Skip to content
Home » அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-6

அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-6

6

“வரவேண்டும். வரவேண்டும்.”அரண்மனையின் வாசலுக்கே வந்து வரவேற்றார் திவான்.

“வந்தேன். எல்லாம் சுக செய்தி தான்” நீதிமன்றத்தால் வேட்டுவமங்கலம் சமஸ்தானத்தை

பராமரிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரிசீவர் துரைசாமி உள்ளே வந்தார்.

துரைசாமி சற்றே குள்ளமாக, நல்ல சிகப்பு நிறத்தில், பஞ்சகச்சம் கட்டி மேலே கருப்பு அங்கி

தரித்து, நெற்றியில் திருமண் இட்டு பின்குடுமி வைத்திருந்தார். தலையில் தலைப்பாகை

அணிந்திருந்தார். அங்கியில் தங்க பித்தான் இருந்தது. வாயில் வெற்றிலையின் சிகப்பு தெரிந்தது.

தர்பார் மண்டபத்தை கடந்து வலது புறத்தில் இருந்த கூடத்தில் ஒரு மேஜையின் முன்பு

நாற்காலியில் அமர்ந்திருந்த விஜயன் துரைசாமியை கண்டதும் எழுந்து கும்பினியார் போல வலது

கையை முன்னே நீட்டி அவருடைய வலது கையை பற்றி பிடித்து குலுக்கினான். அந்த சின்ன

செய்கையின் மூலம் அவன் அவருக்கு என்ன சொல்ல விரும்பினானோ, அவரும் தான் ஆகட்டும்,

என்ன புரிந்து கொண்டாரோ?, “வெல்கம் ஹிஸ் ஹைனஸ்” என்றார்.

தலையை வலது பக்கம் சாய்த்து அதை அங்கீகரித்து கொண்ட விஜயன் அவரை பார்த்து

புன்னகைத்தான்.

“ராஜகேசரி சுந்தர உடையார் அவர்கள் நீங்கள் வரப்போவதாக தகவல் அனுப்பி இருந்தார்கள்.

போன மாதம் கூட தங்கள் சகோதரர் வருவதாக தகவல் அனுப்பினார்கள்”.

“ஆனால்…..” ஒரு கணம் பேச்சை நிறுத்தி திவானை ஒரு பார்வை பார்த்து விட்டு மேலும்

தொடர்ந்தார். “நான் கிளம்பி வருவதற்குள்ளாக பின்னாடியே திவான் அவருக்கு பெண்ணை

பிடிக்கவில்லை என்று மறு தகவல் அனுப்பியிருந்தார்”

“ஆம். அப்படித் தான் தந்தை என்னிடத்திலும் சொன்னார்கள்”.என்றான் விஜயன்.

“இதே போல மன்னர் சுந்தர உடையார் தகவல் அனுப்புவதும் நான் கிளம்பி வருவதற்கு முன்பாக

திவான் பின்னாடியே பெண்ணை பிடிக்கவில்லை என்று வந்தவர்கள் திரும்பி சென்று விட்டதாக

மறு தகவல் அனுப்புவதும் அநேகம் தடவை நிகழ்ந்து விட்டது.”

“ஓ. அப்படியா?”

“இந்த தடவையும் மன்னர் சுந்தர உடையார் தகவலுக்கு திவானின் மறு தகவல் வரவில்லையே

என்று தான் கிளம்பி வந்தேன்.” இது தனக்கான பாராட்டா? அல்லது கிளம்பி வரும்படியாக

ஆகிவிட்டதே என்று அலுத்து கொள்கிறாரா? என்று புரிந்து கொள்ள இயலாத குரலில் சொல்லி

முடித்தார். “தாங்கள் இளவரசி ரோஹினி தேவியாரை பார்த்தீர்களா? அவரை உங்களுக்கு

பிடித்திருக்கிறதா?” என்று நேரத்தை வீணாக்காமல் நேரடியாகவே கேட்டார் துரைசாமி.

விஜயனின் பதிலுக்கு திவான் ஆவலுடன் காத்திருந்தார். அவனும் நேரடியாகவே உடனடியாக

பதிலை சொன்னான். “ஆம், இளவரசியை எனக்கு பிடித்திருக்கிறது.”

“அவர்களை திருமணம் செய்ய உங்களுக்கு விருப்பமா?”

லீலாவதியின் முகம் ஒரு வினாடி கண் முன் வந்தது. தன் தந்தை விளக்கி கூறியிருந்ததும்

நினைவுக்கு வந்தது. தனக்கு இந்த திருமணம் எவ்வளவு முக்கியம் என்பது தெரிந்திருந்தது. மூச்சை

நன்றாக உள்ளிழுத்து ஒரு பெருமூச்சை வெளிவிட்டான். “ஆம். இளவரசியை திருமணம் செய்ய

எனக்கு சம்மதம்.”

“அப்படியானால்,”திவானை நோக்கி “நாம் திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்து

விடலாம்.” என்றார்.

“சற்று பொறுங்கள்.”

இன்னும் என்ன என்பது போல ஒரு பார்வை பார்த்தார் துரைசாமி.

“எனக்கு கொஞ்சம் அவகாசம் வேண்டும்”

“எதற்கு?” புரியவில்லை அவருக்கு.

“இளவரசியாருக்கும் என்னை திருமணம் செய்ய விருப்பம் ஏற்பட வேண்டும் அல்லவா?”

ஒரு நிமிடம் துரைசாமி நிதானித்தார். இதில் இளவரசியார் விருப்பத்திற்கு என்ன உள்ளது.? இது

நாள் வரை ரோகிணியை யாருமே திருமணம் செய்ய விரும்பினது இல்லை. இருந்திருந்து

முதன்முதலில் ஒருவன் அவளை மணக்க முன்வருகிறான். இளவரசியாருக்கு திருமணத்திற்கு

ஒப்புவதைவிட வேறு வழி என்ன இருக்கிறது.? பெண்களின் விருப்பத்தை கேட்டா நாம்

அவர்களை திருமணம் செய்கிறோம்? இது என்ன புது வழக்கமாக இருக்கிறது? என்ன

இருந்தாலும் படித்தவன் அல்லவா. அது தான் புதுமையாக சிந்திக்கிறான்.

இவ்வளவு நாள் இந்த தாய் தகப்பன் இல்லாத பெண்ணின் எதிர்காலம் என்ன ஆகுமோ என்று

கவலையாக இருந்தது. அதற்காக இத்தனை நாள் காத்திருக்கும்படி ஆயிற்று. இன்று அதற்கு ஒரு

வெளிச்சம் தென்படும் போல தெரிகிறது.

இத்தனை நாள் பொறுத்திருந்தோம். இன்னும் கொஞ்சம் நாள் தானே. பொறுத்திருப்போம்.

நல்லதே நடக்கும் என்று நம்புவோம். துரைசாமியின் முகம் தெளிந்தது.

துரைசாமி விஜயனின் முன்னே வேட்டுவமங்கலம் நாட்டின் வரைபடத்தை விரித்து வைத்து

விளக்கி கொண்டிருந்தார். “இந்த பிரதேசத்தில் சொக்கநாதபுரமும் வேட்டுவமங்கலமும் தான்

பெரிய சமஸ்தானம். வேட்டுவமங்கலம் சமஸ்தானத்திற்கு உட்பட்ட பத்து குறுநிலங்களான,

அல்லிக்குளம், அரசங்குளம்,மேலையூர்,கீழையூர் இவர்கள் நால்வரும் வேட்டுவமங்கலதிற்கு

பெண் கொடுத்து பெண் எடுக்கும் சம்பந்தக்கரர்கள். வேட்டையன்புதூர், மேல்பாடி, சோமங்கலம்,

சோமசேகரபட்டினம், அரிமத்திநல்லூர், நன்மங்கலம் இவர்கள் தாயாதி உறவின் முறைகாரர்கள்.

இதில் ராணி பாக்கியலட்சுமி வேட்டையன்புதூர் நாட்டை சார்ந்த ஒரு மலைக்கிராமத்தை

சார்ந்தவர்கள்”என்று அவனுடன் சகஜமாக பேச முற்பட்டார்.

அதை அவனும் அனுமதித்தான். ஏனெனில் இந்த அரசின் பூர்வ கதையை அவனும் அறிந்திருக்க

வேண்டியது அவசியமல்லவா! எனவே பேச்சை தொடர “ஓஹோ” என்றான்.

“மன்னரும் ராணியாரும் விபத்தில் அகால மரணமடைந்த பின் கடந்த ஏழு வருடங்களாக தான்

நான் இளவரசியாரையும் அவருடைய உடமையான இந்த நாட்டையும் பாதுகாக்க நீதிமன்றத்தால்

நியமிக்கப்பட்டுள்ளேன்.”

“ஓஹோ”

“எனக்கு மதராசில் தான் ஜாகை”

“மதராசிலா? அப்படியானால் இங்கே யார் பொறுப்பு?”

“இப்போது இந்த நாடு திவான் அவர்களின் பொறுப்பில் தான் உள்ளது”

விஜயன் தன்னிச்சையாக திவானை திரும்பி பார்த்தான்.

“ஆம் இளவரசே, நான் தான் நாட்டை நல்ல முறையில் கவனித்து கொள்கிறேன். ஆனால்………..!”

“ஆனால்…! என்ன?”

“எனக்கு இளவரசியாரை தான் நிர்வகிக்க முடியவில்லை.”

ஏன் அப்படி திவான் சொல்கிறார் என்பது புரிந்தாலும் அவரே அதை விளக்கமாக சொல்லட்டும்

என்று அமைதியாக இருந்தார்கள் இருவரும்.

“ஆரம்பத்தில் தாய் தகப்பன் இல்லாத பெண் ஆயிற்றே, அவர்கள் ஏக்க பட்டுவிட கூடாதே, என்று

கண்டிக்காமல் விட்டுவிட்டேன். இப்போது அவர்களை என் கட்டுக்குள் வைத்து கொள்வது

என்பது பெரும் பாடாகி விட்டது.”

குரலில் ஒரு குற்ற உணர்ச்சி காணப்பட்டது. அவருடைய தர்மசங்கடம் புரிந்தவர்களாக அவரை

கழிவிரக்கத்துடன் பார்த்து கொண்டிருந்தார் துரைசாமி. ஆனால் ரோகிணியை பற்றி

மேற்கொண்டு விசாரிக்காமல் மற்ற விஷயங்களில் கவனத்தை செலுத்தினான் விஜயன். திவானை

சங்கடப்படுத்துவதிலிருந்து பேச்சு திசை மாறவும் நிம்மதி பெருமூச்சு விட்ட துரைசாமியும்

விஜயனின் பேச்சில் உற்சாகத்துடன் கலந்து கொண்டார்.

“ஏன் இத்தனை உறவுக்காரர்கள் இருக்கும் போது இந்த நாடு கும்பினியாரின் பரிபாலனத்திற்கு

போய்விட்டது?”

“அது………”

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“திவான் அவர்களே நீங்களே சொல்லுங்கள். பாஸ்கரரின் தந்தை காலத்தில் இருந்தே உங்கள்

தந்தையும் முக்கிய அமைச்சராக இருந்தவர். உங்களுக்கு தான் இந்நாட்டின் வரலாறு தெரியும்.”

“ஓஹோ, தங்கள் தந்தையும் முக்கிய அமைச்சராக பதவியில் தான் இருந்தாரா?”

“ஆம் இளவரசே, அது மட்டுமல்லமால், மன்னர் பாஸ்கரரின் தந்தை மிகவும் நெருங்கிய நண்பராக

இருந்தார்.”

“ஆகையினால் எனக்கும் மன்னர் பாஸ்காரருடன் நெருங்கி ஒன்றாக வளரும் வாய்ப்பு

கிடைத்தது.”

“ஒ, அப்படியா”

விஜயனின் குரலில் ஒரு சிநேகம் தென்பட்டது. உற்சாகமான திவான் மேலும் விவரிக்க

முற்பட்டார். “பாஸ்கரரருக்கு நுண்கலைகளில் நல்ல விருப்பமும் பயிற்சியும் உண்டு.

கும்பினியாரின் மிகவும் நெருங்கிய நண்பராகவும் இருந்தார். அவர்களை போல நடை உடை

பாவனை எல்லாம் இருக்கும். அடிக்கடி அவர்களை எல்லாம் அழைத்து விருந்து கொடுத்து

மகிழ்விப்பார். நல்ல ஒரு கலாரசிகர். வேட்டையில் மிகுந்த நாட்டம் உண்டு. அடிக்கடி

வேட்டையன்புதூர் நாட்டின் மேற்கு எல்லையில் உள்ள காட்டிற்கு வேட்டையாட சென்று

விடுவார்.

அப்படி செல்கையில் வேட்டையன் புதூர் காட்டை சார்ந்த ஒரு மலை கிராமத்தில் தான் ராணி

பாக்கியலட்சுமியை சந்தித்து ஆசை கொண்டார். அவரையே திருமணம் செய்யவும் முடிவு செய்து

மன்னரிடம் சொன்னார்.

மிகவும் எதிர்த்த மன்னர் மகனின் பிடிவாதத்தில் மனம் இளகி திருமணத்திற்கு ஒப்பு கொண்டார்.

அதற்கு ராணி பாக்கியலட்சுமியின் அழகும் அறிவும் கூட ஒரு காரணம்.

ஆனால் அவருடைய சம்பந்தக்கரர்கள் மிகவும் தீவிரமாக எதிர்த்தார்கள். இந்த திருமணத்தை.

வேட்டையன் புதூர் அரசர் பெண் வீட்டார் சார்பாக முன் நின்று திருமணத்தை நடத்தினார்கள்.

ஆறு குறுநில மன்னர்களும் கும்பினியாரின் பக்கபலமும் பாஸ்கரருக்கு இருந்ததால் அவர்களால்

ஒன்றும் செய்ய முடியவில்லை. இறுதியில் அவர்களும் பாஸ்கரரின் திருமணதிற்கு ஒப்பு

கொண்டார்கள்.

இரண்டு வருடங்கள் குழந்தை இல்லாமல் இருந்து பிறந்தவர்கள் இளவரசி ரோகிணி தேவியார்.

ராணியாருக்கு மலை கிராமத்தில் தாய் தகப்பனுடன் ஒரு தம்பியும் உண்டு. ஆனால் ரோகிணி

நட்சத்திரத்தில் பிறந்ததால் தாய் மாமனுக்கு ஆகாது என்று ராணியை தாய் வீட்டுக்கு அனுப்ப

மாட்டார் மன்னர். அவர்களும் இங்கு அதிகம் வருவது கிடையாது.

மன்னரும் ராணியும் ஒரு தடவை வேட்டையாட காட்டிற்கு போயிருந்த போது ஒரு பெரிய மரம்

அவர்கள் மேல் விழுந்ததில் இருவரும் பலமாக அடிபட்டு படுக்கையில் கிடந்தார்கள்.

குறுக்கிட்ட விஜயன் “ராணியாரும் வேட்டைக்கு போவார்களா?” என்று ஆச்சர்யமாக கேட்டான்.

“பொதுவாக திருமணத்திற்கு பிறகு ராணியார் வேட்டைக்கு போனதில்லை. பிள்ளைபேறு,

பிள்ளையை வளர்த்தல் என்று அவர்கள் உலகமே குழந்தை ரோகிணியையே சுற்றி இருந்தது தான்

ஒரே காரணம். நீண்ட வருடங்களுக்கு பிறகு பிள்ளையும் வளர்ந்து விட்டதால் மன்னரே

அழைக்கவும் ராணியாரும் கிளம்பி விட்டார்கள்”

திவான் முடிக்கவும் துரைசாமி தொடர்ந்து சொன்னார் “விதி அப்படி.. அவர்கள் அன்றைய தினம்

மரம் விழுந்து மரணம் அடைய வேண்டும் என்று இருந்திருக்கிறது. விதியை யாரால் வெல்ல

முடியும்” என்று சோகமாகவே சொல்லி முடித்தார்.

“இருவரும் மிகவும் அன்னியோன்யமாக வாழ்ந்தவர்கள். மரணம் கூட அவர்களை பிரிக்க அஞ்சி

ஒன்றாகவே கொண்டு சென்று விட்டது”

“ஒ.,, இருவரும் ஒன்றாகவே இறந்தும் போனார்களா?”

“இல்லை முதலில் ராணியாரும் ஒரு வாரம் சென்று மன்னரும் இறந்து போனார்கள்”,

“எத்தனையோ வைத்தியத்திற்கும் அவர்கள் இருவருமே பிழைக்கவில்லை” திவான் அந்த

நாட்களின் நினைவில் பெருமூச்சு விட்டார்.. தன்னை ஆசுவாசபடுத்தி கொண்டு மேலும்

தொடர்ந்தார்.

“அவர்கள் இறந்த போது இளவரசியாருக்கு வயது பத்து. நாடே ஸ்தம்பித்து போயிருந்தது. இந்த

குழப்பத்தை பயன்படுத்தி குறுநில மன்னர்கள் ஒருவருக்கொருவர் கட்சி சேர்ந்து கொண்டு

நாட்டை கைப்பற்றவும் அல்லது இளவரசியாரை திருமணம் செய்வதன் மூலம் நாட்டை

அடையவும் சதி வேலை நடந்தது. அந்த காலகட்டத்தில் நாடும், அதனுடன் சேர்ந்து

இளவரசியாரும் மிகுந்த இக்கட்டிலும் நெருக்கடியிலும் இருந்தார்கள்.

அப்போது தான் மன்னர் பாஸ்கரரின் உயிரொத்த நண்பனான மன்னர் சுந்தர உடையாருக்கு

கும்பினியாரிடமிருந்து தகவல் வந்தது. இந்த இக்கட்டிற்கு ஒரு முடிவை கொண்டு வந்த மன்னர்

உடையார் இதே தர்பார் மண்டபத்தில் எல்லோரையும் கூடி வர செய்தார்.

அப்போது தான் தெரிந்தது தன் மரணத்தை எதிர்நோக்கிய மன்னர் பாஸ்கரர் செய்து வைத்த

ஏற்பாடு. யாரும் எதிர்பாராதது. யாராலும் எதிர் பேச்சு பேசமுடியாதது.

அது……….!

அந்த ஏற்பாட்டை விவரிக்க முற்பட்டார் திவான். எத்தனை தீர்க்கமான ஞானம் பாஸ்கரருக்கு

என்று விஜயன் வியந்த போது திவான் சொன்னார் இதில் சுந்தரரின் பங்கு மிகப் பெரியது என்று.

ஆம்.இன்றளவும் சுந்தரரின் கண்காணிப்பில் தானே வேட்டுவமங்கலம் இயங்கிக் கொண்டிருந்தது.

அதற்கு எங்கோ மதரசப்பட்டினத்தில் படித்துக் கொண்டிருந்த தானே சாட்சி தானே என்று

தனக்குள் நினைத்துக் கொண்டான் விஜயன்.

தொடரும்

ஷியாமளா கோபு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *