சாளரத்தில் கைப்பிடி சுவற்றின் மேல் சாய்ந்து கொண்டு தூரத்தில் தெரிந்த கடலை பார்த்துக்
கொண்டிருந்தாள் லீலாவதி. பக்கத்தில் சுவற்றில் இடது காலை ஊன்றி கொண்டு இடது தோளை
சாளரத்தில் சாய்த்து நின்று கரங்களை நெஞ்சின் குறுக்கே கட்டிக்கொண்டு நின்றிருந்தான்
விஜயன். அவன் கண்களும் கடலையே நோக்கி கொண்டிருந்தது. கடல் அலைகள் ஒன்றை ஒன்று
விரட்டி கொண்டிருந்தது. கட்டிடத்தின் அருகில் இருந்த வேப்பமரம் கடல்காற்றுக்கு கிளைகளை
ஆட்டி கொண்டிருந்தது. அப்படி எத்தனை நேரமாக நின்று கொண்டிருந்தார்களோ?. தெரியாது.
மடக்கி இருந்த இடது காலை நீட்டி நிமிர்ந்து நின்றான் விஜயன். அரவம் கேட்டு திரும்பி அவனை
பார்த்த லீலாவதி கேட்டாள்.
“அப்படியானால் நீங்கள் ஊருக்கு போவது என்று தீர்மானித்து விட்டீர்களா?”
ஆழமாக பெருமூச்செறிந்தவன் ஆம் என்பது போல தலை ஆட்டினான்.
“என்ன திடீர் என்று வர சொல்லி தகவல் அனுப்பி உள்ளார்கள்?”
“அது தான் எனக்கும் புரியவில்லை”
“நம் விஷயம் ஏதேனும் அவர்களுக்கு தெரிந்திருக்குமோ?”
“அப்படியும் சொல்வதற்கு இல்லை”
“ஒருவேளை யாருக்கேனும் உடல் நிலை சரியில்லையோ என்னவோ”?
“அப்படி என்றால் இன்னாருக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் உடனே புறப்பட்டு வரவும்
என்றல்லவா தகவல் சொல்லியிருப்பார்கள்.”
“எனக்கு ஒரே கலக்கமாக இருக்கிறது.”
“இல்லை. அண்ணன் குமரனுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. அது
விஷயமாக இருக்கும் என்று நினைக்கிறேன்” யோசனையோடு சொன்னான். கலங்கி இருந்தவள்
அவள். கொஞ்சம் மனம் தெளிந்தது லீலாவதிக்கு
“நானே ஊருக்கு போகவேண்டும் என்று நினைத்து கொண்டு தான் இருந்தேன். அண்ணனுக்கு
திருமண ஏற்பாடு ஆகியிருந்தால் அப்படியே நம் விஷயத்தையும் சொல்லிவிடலாம் என்று
நினைத்துள்ளேன்.”
“எப்பவும் நான் கேட்பது தான் இப்பவும் கேட்கிறேன். நம் திருமணத்திற்கு உங்கள் வீட்டில்
ஒப்புவார்களா ?”
எப்பவும் இந்த கேள்விக்கு தன் மனதிற்குள் வரும் பதில் தான் இப்போதும் வந்தது.
மதராசபட்டினத்தில் மிக பெரிய வணிகரும் தன்வந்தருமான பரமசிவம் அவர்களின் ஏக
புதல்வியான லீலாவதியை ஒரு சிற்றரசரின் மகனான தனக்கு மணம் முடிக்க தன் பெற்றோர்கள்
சுலபத்தில் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். ஆனால் .! ரசனையோடு லீலாவதியை பார்த்தான்
விஜயன்.
ஒல்லியாக உயரமாக நல்ல நிறமாக செதுக்கினார் போன்ற உடல்வாகுடன் மிகவும் அழகாக
இருந்தாள். தமிழுடன் ஆங்கிலமும் படித்து கொண்டிருந்தாள். நாட்டியம் பாட்டு மட்டுமல்லாது
சகல நுண்களைகளையும் கற்று தேறியிருந்தாள். நாகரிகமாகவும் மிகவும் நளினமாகவும்
இருந்தாள். கண்களில் ஒரு கர்வம் தென்பட்டது. மொத்தத்தில் பேரழகியான லீலாவதியை
யாருக்கு தான் பிடிக்காது.?
“ஒப்பு கொள்வார்கள் லீலா. நான் பட்டத்து இளவரசனாக இருந்திருந்தால் இன்னொரு
சிற்றரசரின் மகளான ஒரு இளவரசியை தான் கட்ட வேண்டிய நிர்பந்தம் இருந்திருக்கும். எனக்கு
அந்த கட்டாயம் இல்லை. அதனால் நம் திருமணத்திற்கு ஒப்பு கொள்வார்கள் “ அவளை பார்த்து
புன்னகைத்தான். அது அவளுக்கு பெரிய பலமாக இருந்தது.
அதுகாறும் இருவரும் பேசிகொண்டிருந்ததை கேட்டு கொண்டிருந்த மரம் இவர்கள் இருவரின்
எண்ணங்களுக்கும் நேர்மாறாக அங்கே காரியங்கள் நடந்து கொண்டிருப்பதை அறியாமல்
எவ்வளவு கனவு காண்கிறார்கள் இருவரும் ஐயோ பாவம் என்று பரிதாபம் கொண்டது.
விஜயனை தன் நாட்டிற்குப் போக வேண்டாம் என்று தன் கரங்களான மரக்கிளையை ஆட்டி
ஆட்டி எச்சரித்து கொண்டிருந்தது.
விஜயன் அந்த மரத்தையும் கவனிக்கவில்லை. அதன் மேல் அமர்ந்திருந்த தன் விதியையும்
அறிந்திருக்கவில்லை.
தன் முன் அமர்ந்திருந்த விஜயனை சற்று நேரம் உற்று பார்த்தார் அரசர் ரெகுநாத பூபதி. இத்தனை
நேரம் தான் அவனுக்கு விளக்கியிருந்த விஷயங்கள் அவனுக்கு புரிந்திருக்கிறது என்ற திருப்தி
ஏற்பட்டது அவருக்கு.
விஜயன் நினைத்து வந்தது என்ன? இப்போது நடப்பது என்ன? ஒரு நிமிஷம் ஒரு யோசனையும்
தோன்றாமல் அமர்நதிருந்தான்.அவரை எதிர்த்து பேச முடியுமா? இருந்தாலும் கடைசி வாய்ப்பாக
ஒரு முயற்சி செய்து பார்க்கலாம். பழைய அஸ்திரம் தான். “அப்பா, அண்ணனுக்கு திருமணம்
நடக்காமல்” தயங்கி தயங்கி கேள்வியை முடிக்கும் முன்பே அவர் பதில் சொன்னார். “குமரனுக்கு
சோழமங்கலம் அரசரின் மகள் திலகவதியை அதாவது உன் தாய்மாமன் மகளை பேசலாம் என்று
ஒரு என்ணம்.. அநேகமாக உன் திருமணத்திற்கு முன் அது முடிந்துவிடும்.”
ஒரு நிமிடம் தன் காதுகளையே நம்ப முடியவில்லை ராணி லெட்சுமி தேவிக்கு. ஆரம்பத்திலிருந்தே
தன்னை போலவே தன் அண்ணன் மகள் திலகவதி குமரனை திருமணம் செய்து தனக்கு பிறகு
இந்த நாட்டை ஆள வேண்டும் என்பது அவளுடைய நெடுநாளைய அவா.
அதற்கு சோழமங்கலம் அரசனும் தன் அண்ணனுமான ராஜா பரமேஸ்வரனுக்கும் சம்மதமே.
திலகவதியை பற்றியோ கேட்கவே வேண்டாம். அவளுக்கு குமரனிடம் அலாதி அன்பு.
திடீரென்று சுந்தர உடையார் சொன்னார் என்று குமரனுக்கு ரோகிணியை மணம் முடிக்க
போவதாக ரெகுநாதர் சொன்ன போது அன்று வரை அவரை எதிர் பேசி அறியாத அவளால்
ஒன்றும் சொல்ல முடியாது போயிற்று.
ரோஹிணியை பார்த்து விட்டு வந்த குமரன் அங்கு என்ன அவமானப்பட்டானோ, அவளை
பிடிக்கவில்லை என்று சொன்ன போது தன்னையறியாமலே அவள் மனம் திருப்தி அடைந்தது.
இன்று, இதோ இப்போதோ ரெகுநாதர் விஜயனிடம் திலகவதியை குமரனுக்கு மணம் முடிக்க
போவதாக சொன்ன போது ராணிக்கு பழம் நழுவி பாலில் விழுந்து அதுவும் நழுவி அவள்
வாயிலேயே விழுந்தது போலாயிற்று.
“இல்லை அப்பா, அண்ணனுக்கு பிடிக்கவில்லை என்ற பெண்ணை எனக்கு முடித்தால் …………?
முடியுமா அப்பா?”
அவனை தீர்மானமாக பார்த்தார் ரெகுநாதர்.அந்த பார்வையின் வீச்சை தாங்கி கொள்ள கூடாமல்
தலையை குனிந்து கொண்டான் விஜயன்.
“முடியவேண்டும் விஜயன். முடியவேண்டும். ஏனெனில்,”காரணத்தை விளக்க முற்பட்டார்
ஒவ்வொன்றாக.
“வீரையன் கோட்டையில் ஒரு பெண்ணை மணக்க தகுதியான ஆணே இல்லையா? என்ற கேள்வி
எழும்”
“மூத்தவனுக்கு நம்மை போன்ற ஒரு சிற்றரசரின் மகளை தான் மணமுடிக்க முடிகிறது.”
“நீ வேட்டுவமங்கலத்தின் இளவரசியை மணப்பதின் மூலம் நாம் திறை செலுத்தும் சொக்கநாதபுர
சமஸ்தானத்துக்கு ஒப்பான அந்தஸ்துக்கு நாமும் உயருவோம்”
“அதன் மூலம் நம் சேகரனுக்கு சொக்கநாதபுரம் இளவரசி அமுதவல்லியை திருமணம் முடிக்க
முடியும்”
“அதனால் இந்த வீரையன் கோட்டை சிற்றரசை என் மக்கள் மூன்று பேருக்கும் பங்கிடாமல்
குமரனுக்கு மட்டுமாக கொடுத்து விடுவேன். நீங்கள் இருவரும் சமஸ்தானத்துக்கு மன்னர்
ஆகிவிடலாம்”
“அப்பா”
அவருடைய கற்பனையின் வேகம் தடைபட்டது. கற்பனையில் வானத்தில் சிறகடித்துப் தயங்கி
தயங்கி மெல்ல லீலாவதியை பற்றி சொன்னான் விஜயன்.
வெடிமலை என வெடித்து சிதறுவார் என்று பயந்தே போனாள் இதுவரை இவர்கள் பேசுவதை
மட்டும் கேட்டு கொண்டிருந்த ராணி லெட்சுமிதேவி.
ஆனால் அவள் எதிர்பார்த்ததுக்கு மாறாக மிகவும் அமைதியுடன் மேல்கொண்டு பேசினார் அரசர்.
“ஒரு மிக பெரிய சமஸ்தானமே உன் கைகளில் வரப் போகிறது. நீ என்னவோ ஒரு வர்த்தகனின்
மகளை கேட்கிறாய்”
“அவள் மிகவும் நாகரிகமானவள் அப்பா. இந்த பெண் ஒரு முரடு என்று கேள்விபட்டேனே”
அவருக்கும் அவன் கெஞ்சுவது பாவமாக இருந்தது போலும். ஒரு முரட்டு பெண்ணை இவன்
தலையில் கட்டுகிறோமே என்று ஒரு நிமிடம் பச்சாதாப பட்டார். ஆனால் என்ன செய்வது.? வேறு
வழியில்லையே. கசக்கும் என்று தெரிந்தும் உடல் நலத்திற்க்காக மருந்தை பிள்ளைகளுக்கு
கொடுப்பதில்லையா? அவரே மனதை தேற்றி கொண்டார். அவனை சற்று இரக்கத்துடன்
பார்த்தவர், பின் தன்னை தானே திடப்படுத்தி கொண்டு சொன்னார். “ஒரு வருடம்
பொறுத்துக்கொள். பின் நீ விரும்பும் பெண்ணையும் திருமணம் செய்து கொள். அந்த பெண்
அடிக்கடி காட்டுக்கு ஓடி போய்விடுவாள். நீ இவளுடன் குடும்பம் நடத்து. அவ்வளவு தானே”
அவ்வளவு தானா?அவ்வளவு சுலபமானதா? ஒரு சிந்தனை மயக்கமேற்பட்டது.
“விஜயன், மேலும் ஒன்றை முக்கியமாக தெரிந்து கொள். மன்னர் சுந்தர உடையார் ரோகிணியிடம்
மிகுந்த அன்பு வைத்துள்ளார். குமரன் ஏற்கனவே அவளை பார்த்து விட்டு பிடிக்கவில்லை என்று
சொல்லி இருக்கிறான். இப்போது நீயும் அவளை பிடிக்கவில்லை என்றால் அவருக்கு நம் மீது
மனக்கசப்பு ஏற்பட கூடும்.” என்றவர் மேலும் பயமுறுத்தினார். “நம் மேல் போர் தொடுக்கவும்
முற்படலாம். அது நம் நாட்டுக்கே கேடாகி போய்விடும் அதையும் நாம் யோசிக்கவேண்டும்”
இதை கேட்டதும் ராணியாருக்கு சொல்லொண்ணா துயரம் ஒரு பயபந்து போல எழும்பி
தொண்டையை அடைத்தது.
விஜயனுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. பலவாறாக சிந்தனை எண்ணத்தில் சுற்றி
சுழன்றது. “நம் காதலை விட்டுவிடவேண்டும் தற்காலிகமாக வேணும்.முரடு என்று தெரிந்தும்
அந்த பெண்ணையே திருமணம் செய்ய வேண்டும்.அண்ணன் குமரனுக்கு அந்த பெண்ணை
பிடிக்கவில்லை என்று சொல்ல உரிமையும் அதிகாரமும் இருக்கிறது. நமக்கு எந்தவிதமான
அதிகாரமும் ஆட்சியிலும் சரி குடும்பத்திலும் சரி கிடையாது.தகப்பனிடம் இதுவரை எதிரில் நின்று
பேசியது கிடையாது. இனி பேசவும் முடியாத மாதிரி அவர் மிகவும் பொறுமையாக
சூழ்நிலைகளை விளக்கி இருக்கிறர்கள். தன்னுடைய சுயநலத்துக்காக அமைதியாக வாழ்ந்து
கொண்டிருக்கும் நாட்டு மக்களின் மேல் வலிய ஒரு போரை திணிக்க முடியாது?” என்று தனக்குள்
யோசித்தவனுக்கு எல்லா வழிகளும் அடை பட்டார் போலாயிற்று விஜயனுக்கு
படை பரிவாரங்களுடன் சென்று காரியம் கைகூடாமல் குமரன் திரும்பி வந்தது அவமானத்தின்
உச்சம்.நமக்கு எதையும் மறுக்கும் அதிகாரம் தான் இல்லை என்றாலும் குறைந்த பட்சம்
அவமானத்தையாவது தவிர்த்து கொள்ளலாம் என்று மேலும் யோசித்தவன்“நான் மட்டும் தனியாக
போகிறேன்,அதற்கு மட்டுமாவது அனுமதியுங்கள்.” என்று வேண்டினான்.
“அப்படியே செய். நிச்சயமான வெற்றியுடன் திரும்பி வா”
அவன் செல்வதை பார்த்து கொண்டிருந்த ராணி லெட்சுமி தேவி மனதுக்குள் நினைத்து வேதனை
பட்டாள். வீரனான குமரனே அந்த காட்டுமிராண்டி பெண்ணை சமாளிக்க முடியாமல் ஓடி
வந்துவிட்டான். இவன் என்ன ஆவானோ? குமரன் தன் வீரத்தை நம்பி போய் தோற்று வந்தான்.
இவன் அறிவின் வழி சென்று வாகை சூடி வருவான்.
தாய் அறியாத சூல் உண்டா? தாயின் உள்ளுணர்வு சொல்லியதா? அவள் மனது அவனை
ஆசிர்வதித்து வழி அனுப்பியதா? இவன் நிச்சயம் வெற்றியுடன் திரும்பி வருவான். வரட்டும்.
தொடரும்
ஷியாமளா கோபு