Skip to content
Home » அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-7

அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-7

7

எள் விழுந்தால் எண்ணை எடுத்து விடலாம் அவ்வளவு கூட்டம். தர்பார் மண்டபத்தில்

சிங்காசனத்தின் வலது புறம் எல்லா குறுநில அரசர்களும் மந்திரி பிரதானிகளும் வீற்றிருந்தார்கள்.

இடது புறம் பொதுமக்கள் கூடி இருந்தார்கள்.

சிம்மாசனத்தில் யாரும் இல்லை. ஒரு படி கீழாக மன்னர் ராஜ கேசரி சுந்தர உடையார் வலது புறம்

அமர்ந்திருந்தார். அதே படியின் இடது புறத்தில் இளவரசி ரோகிணி உட்கார்ந்திருந்தாள்.

இளவரசிக்கு உரிய அலங்காரம் செய்து கொண்டிருந்தாலும் அதையும் மீறி அவள் பார்வையில்

ஒரு சோகம் இருந்தது. மற்றபடி மிகவும் அமைதியாக இருந்தாள். யாருக்காகவோ இங்கே

எல்லோரும் கூடி இருக்கிறார்கள். இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல

இருந்தது அவள் பாவனை.

படியின் முடிவில் ஒரு வெள்ளைக்கார துரையும் ரிசீவர் துரைசாமியும் உட்கார்ந்திருந்தார்கள்.

மேல் மாடத்தில் குறுநில மன்னர்களின் குடும்ப பெண்கள் கூட்டம் அலை அடித்தது.

மன்னர் பாஸ்கரரின் தாயாதிகள் நாட்டை தங்களிடம் ஒப்படைத்து விடுவார்கள். அதை எப்படி

தங்களுக்குள் பங்கிட்டு கொண்டு ஆட்சி செய்வது என்று கணக்கிட்டு கொண்டிருந்தார்கள். நம்

வசம் நாடு ஒப்புவிக்கப் பட்டால் மக்கள் அதை ஒப்புக்கொள்வார்களா? என்ற சந்தேகம்

இருந்தாலும் நம்மை விட்டால் இந்த நாட்டை ஆள பாத்யதை பட்டவர்கள் வேறு யாரும் இல்லை

என்பதை மிகவும் உறுதியாக நம்பினார்கள்.

சம்பந்தக்கரர்கள் இந்த பெண் ரோகிணியை தங்கள் பிள்ளைகளில் யாருக்காவது மணம் முடித்து

வைத்து அதன் மூலம் இந்த நாட்டை அடைந்து விடலாம் என்று தீர்மானத்துடன் வந்திருந்தார்கள்.

தங்கள் பெண்களில் ஒருத்தியை பாஸ்கரருக்கு திருமணம் செய்து அதன் வாயிலாக சர்வ

அதிகாரத்தையும் அனுபவிக்கலாம் என்று எதிர்பார்த்து ஏமாந்தவர்களுக்கு குறைந்த பட்சம்

இன்றைய இந்த சூழ்நிலையில் ரோகிணியை மணம் முடித்து, எப்படியாவது விட்டதை

பிடிக்கலாம் என்று ஆவலோடு வந்திருந்தார்கள்.

அவர்களுக்குள் யாருடைய மகனுக்கு ரோகிணியை மணம் முடிப்பது என்றும் தங்களுக்குள்

நாட்டின் அதிகாரத்தை எப்படி பங்கிட்டு கொள்வது என்றும் ஒரு உடன்பாடுடன் வந்திருந்தார்கள்.

ராணி பாக்கியலட்சுமியின் தந்தையும் தம்பி கதிரவனும் வலது புறத்தில் பொது மக்களை

பார்ப்பதும் ரோஹிணியை பார்ப்பதும் மன்னர் சுந்தர உடையாரை உற்று நோக்குவதும் என்று

நாலாபுறமும் கண்களை சுற்றி சுழல விட்டு கொண்டு அங்கு நடப்பதை கண் இமைக்காமல்

பார்த்து கொண்டு நின்றிருந்தார்கள்.

பாக்கியலட்சுமியின் தந்தை நல்ல உயாரமாக கருப்பாக முறுக்கு மீசையுடன் நின்றிந்தார்.

கண்களில் மகளை இப்படி அல்பாயுசில் பறிகொடுத்த சோகம் அப்பிக்கிடந்தது. சுந்தர

உடையாரை பார்ப்பதும் ரோகிணியை பார்த்து கண்கள் கலங்குவதும் தன் மேல் துண்டால்

கண்களை துடைத்து கொள்வதுமாக இருந்தார்.

பாக்கியலட்சுமியின் தம்பி கதிரவன் நல்ல உயராமாக வஜ்ரம் பாய்ந்த உடல் கட்டுடன்

இருந்தான். அரும்பு மீசை, தீர்க்கமான பார்வை, வயது இருபது இருக்கும். நல்ல நிமிர்வுடன்

காணப்பட்டான்.

பொதுமக்களோ, யார் இந்த நாட்டின் பொறுப்பை ஏற்பார்கள்? இளவரசிக்கு திருமணம்

என்கின்றார்களே, யார் அவரை மணப்பார்? ஒரு வெள்ளைக்காரர் வந்திருக்கிறாரே. எதற்காக?

சுந்தர உடையார் என்ன தீர்மானம் செய்வார்.?

வெள்ளைக்கார துரையுடன் ஒருவர் உட்கார்ந்திருக்கிறாரே அவர் யாராக இருக்கும்.

சுந்தர உடையாருக்கு மட்டும் ஒரு மகன் இருந்திருந்தால் இப்போது எந்த பிரச்சினையும்

இல்லாமல் ரோகிணியையும் நாட்டையும் இந்த இக்கட்டிலிருந்து நல்லபடியாக

காப்பாத்தியிருப்பாரே. நமக்கும் இந்த குழப்பம் இல்லாமல் இருந்திருக்குமே என்று பலவாறாக

தங்களுக்குள் பேசிக்கொண்டும் கவலை பட்டு கொண்டும் நின்றிருந்தார்கள்.

சுந்தர உடையார் வலது கையை தூக்கினார். அவை அமைதலாயிற்று. தொண்டையை செருமிக்

கொண்டு பேச ஆரம்பித்தார்.

“அவையோருக்கு என் வணக்கம். மன்னரையும் ராணியையும் ஒரு சேர பறி கொடுத்த உங்களுக்கு

என்ன ஆறுதல் சொல்ல முடியும்.? உங்கள் அனைவருக்கும் மிக நன்றாக தெரியும் மன்னர்

பாஸ்கரர் எனக்கு மிகவும் ஆப்த நண்பர் என்று. அவருடைய இழப்பு உங்களை போலவே

எனக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். நாம் ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் சொல்லி

கொள்வதை தவிர வேறு வழி என்ன?”

அவருடைய குரல் நண்பனின் பிரிவில் தளுதளுத்தது. மக்கள் கூட்டமும் தங்கள் உயிரினும்

மேலான மன்னரை இழந்த துக்கத்தில் மீண்டும் கண்ணீர் சிந்துவதும், மூக்கை உறிஞ்சுவதுமாக

சப்தம் செய்தது.

தன்னை சுதாரித்து கொண்டு மீண்டும் பேச்சை தொடர்ந்தார் சுந்தர உடையார்.

“ராணியாரின் மறைவுக்கு வந்திருந்த நான் மன்னரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு

அவருடைய கடைசி காலகட்டத்தில் அவருடனேயே இங்கேயே தங்கிவிட்டது உங்களுக்கு

தெரிந்திருக்கும்.”

ஆம் என்று சப்தமிட்டது கூட்டம்.

“மரண தருவாயில் இருந்த மன்னருக்கு ராணியின் மறைவு நிறைய சிந்தனையை தூண்டி விட்டு

விட்டது. தனக்கு பிறகு இந்த நாடும் தன மகள் ரோகிணியும் என்ன ஆவார்களோ என்ற கவலை

பிடித்து கொண்டது.

தன் மரணத்திற்கு பிறகு நாட்டில் ஏற்பட போகும் குழப்பத்தையும் அதை பயன்படுத்தி கொண்டு

எதிரிகள் நாட்டை கைப்பற்றி கொண்டு விட கூடாது .

தனக்கு பின் எந்த குழப்பமும் இல்லாமல் நாடு யார் கைகளுக்கும் போய்விடாமல் மக்கள்

அமைதியாக வாழ வேண்டும்.

தன மகள் ரோகிணியை எந்த ஆபத்தும் சூழாமல் காக்க வேண்டும்.

இதற்கு என்ன செய்யலாம் என்று ஆலோசித்தோம் இருவரும்.

முதலில், நான் இந்த நாட்டு பொறுப்பையும் ரோகிணியை வளர்க்கும் கடமையையும் எடுத்து

கொள்ளலாமா என்று ஆலோசித்தோம்.

அது சரிவராது. ஏன் என்றால் நாட்டை அபகரித்து கொள்வதற்காக நானே பாஸ்கரையும்

ராணியையும் விபத்தை ஏற்படுத்தி கொன்று விட்டதாக நீங்கள் எல்லோரும் நினைக்க இடமுண்டு.

“அப்படி எல்லாம் இல்லை, இல்லை “என்று ஆர்பரித்தது கூட்டம்.

“என்ன மகாராஜா, இப்படி எல்லாம் பேசுகிறீர்களே” என்று அங்கலாய்த்தனர் பெருங்குடி மக்கள்.

வலது கையை மீண்டும் உயர்த்தினார் சுந்தரர். அவை மீண்டும் அமைதலாயிற்று. மீண்டும்

பேச்சை தொடர்ந்தார் சுந்தரர்.

“உங்கள் நல்லெண்ணத்திற்கு நன்றி.”

அவருக்கும் பாஸ்கருக்கும் நடந்த உரையாடலை தொடர்ந்தார்.

“தாயாதிகாரர்களிடம் ஒப்படைக்கலாம் என்றால் சம்பந்தகாரர்கள் ரோகிணியை திருமணம் செய்து

வைக்க கேட்பார்கள். அதனால் அவர்களுக்குள் சண்டை ஏற்படும். நாடு பிளவு பட்டு போகும்.

அது நம் எதிராளிக்கு அனுகூலமாக போய் விடும்.

ஆகையினாலே இப்போதைக்கு நாட்டை பாஸ்கரின் நண்பர்களான கும்பினியாரிடம்

ஒப்படைப்பது. கும்பினியார் உங்கள் நாட்டை இப்போதைக்கு நீதிமன்றத்தின் உதவியுடன்

நிர்வகிப்பது. ரோகிணியை திவான் வசம் ஒப்படைப்பது என்று முடிவாயிற்று,

அதன்படி நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட துரைசாமி அவர்கள் உங்கள் நாட்டுக்கும்

கும்பினியாருக்கும் நடுவிலே இருப்பார்.

அவருடைய அனுமதியின்றி இந்த நாட்டின் கொள்கை முடிவுகளோ போர் பயிற்சியோ

ராணுவத்தை பெருக்குவதோ கூடாது.

வரி வசூலிப்பது செலவு செய்வது அவருடைய அனுமதி பெற்று தான் நடக்க வேண்டும்.

ரோகிணியை மட்டுமாவது என்னிடம் ஒப்படைக்க கேட்டேன். என் நாட்டில் என் மகளுடன்

வளரட்டும் என்று.

ஆனால் பாஸ்கரர், ரோகிணி இந்த நாட்டிலேயே வளர்ந்தால் தான் இந்நாட்டின் மீது பற்றும்

இம்மக்களின் பழக்க வழக்கங்களும் கற்று கொள்வாள். நாளை தன் கணவனுடன் இந்த நாட்டை

ஆளும் போது இந்த மக்கள் அவளிடம் பாசம் கொள்ள ஏதுவாக இருக்கும் என்று மறுத்து விட்டார்.

மேலும் சில சரத்துக்களை சேர்த்தோம்.”

“அது………….”

சொல்லி கொண்டே வந்தவர் இந்த இடத்தில் சற்றே பேச்சை நிறுத்தி விட்டு அவையை சுற்றி

ஒருமுறை பார்த்தார். அந்த சரத்துக்கள் என்னவாக இருக்குமோ என்ற ஆவலில் பொதுமக்களும்

பரிதவிப்பில் உயர்குடியினரும் சற்று நேரம் மூச்சை நிறுத்தி கவனிக்கலானார்கள்.

“முதலில் ரோகிணியின் உயிருக்கு ஏதேனும் நேர்ந்தால் இந்த நாடு கும்பினியாரை சாரும். இந்த

இடத்தில பாஸ்கர் என்னை சாரும் என்று எழுத சொன்னார். யாரேனும் ரோகிணியை ஏதேனும்

செய்து விட்டு பழியை என் மேல் போட்டு விட வாய்ப்பு உண்டு என்பதனால் தான் கும்பினியாரை

சேரும் என்றது.

இரண்டாவதாக இப்போதைக்கு ரோகிணிக்கு திருமணம் செய்ய கூடாது. அவளுடைய

பதினாறாவது வயதில் தான் திருமணத்திற்கு பார்க்கவே ஆரம்பிக்க வேண்டும்.

திருமணம் மட்டும் என்னுடைய பொறுப்பு. எனக்கு சம்மதமான இடத்தில் தான் ரோகிணியை

கொடுக்க வேண்டும். அதனால் மாப்பிள்ளை என் மூலமாக மட்டுமே வர வேண்டும்.

ரோகிணியின் பதினெட்டாவது வயதில் அவளுக்கு திருமணத்தை முடித்து விடவேண்டும். அப்படி

பதினெட்டாவது வயதில் திருமணம் முடியவில்லை என்றாலும் இந்த நாடு கும்பினியார்

வசமாகிவிட வேண்டும்.”

தெள்ள தெளிவாக இருந்தது பாஸ்கரின் சாசனம்.

கூட்டம் அமைதியாக இருந்தது.

சுந்தர உடையார் மேலும் தொடர்ந்தார்.“இந்த சாசனத்தின் நகல் ஒன்று கும்பினியாருக்கு

அனுப்பப்பட்டு துரைசாமியை நியமித்துள்ளது நீதிமன்றம். அதை பார்த்து செல்லவும் உங்களிடம்

நேரில் சொல்லவும் இவர் வந்துள்ளார். இவர் பெயர் ஜேம்ஸ் மார்டின்.”

ஜேம்ஸ் மார்ட்டினும் துரைசாமியும் எழுந்து அவையோரை பார்த்து கும்பிட்டார்கள்.

அப்போது யாரும் எதிர்பாராமல் ராணி பாக்கியலட்சுமியின் தந்தை கதறி கொண்டு மன்னர் சுந்தர

உடையாருக்கு முன்பு வந்து மண்டியிட்டு தொழுது கொண்டு கேட்டார்.

“மன்னா என் மகளை இழந்து துக்கத்தில் உள்ளேன். என் பேத்தியையாவது என்னிடம் தந்து

விடுங்கள். நீங்கள் சொன்ன மாதிரி ரோகிணியின் பதினாறாவது வயதில் உங்களிடம் திருப்பி

தந்து விடுகிறேன்.”

அவருடைய அழுகை கல்லையும் கரைத்து விடும். சுந்தரருக்குமே மனம் இளகி விட்டது. அந்த

பெரியவரை பார்த்து சொன்னார், “அய்யா, நான் இது பற்றி பாஸ்கரிடம் சொல்லாமலா

இருந்திருப்பேன்.? ஆனால்,,,,,,” எப்படி சொல்வது என்று ஒரு நிமிடம் தயங்கி விட்டு சொன்னார்,

“ரோகிணி சகல வசதிகளுடன் இந்த அரணமனையில் தான் வளர வேண்டும். அங்கே தங்கள்

வீட்டில் ரோகிணிக்கு தேவையான அடிப்படை வசதிகள் கூட கிடைக்காது என்று மறுத்து

விட்டார் ‘

இந்த சிறுமி ரோகிணியின் தாய் பிறந்து வளர்ந்த வீடு அது. அதில் இவளுக்கு வசதி போதாதாதா?

மறுக்க நினைத்தாலும் முடியாதே. ஏனெனில் இவளுடைய தாய் என் மகள். ஆனால் ரோகிணியோ

மன்னர் மகளாயிற்றே. தன் ஏழ்மையை நினைத்து அவமானத்தால் தொய்ந்து விட்டார் அந்த

பெரியவர். அழுகையில் எழுப்ப முயன்றும் முடியாமல் மன்னர் முன்பு தரையோடு தரையாக

கிடந்தவரை கைலாகு கொடுத்து அழைத்து கொண்டு வெளியேறி விட்டான் அவருடைய மகன்.

அவனுடைய புலியை ஒத்த கண்கள் அவையை சுற்றி பார்த்தது. அவர்களுக்காக பரிந்து பேச

என்று ஒருவரும் இல்லை அங்கு”.

அன்று நடந்த நிகழ்சிகளை இன்று தான் நடந்தது போன்று பாவனையுடன் சொல்லி முடித்தார்

திவான்.

தாய் வழி சொந்தம் என்று ஒரு பெரும் மக்கள் கூட்டம் இருந்தும் அனாதையாக்கப்பட்ட அந்த

பெண் ரோகிணியின் மேல் பச்சாதாபம் உண்டாயிற்று விஜயனுக்கு. பாஸ்கர

மார்த்தாண்டனையும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை அவனால். அந்த மரணப்

படுக்கையிலும் எத்தனை தெளிவான திட்டமிடுதல் அவருக்கு இருந்திருக்கிறது.

ஒரு சின்ன ஓட்டையும் இல்லாத சாசனம். யாரும் மறுத்து பேச இயலாத ஷரத்துக்கள். இன்றைய

சூழலில் எந்த சிற்றரசர்களும் கலகம் செய்து நாட்டை கைப்பற்றி விட முடியாத கும்பினியாரின்

பின்புலம்.

தங்களுடைய ஒரே வாரிசான மகளும் இந்நாட்டின் எதிர்காலமுமான ரோகிணியை

வளர்த்தெடுப்பதற்கு திவானை தேர்ந்தெடுத்தது தான் கொஞ்சம் நெருடலாக இருந்தது அவனுக்கு.

ஆனால் ரோகிணி இந்த நாட்டில் வளர்வதற்கான அவசியத்தை தான் சுந்தரர்

தெளிவுபடுத்தியிருந்தாரே. இந்த நாட்டில் திவானின் மேற்பார்வையில் அல்லாது வேறு எப்படித்

தான் ரோகிணியை வளர்க்க முடியும்? அவள் இப்படி வளர்ந்ததற்கு திவான் தான் என்ன

செய்வார்? பாவம்.

வேட்டுவமங்கலத்தின் விஸ்தீரணத்தையும் வளமையையும் கண்கூடாக கண்ட விஜ்ஜயனுக்கு தன்

தந்தையின் ஆசை நியாயமானதாகவே பட்டது. என்ன குமரனுக்கு இந்த பெண் அமைந்திருந்தால்

தனக்கு வாழ்க்கை விருப்பப்படி அமைந்திருக்கும். ஆனானப்பட்ட கும்ரனாலேயே இந்த

பெண்ணை சமாளிக்க இயலவில்லை. தன்னால் என்ன செய்து விட முடியும் என்று ஒரு நிமிடம்

மனம் சோர்ந்தாலும் செய்து தான் ஆக வேண்டும் என்ற தந்தையின் கட்டளை காதில் ஒழித்து

முதுகில் அடித்து நிமிர வைத்தது.

செய்து தான் ஆக வேண்டும் என்று தீர்மானித்தவனுக்கு மனதில் தெளிவு பிறந்தது. அந்த தெளிவு

தைரியத்தைக் கொடுத்தது. அந்த தைரியம் இங்கே நடக்கப் போகும் சம்பவங்களை சமாளிக்க

போதுமான ஞானத்தைக் கொடுத்தது. தன்னம்பிக்கையுடன் ரிசீவர் துரைசாமியைக் கண்டு

புன்னகைத்தான்.

தொடரும்

ஷியாமளா கோபு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *