அத்தியாயம் – 11
“உங்களை எதை வெச்சு எங்க அப்பா ப்ராண்ட் அம்பாசிடரா செலெக்ட் பண்ணாருனு தெரிஞ்சுக்கத்தான் வந்தேன்” என்று நிதின் கூற ஆராஷி அவனை புரியாத பார்வை பார்க்க..
“ஐ..ஐ..மீன் நா..நான் நீங்க எப்படி நடிக்கறீங்க எ..எப்படி பாடுறீங்கனு பார்க்க வந்தேன்..அதை சொன்னேன்” என்று சமாளிக்க அவன் சமாளிக்கிறான் என்று இருவருக்குமே தெரிந்து போனது..
‘அநியாயத்துக்கு சொதப்புறாரே’ என்று மனதில் நினைத்துக்கொண்டான் ஹர்ஷத்..
“ஆஸ் ஏ சி.இ.ஓ ஆஃப் தி கம்பெனி நான் அதெல்லாம் தெரிஞ்சுக்கனும்ல.. எங்க அப்பா காரணம் இல்லாம செய்யமாட்டார்.. அதான் பார்க்கலாம்னு வந்தேன்” என்று நிதின் கூற..
சிரிப்பை அடக்கியவனின் அடுத்த கேள்வியில் அவனுக்கு புரையேற வைத்தான்..
“உங்க ஃபவுண்டர் எப்போ இந்தியா வருவாங்க? நான் அஃப்பீசியலா அவங்கள மீட் பண்ணனும் பிசினஸ் பத்தி சில ஐடியாஸ் இருக்கு அதைபத்தி டிஸ்கஸ் பண்ணனும்.. என்னதான் சீ.இ.ஓ.. நீங்க இருந்தாலும் ஃபவுண்டர மீட் பண்ணாம பிஸினஸ் நெக்ஸ்ட் மூவ் போக ஆகாதுல” என்று கேட்க அதை கேட்டவனுக்கு புரையேறியது..
“அது..அது வந்து..இப்போதைக்கு அவங்கள பார்க்க முடியாது.. நான் அவங்க ஃப்ரீ டைம் கேட்டு பார்க்கிறேன்” என்று கூற மேலும் அவனை படுத்தாமல் ஓகே என்பதுபோல் தோளை குலுக்கி அமைதியாகி விட அந்நேரம் வந்து சேர்ந்தது நம் வானரபடை..
“ஹாய் மாம்ஸ்” என்று வரும்போதே ஆரவாரமாய் பேசினாள் அருந்ததி.. அவளை பார்த்து புன்னகைத்த ரியோட்டோ
“ஹாய் பிரின்ஸஸ்” என்று கூற..
“வாங்க வாங்க டைம் ஆச்சு மீதி கதையை சொல்லுங்க எங்களுக்குலாம் தூக்கமே வரல.. சஸ்பென்ஸ் சீன்ல முடிச்சுட்டு போய்ட்டீங்களே.. சீக்கிரம் ஸ்டார்ட் பண்ணுங்க நான் வேற பாப்கார்ன் லாம் வாங்கிட்டு வந்துட்டேன்” என்று கூற
அவன் சிரித்துவிட்டான்..
“அடியேய் இங்க என்ன படமா ஓடுது.. பாப்கார்ன்லாம் வாங்கி வர?” என்று நிலவினி கேட்க..
“அட போக்கா..இவரு அப்படிதான் சொல்லுறாரு..நடுவுல நமக்கு போர் அடிக்ககூடாதுல அதான்” என்று கூற அனைவரும் சிரித்துவிட்டனர்..
“சரி சரி சொல்றேன்..ஹான் எங்க விட்டேன்?” என்று கேட்க..
“உங்க அப்பா உங்கள கழுவி ஊத்திட்டு போனதுல நிறுத்துனீங்க” என்றாள் அருந்ததி..
“அரூ” என்றான் நிதின்..
“அப்படினா?” என்று அவன் கேட்க
“அதுவா..அது உங்க அப்பா உங்களுக்கு அட்வைஸ் பண்ணிட்டு போனாருல அதைதான் அப்படி சொன்னேன்” என்று கூறியவள் நிதினை பார்க்க தலையிலேயே அடித்துக்கொண்டான் அவன்..
“நான் வேணா கல்லு எடுத்து வரட்டா அண்ணாச்சி” என்று அவள் கேட்க.. கடுப்பானவன்
“கொண்டு வா உன் தலையிலேயே போடுறேன்” என்று அவன் கூற
“அடப்பாவி அண்ணா நான் இன்னும் ஒன்னுமே அனுபவிக்கல அதுக்குள்ள போட்டு தள்ள பார்க்குறீங்க..நான் உங்கள் செல்ல தங்கை இல்லையா? என்மேல் பாசமே இல்லையா?” என்று நடிக்க..
“எதுவும் இல்ல” என்றான் நிதின்..
“கல்நெஞ்சக்காரா” என்று அவள் கூற எல்லோரும் சிரித்துவிட்டனர்..
“சரி சரி இதான் சாக்குனு நிறுத்தாதீங்க நீங்க ஸ்டார்ட் பண்ணுங்க” என்றாள் ரியோட்டோவை பார்த்து..
“அன்னைக்கு எங்க அப்பா அட்வைஸ் பண்ணிட்டு போனப்போ ஒன்னும் புரியல அதுக்கான காரணம் அப்புறமா தான் எனக்கு தெரிய வந்துச்சு..
ஆனா அதுக்குள்ள என் லைஃப்ல எல்லாம் நடந்து முடிஞ்சுடுச்சு.. எங்க மேரேஜ் முடிஞ்சதும் கூட நாங்க தனியாதான் இருக்க ஆரம்பிச்சோம் ஏன்னா தேஜுக்கு அவங்க அப்பாகிட்ட சொல்ல பயம் நான் சொல்றேன் சொன்னாலும் தடுத்துட்டா.. அவளோட படிப்பும் அப்போ முடியல எனக்கும் ஃபைனல் இயர் எக்சாம் இருந்தது அதனால லவ்வ கொஞ்சம் ஓரம்கட்டிட்டு படிப்புல கவனம் செலுத்த ஆரம்பிச்சோம்..நார்மலா தான் எல்லாம் போச்சுனு நினைச்சேன்..ஆனா தேஜுக்கும் ரென்க்கும் இடையில பெரிய லெவல்ல பிரச்சனை ஆகி இருக்கு அதை ரெண்டு பேரும் என்கிட்ட மறைச்சுட்டாங்க..
ஒருநாள் தேஜு ஓல்ட் லைப்ரரி க்கு போனதை பார்த்து அவனும் பின்னாடியே போய் இருக்கான்..அங்க அவகிட்ட அசிங்கமா பேசி தப்பா நடக்க ட்ரை பண்ண அதுல அவ அவனை செருப்பால அடிச்சுட்டா..அப்போ அவன் எங்களுக்கு கல்யாணம் ஆனதை அவ அப்பாக்கிட்ட போட்டு கொடுக்குறேன்னு சொல்ல அவளும் கோவத்துல உன்ன நம்பவெச்சு தான்டா கொல்லனும்னு சொல்லி திட்டி விட்டு இருக்கா.. வீட்டுக்கு வந்தும் என்கிட்ட அவனை கொல்லப்போறேன்னு கத்தினா அவ ஏதோ கோவத்துல அவனை பிடிக்காததால கத்துறானு விட்டுட்டேன்.. ஆனா அது உண்மையாகும்னு நான் நினைச்சு கூட பார்க்கல..
அன்னைக்கு..
தேஜு மிகவும் சோர்வாக எழுந்தாள் கடைசி பரீட்சை.. இன்று ரியோட்டோவின் ஆசையான டான்ஸ் ஷோ செலெக்ஷன் வேறு அதுவும் ரென்னுடன் ஆடுகிறான் அவளுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை இருந்தாலும் ரியோட்டோ தன் டான்ஸ்ஸைதான் மிகவும் நம்பினான் அதனால் அவனது ஆசைக்கு தடையாக இருக்ககூடாது என எண்ணி விலகியே நின்றாள்..
ஆனால் ரென் மூலமாக தப்பு தப்பாக தேஜுவை பற்றி நம்பிக்கொண்டு இருந்தான் ரியோட்டோ.. அவள் பணக்கார வீட்டு பெண் என்பதால் அவளுக்கு ரென்னை பிடிக்கவில்லை போலும் அதனாலேயே அவனை தூர விரட்ட பார்க்கிறாள் என்று எண்ணியவன் நண்பனை சிறிதும் சந்தேகம் படவில்லை..
மற்றும் ரென்னை அவனிடமிருந்து பிரித்தே தீருவேன் என அவள் சபதமிட்டதாகவும் அவனிடம் கூறி இருந்தான்.. தன்னால் இருவரது வாழ்க்கையும் கேள்விக்குறியாக இருக்கிறதே என போலிக்கண்ணீர் வடித்து அவனை நம்ப வைத்துவிட்டான்..
அன்றைய தினம் அவர்கள் வாழ்வில் பெரிய வில்லங்கத்தையும் விதைத்துவிட்டான்..
தேஜுவை இன்று விட்டால் ரியோட்டோவிடம் இருந்து பிரிக்கவே முடியாது என்பதை உணர்ந்தவன் அன்றைய தினம் ஏற்கனவே ரியோட்டோவிற்கும் தேஜுவிற்கும் சிறிது ஊடல் நடந்து இருந்தது..
காலையிலேயே தேஜுவின் தந்தை அவளுக்கு ஒரு மாப்பிள்ளை ஃபோட்டோவை அனுப்பி விட்டு அவளுக்கு பார்க்கும்படி ஃபோன் செய்து கூற அதைப்பற்றி பேசினாள் தேஜு அதனால் அவளை அவன் திட்ட இதற்கெல்லாம் காரணம் அந்த ரென்தான் அவன் சொல்லித்தான் இவன் அவளிடம் சண்டை போடுவதாக சொல்லி சண்டையிட அவளை அடிக்கவே கை ஓங்கிவிட்டான் கோவத்தில் அவளும் அவன் உயிரோட இருக்குறவரை நமக்குள்ள பிரச்சினை வரத்தான் போகுது நீ வேணா பாரு என்றபடி கத்திவிட
“எதுக்கு எதை பேசுறனு” திருப்பி கத்திவிட்டு சென்றுவிட்டான்.. சிறு சிறு சண்டையாக இருந்தது இப்போது பெரிய விரிசலாக ஆகிவிட்டது.. அதே கோவத்தில் அன்று முழுவதும் டான்ஸ் ப்ராக்டிஸுலேயே இருந்துவிட்டான்..
அவன் கத்திவிட்டு சென்றதும் அழுதவளுக்கு வாந்தி வர சென்று வாந்தி எடுத்தவள் அழுதபடியே கல்லூரிக்கு கிளம்பினாள்.. இன்றைய தினம் கடைசி பரீட்சை அதிலும் ரியோட்டோ ரென்னின் டான்ஸ் ப்ரோக்ராம் இருப்பதால் மற்ற கோவத்தையெல்லாம் ஓரம்கட்டிவிட்டு கிளம்பினாள்..
எக்ஸாம் எழுதி முடிக்கும்போதே அவளுக்கு மீண்டும் வாந்தி வந்துவிட அன்றைய தினம் உண்ணாததால் மயக்கமும் வந்துவிட அவர்களது கல்லூரியில் இருந்த டாக்டர் செக் செய்தவர் அவளிடம் அவள் கர்ப்பமாக இருப்பதை கூற சந்தோஷமானவள் அதை உடனே ரியோட்டோவிடம் கூற நினைத்தாள் ஆனால் அவன் ப்ரோக்ராம்க்கு ரெடியாகி கொண்டு இருப்பதாக தகவல் கிடைக்க அவன் ஆடி முடித்ததும் சொல்லலாம் என வெயிட் செய்தவள் ஒரு ஜுஸை வாங்கி அதில் அதிக சர்க்கரை கலந்தவள் அவனுக்கு கொடுக்கும்படி சொல்லி அனுப்ப அதை மறைந்து இருந்து வீடியோ எடுத்த ரென் சர்க்கரையை அவள் வேறு ஏதோ கலப்பதுபோல் மறைத்தபடி வீடியோ எடுத்தவன் தன் நண்பன் ஒருவன் அந்த ஜுஸை எடுத்து செல்வதை தடுத்தவன் தன் கையில் இருந்த விஷத்தை கொஞ்சமாக கலந்தவன் அதை கொண்டு போய் கொடுக்கும்படி கூற அவன் மறுத்தான்.. அவனிடம் தேஜுவை பற்றி தப்பு தப்பாக கூறியவன் அவனை காப்பாற்ற இந்த நாடகத்தை நடத்தப்போவதாக கூற ஓரளவு அவனும் நம்பியவன் அதை கொண்டு சென்று ரியோட்டோவிடம் நீட்ட அதை வாங்கியவன் பருகப்போகும் நேரம் அதை தடுத்து தான் அருந்தியவன் அவனை பார்த்து ஒரு மாதிரியாக சிரித்துவிட்டு மேடையேற சென்றான்..கூடவே அவனுக்கு அந்த வீடியோவையும் அனுப்பிவிட்டே சென்றான்..
விஷத்தின் தன்மை தாமதமாக செயல்படும் அளவைவிட ஒருதுளி அதிகமாக கலந்திருந்தான் ரென் அதனால் டான்ஸ் ஆடப்போகும்போதே அவனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது..
அவர்களது முறை நடனமும் துவங்கியது.. தாய்மையின் பூரிப்போடு அவனுக்காக முதல் வரிசையில் யாரும் இடிக்காதபடி வந்து அமர்ந்து இருந்தாள் தேஜு.. அவளை கவனித்த ரியோட்டோவிற்கு கோவம் சற்று குறைந்துதான் போனது..
ஆனால் ரென்னோ அவளை பார்த்து குரூரமாய் சிரித்துவிட்டு சென்றான் அவனது சிரிப்பின் அர்த்தம் புரியாமல் நின்றாள் அவள்..
அழகாக காட்சிகளுடன் இருவரும் நடனமாட அரங்கமே அதிரும் அளவிற்கு கைதட்டல் ஒலித்தது..கடைசியாக ரென்னை தூக்கி சுற்றி இறக்கும்போது ரென் தடுமாறினான் அதில் அவனை தாங்கிய ரியோ அவனை பார்த்து அதிர்ந்து போனான் மூக்கிலும் வாயிலும் இரத்தம் வரத்துவங்கி இருந்தது.. அவனை பிடித்து உலுக்க அவனோ “தே..தேஜு..ஜு..ஜுஸ்” என்றுவிட்டு மயக்கமாகிவிட புரியாமல் அவளை பார்த்தவன் அவனை உடனே மருத்துவ மனைக்கு தூக்கி கொண்டு ஓட அங்கு அவனை பரிசோதித்த மருத்துவர் ரென் வரும்வழியிலேயே இறந்துவிட்டதாகவும் அவர் கடைசியாக அருந்திய பானத்தில் விஷம் கலந்து இருந்ததாக கூற கதறி அழுதவனுக்கு அவளிடம் கூறவேண்டும் என்று உரைக்க மொபைலை எடுத்தவனுக்கு ரென் அனுப்பிய வீடியோ நோட்டிபிகேஷன் காட்ட அதை திறந்து பார்த்தவன் அதிர்ந்து போனான்.. அவனை கொல்வதாக நினைத்து தன்னை கொல்ல இப்படி ஒரு சதி செய்தாளே எஅகிற கோவம் முழுவதும் அடித்து பிடித்து அப்போதுதான் மருத்துவமனை ஓடிவந்த தேஜுவின் மேல் திரும்பியது..
கூடவே அவனுக்கு ஜுஸ் கொடுக்க வந்தவனும் வர.. அவனை பிடித்து உலுக்கியவன்..
“யாருடா ஜுஸ் கொடுக்க சொன்னது?” என்று ஆக்ரோஷமாய் கேட்க பயந்தவன் தேஜு தான் அதில் ஏதோ கலந்தால் என்ற கூடுதல் தகவலும் கொடுத்துவிட அவனது கோவம் பலமடங்கு அதிகமாகியது..