14
“உனக்காக, எல்லாம் உனக்காகவே செய்தேன்” எதிரே மஞ்சத்தில் உட்கார்ந்திருந்த தன் மகன்
மணிபல்லவனை பார்த்து சொன்னார் திவான்.
மணிபல்லவன் திவான் வில்வனாதனின் ஒரே மகன். வேறு பெண் மக்கள் கூட கிடையாது. நல்ல
உயரமாக பருமனாக இருந்தான். பார்வைக்கு நல்ல திடகாத்திரமான ஆணாக இருந்தாலும் அவன்
நடையுடை பாவனையில் பெண்மையின் நளினம் இருந்தது. கண்கள் பெரியதாக பெண்களை
போன்று நன்கு மலர்ந்திருந்தது. அத்தகைய கண்களை மேலும் நன்றாக மலர்த்தி கேட்டான்.
“எனக்காகவா?”
ஆச்சரியத்துடன் கேட்டான் மணிபல்லவன். அவனையே சற்று நேரம் உற்று பார்த்து கொண்டு
நின்றார். அவர் மனதில் என்னன்னவோ சிந்தனைகள் அலை மோதியதை பார்த்து
கொண்டிருந்தான். நீண்ட நேரமாக மெளனமாக இருந்தார் திவான். அவர் கவனத்தை கலைக்க
முற்பட்டு அவரை பார்த்து மீண்டும் கேட்டான்.
“எனக்காக என்ன செய்தீர்கள் அப்பா”
கடந்த ஏழு வருடங்களாக அவர் செய்து வந்தவைகளை மனதிற்குள் அசை போட்டார். சற்று நேரம்
தன் முன் அமர்ந்திருந்த மகனின் முகத்தை தீவிரமாக பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு ஒரு பெரிய
நீண்ட உரையாடலுக்கு தயாரானவரைப் போல தொண்டையை செருமிக் கொண்டு ஆரம்பித்தார்.
“மன்னர் பாஸ்கரின் தந்தை ரெங்கதுரை மார்தாண்டத்திடம் என் அப்பா கோவிந்தராஜன்
திவானாக நல்ல செல்வாக்கு அந்தஸ்து சொத்து என்று ஏகத்திற்கும் படாடோபமாக இருந்து
வந்தார். என் ஐந்து தலைமுறையாக இதே மன்னர்களிடம் என் முன்னோர்கள் திவானாகவும்
முக்கிய அமைச்சர்களாகவும் இருந்தார்கள். ஒவ்வொருவரும் நல்ல செல்வாக்குடன் இருந்தார்கள்.
பாஸ்கர் ஆட்சிக்கு வருவதற்கும் நான் திவான் ஆகவும் சரியாக இருந்தது. பாஸ்கர்
வெள்ளைக்காரர்களுடன் மிகவும் நெருங்கி பழகினார். அவர்களை போன்று நடை உடை
பாவனையில் மட்டுமல்லாமல் ஆட்சி செய்யும் விதத்திலும் அவர்களை ஒத்தார் போல் காரியங்கள்
செய்து வந்தார். அதனால் எனக்குண்டான மவுசு குறைந்து போயிற்று. அதிகமாக என்
ஆலோசனைகளை கேட்டு நடப்பதில்லை. எனக்கு மிகுந்த தலை இறக்கமாகி போய்விட்டது.
என்னால் வெளியே சொல்லவும் முடியாது. இந்த காலகட்டத்தில் பாஸ்கரும் அவர் மனைவியும்
விபத்தில் இறந்து போனார்கள்.
நான் நினைத்தேன் சுந்தரர் நாட்டையும் ரோகிணியையும் பொறுப்பெடுத்து கொள்வார் என்று.
அப்படி இல்லாவிட்டால் இந்நாட்டின் சம்பந்தகாரர் எவரேனும் ரோகிணியை கலியாணம் கட்டி
இந்த நாட்டை கைப்பற்றி கொள்வார்கள் என்று நினைத்தேன். அல்லது பாஸ்கரின் தாயாதிகள்
நாட்டை பங்கு போட்டு கொள்வார்கள் என்று மனக்கணக்கு போட்டிருந்தேன்.
ஆனால்……அதிர்ஷ்டம் என் பக்கம் இருந்தது. பாஸ்கரின் சாசனத்தின் படி ரோகிணியை
பராமரிக்கும் பொறுப்பு என் கையில் கிடைத்தது. ரோகிணியை துருப்பு சீட்டாக கையில் வைத்து
கொண்டு இந்த நாட்டை நானோ அல்லது என் மகனோ அவனுக்கு பின் என் சந்ததியோ ஆள
வேண்டும் என்று தீர்மானித்து விட்டேன்’
“அப்பா, நானா ப்பா, எனக்கா அப்பா” என்று அடுக்கடுக்காய் ஆச்சரியம் காட்டியவனின் விழிகள்
பேராசையால் மின்னியது.
“ஆமாம்” என்றவரின் குரலில் அத்தனை வருட திட்டமிடுதலும் தீர்மானமும் இருந்தது. எனவே
தொடர்ந்து சொன்னார். “வட இந்தியாவில் ஒரு முகலாய பேரரசு அடிமைகளால் ஆளப்பட்டதாக
சரித்திரம் உள்ளதே. வேட்டுவமங்கலம் இனி அரசர்களால் ஆளப்படக் கூடாது. மனதில்
வஜ்ஜிரமாக வன்மம் உருவானது. என்ன செய்யலாம்? எங்கிருந்து தொடங்கலாம்?” என்று வலது
முஷ்டியை இடது உள்ளங்கையில் குத்திக் கொண்டு இடதும் வலமுமாக நடந்து
கொண்டிருந்தவரைப் பார்த்துக் கொண்டிருந்தான் மகன் மணிபல்லவன்.
“ரோகிணியை வெளியே விட்டால் அவள் யாரையேனும் கண்டு காதல் வயப்பட்டு அவனை தான்
திருமணம் செய்வேன் என்று சொல்லி விடக்கூடாது. அப்படி மட்டும் சொல்லி விட்டால் சுந்தரர்
அவள் மன விருப்பத்தை நிறைவேற்றுவதில் முனைப்பு காட்டுவார்.. ஆகையினால் அவள் வெளி
உலக தொடர்பை துண்டிக்க வேண்டும்”
“மிகவும் சரி” என்றான் மகன். என்ன இருந்தாலும் புலிக்கு பூனையாகுமா என்ன? இல்லையில்லை
நரிக்கு பிறந்தது நாயாகுமா என்ன?
“அதற்கு முதலில் அவளை சிறுவயதில் இருந்து தூக்கி வளர்த்த கருணாகரனையும்
முத்தம்மாவையும் அப்புறப்படுத்த வேண்டும். அவர்கள் இருவரும் இருக்கும் வரை, தான்
இளவரசியாகவே நினைப்பு இருக்கும். அடம் அதிகமாகும். அந்த இருவரின் பக்கபலத்தால்
ரோகிணி நம்மிடம் அடங்க மறுப்பாள். அவர்களை அப்புறபடுத்த காரணம் என்ன
சொல்வது?ம்…….அவர்களால் அவளுக்கு பெற்றோர் நினைவு வந்து ஏங்கி போகிறாள்.அதனால்
அவர்களை மாற்றி விட்டு தன்னுடைய ஆசைநாயகி சுந்தரியை அங்கே பணியில் அமர்த்த
வேண்டும். ம்…..செய்தாயிற்று.
அடுத்தது
பாடம் சொல்லி தரும் ஆசிரியர்கள். அவர்களால் அவள் சிந்திக்க கற்று கொண்டால் அது ஆபத்து.
ரோகிணி சிந்திக்கவே கூடாது. மேலும் ஆசிரியர்கள் இங்கே நடப்பதை வெளியே போய் சொல்ல
வாய்ப்பு உண்டு.அது பேராபத்தாகி போய்விடும். அதனால் அவர்களை நிறுத்தியாயிற்று.
காரணம் என்ன சொல்வது? ம் .ரோகிணி அவளுக்கு பாடம் கற்ப்பிக்க வரும் ஆசிரியர்களை
கடிப்பதும் பிராண்டுவதும் பாடம் படிக்க மறுத்து அடம் பிடிப்பதுமாக இருக்கிறாள் என்று புரளி
கிளப்பி விட்டாயிற்று.
அதை மறுத்து ஒப்பு கொள்ளாமல் ரோகிணி பாடம் படிப்பேன் என்ற போதும் சரி சுந்தரரிடம்
சொல்லி விடுவதாக மிரட்டிய போதும் சரி அவளை அடித்து இம்சை பண்ணி சோறு போடாமல்
சித்திரவதை செய்ததில் ஒரு வழியாக அடங்கி போனாள்.
சுந்தரர் வந்த போதெல்லாம் ரோகிணியை தலைவிரி கோலமாக,கிழிசல் ஆடைகளோடு நிற்க
வைத்து அவள் முரட்டு தனம் செய்கிறாள் என்று அவரை நம்ப வைத்து,,,அப்பப்பா.! எத்தனை
திட்டங்கள். எத்தனை போராட்டங்கள்
கடைசியில் திவானை நம்பிய சுந்தரர், “ரோகிணி பெற்றோரை இழந்து வேதனையும்
தனிமையிலும் இது போல நடந்து கொள்கிறாள். தாங்கள் தான் பெரிய மனது செய்து அதை
எல்லாம் பொருட்படுத்தாது அவளை நல்ல படியாக பார்த்து கொள்ள வேண்டும்” என்று
சொல்லி வற்புறுத்தி விட்டு சென்றார்.
ஒரு தடவை சொல்லாமல் கொள்ளாமல் அரண்மணையை விட்டு அவள் வெளியே ஓடி போன
போது நாடு நகரமெல்லாம் தேடி திரிந்து கஷ்டப்பட்டு கண்டு பிடித்து கொண்டு வந்து உதைத்து
சித்ரவதை செய்து சரி செய்தாயிற்று.பிறகு ஒரு தடவை திருவிழாவின் போது மீண்டும் வெளியே
ஓடி மறுபடியும் அவளை தேடி நான்கு நாட்களுக்கு பிறகு காட்டில் கண்டு பிடித்து இழுத்து வந்தது.
அதற்கு பிறகு தான் இந்த பாதாள அறையை தயார் செய்தது. நாட்டில் இந்த பெண் மிகவும் முரடு
என்றும் அடிக்கடி காட்டுக்கு ஒடி போய் விடுவாள் என்றும் புரளியை கிளப்பி விட்டது. அது பரவி
பரவலாக எல்லோராலும் நம்பவும் பட்டது.
பதினாறு வயது வந்த போது, தனக்கு விசுவாசமான அடியாட்களில் நல்ல திடகாத்திரமான
தடியன்களாக பத்து பேரை தேர்வு செய்து ஒவ்வொருவராக அவளிடம் அனுப்பி பலாத்காரமாக
நடப்பிக்க வைத்தது தான் கொடுமைகளின் சிகரம். அதன் மூலம் பெண் பார்க்கும் வைபவம்
என்றாலோ ஆண்கள் என்றாலோ அவள் புலி போல சீறி கொண்டு கிளம்பி எதிரே நிற்பவனை
பந்தாடி விடுவாள்.
இதுவரை சரி, அன்று வேட்டையன் புதூர் இளவரசனை கண்டதும் அவளுடைய தாயார்
ஊர்காரன் என்ற நினைப்பில் அவனை திருமணம் செய்ய எண்ணிய போது அவளை பாதாள
சிறையில் போட்டு செய்த கொடுமையில் அவளுக்கு திருமணமே கசந்து போனது” என்று சொல்லி
நிறுத்தினார்.
தனக்காக எத்தனை யோசித்து ஒவ்வொன்றாக செய்திருக்கிறார் தந்தை என்ற உவகையுடன்
“ப்பா, நீங்கள் மிகப் பெரிய ராஜதந்திரி அப்பா. உங்கள் ஆட்சியில் இந்த நாடு சுபிட்சமாக
இருக்கும்” என்று வேதம் ஓதியது அந்த சாத்தான்.
அவனுடைய புகழுரையில் கண் இமைக்கும் நேரம் மயங்கி நின்றவர் பின் ஒரு பெருமூச்சுடன்
“இந்த நேரத்தில் சுந்தரரிடம் உன்னை பற்றி சொல்லி உங்கள் இருவரின் திருமணத்தை முடிக்க
நாள் குறித்து கொண்டு வரலாம் என்று கிளம்ப முற்பட்டேன்” என்று சொல்லி விட்டு “அப்போது
தான் இவன் இந்த விஜயன் எதிர்பாராமல் வந்து சேர்ந்தான்” என்றார் ஆங்காரத்துடன்.
“விஜயனா?” என்றான் மணிபல்லவன்.
“ம்” என்று ஆமோதித்தவர் “அவனை தனாதிகாரி தனபாலன் என்ற பெயரில் ஒருவனை விடுதியில்
விஜயனை சந்திக்க வைத்து ரோகிணியின் ஜாதக விசேஷம் என்று ஒரு பொய்யை சொல்லி
அப்படியே அனுப்பி விட பார்த்தேன்.”
“என்ன பொய் அது?”
“ரோகிணியின் பத்தாவது வயதில் அவளுடைய பெற்றோர் இறந்ததும் அவளை திருமணம்
செய்பவன் அல்பாயுசில் மரணமடைவான் என்பதும் அவள் பிறக்கும் போதே சொல்லப்பட்ட
ஜாதக விசேஷம் என்று.”
“நல்லவேளை அது பொய் தானே அப்பா?”
ஒரு பெருமூச்சு விட்டு ஆம் என்பதாக தலையை ஆட்டினார் திவான். மணிபல்லவன் கேட்காமலே
மேலும் மேலும் தொடர்ந்தார். “வழக்கம் போல வெளிச்சம் இல்லாத மாடிப்படிகட்டின் கடைசியில்
நிற்க வைத்தேன். அவன் அருகில் வருவான், இவள் பின்நோக்கி நகருவாள்,அந்த இடத்தில நான்
செய்து வைத்திருந்த தடங்களில் தடுக்கி கொண்டு விழுவாள், இவன் தாங்கி கொள்ள போவான்,
அவளிடம் உதை வாங்கி கொண்டு ஓடி போவான். இது தான் வழக்கமாக யார் ரோகிணியை
பெண் பார்க்க வந்தாலும் செய்வது. ஆனால் இப்போது?” கண்களில் வன்மம் மின்னியது.
“என்னப்பா நடந்தது?”.”
“நான் நினைத்தது நடக்கவில்லை”
“அச்சச்சோ. பின்பு?”
“ம். நடந்ததே வேறு”
“நீங்கள் இத்தனை சரியாக திட்டமிட்டும் நடந்ததே வேறா? உங்கள் திட்டம் கூட தகர்ந்து
போகுமோ என்ன?”
அவருடைய இலக்கை சரியாக நிர்ணயித்து அதை அடைய இத்தனை திட்டங்களையும் போட்டு
அதை மிகச் சரியாக நடத்தி வந்து கடைசியில் கோட்டை விட்ட அசூசை அவருள் அலையடித்து
பெருமூச்சாக வெடித்துக் கிளம்பியது. என்னவோ இவர் எல்லாம் நன்மையாக செய்து வந்ததைப்
போலவும் விஜயன் வந்து அதை கெடுத்து விட்டதைப் போலவும் விஜயனிடம் மிகுந்த
குறைப்பட்டவனாக சொன்னார் திவான். “அவன் அவளை தாங்கி கொள்ள விறையாமல், அந்த
இடம் வெளிச்சமில்லாமல் இருப்பதை கண்டு பிடித்து விட்டான். மேலும் நான் மூடி வைத்திருந்த
சாளரத்தையும் திறந்து விட்டான்.மேற்கொண்டு ரிசீவர் துரைசாமியிடம் ரோகிணியை திருமணம்
செய்ய சம்மதம் என்று வேறு சொல்லி விட்டான். துரைசாமி திருமணத்திற்கான ஏற்பாடுகளை
செய்ய சொல்லி விட்டார். நல்லவேளை என் அதிர்ஷ்டம் அந்த விஜயன் ரோகிணிக்கும் அவனை
பிடித்திருக்க வேண்டி காத்திருப்பேன் என்று சொன்னான். இத்தனை நாட்கள் வந்தவர்கள்
எல்லோரும் ரோகிணியை பிடிக்கவில்லை திருமணம் செய்ய இயலாது என்று சொல்லுமாறு
செய்து விட்டேன்.
இப்போது ரோகிணி விஜயனை திருமணம் செய்ய இயலாது என்றும் அவனை தனக்கு
பிடிக்கவில்லை என்றும் சொல்லுமாறு அன்று அவளை பாதாள சிறையில் போட்டு அடித்து
துன்புறுத்தினேன். அவளும் சம்மதம் சொல்லியிருப்பாள். அதற்குள், அவளை தேட நாமும்
காட்டுக்கு போகலாம் என்று கிளம்பி விட்டான். அவனை சமாளிக்க வேறு வழியில்லாமல்
அவளை மீண்டும் அவள் அறைக்கே கொண்டு வர வேண்டியதாகி போய் விட்டது. அதனால்
என்னுடைய இத்தனை வருட திட்டங்களையும் பாழாக்கி விட்டான்.” என்று தன் மகன்
மணிபல்லவனிடம் குமிறி கொண்டிருந்தார் திவான் வில்வநாதன்.
“இத்தனை திட்டமிட்டு இத்தனை வருடங்கள் பாடு பட்டீர்களே, இதையும் சொல்லி விடுங்கள்”
“என்ன?”
“மன்னர் பாஸ்கரர் ராணி பாக்கியலட்சுமி இருவரையும் கூட கொன்றது நீங்கள் தானா? அல்லது
உண்மையில் அது இயற்கை மரணமா?”
அந்த இடம் சட்டென்று அமைதி ஆயிற்று. திவான் மணிபல்லவனின் கண்களுக்குள் ஊடுருவி
பார்த்தார். ஒரு பெருமூச்சு அவரிடமிருந்து வெளிப்பட்டது.
“அந்த மரணம் கொலையாக தான் இருக்கும் என்ற சந்தேகம் எனக்கும் உண்டு”
“அப்படியென்றால்.?”
“அப்படியென்றால்,.! அதை நான் செய்யவில்லை”
“பிறகு..பிறகு வேறு யார் செய்திருக்க கூடும்?”
“அது உண்மையில் எனக்கும் கூட தெரியாது.”
“இனி என்ன செய்ய போகிறீர்கள்?”
“அதை தான் யோசித்து கொண்டிருக்கிறேன்.”
மணிபல்லவன் தன் தந்தையை தீர்க்கமாக பார்த்து கொண்டிருந்தான். திவான் நீண்ட
யோசனையில் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தார். “காத்திருந்தவன் பெண்டாட்டியை
நேத்து வந்தவன் கொண்டு போனானாம் என்பது போல இத்தனை வருடங்களாக பாடுபட்டு
திட்டம் தீட்டி இத்தனை கன கச்சிதமாக காரியங்களை நான் நடத்தி கொண்டு வந்தேன். பழம்
நழுவி பாலில் விழுந்தது போல உனக்கும் ரோகிணிக்கும் திருமணத்தை முடிக்க போகும் நேரத்தில்
இவன் வந்து கெடுக்க நினைத்தால் நான் விட்டு விடுவேனா?”
“என்ன செய்ய போகிறீர்கள்?”
“பாஸ்கரின் மரணம் எப்படி பட்டதாக இருந்தாலும் அவனுக்கு சாசனம் எழுத ஆயுசு மிச்சம்
இருந்தது. இவர்களுக்கு தப்பித்து கொள்வதற்கு நேரமே இல்லாமல் சட்டென்று கதையை முடித்து
விடுகிறேன் பார்.” அவர் மனதில் அந்த நேரத்தில் உருவான திட்டத்தை விட அப்போது
அவருடைய முகம் மிகவும் கோரமாக இருந்தது.
“சரி,அவர்களுக்கு ஏதேனும் நேர்ந்து விட்டால் எப்படி நாடு உங்கள் கைக்கு வரும்.”
“பாஸ்கரின் சாசனம் ரோகிணி விஜயன் திருமணத்துடன் காலாவதி ஆகி விடும். திருமணம்
முடிந்ததும் கும்பினியார் நாட்டை அவர்கள் கையில் ஒப்படைத்து விடுவார்கள்.”
“மற்ற குறுநில மன்னர்கள் கலகம் செய்தால்….?”
“நாய்க்கு எலும்பு துண்டு போடுவது போல கும்பினியாரை சரிகட்டி வைத்து கொண்டால்
அவர்கள் உதவியுடன் இவர்களை சமாளித்து விடலாம்”
“மக்கள் புரட்சி செய்தால்.?”
“இவ்வளவு திட்டமிடும் நான் இதை யோசித்திருக்க மாட்டேனா?”
அவரையே கண்கொட்டாமல் பார்த்து கொண்டிருந்தான் மணிபல்லவன்.
“நம்முடைய ராணுவ வீரர்களை கொண்டு புரட்சியை ஒடுக்கி விடலாம்”
சர்வ சாதாரணமாக அவர் திட்டமிடவும் அது நடந்து விட்டதாகவே மணிபல்லவன் நம்ப
முற்பட்டான்.
“ஆக, இப்போதைக்கு இவர்கள் திருமணம் முடியும் வரை அமைதியாக இருப்பதே சால சிறந்தது.”
அவருடைய கண்களில் தீவிரம் இருந்தது. மணிபல்லவன் கண்களில் கனவு மிதந்தது.
பெண்மையின் சாயல் நிரம்ப பெற்ற மணிபல்லவன் தான் வேட்டுவமங்கலத்தின் சிம்மாசனத்தில்
அமர்ந்து விட்டதாகவே நம்ப தொடங்கிய அந்த நிமிடம் திடீரென்று தன்னுள் கொந்தளித்த
ஆண்மையின் கொப்பளிப்பில் தன் முகத்தில் இல்லாத மீசையை மானசீகமாக முறுக்கி கொண்டு
மஞ்சத்தில் நிமிர்ந்து உட்கார்ந்தான்.