5
தன் வாழ்வின் இக்கட்டான இந்த கால கட்டத்தில்,தன் எதிர்காலம் போன்று தன் முன்னே நீண்டு
கிடக்கும் சாலையில் பார்வையை பதித்திருந்தான். மேல் மாடத்தில் தங்கியிருந்த விஜயன்
பிராயாணதிற்கு தயாராகி வெளியே வந்தான். குதிரையை சாலையின் இடது புறம் திரும்பி
வடக்கு நோக்கி குதிரையை செலுத்தினான்..
இருள் பிரிய தொடங்கியிருந்தது. வடக்கு நோக்கி இரண்டு கல் தொலைவு சென்றதும் சாலை
மேற்கு நோக்கி திரும்பி ஓடியது, இடதுபுறம் மலை தொடர்ச்சியாக அவனுடன் தொடர்ந்து
வந்தது. இப்போது மலைக்காற்று சில்லென்று அவன் முகத்தில் அடித்தது. குளிர் எலும்பை
ஊடுருவியது. அவன் மனநிலைக்கு மாறாக குதிரை உற்சாகமாக ஒய்யாரமாக நடை போட்டு
சென்றது. சாலையின் இருமருங்கும் அடர்ந்த மரங்கள் சூரிய வெளிச்சம் உள்ளே வராதவண்ணம்
மிகவும் அடர்த்தியாக இருந்தது. மொத்தத்தில் அந்த விடியற்காலையின் எழில் மிகவும் ரம்யமாக
இருந்தது.
பால்,தயிர்,காய்கறி,மற்றும் பூ விற்பவர்கள் கூடையை தலை சுமடாக சுமந்து கொண்டு சென்று
கொண்டிருந்தார்கள். குதிரை வீரர்கள் அவர்களை ஒதுங்க சொல்லியும் ஏதேதோ சத்தமும் செய்து
கொண்டு சென்றார்கள். அவர்கள் சத்தத்தையும் ஆரவாரத்தையும் கண்டு, அரண்டு பதறி,
சாலையின் இருமருங்கும் ஓரத்திற்கு ஒதுங்கி கொண்டார்கள். குதிரையின் மேல் வந்த இவனையும்
கண்டு வணக்கம் வைத்தார்கள்.
சாலையில் அறுப்பு அறுத்த நெற்கற்றைகளை போட்டு இருந்தார்கள் விவசாயிகள். அந்த
நெல்மணம் பச்சை பாலின் மணமாக மூக்கை துளைத்தது. சாலையின் ஓரத்தில் வாய்க்கால் சல
சல என்று ஓடி கொண்டிருந்தது. மக்கள் கூட்டம் முன்நோக்கி சென்று கொண்டிருந்தது. தான்
நகரத்தை நெருங்கி விட்டோம் என்பதை உணர்ந்து கொண்டான்.
கோட்டை, எதிரே மலைகளுக்கும் பாறைகளுக்கும் மத்தியிலே ஓங்கி உயர்ந்து இரண்டு பனை
உயரம் இருந்தது. ஒரு பெரிய சமஸ்தானத்தின் கோட்டை வாயில் மக்கள் கூட்டத்தாலும் குதிரை
வீரர்களாலும் அயல் நாட்டிலுருந்து வந்து இறங்கிய வணிகர்களாலும் அவர்களுடன் வந்திருந்த
பரிவாரங்களாலும் சரக்குகளாலும் ஒரே பரபரப்பாக இருந்தது.
இவனும் வாயிற் காப்பாளனால் தடுத்து நிறுத்தப்பட்டான். தன்னுடைய முத்திரை மோதிரத்தை
காண்பித்தும் உரிய மரியாதை செலுத்தப்பட்டான். அரண்மனைக்கு போக உடன் ஒரு
பணியாளன் பணிக்கப்பட்டான். மறுத்து விட்டு தனியாகவே கோட்டைக்குள் நுழைந்தான்
விஜயன்.. குதிரையில் இருந்து இறங்கி நடக்க தொடங்கினான்.
ஒரு பெரிய நாட்டின் தலைநகருக்கே உரித்தான சகல அம்சங்களும் நிறைந்திருந்தது
வேட்டுவமங்கலம். தொலைவில் தென்னை மரங்கள் சூழ்ந்த கோவில் கோபுரம் தென்பட்டது. அது
வேட்டீஸ்வரன் கோயில் என்பதை கேட்டறிந்து கொண்டு அந்த திசையை நோக்கி கையை
எடுத்துக் கும்பிட்டான்.
“ஆண்டவா, இந்த நாட்டின் இளவரசி, எனக்கு மனைவி என்று தீர்மானிக்கபட்டவள் ஒரு முரட்டு
பெண் என்று அறிந்தும், வேறு வழி இல்லாமல் அவளை மனம் முடிக்க இங்கு நான்
வந்திருக்கிறேன். எல்லாம் நல்லபடியாக முடிக்க நீயே எனக்கு ஞானத்தை தர வேண்டும்.” என்று
மனதுருக வேண்டினான். உச்சிக்கால பூஜைக்கு கோவில் மணி டாண் டாண் என்று அடித்தது.
முகப்பில் கொடி பறந்த அரண்மனையை வந்தடைந்தான். கோட்டை வாயில் காக்கும்
அதிகாரியின் மூலமாக அதற்குள் அவன் வருகையை அறிந்த திவான் விரைந்து வெளியே வந்து
அவனை எதிர் கொண்டு வரவேற்றார். “வரவேண்டும் இளவரசே, வரவேண்டும்”
தலையை அசைத்து அவர் வரவேற்ப்பை ஏற்று கொண்டான்.
“நீங்கள் வரப் போவதாக எனக்கு தகவல் ஏதும் வரவில்லை” பதறினார், பரிதவித்தார்.
“பிரயாணம் சுகமாக இருந்ததா?”
அவனுடைய பதிலுக்கு காத்திராமல் “போன மாதம் தான் வீரையன் கோட்டை பட்டத்து
இளவரசர் வந்து சென்றார்.”
அவருடைய அங்கலாய்ப்பை பார்த்து கொண்டு நின்றிருந்த விஜயன் மெதுவாக கேட்டான்
“இப்போது நான் ஏன் வந்திருக்கிறேன் என்று கேட்கிறீர்களா திவான் அவர்களே?”
அந்த குரலில் இருந்த ஏதோ ஒன்று அவரை சற்று சுதாரிக்க வைத்தது. சட்டென்று தன்னை
நிதானித்துக் கொண்டார். “மன்னிக்க வேண்டும் இளவரசே, சிறிது அவகாசம் கொடுங்கள். உரிய
ஏற்பாடுகளை விரைந்து முடித்து விடுகிறேன்”
“பரவாயில்லை. மன்னர் சுந்தர உடையார் அவர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டு விட்டது.
எனக்கொன்றும் அவசரமில்லை. நீங்கள் நிதானமாக செய்யுங்கள்”
“பிரயாண களைப்பு நீங்க ஓய்வெடுங்கள். இளவரசியாரை தயார் செய்து விட்டு வந்து உங்களை
அழைத்து செல்கிறேன்”
“நல்லது. அப்படியே ஆகட்டும்.”
“இப்படி வாருங்கள் இளவரசே”
“இதென்ன, அரண்மனைக்குள் செல்லாமல் இப்படி செல்கிறீர்கள்?”
“இளவரசே, தாங்கள் ஓய்வெடுப்பதற்கான சகல ஏற்பாடுகளும் உள்ள கொடிவீடு இது”
“ஏன் அரண்மனைக்குள் விருந்தினர் பகுதி ஏதும் இல்லையா?”
“இருக்கிறது, ஆனால்…” மென்று முழுங்கி தயங்கி இழுத்து சொன்னார்.
“பின்? உங்கள் நாட்டில் விருந்தினரை இப்படி ஒரு வீட்டில் தங்க வைப்பது தான் வழக்கமோ?”
“மன்னிக்க வேண்டும். சற்று பொறுத்துக் கொள்ளுங்கள். உடனே வேண்டிய ஏற்பாடுகளை
செய்கிறேன்”
“அப்படியே ஆகட்டும்”
தர்பார் மண்டபத்திற்கு வலது புறம் இருந்த அந்த பெரிய கூடத்தில் மாட்டப்பட்டிருந்த மன்னர்
பாஸ்கர மார்தாண்டர் ராணி பாக்கியலட்சுமியின் ஓவியத்தை அண்ணாந்து பார்த்து கொண்டு
நின்றிருந்தான் விஜயன். அழகான அலங்காரமான விளக்கு பொருத்தப்பட்டிருந்தது. விளக்கின்
வெளிச்சம் நன்றாக படத்தின் மேல் படர்ந்திருந்தது.
மன்னர் பாஸ்கர மார்த்தாண்டன், நடுத்தரத்திற்கு சற்றே அதிகப்படியான உயரம்.மாநிறம்.அகன்ற
தோள்கள். கண்களில் ஒரு சிரிப்பு, மிடுக்கு கம்பீரம் தோரணை என்று ஆளுமையுடன் இருந்தார்.
வெள்ளை காலுடையும் இளஞ்சிவப்பு நிற மேலங்கியும் நெற்றியில் சந்தன பொட்டும்
அணிந்திருந்தார். தலையில் கிரீடத்தில் ஒரு மயிலிறகு சொருகப்பட்டிருந்தது. ஒரு வெண்முத்து
மணி மாலையாக கிரீடத்தில் தொங்கி கொண்டிருந்தது. மேலங்கியில் தங்கத்தாலான பித்தான்
இருந்தது. கழுத்தில் பெரிய நன்முத்துக்களால் ஆன மாலை அணிந்திருந்தார். நாற்காலியில்
நன்றாக நிமிர்ந்து உட்கார்ந்திருந்தார்.
ராணி பாக்கியலட்சுமி பெண்களில் நல்ல உயரம், தாழம்பூ நிறம், சுருட்டை முடி, மருண்ட விழிகள்,
முகத்தில் ஒரு கனிவு,ஒரு நிமிர்வு பிரகாசமான முக அமைப்பு. பாஸ்கரர் தன் சொந்த விருப்பத்தின்
பேரிலேயே ராணியை மணந்தது தகுதியானது தான் என்பது போன்ற பேரழகு. உண்மையில்
ராணியார் அவ்வளவு அழகா? அல்லது இந்த படத்தை வரைந்தானே அந்த ஓவியனின்
திரைமையின் வெளிப்பாடா?
“இளவரசே”
அவன் சிந்தனையை கலைத்து அவனை திரும்பி பார்க்க வைத்தது திவானின் குரல். அந்த பெரிய
கூடத்தின் அந்த மூலையில் படிக்கட்டின் கீழ் ஒரு பெண்ணின் வலது புஜத்தை தன் இடது
கரத்தால் இழுத்து பிடித்துக் கொண்டு நின்றிருந்தார் திவான்.
உயரத்தில் ஏற்றப்பட்டிருந்த விளக்கின் வெளிச்சத்தில் வரிவடிவமாக தெரிந்தாள். நல்ல உயரம்.
மெலிந்த உடல்வாகு. பரட்டை தலை. கிழிந்த ஆடைகள். இருட்டில் கருப்பா? அழுக்கா? என்று
தெரியாத ஒரு நிறம். கண்களில் திட்டிவிடம் என்னும் பாம்பை நினைவு கூர்ந்த பார்வை. எல்லா
பாம்புகளுக்கும் பல்லில் தான் விஷம் இருக்கும். ஆனால் திட்டிவிடம் என்ற பாம்புக்கு,
கண்ணிலேயே விஷமாம். அதன் பார்வை, நம் மீது பட்டாலே போதும்… விஷம் தாக்கிய துன்பம்
உண்டாகுமாம். இந்த பாம்பு, முற்காலத்தில் பாலைவனங்களில் வாழ்ந்ததாக கவிஞர்கள்
கூறுகின்றனர். மாசில்லா கற்புடைய மங்கையரை இந்த திட்டிவிடம் பாம்புக்கு உவமையாக
கூறியுள்ளனர் புலவர்கள். இந்த பாம்பை பற்றி கம்பரும் கூறியுள்ளார். சீதைக்கு தவறு இழைத்த
ராவணனை நோக்கி “திட்டியின் விடமன்ன கற்பின் செல்வியை விட்டில்லையே” என்று
கும்பகர்ணன் கேட்பதாக குறிப்பிடுகிறார். கம்பராமாயணம் மனப்பாடம் செய்த போது படித்தது
நினைவுக்கு வந்தது விஜயனுக்கு.
அவள் திவானின் கரங்களில் இருந்து விடுபட திமிறிக் கொண்டிருந்தாள். அதை கவனித்த
விஜயனுக்கு தன்னை பள்ளி விடுதியில் கொண்டு விட்ட நாளில் தானும் இதே போல
பெற்றோரிடம் அழுது புலம்பி திமிறியது இப்போது கண்ணெதிரே காட்சியாக விரிந்தது. மனம்
இளகியது. ஏனோ மனம் அவளிடம் பரிதாபப்பட்டது. ”அவளை விடுங்கள்” என்றான்.
அவர் அவளை உடனே விட்டு விட்டார்.
அவளை நோக்கி போனான்.
அவள் பின்னோக்கி நகர்ந்தாள்
வழக்கம் போல மாடிபடிகட்டு தடுக்கி விழப்போனாள்.
அவன் தன்னையறியாமல் அவளை பிடிக்க போனவன், பிடிக்காமல் நிமிர்ந்து நின்றான்.
“யாரங்கே? முதலில் இந்த இடத்தில நன்றாக வெளிச்சம் படும்படி ஒரு பெரிய விளக்கை
பொருத்துத்துங்கள்.”
அங்கே அப்போது அரங்கேறப் போகும் அசம்பாவிதத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த திவான்
விஜயனின் அதிகாரமிக்க குரலைக் கேட்டு கண்களை நன்றாகத் திறந்து அங்கே நடப்பவைகளைக்
கண்டார்.
“வெளிச்சம் இல்லாமல் இளவரசியார் விழப் பார்தார்கள். பாருங்கள்” என்றவன் திவானிடம்
திரும்பி “உணவு தயாராக உள்ளதா? என்றான்.
திவான் மிகவும் பவ்யமாக அவனை பார்த்து “வரவேண்டும் இளவரசே, உணவு தயாராக உள்ளது”
அவரோடு உணவு கூடத்தை நோக்கி நடந்தவன் மாடிப்படிக்கட்டின் கைப்பிடியில் சாய்ந்து
தன்னைப் பார்த்து திகைத்துப் நின்றவளின் கண்களைப் பார்த்து, “உணவு அருந்த வா” என்று
அழைத்தான்.
எப்போதும் தன்னை யாரேனும் பெண் பார்க்க வருகின்ற தருணங்களில் வழக்கமாக நடந்தேறும்
சம்பவம் அப்போது நடக்கவில்லை. மேலும் தன்னைப் பெண் பார்க்க வந்தவன் முதன் முதலில்
தன்னை இல்லையில்லை தன் கண்களைப் பார்த்து பேசுகிறான். இது என்ன அதிசயம்….!
மீண்டும் திகைத்து தான் போனாள் அந்த நாட்டின் இளவரசி ரோஹினி தேவி.
தன்னை உணவு அருந்த வா என்று எப்போதோ அழைத்த குரல், அந்த குரலில் தென்பட்ட
வாஞ்சை!.ஏதோ நினைவில் கண்கள் கசிந்தது அவளுக்கு. அது நாள் வரை விறைப்புடன் இருந்த
மனமும் அதனுடன் சேர்ந்து உடலும் தொய்ந்தது.
தொடரும்.
ஷியாமளா கோபு
Patchi vilunthuruchu😂😂😂… Nice Epi…
Rohini devi ai yaaro pinnirunthu iyaku kirarkal.
Interesting episode