இடைப்பட்ட நாள்ல பேசாததும் நிஷாந்த் மனசு எனக்கு புரியவும் ஒரு வாய்ப்பா அமைஞ்சிட்டது.’ என்றவன் மனமோ இன்னும் நான்கு நாட்களில் நிஷாந்த் வெளிநாடு பறந்திடுவானென சிறிதாய் வருந்தியது.

      மனசாட்சியோ மனைவியை பற்றி யோசி’ என்று இடித்துரைக்கவும் கைகள் தானாக அவளுக்கு அழைத்தது.

    “மேகா…. போன் இதோட நாலாவது முறை அடிக்குது. போனை எடுத்து பேசு.” என்று நிலா கூறினார்.

    “போங்கண்ணி இவர் அடிப்பார். பிறவு போன் போடுவார் எல்லாத்துக்கும் அமைதியா இருந்துக்கணும். இன்னிக்கு பேசப்போறதில்லை.” என்று திட்டவட்டமாய் கூறினாள்.

     நிலாவோ “என்னவோ போ. அட்சரன் தம்பி பாவம்.” என்று நிலா கூறிவிட்டு பணியை கவனித்தார்.

   மதியம் ஆனதும் பூக்கடைகளில் பூங்கொத்தை பேக் செய்து கொண்டிருக்க, அங்கே புத்துணர்வுக்காக வைத்திருந்த ஸ்பிரே பாட்டிலில் இருந்து மேகா முகத்தில் தண்ணிர் முகத்தில் யாரோ அடித்தனர். .

    சட்டென யாரிது என்று மேகா திகைத்து திரும்ப அங்கே அட்சரன் புன்னகை மன்னனாக சிரித்திருந்தான்.

      மேகா முகம் தூக்கி வைத்து படிக்கட்டில் ஏறினாள்.

       “ஓ… பெர்சனல் பிராப்ளம்னா மாடிக்கு போய் பேசணுமா?” என்று கேட்டதும் தானாக தனியாய் மாடிக்கு செல்வதை எண்ணி தலையிலடிக்காத குறையாக மேகா நின்றாள். ஆனாலும் சமாளிக்கும் விதமாக “நம்ம சண்டையில கடையில வர்ற மத்தவங்களுக்கு பாதிக்க கூடாதேனு பார்த்தேன். நிலா அக்கா பொறுப்பா ஆரம்பிச்சது.” என்றாள்.

    “பொறுப்பான பொண்டாட்டி.” என்று மாடிபடியில் அவள் தாடை பிடித்து கொஞ்சினான்.

    மேகா அதிர்ந்தவளாக, படியில் நிற்கவும், “என்ன நின்னுட்ட, மேகா. மேகா…” என்று கூப்பிட அவனையே மொட்டு விழியால் அளந்தாள்.

   அட்சரன் சும்மாயில்லாது அவள் இடையில் கை வைத்து அணைக்க, உயிர் பெற்றவளாக ” என்ன பண்ணறிங்க. இங்க சிசிடிவி கேமிரா இருக்கு அக்கா பார்ப்பாங்க. பதிவு வேற ஆகும்” என்று கையை உருவிக் கொண்டு மாடிக்கு நடந்தாள்..

     அவள் கையை பற்றி “அடிச்சதுக்கு சாரி. அடிக்கணும்னு நினைக்கலை கோபம் வந்துடுச்சு… உரிமையானவளிடம் காட்டிட்டேன்.” என்று அவளை அணைத்தான்.

   “விடுங்க..” என்று பயந்தவளிடம், “இது மாடி… சிசிடிவி எதுவும் இல்லை. புதுசா கல்யாணம் ஆனவன் நான். இப்படி தான் கட்டி பிடிப்பேன்” என்று அவள் கழுத்தில் வாசம் நுகர்ந்தான்.

    “போங்க.. இப்ப தான் தெரியுமா. புதுசா கல்யாணம் ஆனவங்கனு. முப்பது நாள் ஆச்சு போன் பேசினா கூட இப்ப தான் ரெஸ்பான்ஸ் பண்ணறிங்க.” என்று கண்ணீரை வரக்கூடாதென தேம்பினாள்.

    சட்டென அவன் அவளை அணைத்து கொள்ளவும் விழி பெரிதாய் விரிந்து அதிர்வை காட்ட, “நிஷாந்த் ஊருக்கு போனதும் அடுத்த நிமிஷம் வீட்டுக்கு வா. இப்ப வந்தா அவனுக்கு சங்கடமா இருக்கலாம்.
  
    நீ பாட்டுக்கு ரூம்ல இருக்கலாம். யாரும் கேட்க மாட்டாங்க. மனோஜும் இந்த மாசம் வெளிநாட்டுக்கு கிளம்பிடுவான்.

   பாலா கமலேஷ் மட்டும் தான். கமலேஷுக்கும் அடுத்த மாசம் போஸ்டிங் எங்க போடறாங்களோ அங்க போவான். மும்பை டெல்லி இல்லைனா ஓசூர்ல இருக்கலாம்.” என்று பேசவும், மெதுவாய் அவனிடமிருந்து பிரிந்து “அடிக்கலாம் செய்யறிங்க உங்களை நம்பி எப்படி வர” என்று பேசினாள்.

     “இவ்ளோ நேரம் கழுத்துல சில்மிஷம் பண்ணிட்டு இருந்தும் கமுக்கமா என் தீண்டலை அக்சப்ட் பண்ணறியே… என்னை நம்பி தானே.” என்று சில்மிஷமாக பேசினான்.

     “இதென்ன செய்கை புதுசா இருக்கு. பேச்சு தினுசா இருக்கு” என்று நெளிந்தாள். அட்சரன் நெளிய வைத்துக் கொண்டிருந்தான்.

   “ம்ம்.. மனசுல இருந்த அழுத்தம் போயிடுச்சு மேகா. நிஷாந்த் தவறை உணர்ந்துட்டான். அதனால தான் எந்த வாதமும் எந்த கோபமும் இல்லாம என் கண்ணை பார்க்க தயங்கறான்” என்று கூறினான்.

    அவளை அணைத்தபடி பேசியவனை காலில் மிதித்து, ”என்னை கட்டி பிடிச்சிட்டு எவனுக்காவது சப்போர்ட் பண்ணி பேசனிங்க அப்படியே மாடில இருந்து தள்ளி விட்டுடுவேன் ஆமா.” என்று தினுசாய் மிரட்டினாள்.

      “சில்வண்டு… என்னமா பேசற… ரொம்ப தான் தைரியம். ஊர் விட்டு ஊர் வந்து இஷ்டத்துக்கு பீட்சா பர்கருனு திண்ணு குண்டோதரி மாதிரி மாறிட்டு சும்மா ஜம்முனு இருக்க” என்றவன் அவளை அளவெடுத்தான்.

   அவன் பார்வை வீச்சை தாங்கயியலாது, “நான் கீழே போறேன் நிலா அண்ணி தேடுவாங்க” என்றாள் மேகா அதை கூறி முடிக்கும் முன் குரல் வெளியே வரும் முன்னே உள்ளுக்குள் சென்றது.

  கழுத்து வளைவு பகுதியில் உதட்டை கொண்டு “அட்சரன் அங்கிள்…” என்று சாந்தனு குரல் கேட்டதும் மேகா அவனை தள்ளி விடுத்து நாலடி பின்னால் சென்றிருந்தாள்.
   
    “என்னடா கரடிகுட்டி” என்றான் அட்சரன்.

   “இங்க என்ன பண்ணறிங்க. எங்க மேகா அத்தை கூட.” என்று திருதிருவென விழித்தான்.

    “உங்க மேகா அத்தைய இன்னும் ஒரு வாரத்துல என் வீட்டுக்கு வானு சொல்ல வந்தேன். கூட்டிட்டு வந்துடுடா.” என்று சாந்தனுவிடமும் “மேகா ஓகே வா” என்று அவளிடமும் கேட்டு அசரடித்தான்.

     பேசியபடி கீழே வரவும் மேகாவுக்குள் அதிவேகமாக திந்தனை ஓடியது. அதென்ன அவன் போனப்பின் வர சொல்லறார்.

   ‘நான் அவன் இருக்கறப்பவே போகணும். அப்ப தான் எனக்கு நிம்மதி வரும்.’ என்று முடிவு கட்டியிருந்தாள். அட்சரனிடம் கூறாமல் கமுக்கமாய் மாலை தங்கள் வீட்டில் செல்வதில் மாற்றமின்றி இருந்தாள்.

    அட்சரனோ, “வெளிய சாப்பிட போகலாமா?” என்று கேட்டான்.

     மடமடவென சரியென்று தலையாட்டினாள். சாந்தனுவை அழைத்து கொண்டு மேகா செல்ல நிலாவோ “நீயும் அவரும் முதல்ல தனியா போங்க சாந்தனு எதுக்கு” என்று தவிர்க்க பார்த்தார்.

   “இருக்கட்டுமே அண்ணி அவன் இருந்தா இந்த நிஷாந்த் பத்தி பேசமாட்டார்.” என்று கூறவும் நிலாவோ “என்னவோ பண்ணு.” என்று கூறி விடவும் சாந்தனுவை அழைத்துக் கொண்டு ரெஸ்ட்டரண்ட் சென்றனர்.

    காரை பார்க் செய்து மேகாவின் கையை மெதுவாய் பிடிக்கவும், பட்டாம்பூச்சி அதிரவலைகளை நெஞ்சில் தாங்கி அவனோடு நடைப்பயின்றாள்.

    சாந்தனுவிற்கு பிடித்த சோளாப்பூரியும் மேகாவுக்கு சில்லி பரோட்டாவும் ஆர்டர் தந்துவிட்டு ஆரேஞ்ச் ஜூஸ் ஒன்றை தனக்கும் கூறிவிட்டு அருகருகே அமர்ந்தான்.

   சாந்தனு பெரிய பூரியை குட்டி குட்டி கைகளால் அளவெடுத்து மெதுவாய் விழுங்கினான்.

    அவன் முகத்தை பூரியே மறைத்து கொண்டது.

   மேகா சாப்பிட, ஆரேஞ்சு பழச்சாறை உறிந்தவன் அவளுக்கு அடுத்த அதிர்ச்சியாய் அவள் உண்ட சில்லி பரோட்டாவில் எடுத்து விழுங்கினான்.

    “எச்..சி” என்றவளின் குரல் அடுத்து பேசும் முன்னே அட்சரன் “ம்ம்… நல்லாவே தெரியுது” என்று சாப்பிடவும் வெட்கம் கலந்து மேகாவும் உண்ண துவங்கினாள்.

     ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பின் காரம் எடுக்கவும் நீரை எடுக்க சென்றவளின் கையில் ஆரேஞ்சு பழச்சாறை திணித்தான்.

    “அங்கிள் எனக்கும் ஜூஸ் வேண்டும்.” என்று கேட்டான்.

    “ஓகே.” என்று பேரரிடம் ஜூஸ் சொல்ல போக, “அங்கிள் அங்கிள் வெண்ணிலா ஐஸ்க்ரீம் வேண்டும்.” என்று பக்கத்து டேபிளில் ஐஸ் சாப்பிடுவதை வைத்து மெனுவை மாற்றினான்.

   “ஓகே டா.” என்று ஐஸ்க்ரீம் வரவழைத்து சாப்பிட, பாதி சாப்பிடும் நேரம், “அய்… நிஷாந்த் அங்கிள்.” என்று சாந்தனு கூப்பிட, அட்சரன் சாந்தனு பார்த்த இடத்தில் காண, அங்கே பாதி ஜூஸை வைத்து விட்டு பணத்தையும் வைத்து விட்டு நிஷாந்த் கிளம்பினான்.

    “சார் பேலன்ஸ் வாங்காம போறிங்க” என்று பேரர் கூப்பிட கூப்பிட நிஷாந்த் வெளியேறவும் அட்சரன் வேடிக்கை பார்த்தான்.
 
     மேகா மட்டும் “திமிர் பிடிச்சவன். மூஞ்சை பாரு” என்று திட்டினாள்.

    அட்சரன் முறைக்கவும் மேகா சாந்தனுவிடம், “டேய் தட்டை பார்த்து சாப்பிடு எவன் வந்தா உனக்கென்ன” என்று திட்டினாள்.

2 thoughts on “விலகும் நானே விரும்புகிறேன்-9”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *