Skip to content
Home » அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-3

அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-3

 3

வீரையன் கோட்டை அரண்மனையின் வாசலில் தன்னுடன் வந்த மந்திரி பிரதானிகளுக்கும் படை

தளபதிக்கும் விடை கொடுத்து அனுப்பிவிட்டு உள்ளே வந்த வீர ரெகுநாத பூபதியை எதிர்

கொண்டு வந்து வரவேற்றார் ராணி லெட்சுமி தேவியார். அவருக்கு மன்னரிடம் தெரிந்து கொள்ள

வேண்டிய விஷயங்கள் அநேகம் இருந்தது.

“வாருங்கள்.பிராயணம் நல்லபடியாக இருந்ததா?”

“ஆம், நல்லபடியாக இருந்தது”

“மன்னர் மற்றும் மகாராணி நலமா?”

“நலமாகத் தான் உள்ளனர்?”

“உங்கள் நண்பர்களை எல்லாம் சந்தித்தீர்களா?’

“ஆம்.”

“சோழமங்கலம் அரசர் வந்திருந்தரா?”

அவளை ஊடுருவி பார்த்தார். அவள் கேள்வியின் உள் அர்த்தம் அவருக்கா புரியாது? நேரடியாக

என் அண்ணனை பார்த்தீர்களா? என்று கேட்க தயங்கி இப்படி கேட்கிறாள் இவள். இந்த

கேள்வியை தொடர்ந்து அவளுடைய மனதில் எத்தகைய எண்ணம் ஓடக்கூடும் என்பது

புரிந்தவராக நிதானமாகவே அவளுக்கு பதில் சொன்னார் ரெகுநாதர்.

“உன் அண்ணனை பார்த்தேன்”

வீரையன் கோட்டையின் கிழக்கே ஒரு சிறிய நிலப்பகுதி தான் லட்சுமி தேவியார் பிறந்த சோழ

மங்கலம் நாடு. இப்போது அங்கே அவளுடைய தமையனார் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்.

“நம் குமரனுக்கு அவர் மகள் இளவரசி திலகவதியை கொடுக்கும் எண்ணம் இருக்கிறதா

அவருக்கு?ஏதாவது சொன்னாரா?” கேள்வி இயல்பானதாக இருந்த போதும் நெஞ்சின் படபடப்பு

கண்களில் விரிந்திருந்தது.

“தேவி, முதலில் நான் சிரமபரிகாரம் செய்து கொள்ளட்டும். உன்னிடம் சொல்ல வேண்டிய

முக்கியமான விஷயங்கள் உள்ளது.”

“ஆம். ஆம். மன்னியுங்கள்”

“எங்கே குமரன்? அவனையும் வரச்சொல்.”

“நீராடி விட்டு வாருங்கள். எல்லாம் தயாராக உள்ளது.”

“சரி”

அந்தபுரத்தில் ராணியாரின் அறையில் அரசருடன் ராணியாரும் குமரனுடன் சேகரனும்

இருந்தார்கள். ரெகுநாதர், சுந்தர உடையாரும் மந்திரி குணநாதனும் கூறிய விவரங்களை

அவர்களுக்கு விளக்கினார். இறுதியாக குமரனுக்கு வேட்டுவமங்கல இளவரசி ரோகிணிதேவியை

திருமணம் செய்ய தன்னுடைய சம்மதத்தை மன்னர் கேட்டதையும் தான் அதற்கு சம்மதித்து

குமரனை வேட்டுவமங்கலதிற்கு அனுப்ப ஒப்பு கொண்டதையும் கூறினார்.

குமரனுக்கு திருமணம் செய்து விடவேண்டும் என்று அரசரை தொந்தரவு செய்து

கொண்டிருந்தவள் தான் ராணி லட்சுமிதேவி. அவரை பொறுத்தவரை மகனுக்கு திருமணம்

என்பதில் மகிழ்ச்சியே.

ஆனால்….

மணப்பெண் ரோகிணி என்பதில் தான் சற்றே அசூசை. அந்த பெண்ணை பற்றி

கேள்விபட்டிருக்கிறாள். சற்று முரட்டுபெண் என்று. அவளுக்கு ஏதாவது பிரச்சினை என்றாலோ

அல்லது பிடிக்கவில்லை என்றாலோ யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் காட்டுக்குள்

ஓடிபோய் விடுவாள். காட்டுக்குள் வசிக்க முயல்பவளை எப்படி வீட்டுக்குள் அடக்கி வைப்பது.

அதுவும் தாய் தகப்பன் இல்லாமல் திவானின் வளர்ப்பில் வளர்ந்தவள். குடும்பத்திற்கு ஏற்றவளாக

இருப்பாளா? ராணியார் உரக்கவே சிந்தித்தார்.

அரசர் ரெகுநாதருக்கு ராணியின் கவலை அல்ப விஷயமாக இருந்தது. குமரனை பார்த்து

கேட்டார். “குமரப்பா, நீ சுத்த ஆண்மகன் அல்லவா? அதிலும் பல போர்களை கண்ட மாவீரன்.

கேவலம் ஒரு பெண்ணை சமாளிக்க உன்னால் முடியாதா?”

நெஞ்சை நிமிர்த்தி கொண்டு குமரன் பதில் சொன்னான்.

“அப்பா, அது ஒன்றும் பிரச்சினையே இல்லை”

பெருமிதத்துடன் ராணியை பார்த்தார் “பின் என்ன லெட்சுமி”?

“அவனுக்கு சரி என்றால் எனக்கு ஒன்றும் கஷ்டம் இல்லை”

ஆனால் அரசியின் குரலில் இருந்த விரக்தியோ அன்றி குறையோ ஏதோ ஒன்று அவருக்கு

நெருடலாக இருந்தது. எனவே அரசர் மேலும் விளக்க முற்பட்டார். “உங்கள் எல்லோருக்கும்

தெரியும். சொக்கநாதபுரம் சமஸ்தானத்தின் விஸ்தீரணத்தை விட வேட்டுவமங்கலம் சமஸ்தானம்

மிகவும் பெரியது. பத்து சிற்றரசர்களை உள்ளடக்கியது. அல்லிக்குளம், அரசங்குளம்

வேட்டையன்புதூர் சோமசேகரபட்டினம். சோமங்கலம் மேல்பாடி மேலையூர் கீழையூர்

நன்மங்கலம் சிற்றரசர்கள் வேட்டுவமங்கலதிற்கு திறை செலுத்தி கொண்டிருக்கிறார்கள்”

“இவ்வளவு பெரியதா வேட்டுவமங்கலம்?” அரசியின் ஆச்சரியம் ரகுநாதருக்கு உற்சாகத்தைக்

கொடுத்தது. இதைத் தான் அவரும் எதிர்பார்த்தார்.

“ஆமாம் லக்ஷ்மி” என்றார் ரொம்பவுமே பெருமையாக. என்னவோ இப்போதே அந்த நாட்டிற்கு

தன் மகன் அரசனாக முடிசூட்டிக் கொண்டதைப் போன்ற நினைவில்.

“மன்னர் சுந்தர உடையாருக்கு மட்டும் ஒரு மகன் இருந்திருந்தால் இந்நேரம் தன் மகனுக்கே

ரோகிணியை திருமணம் செய்து வைத்து சொக்கநாதபுரத்தையும் வேட்டுவமங்கலதையும்

ஒன்றாக்கி இருப்பார். நல்லவேளையாக அவருக்கு ஒரு ஆண்பிள்ளை இல்லை. இப்போது அந்த

அதிர்ஷ்டம் நம் குமரனுக்கு கிடைத்திருக்கிறது. ரோஹிணியை கட்டுவதன் மூலம் நாமும் சுந்தர

உடையாருக்கு சம அந்தஸ்தில் இருப்போம்.”

அவருடைய கண்களில் தெரிந்த கனவு இப்போது குமரனின் கண்களில் காட்சியாக விரிந்தது.

காட்சி தந்த பிரமிப்பு அவனை நெஞ்சை நிமிர வைத்தது. அப்பா………….! எவ்வளவு பெரிய

சமஸ்தானம். ஒரு யுத்தமின்றி ரத்தமின்றி நமக்கே நமக்கா? முகம் முழுவதும் விகசித்திருந்த

குமரனைப் பார்த்து ரெகுநாதர் கேட்டார்.

“குமரா, கரும்பு தின்ன கசக்குமா?”

“கண்டிப்பாக இல்லை அப்பா”

“ஆனாலும் அந்த பெண்ணைப் பற்றி…………?” தாயாக கவலைப்பட்டவளிடம் மகன் நெஞ்சை

நிமிர்த்தி சொன்னான். “அம்மா சுந்தர உடையாருடன் பல போர்களைக் கண்டவன் நான். ஒரு சிறு

பெண்ணையா சமாளிக்க முடியாது!”

உற்சாகத்துடன் எழுந்து நின்றவன் குனிந்து பெற்றவர்களிடம் ஆசி வாங்கி கொண்டு

கிளம்பினான். இது அவன் வீரத்திற்கு விடப்பட்ட சவால் ஆயிற்றே. எத்தனை போர்களை

கண்டவன் அவன். அதிலும் வெற்றியை மட்டுமே ருசித்தவன் ஆயிற்றே.

ராணி லட்சுமி தேவிக்கு சொல்ல இயலாத துக்கம் ஒன்று நெஞ்சை அடைத்தது. அவள்

சிந்தனையில் என்னவோ குழப்பங்கள் தோன்றி மறைந்தது.

தைரிய லட்சுமியும் வீர லட்சுமியும் உடன் வர வெற்றி லட்சுமியை தேடி சற்று நேரத்தில் குமரன்

படை பரிவாரங்களுடன் கிளம்பிய சப்தம் கேட்டது.

”வாருங்கள், வாருங்கள் இளவரசே.” திவான் வில்வநாதன் குனிந்து வரவேற்றார்.

அரண்மனையின் உள்ளே நுழைந்து விருந்தினருக்கான கொடி வீட்டில் கொண்டு வந்து விட்டு

சொன்னார். “பிராயண களைப்பு நீங்க ஓய்வெடுங்கள். நான் போய் இளவரசியாரை தயார் செய்து

விட்டு வந்து தங்களை அழைத்து செல்கின்றேன்.”

“சரி”

சற்று நேரத்தில் திரும்பி வந்தவர் சொன்னார். “இளவரசி தயாராக இருக்கிறார். வாருங்கள்

இளவரசே”

அந்த அரண்மனையின் தர்பார் மண்டபத்தின் வலது புறம் உள்ள பெரிய கூடத்தில்

மேல்மாடத்திற்கு செல்லும் படிகட்டின் முகப்பை பிடித்து கொண்டு நின்று கொண்டிருந்தாள்

ரோகிணிஅந்த பகல் பொழுதின் சூரிய வெளிச்சம் அந்த இடத்தில அவ்வளவாக இல்லை.

சாளரத்தின் வழியாக வந்த வெளிச்சத்தில் வரிவடிவமாக தென்பட்டாள். அவளை சரியாக காணும்

ஆவலில் அவளை நோக்கி சென்றான் குமரன்.

ஆனால்………!

அவன் தன்னை நோக்கி வருவதை கண்ட ரோகிணி பின் நோக்கி நகர்ந்தாள்.

படிக்கட்டில் முட்டிக்கொண்டு பின்னால் சரிய போனவளை மிகவும் வேகமாக சென்று தன்

கரங்களால் தாங்கி பிடித்தான் குமரன்.

“ஆ.”

ரெண்டாக முன்னால் மடிந்து வலி பொறுக்க மாட்டாமல் அலறி துடித்தான் குமரன். ஒரு நிமிடம்

என்ன நடந்தது தனக்கு என்பதே அவனுக்கு புரியவில்லை. பொறி பறந்தது. கண்கள் இருட்டிக்

கொண்டு வந்தது. தலை சுற்றியது.

ரோகிணி அவன் கையை தன் நகங்களால் கீறினது மட்டுமல்லாமல் தன் முன்னந் தொடையால்

அவன் கால்களின் இடுக்கில் எட்டி ஒரு உதை கொடுத்திருந்திருக்கிறாள்.

அதற்குள் சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்த திவான் குமரனின் அருகில் ஓடிவந்து

பதைபதைப்புடன் அவனை அருகில் இருந்த நாற்காலியில் அமர வைத்து அவனை

ஆசுவாசபடுத்தினார். கையை தட்டி பணியாட்களை அழைத்து நீர் கொண்டு வந்து தந்து

உபசரித்தார்.

“நான் என்ன செய்வேன். இந்த பெண் யார் வந்தாலும் இப்படி செய்கிறதே” என்று புலம்பி

கொண்டே இருந்தார் திவான்.

அதற்குள் ரோகினி காற்றாய் பறந்துவிட்டாள். இனி எத்தனை நாட்கள் கழித்து வருவாளோ?

வலி ஒருபுறம் அவமானம் ஒருபுறம். மிக வேகமாக கொடிவீட்டிற்கு திரும்பிய குமரன் உட்கார

கூட இல்லை. அவன் முகத்தை பார்த்து உடன் வந்தவர்கள் ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்கிறது

என்பதை புரிந்து கொண்டு செய்வது அறியாது திகைத்து அவனிடம் கூடி நின்றார்கள். குமரன்

தன்னை நிலைபடுத்திகொண்டு எழுந்து எல்லோரையும் பார்த்து கிளம்ப சொல்லி ஜாடை

காண்பித்து விட்டு வெளியே விரைந்து குதிரையில் ஏறி எங்கும் இடை நில்லாமல் வீரையன்

கோட்டை வந்தடைந்து தாயின் முன் தான் நின்றான்.

இப்படி பதறி போய் வர வேண்டுமானால், அந்த முரட்டுப் பெண் குமரனை என்ன அவமான

படுத்தினாளோ?. அவனுடைய முகத்தை பார்த்ததும் சூட்சுமத்தை புரிந்து கொண்ட தாய் அவனை

தோளை அணைத்து சமாதானபடுத்த முயன்றாள். “குமரா போ, போய் பிராயண களைப்பு நீங்கி

ஓய்வெடு ‘’

“அப்பா”

“நான் பார்த்து கொள்கிறேன்”

“சரி”

“அங்கே என்ன நடந்தது”?

“அந்த பெண் மகா முரடு அம்மா”

“அது தெரிந்து தானே பெண் பார்க்க சென்றாய்”

“ஆனால் இவ்வளவு முரடாக இருப்பாள் என்று நினைக்க வில்லை அம்மா”

“என்ன செய்தாள் அவள்”?

“வேண்டாம். அது என்னோடு போகட்டும்”

சொல்லமுடியாத அளவுக்கு அங்கே குமரனுக்கு ஏதோ அவமானம் ஏற்பட்டிருக்கிறது என்பது

புரிந்து மேல்கொண்டு அவனிடம் ஏதும் கேளாமல் அவனை அனுப்பி விட்டாள்.

குமரன் வந்திருக்கும் செய்தி அறிந்து விரைந்து வந்த அரசரை ராணி தான் எதிர் கொண்டாள்.

“குமரன் அதற்குள்ளாகவா வந்து விட்டான்?”

“ஆம். களைப்பாக இருந்தான். ஓய்வெடுக்க அனுப்பிவைத்தேன்.”

“அதுசரி. திருமணத்தை பற்றி என்ன முடிவு சொன்னான்.?”

“அவனுக்கு அந்த பெண்ணை பிடிக்கவில்லையாம்” சாதாரணம் போல குரலை வைத்துக்கொண்டு

சொன்னாள்.

“என்ன? பெண்ணை பிடிக்கவில்லையா? இதில் பிடிப்பதற்கு என்ன இருக்கிறது? நானெல்லாம்

பெண் பார்த்தா திருமணம் செய்தேன்?

“என் மேல் கோபப்படாமல் தயவு செய்து நான் சொல்வதை கொஞ்சம் பொறுமையுடன்

கேட்கவேண்டும்”

அவர் பேசாமல் அவளையே பார்த்து கொண்டிருக்கவும் அந்த மௌனத்தையே சம்மதமாக

கொண்டு மேலே சொன்னாள்.

“பேயறைந்தது போல வந்தான். அந்த பெண் மகா முரடு என்று சொன்னான். தெரிந்து தானே

பெண் பார்க்க சென்றாய் என்று கேட்டேன்”

“அது தானே”

“இவ்வளவு முரடாக இருப்பாள் என்று நினைக்கவில்லை என்கின்றான்”

“அப்படி என்ன செய்தாளாம்?”

“அங்கே என்னவோ அசம்பாவிதம் நடந்திருக்கிறது. சொல்ல மறுக்கிறான்”

அவர் மௌனமாகவே இருக்கவும் அவள் தயக்கத்தை உதறி விட்டு மேல் கொண்டு தொடர்ந்தாள்.

“தன்னை நேசிக்கும் பெண் தனக்காக வீட்டிலே காத்திருப்பாள் என்கின்ற எண்ணம் தான்

உங்களை மாதிரி வீரர்கள் போர்களில் வெற்றி பெற்று வீடு திரும்ப காரணம்”

“அதிலும் குமரன் நாளை நாடாள போகிறவன். அவன் கண்களுக்கு பிடித்த அழகான பெண்,

அவனை உள்ளன்போடு நேசிக்க கூடியவளாக இருப்பவளை அவனுக்கு திருமணம் செய்து

வைப்பது தான் நல்லது.”

“மேலும் நம் குலத்திற்கு வரும் முதல் மருமகள். நாளை அவனோடு சிங்காசனத்தில் அமர

வேண்டியவள் அவனை அனுசரித்து போக கூடியவளாக இருக்க வேண்டாமா?”

“சொக்கநாதபுரத்திற்கு இணையான அந்தஸ்து இருக்கும் என்பது உண்மை தான். ஆனால்

அதைவிட நம் குலம் முக்கியம் அல்லவா ?”

நிதானமாக மிகவும் அமைதியாக பொறுமையாக கேட்ட ஒவ்வொரு கேள்வியிலும் உள்ள நியாயம்

அவரை அசர வைத்தது. அவருடைய ஆசை நிராசை ஆனதால் அப்படியே சரிந்து பக்கத்தில்

இருந்த மஞ்சத்தில் அமர்ந்தார் ரெகுநாதர். எவ்வளவு நேரம் அப்படியே உட்கார்திருந்தாரோ? ஒரு

தீர்மானத்திற்கு வந்தவராக எழுந்து சொன்னார்.“விஜயனை உடனடியாக வரச்சொல்லி தாக்கீது

அனுப்புகிறேன்”

மறுநிமிடம் தகவல் கொண்டு ஒரு குதிரை வீரன் காற்றை விட வேகமாக விரைந்தான் மதராச

பட்டினத்தை நோக்கி.

“விஜயனா? அவனை.? எதற்கு?”குழம்பவும் கூடவே பதறவும் செய்தாள் லக்ஷ்மி.

“என்ன கேட்கிறாய் லக்ஷ்மி?” கிட்டத்தட்ட உறுமினார் ரகுநாதர். “குமரனை அனுப்பும் போதும்

இப்படித் தான் அச்சானியமாக சொன்னாய்”

“இல்லை. விஜயன் குமரனைப் போல போர்களங்களைக் கண்டவன் இல்லையே”

“அதனால் என்ன?”

“குமாரனாலேயே முடியவில்லை. இவனை அனுப்பினால்……!”

“அவனை என்ன வேட்டுவமங்கலத்திற்கு யுத்தத்திற்கா அனுப்புகிறோம்?”

“அவன் மதராசில் படித்துக் கொண்டிருக்கிறான்”

“அவன் வயதில் எனக்கு அவன் பிறந்து விட்டான் லக்ஷ்மி”

மொத்தத்தில் லக்ஷ்மிக்கு அந்த முரட்டுப் பெண்ணை தன் மகன்களில் யார் திருமணம் செய்தாலும்

பிடிக்கவில்லை. அதற்கு ஏதேனும் இடைஞ்சலாக மேற்கொண்டு ஏதேனும் பேசப் போய் அது

ரகுநாதரின் கோபத்தை தூண்டி விட்டு விடக்கூடாதே என்று அமைதியானாள்.

குமரன் தப்பி விட்டான். குமரனை ஒப்பிடும் போது விஜயன் இன்னும் மென்மையானவன். அவன்

எப்படி அந்த முரட்டுப் பெண்ணை சமாளிப்பானோ என்று தாயாக கவலைப்படுவதைத் தவிர

கோபக்கார கணவரிடம் என்ன தான் செய்து விட முடியும் அந்த பேதையால்?

தொடரும்

ஷியாமளா கோபு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *