அத்தியாயம்-2
சூரியன் மேற்கே மலைகளுக்கு பின்னால் மறைய தொடங்கிய நேரம் சொக்கநாதபுரம்
சமஸ்தானம் என்னும் தென்நாட்டின் கோட்டை வாசல் ஒரே பரபரப்பாக இருந்தது. கைரேகை
பார்க்க முடியாத வெளிச்சம். .கோட்டை கதவை மூட தொடங்கி இருந்தார்கள் கோட்டை
பாதுகாப்பு வீரர்கள். உள்ளே செல்ல முயன்றவர்களை பரிசோதித்து தாக்கீது உள்ளவர்களையும்
அழைப்பு பெற்றவர்களையும் கோட்டைக்குள் அனுமதித்து கொண்டிருந்தார்கள்.
நாளை காலை அரசவை கூட போகிறது. சுந்தரபுரம் சமஸ்தானத்துக்கு உட்பட்ட சிற்றரசர்கள்
அவர்களின் மந்திரி பிரதானிகள் பாதுகாவலர்கள் என்று பெருங்கூட்டம் நாட்டின் நானா
திசைகளில் இருந்தும் வந்தவண்ணம் இருந்தனர்.
வீரையன் கோட்டை சிற்றரசர் வீர ரெகுநாத பூபதியும் தன் பரிவாரங்களுடன் வந்திருந்தார். அவர்
மன்னருக்கு மிகவும் நெருக்கமானவர் ஆதலால் அவர் அதற்கு உரிய விதத்தில்
கௌரவிக்கபடுபவர். இருப்பதிலேயே மிகவும் பெரிதான, சகல வசதிகளும் நிறைந்த மாளிகையே
அவருக்கு ஒதுக்கபடுவது வழக்கம். அதேபோல் இப்போதும் அரண்மனையின் அருகாமையில்
இருந்த அந்த பெரிய மாளிகையே ஒதுக்கபட்டிருந்தது
தர்பார் மண்டபம் ஆரவாரமாக இருந்தது. சிற்றரசர்கள் ஒருவரை ஒருவர் வாழ்த்திக் கொள்ளுவதும்
முகமன் கூறுவதும் கரங்களை பிடித்து கொண்டு நலம் விசாரித்து கொள்வதும் என்று ஒரே
சத்தமாக இருந்தது.
“தென்கயிலாயமாம் சொக்கனாதபுரத்தின் சொக்கத் தங்கம் வருகிறார் பராக் பராக்”
“மேற்கு மலைகளின் தொடர்ச்சியும் கிழக்கே வயல்களின் வளப்பமும் கொண்ட
சொக்கநாதபுரத்தின் பேரரசர் சுந்தர உடையார் வருகிறார் பராக் பராக்”
“பதினாறு போர் கண்ட மாவீரன் வருகிறார் பராக் பராக்”
இன்னும் மன்னரின் வீரத்தையும் அவர் பெற்ற பட்டங்களையும் சொல்லி கட்டியம் கூறுபவனின்
வாழ்த்தொலி மன்னர் வருவதை முன்னறிவித்தது. சபை சட்டென்று மிகவும் அமைதியாயிற்று.
மன்னர் ராஜகேசரி சுந்தர உடையார் கம்பீரமாக உள்ளே வந்து கொண்டிருக்க கட்டியம்
கூறுபவன் மன்னரின் பட்டங்களை அழகுபட உரத்து சொல்லிக்கொண்டே வந்தான். அதற்கு
பொதுமக்களும் மற்றவர்களும் தங்கள் வாழ்த்தையும் அன்பையும் பதிலாக பிரதிபலித்துக்
கொண்டிருந்தார்கள். சபையோரின் வாழ்த்துக்களை ஏற்றும் அதற்கு பதில் வணக்கமும்
சொல்லியவாறு வீறு நடை போட்டு வந்து மன்னர் சிம்மாசனத்தில் அமர்ந்ததும் அரசவை
அலுவல்கள் தொடங்கியது.
மாமன்னர் சுந்தரர் சபையையும் அன்றாட அலுவலையும் நடத்துவதே ஒரு கண்கொள்ளாக்
காட்சியாக இருந்தது அவையில் இருந்த ஏனைய சிற்றரசர்களுக்கு. அவர்களுக்கும் அது ஒரு முன்
உதாரணமாக இருந்தது. வழக்குகளுக்கும் அதற்கு உண்டான நியாயமான தீர்ப்புகளுக்கும்
பொதுஜனங்கள் மட்டுமன்றி சிற்றரசர்களிடையேயும் மிகுந்த வரவேற்பைப் பெற்றதனால் ஆஹா
என்ற பாராட்டுகளும் மன்னருக்கு உரித்தான வாழ்த்தொலிகளும் சபையை நிறைத்தது.
கூட்டம் முடிந்ததும் அரசர் ரெகுநாதரை அழைத்துக்கொண்டு அவருடைய அந்தரங்க ஆலோசனை
செய்யும் அறைக்கு மந்திரி குணநாதன் உடன் வந்து இருக்கையில் அமர்ந்து அவர்களையும்
அமரும்படி சொன்னார். ரெகுநாதரின் மக்களை பற்றி விசாரித்தார்
.மூத்தவன் பட்டத்து இளவரசனான குமரப்பாவை அவருக்கே தெரியும். அவருடனே சில
போர்களுக்கு வந்தவன். அவருடைய வெற்றியில் பெரும் பங்கு அவனுடையது தான். மகா பெரிய
வீரன்
சின்னவன் வீர விஜய பூபதி தாய், ராணி லட்சுமி தேவி போல உயரமாக ஒற்றை நாடியாக
அகன்ற தோள்களுடன் கருணையான கண்களுடன் இருப்பவன். ஆங்கிலேயருக்கு இணையாக
அவர்களுடன் மதராசபட்டினத்தில் படித்து கொண்டிருக்கிறான். மூத்தவனைப் போல
பராகிரமசாலியாக மட்டும் இல்லாமல் அறிவு கூர்மை நிறைந்தவனாகவும் இருந்தான். மூன்றாவது
மகனான வீர சேகர பூபதி கல்வியுடன் போற்பயிற்சியும் பெற்று கொண்டிருக்கிறான்,
மனதில் என்ன வைத்து கொண்டு கேட்கிறார் என்பது புரியவில்லை ஆதலால் மந்திரி
குணநாதனை பார்த்தார். அவர் எல்லாம் நல்ல செய்தி தான் என்பது போல சைகை செய்தார்.
ரெகுநாதனுக்கு கொஞ்சம் ஆசுவசாமாகியது.
அது வரை அவர் பேசுவதை ஒருவித
யோசனையுடன் கேட்டுகொண்டிருந்த மன்னர் ஒரு நீண்ட சொற்பொழிவிற்கு தயாரானது போல
தொண்டையை கனைத்து தன்னை சரி செய்து கொண்டு பேச ஆரம்பித்தார்.
“ரெகுநாதர் அவர்களே, வேட்டுவமங்கலம் சமஸ்தானம் தங்களுக்கு தெரிந்திருக்கும்.”
ரெகுநாதருக்கு தெரிந்து இருந்தது. வேட்டுவமங்கலம் சமஸ்தானத்தின் மன்னர் ராஜா பாஸ்கர
மார்த்தாண்டன் சுந்தர உடையாரின் மிக நெருங்கிய நண்பன் என்பதும், மார்தாண்டனும்
அவருடைய ராணி பாக்கியலட்சுமியும் ஒரு விபத்தில் எட்டு வருடங்களுக்கு முன்பு இறந்து
விட்டார்கள் என்பதும் தெரியும் தான். அவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள் என்பதும் அது ஒரு
முரட்டு பெண் என்றும் கேள்விபட்டிருக்கிறார்.
மீதி கதையை மந்திரி குணநாதன் தொடர்ந்தார்.
“வேட்டுவமங்கலத்தின் ராஜா பாஸ்கர மார்தாண்டனும் அவர் மனைவி ராணி பாக்கியலட்சுமியும்
விபத்தில் அகால மரணமடைந்த போது இளவரசி ரோகினி தேவி பத்து வயது சிறுமியாக
இருந்தார். ராணி பாக்கியலட்சுமியின் தகப்பன் வீட்டார் வேட்டுவமங்கலத்தின் சாதாரண பிரஜை
எந்த பெரிய பின்புலம் இல்லாத சாதாரண குடும்பம். ராஜா மார்த்தாண்டன் ராணியை தன் சொந்த
விருப்பத்தின் பேரிலேயே திருமணம் செய்திருந்தார். ஆகையினாலே ராணியாருக்கு அவர்
தாய்வழி குடும்பத்துடன் எந்தவிதமான உறவும் இல்லாமலே வைத்திருந்தார் ராஜா
மார்த்தாண்டன்
ஆகையினால், இருவரும் இறந்தபோது இளவரசி ரோகினி தேவியாரை அவர் தாய் வழி பாட்டன்
தானே வளர்க்க விரும்பி கேட்டார். ஆனால் அவர்களுடைய பொருளாதார நிலையையும்
எந்தவிதமான பின்புலமும் செல்வாக்கும் இல்லாத அவர்களிடம் இளவரசியார் வளர்வதை
கும்பினியார் ஒப்பவில்லை.
மேலும், இளவரசி ரோகினி தேவி அவர்கள் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டு
மரணமடைந்தால் வேட்டுவமங்கலம் சமஸ்தானத்தை கும்பினியார் கைப்பற்றிக் கொள்வார்கள்.
இளவரசிக்கு பதினெட்டு வயதாகும் முன் அவருக்கு திருமணத்தை முடித்தால் சமஸ்தானத்தை
அவர் வசம் ஒப்புவிக்க கும்பினியார் தயாராக உள்ளார்கள்.
அவருக்கு ஏற்ற மணாளனை தேடி திருமணம் செய்ய வேண்டிய பொறுப்பு மன்னர் உடையாரை
சேர்ந்தது. தன் நண்பனின் மகளை நல்லபடியாக வாழ்வைப்பது அவருடைய கடமையாக
நினைக்கிறார்.
அப்படி பதினெட்டு வயதாகியும் திருமணம் முடியவில்லை என்றால் வேட்டுவமங்கலம்
சமஸ்தானம் நிரந்தரமாக கும்பினியார் வசமாகி விடும்.
இப்போது திவான் வில்வநாதனின் பொறுப்பிலும் நிர்வாகத்திலும் வேட்டுவமங்கலம் இருந்தாலும்
கும்பினியாரின் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ரிசீவர் அதாவது வரிபெறும் பணியாளர்
உடைமை காப்பாளர் இந்நாட்டின் உடைமையை செயலாட்சி புரிய நீதிமன்றத்தால்
நியமிக்கப்பட்டவர். அவருடைய மேற்பார்வையில் தான் ஆட்சி நடக்கிறது
திவான் வில்வநாதனின் பராமரிப்பில் தான் கடந்த ஏழு வருடங்களாக இளவரசியார்
இருக்கிறார்கள். இப்போது அவருக்கு திருமணம் முடிக்க வேண்டும்.
திவானும் அங்கேயே சில பாளயக்காரர்களின் மகன்களுக்கு தேவியாரை திருமணம் செய்ய
பார்த்ததாகவும் தேவியார் திருமணம் என்றாலே மிகவும் பயப்படுவதாகவும் தகவல் வந்தது. அது
விஷயமாக தான் மன்னர் உங்களிடம் பேச அழைத்தார்கள்.”
இதற்கு தான் என்ன செய்ய முடியும் என்ற குழப்பமும் இதை தன்னிடம் ஏன் இவர்கள்
சொல்கிறார்கள் என்ற கேள்வியும் பட்டவர்த்தனமாகவே ரகுநாதரின் கண்களில் தெரிந்தது.
அவர் கண்களைப் பார்த்து அவருடைய மனதைப் படித்த மன்னர் நேரிடையாக ரெகுநாதரிடம்
கேட்டார், “தங்கள் மகன் குமரப்ப பூபதிக்கு ரோஹிணியை திருமணம் செய்து வைக்க
விரும்புகிறேன். உங்கள் முடிவை சொல்லுங்கள்”
ரெகுநாதர் எதிர்பார்த்திராத நேரத்தில் திடீரென்று தன்னிடம் கேட்கப்பட்ட கேள்வியின்
கனபரிமானம் அவருடைய மூச்சை அடைத்தது. யாரும் நினையாத நேரத்தில் வருவது தான்
அதிர்ஷ்டமா? இதற்கு என்ன பதில் சொல்ல வேண்டும் என்று கண்ணிமைக்கும் நேரம்
யோசிக்கவேயில்லை வீர ரெகுநாத பூபதி. கரும்பு தின்ன கசக்குமா என்ன?
-ஷியாமளா கோபு
Very nice 👍