Skip to content
Home » அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-12

அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-12

12

அவள் அவனை நிமிர்ந்து பார்த்து கேட்டாள், “எப்படி சரியாக சொன்னீர்கள்” என்று. அவள் முகத்தை நன்றாகப் பார்த்தான். சொல்லப் போனால் இப்போது தான் இத்தனை

அருகாமையில் ஆழ்ந்து அந்த பால் வடியும் முகத்தைப் பார்க்க நேரிட்டது அவனுக்கு. அந்த

முகத்தில் தான் எத்தனை தெளிவு. தன் மேல் அவள் கொண்டுள்ள நம்பிக்கையின் ஆழம்

கண்களில் கடலாக விரிந்திருந்தது. புத்திசாலித்தனமும் கம்பீரமும் இருந்தது. தான் சொல்வதை

புரிந்து கொள்ளக் கூடிய பக்குவமும் கூடவே காணப்பட்டது.

இப்போது அவனுடைய முறை. அவளிடம் மனம் திறந்து பேச வேண்டிய தருணமிது. பேச

வேண்டியதை மனதிற்குள் கோர்வை படுத்தி கொண்டான். “ரோகிணி, உன்னை பார்த்து விட்டு

வந்த என் அண்ணன் உன்னை பிடிக்கவில்லை என்று சொன்னதும் பட்டணத்தில் படித்து

கொண்டிருந்த என்னை அவசர அவசரமாக வர வழைத்தார்கள் என் தந்தையார். உன்னை நான்

திருமணம் செய்ய வேண்டியது அவசியம் என்று நிர்பந்திக்க பட்டேன். மன்னர் சுந்தரர் உன்னிடம்

அலாதி பிரியம் வைத்துள்ளதாகவும் உன்னை திருமணம் செய்ய நான் மறுத்தால்

தேவையில்லாமல் அவருடைய மன கசப்பை சம்பாதிக்க வேண்டியது வரும் என்றும் அது

எங்களுக்கும் எங்கள் வீரையன் கோட்டை நாட்டுக்கும் நல்லதில்லை என்றும் என் தந்தை ஆணையிட்டார்கள”

ரோகிணிக்கு சொக்கநாதபுரம் மன்னர் ராஜ கேசரி சுந்தர உடையார் அவர்களை நினைத்ததும்

அவருடைய அன்பை நினைத்து கண்கள் கசிந்தது. “நான் வந்த அன்றே திவான், திடீரென்று நான்

வந்து விட்டதாக பதைபதைத்து போனார். அது என்னை கொஞ்சம் யோசிக்க வைத்தது.

இவ்வளவு பதைபதைக்க அவசியமில்லையே என்று”.

“உன் பெற்ரோரின் ஓவியத்தை பார்த்தேன். அதில் அவர்கள் இருவருமே மிகவும் அருமையாக

இருந்தார்கள். அதிலும் உன் தாய் பேரழகியாக இருந்தார்கள். அப்படி என்றால் நிச்சயம் நீயும்

அழகியாக தான் இருக்க வேண்டும் என்று உன்னை பார்க்கும் முன்பே தீர்மானித்து விட்டேன்.”

அவன் ரசனையுடன் சொல்லிய பாங்கில் அவளுக்கு நாணம் ஏற்பட்டது. தலை தரையை

பார்த்தது. அவன் புன்சிரிப்புடன் அவளை தனதருகே இழுத்து அணைத்து கொண்டான். “உன்னை

முதன் முதலில் பார்த்த போது நீ அவர் கைகளில் திமிறி கொண்டிருந்தாய். அது எனக்கு என்

பால்ய வயதில் தாய் தந்தையை பிரிந்து படிக்க போன என் உணர்வுகளை ஞாபகப்படுத்தி

உன்னிடம் எனக்கு ஒரு பரிதாபத்தை உண்டாக்கியது. நீ என்னை பிடிக்கவில்லை என்று

காட்டுக்கு ஓடி போய்விட்டதாக சொன்னார் திவான்.”

பிடிக்கவில்லை என்று சொல்ல சொல்லி தன்னை அவர்கள் இந்த பாதாள சிறையில் போட்டு

காயப்படுத்தி கொடுமைப் படுத்தியது நினைவுக்கு வந்து அவள் வேதனையை அதிகபடுத்தியது.

“அவரிடம் பேசிய போது காடு மேற்கு வாயில் தாண்டி ஐந்து கல் தொலைவு உள்ளது என்று

அறிந்து கொண்டேன். போக வர பத்து கல் தொலைவு போய் வருவது அதுவும் கால்நடையாக

என்றால்..? ..அது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம் தான்.”

“அன்று முழுவதும் நான் இந்த பாதாள அறையில் தான் இருந்தேன். அவர்கள் செய்த

சித்திரவதையில் உங்களை பிடிக்கவில்லை என்று சொல்ல வேண்டும். ஆனால் என்ன காரணமோ

மறுநாள் காலையில் என் அறைக்கே திரும்ப கொண்டு வரப்பட்டேன்.”

“அதுக்கு காரணம் திவானிடம் நாம் போய் அவளை தேடுவோம் வாருங்கள் என்று நான்

சொன்னது தான்.”

“ஒ…..!

“உன் அறையில் உன்னை பார்த்த போதே அவ்வளவு தூரம் நடந்து வந்தவள் போல அலுப்பு

தெரியவில்லை. பதிலாக சோர்வு தான் தென்பட்டது.”

“நீங்கள் என்னிடம் பேசாமல் சுந்தரியிடம் பேசினீர்கள்”

சிரித்து கொண்டான். அவனுடைய வெட்கத்தை பார்த்து அவளுக்கே வியப்பு ஏற்பட்டது.

“ஏன்….?”

“அது…….அது வந்து வயசு பெண்ணிடம் நேரிடையாக பேச கூச்சமாக இருந்தது”

“சுந்தரியை அப்படி மிரட்டினீர்கள்?”

“மிரட்டவில்லை. உண்மையில் அவளை சிறையில் போட்டு விட கூடிய ஆத்திரம் எனக்கு

ஏற்ப்பட்டது”

“அவளை சிறையில் அதுவும் பாதாள சிறையில் போடுவேன் என்று நீங்கள் சொன்ன போது

எனக்கு ஆச்சரியமாக போய்விட்டது. சுந்தரி எவ்வளவு கொடூரி. சூரி. அதிகாரம் கொண்டவள்.

அவளையே நீங்கள் இப்படி சொன்னீர்கள் என்றால் நீங்கள் தான் அதிக வலிமையான ஆள் என்று

எனக்கு புரிந்தது”

அவன் புன்னகைதான்.

“யார் என்னை பெண் பார்க்க வந்தாலும் அவர்களை உதைக்க சொல்லும் திவானின் குரல்

மறைந்து இதோ இவருக்கு கீழ்ப்படி. இவர் உன்னை காப்பாற்றுவார் என்று தாயின் குரல் முதன்

முதலாக என் காதில் ஒலிக்க தொடங்கியது.”

“அதை தான் உள்ளுணர்வு என்று சொல்லுவார்கள் ரோகிணி”

“எனக்கு அந்த உள்ளுணர்வே இல்லாமல் போய் விட்டது. அத்தனை நாளும் என் காதில் ஒலித்த

குரலுக்கு கீழ்ப்படியவே செய்தேன்”

“நீ கீழ்ப்படிய வேண்டும் என்பதற்காகவே அந்த குரல் அப்படி ஒலித்திருக்கிறது ரோகிணி”

“அப்படியா…..!. சரி. மேல்கொண்டு நான் வெளியே போனதில்லை என்று எப்படி கண்டு பிடித்தீர்கள்?”

“நாம் கோவிலுக்கு போன போது உனக்கு யாரையும் தெரியவில்லை. உன்னையும் ஒருவருக்கும்

புரியவில்லை. நீயும் வெளிகாற்று முகத்தில் படவும் தடுமாறினாய். வெளியே வந்ததில்லை

என்றும் உன்னை அறியாமலே சொன்னாய். நான் கவனித்து கொண்டேன். அதற்காக்காக தான்

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திசையில் உன்னை கூட்டி சென்றேன். மேற்கு திசையில் தான் காடு

உள்ளது என்று உனக்கு தெரியவில்லை’

இவன் தன்னை எத்தனை நுணுக்கமாக கவனித்திருக்கிறான் என்று பெருமையுடன் கர்வப்பட்டாள்.

அவள் முகத்தின் பெருமிதம் அவனுள்ளும் கிளர்ச்சியை உண்டாக்க அவனே மேற்கொண்டு

தொடர்ந்தான். “மேற்கு வாயில் காவல் வீரன் கருணாகரனுக்கும் உன்னை தெரியவில்லை. நீ அடிக்கடி காட்டுக்கு சென்றிருந்தால் மேற்கு வாயில் வழியாக தான் செல்ல வேண்டும். ஒரு நேரம்

இல்லை என்றாலும் ஒரு நேரம் அவன் உன்னை பார்த்திருப்பான். எனவே நீ மேற்கு வாயிலை

கடந்து ஒரு போதும் சென்றது இல்லை என்று உறுதியாயிற்று.”

“எனக்காக இத்தனை யோசித்தீர்களா?”அவள் மனம் கசிந்து உருகியது. நெருங்கி அவன் தோளில்

சாய்ந்து கொண்டு சற்று நேரம் அப்படியே இருந்தாள். அவனும் அந்த நிலையை கலைக்க விரும்பாமல் அமைதியாக இருந்தான்.

“இந்த அரண்மணையை நன்கு அறிந்தவனும் உன் மேல் விசுவாசமாக இருப்பவனுமான

கருணாகரனை என்னுடன் சேர்த்து கொண்டேன்”

“என்னிடம் விசுவாசமாக இருப்பவனா?”

“அவன் இவன் என்று சொல்லாதே அவனை”

“ஏன்?”

“ஏனெனில் அவன் உன் தாயின் சித்தப்பா மகன். உன் தாய் மாமன் உன் தாயின் தம்பி”

“அப்படியா.! இப்போது ஞாபகம் வருகிறது. அப்பா இல்லாத சமயங்களில் அவன்…..மன்னிக்கவும்

அவர் அம்மாவை அக்கா என்று அழைத்து கேட்டிருக்கிறேன். அந்த கருணாகரனா இவர்?’

“ஆம்.”

“அவன் தான் எனக்காக ஒற்று வேலை செய்து கண்டு பிடித்து வந்து சொன்னது திவானும்

சுந்தரியும் உன் பெற்றோரின் அறையை பயன்படுத்தி கொண்டிருக்கிறார்கள் என்று.”

“ஒ..!”

“இதை எல்லாம் உன்னிடம் சொல்ல நினைத்தேன். ஆனால் நீ என்னை பற்றி என்ன மனதில்

வைத்து கொண்டிருக்கிறாய் என்பது எனக்கு தெரியாது. என் சந்தேகங்களை உன்னிடம் கேட்டும் தெளிவு பெற முடியவில்லை.”

“நீங்கள் சொல்வது உண்மை தான்”

“அதனால் தான் அரண்மணையை சுற்றி காண்பி என்று விளையாட்டாக கேட்பது போல கேட்டு

உன்னை பழைய நினைவுகளுக்கு கூட்டி சென்று சரளமாக பேச வைத்தேன்.”

“அது சரிதான். நீண்ட நாட்களுக்கு பிறகு அரண்மணையை சுற்றி பார்த்ததில் என் பெற்றோரின்

இழப்பு நினைவுக்கு வந்து வேதனையாக இருந்தது. ஆனால் உங்களிடம் மனம் திறந்து பேசியதில்

இத்தனை வருட வேதனையும் கொடுமையும் மறந்து மனசு லேசாகி போய் விட்டது.”

அவளை கண்களுக்குள் நன்றாக ஊன்றி பார்த்தான். அந்த பார்வையில் இருந்த செய்தி அவளுக்கு

அவளை முதன் முதலில் பெண்ணாக உணர வைத்த தருணம். அவள் அருகில் நெருங்கி நின்று

அவளுடைய தோளை இருபுறமும் பற்றியவன் சொன்னான். “ரோகிணி…………!”

“ம்….” வெட்கம் தலையை நிமிர விடவில்லை. குனிந்திருந்தவளின் முகவாயை ஒற்றை விரலால்

நிமிர்த்தி சொன்னான். “உன்னை கோவிலில் கருவறை விளக்கின் சுடரில் பார்த்த போது எனக்கு

நீ மட்டும் தான் இந்த ஆயுளுக்கும் என்பது நிச்சயமாகி விட்டது.”

இப்போதும் முத்துச் சுடர் போல புன்னகைத்தாள். அவள் எதிர்பாராமல் அவன் அவள் முன்

மண்டியிட்டு “வேட்டுவமங்கலத்தின் இளவரசி ரோகிணி தேவியார் அவர்களே, வீரையன்

கோட்டை இளவரசனான வீர விஜய பூபதி ஆகிய என்னை திருமணம் செய்ய சம்மதிப்பீர்களா?”

என்று கேட்டான்.

அது நாள் வரை ஆண்கள் என்றாலே தன்னை பலாத்காரம் செய்ய வருபவர்கள் என்றும் அல்லது

திவானை போன்று கொடுமைபடுத்துகிறவர்கள் என்றும் நினைத்து பயந்து முரட்டுத்தனமாக

நடந்து தன்னை தானே இழிவு படுத்தி கொண்ட ரோகிணி, முதன் முதலில் தன்னை மதித்து தன்

முன் மண்டி இட்டு தன் சம்மதம் கேட்கும் அந்த வீரனை பெரும் வியப்போடும் அதீத காதலோடும்

பார்த்தாள்.

“சம்மதம்”

அவன் தலைமுடியை கோதி தன் வயிற்றோடு சேர்த்து அணைத்து கொண்டாள் ரோகிணி.

அவன் தாயின் ஆசியை போல அவளை அறிவின் வழி நின்று வெற்றி கொண்டு விட்டான்

விஜயன். வெற்றி பெற்றவனே தோற்று போவது என்பது காதலில் மட்டும் தானே சாத்தியம்.

ஆனால் இதில் அவனே எதிர்பாராதது ஒன்றே ஒன்று அது இந்த சின்ன பெண்ணிடம் தான்

இத்தனை விரைவில் காதலால் கசிந்து உருக நேரிடும் என்பது.

அது அவனுக்கு மிகவும் பிடித்திருக்கவே செய்தது என்பது தான் மறுக்க முடியாத உண்மை.

தொடரும்

ஷியாமளா கோபு

1 thought on “அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-12”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *