Skip to content
Home » அகலாதே ஆருயிரே-51-55

அகலாதே ஆருயிரே-51-55

��அகலாதே ஆருயிரே��
��51��

அந்த பெரிய மண்டபம் முழுவதும் ஆட்கள் நிறைந்து இருக்க, திருமணத்தின் முதல் நாள் மாலை
இசைக்கச்சேரி நடந்து கொண்டு இருந்தது.

அங்கிருந்த அனைவருமே வாயை பிளந்த வண்ணம் பார்த்தது, ஆருஷியையும் ஹர்ஷாவையும்
அல்ல.

சின்ன மேடையில் இசை வாத்தியங்களுக்கு இடையில் தாளம் தப்பாமல் தலையாட்டி பாடல்
வரிகளை அழகாக சுருதி பிறழாமல் பாடிக்கொண்டு இருந்த ஸ்ரவனை தான்.

ஆம். ஸ்ரவன் தான் பாடுகிறான். ‘கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே’, என்று அவன்
ஆரம்பித்த போது அவனின் முகத்தை பார்த்து அசட்டையாக பேசி சிரித்த மனிதர்கள் அவன்
வரிவரியாக அழகாக பாடவும், அவன் குறைகள் மறைந்து நிறைகள் பளபளக்க, அவனை வைத்த
கண் வாங்காமல் பார்த்தனர்.

வெள்ளை குர்தாவில் பொன்னிற மேல் சட்டை அணிந்து பதின் பருவத்தில், அவன் மனவளர்ச்சி
குன்றியவன் என்பதற்கு கவலைப்பட வேண்டிய தேவையே இல்லாதபடி, கணீர் குரலில் பாடிய
அவனை பாராட்டாத மனிதர்கள் அங்கு இல்லை.

அவன் பாடி முடித்ததும், அகவழகி மேடை ஏறி, “இது என் பையன் ஸ்ரவன். இவன் பிறந்து
வளர்ந்த போது கொஞ்சம் மனவருத்தம் இருந்தாலும் எங்களுக்கு கடவுள் தந்த பரிசா நாங்க
இவனை சந்தோசமா வளர்த்தோம். இப்போ இவன் இப்படி இருக்கான்னா அதுக்கு முக்கிய
காரணம் ஆருஷி தான். நான் ஸ்பெஷல் ஸ்கூல்ல சேர்த்தேன் தான். ஆனா அதுக்கு என்னை
வலியுறுத்தினது ஆருஷி தான். அவள் ஏதோ பாடல் முணுமுணுக்க அதை ஸ்ரவன் பாடி கேட்ட,
அவள் தான் அவனை மியூசிக் க்ளாஸ் அனுப்ப சொன்னா. இதோ இப்போ கல்யாணத்துல அவன்
பாடியே ஆகணும்ன்னு பிடிவாதம் பிடிச்சு அவனை மேடை ஏத்தி இருக்கா. நான் கூட பயந்தேன்.
ஆனா என் பையனாலயும் சாதிக்க முடியும்ன்னு என்னையே நம்ப வச்சிருக்கா ஆருஷி.”, என்று
கண்ணீர் மல்க அவர் சொல்ல,

மேடையில் ஹர்ஷா கைப்பற்றி நின்று கொண்டிருந்த ஆருஷியோ, ‘வேண்டாம்’, என்று
தலையசைத்துக் கொண்டு இருந்தாள்.

ஹர்ஷா அவளை காதல் பொங்க பார்த்துக்கொண்டு இருந்தான். அனைவருக்கும் ஆருஷியின்
மேல் ஒரு மதிப்பு வந்தது. ஆருஷி வாசலை வாசலை பார்த்துக்கொண்டு இருந்தாள்.

அங்கே அபினவ், அங்கும் இங்கும் ஓடி வேலை செய்து கொண்டு இருக்க, இன்னும் ரிது வந்து
சேராத கடுப்பில் ஆருஷி இருந்தாலும், ரிது ஏற்கனவே சொல்லிச் சென்ற வார்த்தைகள் மனதில்
வந்து போயின.

“இங்க பாரு ஆரூ. லீவ் முழுக்க உன்னோட இருந்துட்டேன். இனி நான் ஜாயின் பண்ணிட்டா என்
வேலை எப்படியோ. நேரம் காலம் எல்லாம் பார்க்க முடியாது. அதுனால, கல்யாணத்துக்கு சரியா
வந்துருவேன். முன்ன பின்ன ஆனாலும் கல்யாண வீட்டுல மூஞ்சியை தூக்கி வைக்காம, உன்
இத்தனை வருட காதல் கைக்கூடப்போகுற சந்தோஷத்தை மட்டும் அனுபவி. நான் எங்க
இருந்தாலும் என் மனசு உன்னோட தான் இருக்கும்.”, என்று சொல்லிய அவளை, இப்போது
நினைத்தாலும் பெருமையாக இருந்தது.

நினவலைகளில் இருந்து மீண்டவள், ஓரவிழிபார்வையில் ஹர்ஷாவை நோக்க, அவனோ
வஞ்சனை ஏதுமின்றி சுற்றுப்புறம் மறந்து தன் அருகில் அழகிய வெண்பட்டால் ஆனா
லெஹெங்காவில் தேவதை போல ஜொலித்த அவளை சைட் அடித்துக்கொண்டு இருந்தான்.

அதை கண்டதும் நாணத்தில் சிவந்த வதனத்தை மறைக்க போராடிய ஆரூ, அவனை தன்
முழங்கையால் விலாவில் இடித்து,” ஏய்.. என்ன டா ஏதோ பஞ்சத்துல அடிப்பட்டவன்
பால்கோவாவை பாக்கறது போல பாக்கற..” என்று மெல்லிய குரலில் கேட்க,

“இதெல்லாம் அநியாயம், நாம இந்த மூணு மாசமா தான் ஒழுங்கா நேர்ல பாக்கறோம். அதுலயும்
இன்னிக்கு தான் இவ்ளோ பக்கத்துல உன்னை பார்க்கிறேன். என்ன டி..”, என்று அவன் சிணுங்க,

“பங்கு, அந்த பக்கி இனி உன்னோட தான் இருக்கும். பார்த்துக்கிட்டே இரு. ஆனா இப்போ உங்க
ரெண்டு பேரையும் எல்லாரும் பாக்கறாங்க டா. கொஞ்சம் வழியாம நில்லேன்.” என்று அபி
கிண்டலடிக்க,

உடனே ஆரூ முகம் வாடினாள். அவளுக்கு நினைப்பு இப்போது ரிதுவின் பக்கம் செல்ல,
வேகமாக போனை எடுத்தவள், அவளை அழைக்க, அவளோ, “ஆரூ நாளைக்கு காலைல நாலு
மணிக்கு உன் பக்கத்துல இருப்பேன். ஒரு பெரிய தலை இங்க .. சரி விடு.உனக்கெதுக்கு அது.
நான் வந்துடறேன் டா. “,என்று சமாதானம் சொல்ல,

“அது.. ஜே.பி.. “,என்று இழுத்தாள் ஆரூ.

“அவருக்கு என்ன? நாளைக்கு அவரும் வருவாரா? சரி மீட் பண்ணிடலாம்.” என்று சொன்ன ரிது
பக்கத்தில் யாரோ ஏதோ சொல்ல, “அப்பறம் பேசறேன் செல்லம். முகத்தை அழகா வச்சுக்கோ
வாழ்க்கை முழுக்க பார்க்க வேண்டிய கல்யாண போட்டோ டி.”, என்று சொல்லிவிட்டு
அணைத்தாள்.

‘ஜே.பி’ என்ற பேச்சு போனில் எழுந்ததும் காதை தீட்டிய அபி, இப்போது கூர்மையாக ஆருவை
நோக்க, அவனை பார்த்து தம்ப்ஸ் அப் காட்டிய ஆரூ, “நாளைக்கு நீங்களும் என் செல்லமும் மீட்
பண்ண போறீங்க”,என்றாள் மகிழ்ச்சியாக.

அபிக்கு சிறக்கில்லாமல் வானத்தில் பறந்த
உணர்வு. இடம் பொருள் பார்க்காமல் ஹர்ஷாவை அணைத்து முத்தமிட்டு, “இதை அந்த
குரங்குக்கு குடுத்துடு டா. இத்தனை வருஷத்துல எனக்கு அவ செய்யப்போற பெஸ்ட் பார்ட்
இதான்.”,என்று மகிழ்ந்தான்.

மேடையில் இவர்கள் நாடகம் நடந்து கொண்டு இருக்க,  கீழே அங்கும் இங்கும் அலைந்து வேலை
பார்த்துக்கொண்டு இருந்தான் ரிஷி. அவன் தான் ஆருஷிக்கு உடன் பிறவா தம்பியாயிற்றே,
அவனை வைத்த கண் வாங்காமல் தூண் மறைவில் இருந்து பார்த்த முதியவர்கள் இருவரும்,
கண்ணீர் பொங்க, அவனை அணைத்துக்கொள்ள முடியாதா என்று ஏங்கித் தவிக்க,

முதல் வரிசையில் லதாவால் அமர்த்தப்பட்ட, சசியும் நாராயணனும் சங்கடமாக அமர்ந்திருந்தனர்.
நாராயணன் தன் உதவும் நபர்கள் மூலம், ரங்கசாமியும் கனகமும் இந்த திருமண நிகழ்வுக்கு
கிளம்பி வந்திருப்பதை அறிந்தே இருந்தார் . வராமல் தவிர்க்க முடியாத திருமணம் இது.
அவர்களின் செல்லப்பெண் ஆருஷியின் திருமணம். அது மட்டுமல்லாது சசியின் உற்ற தோழியின்
மகன் திருமணம்மும் கூட . ஆனால்  அமர முடியாமல் அவர் திணற ஒரே காரணம் சசி மட்டுமே.
அவள் தாய் தந்தையரை பார்க்க பிரியப்படவில்லை என்பதே.

ஆனால் இவர்கள் ஒன்று நினைத்து தவித்து இருக்க, நடந்ததோ வேறு.

இரவு உணவுக்கு அனைவரும் அந்த பெரிய ஹாலில் ஆளுக்கொரு தட்டை ஏந்தி உண்டுகொண்டு
இருக்க, அபியும் தனது தாய் தந்தையை அழைத்து வந்து உணவு பெற்றுக்கொடுத்து சாப்பிட
சொல்லி விட்டு நகர்ந்தான்.

அவனை வேதாசலம் போனில் அழைக்க, ஹர்ஷாவிடம் சொல்லிவிட்டு, ஆருஷியின் கையில்
கொஞ்சம் அடிகளை பரிசாக பெற்றுக்கொண்டு, வாசலில் நின்ற தனது வண்டியில் ஏறி அவன்
அலுவலகம் விரைந்தான். அவன் எடுத்த அந்த டெல்லி பெண்ணின் ஆசிட் அட்டாக் கேஸ்
இன்னும் இரண்டு ஹியரிங் தான் இருக்கிறது.அபி ஓரளவு ஆதாரங்கள் திரட்டி, அந்த கயவன்
தான் அவளை அப்படி செய்தவன் என்று ஓரளவு நிரூபித்து இருந்தான். இன்னும் கொஞ்சம்
ஆதாரங்களும், சாட்சிகளும் தேவை. இப்போது எதற்கு வேதாசலம் அவசரமாக அழைத்தார் என்று
புரியாமல் அவன் யோசனையில் செல்ல, அங்கே உணவுக்கூடத்தில் சசியை தொலைவில் இருந்து
கண்ட வண்ணம் இருந்தனர் ரங்கசாமியும் கனகமும்.

பலவிதமான உணவு பண்டங்கள் தட்டில் நிறைந்து இருக்க, வந்தவர்களை அழைத்து சாப்பிட
வைத்தபடி இருந்தனர் லதாவும், சோமநாதனும். அவர்கள் ஒற்றை மகனின் திருமணம் அல்லவா?
அவர்கள் மகனின் மனம் போல செய்து வைக்கும் மணம் இது. அதனால் மகிழ்ச்சியாக
அனைத்தையும் செய்துகொண்டு இருந்தனர். அதே போல தான் வேணியும் கேசவனும். அவர்கள்
ஒரே பெண்ணின் திருமணம் என்பதால் பந்தல் முதல் பின்னூசி வரை பார்த்துப் பார்த்து செய்தனர்.
வேணியின் அழைப்பில் பல திரைப் பிரபலங்கள் வந்த வண்ணம் இருக்க, அவர்களை வரவேற்று
அமர வைத்து, உணவுக்கு அழைத்து என்று இருவரும் இறக்கை கொண்டு பறந்து தான் எல்லாம்
செய்தனர். ரிஷியின் உதவி அவர்களுக்கு அந்த நேரத்தில் பேருதவியாக அமைய, உணவில்

சைவம், அசைவம் என்று அனைத்தும் சேர்த்து பெரிய அளவில் ஏற்பாடு செய்து வைத்து
இருந்தனர்.

அப்போது சசியின் முன்னால் கண்ணில் நீரோடு வந்து சேர்த்தார் ராகவேந்தர்,அபியின் தந்தை.
அவரின் கண்ணீரை புரியாது நோக்கிய சங்கரி, அந்த கண்களில் தெரிந்த வலியில், ‘இத்தனை
ஆண்டுகள் அவர் தன்னிடம் கூட பகிர விரும்பாத ஒன்று இது தானா? ஆனால் இந்த பெண் யார்?’
என்று அவர் சசியை நோக்க,

சசியோ, ராகவேந்தரை கண்டதும் கண்கள் இருட்ட, மயங்கிச் சரிந்தாள்.

மணமகள் அறையில் சசி படுத்திருக்க, நாராயணன் அவர் அருகில் அமர்ந்துகொண்டு
ராகவேந்தரை கேள்வியாக பார்த்தார். ஆருஷி உடனே ரிதுவுக்கு தகவல் தெரிவிக்க, தன்
வேலையை வேறு ஒரு அதிகாரிக்கு மாற்றி விட்டு மண்டபத்திற்கு வந்து சேர்ந்தாள் ரிது.

அங்கே அறையில் ராகவேந்தர், சசியின் கையை பிடித்துக்கொண்டு,” கண்ணம்மா.. அண்ணனை
பாரு டா. என்னோட பேசு டா. என் மேல தப்பில்ல டா மா. நான் அன்னைக்கே அப்பா அம்மா
கிட்ட சொன்னேன். சசிம்மா அப்படி பண்ண மாட்டான்னு.அவங்க தான் நம்பலை டா. அதான்
உன்னை அவங்க வெளில அனுப்பினதும் நானும் அவங்களை விட்டுட்டு வந்துட்டேன்.
இன்னிக்கு வரை அவங்க எங்க இருக்காங்கன்னு கூட தெரியாது டா. அண்ணன் கிட்ட பேசு டா”,
என்று புலம்ப, அங்கிருந்த யாருக்கும் எதுவும் புரியவில்லை. ரிது வேகமாக தன் காக்கி உடையில்
வந்து சேர, அங்கே நிலவரம் ஓரளவு அவளுக்கு புரிந்தது. மற்றவர்களை பார்த்தவள், தாயின் கரம்
பற்றி, “அம்மா.. என்ன நீ?  இப்படி எல்லாத்துக்கும் மயங்கி மயங்கி விழுந்தா என்ன அர்த்தம். நீ
எவ்ளோ ஸ்ட்ராங்??”,என்று கேட்டதும் சின்ன சிரிப்பை மகளுக்கு பரிசாக கொடுத்தவள்,
“எல்லாரும் முழிக்கிறாங்க பாரு ரிது,என்னனு சொல்லு.”, என்று சொன்னவர், சோர்வுடன் கண்
மூடினார்.

எழுந்த நின்ற ரிதுவின் கம்பீரம் அனைவரையும் ஒரு நொடி அசற வைத்தது என்றால் அது
மிகையல்ல.

அவள் ராகவேந்தரை நோக்கியவள், “இவர் என்னோட தாய் மாமாவா இருக்கணும். சரியா?”,
என்று அவரை பார்க்க, அவர் ஆமோதிப்பாக தலையசைத்தார்.

“அம்மாவும் அப்பாவும் காதல் கல்யாணம் செஞ்சதா எல்லாரும் நினைச்சு இருப்பீங்க. அப்படி
இல்ல. அம்மா அப்பா காதலிச்சு கல்யாணம் பண்ணினவங்க இல்ல. அம்மாவோட வீட்டு பக்கத்து

வீட்ல அப்பா குடி இருந்தார். அப்பாவுக்கு ஆந்திரா பூர்வீகம் ஆனா சின்ன வயசுலயே அவங்க
அப்பா அம்மா இறந்ததால சென்னை வந்து வேலை செஞ்சு, படிச்சு, முன்னேறி அப்பா
வேலைக்குப் போனார். அப்போ அவங்க கம்பெனி வேலையா திருநெல்வேலி பக்கத்துல இருக்கற
ஒரு கிராமத்தில ஒரு சர்வே எடுக்க போயிருக்கும் போது தான் அம்மாவை சந்திச்சு இருக்கார்.
அவங்க அதிகம் பேசாம அமைதியா அவங்கவங்க வேலையை தான் பார்த்து இருக்காங்க.
அம்மாவுக்கு அவங்க அப்பா அம்மா அப்படின்னா அவ்ளோ இஷ்டம். மரியாதையும் கூட,
கோவிலுக்கு போன இடத்துல அப்பாவை பார்த்து சிரிச்சிட்டு போயிருக்காங்க அம்மா. அது
தனக்கு பக்கத்து வீட்ல இருக்கற ஒருத்தர் அப்படிங்கற ஸ்நேக சிரிப்பு தான். ஆனா அதை ஒருத்தர்
தாத்தா கிட்ட தப்பா சொல்லி இருக்கார். அதுல இருந்து அம்மாவுக்கு வீட்ல கொஞ்சம்
கண்காணிப்பும் கெடுபிடியும் அதிகம் ஆகி இருக்கு. அது தெரியாத அம்மா, எப்பயும் போல
இருந்திருக்காங்க. ஒரு நாள் ,அவர் இருந்த ரூம்க்கு வெளில துணி காய போட்டுட்டு அப்பா
வேலைக்குப் போய்ட்டார். அப்போ மழை வர, அம்மா அதை எடுத்து வச்சி அப்பா வந்தப்போ
தந்திருக்காங்க. அதையும் பாட்டி தப்பா எடுத்து அடிச்சிருக்காங்க. அடுத்த வாரம் ஒருத்தன் அம்மா
கிட்ட வம்பு பண்ண, அந்த பக்கம் வந்த அப்பா அவனை துரத்தி விட்டு பத்திரமா அம்மாவை
வீட்டுக்கு கூட்டிட்டு வரத்துக்குள்ள அம்மா அப்பாவும் வீட்டை விட்டு ஓடி போகப்போறதா
அடிபட்டவன் புரளியை கிளப்ப, தாத்தா அம்மாவை வீட்டை விட்டு போக சொல்லிட்டார். அம்மா
எவ்வளவோ விளக்கம் கொடுத்தும் தாத்தா நம்பலை. அம்மா அழுததை பார்த்த அப்பா, நம்மால
தான் ன்னு அம்மாவை அழைச்சிட்டு சென்னை வந்துட்டார். அப்பறம் வேற வழி இல்லாம
கல்யாணமும் பண்ணிக்கிட்டாங்க ஆனா, அதுக்கு அப்பறம் தான் அவங்களுக்குள்ள புரிதலும்
காதலும் வந்து இன்னிக்கு வரை அன்பா வாழ்ந்துட்டு வராங்க. அம்மாவுக்கு தன்னை நம்பாத
பெற்றோர் மேல கோபம். வேற ஒன்னும் இல்ல. இவர் அம்மாவுக்கு ஆதரவா இருந்தது
அவங்களுக்கு தெரியாது. இதெல்லாம் எங்களுக்கு சின்ன வயசுலயே அப்பா அம்மா
சொல்லிட்டாங்க. அதனால தான் என்னை, என்னோட கனவுகளை அவங்க மதிச்சாங்க.”, என்று
ரிது கூற,

ராகவேந்தர், ரிதுவின் கை பிடித்தவர்,  “அம்மா நீ இவங்க பொண்ணா மா. போலீஸா நீ? எப்படி
இருக்கு தெரியுமா எனக்கு. நீ என் மருமகள் டா..”, என்று மகிழ்ந்து கூற,

அவரின் மருமகள் என்ற வார்த்தை சங்கரி மனதில் கிலியை ஏற்படுத்தியது. இருந்தும்
மறைத்துக்கொண்டு அவர் சிரித்தார்.

அதன் பின் கல்யாண வேலை கவனித்து இரவு அனைவரும் படுத்து உறங்க,  அண்ணன் தங்கை
இருவரும் பேசிக்கொண்டே இருந்தனர்.

நாராயணன் ரிதுவை அழைத்து,” ரிது, அவங்க அண்ணன் பையனுக்கு உன்னை கல்யாணம்
பண்ணி கொடுக்கக் கேட்கறாங்கடா. அவளும் இது நடந்தா நல்லா இருக்கும்ன்னு நினைக்கிறா.

எனக்கு உன் விருப்பம் தான் முக்கியம் அவளுக்கும் அப்படி தான். அவங்க அண்ணன் ரொம்ப
கேக்கிறார் போல டா.”, என்றதும்,

ரிது முகத்தில் அபியை பற்றிய குழப்ப ரேகைகள் ஓட, “யோசிச்சு நாளைக்கு சொல்லவா
அப்பா?”,என்றாள் நிதானமாக.

“சரிடா. எந்த கட்டாயமும் இல்ல டா. உன் விருப்பம் தான் முக்கியம்.”, என்றதும்,

“நான் இனி கொஞ்ச நாள் க்ரைம்ல இருக்கணும் பா. அதுனால என் வேலை பற்றி அவங்க வீட்டு
ஆட்கள் கிட்ட சொல்ல வேண்டாம்ன்னு மட்டும் சொல்லுங்க அப்பா.”, என்று சொன்னவள்
ஆருஷியை பார்க்க விரைந்தாள்.

கல்யாண கனவில் மிதந்த அவளிடம் நிலைமையை சொல்ல,அவளோ மகிழ்ந்தவளாக, ‘அபி தான்
ஜே.பி அவளை காதலிக்கும் அவளின் மாமன் மகன்’ என்ற உண்மையை தோழிக்கு சொல்ல,
ரிதுவின் மனதில் ஒரு வித இதம் பரவியது.

அதே நேரம் மனதில் ஒரு திட்டம் உருவாக, அதை ஆருவிடம் கூற, அவளோ,”பாவம் டி”, என்று
கெஞ்சினாள். “பிளீஸ் ஆரு. எனக்காக”, என்றதும், ஒத்துக்கொண்டவள், தன் பாதியாக மறுநாள்
மாறப்போகும் ஹர்ஷாவிடம் அனைத்தையும் சொல்ல, அவனும் ஒத்துக்கொண்டான்.

மறுநாள் விடியல் அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி , மின்னல் கீற்றாக ஒளிர,தன் பல நாள்
ஆசைக்காதலியை தன் வாழ்வின் இணையாக மாற்றிக்கொண்டான் ஹர்ஷா.

அவன் ஆருஷியை காதல் ததும்பும் விழிகளால் நோக்க, அவளோ நாணம் ஏறிய தன் முகத்தை
மறைக்க முடியாமல் தவித்துப் போனாள்.

அவள் கண்களில் கண்ணீர் துளிர்த்தது. அன்றே காதல், ஊர் சுற்றல் என்று போயிருந்தால்
இந்நேரம் வாழ்க்கை என்னவாகி இருக்குமோ? ரிதுவின் வழிகாட்டலின் பேரில் இன்று அவள்
நினைத்த வாழ்க்கை அவளின் கையில் இருக்க, அவளும் சமூகத்தில் நல்ல நிலையில் இருக்கிறாள்
. கண்கள் சுழற்றி அவள் ரிதுவை தேட, அவளோ, கண்களில் கண்ணீர் மல்க, தன் செல்லத்
தோழியின் திருமணத்தை தள்ளி நின்று மனம் குளிர ரசித்துக்கொண்டு இருந்தாள்.

அவளுக்கு அருகில் கேசவனும் வேணியும் இருந்தும், ஏனோ ரிதுவின் கண்ணீர் ததும்பும்
கண்களில் இருந்த கரை காணாத அன்பில் நொடியில் கரைந்தே போனாள் ஆருஷி.

தன்னை போல அவளும் சில நாட்களில் மணமேடை காணப்போகிறாள் என்ற மகிழ்ச்சியில்
அவள் ஹர்ஷாவை பார்க்க, அவனோ அவன் நண்பன் வராத கவலையை அவளிடம் பகிர்ந்தான்.

“வந்திடுவார் லாலிபாப். என்ன பிரச்சனையோ. விடு அதான் அவங்க ரெண்டு பேருக்கும் சீக்கிரம்
கல்யாணம் நடக்க போகுதே.”, என்று சொல்லிவிட்டு அவள் நிமிர, அங்கே அவசராமாக
மண்டபத்தில் நுழைந்தான் அபி.

திடீரென்று ரிது, தன் தம்பியை கைபிடிக்குள் கொண்டு வந்து மணமகள் அறையில் பதுங்கினாள்.
கண்களால் ஆருஷியிடம் “பிளீஸ்.. “,என்று கேட்டபடி..

★★★★★

��அகலாதே ஆருயிரே��
��52��

இத்தனை ஆண்டுகளில் ஆருஷியின் வாயிலாக ரிது ஹர்ஷாவை பற்றி அறிந்தவைகளில் ஒன்று,
ஹர்ஷாவின் கண்கள் ஒளிரும் என்றால் அது ஆருஷியை கண்டாலோ அல்லது அவனின் ஆருயிர்
நண்பன் அபியை கண்டாலோ தான். ஆரூ அருகில் இருக்கையில் அவன் முகம் வாடி இருக்க,
அவன் நண்பன் வரவில்லை என்பதை உணர்ந்திருந்த ரிது, அவன் கண்கள் வாயிலை
நோக்கிக்கொண்டு ஒளிரவும் அது கண்டிப்பாக அவன் நண்பனை தவிர வேறு யாரும் இருக்க
முடியாது என்பதை அவள் உணர போலீஸ் மூளைக்கு சொல்லியா தரவேண்டும்.

ரிஷியும் ஆருவும் தான் அபிக்கு பழக்கம் என்பதை ஏற்கனவே அறிந்தவள், கையோடு தம்பியை
அள்ளிக்கொண்டு மணமகள் அறைக்கு விரைந்தாள். ரிஷியோ, “ரிதுக்கா விடு, ஏன் இழுத்துட்டு
வந்த?? வேலை இருக்கு. கேசவன் அங்கிள் சில வி.ஐ.பியை கவனிக்க சொல்லி இருக்கார் நான்
போகணும்.”, என்று சொல்ல,

“தாராளமா போ. ஆனா உன் ஜே.பியை பார்த்தா நான் தான் உன் அக்கான்னு சொல்ல
மாட்டன்னா போ.”, என்று கெத்தாக அவள் சொல்ல,

“ஜே.பி கிட்ட நான் ஏன் உன்னை பத்தி சொல்லணும்?”, என்று விழித்தான்.

“அவர் தான் உன் மாமா பையன்னா கூட சொல்ல மாட்டாயா?”, என்று புருவம் உயர்த்திச்
சிரித்தாள்.

“ஏ.. ரிதுக்கா நீ சொல்றது நிஜமா? அப்போ ஜே.பி தான் என் மாமா வா? செம்ம.. அவர் எப்படி
இருப்பார் தெரியுமா? ஏ நீ தான் பார்த்ததே இல்லயே.. அப்பறம் எப்படி அவர் வந்தது உனக்கு
தெரியும்?”

“எல்லாம் உன் புது மாமன் ஹர்ஷாவால தான். அவன் கண்ணு வாசலை பார்த்து டாலடிச்சிச்சு.
அப்போ அவங்க வந்தாச்சுன்னு நான் தெரிஞ்சுக்கிட்டேன். என்கிட்ட ஒரு பிளான் இருக்கு.
சரியா? அவரை நான் பார்க்கல. அவரும் பார்க்கல. கல்யாணம் வரைக்கும் அப்படியே இருகட்டும்.
நீ மட்டும் அவர் கிட்ட நான் தான் உன் மச்சான்ன்னு போய் நின்னுடாதே. நான் மாட்டிப்பேன்.
என் பிளான் பிளாப் ஆகிடும்.”, என்றாள்.

“சரி நீ நடந்து. நான் இருக்கேன். அம்மா அப்பா வை எப்படி சமாளிப்ப?”

“அதெல்லாம் என் பாடு. நீ மாட்டிக்காதே.”

“சரிங்க போலீஸ்காரம்மா.. நான் இப்போ போகட்டா? அக்கா எங்கன்னு அவர் கேட்டா
வேலைக்கு போய்ட்டான்னு சொல்லிடறேன். டீலா??”

“என் பட்டுக்குட்டி.. “,என்று தம்பியை கொஞ்சினாள் ரிது.

அவனுக்கு இவ்வளவு நாட்கள் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாதது போல, திருமணம்
வரையில் அதை நீடிக்க நினைத்தாள் ரிது. அதற்கொரு காரணமும் இருந்தது.

ஆருவுக்கு போன் செய்து, தான் கிளம்புவதாக  சொன்னவள், அனைவரும் அசந்த நேரம்
மண்டபத்தை விட்டு வெளியேறினாள்.

ஆசையாக தன் மனதுக்கு பிடித்த அபர்ணாவை சந்திக்கும் எண்ணத்தோடு வந்த அபி, தன்
நண்பனையும் தன் வால் இல்லா வானர தோழியையும் வாழ்த்திவிட்டு,தாமதமாக வந்ததற்கு
அவளிடம் சில பல திட்டுகளையும் பெற்றுக்கொண்டு சிரித்தான்.கண்கள் தன்னை சுற்றிலும்
இருக்கும் பெண்களில் அவன் அபர்ணா யார் என்று மனதின் வழி தேட, அவள் இருப்பது
போன்றொரு எண்ணம் தோன்றாமல் போக, சோர்வாய் உணர்ந்தான்.

அப்போது அவன் கண்களில், அவன் தந்தையின் மகிழ்ச்சியான முகம் பட, இத்தனை
ஆண்டுகளில் அவன் கண்டிராத தெளிவுடனும், புன்னகையுடனும் அது ஒளிவீச, புரியாமல் தாயை
கண்டால் அவர் முகமோ, இருளடைந்து ஒப்புக்கு சிரித்தது.

புரியாமல் ஹர்ஷாவிடம் சொல்லிவிட்டு மேடையை விட்டு இறங்கியவன் அப்போது தான் தன்
தந்தை வேறு ஒருவர் கையை பற்றிக்கொண்டு இருப்பதை கண்டான். குழப்பமான முகத்துடன்
தாயருகில் வர, “இதோ எங்க அபி வந்துட்டான். நாம அவனை நேராவே
கேட்டுடுவோமே.”,என்றார் தந்தை ராகவேந்தர்.

அவன் புரியாமல் விழிக்க, “அப்பா என்ன சொன்னாலும் நீ கேட்ப தானே அபி?”, என்று
மறைமுகமாக கேட்க, யார் முன்னலோ இப்படி கேட்டால் எந்த பையன் தான் மாட்டேன் என்று
சொல்வான்? அவன் தலையசைக்க போகும் நேரம் சங்கரி வேண்டாம் என்பது போல கண்ஜாடை
செய்ய, அபி அதை கவனிக்கத் தவறினான்.

அவன் தலையசைத்து தான் தாமதம், “அதான் அபியை சொல்லிட்டானே அடுத்த முகூர்த்துல
கல்யாணத்தை வச்சிக்கலாம்  மாப்பிள்ளை”, என்றார் ராகவேந்தர்.

யாரோ தன் தலையில் இடியை போட்டது போல அதிர்ந்த அபி ,”அப்பா..”,என்று சொல்ல,
அவரோ, “இது தான் பா என் தங்கச்சி,உன்னோட அத்தை, இது உங்க மாமா. இவங்க
பொண்ணுக்கு தான் உன்னை தரேன்னு சொல்லி இருந்தேன்.”, என்று ஏதோ ஜவுளி வாங்கி தர
சொன்னவர் போல சொல்ல, அபிக்கு உலகம் சுழன்றது.

அவருக்கு பின்னால் நின்ற ரேகா, “நீங்க தான் பொண்ணுன்னு சொல்றீங்க, யாரையும்
கண்ணுலயே காட்டலையே?”, என்று நொடித்துக்கொள்ள, சசி கேள்வியாக நாராயணனை
பார்த்தார்.

நாராயணன் தனக்கு மொபைலில் வந்த குறுஞ்செய்தியை சசிக்கு காட்டினார். அதில் ரிது, ‘என்
வேலை விஷயமா கொஞ்சம் வெளில போகணும். என் வேலை பற்றி சொல்ல வேண்டாம்.மாமா
கிட்ட ஏற்கனவே சொல்லிட்டேன். மற்றவை நேரில். ரிஷியை மாப்பிள்ளைக்கு அறிமுகம் செய்ய
வேண்டாம். காரணமும் நேரில்’, என்று இருக்க. ஒன்றும் விளங்காமல் திருதிருத்த சசி,

“அவளுக்கு முக்கியமான ப்ராஜெக்ட். வேலைக்கு போய்ட்டா. அப்பறமா எல்லாரும் வீட்டுக்கு
வந்து பாருங்க.”, என்று சொல்ல, கேசவன் சொன்ன வேலையை செய்து கொண்டு இருந்த ரிஷி
அபியின் கண்ணில் பட்டான்.

“ஒரு நிமிஷம்”,என்று பரபரப்பாய்  ஓடிய அபி, ரிஷியை பிடித்து பேச, அதை கண்ட சசியும்
நாராயணனும் அர்த்தமாக பார்த்துக்கொண்டனர்.

“ஹே ரிஷி.. “,என்று அவனை பின்னால் இருந்து நிறுத்தினான் அபி,

“ஹாய் ஜே.பி வாங்க..”,என்று பக்கத்தில் இருந்த கூல்டிரிங்க் எடுத்து நீட்டினான் ரிஷி. “அது
இருக்கட்டும். உன் அக்கா எங்க? நான் உடனே பார்க்கணும். ரொம்ப அவசரம்”, என்றான்
அவனால் அவனின் திருமணப் பேச்சை சட்டென்று நிறுத்த முடியாது, ஆனால் அபர்ணா
இருந்தால் என் காதலி என்று அறிமுகம் செய்து நிறுத்திவிடும் எண்ணத்தில் அவன் கேட்க,
அவனின் முகத்தில் இருந்த பதற்றத்தை பார்த்த ரிஷி கொஞ்சம் அவனுடன் விளையாடிப் பார்க்க
நினைத்தான்.

“அக்காவுக்கு திடீர்னு கல்யாணம் முடிவாயாச்சு ஜே.பி. கல்யாண பொண்ணு ரொம்ப நேரம் இங்க
இருக்க வேண்டாம் என்று வீட்டுக்கு கூட்டி போய்ட்டாங்க.”,என்று அவன் பங்குக்கு தலையில்
குண்டு போட்டான்.அபி முற்றிலும் உடைந்து போனான்.

அவன் ரிஷியோடு பேசுவதை பார்த்த ஆருஷி, அவனை வர சொல்லி அழைக்க, தன்னிலை
இல்லாமல் நடந்து மணமேடைக்கு சென்றான். அவனின் நிலையை காணப் பொறுக்காத ஹர்ஷா,
“டேய் பங்கு என்ன நீ? எல்லாம் உன் மனசு போல தான் நடக்கும்.பொண்ணு யாருன்னு
நெனச்ச..?? சிஸ்டர்” ,என்று அவன் ஆரம்பிக்க, அவன் காலில் ஓங்கி மிதித்தாள் ஆரூ. அவன்
பக்கென்று வாயை மூடிக்கொள்ள,

“ஜே. பி எங்களுக்கு முன்னாடியே எல்லாம் தெரியும். நீ உன் அப்பாவை பாரு”, என்று கை காட்ட,
அங்கே தங்கை அருகில் பூரித்து இருந்த அவர் வதனத்தை  இத்தனை ஆண்டுகளில் அவன்
கண்டதே இல்லை.

“இவ்ளோ வருஷம் அவங்களுக்காக எவ்வளவோ செஞ்ச நீ, இப்போ மாட்டேன்ன்னு சொன்னா
நல்லாவா இருக்கும். யோசி பா. கடவுள் கணக்கு தப்பவே தப்பாது. பிளீஸ்  எங்களுக்காக”,என்று
ஆரூ, ஹட்ஷாவின் கையையும் கோர்த்துக்கொண்டு அவனை நோக்கி கெஞ்சுதல் பார்வை வீச,

ரிஷி சொன்னதும், இப்போது தனக்கு நடப்பதும் இத்தனை ஆண்டுகளாக அவன் அபர்ணாவை
பார்க்காததும் என்று அவன் எண்ணங்கள் சுழல, அமைதியாக நின்றான்.

அவனுக்கு போன் வர, சற்றே ஒதுங்கி பேசிய அவனுக்கு இப்போது இதை விட முக்கிய பணி
இருப்பது மனதில் உரைத்தது. ஆம் அந்த டெல்லி கேஸின் தீர்ப்பு வர இருக்கிறது. அவனும்
ஏதேதோ ஆதாரம் கொடுத்தும், அதை அந்த பண முதலைகளின் வழக்குரைஞர்
உடைத்துக்கொண்டே வந்தார். அதை பற்றி பேச தான் நேற்று வேதாசலம் அழைத்தார்.
இப்போது வந்த அழைப்பு, ஒரு சாட்சியை கண்டறிய அவன் டெல்லி செல்ல வேண்டும்.
எப்படியும் அபர்ணா இல்லை என்றானப்பின், தந்தையின் மகிழ்ச்சியாவது நிலைக்கட்டும்.
ஆனால் வரப்போகும் பெண்?? அவனால் ஒரு முடிவுக்கு வர முடியாமல் தவித்தான். அவனின்
அபர்ணா அவனுக்கு இல்லையா என்று தவிக்க,

அவன் தவிப்பதை கண்ட ஆருவும் ஹர்ஷாவும் கூட ரிதுவை மனதில் திட்டி தீர்த்தனர்.

ரிஷி ஒரு படி மேலே போய், அவளுக்கு போன் செய்து திட்டிக்கொண்டு இருந்தான்.

“அக்கா அவர் பாவம் ரொம்ப தவிக்கிறார். உங்களுக்குள்ள என்ன அக்கா?? நீ ஏன் இப்படி
செய்யற?”, என்று கோபிக்க,

“ரிஷி அக்கா எதையும் சும்மா செய்ய மாட்டேன் டா. இப்போவே அவருக்கு நான் தான்னு
தெரிஞ்சுட்டா அது அவ்ளோ நல்லா இருக்காது. இத்தனை  வருஷ காத்திருப்பும் சும்மா நொடில
கரஞ்சிடும். சொன்னா புரியாது டா உனக்கு.”, என்றாள்.

அவளும் மனதில் அபியை நேசிக்க துவங்கி இருந்தாள். அவன் இத்தனை ஆண்டு காத்திருப்புக்கு
அவன் வாழ்வின் வரமாக அவள் மாற வேண்டும் என்று நினைத்தாள். தன்னை
மறைத்துக்கொண்டு, அவனை இன்பக்கடலில் மூழ்கடிக்க என்ன செய்யவேண்டும் என்று அவள்
பெரிய பட்டியலே வைத்திருந்தாள்.

ரிஷியும் தன் அக்கா செயல் கண்டிப்பாக நியாயம் இருக்கும் என்றே நம்பினான்.

அபி தந்தை அருகில் வந்தவன், “அப்பா எனக்கு கல்யாணத்துக்கு சம்மதம். ஆனா நான் டெல்லி
போகணும். தேதி சொன்னா எனக்கு ..”, என்று அவன் இழுக்க,

சசி உடனே முகூர்த்த தேதி பார்த்துவிட்டு ரிதுவை போனில் அழைத்தார்.

“ரிதும்மா வர்ற  27ஆம் தேதி உனக்கு வசதி படுமா டா?”,என்றார்.

அவள் என்ன சொன்னாளோ, “சரிம்மா”, என்று போனை வைத்தவர்,

“அவளுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையாம், மாப்பிள்ளை வேலை, வசதி பார்த்து முடிவு பண்ண
சொன்னா.”,என்றார். அபிக்கு மனதில் இந்த குணம் என் அபர்ணாவின் குணம் என்று சொல்ல,
மனம் ஏதோ ஒரு இடத்தில் திருமணத்தை பற்றிய தயக்கம், பயம் இரண்டையும் உடைத்தது.
இருந்தும் காதல் கொண்ட மனம் உள்ளே கசிந்துருக்க,அதை அடக்கியவன்,

சின்ன சிரிப்பை கொடுத்துவிட்டு அவனின் சம்மதத்தையும் தெரிவித்து விட்டே கிளம்பினான்.

ஆருஷிக்கு ஒரே மகிழ்ச்சி. ஏற்கனவே சாந்தலட்சுமி பாட்டியிடம் அனைத்தையும் ஒப்பித்து
இருந்தாள் அவள். அந்த வீட்டில் அவளின் தோழி பாட்டி தான். அவருக்கு தன் தோழியின்
பேரப்பிள்ளைகள் திருமணம் நடைபெறுவதால் மகிழ்ச்சி என்றால், அதில் அவர்கள்
இருவருக்குள்ளும் இருக்கும் இந்த இணைப்பு பெரிய  ஆச்சர்யம் தான். அவர் அதை கனகத்திடம்
தெரிவிக்க,

தங்களோடு சேரவில்லை என்றாலும் தன் பிள்ளைகள் இணைந்து, அவர்களுக்குள் மேலும்
உறவை பலப்படுத்திக்கொள்வது மகிழ்ச்சியே. எட்ட நின்றே அவர்களை ரசித்துவிட்டு தங்கள்
ஊருக்கு பயணப்பட்டனர்.

திருமண சடங்குகள் முடிந்து கையோடு வரவேற்பும் முடிய, ஆருஷியும் ஹர்ஷாவும் அவர்கள்
வீட்டை நோக்கி பயணித்தனர்.

இங்கே திருமண தேதி முடிவு செய்ததும், ஸ்வாதி தன் குழந்தைகளுடன் இரண்டொரு நாளில் தாய்
வீட்டிற்கு வருவதாக சொல்லிவிட்டு, அவள் கிளம்பினாள். மகேஷ் தன் சகலையிடம்
கண்காட்டிவிட்டு அவனும் அவளை பின் தொடர்ந்தான்.

விக்னேஷ் ரேகாவை அழைக்க, அவளோ அப்பாவோடு செல்வதாக அடம் பிடித்தாள். இந்த ஆறு
ஆண்டுகளில் விக்னேஷால் மாற்ற முடியாத ஒன்று என்றால் அது ரேகாவின் பிடிவாதம் மட்டுமே.
குழந்தையும் இல்லாத நிலையில் அவளை கடுமையாக பேச அவனுக்கும் மனம் வரவில்லை.
அவன் தாயோ அவளை ஒன்றும் சொல்லாதே என்று அவனை தடுக்க, புரியாமல் மாமியாரை
பார்த்தான். அவர் தான் பார்த்துக்கொள்வதாக கண் ஜாடை காட்ட, கொஞ்சம் நிம்மதியாக
கிளம்பினான்.

அடுத்த வாரத்தில் வீட்டிற்கு வருவதாக சொல்லி ராகவேந்தரும், சங்கரியும் சசியிடம் விடைபெற,
ரேகா அவர்களை கண்டுகொள்ளவே இல்லை.

ஆருஷி தன் ஆருயிர் காதல் கணவன் கை பற்றி அவன் வீட்டிற்குள் முதலடி எடுத்து வைத்தாள்.

பூஜை அறையில் விளக்கேற்றி மனம் முழுவதும் அன்பு நிறைந்திருக்க, என்றும் அனைவரும்
இன்புற்று இருக்க வேண்டிக்கொண்டாள் ஆருஷி.

லதா அவர்கள் அறைக்குள் புகுந்து கொள்ள,ஹர்ஷா  கால் கடுக்க நின்ற களைப்பில் அவன்
அறைக்கு சென்று விட, ஓர் அந்நிய உணர்வில் ஆருஷி ஹாலில் நின்றாள்.

“என்ன டா தயக்கமா?”, என்ற கேள்வி பின்னால் இருந்து எழ, அங்கே நின்ற சோமநாதனை
பார்த்து, “மாமா.. “,என்று அவள் விழிக்க,

“லதா கொஞ்ச நாள் அப்படி தான் இருப்பா. நீ கண்டுக்காதே. உனக்கு எதாவதுன்னா என்கிட்ட
சொல்லு டா.நான் உனக்கு அப்பா மாதிரி தான்”,என்றதும்,

“மாதிரி தானா?”, என்று தொங்கிப்போன அவள் முகத்தை காட்ட, சோமு கலகலவென்று
சிரித்துவிட்டார்.

“சரியான வாலா இருப்ப போல இருக்கே..”, என்றார்.

“பிடிக்காதா??”,என்றாள் உள்ளே போன குரலில்,

“ஒரு உண்மை சொல்லவா?”, என்று ரகசியம் பேசியவரை கண்டு விழித்தவள், அவர் அருகில் வர,

“என் பையன் கூட என்னால இப்படி சந்தோசமா இருக்க முடியல. நீ மட்டும் இப்படி வாலா
இருந்தா நான் ரொம்ப ஜாலியா இருப்பேன்.. என்ன சொல்ற?? நாம பிரெண்ட்ஸ் ஆகிடலாமா?”,
என்றார் .

“அட சூப்பர், ஆனா ஏற்கனவே எனக்கு ஒரு பிக் பிரென்ட் இருக்காங்க. அவங்க கிட்ட எங்க
கேங்ல உங்களை சேர்க்கலாமான்னு கேட்டுகட்டுமா?”, என்றாள் சீரியஸாக,

“அது யாரு டா?”, என்று  இம்முறை அவர் விழிக்க, சற்று தள்ளி இவர்கள் சம்பாஷணைகளை
சிரிப்புடன் பார்த்துக்கொண்டு இருந்த சாந்தலட்சுமி பாட்டியை நோக்கி கை நீட்டியவள்,
“சேர்த்துக்கலாமா?”, என்றாள். அவர் தலையசைக்க,

“அப்போ என்னை?”, என்று வந்தார் தாத்தா. அதன் பின் நால்வரும் அமர்ந்து ஏதோ கதையடிக்க,
உணவு நேரம் வந்தபோது, லதா ரூமை விட்டு வந்தவர், ஹாலில் பாட்டி மடியில்
உறங்கிக்கொண்டு இருந்த ஆருஷியை பார்த்து கடுகாகப் பொறிந்தார்.

“விடும்மா நேத்தும் சரியா தூங்கி இருக்க மாட்டா. பேசிக்கிட்டே தூங்கிட்டா.விடு.”, என்றார்
சாந்தி.

“சாப்பிடணும் எழுப்பிங்க. மருமக வீட்டுக்கு வந்தா, மாமியாருக்கு வேலை குறையணும். இங்க
இவளுக்கும் சேர்த்து நான் செய்யணும் போல”, என்று கழுத்தை நொடித்துக்கொண்டு அவர்
சமையலறை செல்ல,

சோமு, மெல்லிய குரலில், “இப்போவரை நீ தானேம்மா எல்லாம் செய்யற, இவ என்ன செஞ்சா
மருமகளா?”,என்று கேட்டு வைக்க,

கோமதி நாயகம் கொல்லென்று சிரித்துவிட்டார்.

கண் விழித்த ஆரூ, ஒன்றும் புரியாமல் முழிக்க,

“அதோ அந்த ரூம்ல ஹர்ஷா இருப்பான். போய் முகம் அலம்பி அவனையும் சாப்பிட கூட்டிட்டு
வா டா”,என்று அனுப்பினார் பாட்டி.

எழுந்து உள்ளே சென்றவள், அங்கே சிறுபிள்ளை போல கட்டிலில் குறுக்கே படுத்து கிடந்த
அவனை கன்னத்தில் கிள்ளி முத்தமிட்டவள், முகம் அலம்பி அவனையும் எழுப்ப, அவனோ
அவளின் தெளிந்த வதனத்தை நோக்கி மையலாக சிரிக்க,

“அடேய்.. இந்த ரொமான்ஸை சாப்பாட்டுக்கு அப்பறம் வச்சிக்கலாம் டா பசிக்கிது.”,என்றாள்
சிறுப்பிள்ளையாக,

அவளை அள்ளி அணைத்தவன், அவள் மேலே பேச முடியாதபடி அவளின் இதழை
முற்றுகையிட்டு தன் முதல் முத்திரையை பதிக்க, அவளோ கண்களை கடலளவு திறந்து
அதிர்ச்சியாக அவனை பார்த்தாலும், கொஞ்சம் கொஞ்சமாய் அவனிடம் கரைந்தே போனாள்.

அவளை மெல்ல விடுவித்தவன், “இப்போ போகலாம் டி ஐஸ்கிரீம்.  அப்பறம் நைட் தயாரா இரு.
இத்தனை வருஷம் காத்த காதலை மொத்தமா காட்டப்போறேன்.”, என்று அவளை நாணச் சுழலில்
தள்ளிவிட்டு அவன் வெளியேற,

வெட்கத்தில் வண்ண கனவுகளுடன் உணவு உண்ண கிளம்பினாள் ஆருஷி.

★★★★★

��அகலாதே ஆருயிரே��
��53��

ஹர்ஷா மாலை தன் அலுவலக வேலையில் மூழ்கி இருக்க, அவனின் தோளில் சுள்ளென்று அடி
ஒன்று விழவும் எரிச்சலாக நிமிர்ந்தவன் கண்கள் அடுத்த நொடி குளிர்ந்தது.

“சொல்லு டி ஐஸ்கிரீம்.. “,என்று குழைவாய் அவன் பேச,

“காலைல கல்யாணம் ஆச்சு, எவனாச்சும் சாயங்காலம் லாப்டாப்ல தலையை விட்டுடு
இருப்பானா டா. உன் சொந்தக்காரங்க எல்லாம் வர்றாங்க. எழுந்து ஹாலுக்கு வா”, என்று
உரிமையாக அவள் கோபிக்க,

“இப்போ தான் டி எனக்கு மனசுக்கு சந்தோசமா இருக்கு.” என்று சிரித்தான்.

“டேய்.. வேலை வேலைன்னு மண்ட குழம்பி போச்சா டா உனக்கு, திட்டிட்டு இருக்கேன்,
சந்தோசமா இருக்குன்னு சொல்ற. “

“நான் காலேஜ் போக ஆரம்பிச்சதுல இருந்து, என்கிட்ட பெருசா யாரும் உரிமை எடுத்து பேச
நான் விடல டி. முதல் வருஷம் நீயும் அபியும் பேசவே இல்ல. அப்பறம்  நீ வெறும் போன் தான்.
அபி மாசத்துக்கு ஒரு நாள் வருவான். என் வீட்டுக்கு நான் இப்போ தானே டி வந்திருக்கேன். இங்க
அம்மா, அப்பா, தாத்தா பாட்டி நல்லா பேசினாலும் ,நான் அவ்வளவா யாரையும் நெருங்கல,
நெருங்க விடவும் இல்ல. இப்போ என்னோட ரூம்ல, நீ என் பொண்டாட்டியா உரிமையா இப்படி
மிரட்டும் போது சந்தோசமா தானே டி இருக்கும்.”

அவன் குரலில் முதலில் இருந்த ஏக்கமும், பின்னால் நீ இருக்கிறாயே என்ற உரிமையும்
ஆருஷியின் மனம் வெகுவாக அவன் பால் சாய,

“போடா போடா லூசுப்பையா.. “,என்று அவன் தலையை கலைத்து விட்டு வெளியில் ஓடினாள்.

அவள் சிவந்த முகத்தை மறைக்க அவள் ஓடினாலும், அவளின் காதல் கள்வன் அதை
கண்கொண்டான் என்று அவள் அறியவில்லை.

மாலையில், திருமணத்திற்கு வர இயலாதவர்கள், பக்கத்தில் இருக்கும் நண்பர்கள் என்று சிலர்
வந்து செல்ல, இரவுணவை முடித்துவிட்டு ஹர்ஷா அறைக்கு சென்றான்.

அறையின் அலங்காரம் அவனுக்கு இன்று என்ன என்று உரைக்க, முகத்தில் புன்னகை
அரும்பியது. அவனின் இதயக்கூட்டின் அரசியை ஆவலாக எதிர்பார்த்து அவன் காத்திருக்க,
அவளோ ஆடி அசைந்து தாமதமாக வந்தாள்.

உள்ளே நுழைந்தவளை சுகந்த நறுமணம் தீண்ட, நாணம் அவளையும் அறியாமல்
தொற்றிக்கொண்டது. அன்னநடை பயின்று அவள் வர,அவனோ கடுப்போடு அமர்ந்திருந்தான்.

“ஏன் மெதுவா நாளைக்கு வர வேண்டியது தானே டி”, என்று அவன் குரல் கொடுக்க, பட்டென்று
நிமிர்ந்து பார்த்தவள் விழிகளில் அவன் அனுமதியின்றி அவனின் மனம் குப்புற விழுந்தது.

ஒரே எட்டில் அவளை அடைந்தவன், அவள் கையில் இருந்த பாலை வாங்கி மேஜையில் வைத்து
விட்டு, அவளை தூக்கி கொண்டு வந்து கட்டிலில் கிடத்த,

அவளோ சட்டென்று பயந்துபோனாள்.

“டேய்.. என்ன டா தூக்கிட்டு வந்துட்ட? எனக்கென்ன கால் இல்லையா?”,என்று பதட்டத்தை
மறைக்க அவள் கொஞ்சம் உரக்க பேச,

“ஷ்.. கத்தாதே டி. மானம் போய்டும். உனக்கு போய் ரொமாண்டிக்கா யோசிச்சு தூக்கிட்டு
வந்தேன் பாரு. என்னை சொல்லணும். நல்லா மிளகா பஜ்ஜி சைஸில இருக்கியே தவிர முட்ட
போண்டா வெயிட் டி நீ”, என்று அவனும் பதிலுக்கு வம்பு செய்ய,

பேச்சு பேச்சாக சற்று நேரம் போய் பின் கைகலப்பில் முடிந்தது.

“என்னை எப்படி டா நீ அப்படி சொல்லலாம்”, என்று அவன் மேல் ஏறி அமர்ந்து அவள் சண்டை
போட, அதுவரை அவளோடு வேண்டுமென்றே வம்பு வளர்ந்தவன், அவளின் அடாவடியான இந்த
செயலில் வாயடைத்து, பின்னர் மையலாக அவளை நோக்கி பார்வை வீச, அவளோ, “அடேய்
இந்த லுக்கெல்லாம் இங்க விடாத, பல்லை ஒடச்சிடுவேன். நான் வாலிபால் பிளேயர்
தெரியும்ல்ல.. “,என்று கெத்து காட்ட,

அவனோ, ஒரு நொடியில் அவளை அவன் கைசிறைக்குள் கொண்டு வந்தான்.

“இப்போ பேசுடி என் டொமெட்டோ.. “,என்று மீண்டும் வம்பு வளர்க்க, செல்ல சிணுங்கல்களோடு
மெல்ல மெல்ல அவர்களின் தாம்பத்தியம் அழகாய் அங்கே அரங்கேறியது.

அதிகாலைக்கும் சற்று முன் பொழுது, பிரண்டு படுக்க நினைத்த ஆருஷியின் உடல் அவள் சொல்
பேச்சு கேட்காமல் போக, கண்ணை திறக்க முடியாமல் திறந்தவள் அவளை இடையோடு
அணைத்து தூங்கிக்கொண்டு இருந்த ஹர்ஷாவை கண்டு, ‘இவன் எங்க இங்க?’ என்று புரியாமல்
விழித்தவள்,

அறையை ஒரு முறை கண்ட பின் தான் அது ஹர்ஷாவின் அறை என்பதும், அவளுக்கு திருமணம்
முடிந்தது என்று நினைவும் வர, தன் தலையில் தானே குட்டிக்கொண்டாள்.

அவளின் அசைவில் முகம் சுருங்கிய ஹர்ஷா,  அவள் கழுத்து வளைவில் முகம் புதைக்க,
பெண்ணவள்  நாணினாள்.

மறுநாள் விடியலில், தன் படுக்கையில் மனைவின் வாசம் பிடித்துக்கொண்டு எழுந்தவன், அவளை
தேட, அவளோ ஹாலில் பாட்டியுடன் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தாள்.

இவன் வெளியே வந்ததை பார்த்து அவள் முறுவலிக்க, “என்ன அவனை பார்த்து சிரிச்சிட்டு
இருக்க, போ அவனுக்கு டீ போட்டு குடு. அப்படியே அவன் குளிக்க ட்ரெஸ் எடுத்து வை “,என்று
அதிகாரமாக வந்து விழுந்தன லதாவின் வார்த்தைகள்.

தாய் அதிகாரம் செய்தாலே ஆருஷிக்கு பிடிக்காது, இதில் மாமியாரின் அதிகாரம் அவளை
நொடியில் சூடக்க, இடம் பொருள் பார்க்காமல்,

“ஏன் நேத்து வரைக்கும் உங்க பையனுக்கு ட்ரெஸ் நானா எடுத்து வச்சேன்?? இல்ல அவன் தான்
சின்ன பிள்ளையா? டீ போட்டு குடுக்க எனக்கு தெரியாதா? அவன் இன்னும் ப்ரெஷ் பண்ணவே
இல்ல.”,என்று லதாவை பார்த்து சொன்னவள்,

“ஏ, எழுந்து  அப்படியேவா வெளில வருவ? பேட் பாய்.. போ ப்ரெஷ் பண்ணு”, என்று அவனை
விரட்ட, முதல் நாளே வீட்டில் போர்க்களம் துவங்கியது.

“என் பையனை என் முன்னாடியே இவ்ளோ அலட்சியமா பேசுற? உனக்கு எவ்ளோ திமிரு.”,
என்று லதா கத்த,

“இவ்ளோ பெருசா வளர்ந்திருக்கான். எழுந்ததும் ப்ரெஷ் பண்ணனும்னு கூட நீங்க சொல்லித்தரல,
இதுல என்னை குறை சொல்றீங்களோ”, என்று ஆருஷி லதாவிடம் பாய்ந்தாள்.

சோமுவுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. அவர் தலையை பிடித்தபடி அமர்ந்திருக்க,
ஹர்ஷா ஜாலியாக, வாயில் ப்ரஹுடன் அவன் அறை வாயிலில் நின்று அவர்கள் சண்டையை
வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தான்.

சாந்தலட்சுமி எழுந்து வெளியே சென்று விட்டார். சோமு, மகன் அருகில் வந்தவர், “டேய் உன்
பொண்டாட்டியும் என் பொண்டாட்டியும் சண்டை போடுறாங்க டா. நீ என்னமோ டி20 மேட்ச்
பார்க்கிறது போல பாக்கற?”, என்று கேட்க,

“அப்பா அவங்க பாட்டு சண்டை போடட்டும், இல்லனா நம்ம கிட்ட சண்டைக்கு வருவாங்க.
எதுக்கு வம்பு. நமக்கு இனி நல்ல என்டர்டைன்மெண்ட் பா. “,என்று சொல்ல,

“ஆனாலும் ஆருஷிக்கு இவ்ளோ கோபம் வருமா டா?”

“இது கம்மி பா. அவ வாய்பேசுறத விட கை தான் அதிகம் பேசும்.அம்மா பாவம்.”, என்று
சொல்லிவிட்டு குளியலறைக்குள் நுழைந்தான்.

சோமு இப்போது ஸ்வாரஸ்யமா அவர்கள் சண்டையை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார்.

இனி தினமும் அவர்கள் வீட்டில் மேட்ச் தான்.

**

ரிது, போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழையும் போது, ஒரு காரை பறிமுதல் செய்துகொண்டு இருக்க,
அந்த காரின் டிரைவரோ போலீஸாரிடன் கெஞ்சிக்கொண்டு இருந்தார்.

“என்ன ஆச்சு?”, என்று கம்பீரமாக வந்து நின்ற ரிதுவை கண்டு மற்ற காவலர்கள் விறைப்பாக
சல்யூட் வைக்க,

டிரைவர், “மேடம், நான் அப்படி தப்பு பண்ற ஆள் இல்ல மேடம். கொஞ்சம் இவங்க கிட்ட
சொல்லுங்க”, என்று கெஞ்ச,

அவரை உற்று நோக்கி அடையாளம் கண்டவள், “என்ன கேஸ்?”, என்று தன் அருகில் இருந்த
துணை ஆய்வாளரிடன் கேட்டாள்.

“இவர் கார்ல வந்த ஒரு பொண்ணு அவங்க பேக் மிஸ் ஆய்டுச்சுன்னு இவருக்கு கூப்பிட்டு
இருக்காங்க. இவர் ஏதோ நியூசென்ஸா பேசினதா கம்பலைன்ட் மேம்.”,

“யார் கம்பலைன்ட் பண்ணினது?”, என்றதும், ஒரு பெரும்புள்ளியின் மகள் என்றார் அவர்.

“அவங்க சொன்னது நியூசென்ஸ் கேஸ் தானே, நீங்க இவர் காரை எதுக்கு ரெகவர் பண்றீங்க?”

“மேம் அவங்க மிஸ் ஆச்சுன்னு சொன்ன பேக்ல வைர நெக்லஸ் வச்சிருந்திருக்காங்க. அதோட
விலை மட்டும் முப்பது லட்சம் மேம். அதான்..”, என்று அவர் இழுத்ததும்.

“ஓ. மூணு லட்சம் காரை அவங்க கிட்ட குடுக்க போறீங்க?? பை வாட் மீன்ஸ்.. எனக்கு புரியல.”,
என்று குரல் உயர்த்தி அவள் கேட்டதும், எதிரில் இருந்தவர்களுக்கு சிறு நடுக்கம்
வந்தென்னாவோ உண்மை,

“இவரை பற்றி விசாரிச்சிங்களா? அவர் எப்படின்னு ஏதாவது ஐடியா இருக்கா? அவங்க
சொன்னா உடனே இவர் தான் அதை எடுத்து இருக்கணுமா? “, என்று அவள் சரமாரியாக கேட்க,
மற்றவர்கள் திக்க ஆரம்பித்தனர்.

ரிதுபர்ணா அந்த ஸ்டேஷனில் சார்ஜ் எடுத்த நாளே இவள் கை சுத்தம், அதோடு நிறையவே
நேர்மையானவள் என்பதை அங்குள்ள அனைவருமே உணர்ந்தனர்.

எந்த கேசையும் எளிதில் பதியாமல் விசாரித்து விட்டு தான் மேலே தொடர்ந்தாள். அவள் இல்லாத
நேரம் பதியப்படும் வழக்குகள் அன்று மாலைக்குள் அவள் கண் பார்வைக்கு சென்று, அதன்
முன்னேற்றம் என்ன என்பதை விளக்க அறிவுறுத்தி இருந்தாள். அவள் வந்தது முதலே,
இன்ஸ்பெக்டர் ரகு பணிக்கு வரவில்லை. அதனால் துணை ஆய்வாளர் ரஞ்சித் தான் அவளோடு

வேலை பார்த்து வந்தான். அவனுக்கு வயது இருபத்தி ஏழு இருக்கலாம். நல்ல உயரம்,
திடகாத்திரமான உடல். எஸ்.ஐ செலெக்ஷன்  மூலம் வந்தவன்.

ரகு சிபாரிசில் வேலைக்கு சேர்ந்து, அதே சிபாரிசில் பதவி உயர்வு பெற்றவன்.ரகுவின் கை நீளம்.
யார் கேஸ் கொடுத்தாலும் ஆதாயம் பார்க்க நினைக்கும் பேர்வழி, அவரிடம் மாட்டி ரஞ்சித் ஒரு
வருடமாக விழி பிதுங்கி இருக்க, இப்போது ரிதுவோ நேர்மாறான நேர்மையோடு வந்து நின்றதும்
மனதுக்கு இதமாக இருந்தாலும், ரகுவை நினைத்து ரஞ்சித் பயந்தே இருந்தான்.

“நான் சொல்லி இருக்கேன் மிஸ்டர் ரஞ்சித் கேஸ் எடுக்கறதுக்கு முன்னாடி நல்லா விசாரிங்கன்னு
அப்பறம் நீங்க எப்படி இப்படி பிஹேவ் பண்ணலாம்.”,என்று அவள் குரலில் கடுமை காட்ட,

“மேம்.. அது.. ரகு சார் வந்துட்டார் மேம். அவர் எடுத்த கேஸ் இது.”, என்று திக்கித்திணறி அவன்
சொல்ல,

“ஓஹ்.. “,என்று திரும்பிய ரிது, அந்த ஓட்டுனரை பார்த்து, “என்னோட வாங்க. “,என்று
அழைத்துவிட்டு,

“இன்ஸ்பெக்டரை என்னை வந்து பார்க்க சொல்லுங்க”,என்று கடினக் குரலில் கூறிவிட்டு அவள்
அறைக்குள் செல்ல,

ரஞ்சித் தயங்கியபடி, ரகுவிடம் சென்று சொன்னான்.

‘பொம்பள தான.. என்ன ஓவரா பண்ணுறா?’ என்று இளப்பமான பார்வையோடு அவள்
அறைக்குள் நுழைந்து, “கூப்பிடிங்களா?”, என்றான்.

அங்கே அந்த டிரைவர் அவள் முன்னால் இருந்த நாற்காலில் அமர்ந்திருக்க, “ஏய்.. எழுந்திரு டா.
திருட்டு பயலே..”, என்று அவரைப் பார்த்து குரலை உயர்த்த,

“ஷட் அப்.. “,என்ற ரிதுவின்  கர்ஜனை குரலில் சற்றே பின்வாங்கினான் ரகு.

“என்ன?? ரூம்குள்ள வர்றப்போ எக்ஸ்கியூஸ் கேக்கணும்ன்னு பேசிக் சென்ஸ் கூட இல்லையா?
உங்க சுபீரியர் ஆபிசர்க்கு முன்னாடி கேப் போட்டு சல்யூட் பண்ணனும்ன்னு தெரியாதா? ஒரு
விஷ் பண்ண கூட இல்ல. என் முன்னாடியே நான் உட்கார வச்சவரை எழுந்துக்க சொல்ல
உங்களுக்கு எவ்ளோ தைரியம்?? வாட் டு யூ திங்க் ஆஃப் யுவர் செல்ஃப்?”, என்று ரிது குரல்
உயர்த்த,

முதல்முறை ஒரு பெண் அதிகாரி அதுவும் இவ்வளவு சின்ன வயதில் அவள் அடைந்திருக்கும்
உயரம் கண்டு கொஞ்சம் உள்ளே என்னவோ செய்தது அவனுக்கு.

“என்ன இந்த ஏ.சி. பொம்பளை தானே, ஏசில உக்காந்து பைலை சைன் பண்ணிட்டு போய்டுவா
நம்ம இஷ்டத்துக்கு இருக்கலாம்ன்னு நினைச்சீங்களா?? யாரை கேட்டு இவர் காரை சீஸ் பண்ண
சொன்னிங்க?? ஐ வான்ட் ஆன் எக்ஸ்பிளனேஷன்”, என்றதும்,

அவனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. என்ன சொல்லுவான். அந்த பெண்
அவனுக்கு பணம் தந்து எப்படியாவது அந்த பையை மீட்டு தர கேட்டதை சொல்ல முடியுமா?

அவன் முழிக்க, ரிது டிரைவரை நோக்கி, “உங்களை பற்றி எனக்கு தெரியும். ஆனா சில கேள்விக்கு
பதில் சொல்லுங்க. அந்த பொண்ணு ஏறும்போது பை எடுத்துட்டு வந்துச்சா?”

“ஆமாம் மா. கொண்டு வந்தாங்க. ஆனா இறங்கும்போது எடுத்துட்டு போய்ட்டாங்க. எனக்கு
நல்லா தெரியும்.”

“எப்படி இவ்ளோ உறுதியா சொல்றீங்க.” என்றாள் நிதானமாக.

“அம்மா ஒவ்வொரு ட்ரிப் முடிஞ்சதும், ட்ரிப் சீட் எழுதிட்டு, காரை க்ளீன் பண்ணிட்டு தான் அடுத்த
ட்ரிப் எடுப்பேன் மா. நான் பார்க்கும்போது உள்ள ஒன்னுமே இல்ல ம்மா.”, என்று அவர் சொல்ல,

அவர் அந்த பெண்ணை இறக்கி விட்ட இடம் விசாரித்து, அதன் அருகில் ஏதாவது சி.சி.டி.வி பதிவு
கிடைத்தால், நேரம் குறித்து கொண்டு வாங்கி வர ரஞ்சித்தைப் பணித்தாள்.

அடுத்த அரைமணி நேரத்தில் ரஞ்சித் தந்த தகவலின் பேரில், அந்த பெண் கையில் பையுடன்
காரை விட்டு இறங்கி செல்லும் புட்டேஜுடன், மூன்று மணி நேரத்துக்கு பின், வெறும் கையோடு
திரும்பிவரும் புட்டேஜும் சமர்பித்தான்.

“குட் ஜாப் மிஸ்டர் ரஞ்சித்”, என்று பாராட்டி, அந்த பெண்ணை அழைத்து, அவள் தவற விட்ட
இடத்தை சொல்லி, துணைக்கு ஒரு கான்ஸ்டபிளை அனுப்பினாள் ரிது.

“தேடிக் கிடைக்கலன்னா. எல்லா சி.சி.டி.வி புட்டேஜ் வாங்கிட்டு வாங்க அண்ணா. நாம கண்டு
பிடிக்கலாம்.” என்று அவரிடம் அவள் சொல்ல,

அவளின் அண்ணா என்ற விளிப்பில் ரகுவின் முகம் விளக்கெண்ணெய் குடித்தது போல ஆனது.
அவன் ஒருநாளும் அவர்களை மதித்து பெயர் சொல்லி கூட கூப்பிட மாட்டான். எண் சொல்லி
தான் அழைப்பான். இவளோ அவர்களிடம் பழகும் விதம் பார்த்து அவன் கடுப்பானான்.

டிரைவரை பார்த்தவள், “நான் அன்னைக்கே உங்களை என்னை வந்து பாருங்கன்னு சொன்னேன்
நினைவு இல்லையா?”, என்றதும்,

“மன்னிச்சிடுங்க மா. மறந்து போச்சு.”,என்றார் அவர்.

“மிஸ்டர் ரஞ்சித், நாளைக்கு இந்த ஏரியா கால் டாக்சி டிரைவர் எல்லாரையும் அசம்பிள்
பண்ணுங்க. நான் இவரை அவங்களுக்கு அறிமுகம் பண்ணனும்.”, என்று சொல்ல, அனைவரும்
விழித்தனர் டிரைவர் உட்பட,

“நீங்க பெண்கள் ஏறினதும் சொல்லுற விஷயங்கள், காவலன் ஆப். அப்படியே உங்களை
உதாரணமா காட்டினா அவங்களில் கொஞ்சம் பேர் விழிப்புணர்வு அடைவாங்க இல்லையா.
அதுக்கு தான் .”,என்றாள் ரிது.

அவர் முகம் நிறைந்த புன்னகையுடன், “ரொம்ப நன்றி மா”, என்றார்.

அவர் சென்றதும், ரிது தன் மாமாவுக்கு போன் செய்து சில விபரங்கள் வாங்கியவள், சாப்பிட கூட
மறந்து வேலையில் மூழ்கினாள்.

திருமண நாள் நெருங்க, அபியோ, சென்னைக்கும் டெல்லிக்கும் விமானத்தில் பறந்தபடி
இருந்தான். அவன் எதிர்பார்த்த உறுதியான ஆதாரம் ஒன்றும் சிக்காமல் இருக்க, அவன் மனம்
திருமண ஏற்பாட்டில் செல்லவே இல்லை.

திருமண புடவை எடுக்கும் நாளில், அபி டெல்லி சென்று விட, ரிது ஒரு அழகான சல்வாரில் வந்து
அவளுக்காக புடவையை தேர்ந்தெடுத்தாள்.

ரேகா அவளை கண்டு கொஞ்சம் எரிச்சல் அடைந்தாள் என்று தான் சொல்ல வேண்டும். சங்கரி
எதிலும் பட்டுக்கொள்ளாமல் இருக்க, ரிதுவோ, “அத்தை இது நல்லா இருக்கா, இது எடுக்கவா
?”,என்று ஒவ்வொன்றிற்கும் அவரிடம் வந்து நின்றாள். அவள் குணம் சங்கரிக்கு பிடித்தாலும், தன்
மகன் மனம் தேடும் பெண் இல்லையே என்று தவித்துப்போனார் அந்த பேதை தாய்.

அபிக்கு கடைசி வாய்தா கொடுத்த டெல்லி நீதிமன்றம், அடுத்த விசாரணையை ஒரு மாதம் ஒத்தி
வைத்தது. அந்த ஒரு மாதத்தில் எப்படியேனும் அவனுக்கான ஆதாரத்தை கண்டுபிடிக்க வேண்டும்
என்று அபி மனதில் சபதமே செய்ய, அவனின் சபதத்தை நிறைவேற்றவே அவனின் மனையாளாக
வர காத்திருந்தாள் ரிதுபர்ணா.

விடிந்தால் முகூர்த்தம் என்ற நிலையில் பெண் அழைத்து வந்த போதும் அபி அமைதியாக
அமர்ந்திருந்தான். அவனை கண்டு ஹர்ஷா தான் உள்ளே துடித்தான்.

சொல்லிடலாமா என்று அவன் ஒருகணம் நினைக்க, ரிதுவின் அறிவுக்கூர்மையை
அறிந்திருந்ததால், இன்னும் ஒரே நாள் தானே என்று தன்னை சமாதானம் செய்துகொண்டவன்
விழிகள் தன் ஐஸ்க்ரீமை தேட, அவளோ ரிதுவின் அருகில் சிரித்துக்கொண்டு நின்றாள்.

★★★★★

��அகலாதே ஆருயிரே��
��54��

முதல் நாள் சடங்குகளில் முடிந்தவரை அபியின் கண்ணில் படாமல் ரிஷி அலைய, ஆருஷியின்
வருகையும் அவனுக்கு சந்தேகம் அளிக்கவில்லை. தன் நண்பன் மனைவி, தன் திருமணம் ,ஆருஷி
வருவது இயல்பு என்றே எண்ணினான்.

முதல் நாள் வரவேற்பு வேண்டாம் என்று பெண்வீட்டில் சொல்லி விட்டதால் நிச்சயம் செய்தால்
போதும் என்று மணமகனை மனையில் அமர்த்தி இருக்க, பெண்ணை அழைத்து வர பணித்தனர்
பெரியவர்கள்.

ரிது அழகிய பொற்சிலையாக நடந்து வந்து எதிர் மனையில் அமர, அபி நிமிர்ந்தும் பார்த்தான்
இல்லை.

ஹர்ஷா பலவாறாக அவனை பார்க்கச் சொல்லி வற்புறுத்தியும், மனதின் விரக்தி காரணமாக அபி
தலையை உயர்த்தவே இல்லை.

நிச்சயம் நடைபெற, இருவருக்கும் உடை வழங்கி மாற்றி வர சொன்னார்கள் பெரியவர்கள்.

அபி எழுந்து உள்ளே செல்ல,அவன் வாடிய முகத்தை பார்க்க பொறுக்காத சங்கரி அவன்
பின்னொடு சென்றாள்.

அறைக்குள் நுழைந்த அபினவ், கட்டிலில் துணியை வைத்து விட்டு ஜன்னலை
வெறித்துக்கொண்டு இருக்க ஹர்ஷாவுக்கு கோபம் எல்லை மீறியது,

“ஏன்டா அந்த பொண்ணை பாருன்னு சொல்றேன் பார்க்காம இருந்தா என்ன அர்த்தம்?”

“நாளைக்கு பார்க்கலாம்னு அர்த்தம் பங்கு.”, என்று சொன்ன அபியை வெட்டவா குத்தவா என்று
முறைத்தவனை தோளில் தட்டி அடக்கிய சுரேஷ்,

“அபி, உனக்கு இந்த கல்யாணம் பிடிக்கலன்னா உங்க அப்பா கிட்ட பேசி நிறுத்தி
இருக்கலாம்ல..”

அவன் பதில் கூறும் முன்னரே, “நல்லா சொல்லு சுரேஷ். நான் அவ்ளோ கேட்டேன். நீ காதலிச்ச
பொண்ணு எங்க டா? நான் போய் பேசுறேன்னு , அப்பயும் வாயைத்திறக்கவே இல்ல இவன்.
எப்படியாவது இந்த கல்யாணத்தை நிறுத்துறேன்னு கெஞ்சிட்டேன். அதுக்கும் வாய திறக்க
மாட்டேன்கிறான்.”, என்று கண்ணீர் விட்டார் சங்கரி.

“டேய்.. நீ ஆசைப்பட்டது அந்த பொண்ணு ஒன்னு தானே..  நான் வேணா நெஞ்சு வலின்னு
இப்போ இதெல்லாம் நிறுத்தவா?”, என்று தாயன்பில் அறிவில்லாமல் சங்கரி பேச,

“அம்மா எனக்கு நிஜமாவே இந்த கல்யாணத்தை நிறுத்தத் தோணால. அதான் உண்மை. என்
மனசு என்கிட்ட என்னவோ சொல்லுது.என்னனு என்னால புரிஞ்சுக்க முடியல.”

“இது என்ன அபி பைத்தியகாரத்தனம்?”,என்று சங்கரி எரிந்து விழ,

“அம்மா நான் அபர்ணாவை விரும்பினதே அப்படி என் மனசு சொல்லி தான். அப்போ என் மனசு
பேச்சை தான் நான் கேட்டேன். இப்பயும் என் மனசு பேச்சை தான் நான் கேட்கிறேன். நல்லதா
நடக்கும்.”, என்று தாயை அணைத்து சமாதானம் செய்தவன்,

“நீங்க போங்க, நான் ட்ரெஸ் மாத்திக்கிட்டு வர்றேன்.”என்றதும்,

“அப்போ கொஞ்சம் சிரி டா”, என்று சுரேஷ் சொல்ல,

“சரி அண்ணா.”, என்றான்.

சங்கரி நேராக ரிது அறைக்கு செல்ல, அங்கே ஆருஷி ரிதுவை தயார் செய்து கொண்டு இருந்தாள்.
மெல்ல ஆருஷியை வெளியே அழைத்து வந்து,

“ம்மா.. யாரும்மா உன் பிரெண்ட்? அபியோட அபர்ணா?”,என்று கண்ணீரோடு கேட்க,

“உங்களுக்கு தெரியுமா?”, என்று அதிர்ச்சியானாள் ஆருஷி.

“அது இப்போ முக்கியமா? சொல்லு டா”,, என்று கெஞ்சிய அவரிடம் என்ன சொல்வது என்று
புரியாமல் அவள் விழிக்க, “பொண்ணை கூட்டிட்டு வாங்க”, என்ற அழைப்பு வர,

“அப்பறம் பேசலாம் ஆன்ட்டி. ப்ளீஸ். நல்லதே நடக்கும்.”,வேகமாக அவரிடம் சொல்லி விட்டு
ரிதுவிடன் விரைந்தாள்.

ரிது யோசனையாக அமர்ந்திருந்தவள், “அத்தை கிட்ட இவர் சொல்லி இருப்பார்ன்னு
எதிர்பார்க்கலை டி.”, என்றாள் ஆழ்ந்த குரலில்,

“விடு டி, நீ ஏதோ காரணமா தான் பார்க்காம இருந்தன்னு எனக்கு தெரியும். நாளைக்கு தெரிஞ்சிட
போகுது. அப்பறம் என்ன??”

“இப்போவே தெரியப் போகுது.”,என்றாள் ரிது.

“ஏ..ஏன்டி.. நீ ஏதோ..”

“நான் ஏன் அவரை பார்க்க விடலை தெரியுமா?? என்னை முதல் பார்வை பார்க்கும்போதே அவர்
அவரோட அபர்ணாவா பார்க்கணும். அதே போல நான் தான் கல்யாண பொண்ணுனு அவருக்கு
ஒரு சந்தோசம் வரணும். அதுக்கு தான். என்னை யாரோ ஒரு ரிதுவா பார்த்துட்டு, அப்பறம் நான்
தான் அபர்ணான்னு தெரிஞ்சா என்ன இருக்கு அதுல..”

“ஓஹ்.. இதுக்கா டி. இவ்ளோ நாளா அவன் மனசை பதற விட்ட..”

“இருக்காது. அவர் பதறி இருக்க மாட்டார். எனக்கு நம்பிக்கை இருக்கு.”, என்றவள், ரிஷியை
அழைத்து பேசினாள்.

மனையில் அமர்த்தி வைக்கப்பட்ட அபிக்கு, பெரியவர்கள் ஆசி வழங்க, நாராயணன்,
“மாப்பிள்ளைக்கு முறை செய்யணும்”, என்றதும் அபி நிமிர்ந்து அவரைக் கண்டான். அவன்
கண்களில் அவரை எங்கோ பார்த்த
உணர்வு வர, அவர் அவனிடம் சிநேகமாக புன்னகைத்தபடி, ஒரு நகைப்பெட்டியை ஒரு கையில்
திணிக்க, அது யார் என்று பார்த்தவன் கண்கள் விரிந்தது.

ரிஷி அவனுக்கு சிரித்த முகமாய் கையில் மோதிரம் போட, அவன் கண்கள் விரிந்து, அவனை
கேள்வியாய் பார்க்க,

“வாழ்த்துக்கள் மாமா. எப்பவும் என் அக்கா கூட நீங்க சந்தோசமா இருக்கணும்.”, என்று அவனை
நெருங்க, அபியோ எழுந்தவன், அவனை தூக்கிச் சுற்றினான்..

“டேய்.. வாலே.  நீயா டா என் மச்சான்?”, என்று மனையிலேயே அவன் கன்னத்தில் மாறி மாறி
முத்தமிட,

கல்யாண வீடே அவனை விசித்திரமாக பார்த்தது, ஆனால் அவனுக்கு அதை பற்றிய சிந்தனையே
இல்லை.

“டேய்.. அப்போ என் அபர்ணா.. என் அபர்ணா..”, என்று அவன் திணறும் போதே..

“பொண்ணு வந்தாச்சு. மாப்பிள்ளை சார் உட்கார எண்ணம் இருக்கா இல்லையா?”, என்று ஒரு
பெரியவர் கேட்க,

சசி தன் மகள் இதற்கு தான் ரிஷியை அறிமுகம் செய்ய வேண்டாம் என்றாளா என்பது போல
பார்க்க,ஆமோதிப்பாய் தலை அசைத்தார் நாராயணன்.

ரிஷியை கீழே இறக்கிய அபி, ரிது வரும் திசை பார்க்க, அங்கே கண்களில் காதலை தேக்கி
வைத்தபடி நடந்து வந்தாள் ரிதுபர்ணா.

பாதம் தரையில் பாவியது தெரியாமல் அன்னம் போல அவள் நடந்து வர, அபியின் கண்களில்
கரைகாணாக் காதல்.

‘என் அபர்ணா’ என்று மனம் கும்மாளம் போட, காற்றில் மிதப்பவன் போல நடந்து அவள் அருகில் 
வர, கண்ணோடு கண் நோக்கி இருவரும் நின்றனர்.

அபியை கை பிடித்து இழுக்க வந்த ரேகாவை சங்கரி பாய்ந்து பிடித்தார். அவருக்கு இப்போது
தான் போன உயிர் திரும்பிய நிம்மதி. மகன் முகத்தில் தெரியும் காதலின் ஆழம். அது, அவன்
அபர்ணா அவள்தான் என்பதை அவருக்கு சொல்லாமல் சொல்ல, கண்ணீரை தடுக்க முடியாமல்
மகிழ்ச்சியோடு சிரித்தார் அந்த அன்புத்தாய்.

மற்றவர் யாரும் அவர்களை கூப்பிடாதபடி, ஹர்ஷாவும் ஆருஷியும் அனைவரையும் நோக்கி,
வாயில் விரல் வைத்து காட்ட, நடப்பதை வேடிக்கை மட்டுமே பார்த்தது திருமணக் கூட்டம்.

கண்களில் தேங்கிய கண்ணீரோடு அவன் ரிதுவை தலை முதல் கால் வரை பார்த்து, “ஆறு வருஷம்
ஆச்சா மா உன்னை எனக்கு காட்ட?”, என்று கேட்க,

அவளோ மெல்லிய புன்னகையோடு, “இதோ இப்போ தெரியுதே உங்க கண்ணில் ஒரு காதல்
இதை அப்பவே பார்த்திருக்க முடியுமா? இல்ல என் கண்ணில நீங்க இப்போ பார்க்கிற உணர்வு
அன்னைக்கு இருந்திருக்குமா?”, என்றாள்.

“இல்ல டா. எப்பயும் என் அபர்ணா கிரேட். என்ன செஞ்சாலும் காரணம் இருக்கும்.”, என்றவன்,
“ஷால் ஐ?”,என்று இரு கைகளை விரித்து கேட்க,..அவளோ வெட்கத்தால் செம்மையுற்ற
கன்னங்களோடு அவன் மார்பில் தஞ்சமானாள்.

அவளை சுற்றி கைகளால் வேலியிட்டவன், இத்தனை வருட தவத்தின் பலனை அடைந்தவன்
போல இமை மூடி அத்தருணத்தை மனதில் பதிந்து கொண்டான்.

சற்று நேரம் கழித்து, ரிதுவின் தோளில் தலை சாய்த்த ஆரூ, “எல்லாம் சரி தான். இப்போ நிச்சயம்
பண்ணனுமே. ரெண்டுபேரும் இப்படியே நிக்க போறீங்களா?”,என்று கேட்டு அவளும் கண்ணை
மூடிக்கொள்ள, அபியின் முதுகில் சாய்ந்த ஹர்ஷா, “பெரியவங்களை தட்டு மாதிக்க சொல்லு டி
ஐஸ்கிரீம். என் பங்கு இப்போதைக்கு உன் செல்லத்தை விட மாட்டான்.”,என்று ராகம் பாட,

ராகவேந்தர், ‘இதற்கு தான் தன் மருமகள் தன்னை பற்றி ஒன்றும் கூற வேண்டாம், புகைப்படம்
காட்ட வேண்டாம் என்றாளா? மகன் விரும்பிய பெண் என் மருமகளா? அது தெரியாமல், மகன்
திருமணத்துக்கு சம்மதித்தானா? அதுவும் தனக்காக’, என்று நினைத்தவர் மகனை நினைத்து
உருகிப்போனார். அவனுக்கு தான் ஒன்றுனே செய்யவில்லையே என்று நினைத்து கரைந்த
அவரை, விக்னேஷும் மகேஷும் ஆளுக்கு ஒரு புறம் வந்து, “அவன் மனசுக்கு பிடிச்ச பொண்ணை
தேர்ந்தெடுத்து குடுத்திருக்கீங்க மாமா. மனசை போட்டு வருத்தாம இருங்க.”, என்று அவர்
உடல்நலனில் அக்கறை கொண்டு சொல்ல, மெல்ல புன்னகையை சிந்தி நடப்புக்கு வந்தார்
ராகவேந்தர்.

சசியும், நாராயணனும், மகள் மனம் கவர்ந்த ஒருவன் தான் அவளுக்கு தாங்கள் தேர்ந்தெடுத்த
மாப்பிள்ளை என்று உள்ளம் பூரித்து போனார்கள் .

“போதும் போதும்.. அபி வா வந்து உட்காரு”,. என்று சங்கரி சத்தமாக அழைக்க, கனவுலகில்
சஞ்சரித்துக்கொண்டு இருந்த இருவரும், உலகம் திரும்பி திருதிருவென்று விழிக்க, ஆருஷியும்
ஹர்ஷாவும் அவர்கள் நட்புகளை அணைத்துக்கொண்டனர்.

அபி தன் கைவிரல்களால் பின் தலையை அழுத்தமாக கோதி தன் வெட்கத்தை மறைக்க, ரிது,
மெல்லிய நாணச் சிரிப்போடு நின்றாள்.அவள் கரம் பற்றி அவனோடு இணைத்து கொண்டு
மனையில் அமர, பெரியோர்களால், இருவரின் திருமண நிச்சயதார்த்தம் இனிதே நடந்து முடிந்தது.

அபி ஆசி வாங்கும்போது கூட ரிதுவின் கையை விடவே இல்லை. பற்றிய கை பற்றியபடி இருக்க,
அதை அவ்வப்போது பெருமை பொங்க பார்த்தாள் ரிது.

இரவு உணவின் போது, அனைவருமே அவர்கள் இருவருக்கும் தனிமை கொடுக்க
நினைக்க,அவர்களோ, தாய் தந்தை, நண்பர்கள் என அனைவரையும் தங்கள் அருகில்
இருத்திக்கொண்டனர்.

அப்போது உள்ளே வந்த நிதீஷ், அபியை வாழ்த்தி, தாமதத்துக்கு மன்னிப்பு வேண்ட, “நீங்க என்ன
பண்றீங்க அண்ணா இங்க?”, என்றாள் ஆரூ.

அவளை அடையாளம் தெரியாமல் விழித்தவன், அருகில் முகத்தில் அழகிய புன்னகையோடு
நின்ற ரிதுவை அடையாளம் கண்டு, “ஏ.. ரிது.. நீயா.. இது ஆருவா? அடையாளமே தெரியலை..”,
என்று ஆச்சர்யம் கொள்ள..

இதெல்லாம் என்ன டிசைன்?? என்னை “தெரியலையாம், ரிதுவை மட்டும் தெரியுமாம்”, என்று
அவன் தலையில் உரிமையாக ஆரூ குட்ட,

“இப்போ தெரியுது மா.. நீ தான் ஆரூ.. கன்பார்ம்.”,என்று சிரித்தான் நிதீஷ்.

இயல்பாய் பேசி சிரித்து அனைவரும் உறங்கச்செல்லும் நேரம்,

“டாலு.. “,என்று வந்து ரிது முன்னால் நின்றான் அபி.

“என்ன?”, என்று ரிது புருவம் உயர்த்தி கேட்க,
“இன்னிக்கு ஒரு நாள் லவ் பண்ணலாமா.. ப்ளீஸ்?”, என்று கெஞ்சலாக கேட்டவனை பார்த்து
நகைத்துவிட்டாள் நங்கை.

“வாழ்க்கை முழுக்க காதலிக்க நினைச்சேன்.. ஒரு நாள் போதுமா?”, என்று கேட்டாள் ரிது.

“இது க.மு.கா.. நாளையிலிருந்து க.பி.கா சரியா. நான் ஒரு ராத்திரியாவது க.மு.காவை
அனுபவிக்கிறேனே.. ப்ளீஸ்.”,என்று மீண்டும் கொஞ்ச,

“அது என்ன க.மு.கா, க.பி.கா அதை சொல்லுங்க. நான் கண்டிப்பா நீங்க கேட்டதைச்
செய்யறேன்.”

“அடி சக்கை.. மாட்டினியா?”, என்று குதித்த அபி, “க.மு.கா ன்னா கல்யாணத்துக்கு முன் காதல் 
க.பி.கா னா கல்யாணத்துக்கு பின் காதல் . இப்போ என்னோட மொட்டை மாடிக்கு வா. நாம
கொஞ்ச நேரம் டூயட் பாடிட்டு வரலாம்.”, என்று உற்சாகமாக அழைக்க,

“நாங்களும் ஜாயின் பண்ணிக்கலாமா?”, என்று ஹர்ஷாவும் ஆருஷியும் வர,

“அடேய்.. நான் இன்னிக்கு தான் டா என் அபர்ணாவை பார்த்தேன். ஒரே ஒரு நாள் லவ் பண்ண
விடுங்க டா.”,என்று அபி போலியாய் கண்ணீர் சிந்த, அங்கே கலகலப்புக்கு ஏது பஞ்சம்.

இறுதியாக, ரிதுவிடன் நம்பர் மட்டும்  வாங்கிக்கொண்டு அறைக்கு சென்றான் அபி.

அங்கே கொதிநிலையில் இருந்த ரேகாவை அவன் புரியாது பார்க்க,

சங்கரி உதடு பிதுக்கி தெரியாது என்றார் மகனிடம். அபி அவளை சட்டை செய்யாமல், கட்டிலில்
அமர்ந்து ரிதுவுக்கு “ஹாய்..”, என்று மெசேஜ் அனுப்ப,

“ஏன் அபி உனக்கு அவளை முன்னாடியே தெரியுமா? காதலா?”, என்று ரேகா பொறிய,

அவனோ, “இன்னிக்கு தான் அவளை முதல் முதல்ல பாக்கறேன். ஆமா உனக்கென்ன என்னை
பற்றி கவலை?”, என்று கொஞ்சம் ஏளனமாக கூறியவன், விக்னேஷை நோக்கி,

“மாமா முதல்லயே சொன்னது தான். என் விஷயத்துல தலையிடாத வரை சிலருக்கும் நல்லது.”
என்று சொன்னவன், அறையை விட்டு வெளியேற,

“ஆமாமாம்.. இவன் இன்னிக்கு தான் பாக்கறான்னு சொன்னா நம்ப நாம என்ன முட்டாளா?
சபையில் அத்தனை பேர் முன்னாடி கட்டி பிடிச்சிட்டு நிக்கிறா. அவள் எல்லாம் என்ன
பொண்ணு?”,என்று பேச, ராகவேந்தர் கோபமாக எழுவதை பார்த்த சங்கரி,

“ரேகா வாயை மூடு, ரிது நம்ம வீட்டு பொண்ணு. இனி அவளை அப்படி பேசாதே. நல்லா இல்ல.”,
என்று சொல்லிவிட்டு நகர, அவரை  நன்றியோடு பார்த்தார் ராகவேந்தர்.

இரவில் என்ன பேசுவது என்றே இல்லாமல், பல ஸ்வீட் நத்திங்ஸ் பேசி, நெடு நேரம் கழித்தே
மணமக்கள் இருவரும் உறங்கச் சென்றனர்.

காலையில் இருவரும் தயாராக, “கிளம்பிட்டியா டாலு..”, என்று அபியிடமிருந்து வந்த
குறுந்தகவலில் ரிது முகம் சிவக்க,

‘டேய்.. இதெல்லாம் உங்களுக்கே ஓவரா இல்லையா டா?”, என்று ரிதுவிடம் ஆருவும், அபியிடம்
ஹர்ஷாவும் கேட்க, இருவருமே சிரிப்பை மட்டுமே பரிசாக வழங்கினர்.

சுபயோக சுபவேளையில் தன் அருகில் இருந்த ரிதுவை கண்களால் காதல் கொண்டு பருகியபடி,
மங்கல நாணை பூட்டி அவளை தன் சரிபாதியாக மாற்றிக்கொண்டு அபி அவளை உரிமையாய்
கரம் பற்றினான்.

ரிது, தனக்காய் இத்தனை ஆண்டுகள் காத்திருந்து, தான் என்றே தெரியாமல் திருமணத்துக்கு
ஒப்புதல் அளித்து, தான் தான் அவன் அபர்ணா என்றதும் அவன் உருகி உரைத்த காதலில்
உண்மையில் உள்ளே மூழ்கித் தான் போனாள். அவனுக்காக அவள் செய்திருக்கும் வேலைகள்
பின்னால் தெரியும் போது, அவனும் தன் காதலை பரிபூரணமாக உணர்வான் என்ற
நம்பிக்கையில் அவன் கரத்தினுள் சிறையிருந்த தன் கரத்தால் மெல்லிய அழுத்தத்தை தர,

அந்த சிறு அழுத்தம் அவனுக்கு மலையளவு காதலை உரைத்ததை அவள் அறியாள்.

ஆருஷி, தன் செல்லமாய், தன் வழிகாட்டியாய், உயிர் தோழியாய், ஆசானாய் இருந்த தன் ரிது, 
தனக்கு நண்பனாய், தகப்பனாய் இருந்த அபியை மணந்ததில் அவளுக்கு சொல்ல முடியாத
ஆனந்தம்.

ஹர்ஷா அபியை, அவன் வலிகளை, அவன் கடின உழைப்பை, அவனின் மன தைரியத்தை
அருகில் இருந்து பார்த்தவன் என்பதால், ரிதுவின் குணநலன் அவனுக்கு அழகாய் ஒத்துப்போகும்;
இனி தன் நண்பனை எவ்வித கவலையும் அண்டாமல் ரிது பார்த்துக்கொள்வாள் என்ற
நம்பிக்கையுடன் அபியை தோளில் கைபோட்டு நட்பினை பறை சாற்றினான்.

சசி, தன் மகள், மனதில் காதலை சுமக்காமல், தங்களுக்காய் காத்து நின்றதால் தான், அவள்
விரும்பிய அபியையே கடவுள் அவளிடம் வரமாய் அளித்திருக்கிறார் என்று பெருமையாய் மகளை
நோக்க,

நாராயணன், தன் மகள் அவள் ஆசைப்பட்ட லட்சியத்தில் மட்டும் அல்ல, வாழ்க்கையிலும்
ஜெய்த்துவிட்டாள் என்று நெஞ்சம் நிறைய, தந்தையாய் மகளை பிரியும் வலியை தன்னுள்ளே
மறைத்துக்கொண்டார்.

ரிஷி தன் வழிகாட்டியான, பாசமான அக்கா, அவளை உயிராய் நேசிக்கும் தன் அருமை நட்பு
ஜே.பி.யுடன் வாழ்வில் இணைந்ததில் பேரானந்தத்தில் இருந்தான்.

சங்கரியின் உணர்வுகளை வார்த்தைகளால் வடிக்க முடியாது. தனக்காக மட்டுமே பார்த்து பார்த்து
பொறுப்போடு நடந்த மகன், அவன் ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைக்காதா என்று இரண்டு
வாரமாய் பரிதவித்துக் கிடைந்தவர், இன்று மகனின் முகத்தில் இருந்த புன்னகையும், ஜொலிப்பும்
மனநிறைவையும் தாண்டி அவரை உண்மையில் இன்பக்கடலில் தள்ளியது.

நித்திலனுக்கு, அகவழகியும் தன் கண் முன்னால் வளர்ந்து வந்த அபியின் திருமணத்தை தன்
மகனோடு கண்டு களித்தனர்.

வேதாசலம் வந்து தம்பதிகளை வாழ்த்திவிட்டு சென்றார். ரிதுவுடன் பணிபுரிவோர் அனைவரும்
சாதாரண உடையில் வந்தாலும்,அவர்கள் முகமே அவர்களை காவலர்கள் என்று

காட்டிக்கொடுத்தது. அபி அதை கவனித்தாலும், அவன் இருக்கும் இன்றைய மனநிலையில்
அதெல்லாம் பெரிதாக தெரியவில்லை அவனுக்கு.

இந்த திருமணத்தை அனைவரும் அவரவர் மனநிலையில் ரசித்துக்கொண்டு இருக்க, தான்
ஆசைப்பட்டு மருமகளாக கொண்டு வர நினைத்த ரிது, போயும் போயும் தன்னை மகன் எதிர்க்க
காரணமான அபினவை தானா மணக்க வேண்டும் என்று சற்றே எரிச்சலில் இருந்தாள் லதா.

தன் பேரன் பேத்தி திருமணத்தை எட்டி நின்று ரசித்துக்கொண்டு இருந்தனர் ரங்கசாமியும்
கனகமும்.

அவர்களை ரிதுவுக்கு ஆருஷி அடையாளம் காட்ட, அபியை கை பிடித்து அழைத்துப்போன ரிது,
அவர்கள் பாதத்தில் விழுந்து வணங்க,

இரு முதியவர்களும் கண்களில் தாரை தாரையாய் கண்ணீரோடு, “நல்லா இருங்கம்மா.. நாங்க
தான் புத்தி கெட்டு, கேக்க கூடாத ஆட்கள் பேச்சை கேட்டு, எங்க பசங்களையும், அவங்க
அன்பையும் இழந்துட்டோம். நீங்க நல்லா இருக்கணும்.”, என்று வாழ்த்த,

தாய் தந்தையரை பல வருடங்கள் கழித்து பார்த்த, சசியும், ராகவேந்தரும் என்ன சொல்வது என்று
தெரியாமல் விக்கித்து நின்றனர்.

திருமண சடங்குகள் ஒன்றன் பின் ஒன்றாய் நிகழ, அபி ரிது இருவர் பார்வையும் ஒன்றோடொன்று
பின்னிக்கொண்டு அவர்கள் காதலை உலகுக்கு பறை சாற்றிக்கொண்டு இருந்தது.

பானையில் மோதிரம் போட்டுத் தேட, அபி, ரிதுவுக்கு விட்டுக்கொடுக்க, ரிது அபிக்கு விட்டுத்தர,
கடுப்பான ஹர்ஷா, “டேய் யாராச்சும் வெளில எடுங்க. இல்ல நான் எடுத்துடுவேன்.”, என்று
கிண்டலடிக்க,

இருவரும் ஒருசேர மோதிரத்தை வெளியில் எடுத்தனர். என்றும் இருவரும் இதே போல
இணைந்தே இருக்க நாமும் பிரார்த்திப்போம்.
★★★★★
��அகலாதே ஆருயிரே��
��55��

திருமண பரபரப்பில் அனைவரும் இருக்க, அபி உல்லாசமாக சீட்டி அடித்துக்கொண்டு
இருந்தான்.

“டேய் பங்கு.. உனக்கு தான் டா இன்னிக்கு கல்யாணம் ஆச்சு. இனிமே எவ்ளோ
கஷ்டப்படப்போற தெரியுமா?? நீ பாட்டு விசில் அடிச்சிட்டு இருக்க?”, என்று அவன் அருகில்
இருந்த நாற்காலியில் இருந்து அவன் மேல் தொற்றிக்கொண்டு கேட்டான் ஹர்ஷா.

“என்னகென்ன கஷ்டம் வரும்.. என் டாலு.. என் அபர்ணா என்னோட இருக்கும் போது,
அதெல்லாம் கிட்ட கூட வராது.”, என்று பெருமையாய் சொல்ல,

“அடேய் இனி வீடே ரெண்டா ஆகும் டா. அம்மாவுக்கும் பொண்டாடிக்கும் நடுவுல மாட்டிக்கிட்டு
முழிக்கிறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா? நான் ஒரு மாசமா அனுபவிக்கிறேன்.”, என்று சோககீதம்
பாடியவன்,

“ஆனா மச்சி என்னை விட நீ பாவம்..”, என்றதும்,

அவனை புரியாது நோக்கிய அபியிடம், ஒரே ஒரு அம்மா மட்டும் வச்சிருக்கற எனக்கே இந்த
நிலமைன்னா, கூடவே ரெண்டு அக்கா வச்சிருக்கற உன்னை நெனச்சா.. “,என்று பரிதாபக்குரலில்
சொன்னவன், பின் கடகடவென்று சிரிக்கத் துவங்கினான்.

அவனை பார்த்து அபி சிரிக்கவும்,” என்ன பங்கு”, என்று முழித்து வைத்தான் ஹர்ஷா.

“என் அபர்ணாவை நீ என்ன நெனச்ச? இதே ஊர்ல தானே இருப்ப நீயே பாரு டா பங்கு. என்
அபர்ணா எப்படி என்னை சந்தோசமா வச்சிக்க போறான்னு.”, என்று சொல்லிவிட்டு எழுந்து
செல்ல, அவனை அழைக்க அங்கே வந்த ரிது, அவன் தன் மீது கொண்ட நம்பிக்கையை எண்ணி
பூரித்தாள்.

மண்டபத்தில் அனைத்து சடங்குகளும் நிறைவுற்றதும், உணவருந்திவிட்டு, அபியும் ரிதுவும்
அபியின் இல்லம் கிளம்ப,

அவ்வளவு நேரம் மகிழ்ச்சியாக அனைத்து வேலைகளையும் செய்து கொண்டு இருந்த ரிஷி
கண்களில் பெருகிய வெள்ளத்தை மறைக்க முடியாமல் போராட,அபி அவனை தோளோடு
சேர்த்தணைத்து, “டேய் மச்சான் என்ன டா அழற, இங்க பக்கத்துல தானே இருக்கோம். அய்ய..
என்ன இப்படி அழுதுட்டே இருக்க?”, என்றவன்,

“மாமா”, என்று உரிமையாக நாராயணனை அழைத்து, “கல்யாணத்துக்கு எனக்கு ஒரு
வரதட்சணை வேணும். தருவீங்களா?”, என்றான்.

அவனின் இந்த பேச்சை கேட்ட ராகவேந்தர் பதற்றம் கொண்டவராக முன்னே வர, அவரை
கண்களால் பொறுமை என்று நிறுத்தினாள் ரிது.

“என்ன வேணுமோ சொல்லுங்க மாப்பிள்ளை.”, என்று நாராயணன் புன்னகைக்க,

“இதோ இந்த குட்டி மச்சானை என்னோட பார்சல் பண்ணுங்க. நானே வச்சிக்கறேன்.”, என்று
நக்கலாக சிரித்தான் அபி.

“போங்க மாமா.. “,என்று கண்ணீரை துடைத்து அபியை அணைத்தான் ரிஷி.

“என்ன ரிஷி, அக்கா இங்க தானே இருக்கேன். எப்போ வேணாலும் நீ நம்ம வீட்டுக்கு வா.
சரியா?”, என்று அவன் முன்னுச்சி முடியை கோதி நெற்றியில் முத்தம் பதித்தாள் ரிது.

சசியும், நாராயணனும் சிரித்த முகமாகவே மகளை வழியனுப்பினர். ராகவேந்தர் மற்றும் சங்கரி
அவளை நன்றாக பார்த்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை அவர்களுக்கு நிறையவே இருந்தது.
ஆருஷியும் ஹர்ஷாவும் அவர்களோடு செல்ல , நாராயணன் மகளை பற்றிய கவலைகளற்று
இருந்தார் என்றே சொல்லலாம்.

ரிதுவும் தன் கணவனோடு மகிழ்வாய் அபியின் வீட்டை அடைய, ரேகா ஆரத்தி தட்டோடு
வெளியில் வந்தாள். ரிதுவை முறைத்தவாறே அவள் ஆலம் சுற்ற வர, அவளை கைநீட்டி
தடுத்தான் அபி.

“அம்மா நீங்க வாங்க”, என்றான் சங்கரியை நோக்கி,

சங்கரி வர, அவரை தடுத்து தன்னுடன் நிறுத்திக்கொண்ட ரிது, ஸ்வாதியையும் ரேகாவோடு
சேர்ந்து ஆலம் சுற்ற சொல்லி கண் காட்ட, உண்மையில் அவள் மகிழ்ந்து போனாள்.

அபி திரும்பி ரிதுவை பார்க்க, அவனை கெஞ்சல் பார்வையால் அடக்கியவள், மாமியாரை
தன்னோடு இருக்கும் படி கேட்டாள்.

ரேகாவுக்கு, ஸ்வாதியும் சேர்ந்து ஆலம் சுற்றி அபியையும் ரிதுவையும் உள்ளே அழைக்க,

அபியின் கரம் பற்றி இனி தான் வாழப்போகும் வீட்டுக்குள் முதல் அடி எடுத்து வைத்தாள்
ரிதுபர்ணா.

உள்ளே வந்தவள் விளக்கேற்றி அந்த காமாட்சி தாயாரை வழிபட்டு, மாமியாரோடு சிரித்து பேச,

“என்ன வந்ததும் உக்காந்துட்ட, போ ஏதாவது இனிப்பு செஞ்சு எடுத்துட்டு வா”, என்று ரிதுவை
ரேகா ஏவ, பதில் சொல்ல தயாரான அபியை அடக்கினாள் ரிது.

சிரித்த முகமாய் சமையலறைக்கு சென்றவள், அது இருந்த நேர்த்தியை பார்த்து தான் பின்னோடு
உதவ வந்த மாமியாரை அணைத்துக்கொண்டாள்.

“அத்தை, சமையல்கட்டு அவ்ளோ அழகா இருக்கு. எனக்கு ஒரு உதவியும் வேண்டாம். வெளில
உக்காருங்க.”, என்று அனுப்பிவிட்டு,

கேசரியும், அவல் பாயசமும் செய்தாள். அதை அனைவருக்கும் எடுத்து வர,

“அட, என்னம்மா பழையகால பாட்டி மாதிரி இன்னும் கேசரி செஞ்சிட்டு இருக்க”, என்று ரேகா
கிண்டலாக பேசவும்,

அவ்வளவு நேரம், அடுத்தவர் வீடு, பேசக்கூடாது என்று பொறுமை காத்த ஆருஷியின் பொறுமை
காற்றில் பறந்தது.

“என்னங்க நானும் பாக்கறேன், வந்ததுல இருந்து என் ரிதுவை ஏதாவது சொல்லிட்டே
இருக்கீங்க? எந்த வீட்ல கல்யாணத்தன்னைக்கே சமைக்க விட்டாங்க? ஏதோ சொல்றீங்கன்னு
அவளும் அமைதியா செஞ்சா, ரொம்ப பேசுறீங்களே.. “,என்று எகிற ஆரம்பித்தாள்.

“ஆரூ.”, என்று அவளை சமாதானம் செய்ய முயன்ற ரிதுவை அவள் கவனிக்கவே இல்லை.

“என்ன ஆன்ட்டி இதெல்லாம்?”, என்று சங்கரி பக்கம் அவள் திரும்ப,

“ஆரூ..”, என்றாள் ரிது அழுத்தமாய்.

அவள் குரல் ஓங்க வில்லை. ஆனால் குரலில் இருந்த அழுத்தம், அவளை அமைதியாக
இருக்கும்படி செய்தது.

“யார் அவங்க? என்னோட மாமா பொண்ணு டா. என்கிட்ட கேக்காம யாரை கேப்பாங்க?
உன்னோட ஆதங்கம் எனக்கு புரியுது, ஆனா நான் நம்ம வீட்ல உங்களுக்கெல்லாம்
செய்யலையா, அதே போல தான் இங்கேயும். விடு”, என்று இலகுத்தன்மை மாறாத குரலில்
சொல்லவும் ஆரூ அமைதியானாள்.

“சிஸ்டர்… “,என்று அவள் புறம் வந்த ஹர்ஷா சன்னக்குரலில், “எப்படி சிஸ்டர் அந்த ஐஸ்க்ரீம்
வாயை அடைச்சீங்க.. வீட்ல எப்ப பாரு போர் தான் அம்மாக்கும் அவளுக்கும். ஆரம்பத்துல மேட்ச்
பாக்கறது போல நல்லா இருந்துச்சு. ஆனா கடைசில என்னை அம்பயர் ஆக்கினபோ
நொந்துட்டேன்.”, என்று சொல்ல,

“ஒன்னும் இல்ல ப்ரோ..அன்பா சொல்லுங்க கேட்டுப்பா.”, என்று சொன்னதும்,

“ஆப்டிங்கிறீங்க.. சரி ட்ரை பண்ணறேன்.”, என்று நகர்ந்தான்.

“என்ன அங்க ரகசியம்?”, என்று கேட்ட ஆருவிடம் அத்தனை பல்லையும் காட்டி அவன் இளிக்க,
ஆருவும் சிரித்து விட்டாள்.

அன்றைய இரவுக்கான ஏற்பாட்டை மகேஷும் விக்னேஷும் கவனிக்க, அவர்களோடு
ஹர்ஷாவும், சுரேஷும் இணைந்து கொண்டனர்.

நிதீஷ் அபிக்கு பதிலாக டெல்லி கேஸ் விஷயமாக அலைந்து கொண்டு இருந்தான்.

அவன் அறையை கண்ட ஆருவுக்கு முகம் சுருங்கியது. மாடியில் ஆஸ்பெஸ்டாஸ் போடப்பட்ட
அந்த பத்துக்கு பதினாறு அறையை கண்டதும் அவள் கண்கலங்கிவிட்டது.

என்னவென்று ஹர்ஷாவும் மற்றவர்களும் கேட்டதும், “ரிது வீட்ல அவளுக்குன்னு தனி ரூம்
இல்லனாலும் ரிஷிக்கும் அவளுக்கும் சேர்த்து தான் ரூம் இருக்கும். அதுல ஓரளவு வசதியும்
இருக்கும். ஏன் ஜே.பி. ரூம் இப்படி இருக்கு? இங்க எப்படி என் ரிது சமாளிப்பா?”, என்று
கேட்டதும்,

சுரேஷ், “மா அவன் இந்த ரூம் கூட இல்லாம வெறும் மாடில தான் ராத்திரி படுத்திருப்பான்.
போன வருஷம் தான் அவன் கிட்ட போராடி இந்த ரூம் கட்டினோம். அதுக்கே அவன் இதெல்லாம்
எதுக்குன்னு கேட்டான். அம்மாவுக்காக மட்டும்தான் மா இந்த வீட்ல அவன் இருக்கான்.குளிச்சு
ட்ரெஸ் பண்ண மட்டும் தான் இங்கே வருவான். மீதி நேரம் முழுக்க, ஆபிஸ் தான்.”, என்றதும்,

“ஆமாம் ஆரூ, ரிது மட்டும் என்ன வீட்லயே இருக்க போறாங்களா? லீவ் முடிஞ்சு டூட்டி எடுத்தா,
காலநேரம் பார்க்காம ஓடப்போறங்க. இது அவங்க வாழ்க்கை டா. அவங்களே பார்த்து முடிவு
செய்வாங்க. நீ கவலைப்படாதே ஐஸ்கிரீம்.”, என்றதும்,

“தங்கச்சி என்ன வேலை பண்றாங்க தம்பி?” என்று கேட்டான் மகேஷ்.

“அது..”,என்று ஹர்ஷா இழுக்க,

“அவளே சொல்லுவா அண்ணா. தப்பா நினைக்க வேண்டாம்.”, என்று ஆரூ சமாளித்து விட்டாள்.

இவர்கள் அலங்காரம் முடித்து அபியை அறைக்கு அனுப்ப, அவனுக்குமே இவ்வளவு நாட்கள்
எப்படியோ, இனி தன் அபர்ணாவை எப்படி இந்த அறையில் தங்க வைப்பது என்று உள்ளே
உறுத்த துவங்கியது.

அவன் யாரை எண்ணி கவலையில் இருந்தானோ அவன் எண்ணத்தின் நாயகியே, அழகிய
பால்வண்ண புடவையில், மயில் தொகை கரையிட்ட மெல்லிய சில்க் புடவையில் உள்ளே
நுழைய, அவள் முகத்தில் இருந்த வெட்கம் பார்த்து, உலகம் மறந்தான் அபினவ்.

அவள் தயங்கி அறைக்கு உள்ளே வந்து நிற்க, அவனே எழுந்து கதவை மூடிவிட்டு, அவளை
அழைத்து வந்து அமர்த்தினான்.

“என்ன டாலு நீ? இப்படி வெட்கப்படுற..”, என்று கேட்டதும்,

“ஏன் எனக்கெல்லாம் வெட்கம் வராதுன்னு நியூஸ்ல சொன்னானா?”, என்றாள் சிரித்தபடி,

“அட.. கிண்டல்..”, என்று வியப்பை போல அபி முகத்தை வைக்க,

அவனின் அழகிய வதனத்தை கண்ட ரிதுவின் கண்கள் அவளை அறியாமல் காதல் பார்வை வீச,

“ஓ… மை.. என் வைப் என்னை சைட் அடிக்கிறா டோய்.. “,என்று குதித்த அபியை பார்த்து
மீண்டும் வெட்கப்பட மட்டுமே முடிந்தது ரிதுவால்.

“அபினவ் உங்க கூட கொஞ்சம் பேசணும்.” என்றாள்.

“தாராளமா.”, என்று நன்றாக சாய்ந்து அமர்ந்தவன், “எது சொல்றதுனாலும் இங்க வந்து
சொல்லு,”, என்று அவன் மார்பை காட்ட, மென்னகையை பரிசளித்த அந்த மேனகை, அவன்
மார்பில் சாய்ந்தபடி,.

“நான் என்ன படிச்சிருக்கேன், என்ன வேலை பார்கிறேன்னு தெரியுமா உங்களுக்கு?”, என்றாள்.

“ஏதோ பேசணும்ன்னு சொல்லிட்டு கேள்வி கேட்கிறியா?”,என்று யோசனை போல அவன்
பாவனை செய்ததும், சிரித்த ரிது, “சொல்லுங்க”, என்று சிணுங்க,

“நீ ட்வெல்த்ல ஸ்டேட் பர்ஸ்ட் ன்னு எனக்கு தெரியும். அதனால நல்ல கோர்ஸ் தான் படிச்சிருப்ப.
வேலையை பத்தி சொல்றதுன்னா… “,என்று இழுத்தவன், “கல்யாணத்துக்கு முன்னாடியே வீட்ல
சொல்லி இருப்பாங்க. ஆனா சொல்லல. அப்படின்னா, இப்போதைக்கு சொல்ல நீ விரும்பலன்னு
அர்த்தம். “,என்றதும்,

அவனை கண்டு பூரித்தாள் அவன் டாலு.

“சொல்லுவேன். ஆனா இப்போ இல்ல.”, என்றதும்,

“ஆமாமா.. இப்போ முக்கியமான வேலை இருக்கே.. “,என்று அவன் விரல்கள் அவள் மீது கோலம்
போட, வெட்கத்தில் அவன் மார்புக்குள் புதைந்து போனாள் வஞ்சியவள்.

அவள் இதழ்களில் கவிதை எழுத ஆரம்பித்து, அவளின் மேனியெங்கும் காதல் யுத்தம் செய்து தன்
காதல் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து, வாழ்க்கையின் வசந்தத்தை வரவேற்றான் அபினவ்.

கீழே சங்கரி தன் கணவன் அருகில் வந்து அமர்ந்தவள், “அபிக்கு கீழ இருக்கற ரூம் ஒன்னை சரி
பண்ணி நாளைக்கு கொடுத்திடலாம். அது.. மருமக பொண்ணு நல்லா வசதியா இருந்திருக்கும்.
“,என்று அவன் மென்று விழுங்க,..

“ஆமாம் சங்கரி, நானும் யோசிச்சேன். ஆனா அவன் கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியல.
அதான். “,என்று அவர் தயங்க,

“ஏன் அந்த மகாராணி மாடில இருக்கற ரூம்ல இருக்க மாட்டாங்களோ..”, என்று வந்து அமர்ந்தாள்
ரேகா.

அவளை கண்டு எரிச்சலான சங்கரி, “இங்க பாரு, இது எங்க பையன், மருமகளுக்காக  நாங்க
யோசிக்கிறோம். நீ என்ன நடுவுல?”, என்றதும்,

எப்போதும் அவரை தடுத்து பேசும் ராகவேந்தர் கூட இம்முறை அமைதியாக இருந்தார்.

“என்னப்பா. இவங்க இப்படி பேசுறாங்க?”, என்று அவரிடம் குற்றப்பத்திரிகை வாசித்த மகளை
பார்த்து,

“இல்லம்மா, அவங்க வசதியையும் பார்க்கணும் இல்லையா. நான் தானே என் தங்கச்சி கிட்ட
பொண்ணு கேட்டேன். அப்போ அவளை நல்லா பார்த்துக்கற பொறுப்பு எனக்கு இருக்குல்ல மா.”,
என்று பொறுமையாக அவர் எடுத்துரைக்க,

“என்னம்மோ பா. எனக்கு இதெல்லாம் பிடிக்கல. பார்த்துக்கோங்க. அவ இப்போவே தம்பியை
காணால அடக்குறா. காதலான்னு கேட்டா நேத்து தான் பார்த்தேன்னு இவன் சொல்றான்.
எனக்கொன்னும் புரியல பா.”, என்று அவரிடம் ஏற்றிவிடப் பார்க்க,

அவரோ, “அவங்க சந்தோசமா இருக்க தானே மா கல்யாணமே பண்ணி வச்சோம். சந்தோசமா
இருந்தா நல்லது தானே”, என்று அவர் சிரிக்க, அவள் வைத்த பட்டாசு, புஸ்வானம் ஆனதில் முகம்
சுருங்கிப்போனவள், உறங்கச்சென்றாள்.

அவள் போவதை பார்த்து நமுட்டு சிரிப்பொன்றை உதிர்த்தார் சங்கரி.

2 thoughts on “அகலாதே ஆருயிரே-51-55”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *