Skip to content
Home » வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 52

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 52

அத்தியாயம் – 52

மீண்டும் மீண்டும் அவளை பற்றி தவறாகவே புரிந்து கொண்டு அவள்மேல் கோவத்தை வளர்த்துக்கொண்டே சென்றான் ஆராஷி.
அவள் ப்ளானை தெரிந்து அவளை எல்லோர் முன்னிலையிலும் காட்டி கொடுத்து அவளை துரத்தியடிக்க வேண்டும் என தன் மனதில் கோவத்தை வளர்த்துக்கொண்டு இருந்தான்.
இதையறியாத மேதாவோ அவன் கட்டிய தாலியை தனது பேகில் இருந்து எடுத்து பார்த்தவள் கண்கள் கலங்க இதெல்லாம் கனவாகவே இருந்துவிடுமோ? அவனை பற்றி எல்லாம் தனக்கு தெரியும் என்று அவனுக்கு தெரியவந்தால் அவனது மனநிலை எப்படி இருக்கும்? அவன்மேல் பரிதாபப்பட்டோ அவனது சொத்துக்காக ஆசைப்பட்டோ நான் அவனை காதலிப்பதாக தன்னை தவறாக எண்ணிவிட்டால் அவனை பற்றிய உண்மைகள் தன் வீட்டு ஆட்களுக்கு தெரிந்தால் அவனை அவர்கள் ஏற்பார்களா? ஏற்கனவே அவன்மேல் அவர்களுக்கு கோவம்தான் இதும் தெரிந்து அவனை யாராவது வெறுத்துவிட்டால் நினைக்கையில் மனம் ரணமாகியது அவளுக்கு இதைப்பற்றி யாரிடமும் பேசக்கூட விருப்பம் இல்லை அவனை யாராவது பாவமாகவோ இல்லை தவறாகவோ பார்க்கும் பார்வை அவளுக்கு இஷ்டமே இல்லை. அதனால் தன் உயிர் நண்பன் ஷர்மாவிடம் கூட அவனைப்பற்றி எதுவும் சொல்லாமல் தனக்குள்ளேயே புதைத்து வைத்துள்ளாள்.
கண்கள் கலங்கியது அவனது வாழ்க்கை சந்தோஷமான ஒன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு வர கண்ணோரம் ஈரம் துளிர்த்தது. தான் அவனது வாழ்க்கையில் இல்லையென்றாலும் அவனுக்காக வருபவர் அவனை காயப்படுத்தாமல் அவனது ரணங்களை ஆற்றும்விதமாக அமைய வேண்டும் என்று அப்போதும் அவனுக்காக தான் யோசித்தாள். சிறிது நேரம் கண்கலங்கியவள் அந்த தாலியையும் மோதிரத்தையும் எடுத்து வைத்துவிட்டு அவனுடையதை எடுத்து வைக்க அவனது சூட்கேஸை தேடியவள் அதுகிடைக்க அதில் அவனது பொருட்களை எடுத்து வைத்தாள்.
இவளை தியாகி என்பதா இல்லை பையித்தியம் என்பதா? என்று தான் தெரியவில்லை.
நாளை அவனுக்கு தேவையான அனைத்தையும் எடுத்து வைத்தவள் ஒரு பெருமூச்சு விட்டு எழுந்து வெளியே வந்தாள்.

அவள்மேல் கோவமாக ரூமிற்குள் வந்தவன் அவள் ரூமைவிட்டு வெளியே செல்வதை பார்த்தவன் அவள்மேல் கோபம் குறையாமல் நின்று அவளை முறைத்தபடி நின்றான்.
ஆனால் உடனே தனது முகத்தை மாற்றியவன்
‘நாம கோவமா இருக்குற மாதிரி காட்டிகிட்டா அவளை பத்தி நமக்கு தெரிஞ்சுடுச்சுனு கண்டுபிடிச்சுடுவா அதனால நாம நார்மலாவே இருக்கனும்’ என்றபடி தன் முகத்தை மாற்றியவன் ரூமிற்குள் சென்றுவிட்டான்.
உறக்கம் வரவில்லை உள்ளம் கோவத்தில் கொதித்து கொண்டிருந்ததால்.

அந்த இரவு கோவம் ஒருபக்கமும் வருத்தம் ஒருபக்கமும் என இருவருக்கும் கழிந்தது.
மறுநாள் அடுத்த ஷூட்
துவங்கியது.
அவள்மேல் இருக்கும் கோபத்தை அவளிடம் கோவமான பேச்சுக்களால் காட்டினாலும் வேலையில் மிகவும் பொறுப்பாக இருந்தான் ஆராஷி.

அவனது கோவமான முகம் அவளுக்கு பழகிபோனதால் அவனது பேச்சுக்களையெல்லாம் ஏதோ ஒரு குழந்தையின் கோவத்தை போலவே எண்ணியபடி பொறுத்துப்போனாள் மேதா.ஆனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவளை திட்டுவதைவிடவில்லை ஆராஷி.
ஊட்டியில் அரண்மனை போன்ற அமைப்பில் இளவரசன் இளவரசி திருமணம் போன்ற ஷூட் என்பதால் அவன் முதலில் குதிரை மீது வருவது போலவும் அவனை காண இளவரசி ஓடி வருவது போலவும் பிறகு இருவரின் திருமண நிகழ்வுகளும் நடனமும் என்று வடிவமைத்து இருந்தாள் அருந்ததி.
அதனால் இருவருக்கும் இளவரசன் இளவரசி கெட்டப்பில் சொன்னபடியே ஷூட் முடிய எல்லாம் அழகாக வந்தது அருந்ததிக்கு திருப்தியே.
அங்கேயே ஆதிவாசி திருமண ஷூட்டும் இருந்ததால் மீண்டும் அங்கு வரவேண்டும் காட்டிற்குள் ஷூட் செய்ய லேட்டாக தான் அனுமதி கிடைத்து இருப்பதால் அதற்குள் மற்ற மாநிலங்களில் முடித்துவிடலாம் என்று முடிவெடுத்து புறப்பட்டனர் ஒவ்வொரு மாநிலமாய்.

அடுத்த நாள் கேரளாவின் பாரம்பரிய படகில் திருமண ஷூட் என்பதால் அடுத்தநாளைக்கு அங்கு கிளம்பினர்.
ஒவ்வொரு முறையும் அவளோடான அவனது நெருக்கம் அவளுக்கு ஒருவித அவஸ்தையையே கொடுக்க அருந்ததிக்காக எல்லாவற்றையும் பொறுத்து போனாள் மேதா. அவளை அவஸ்தைபட வைத்துவிட்டு ஏதோ பழிவாங்கியதாக புன்னகைக்கும் ஆராஷிக்கு தெரியவில்லை அவளில் அவனை தொலைத்து கொண்டு இருப்பதை.
கோவம் என்னும் முகமூடியோடே அவன் இருப்பதால் அவனுக்கு அவளது மென்மையான பக்கம் தெரியவே இல்லை.
இப்படியாக ஒரு ஒரு மாநிலத்தில் ஒரு ஒரு முறைப்படி திருமணம் ஷூட் செய்யப்பட ஆராஷி க்கு ஆச்சர்யமே ஒரு நாட்டில் எத்தனை விதமான திருமண நிகழ்வுகள்.

அன்றைய தினம் ஹைதராபாத்தில் ஷூட் என்பதால் அங்கு தங்கி இருந்தனர்.
அங்கு அவள் தங்கி இருக்கும் இடத்திற்கும் ஆராஷி தங்கி இருக்கும் ஹோட்டலுக்கும் சற்று தூரம் என்பதால் அவள் எங்கு சென்றாலும் வாடகைக்கு ஸ்கூட்டி வாங்கிவிடுவது வழக்கமாகி போனது.
அன்று ஷூட் லீவ் அதனால் அவன் வெளியே போக வேண்டும் என்று சொல்லி இருந்ததால் மேதா பதினோரு மணி அளவில் அவன் தங்கி இருந்த வில்லா போன்ற ஹோட்டலின் வாசலில் வந்து வண்டியை நிறுத்தினாள். எப்போதும் ஒருமணி நேரம் முன்னமே வருவதால் அவளும் சீக்கிரமே வந்தாள்.

அப்போது தான் பால்கனியில் நின்று க்ரீன் டீ அருந்தி கொண்டு இருந்த ஆராஷி அவள் வந்ததை பார்த்தான் அப்போது அவளிடம் ஒரு வாலிபன் பிச்சை எடுத்தான்.
அவளிடம் வந்து தமிழில் அவன் பிச்சை கேட்க.
அவனை பார்த்தவள்
“ரொம்ப இளமையா இருக்கீங்களே ஏன் வேலை எதுவும் தேடலையா?” என்று கேட்க அவளை பார்த்து ஒரு பெருமூச்சு விட்டவன்.

“இங்க படிப்போ திறமையோ முக்கியம் இல்லீங்கம்மா பணம்தான் முக்கியம் வேலை தேடி நாயா பேயா அலைஞ்சு இந்த ஊருக்கு வந்து சர்டிபிகேட்லாம் தொலைச்சுட்டு கையில இருந்த காசு துணிமணினு எல்லாம் தொலைச்சுட்டு அம்மா தங்கச்சியை காப்பாத்த கூலி வேலை செய்ய போனா அவங்க யூனியன் அது இதுனு துரத்திவிட்டாங்க அதான் பிச்சை எடுத்து என்னோட அம்மாக்கும் தங்கச்சிக்கும் காசு அனுப்பிட்டு இருக்கேன். அவங்கள பொறுத்தவரை நான் ஏதோ பிஸினஸ் பன்றேன் அப்படித்தான் நினைச்சுட்டு இருக்காங்க.
ஆனா நான் பிச்சை எடுத்துட்டு இருக்கேன்.. சாப்பிட்டு கூட நாலு நாள் ஆச்சு காசை சேர்த்தா தான் என் தங்கச்சி படிப்புக்கும் எங்க அம்மா வைத்தியத்துக்கு காசு அனுப்ப முடியும்” என்று அவன் கூறிமுடிக்க அவர்கள் இருவரை தான் பார்த்தபடி இருந்தான் ஆராஷி.
மனதுக்குள் ‘என்ன இவ பிச்சைக்காரன் கூடலாம் பேசிட்டு இருக்கா. மோஸ்ட் வெல்த்தியஸ்ட் பர்சன்னு அவனை மடக்கலாம்னு பார்க்கிறாளா?’ என்று அவளை தவறாகவே கணித்தான்.

அவனை பார்த்தவள்
“சென்னையில் இருக்குற ஒரு கம்பெனில உங்களுக்கு வேலையும் நீங்களே சொந்தமா தொழில் துவங்க ட்ரைனிங் அண்ட் லோன் ரெடி பண்ணி கொடுத்தா அதை செய்வீங்களா?” என்று கேட்டாள் மேதா அவனை பார்த்து.
அவளை ஆச்சர்யமாய் பார்த்தவன் கீழே இறங்கி வந்தான்.
“கண்டிப்பா செய்வேன் மேடம் ஆனால் அதுலாம் கத்துக்க காசு கட்டணும் மேடம் லோன்லாம் வாங்க சொத்து ஏதாவது கேட்பாங்க அதுக்குலாம் எனக்கு வசதி இல்லைங்க மேடம்” என்று அவன் மீண்டும் சோகமாய் புலம்ப.
“அதெல்லாம் காசு வாங்க மாட்டாங்க நீங்க உங்க லோன் மட்டும் கட்டினா போதும் உங்களுக்கு ஓகேவா? உங்க பேர் சொல்லுங்க என்ன படிச்சு இருக்கீங்கனு சொல்லுங்க” என்றாள் மேதா.
“என் பேர் சிவா மேடம் சிவில் இன்சினியரிங் முடிச்சு இருக்கேன் எனக்கு வேலை ஓகேதான் மேடம் ஆனா என் சர்டிபிகேட் தான் இல்லையே? எப்போ வேலை வாங்கி தர்றீங்க?” என்று அவன் கேட்க.

“வாங்க இப்போவே போய் கேட்டுடலாம்” என்று தனது வாட்ச்சை பார்த்தவள் இன்னும் நேரம் இருப்பதால் அவனை தன் வண்டியில் அமர சொன்னவள் வண்டியை கிளப்ப அவளுக்கு சற்று இடைவெளி விட்டு அவனது கார் அவளை தொடர்ந்தது.
முதலில் அவனை ஒரு ரோட்டோர கடையில் நிறுத்தியவள் அவனுக்கு உணவு வாங்கி கொடுத்து அவளுக்கும் வாங்கி அவள் உண்ண அவனுக்கு கண்கள் கலங்கிவிட்டது. ஒரு பிச்சைக்காரனுடன் யார் இப்படி அமர்ந்து சாப்பிடுவார் அவளது நல்ல எண்ணம் அவன் மனதில் அவளை உயரே நிறுத்தியது.

“முதல்ல சாப்பிடலாம். நானும் சாப்பிடலை அவசரமா வேலைக்கு வந்துட்டேன்”
அவனுக்கு அவள்முன் தனியாக சாப்பிட தயக்கம் வந்துவிடகூடாது என்றுதான் அவளுக்கும் சேர்த்து உணவு வாங்கினாள்.
இதை காரிலிருந்தபடியே பார்த்தவன்
‘என்ன இவ பிச்சைகாரன் கூடலாம் உட்கார்ந்து சாப்பிடுறா? இவளுக்கு அன்ஈஸியா இருக்காதா?’ என்றுதான் எண்ணினான்.
உண்டு முடித்தபின் அவனை அங்கேயே அருகில் இருந்த கடைக்கு அழைத்து சென்று சில உடைகளை வாங்கி தந்தாள்.

“மேடம் இதுக்குலாம் எதுக்கு செலவு பன்றீங்க? நான் வேலை கிடைச்சதும் வாங்கிக்கிறேன்” என்று அவன் சங்கடமாய் கூற.

“இதுல என்ன இருக்கு சிவா முதல்ல வேலை கிடைச்சதும் வேலைக்கு போக நல்ல துணி வேண்டாமா? இன்னைக்கு எனக்கு சம்பளம் வந்துச்சு அதுலதான் உங்களுக்கு வாங்கி தர்றேன் உங்களுக்கு சம்பளம் வரும்போது நீங்க யாருக்காவது வாங்கி கொடுங்க சரியாகிடும்” என்று அவனுக்கு உடை மாற்ற வைத்து அழைத்து சென்றாள்.

‘இவளுக்கு பையித்தியம் தான் புடிச்சு இருக்கு போல’ என்று எண்ணியவன் அமைதியாக ஃபாலோ செய்தான்.
நேரே அவள் அவர்களது கெஸ்ட் ஹவுஸுக்கு சென்று நிறுத்தி யாருக்கோ ஃபோன் செய்ய வெளியே வந்தான் சாஹித்யன். அவனை பார்த்து ஷாக்தான் ஆராஷிக்கு இவன் எங்கே இங்கே என்று?
அவனிடம் சிவாவை அறிமுகம் செய்து வைத்தவள் அவனை பற்றி கூற
“நான் பார்த்துக்கிறேன்டா” என்றபடி அவனை உள்ளே வருமாறு சொன்னவன் அவளை போக சொன்னான்.
“ஓகே சிவா இவரு என்னோட அண்ணாதான் இவரு உங்கள சென்னைக்கு கூட்டிட்டு போவார் ஆல் தி பெஸ்ட் ஃபார் யுவர் பிஸினஸ் உங்கள நான் நம்புறேன் நீங்க நல்லா சக்ஸஸ்ஃபுல்லா வருவீங்க” என்றுவிட்டு திரும்ப
“ஒரு நிமிஷம் மேடம் உங்க பேர்” என்று கேட்க
திரும்பி அழகாக சிரித்தவள்
“மேதா” என்றுவிட்டு சென்றாள்.
அவளை பார்த்த சிவாவோ ஏதோ எண்ணினான் ஆனால் அதையெல்லாம் அவளிடம் பேச இது சரியான தருணம் அல்ல என்று அமைதியாக சென்றுவிட்டான்.

அந்த சிவா தான் அவனுக்கே தெரியாமல் அவளுக்காக அவளது பணத்திலேயே பிஸினஸ்மேனாகி அவளை மணந்தாக வேண்டும் என்று அன்று மேதாவை பெண்கேட்டு வந்தவன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *