அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்
அத்தியாயம் 1
வாருங்கள் வாசக அன்பர்களே!
இது ஒரு பத்தொன்பதாம் நூற்றாண்டினை பின்புலமாக கொண்ட
கதை.
இதற்கு உங்கள் கண்களில் நீங்கள் அணிந்திருக்கும் நவீன கண்ணாடி உதவாது.
ஆகையினால் அதை கழட்டி விடுங்கள். இப்போது பரண் மேல் இருக்கும் உங்கள் தாத்தாவின்
தாத்தா காலத்து பழைய கண்ணாடியை எடுங்கள். ஆங், அதேதான். நன்றாக துடைத்து கண்களில்
மாட்டி கொள்ளுங்கள். என்னோடு கூட இந்த கதையில் பிரயாணப்பட போகிறீர்கள். கதை
மாந்தர்களோடு அவர்களின் குணாதிசயங்கள் எதிர் கொள்ள போகிறீர்கள்.
தயாரா? வாருங்கள். போகலாம்.
வேட்டுவமங்கலம் சமஸ்தானத்துக்கு போகும் ராஜபாட்டையில் அந்த குதிரை பறக்கவும் இல்லை.
அதற்காக நடக்கவும் இல்லை. ஒய்யாரமாக ரொம்பவும் நிதானமாக சென்று கொண்டிருந்தது
பொங்கல் முடிந்து பத்து நாட்களாகி இருந்தது. போகி பண்டிகையில் தொடங்கி கடந்த பத்து
நாட்களாக விழாக்கோலம் பூண்டிருந்த நாடு பொங்கலுக்கே உண்டான கொண்டாட்டங்களில்
ஆடி களைத்திருந்தது. ஜல்லிக்கட்டிற்கு போய் வந்திருந்த காளைகள் ஓய்விற்காக அவிழ்த்து
விடப்பட்டிருக்க காளைகளை அடக்கிய காளைகள் தாங்கள் விரும்பிய பெண்ணிற்கு பரியம்
போட எப்போது அழைப்பு வரும் என காத்திருந்தார்கள். தையும் பிறந்து விட்டது. இனி வழியும்
பிறக்க வேண்டுமல்லவா..!
பின்பனி காலத்தின் குளிர் காற்று, உத்தராயண காலம் தொடங்கிவிட்டதால் தெற்கிலிருந்து
வடக்கு நோக்கி, பாராட்டு பெறும் பள்ளி மாணவனை தட்டி கொடுப்பது போல முதுகில் தட்டி
கொண்டிருந்தது. .விடிந்து இரண்டே முக்கால் நாழிகை ஆகியிருந்தது. இளஞ்சூரியனின் இதமான
காலை கதிரின் சூடு பனிக்காற்றுக்கு சுகமாயிருந்தது சூரியனார் பொங்கலுக்காக புத்தரிசி
வேண்டி அறுத்தது போக மீதி அறுவடைக்கு அறுப்பு அறுக்க அந்த விடியற்காலை பொழுதில்
வயலுக்கு போய்கொண்டிருந்த குடியானவர்கள் குதிரையின் மேல் வருபவனை பார்த்து ஒதுங்கி
நின்றார்கள் பழக்க தோஷத்தில் குதிரையின் மேல் வருபவன் அரசு அதிகாரியாகதான் இருக்க
வேண்டும் என்ற மனக்கணக்கில் அவசர அவசரமாக தலையை சுற்றியிருந்த முண்டாசை
அவிழ்த்து கக்கத்தில் வைத்து கொண்டு முன்னால் வளைந்து கும்பிட்டார்கள். பெண்கள் சற்றே
பின்னுக்கு தள்ளி நின்று கும்பிட்டார்கள். நன்றாக முற்றி தலை சாய்த்து இருந்த செங்கதிர்
நெல்மணம் பரப்பி நின்றது.
தூரத்தில் சுயம்பு ஆதி விஸ்வநாதர் கோயில் காண்டாமணி டாண் டாண் என்று ஒலித்து
கொண்டிருந்தது. விடியற்காலை பூஜை முடிந்து தீபாதாரனை நடந்து கொண்டிருக்கும். தை
மகோதய அமாவாசையை முன்னிட்டு கோயிலுக்கு போவோர் சுற்றுபட்டு கிராமங்களில் இருந்து
பூக்காவடி பன்னீர் காவடி பால்குடம் என்று பூஜைக்குரிய பொருட்களை மங்கள இசை முழங்க
கொண்டு சென்று கொண்டிருந்தார்கள்.
“அரகர சம்போ மகாதேவா” என்றும் “ஓம் நமசிவாயா” என்றும் கோஷம் இட்டு கொண்டும்
சிவஸ்துதி சொல்லி கொண்டும் பஜனை பாடல்கள் ஆடல்களுடன் கூட்டம் கூட்டமாக எதிர்
திசையில் நகரத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார்கள். இப்படி நடைபயணமாக வருவோருக்கு
ஆங்காங்கே கிராம மக்கள் நீர் மோர் பானகம் பழங்கள் அவல் பொறி வேர்கடலை வெல்ல
சர்க்கரை என்று வழங்கி கொண்டிருந்தார்கள்.
குதிரையின் மேல் பயணம் கிளம்பியவன் இதை எல்லாம் பார்த்து கொண்டு சென்று
கொண்டிருந்தான். மனதிற்குள் நான் பிறந்த இந்த நாட்டுக்கு எந்த நாடு பெரியது? என்று தன்னை
தானே கேள்வி கேட்டு கொண்டான். எந்த நாடும் பெரியதில்லை என்று உறுதியாக நம்பினான்.
இங்கு ஆணும் பெண்ணும் வாழும் வாழ்க்கை மிக சிறந்தது. இவர்களுடைய உழவு
தொழிலாகட்டும் ஆன்மீகமாகட்டும் இந்த நாட்டின் பிரஜைகள் ஒரு அற்புதமான வாழ்க்கை
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மிகவும் மகிழ்ச்சியாக சமாதானமாக இயல்பாக நாளைய பற்றிய
கவலை இல்லாமல் அமைதியாகக் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இன்றைய இந்த பயணத்தை தான் மேற் கொள்ளாவிடில் வீணாக ஒரு போர் மூள கூடும். இதை
தவிர்ப்பதற்காகவே தனக்கு சற்றும் விருப்பம் இல்லாத இந்த பயணத்திற்கும் அதனால் தன்
வாழ்வில் ஏற்பட போகும் பெரும் மாற்றத்திற்கும் தான் இசைந்தது மிகவும் நியாயமானதே என்று
தன்னை தானே சமாதானப்படுத்தி கொண்டான்.
இரண்டு கல் தொலைவு சென்றதும் ராஜபாட்டையில் இடது புறம் ஒரு சாலை பிரிந்தது. அது
தெற்கே உள்ள சொக்கநாதபுரம் என்னும் தென்னாடு நாட்டுக்கு போகும் ராஜபாட்டை. அதை
ஆளும் மன்னர் ராஜ கேசரி சுந்தர உடையார் தன் தந்தையை அழைத்து பேசியதாக தந்தை
சொன்னதையும் அதனால் தான் இந்த பயணத்தை மேற்கொள்ள வேண்டிய நிர்பந்தத்தையும்
தனக்குள் நினைத்து பார்த்து கொண்டான். ஒரு நீண்ட பெருமூச்சு விட்டான்.
இடது புறம் சொக்கநாதபுரம் சமஸ்தானத்திற்கு போகும் ராஜபாட்டையில் திரும்பாமல் வலது
புறம் திரும்பி வட திசை நோக்கி நேராக சென்றான். சற்று தூரம் சென்றதும் ஒரு தாமரைகுளம்
தென்பட்டது. எதிர் கரையில் குடியானவர்கள் மாடுகளை வைக்கோல் பிரியால் தேய்த்து கழுவி
குளிப்பாட்டி கொண்டிருந்தார்கள். வடகரையில் வண்ணான்மார்கள் தோய்த்த துணியை காய
வைத்து கொண்டிருந்தார்கள். ராஜபாட்டையை ஒட்டிய படித்துறையில் சில பெண்கள் துணி
துவைத்து கொண்டும் சில பெண்கள் குளித்து கொண்டும் இருந்தார்கள். சிறுவர்கள் ஓடி நீருக்குள்
பாய்ந்து துழாவி விளையாடி கொண்டிருந்தார்கள். ஆகையினால் அவன் படித்துறையில்
இறங்காமல் பக்கவாட்டில் மண் சரிவில் குதிரையை நடத்தி நீர் அருகே வந்து குதிரையிலிருந்து
இறங்கினான். கையோடு வழி பயணத்திற்கு கொண்டு வந்த உணவு மூட்டையை பிரித்து உண்டு
விட்டு சற்று நேரம் மர நிழலில் படுத்திருந்தான். சூரியன் உச்சிக்கு மேலிருந்தது.
போகும் வழியில் காணப்படும் சிறு சிறு விடுதிகளில் தங்க வேண்டாம் என்றும் மாலை சாயும்
வேளையில் சகல சொவ்கரியங்ககளும் உள்ள அம்மாவன் விடுதியை அடைந்து அங்கே தங்கி
கொள்ளுமாறு தந்தை சொன்னதை நினைத்து எழுந்து பயணத்தை தொடர்ந்தான்.
சூரியன் மலை வாயில் விழும் நேரத்தில் வேட்டுவமங்கலத்தின் எல்லையில் இருந்த அந்த
அம்மாவன் விடுதிக்கு வந்து சேர்ந்தது அந்த குதிரை. விடுதி காப்பாளன் வெளியே வந்து முகமன்
கூற முனைந்தவன், குதிரையின் மேல் வீற்றிருப்பவனை கண்டு, ஒரு நிமிடம் குழம்பி தயங்கி
நின்றான். வந்திருப்பவன் யாராக இருக்கும்? ஏதேனும் அரசு அதிகாரியா? ஆடை ஆபரணங்களை
பார்கையில் உயர்குடியை சார்ந்தவனாக இருக்குமோ? முகத்தில் தென்பட்ட மிடுக்கும்
குதிரையின் மேல் அமர்ந்திருந்த தோரணையும் லாவகமும்………! அரச குடும்பத்தை சார்ந்தவனா?
யோசனையுடன் சற்றே உற்றுநோக்கினான்.
சாயலை பார்த்தால் இளவரசர் வீர குமரப்ப பூபதி போல அல்லவா இருக்கிறது? இளவரசர்
குமரப்ப பூபதி நடுத்தரத்திற்கு சற்றே உயரம். மாநிறம். இந்த சின்ன வயதிலேயே அநேக
போர்களங்களில் பங்கெடுத்து கொண்டு பல வெற்றிகளை கண்டவன். ஆதலால், ஒரு ஆணவமும்
செருக்கும் கண்களில் புலி ஒத்த பார்வையும் இருக்கும். .பட்டத்து இளவரசர் ஆதலால், நடை
உடை பாவனையில் ஒரு அதிகாரம் தென்படும். மொத்தத்தில் அகன்று விரிந்த தோள்களும் வீரம்
செறிந்த நடையும் புலி போல சதா சுற்றி சுழலும் பார்வையும் காண்பவருக்கு சிறிது அச்சத்தையே
கொடுக்கும்.
ஆனால் இந்த மனிதனை பார்த்தால் கண்களில் ஒரு கருணை தெரிகிறது. நல்ல உயரம் சிவப்பு
நிறம் அகன்ற தோள்களும் நீண்ட கரங்களும் நல்ல வீரனாக தெரிகிறது. நன்கு படித்தவர் போல
ஒரு நிதானம் தெரிகிறது. முகம் களையாகவும் கம்பீரமாகவும் இருந்தது வெள்ளைக்காரர்கள்
அணியும் கால்சராய் அணிந்திருந்தான். தலையில் தொப்பி வைத்திருந்தான். இடுப்பில் கத்தியா?
புதிதாக ஒரு ஆயுதம் வந்துள்ளதாமே துப்பாக்கி என்று அதுவாக இருக்குமோ? தெரியவில்லை
இளவரசர் குமாரப்ப பூபதி இப்போது தான் ஒரு மாதம் முன்னம் வந்து விட்டு வேட்டுவமங்கலம்
சென்றார். அடடா இப்போது நினைத்தாலும் மலைப்பாக உள்ளது. எத்தனை பரிவாரம்……………!
என்ன ஒரு டாம்பீகம், அத்தனை பேரையும் கவனித்து உணவளித்து உபசாரம் செய்ததில் நல்ல
வரும்படி கிடைத்ததே. வரும்படியையும் மீறி நல்லபடியாக அந்த கோபக்கார முரட்டு
இளவரசனை நல்லப்படியாக உபசரித்து அனுப்பிட வேண்டிய படபடப்பு அடங்க இதோ இந்த
ஒரு மாதமும் போதவில்லையே.
இவரோ தனி ஆளாக அல்லவோ வந்திருக்கிறார். யார் என்று கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்
என்றால் ஒருவேளை அரச குடும்பத்தினராக இருந்து தனக்கு அவர்களைத் தெரியவில்லை
என்பதைக் காட்டிக் கொண்டு விடக்கூடாது. எதற்கும் முன்னேசெரிக்கையுடன் இருப்பது நல்லது.
முதுகை முன்னால் வளைந்து கும்பிட்டு “வாருங்கள் மகாராஜா” என்றான்.
லாவகமாகவும் இயல்பாகவும் குதிரையை விட்டு இறங்கி, வந்து நின்ற பணியாளனிடம்
குதிரையை ஒப்படைத்துவிட்டு, குதிரையை முதுகில் செல்லமாக தட்டினான், அதுவும் புரிந்து
கொண்டு தலையை ஆட்டிக்கொண்டு சென்றது. பின் திரும்பி, தன்னையே அவ்வளவு நேரமாக
பார்த்துக் கொண்டு யார் என்று கேட்க தயங்கி நிற்கும் விடுதி காப்பாளனிடம் தன் முத்திரை
மோதிரத்தை காண்பித்தான்.
அதை பார்த்தவுடன் முன்னிலும் அதிகமாக வளைந்து “இளவரசே வரவேண்டும் நீராடவும்
உணவருந்தவும் சகல ஏற்பாடுகளும் தயாராக இருக்கிறது .ஓய்வெடுங்கள் இளவரசே” என்றான்
பவ்வியமாக.
மேல் மாடத்தில் ஒதுக்கபட்டிருந்த அந்த அறை நல்ல காற்றோட்டமாக இருந்தது .உப்பரிகையை
திறந்ததும் ஊதக்காற்று சில்லென்று வீசியது. நிலா வெளிச்சத்தில் ஏரியில் நீர் நிரம்பியிருப்பது
தெரிந்தது. சளக் புளக் என்று தவளைகள் நீரில் குதிக்கும் சத்தம் கேட்டு கொண்டிருந்தது.
நெஞ்சிற்கு குறுக்கே கரங்களை கட்டியவாறு நிலைப்படியில் சாய்ந்து கொண்டு எதிரே தெரிந்த
வேட்டுவமங்கலத்தின் ராஜபாட்டையில் பார்வையை பதித்து ஆழ்ந்து சிந்தித்து கொண்டிருந்தான்
அவன் அங்கே போக வேண்டிய கட்டாயத்தையும் தனக்கு ஒப்படைக்கபட்டிருந்த பொறுப்பையும்
அதை அவன் வெற்றிகரமாக முடிக்க வேண்டியதின் அவசியத்தையும் நினைத்து பார்த்தான்.
அவள் எப்படி இருப்பாள்?
பெருமூச்சு விட்டான் வீர விஜய பூபதி, வீரையன்கோட்டை என்கின்ற நடுநாட்டின் இளவரசன்.
அப்போது அறைகதவை தட்டும் ஒலி கேட்டது. திறந்தான். எதிரில், ஒரு நீண்ட அங்கி தரித்து
கையில் வெள்ளி பூண் இட்ட கைத் தடியை பிடித்து கொண்டு சற்றே குள்ளமாக ஒரு மனிதன்
நின்றிருந்தான் .நல்ல மாநிறமாக இருந்தான். கைகளில் கட்டை விரல்களை தவிர மீதம் உள்ள
விரல்களில் வைரம் தங்கம் நவரத்தினம் என மோதிரங்கள் அணிந்திருந்தான்.
விஜயன் அவனை நோக்கி பார்த்த மாத்திரத்தில் சற்றே முன் வந்து அவனை கண்டு மிகவும்
வினயமாக “இளவரசே, நான் தனபாலன். வேட்டுவமங்கலத்தின் தன அதிகாரி. தாங்கள் இங்கே
வந்து தங்கி இருப்பதாக தகவல் அறிந்து தங்களை பரிச்சயம் செய்து கொள்ளலாம் என்று
வந்தேன். தங்கள் தனிமையை கெடுத்து விட்டதற்காக என்னை தயை கூர்ந்து மன்னிக்க
வேண்டும்”
அவனை கூர்ந்து நோக்கிய விஜயன் சொன்னான். “பரவாயில்லை. உள்ளே வாரும்”
“இளவரசே தாங்கள் வேட்டுவமங்கலத்திற்கு போகும் ராஜபாட்டையின் சாலையோர இந்த
அம்மாவன் விடுதியில் தங்கி இருப்பதனால் தாங்கள் வேட்டுவமங்கலதிற்கு தான் போகிறீர்கள்
என்று புரிந்து கொண்டேன்”
“ஆம்” என்று தலையை ஆட்டினான் விஜயன்.
“இளவரசர் எங்கள் நாட்டுக்கு செல்வதனால் இளவரசி ரோகிணி தேவியாரை பெண் பார்க்க
செல்கிறீர்கள் என நினைக்கிறேன்”
“என் பின்னாலேயே வந்து என்னை உளவு பார்கிறீர். அப்படியா?”
நடு மார்பில் கத்தியை செருகியதைப் போன்று தன்னைப் பார்த்து நேருக்கு நேர் கேட்ட
கேள்வியில் ஆடிப் போனான் தனபாலன். பதறியவனாக “ஐயோ, மன்னிக்க வேண்டும் இளவரசே
நான் வேட்டுவமங்கலதிலிருந்து வெளியே போய் கொண்டிருக்கிறேன். அதாவது உங்களுக்கு நேர்
எதிர் திசையில் சென்று கொண்டிருக்கிறேன்” என்றான்.
“சரி. அப்படியே இருக்கட்டும். அதனால் என்ன?” கேள்வி கூர்மையாகவே தொடர்ந்தது.
“ரோகிணி தேவியாரை பற்றி சில விஷயங்களை சொல்லி செல்லலாமே என்று நினைத்தேன்.”
“சொல்லும்” குரலில் ஒரு கடினம் இருந்தது.
எப்படி தொடங்குவது என்று சற்று நேரம் யோசித்து கொண்டு நின்றான் தனபாலன். விஜயன்
பொறுமை இழக்க தொடங்குவது கண்டு சட்டென்று சொல்ல தொடங்கினான். “இளவரசே,
ரோகிணி தேவியாரின் பத்தாவது வயதில் அவர்களுடைய பெற்றோர் இறந்து விட்டது தாங்கள்
அறிந்து இருப்பீர்கள்.”
தெரியும் என்பது போல தலையை ஆட்டினான் விஜயன்.
“அவர் ஒரு முரட்டு பெண் என்றும் திருமணத்தில் அவருக்கு நாட்டம் இல்லை என்பதும்
தங்களுக்கு தெரிந்திருக்கும். அவர் நாடு தங்காமல் அடிக்கடி காட்டுக்கு ஓடி போய் விடுவார்.”
“இதெல்லாம் தெரிந்து தான் வந்திருக்கிறேன்” இன்னும் வேறு என்ன என்பது போல தனபாலனை
நன்றாக ஊடுருவி பார்த்தான் விஜயன்.
“இதை எல்லாம் உங்களுக்கு சொல்லி இருப்பார்கள். ஆனால் உங்களுக்கு தெரியாததும்
உங்களிடம் மற்றவர்கள் சொல்லாததும் ஒன்று உண்டு இளவரசே”
கண்களை இடுக்கி தன அதிகாரியை பார்த்தான் விஜயன். அமைதியாய் இருந்த தன அதிகாரி
விஜயன் கேட்கட்டும் என்று சொல்வதற்கு காத்திருந்தான்.
விஜயன் கேட்கவில்லை. அவன் எதையோ சொல்வதற்காகவே இவ்வளவு தூரம் வேலை
மெனக்கெட்டு வந்திருக்கிறான். எப்படியும் சொல்ல வந்ததை சொல்லாமல் போக மாட்டான்.
அதனால் அதை அவனே சொல்லட்டும் என்று பேசாமலிருந்தான்.
அதற்கு மேல் தனாதிகாரியால் பொறுமையாய் இருக்க முடியவில்லை. சுற்றும் முற்றும் பார்த்து
விட்டு ரகசியம் சொல்பவனை போல கீழ் குரலில் சொன்னான்.
“இளவரசே, ரோகிணி தேவியாரை திருமணம் செய்பவர்கள் அல்பாயுசில் மரணமடைவார்கள்
என்பது அவர்கள் ஜாதக விசேஷம். அதனால் தான் வேட்டுவமங்கலம் சமஸ்தானத்தின்
மன்னராகும் வாய்ப்பு கிடைக்கும் என்ற போதும் அவர்களை திருமணம் செய்ய யாரும் முன்
வரவில்லை.”
தான் சொன்னதை விஜயன் உள்வாங்கி கொண்டானா இல்லையா என்பதை அவன்
முகத்திலிருந்து தனபாலனால் கண்டு கொள்ள இயலவில்லை. ஆகையினால் தான் சொன்னதற்கு
மேலும் வலு சேர்க்கும் பொருட்டு தொடர்ந்து சொன்னான்.
“இளவரசே, ரோகிணி தேவியார் ஒரு அதிர்ஷ்டம் கெட்டவர்கள். ஆகையினால் தான் அவர்கள்
ஒரே பெண்ணாக வேறு உடன் பிறந்தார் என்று யாரும் இல்லாமல் பிறந்தார்கள். அவர்களுடைய
பத்தாவது வயதில் பெற்றோரை இழந்தார்கள். எல்லாமே அவர்கள் ஜாதக பலன் தான்.
அவர்களுக்கு என்று யாரும் இருக்க விதி இல்லை என்று பிறக்கும் போதே சொல்லி விட்டதாக
ஒரு பேச்சு உண்டு நாட்டிற்குள்.”
தனபாலனுக்கு பதில் சொல்லவில்லை விஜயன். ஏதேனும் சொல்வான் அல்லது கேட்பான்
அதையே நூலாகக் கொண்டு தன் கதைகளை இல்லையில்லை வலைகளை மேலும் மேலும்
பின்னலாம் என்று காத்திருந்தான் போலும். விஜயனின் முகத்தில் தென்பட்ட யோசனையைக்
கண்டு இவனிடமிருந்து பதில் ஏதும் வராது என்பதைப் புரிந்தவனாக மெல்ல வெளியேறினான்
வேட்டுவமங்கலத்தின் தனாதிகாரி.
தான் திருமணம் செய்தே ஆக வேண்டி நிர்பந்தம் செய்யபட்டிருக்கும் பெண் ஒரு முரடு, நாடு
தங்காமல் அடிக்கடி காட்டுக்கு ஓடி போய் விடுவாள். இவை எல்லாம் போதாது என்று அவளை
திருமணம் செய்பவன் விரைவில் மரணமடைவான் என்பது அவளுடைய ஜாதக விசேஷம்.
அடடா……….!அவனை நினைத்து அவனுக்கே கொஞ்சம் பச்சாதாபமாக இருந்தது. தன்னுள்
கிளர்ந்த கழிவிரக்கத்தை நீட்டிக்க விரும்பவில்லை விஜயன். சுதாரித்துக் கொண்டவன் தன்னைத்
தானே சமாளித்துக் கொண்டு ஆறுதல்படுத்திக் கொண்டான்.
ஏனெனில்…..! என்ன செய்வது? எங்கேயோ இருந்த தன்னை அழைத்து இவளை திருமணம்
முடிக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி இங்கே இப்போது இப்படி மலைத்து நிற்கும்படி
செய்த விதியை நொந்து கொள்வதா? அல்லது தன்னை நிர்பந்தித்த தன் தந்தையை நொந்து
கொள்வதா? அன்றி தந்தையிடம் எதிர் பேசவும் முடியாமல் மறுத்து கூறவும் இயலாமல் அப்படியே
கீழ்படிந்து இந்த பயணத்தை தொடங்கிய தன்னையே நொந்து கொள்வதா? தலையை ஆட்டி
சிந்தனையின் போக்கிலிருந்து தன்னை விடுவித்து கொண்டான்.
தன்னை அழைத்து இந்த காரியத்தை விளக்கி வெற்றிகரமாக செய்து முடிக்க வேண்டிய
அவசியத்தை சொல்லி அனுப்பிய தந்தையின் வார்த்தைகளை மீண்டும் ஒரு முறை நினைத்து
பார்த்து கொண்டான் விஜயன்.
சாளரத்தின் வெளியே தெரிந்த இருட்டை போலிருந்தது புதிர் நிறைந்த அவனுடைய எதிர்காலம்.
பொறுத்திருந்து பார்ப்போம். விதி அவனுடைய எதிர்காலத்தில் தென்படுகின்ற புதிர்களை
களைகிறதா? அன்றி குழி பறித்து அதற்குள் அவனை தள்ளி விடுகிறதா, தள்ளி விட்டதுமன்றி
அதன் மேல் மண்ணையும் போட்டு மூடி விடுகிறதா என்பதை. தன்னையும் மீறி பெருமூச்சு
விட்டான் விஜயன்.
சொக்கநாதபுரம் அரண்மனையில் அரசர் சுந்தர உடையார் சொன்ன விஷயங்களையும் அதில் தன்
நடுநாட்டிற்கு கிடைக்க கூடிய அனுகூலங்களையும் அதற்கு தான் முயற்சித்த காரியத்தையும் அது
எப்படி தோற்றுப் போனது என்றும், இனி தனக்கு இருக்கும் ஒரே நம்பிக்கையான விஜயனிடம்
தான் எதிர்பார்ப்பது என்ன என்று தன்னிடம் தந்தை விவரித்த காட்சியை மீண்டும் ஒருமுறை
கண்களில் கண்டான் விஜயன்.
- ஷியாமளா கோபு
STORY STARTED NICE INTERESTING
Superb start😍😍
Arumayana thodakkam