Skip to content
Home » அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-9

அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-9

9

ரோகிணி அவள் அறையில் கட்டிலில் படுத்திருந்தாள். கண்கள் மூடியிருந்தது. வைத்தியர் அவள்

நாடி பிடித்து பார்த்து கொண்டிருந்தார்.“இளவரசே, காய்ச்சலின் வேகம் அதிகமாக இருக்கிறது.

காயங்களும் அதிகமாகவும் ஆழமாகவும் இருக்கிறது.”

“காட்டில் உள்ள முள்ளோ விலங்குகளோ இப்படி காயம் உண்டாக்குமா?

“இளவரசே,……” தயங்கி சொல்ல வந்ததை முடிக்க முடியாமல் நிறுத்தினார்.

“எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள் வைத்தியரே”

“அதில்லை. இந்த காயங்கள் ஏதோ இரும்பு கருவியால் அடித்தது போல ஆழமாக இருக்கிறது.”

“ம்…..நினைத்தேன்”

“சீழ் வைத்து புரையோடி போயிருக்கு”

“உயிருக்கு ஆபத்தில்லையே.?”

“இல்லை. உயிருக்கு ஆபத்தில்லாத வகையில் தான் ஊமைக்காயங்கலாகத் தான் இந்த காயங்கள்

ஏற்பட்டிருக்கு”

“குணப்படுத்தி விடமுடியும் அல்லவா”

“பத்து பதினைந்து நாளில் குணப்படுத்தி விடலாம்”

“அப்படியே செயுங்கள்”

அறையில் அவனும் அவளும் தனித்து இருந்தார்கள். விஜயன் அவளையே பார்த்து

கொண்டிருந்தான். அவன் மனதில் ஏதேதோ சிந்தனை ஓடியது. “ரோகிணி, நீ உறங்கவில்லை

என்று எனக்கு தெரியும். நான் பேசுவதை நீ கேட்டு கொண்டிருக்கிறாய் என்பதும் எனக்கு

தெரியும். நான் சொல்வதை கவனமாக கேள். நான் உன் பக்கத்திலேயே தான் இருக்கிறேன்.

உன்னை விட்டு நகர மாட்டேன். அதனால் நீ நிம்மதியாக இரு.”

ஆழ்ந்த குரலில் சொன்னான் விஜயன். அந்த குரலின் தொனியில் அவன் உணர்த்த விரும்பிய

பாதுகாப்பு உணர்வு, நான் உன்னோடு இருக்கிறேன் என்ற நிச்சயம் அவளுக்கு உயிரின்

ஒவ்வொரு அணுவிலும் புரிந்தது. அதை புரிந்து கொள்ளுமாறு இறைஞ்சும் தன் தாயின் குரல்

கேட்டது.

இத்தனை நாட்களாக தன்னுடன் பேசி வந்த ஒரு குரல். அந்த குரலில் இருந்த ஆக்ரோஷம், அந்த

குரல் சொல்லும்படியாக தன்னை செய்யுமாறு தன்னை அடிமைப்படுத்தி வைத்திருந்த தொனி.

அத்தகைய நினைவுகளின் குவியலில் இருந்து தன் சிந்தனையை உலுக்கி திருப்பி கொண்டாள்.

அது எதுவும் இல்லாமல் தென்றல் வீசியது போல மயிலிறகு வருடியது போன்று ஒரு இதம், தான்

என்றோ இழந்த தன் தாயின் தாலாட்டு பாடிய குரல். அந்த குரலில் இருந்த நம்பிக்கை……ம்……….!

.நிம்மதியில் நெஞ்சு ஏறி இறங்கியது.

இத்தனை நாட்களாக எங்கெங்கோ சுற்றி திரிந்து, வந்து சேர வேண்டிய இடத்திற்கு பாதுகாப்பாக

வந்து சேர்ந்து விட்ட ஒரு உணர்வு தோன்றியது.அவள் கண்கள் மூடியிருந்த போதும்

கடையோரத்தில் கண்ணீர் கசிந்திருந்தது.

தொடர்ந்து வந்த நாட்களிலும் விஜயன் அவள் அறையிலேயே இருந்தான்.

மருந்தின் வீரியம்,,,,,,,,,,, நன்றாக உறங்கி கொண்டிருந்தாள் ரோகிணி.

மூன்று நாட்களாக தொடர்ந்து உறங்கவும் விஜயனுக்கே பயமாகி விட்டது “என்ன வைத்தியரே,

இப்படி உறங்குகின்றாள்.?”

“காய்ச்சலின் வேகம் அப்படி. கொடுத்திருக்கிற மருந்து வேலை செய்கிறது. மிகவும் பலஹீனமாக

இருக்கிறார்கள் இளவரசே”

அவள் கண் முழிக்கும் போதெல்லாம் விஜயன் தென்பட்டான்.அவள் அவனை நிமிர்ந்து பார்த்து

விட்டு மீண்டும் ஆயாசத்துடன் கண்களை மூடி உறக்கத்தை தொடர்ந்தாள்.இளவயதும் சரியான

பராமரிப்பும் சேர்ந்து மிக விரைவாகவே எழுந்து நடமாட தொடங்கி விட்டாள் ரோகிணி.. முகமும்

நன்றாக தெளிவு கொடுக்க தொடங்கி இருந்தது.

ஒருநாள் அறைக்கு வெளியே வந்து கொண்டிருந்த விஜயனின் காதில் ரோகிணியின் குரல்

கேட்டது. ஏதோ வைத்தியரிடம் உரக்க பேசி கொண்டிருந்தாள். உள்ளே நுழைந்த விஜயனை

கண்டதும் வைத்தியர் “இளவரசே, உடல் தேறி விட்டது. இனி மருந்து எடுத்து கொள்ள மாட்டேன்

என்கிறார்கள்” என்றார் அழாதகுறையாக.

“அப்படியா ரோகிணி” அவன் குரலில் அன்பு நிரம்பியிருந்தது.

தலையை குனிந்து கொண்டாள் அவள்.

“ரோகிணி உனக்கு உடல் தேறி விட்டது உண்மை தான். ஆனால் நீ கல்வி கற்க வேண்டும்.

பாட்டு நடனம் குதிரை ஏற்றம், போர் பயிற்சி அத்தனையும் வேண்டும் அல்லவா.”

அவள் கண்களில் ஒரு மின்னல் தோன்றி மறைந்தது.

“என்ன அப்படி பார்க்கிறாய்? கற்று கொள்வாய் தானே”

நிமிர்ந்து அவனை பார்த்தாள். நானா….? அவள் கண்களைப் பார்த்தவன் அதில் இருந்த

குழப்பத்தைக் கண்டு கேட்டான்.

“அல்லது திவான் சொன்னது போல ஆசிரியரை கடித்து பிராண்டி வைப்பாயா?” அவள்

கண்ணுக்குள் ஊன்றி பார்த்து, எதையோ தேடி, கண்டு கொண்டதற்கு அடையாளமாக தன்

கண்கள் வழியாக சிரித்தான்.

அவளும் அவனை பார்த்து மெலிதாக புன்னகைத்தாள்.

“ரோஹிணி நடப்பாய் அல்லவா”

இதோடு நூறாவது தடவையாக கேட்டு விட்டான்.

“நடப்பேன்” தீர்மானமான குரலில் சொன்னாள் ரோகிணி.

அவன் அவள் முத்தம்மா மூவரும் கோயிலுக்கு கிளம்பி கொண்டிருந்தார்கள்.

திவான் எத்தனையோ வற்புறுத்தியும் பல்லக்கில் அவளை அழைத்து செல்ல மறுத்து விட்டான்

விஜயன். அதே நேரத்தில் அவளால் நடக்க முடியுமா என சந்தேகம் வந்து விட்டது. முத்தம்மாவும்

தொணப்பி விட்டாள்.

இவர்கள் இருவரின் சந்தேகத்தையும் தீர்க்கும் ஆவலில் சட்டென்று அரண்மனைக்கு வெளியே

வந்த ரோகிணி வெளிக்காற்று முகத்தில் படவும் ஒரு நிமிடம் திணறி போனாள். பதறி விட்டான்

விஜயன்.

“என்ன ஆச்சு ரோகிணி”

“இல்லை…..சட்டென்று முகத்தில் காற்று படவும் ஒரு மாதிரி ஆகி விட்டது”

“ஏன்,நீவெளியே வருவதேஇல்லையா?”

“இல்லை”

“ஒ….!அப்படியா” சற்று நேரம் என்னவோ யோசனையாக இருந்தான். “சரி. நடப்பாய் அல்லவா?”

மீண்டும் ஒரு முறை உறுதிபடுத்தி கொண்டு முத்தம்மாள் பின்தொடர வேட்டீஸ்வரன் கோயிலுக்கு

சென்றார்கள்.

நகரம் அந்த மாலை வேளையில் பெரும் பரபரப்பாக இருந்தது. கடை வீதிகளை கடந்து

சென்றார்கள். கண்களை இமைக்கவும் மறந்து இவை எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்து

கொண்டு வந்தாள். எங்கே கண் இமைத்தால் காட்சி மறைந்து விடுமோ என்று பயந்தவளை

போல.

ஆடைகள் அங்காடி வழியாக போன போது அங்கே கடைகளில் தொங்க விடப்பட்டிருந்த

சேலைகளின் அணிவகுப்பை கண்டு தன் சேலையையும் குனிந்து பார்த்து கொண்டாள். அதே

போல ஆபரணங்கள் அங்காடி வழியாக செல்லும் போதும் இத்தனை இரகங்களா என்று கண்கள்

விரிய வியப்புற்றாள்.

இந்த நாட்டின் இளவரசியான தன் நிலையை கண்டு அவளுக்கு வேதனையாக இருந்தது ஒருபுறம்

என்றால் அதை விஜயன் முன் ஒப்பு கொள்வது அதை விட மிக வேதனையான ஒன்றாக இருந்தது.

ஆடை அலங்காரங்களும் ஆபரணங்களும் சுந்தரி வித விதமாக அணிந்து பார்த்திருக்கிறாள்.

எனவே நல்ல துணிமணிகள் ஆடை ஆபரணங்கள் என்றால் என்ன என்று அவளுக்கு நன்றாகவே

தெரியும். ஆனால் அது தனக்கு தான் மறுக்கப்பட்டுள்ளது. அவ்வளவு தான்.

தெருவில் நடக்கவே அஞ்சியவளாய் முத்தம்மாவின் தோளை பற்றி கொண்டு வந்தாள். முன்னே

சென்று கொண்டிருந்த விஜயன் நின்று திரும்பி திரும்பி அவள் வருகிறாளா என்று பார்த்து

கொண்டே சென்றான். அவள் அவனை பார்த்து புன்னகைக்கவும் அவனுக்கு நிம்மதியாயிற்று.

நகரத்தினர் இவர்களை பார்ப்பதும் தங்களுக்குள் பேசிக்கொண்டு செல்வதுமாக இருந்தார்கள்.

எதிரே தென்பட்ட யாரையுமே ரோகிணிக்கு தெரிந்திருக்கவில்லை. ஆனால் அவளை

பார்த்தவர்கள் சற்று நின்று அவளை நன்றாக உற்று பார்த்து விட்டு ராணியம்மா மாதிரியே

இருக்காங்களே, ஒருவேளை இளவரசியாக இருக்குமோ? என்று குழப்பமானார்கள்.

முத்தம்மாவை தெரிந்தவர்கள் ஜாடையால் ரோகிணியை காட்டி யார் என்று கேட்டார்கள்.

முத்தம்மாவோ பதில் சொல்லாமலே பதிலுக்கு கையால் வாயை பொத்தி ஜாடையில் அப்புறம்

சொல்கிறேன் என்றோ கேட்பவர்கள் ரொம்ப வேண்டியவர்கள் என்றால் ஜாடையாலேயே

சின்னராணி என்றோ பதில் சொல்லி கொண்டு நடந்தாள்.

இதை எல்லாம் கவனித்து கொண்டு முன்னே நடந்தான் விஜயன்.

வேட்டீஸ்வரன் கோயில் மிகவும் புராதனமானது. சற்றே பெரியது. புராதன கோயில்களுக்கே

உண்டான வௌவால் புழுக்கை வாசம் இருந்தது. பரம்பரை அரசர்களால் ஆளப்படாத நாடு

என்பது இந்த கோவிலை கண்டாலே சொல்லி விடலாம். அத்தனை பராமரிப்பு அற்று இருந்தது.

ஆனால் நல்ல காற்றோட்டமாகவும் வெளிச்சமாகவும் இருந்தது.

வெளி மதிலில் செடிகள் முளைத்திருந்தன. லேசாக சிதிலமடைய தொடங்கியிருந்தது.

பிரகாரங்களில் வெளிச்சம் இருந்தது. கொடிமரத்தை கடந்து மூலஸ்தானத்திற்கு சென்றார்கள்.

ஆங்காங்கே தீவட்டி பொருத்தப்பட்டிருந்தது. . இரண்டு கட்டு தாண்டி உள்ளே செல்லும் போது

உள்ளே இருந்த எண்ணைப்பிசுக்கையும் மீறி சந்நிதி ரொம்பவும் தெய்வீகமாக இருந்தது. அன்று

ஏதும் விசேஷ தினம் இல்லாததால் கூட்டம் அதிகம் இல்லை. அர்ச்சகர் சந்தியாகால

அர்ச்சனையை தொடங்கி இருந்தார்.. தீபாராதனைக்கு காத்திருந்தார்கள்.

எதிரே நின்றிருந்த ரோகிணியை பார்த்தான் விஜயன்.

தூங்காவிளக்கின் வெளிச்சம் அவள் முகத்தில் பட்டு கொண்டிருந்தது.

நல்ல சவரட்சணையும் நிம்மதியும் வாலிப வயதும் அவளுடைய தாழம்பூ நிறத்தில் செவ்வரி

ஓட்டியிருந்தது. காதில் அணிந்திருந்த வைரத்தோடும் மூக்கில் அணிந்திருந்த வைர மூக்குத்தியும்

விளக்கு வெளிச்சத்தில் மின்னியது. உடல் சற்று பூசினார் போல ஆரோக்யமாக இருந்தது.

வேட்டீஸ்வரருக்கு முன்பு இருந்த விளக்கில் மின்னும் சுடர் போல கண்களில் ஒரு மின்னல்

மின்னியது. ஒரு பொலிவு அரச குல பெண்களுக்கே தொன்று தொட்டு காணப்படும் நிமிர்வும்

மிடுக்கும் கம்பீரமும்….அடடா. அந்த சந்நிதானத்தில் இருக்கும் அம்மனே தன் முன்னே வந்து

நிற்பது போல் ஒரு பிரமை ஏற்பட்டது விஜயனுக்கு. எங்கே தன்னை அறியாமல் கைகளை கூப்பி

தொழுது விடுவோமோ என்ற சம்சயம் ஏற்பட்டது.

தன்னையறியாமல் லீலாவதியை நினைத்து பார்த்தான். அவள் சிலை என அழகாக இருந்தாள்.

அந்த அழகு தான் அனுபவிக்க தன் கைகளில் கிடைக்க கூடியது. ஆனால் ரோகிணியிடம் ஒரு

தெய்வீக அழகு தென்பட்டது. அது தொழுது கொள்ள கூடியது.

வேட்டீஸ்வரருக்கு முன்பாக கண்களை மூடி நின்ற விஜயனின் அந்தரங்க கண்களில் ரோகிணி

மட்டுமே தென்பட்டாள். தந்தை தன்னிடம் சொல்லியது போல ஒரு வருடம் சென்று

லீலாவதியையும் திருமணம் செய்வது என்பது இனி இந்த ஆயுளில் நடக்காது என்பது அவன்

உடலின் ஒவ்வொரு அணுவுக்கும் புரிந்தது. அவனுக்கு நன்றாக புரிந்தது இந்த ஆயுசுக்கும் தனக்கு

ரோகிணி தான் ரோகிணி மட்டும் தான் போதும் என்பது.

அந்த நேரம் கண்களை திறந்த ரோகிணி எதிரே நின்றிருந்த விஜயனை பார்த்து எதேச்சையாக

புன்னகைத்தாள்.

விஜயனுக்கு மேனி சிலிர்த்தது.

தொடரும்ஷியாமளா கோபு

1 thought on “அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-9”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *