Skip to content
Home » அத்தியாயம் 8

அத்தியாயம் 8

அத்தியாயம் 8

பாதைகள் விரிவானால் பயணங்கள் புதிதாகும்; புதிதான பயணங்கள் அனுபவங்களை பெற்று தரும். அப்படியான அனுபவத்தை தன்னை அறியாமலே பெற வந்திருந்தாள் பிரத்தியங்கரா.

கடவுளை கண்டதும் தன்னை அறியாமலே கைகூப்பானால் பிரத்தியங்கரா. என்னமோ மனதில் கிடந்து அல்லாடியது. இன்னதென்றே சொல்ல முடியவில்லை. கண்ணார தெய்வத்தை கண்டாலே போதும், வேண்டுதல் எதுவும் வைக்காத நிலையில் இருந்தாள் பிரத்தியங்கரா.

பெரியதாக அவளுக்கு கடவுள் பக்தி உள்ளது என சொல்லி விட முடியாது. முக்கியமான விஷேஷ நாள்கள், சனிப்பெயர்ச்சி மற்றும் குருப்பெயர்ச்சி என்றால் அருகில் இருக்கும் கோவில்களுக்கு பெற்றோருடன் செல்லுவாள். போனால் எப்பொழுதடா வீட்டிற்கு வருவோம் என்று மனநிலையே இருப்பாள். ஆனால் இந்த கொல்லிமலை மட்டும் அவளது எண்ணங்கள் ஒவ்வொன்றாக மாற்றிக் கொண்டே வந்தது.

கொஞ்சம் விட்டால் அழுதிருப்பாள். காரணம் என்னவென்றே அவளாலே சொல்ல முடியாது. தான் ஏன் இப்படி இருக்கிறோம் என யோசித்தாலும் அவளுக்கு விடை கிடைக்கவில்லை.

தன் எனும் அகத்தை கடந்து உள்ளே சென்றால் மட்டுமே அந்த தெய்வீக சுகந்தத்தை உணர முடியும். அழுது தொழுதலை புரிந்து கொள்ள முடியும். அதன் முதற் படியில் தான் பிரத்தியங்கரா இப்பொழுது உள்ளாள்.

“தீபம் எடுத்துக்கோம்மா…” என இம்முறையும் பூசாரி வந்து சொன்ன பொழுது தான் கலைந்தாள் பிரத்தியங்கரா.

சாமி கும்பிட்டுவிட்டு காரில் வந்து ஏறினாள் பிரத்தியங்கரா.

“ரூமுக்கு போயிடளாங்களா இல்லை வேற எங்கையாச்சும் போலாங்களா மா?” என சக்திவேல் கேட்டார்.

நேற்று ஒரு நாளைக்கே அவளுக்கு தனியாய் இருந்து அலுத்து போய் விட்டது. இன்றைக்கும் அப்படியே என்றால் தாங்காது பெண்ணுக்கு.

“வேற எங்கை நல்லா இருக்கும் ண்ணா?” என கேட்டாள் பிரத்தியங்கரா.

“மலையை சுத்தி நிறைய கோவில் தான் மா இருக்கு. கீழ போனா தான் உங்களுக்கு தேவையான கடை கண்ணிலாம் இருக்கும்.” என்றார் சக்திவேல்.

“ஓஓஓ… அப்ப எந்த கோவில் நல்லா இருக்குமோ அந்த கோவிலுக்கு போங்கண்ணா…”

“மாசி பெரியசாமி கோவிலுக்கு போவோமாம்மா… நல்ல துடியான சாமி. வேண்டினா கண்டிப்பா நடக்கும்.” என சக்திவேல் சொல்ல, சிரித்து விட்டாள் பிரத்தியங்கரா.

“ஏன் மா சிரிக்கறீங்க?” என சக்திவேல் கேட்க,

“இதே மாதிரி தான் எட்டுக்கை அம்மனுக்கும் சொன்னீங்க… விட்டா எல்லா சாமிக்கும் சொல்லுவீங்க போலையே…” என்றாள் பிரத்தியங்கரா.

“உங்களுக்கு சாமி மேல நம்பிக்கை இல்லை போலையே பாப்பா.” என்றார் சக்திவேல்.

சக்திவேல் பாப்பா என்றது பிரத்தியங்கராவிற்கு பிடித்திருந்தது. அவளை யாரும் அப்படியெல்லாம் அழைத்தது இல்லை.

மலைக்குள்ளாகவே சுற்றி சுற்றி கார் போய் கொண்டே இருந்தது. பிரத்தியங்கராவிற்கு அலுப்பு தெரியாமல் இருக்க, அங்காங்கே வண்டியை நிறுத்தி வ்யூ பாயின்ட்களை காட்டிக் கொண்டே வந்தார் சக்திவேல். அத்தனையையும் தன் அலைபேசியில் படம் பிடித்து வைத்துக் கொண்டாள் பிரத்தியரங்கரா.

நீண்ட நேரம் காரிலே பயணித்து வந்தனர். வரும் வழியில் இருந்த ஊர்களை பற்றி பேச்சு கொடுத்துக் கொண்டே வந்தார் சக்திவேல். அந்த ஊரின் பெயர்களே கேட்டதும் என்னமோ மன்னர்கள் காலகட்டத்திற்குள் நுழைந்துவிட்ட உணர்வு அவளுக்கு.

ஒரு வழியாக மாசி பெரியண்ண சாமி கோவில் இருக்கும் மலையடிவாரத்திற்கு வந்து சேர்ந்தனர் இருவரும்.

“இங்க இருந்து எப்படி போறது அண்ணா?” என்று கேட்டாள் பிரத்தியங்கரா.

“இப்படியே ஒத்தையடி பாதையில நடந்து போனா கொஞ்ச நேரத்துல கோவில் வந்துடும் பாப்பா.” என்றார் சக்திவேல்.

அடிவார கடையிலே பூஜைக்கென பழத்தட்டை வாங்கிக் கொண்டு இருவரும் நடக்க ஆரம்பித்தனர்.

மலையில் நடந்து ஏறுவது புது அனுபவமாக இருந்தது பிரத்தியங்கராவிற்கு. பிறந்தது முதல் எல்லாமே சென்னை தான் அவளுக்கு. அம்மா வீட்டு விஷேஷத்திற்கு என ஊர் பக்கம் சென்றாலும், இப்படியான அடர்த்தியான காடுகளையோ மலைகளையோ அவள் பார்த்ததில்லை. எல்லாம் பரவசமாக இருந்தது அவளுக்கு. எல்லாவற்றையும் தன் அலைபேசியில் சேமித்துக் கொண்டே சென்றாள்.

அரைமணி நேரம் சென்றிருக்கும்.

“அண்ணா இன்னும் எவ்வளவு தூரம் ண்ணா?” என மூச்சிரைக்க முட்டியை பிடித்துக் கொண்டே கேட்டாள் பிரத்தியங்கரா.

“கொஞ்ச நேரம் தான். ஒரு லெவலுக்கு வந்திடுவோம்.” என்றார் சக்திவேல்.

(பக்கத்துல வந்திடுவோம்)

“மலை ஏற ஆரம்பிச்சதுல இருந்து இதே தாண்ணா சொல்லுறீங்க. பேசாம திரும்பி போயிடலாமா?” என கேட்டாள் பிரத்தியங்கரா.

அவளுக்கு கால்கள் எல்லாம் கிடுகிடுவென நடுங்கியது.

“வந்துட்டோம் வந்துட்டோம்…” என சொல்லி சொல்லியே அவளை சமாதானம் செய்து அழைத்துக் கொண்டு சென்றார் சக்திவேல்.

பல யுகங்களை போல கடந்த சில நிமிடங்களுக்கு பிறகு, வெட்டவெளி தெரிந்தது. பாறையாக இருந்த இடத்தில் சென்று அமர்ந்து விட்டாள் பிரத்தியங்கரா.

“இதுக்கு மேல என்னால முடியாதுண்ணா…” என்றாள் திட்டவட்டமாக.

“கோவிலே வந்துடுச்சு பாப்பா…” என சிரித்தபடியே சொன்னார் சக்திவேல்.

பிரத்தியங்கராவாவது அங்கே அங்கே உக்கார்ந்து வந்தாள். சக்திவேல் அது எதுவுமே அல்லாது ஒரே நடையாக நடந்தே மேலே வந்துவிட்டார். அதுவே பெரிய ஆச்சரியமாக இருந்தது பிரத்தியங்கரவிற்கு.

சக்திவேலிடம் பேசிக் கொண்டு இருக்கும் பொழுது, அருகில் ஏதோ சத்தம் கேட்பது போல இருக்க, திரும்பி பார்த்தாள் பிரத்தியங்கரா. அங்கே ஒரு வேலில் சேவலை உயிருடன் குத்தி வைத்திருந்தனர். அந்த சேவல் இட்ட சத்தத்தை கேட்டு தான் திரும்பினாள் பிரத்தியங்கரா.

உயிருடன் இருந்த சேவலை கண்டதும், பயத்தில் கத்தி விட்டாள்.

“ஒன்னுமில்ல பாப்பா… சேவல் தான். நேர்த்திக்கடனுக்கு குத்தி வச்சிருக்காங்க. பயப்படாத…” என்று சிரித்தார் சக்திவேல்.

பிரத்தியங்கராவிற்கு அசிங்கமாகிவிட்டது.

அதற்கு மேல் அங்கேயே அமராமல் கோவிலுக்கு சென்றாள்.

எட்டுக்கை அம்மன் கோவில் இருப்பது போல அத்தனை வேண்டுதல் மணிகளும் சீட்டுகளும் கட்டி தொங்கவிட்டிருந்தனர். அவையெல்லாம் நம்பிக்கையோடு தெய்வத்தை வந்து தொழுதுவிட்டு போனவர்களின் எண்ணிக்கை. 

“மாசி மாசம் இங்கன பெரிய திருவிழாவே நடக்கும் பாப்பா. 21 ஊர் ஆளுங்க வருவாங்க. நல்ல விஷேஷமா இருக்கும்.” என சக்திவேல் சொல்ல சொல்ல பிரம்மிப்பாக இருந்தது பிரத்தியங்கராவிற்கு.

இந்த சின்ன கோவிலுக்கு அதுவும் இவ்வளவு தூரம் மலையேறி வர வேண்டிய ஒரு கோவிலுக்கு, 21 ஊர் மக்கள் ஒன்றிணைந்து திருவிழா கொண்டாடுவது எப்படி சாத்தியம் என்றே தோன்றியது அவளுக்கு!

அவளுக்கான பதில் மாசி பெரியண்ண சாமியை கண்டதும் தெரிந்தது. உடல் வெளிப்படையாகவே சின்ன நடுக்கத்தோடு சிலிர்த்தது. மனம் பயப்படுவது போலவும் இருந்தது அதே சமயம் தைரியமாக இருப்பது போலவும் இருந்தது பிரத்தியங்கராவிற்கு. எட்டுக்கை அம்மனை போல பெரியண்ண சாமியை அவளால் கண் கொண்டு பார்க்க முடியவில்லை. கண்களை இறுக மூடிக் கொண்டு, உள்ளத்தால் மட்டுமே கடவுளை உணர்ந்தாள்.

கண்களை மூடிக் கொண்டே இருந்தவளுக்கு எதிரோ யாரோ இருப்பது போல் தோன்ற, கண்களை திறந்தாள் பிரத்தியங்கரா. மஞ்சள் சேலையில் சிவப்பு நிறத்தில் ஆங்காங்கே பூக்கள் இட்ட ஒரு பழைய சேலை கட்டிக் கொண்டு ஒரு மூதாட்டி அங்கே நின்றுக் கொண்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தார். பிரத்தியங்கராவும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்.

சற்று நேரத்திற்கெல்லாம் அந்த மூதாட்டி சாமி வந்து ஆட, பயந்தே போய்விட்டாள் பிரத்தியங்கரா. இதையெல்லாம் அவள் இவ்வளவு அருகில் பார்த்ததே இல்லை. அச்சப்பட்டு ஒளிந்து கொள்ள, அன்னையும் தந்தையும் வேறு அருகில் இல்லை.

“யாரு வந்திருக்கறது?” என பூசாரி வந்து அந்த மூதாட்டியிடம் கேட்க,

“நான் தான்… பெரியண்ணன் வந்துருக்கேன். உஷ்… உஷ்…” என்றார் அந்த மூதாட்டி.

கைகள் இரண்டையும் தலைக்கு மேலே கோர்த்துக் கொண்டு உடலை நெளித்து, வாயால் மூச்சு விட்டுக் கொண்டு இருந்தார்.

“வேளா வேளைக்கு எல்லாமே சரியா தானே பண்ணுறோம். இப்ப எதுக்கு ஐயா நீ இந்த கிழவி உடம்புல வந்துருக்க?” என சாதாரணமாக சாமியோடு பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டு இருந்தான் பூசாரி.

அப்பொழுது தான் இதெல்லாம் இங்கு சகஜம் என்பதே புரிந்தது பிரத்தியங்கராவிற்கு.

“உன்னை பாக்க நான் வரலை… உஷ்…உஷ்… என்‌ மண்ணை மிதிச்ச பொண்ணை பாக்க வந்தேன்.” என்றார் அந்த மூதாட்டி.

“உன் மண்ணை தினமும் தான் பொண்ணுங்க மிதிக்கறாங்க… அதுல நீங்க யாரை சொல்லுறீங்க ஐயா?” என்று கேட்டார் பூசாரி.

“இதோ… எனக்கு எதிரில நிக்குதே அந்த பொண்ணு. அதை தான் டா சொல்லுறேன். உஷ்… உஷ்…” என அந்த மூதாட்டி சொல்ல, சுற்றி இருந்தவர்கள் அனைவரும் பிரத்தியங்கராவையே பார்த்தனர்.

அசட்டையாக மூதாட்டி பேசுவதை கவனித்துக் கொண்டிருந்தவள், திடீரென தன்னை பார்த்து அவர் ஏதோ சொன்னதும் அதிர்ச்சிக்கு உள்ளானாள்.

“ஏ பொண்ணே… இங்க வா…” என அந்த மூதாட்டி அழைக்க, மிரண்டு போய் பார்த்தாள் பிரத்தியங்கரா.

“பக்கத்துல போ பாப்பா…” என்றார் சக்திவேல் பயபக்தியோடு.

பிரத்தியங்கராவும் தயங்கி தயங்கி அவர் அருகில் செல்ல, பூசாரி தட்டில் வைத்திருந்த விபூதியை அள்ளி, அவள் தலைமீது தெளித்த மூதாட்டி, “நம்பிக்கை இல்லாம வந்த மவராசி. நம்பு உன் குலசாமி கொல்லிய நம்பு! அவ தான் உன்னை காப்பாத்துவா! ஏழேழு ஜென்மத்துக்கு அவளே உனக்கு காவலா இருப்பா… பதிலுக்கு நீ அவளை மட்டும் நம்பு! உன்‌ பிரச்சனை எல்லாம் பனியா போகும்!” என்று சொல்லி அவளது நெற்றியில் திருநீறு பட்டையை போட்டுவிட்டு, மயக்கம் போட்டு சரிந்தார்.

“சாமியை மலையேத்துங்கப்பா…” என யாரோ சொல்ல,‌ பூசாரி அந்த மூதாட்டிக்கு தீபம் காட்டிக் கொண்டு இருந்தார்.

பிரத்தியங்கராவிற்கு பயத்தில் என்ன‌ பேசுவதென்றே தெரியவில்லை.

சுற்றி இருந்தவர்கள் எல்லோரும், “பயப்படாத தாயி. அதான் பெரியண்ண சாமியே சொல்லிடுச்சே எட்டுக்கை அம்மா எல்லாத்தையும் பாத்துக்கும். நீ பயப்படாம வீடு போயி சேரு.” என சொல்லி சென்றனர்.

மலை ஏறுவதை விட இறங்குவது எளிமையாக இருந்தது பிரத்தியங்கராவிற்கு. வேக வேகமா இறங்குவது போல இருந்தது. பாதையில் கவனம் இருக்க, மனம் தேவையில்லாது யோசிக்காமல் ஒருநிலைபட்டது‌ அவளுக்கு. கிட்டதட்ட ஒரு சாகச பயணம் போலே இருந்தது அவளுக்கு.

3 thoughts on “அத்தியாயம் 8”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *