அத்தியாயம்-6 -7-8
“ஏன் அங்கிள், இந்த ரிஷி உங்களை ஏன் நைனான்னு கூப்பிடறான். ரிது அப்படி கூப்பிடறது
இல்லயே..”
தன் அதிமுக்கிய சந்தேகத்தை நாராயணனை நோக்கி கேட்டாள் ஆருஷி.
அவரோ சிரித்தபடி, “நான் தெலுங்கு டா, ஆன்ட்டி தான் தமிழ். ரிது ஆன்ட்டி போல தமிழ்ல
கூப்பிடறா. ரிஷி என்னை தெலுங்குல நைனான்னு கூப்பிடறான்.”
“எப்படி அங்கிள் உங்கள் வீட்ல, தெலுங்கு பையனுக்கு தமிழ் பொண்ணை கல்யாணம் பண்ணி
வச்சாங்க?”
“அது யார் என்னை இவருக்கு கல்யாணம் பண்ணி வச்சது? இவரே வந்து என்னை கல்யாணம்
பண்ணி கூட்டிட்டு வந்துட்டார்.”, என்று உள்ளே நுழைந்தார் சசி. அவர் கையில் இருந்த காய்கறிக்
கூடையை வாங்கிய நாராயணன், அவருக்கு பேனுக்கு கீழே இருந்த இருக்கையை கொடுத்து,
குடிக்க நீரைக் கொடுத்தார். வாங்கிக்கொண்ட சசியின் கண்களில் நன்றியையும் மீறி காதலே
நிறைந்து இருந்தது.
“உன்னை யார் நான் எழுந்துக்கறதுக்குள்ள கடைக்கு போக சொன்னது சசி.”
“நீங்களே ஒரு நாள் தான் வீட்ல இருக்கீங்க. அன்னைக்கு மெதுவா எழுந்து ரிலாஸ்சா
இருக்கிறதை விட்டு, இன்னிக்கும் சீக்கிரம் எழுப்பி கடைக்கு அனுப்பி.. போங்க.. ரிது காபி
கொடுத்தாளா? “
“தந்தா மா. இப்போ ஏதோ டிபன் செஞ்சுட்டு இருக்கா.”
“சரி நான் என்னனு பார்க்கிறேன்.”, என்று எழுந்த சசியை அமர்த்தியவர், “வந்து ரெண்டு நிமிஷம்
கூட ஆகலை சசி, கொஞ்சம் உக்காரு.”, என்று சொல்லிவிட்டு, கிட்சனிற்கு சென்று அவர் பருக
இதமான சூட்டில் காபியோடு வந்தார்.
அதை வாங்கிய சசி அவர் கைகளில் குறுகுறுப்பு செய்ய, “அட”, என்று கையை உதறினார்.
அதற்குள் காபியை வாங்கிக்கொண்டிருந்த சசி, வாய் விட்டு சிரிக்க, “எனக்கு குறுகுறுப்பு
பண்ணாத சசி”, என்று கெஞ்சினார் நாராயணன். “ஆமாம் உங்களை அப்படியே கிச்சு கிச்சு
மூட்டிட்டேன் பாருங்க.. “,என்று சொல்லியபடி அவர் அருகில் சசி வர, “அம்மா விடாத நைனாவை
பிடி “,என்று பக்கத்து அறையில் இருந்து ஓடி வந்தான் ரிஷி,
“டேய் வேண்டாம் டா, சசி.. நோ.. “,என்று நாராயணன் வேகமாக பக்கத்து அறைக்குள் நுழைய
பார்க்க, அதற்குள் சமையலறையில் இருந்து ஓடி வந்த ரிது அந்த அறை வாசலை
அடைத்துக்கொண்டு நின்று சிரித்தாள்..
“ரிதும்மா.. நோ டா. “,என்று அவள் கையிடுகில் நுழைய முயல, அவர் குனிந்த நிமிடம் மூவரும்
அவர் இடுப்பில் கிச்சு கிச்சு மூட்ட, அவரோ,”டேய்.. விடுங்க டா.. சசி.. பிளீஸ்.. “,என்று
சொல்லியபடி மடங்கி அமர்ந்தார்.
விடாமல் அவரின் இடுப்பில் மூவரின் விரல்களும் விளையாட, அவர் சமநிலை இல்லமல் சரிய,
அவர் மேல் ரிஷி, அவர்கள் மேல் ரிது என்று மூவரும் தரையில் சரிய, சசி லாவகமாக எழுந்து,
நாராயணனை பார்த்து கண் காட்டினார், நாராயணன் புரிந்தவராக, தன் இடுப்பில் இருந்த
ரிஷியின் கரத்தை இறுக்கி கொள்ள, இப்போது சசியும் ரிதுவும் ரிஷிக்கு கிச்சு கிச்சு செய்ய,
அவனோ உருளத்துவங்கினான்.
நால்வரும் கலகலவென சிரிக்க அந்த இடமே ரம்யமாக இருந்தது. சிரித்துக்கொண்டே நிமிர்ந்த
சசியின் கண்களில், ஏக்கம் மின்ன நின்ற ஆருஷி பட, சசி ரிதுவின் அருகில் சென்று
முணுமுணுக்க, ரிது யாரும் கவனிக்கா வண்ணம் ஆருஷி அருகில் சென்றாள், மிக அருகில் அவள்
கைகளை வளைத்துப்பிடித்தவள், “அட்டாக்.. “,என்று கத்த, ரிஷியும் சசியும் ஆருஷியை கிச்சு கிச்சு
மூட்ட, அழுகையோடு கலந்த சிரிப்பில் ஆருஷி நெளிந்தாள்.
எல்லாரும் கொஞ்சம் மூச்சு வாங்க அமர, நாராயணன் பிள்ளைகளுக்கு எலுமிச்சை சாறு எடுத்து
வர, அவரிடம் அதைப் பெற்று பிள்ளைகளுக்கு வழங்கினார் சசி.
ஆருஷி கண்களில் நீருடன், “எப்படி ஆன்ட்டி இவ்ளோ சந்தோசமா இருக்கீங்க? “
“இதென்ன பிரமாதம். கிச்சு கிச்சு மூட்டறதெல்லாம் ஒரு விஷயமா டா. அடிக்கடி யார்
சிக்கினாலும் எல்லாரும் சேர்ந்து அழுக விட்ருவோம் டா. ஆனா ஆனந்த அழுகை தான்”, என்று
நாராயணனை ஓரக்கண்ணால் பார்த்தபடி சொன்ன சசிக்கு பத்திரம் காட்டிய அவர்,
“இல்ல ஆருமா சும்மா நேரம் கிடைக்கும்போது ஒருத்தரை ஒருத்தர் கிண்டல் பண்ணி, சிரிச்சு
விளையாடி அப்பதான் வீடு லைவ்விலியா இருக்கும். எனக்கும் சசிக்கும் அது தான் பிடிக்கும்.”
“நான் கண்ணு முழிக்கறது முதல் தூங்க போகிற வரை சண்டே வேலைக்காரங்களை தவிர அம்மா
அப்பா ஒருத்தரையும் பார்த்ததே இல்ல. சில நாள் தூங்கின அப்பறம் தான் அப்பா வருவார்.
அம்மா வந்தாலும் பேசாம தூங்க போயிடுவாங்க.”, என்று வருத்தத்தோடு சொல்ல,
சசி அவள் தலை முடியை ஒத்துக்கியபடி, “அஞ்சு விரலும் ஒரே போல இருக்காது ஆரூ. உங்க
அம்மா அப்பா செஞ்சுக்கொடுத்த வசதியை எங்களால எங்க பசங்களுக்கு செஞ்சுத்தர முடியாது
டா. காரணம் அங்கிள் சலேரிலே தான் முழு குடும்பமும் ஓடுது. நான் வீட்ல தான் இருக்கேன்.
ஆனா உன் அம்மா அப்படி இல்லை. உனக்கான வசதிகளை பெருக்கத்தானே வேலைக்கு
போறாங்க.”
“என்னையே கவனிக்காம எனக்கென்ன வசதி வேண்டி இருக்கு ஆன்ட்டி. “,ஆதங்கம் கொண்டு
கேட்டாள் ஆருஷி.
“அப்போ அதை உன் அப்பா அம்மாவிற்கு தெரியப்படுத்து. அதை விட்டுட்டு அழுகக்கூடாது.
பெண்களோட அழுகை மிகவும் சக்தி வாய்ந்தது.அதை வீணாக்காதே ஆரூ.”
“சரி ஆன்ட்டி. நான் கிளம்பவா?”
“இரு. சாயங்காலம் அங்கிளை கூட்டிட்டு போய் விட சொல்றேன். “,என்று எழுந்து
சமையலறையில் மகள் செய்ததை பார்க்க சென்றார் சசி.
ஆருஷி இன்று எப்படியாவது தன் பெற்றோரிடம் பேசி விட வேண்டும் என்று மனதில் உறுதி
பூண்டார்.
மாலை ஆறு மணிக்கு டியூஷன் சென்டர் வாசலில் அபிக்காக காத்திருந்தான் ஹர்ஷா. அவன்
தந்தை அபி சொன்னதை அவனுக்கு தெரிவிக்க மறந்துவிட, அன்று டியூஷன் போகாமல் வாசலில்
காத்திருந்தான். டியூஷன் முடிந்து அவனை கடந்த ஒரு சிலர் அவனை பார்த்து சிரிக்க, அதில்
ஒருவனை நிறுத்தி,” என்ன டா”, என்றான் ஹர்ஷா.
“உன் பிரென்ட் இனிமே இந்த செட்ல வர மாட்டான். அதனால இனிமே நான் தான் டா டாப்..
உன் வாலை சுருட்டிட்டு இரு.”, என்றான் அந்த அறைவேக்காட்டு மக்கப் மன்னன் மாதவன்.
அவனை எரிச்சலாக பார்த்த ஹர்ஷா,”நீயே வச்சுக்க டா அந்த டாப் பொசிஷனை அல்டாப்
பயலே.. “,என்று கத்திவிட்டு அபி இனி வரமாட்டேன் என்பதை தன்னிடம் சொல்லவில்லை என்ற
கோபத்தில் வீட்டுக்கு வண்டியை முறுக்கிக்கொண்டு போனான். வாசலில் அப்படியே வண்டியை
விட்டவன், ஹாலில் சாக்ஸை கழற்றி எறிந்துவிட்டு, “எங்கம்மா போன.. “,என்று கத்தினான்.
பதில் வராது போக, வாசலில் செருப்பு வைக்கும் இடத்தை பார்க்க, அதில் லதாவின் செருப்பு
இல்லாமல் இருக்கக்கண்டு இன்னும் கோபமுற்றவன், கையில் கிடைத்த டிவி ரிமோட்டை தூக்கி
அடிக்க, அது சுக்கல் சுக்கலாக நொறுங்கியது.
அதன் நம்பர் அழுத்தும் ரப்பர் பட்டை வாசலுக்கு அருகில் விழவும், சோமு வீட்டிற்குள் நுழையவும்
சரியாக இருந்தது.
ரிமோட்டின் நிலை கண்டு வெகுண்ட அவர், “என்ன ஹர்ஷா இதெல்லாம்”, என்று கத்த,
“அப்பா நானே கடுப்புல இருக்கேன். இப்போ வந்து காசு போச்சு, அதோட அருமை
தெரியுமான்னு கிளாஸ் எடுக்காதே “,என்று சொல்ல,
“அப்படி என்ன டா கடுப்பு, கண்மண் தெரியாம எல்லாத்தயும் உடைக்கிற அளவுக்கு?”
“சொன்னா அப்படியே எல்லாத்தயும் சரி பண்ணி குடுத்திடுவியோ..”
“சொல்லு முதல்ல.. “,என்று கொஞ்சம் நிதானத்திற்கு வந்தார் சோமு.
“அபி என்கிட்ட சொல்லாம டியூஷன் வர்றதை நிறுத்திட்டான். ஆமா இதை உன்கிட்ட சொன்னா
எல்லாம் சரியா போய்டுமா?”, என்று கத்த,
“அபியா.. யாரு உயரமா, சிவப்பா இருப்பானே அவனா?”, என்றார்.
“ஆமாம்..”, என்று கவலையில் ஆழ்ந்திருந்த ஹர்ஷா சொல்ல,
“அவன் தான் அன்னைக்கு வீட்டுக்கு வந்து இனிமே காலைல டியூஷன் போக போறேன்.
பாக்கணும்னா வீட்டுக்கு வரசொல்லுங்கன்னு சொன்னானே.”
“எப்போ”, என்று கத்தினான் ஹர்ஷா..
“முந்தாநாள்.. “,என்று யோசித்தபடி சொன்னார்.
“ஏன்பா என் பிரென்ட் என்கிட்ட ஒரு விஷயம் சொல்லச்சொன்னா சொல்ல மாட்டியா? இதென்ன
பா.. உன்னால இன்னிக்கு சாயங்காலம் புல்லா டியூஷன் சென்டர் வாசல்ல நின்னுருக்கேன்.
“,என்று மீண்டும் கையில் டிப்பாயில் இருந்த செல்போன் வைக்கும் டிரேவை தூக்கி எறிய,
இப்போது சோமுவுக்கு கட்டுக்கடங்காமல் கோவம் வர, ஹர்ஷாவை அடித்து விட்டார். அவன்
கன்னத்தில் கை வைத்தபடி நிற்க, உள்ளே நுழைந்த லதா, கொஞ்சமும் யோசிக்காமல் சோமுவை
பார்த்து, “வீட்டுக்கு வந்ததும் வராததுமா அவனை படி படி ன்னு ஏன் டார்ச்சர் பண்றிங்க. இப்போ
அவனை எதுக்கு அடிச்சிங்க.. தோளுக்கு மேல வளர்ந்த பையன். அவனை அடிக்கிறீங்க.
கோவத்தின் ஒரு வார்த்தை மரியாதை குறைவா பேசிட்டா,இல்ல செஞ்சிட்டா நமக்கு தான்
அசிங்கம். “,என்றாள்.
அவள் பேசியதை கேட்ட சோமு துவண்டு போனார். ‘மகன் என்ன செய்தான் ஏன் அடித்தீர்கள்
என்று கேட்டிருந்தால் பரவாயில்லை. அவ்வளவு வேகமாக வந்தவள் தன்னை அல்லவா இழிவாக
நினைத்ததோடு அல்லாமல், மகனுக்கு அவன் அடுத்து எப்படி உதாசீனம் செய்வது என்று
எடுத்துக்கொடுப்பது போல பேசிவிட்டாள்’, என்று நொந்து அப்படியே வெளியேறினார்.
ஹர்ஷா தந்தை தன்னை அடித்த கோபத்தை வேகமாக தன் அறைக்கு போகும் வழியில் இருந்த
பூஜாடியை கீழே போட்டு உடைத்துவிட்டுச் சென்றான்.
என்ன நடந்தது என்றே தெரியாமல் மகனை சமாதானம் செய்யும் நோக்கில் அவனறைக்கு
சென்றார் லதா.
அவனோ கதவை அடித்து சாத்திவிட்டு கட்டிலில் அமர்ந்தான். அபி போன் வைத்துக்கொள்வது
இல்லை. அவனைப் பொறுத்தவரை அது ஆடம்பரப்பொருள். தேவையில்லாதது. ‘உன்னை
அழைக்க என்ன டா செய்ய?’ என்று கேட்டால், ‘தினமும் தான் டியூஷன்ல பார்க்கிறோமே டா’,
என்று சிரித்த அபியை இன்று மூக்கில் குத்தினால் என்ன என்ற கடுப்பு வர, நேரமானதால் அவன்
வீட்டிற்கும் செல்ல முடியாது. நாளை தான் பார்க்க முடியும் என்ற கடுப்பில் சாப்பிடாமல்
படுத்தான் ஹர்ஷா.
வேலைக்கு சேர்ந்த அன்றே அபிக்கு சோதனை தான். ஒரு மூட்டை வெங்காயத்தை அரியச்
சொல்ல, அவனுக்கோ கண்ணெல்லாம் தண்ணீர், அடுத்தகட்டமாக மூக்கெல்லாம் ஒழுக, எழுந்து
இரண்டு முறை முகம் கழுவிவிட்டு தான் வேலையை தொடர்ந்தான். அன்றைய நாள் முடிய,
கடையின் முதலாளியிடம் பேசிக்கொண்டு இருந்தான் சுரேஷ், அப்போது கிளம்புவதாக வெறும்
கையுடன் வந்து நின்ற அபியிடம் நூறு ரூபாய் பணமும், பார்சல் பொட்டலமும் கொடுத்தார் அவர்.
அபி பணத்தை புரியாமல் பார்க்க, “என்னப்பா முழிக்கிற, இன்னிக்கு பார்த்த வேலைக்கு பேட்டா
தம்பி, இனிமே வெங்காயம் நறுக்க சொல்ல மாட்டாங்க”, என்றார் சிரித்தபடி, அபி அப்போதும்
புரியாத பார்வையை தொடர, “உனக்கு பொறுமை எவ்வளவு இருக்குன்னு சோதிக்கத்தான் முதல்
நாள் வெங்காயம் கொடுத்தது, கண்ணில் தண்ணி வருது, முடியல அப்படின்னு அவசரமா, பெருசா
வெட்டிப்போடாம, ஒரே மாதிரி நீ சீரா வேலை பார்த்த. அதான் உன்னை புரிஞ்சு போச்சு.
சம்பளம் இல்லாம தினமும் பேட்டா உண்டு தம்பி, எங்க வேலை பார்க்கறியோ அதை பொறுத்து
பேட்டா. இது சாப்பாடு.”, என்றார்.
“நான் சாப்பிட்டேன்ங்க சார். “,என்று அபி சொல்ல,” வீட்டுக்கு கொண்டு போ சாமி. வீணா
போகறதுக்கு நம்மளை நம்பி உள்ளவங்க குடும்பம் சாப்பிடட்டுமே.”, என்றார்.
சின்ன சிரிப்பை உதிர்த்தவன், “வர்றேன் சார்.”,என்று கிளம்பினான்.
வாசலில் அமர்ந்து பிளவுஸ்க்கு ஊக்கு வைத்துக்கொண்டு இருந்தார் சங்கரி.
மகனைக் கண்டதும் எழுந்து வர, அவன் அந்த பார்சலயும் பணத்தையும் அம்மாவிடம் கொடுத்து
காலைத்தொட்டு வணங்கினான்.
மகனின் சம்பாத்தியத்தில் மகிழ்ந்தாலும் படிப்பு பாதித்துவிடக் கூடாதே என்ற ஆதங்கம் மேலிட,
அவனை தவிப்போடு நோக்கினார். அதை உணர்ந்த அபினவ், “அம்மா மணி பதினொன்னு தான்
ஆகுது. ஒரு மணி நேரம் படிச்சிட்டு படுக்கறேன். நீங்க கவலைப்பட வேண்டாம். “,என்று சொல்ல,
அவனுக்கு சூடாக டீ போட்டுக்கொடுத்து, பக்கத்தில் அமர்ந்து தானும் பிளவுஸ் ஹூக் வைக்க
ஆரம்பித்தார்.
��அகலாதே ஆருயிரே��
��7��
இரவில் படித்து முடித்து அபி உறங்க சொல்லும்போதே மணி ஒன்றை தொட்டு விட்டது. காலை
ஐந்து முப்பதுக்கு எழுந்தவன், குளித்து கிளம்பி டியூஷனுக்கு சென்று பள்ளி வந்தபோது
அடித்துப்போட்டது போல உடலெல்லாம் நோக ஆரம்பித்தது.
பத்து மணிக்கு மேல் வகுப்பை சரியாக கவனிக்க முடியாமல் தூக்கம் வர, தள்ளாடி மெல்ல
எழுந்தவன், ஆசிரியரிடம் சொல்லிக்கொண்டு முகம் கழுவச் சென்றான்.
நன்றாக படிக்கும் மாணவன் ஆதலால், அவனுக்கு உடல் நலமில்லை போல என்று எண்ணிய
ஆசிரியர் ஓய்வெடுக்கச் சொல்ல, அவனோ முகம் கழுவி சற்று இளைப்பாறிவிட்டு மீண்டும்
வகுப்புக்கே திரும்பினான்.
வழியில் அவன் தனக்குள் சொல்லிக்கொண்டது ஒன்றே ஒன்று தான். எதனுடைய தொடக்கமும்
கடினமாகவே இருக்கும், அதை கண்டு அஞ்சி ஒதுங்காமல் சற்று நிதானித்து தொடர்ந்தால், அது
பழக்கப்படுவதோடு, நம் வாழ்வோடு ஒன்று கலந்து விடும். இன்று தூக்கம் குறைந்ததால் ஏற்படும்
சோர்வுக்கு அஞ்சினால் நாளை மதிப்பெண்ணும் போய் வேலையும் போகும். என்று முயன்று
நிதானித்தான். கிடைத்த இடைவெளிகளில் வீட்டுப்பாடம் முடித்தான். படிக்க வேண்டியதை
வேலையில் கவனம் செலுத்தியபடி மனனம் செய்தான்.
இரண்டே நாளில் வேலையும் படிப்பும் டியூஷனும் அவன் வசப்பட்டது. சோர்வெல்லாம் போய்
பிரகாசமான முகத்துடன் வளைய வரத் துவங்கினான்.
அன்று ரிது ஆருஷியின் முகத்தை அடிக்கடி பார்த்தபடி இருந்தாள். ஆருஷி தன் கடுப்பான
முகத்தை முயன்று மறைத்து சிரித்துக்கொண்டு இருந்தாள் ரிதுவுக்காக. கரும்பலகையில் வேதியல்
வாத்தியார் வேகமாக தேன்கூடு டிசைன் வரைந்து ஆர்கானிக் கெமிஸ்ட்ரி நடத்திக்கொண்டு
இருக்க, ஆருஷிக்கு வரவேண்டிய தூக்கம் அன்று காலை நடந்த சம்பவத்தால் சாம்பலாகி இருக்க,
அவளின் முகவாட்டம் கண்டு ரிது அவளை கேள்வி கேட்காமல் கவனித்துக்கொண்டு இருந்தாள்.
ரிதுவுக்கு நைநை என்று கேள்வி கேட்டு கடுப்பு செய்வது பிடிக்காது. நம்மிடம் சொல்வதாக
இருந்தால் சொல்வார்கள் என்று அதை எளிதில் கடந்துவிடும் குணமுடையவள். எனக்கு
தெரியாமல் என்ன ரகசியம் என்று முறுக்கிக்கொள்ளும் ரகமில்லை.
ஆருஷி ஏற்கனவே கடுப்புடன் இருந்ததால் மிகவும் சிரமப்பட்டு தன்னை வகுப்பில்
புகுத்திக்கொள்ள முயன்றாள். அப்போது அட்டண்டர் செல்வம் வந்து ஆருஷியை உடற்கல்வி
ஆசிரியர் அழைப்பதாக சொல்ல, ஆருஷி அப்பட்டமாக தன் கோபத்தை முகத்தில் கூட்டி
காட்டினாள்.
அதை கவனித்த ரிது, தானும் அவளுடன் செல்வதாக கேட்க, ஆசிரியர் தன் கேள்விக்கு பதில்
சொன்னால் செல்லலாம் என்று நிபந்தனை வைத்தார்.
அவர் கேட்ட சமன்பாட்டின் பதிலை அழகாக ரிது எடுத்துரைக்க, கைதட்டி வழி அனுப்பினார்.
யாரும் புரிந்து படிக்கும் பிள்ளைகளை தொல்லை செய்வது இல்லை. இதை மாணாக்கர் புரிந்து
கொள்ளாமல் இருப்பது தான் வியப்பு.
அவள் கையை அழுந்த பிடித்து நடந்த ஆருஷிக்கு மனதில் தீ கொழுந்து விட்டு எரிந்தது. காலை
அந்த சுகந்தன் பேசிய பேச்சை ரிது அறிந்தால் வருந்துவாள் என்ற ஒரே காரணத்துக்காக மென்று
விழுங்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள். ஆனால் இப்போது அவர் அழைத்து, ரிதுவும் உடன்
வருவது ஆருஷிக்கு சற்று யோசனையாக கூட இருந்தது. இருவரும் நடந்து உடற்கல்வி
ஆசிரியரின் பிரத்யேக அறையான விளையாட்டு பொருட்கள் வைக்கும் அறையை அடைய,
எக்ஸ்கியூஸ் மீ சார். என்று கேட்டு உள்ளே நுழைய, அங்கே வேறு ஒருவர் அமர்ந்திருந்தார்.
அவரைக்கண்டு ஆருஷி முகம் சுருக்கிப் பார்க்க,
“இதுல ஆருஷி யாரு?”
“நான் தான் சார்.”,என்று அவள் முன்னே வர,
“நீ ஏம்மா கிளாஸ் டயம்ல வர?”, என்று ரிதுவை வினவினார்.
அவளோ, “சுகந்தன் சார் கூப்பிடறாரோ என்று துணைக்கு வந்தேன் சார்.”, என்று சொல்ல,
அவள் சிரித்தபடி,” அவர் இல்லை. இனிமே நான் தான் பி.டி சார். “, என்றார்.
ஆருஷிக்கு ஆச்சர்யம் என்றால், ரிதுவுக்கு நிம்மதி.
“உன்னை எதுக்கு கூப்பிட்டேன்னா வாலிபால் டோர்ன்னமெண்ட் வருது. நீ தானே சினியர்ல
நல்லா விளையாடற பொண்ணு. அதான் உன்னை வச்சு டீம் போர்ம் பண்ணலாம் என்று
கூப்பிட்டேன்.”, என்றார்.
“அது சரி சார். பண்ணிக்கலாம். நிறைய நல்ல பிளேயர்ஸ் இருக்காங்க. ஆனா எனக்கு ஒன்னு
புரியல. காலைல இருந்த அந்த சார் எங்க? இப்போ எப்படி நீங்க?”, என்று குழப்பம் மேலிட
கேட்க,
ரிது அவள் கைப்பற்றி, “அதெல்லாம் வெளிய பேசிக்கலாம். இப்போ சொல்லிட்டு வா.” என்று
சொன்னாள். அவள் சொல்படி அவரோடம் பேசிவிட்டு வெளியில் வர, ரிது ஆருஷியின்
பார்வையை அறிந்து,”அந்த சார் வேலையை விட்டு எடுத்திருப்பாங்க ஆரூ.”, என்றாள்.
“உனக்கெப்படி தெரியும்? என்று ரிதுவைப் பார்க்க அவளோ, சின்ன சிரிப்புடன், கப்லைன்ட்
கொடுத்த எனக்கு தெரியாதா கடைசில என்ன நடக்கும்ன்னு.. “, என்று சிரித்தாள்.
“என்ன டி சொல்ற?”, என்று ஆரூ வியப்பைக் காட்ட,
“ஆமாம் அந்த ஆள் உன்கிட்ட மட்டும் இல்லை. ராதா மிஸ் கிட்ட கூட மிஸ்பிஹேவ் பண்ணினார்.
அதான் அன்னைக்கே அப்பா கிட்ட சொன்னேன். அப்பா தான் தைரியமா ப்ரின்சிபால் கிட்ட
காம்பளைன்ட் பண்ணு. சரியா பதில் சொல்லலன்னா நான் வர்றேன்னு சொன்னார். நானும்
கம்பிளைன்ட் கொடுத்தேன். அதான் இப்போ அவரை வேலையை விட்டு தூக்கி
இருப்பாங்க”,என்றாள் சிரிப்புடன்.
அவளை அணைத்துக்கொண்ட ஆரூ,”எனக்கு கூட அவ்வளவு தைரியம் இல்லையே. நீ
சொன்னதும் ப்ரின்ஸி கேட்டுட்டாங்களா..”
“அதெப்படி சொன்னதும் கேப்பாங்க. நான் அவர் பொண்ணு கிட்டையே கேட்க சொன்னேன்.
அவளும் இங்க தானே எட்டாவது படிக்கிறா. குட் டச் பேட் டச் தெரியும்ல. அதான் அவளே
அவங்க அப்பா கிட்ட ஆமாம் அவர் அப்படித்தான்னு சொல்லவும் உடனே ஆக்ஷன் எடுத்துட்ட்டர்
ப்ரின்ஸி.”
“நல்லது போ. இனிமே நிம்மதி.”
இருவரும் அன்றைய டிரீட்டை அதே ஐஸ்கிரீம் பார்லரில் வைக்க, ரிது இயல்பாக இருந்தாலும்
ஆருஷிக்கு ஒரு குறுகுறுப்பு, அன்று வந்த இருவர் இருப்பரோ என்று.
ஆனால் கடைசி வரை ஏமாற்றமே மிச்சமாக வீடு திரும்பினர்.
வீட்டில் அதிசயத்திலும் அதிசயமாக வேணி இருக்க, “அம்மா..”, என்று தாவி அணைக்க
வந்தவளை, “ஏய் என்ன நீ. அப்படியே வந்து கட்டி பிடிக்கிற,போ போய் முகம் கை கால் கழுவிட்டு
வந்து தொடு.”, என்றார்.
அவளும் பல்லை கடித்துக்கொண்டு முகம் கழுவி, உடைமாற்றிக் கொண்டு வர, வேணி
கிளம்பிவிட்டிருந்தாள்.
இருந்த கோபத்தை யார் மீது காட்டுவது என்று தெரியாமல் தன் நிலையை தாய்க்கு உணர்த்திவிட
வேண்டும் என்று வந்த தன்னையே நொந்தவள், தந்தைக்கு அழைப்பு விடுத்தாள்.
எடுத்த நொடி, “வர்ற சண்டே எந்த கமிட்மெண்ட், ப்ரோக்ராம் இருந்தாலும் நீங்களும் உங்க
வைப்பும் வீட்ல இருந்தே ஆகணும். இல்ல, உங்களுக்கு ஆருஷின்னு ஒரு பொண்ணு இருந்ததை
மறந்திடுங்க.”, பட படவென்று சொல்லிவிட்டு போனை வைத்தாள்.
படிக்க முடியாமல் மனம் சஞ்சலப்பட, ரிதுவின் யோசனைப்படி ஒரு மீன் தொட்டி வாங்கி
வைத்திருந்தாள் ஆரூ. அதில் உள்ள மீன்களை சற்று நேரம் பார்க்க, அதுவோ முன்னும் பின்னும்
மேலும் கீழும் அவள் விரல் படும் இடமெல்லாம் பயந்து பயந்து ஓட, சற்று நேரத்தில் ஆருஷியின்
மனம் நிலை பெற்றது. அவர்கள் இருவருக்கும் என்ன பணிச்சுமையோ.. என்று தாய்தந்தையரை
நினைத்துக்கொண்டே படிப்பைப் தொடர்ந்தாள்.
ரிது தன் தந்தையை கட்டிக்கொண்டு நன்றி சொன்னாள்.
“உங்களால தான் அப்பா நான் ப்ரின்ஸி கிட்ட தைரியமா சொன்னேன்.”
“உன் தைரியத்தில் நான் எங்க டா வந்தேன்?”, என்று நாராயணன் சிரித்தபடி பதிலுரைக்க,
“பொண்ணுங்களை எப்படி நைனா பார்க்கணும்?”, என்று கேட்ட மகனை இழுத்து பக்கத்தில்
அமர்த்திய அவர், “உனக்கு ஒரு விஷயம் வலிக்கித்துன்னா அடுத்தவர்களுக்கும் வலிக்கும்.
எப்பயும் யாரையும் மதிப்பா நடத்தனும்.”,என்றார்.
“சரி நைனா”, என்று சொல்லிவிட்டு அவர் கன்னத்தில் ரிஷி முத்தம் வைக்க,” என் அப்பா டா “,
என்று ரிது வம்பு செய்ய,
“வச்சுக்கோ.. அம்மா எனக்கு.”, என்று தாயை அணைத்தான். இப்போதும் ரிது ,”அம்மா எனக்கு.”,
என்று சொல்ல,
நாராயணன் குச்சி ஒன்றை கொண்டு துரத்த, வீடே ஒரே களேபரம் ஆனது. சிரித்து சிரித்து சசி ஒரு
கட்டத்தில் அப்படியே உறங்கி விட்டார்.
அவரை அள்ளி எடுத்த நாராயணன். படுக்கையில் கிடத்தி, அவரை நன்கு போர்த்தி விட்டார்.
தந்தையின் கண்ணில் தெரியும் அன்பும்.அதற்கு எப்போதும் தாய் காட்டும் பதில் பார்வையும்
ஆயிரம் முறை பார்த்தாலும் தெவிட்டாது ரிதுவுக்கு.
ரிஷி அவள் தோளில் சாய்ந்து,” நம்ம ரொம்ப லக்கி அக்கா.. இப்படி அம்மா அப்பா கிடைக்க, என்
கிளாஸ் பசங்க சொல்றதை கேட்டா வீட்ல இருக்கிறதே நரகம் போலவாம். ஆனா நம்ம வீடு
எப்பவும் கலகலன்னு நல்லா இருக்கு.”
“எல்லாம் உன்னால தான் டா.”, என்றாள்.
“போக்கா புகழாதே.. “,என்று அவன் வெட்கம் காட்ட,
“உன்னை மாதிரி லூசு இருந்தா வீடு அப்படி தான் இருக்கும்.”,என்று சொல்லுன்போதே ரிது
ஓடத்துவங்க,
“ஏய் உன்னை போய் அக்கான்னு மரியாதையா கூப்பிட்டேனே.. “,என்று அவளை துரத்த, வீடு
அழகானது, வாழ்வு அமிர்தானது..
��அகலாதே ஆருயிரே��
��8��
ஹர்ஷா இரண்டு நாட்களாக வீட்டில் யாருடனும் சரியாக பேசாமல் சுற்ற, முதலில் கெஞ்சிய லதா
அவனின் செயலில் கடுப்பாகி, ‘நீயா வந்து பேசுனா பேசு.. இல்லன்னா போ’ என்று அவள்
வேலையில் கவனமானாள்.
ஹர்ஷா அபியை பார்க்க அவன் வீடு செல்ல, சங்கரி மட்டுமே வீட்டில் இருந்தார்.
“அம்மா நான்.. “,என்று ஹர்ஷா ஆரம்பிப்பதற்குள், அவர்
“நீ ஹர்ஷா தானே .. உள்ள வா தம்பி. உன்னை பற்றி அபி நிறைய சொல்லிருக்கான்.”, என்று
அவன் கை பிடித்து உள்ளே அழைத்துப்போனாள்.
சின்ன வீடு தான். ஆனால் நேர்த்தியாக அழகாக இருந்தது. சங்கரி அப்படி வைத்திருந்தார். ஒரு
டேபிளில் சங்கரி தைத்து வைத்த துணிகள் இருக்க, தையல் மிஷினில் பாதி தைத்த ரவிக்கை
இருந்தது.
அவன் அங்கிருந்த நாற்காலியில் அமர, உள்ளே சென்ற சங்கரி கையில் டம்பளருடன் வந்தார்.
அதில் எலுமிச்சை சாறு இருக்க, முதலில் வேண்டாம் என்று மறுத்த ஹர்ஷா, பின் வாங்கிப்
பருகினான். அதன் சுவை அலாதியாக இருந்தது, தட்டில் முறுக்கு கொண்டு வந்து வைத்தார்
சங்கரி. இப்போது மறுக்காமல் அதை வாங்கி உண்டவன், அதன் சுவையில் உண்மையில்
தன்னை தொலைத்தான் என்று தான் சொல்ல வேண்டும்.
“அம்மா எங்க வாங்கின முறுக்கு. நல்லா இருக்கு. “, என்று அவன் சொல்ல, சிரித்த சங்கரி, “நான்
பண்ணினது தான் ஹரி இது”, என்றார்.
இதுவரை யாரும் அவனை ஹரி என்று அழைத்தது இல்லை. சங்கரியின் அன்பான பேச்சும்,
அவரின் சுவையான உணவும் ஹர்ஷாவின் மனதில் அவர் மீதான பாச விதைகளைத் தூவ,
“என்னம்மா அபியை பார்க்கவே முடியல. அதான் வீட்டுக்கு வந்தேன்.”
“அவன் இப்போ வேலைக்கு போறான்பா.”
“படிக்க வேண்டாமா மா. நீங்க சொல்லக்கூடாதா?”
“இன்னும் ரெண்டு மாசத்துல ஸ்வாதிக்கு கல்யாணம் வச்சிருக்கோம் தம்பி, கொஞ்சம் வீட்ல
பணப்போக்குவரத்து கம்மி. அதான் அவன் அவ்ளோ தூரம் வேலைப்போறேன்னு சொன்னதும்
மறுக்க முடியல. அவன் புத்திசாலிப் பையன் பா. படிச்சுக்குவான்.”
“சரிம்மா இப்போ நான் அவனை எப்படி பார்க்க, டியூஷன் வரல, செல்போன் இல்ல. நான் என்ன
செய்ய? “
“காலைல ஆறுமணி டியூஷன் போறான் தம்பி, சாயந்தரம் ஏதோ ஹோட்டல்ல வேலை
செய்யறான். பெயர் தெரியலப்பா.”
காலைல அவ்ளோ சீக்கிரமாவா.. கேட்ட போதே கண்ணை கட்டியது ஹர்ஷாவுக்கு. அதெல்லாம்
ஹர்ஷாவின் கணக்குப்படி நள்ளிரவு நேரம். அவன் எழுவதே பள்ளிக்கு செல்லும் நேரத்துக்கு கால்
மணி நேரம் முன்பு தான். பள்ளி சற்று அருகில் இருப்பதால் வசதி. அதிலும் பலநாள் காலம்
தாழ்த்தியே பள்ளிக்கு செல்வான். அவன் எப்போதும் மிஸ்டர் லேட் தான். அதைப்பற்றி அவன்
கவலைப்பட்டதே இல்லை. இன்று சங்கரி சொல்வதைக் கேட்டவன், அபி அவ்வளவு விரைவில்
டியூஷன் போய், பள்ளிக்கு போய் பின் வேலைக்கு போய்.. நினைக்கவே மலைப்பாக இருந்தது
ஹர்ஷாவுக்கு.
“என்ன ஹரி ஒரே யோசனை?”
“ஒன்னும் இல்ல அம்மா. நான் கிளம்புறேன். அபி வந்தா சொல்லுங்க. நான் எப்படியாவது
அவனை பார்க்கணும்.”
“சரி ப்பா.. “,சங்கரி அவன் கிளம்பி செல்லும்போது, ஒரு பையில் முறுக்கை போட்டு கொடுக்க,
சிரித்த முகமாக வாங்கி சென்றான்.
அவன் கண்களில் அந்த முறுக்கை பார்த்த போது ஏற்பட்ட சந்தோசம் சங்கரி மனதில் ஆழப்
பதிந்தது.
ஆரூ தன் வகுப்பில் கவனம் இல்லாமல் வெளியில் வேடிக்கை பார்த்தபடி இருக்க, ஆங்கில
ஆசிரியை அவளை இருமுறை கண்டித்தார். இருந்தும் அவள் பார்வை வெளியில் பதிந்தே இருக்க,
கடுப்பானவர்,
“ஆருஷி..கெட் அவுட் ஒப் தி கிளாஸ்.”, என்று கத்த, அதற்காகவே காத்திருந்தவள் போல,
பையோடு கிளம்பி விட்டாள்.
அவள் கிரௌண்டில் வந்து அமர்ந்து எங்கோ வெறித்தபடி இருக்க,” நீ எந்த கிளாஸ்..”, என்ற குரல்
வர, திரும்பிப்பார்த்தாள்.
அங்கே நெடு நெடு உயரத்தில் ஒருவன் அதே பள்ளி சீருடையில் நிற்க, “உங்களுக்கு என்ன
வேணும். நான் எந்த கிளாஸ் படிச்சா உங்களுக்கு என்ன?”
“கிளாஸ் டயம்ல வெளில இருக்கியே அதான் கேட்டேன்.”
“நீங்க கூட தான் வெளில இருக்கீங்க?”
“அட நீ வேற.. அறிவா கேள்வி கேட்டேன் அதான் தமிழம்மா துரத்தி விட்டுட்டாங்க.”, என்றான்
சோகமாக,
“அப்படி என்ன அறிவா கேட்டிங்க?”
“பல குறுங்காப்பியங்களுக்கு ஆசிரியர் பெயர் இல்லை. இவாராக இருக்கலாம் என்று
கருதப்படுகிறது அப்படின்னு சொன்னாங்க.”
“சரிதானே..”
“என்ன சரி.. இவரா இருக்கலாம் னு யார் சொன்னா அந்த குறிப்பு இருக்கான்னு கேட்டேன்.
வெளில நிக்க சொன்னாங்க..”
“வெளில நிற்க தானே சொன்னாங்க? அப்பறம் ஏன் வெளில வந்துட்டீங்க?”
“முழுசா கேளு மா. வெளில நின்னேன்.அப்போ தலைவனை பார்க்காமல் பசலை நோய் வந்த
தலைவியின் இடையின் மேகலை தானே கழன்றதுனு சொன்னாங்க. இப்போ யாருக்கு
இடைன்னு ஒன்னு இருக்கு. அதுவும் இல்லாம எந்த தலைவி இப்போ தலைவனுக்காக
ஏங்குறாங்க. எப்போ அப்பா ஆஃபீஸ் கிளம்புவார்ன்னு பார்க்கற அம்மா தான் இருக்காங்கன்னு
சொன்னேன். கண்ணு முன்னால நிக்காதன்னு சொல்லிட்டாங்க.”
சிரித்த ஆருஷி, “உண்மை தான். இப்போ தலைவனும் இல்ல, தலைவியும் இல்ல.. ஒரே வீட்ல
இருந்துக்கிட்டே வாட்சப்ல பேசுற ஜென்மங்கள்.. “, என்றாள் கசப்புடன்.
“இங்க பாரு மா. நீ யார்ன்னு கூட எனக்கு தெரியாது. ஆனா ஒன்னு சொல்றேன் கேளு. மனசு
கடினமான ஒன்னு தான். ஆனா எல்லா சூழ்நிலையிலும் மனசுல ஏற்படற வலிகளை
வேதனைகளை அப்படியே விடக்கூடாது. சின்ன சின்ன விஷயம் தானேனு நினைக்க கூடாது.
கேள்விப்பட்டருக்கியா?
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.
அதாவது மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்)
அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
மனசும் அப்படித்தான். ரொம்ப உளப்பாதே..”
“சரி.. உங்க பேர் என்ன.. “
“நிதீஷ் மா பிளஸ் டூ..”
“நான் ஆருஷி பிளஸ் ஒன்.”
“ரொம்ப வெறுத்துப்போய் இருக்க போல.”
“ஆமா அண்ணா..என் பிரென்ட் வரல.”
“பிரென்ட் தானே வரல.. நீ கிளாஸ் கவனிச்சு நாளைக்கு அவளுக்கு சொல்லிக்கொடுத்தால், அவ
எவ்ளோ சந்தோசப்படுவா..”
“உண்மை தான் . ஆனா இன்னிக்கு வரை இப்படி அவ பேசமா இருந்ததே இல்லை. எனக்கு
என்னவோ கஷ்டமா இருக்கு.”
“ஒன்னும் இல்ல சரியா.. நேர்ல போய் பார்த்து பேசிட்டு வீட்டுக்கு போ.”
“ம்ம்.. சரிங்க அண்ணா..”
இருவரும் பேசிக்கொண்டு இருப்பதை பார்த்த ஒரு ஆசிரியை அவர்கள் ஓய்வறையில் சென்று
இதை பற்றி பேச, ‘அவர்களோ காலம் மாறி விட்டது. இதுங்க எல்லாம் தெரிஞ்சதுங்க..’ என்று
நாகூசாமல் பேசிக்கொண்டு போக. ராதாவால் அங்கே இருக்க முடியவில்லை . எழுந்து வெளியில்
வர,
“அப்பறமா பார்க்கலாம் மா. நான் வறேன்.”, என்று நிதிஷ் கிளம்ப,
ராதா ஆருஷி அருகில் வந்து ,”என்னமா. கிளம்பலயா?. ரிது வரலையா?”
“கிளம்பணும் மிஸ்.. அவ நாளைக்கு வருவா..” என்று சொல்லிவிட்டு அவள் வேகமாக அங்கிருந்து
செல்ல.
ராதாவும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை.
இவர்கள் பேச்சுக்கெல்லாம் நாயகியோ.. காய்ச்சல் கண்டு எழ முடியாமல் படுத்துருக்கிறாள் .
அவளை காண வீட்டுக்கு கோவமாக சென்ற ஆரு. அவளின் நிலை கண்டு கண்களில் நதியை
பிரவாகம் செய்ய வைக்க, ரிது தான் அவளை சமாதானம் செய்து அனுப்பி வைத்தாள்.
அவர்கள் இருவருக்குமான அன்பு இன்று மட்டும் இல்லை.. ஜென்மம் முழுதும் தொடரும்.
அபியின் கைகளில் இருந்த பார்சல் பெரியதாக இருக்க என்ன என்பது போல சுரேஷை பார்க்க,
“சாப்பிட வேண்டாமா..”
“அதான் இங்க சாப்பிட்டேனே.”
“வீட்ல குடு ப்பா..”
“சரி “, என்று கிளம்பி வர, வீட்டில் ஒரே கலவரம், பெரிய அக்கா ,ஸ்வாதியின் புடவை ஒன்றை
எடுத்துக்கொள்ள, சின்னவள், பொறுக்க மாட்டாது சண்டை இட, அபி தலையை
பிடித்துக்கொண்டு வாசலலில் அமர்ந்தவன், சில நேரத்திற்கு பின்னும் தொடர்ந்த பேச்சை கேட்டு
கொண்டு நிறுத்த சொல்லி கத்த,
பெரியவாளின் அருகில் சென்றவன்,” நீ எங்கே இங்க? “, என்றான். அது இரவு பதினொன்று.
அதனால் அவன் அப்படி கேட்க,
“இது என் அம்மா வீடு. நான் வருவேன்.”, என்று சட்டமாக சொன்னாள்.
“இருக்கட்டும். ஆனா இப்படி நாடு ராத்திரில
அடிச்சுகணுமா..”
“இப்போ என்ன டா.”
“நான் தூங்கணும்.”, என்று அபி சொல்லும்போதே, அவன் கையில் இருந்த உணவுபோட்டலாம்
ரேகா கண்ணில் பட, வீடு அமைதியானது.
இனி அம்மாவுக்கு கடை உணவு இல்லை என்று கவலை வந்தாலும், அம்மா அதை பெரிதாக
எடுத்துக்கொள்ள மாட்டாள் என்று நம்பிகையுடன் படுத்தவனை அடுத்தநாள் டியூஷனில்
பிடித்தான் ஹர்ஷா..
சூப்பர்…. அன்ட் வெரி நைஸ் கோயிங்.
Arumai sis
Good epi