Skip to content
Home » அந்த வானம் உந்தன் வசம்-13

அந்த வானம் உந்தன் வசம்-13

13

அம்மாவின் உதவிக்கு வந்த மணி கேட்டாள். “எத்தனை நாளைக்கு நீ அவரிடம் இருந்து ஓடி ஒளிவாய்”

“குறைந்த பட்சம் இன்றேனும்…ம் .!”

“சரி நாளைக்கு?”

“அக்கா எனக்கு புரியாமல் இல்லை. ஆனால் நான் என்ன செய்ய? அவனை பார்த்தாலே நான் ஏமாந்தது தானே நினைவிற்கு வருகிறது”

“நீ ஏமாந்ததிற்கு பாவம் அவர் என்ன செய்வார்.?”

“வேறு எதில் என்றாலும் சமாளித்து கொள்ளலாம். ஆனால்…………” . 

“ஆனால், ஆனால் என்ன?”

“அவன்  பார்வைக்கு எப்படி இருக்கிறான்  பாரக்கா.” முகம் சுழித்து அவள் சொன்னவிதம் இருக்கிறதே, அப்பப்பா. அதை மட்டும் அருள் பார்த்திருந்தானால் தூக்கில் தொங்கி இருந்திருப்பான். 

அவள் போக்கில் அவளை விட முடியுமா? அதனால் மணி சமாதானம் செய்யவே முயன்றாள். “எப்படி இருக்கிறார்?”

“நல்லா, நூறு கிலோ அரிசி மூட்டை மாதிரி இருக்கிறான்”

“அவன் இவன் என்று பேசாதே. அம்மா கேட்டால் அதுக்கு வேறு திட்டு கிடைக்கும்”

“உக்கும். அதுக்கு மரியாதை ஒன்று தான் குறைச்சல் ஆக்கும்”

“அதை எல்லாம் விடு. நீ இப்போது மேலே போக போறியா இல்லையா?”

“முடியாது அக்கா. போக மாட்டேன்”

“எத்தனை நாளைக்கு இப்படி ஓடி ஒளிய முடியும்”

“முடிஞ்சவரை.”

“சென்னையில் தனி குடித்தனம் வைக்கும் போது என்ன செய்வே?”

“தனியா இருந்தால் மட்டும் என்ன? அவன் என்னை நெருங்கி விட முடியுமா?”

“என்ன செய்துடுவே?”

“கையில் எப்போதும் கத்தி வெச்சிருப்பேன்”

“வெச்சிருந்தா?” குரலில் இகழ்ச்சி இருந்தது.

“நீ கொஞ்சம் புத்திசாலி என்று நினைத்தேன். ச்சே. அவ்வளவு தானா நீ?”

“அக்கா, நான் அதை எல்லாம் நினைக்கவே இல்லை. நீ வேறு அதை எல்லாம் சொல்லி பயமுறுத்தாதே”

“பாரு நிவி, பிரச்சினையை கண்டால் ஓடி ஒளியாமல், நேருக்கு நேர் அதை எதிர் கொள்வது தான் புத்திசாலித்தனம். நீ புத்திசாலி. யோசி. இது இன்று ஒரு நாளுடன் முடிவது இல்லையே.”

“என்னை என்ன செய்ய சொல்கிறாய்?”

“முதலில் எழுந்திரு. மேலே போ. உனக்கு என்ன தோணுதோ அதை அந்த நாலு சுவற்றுக்குள் 

செய். அவ்வளவு தான். அவரே அதை புரிந்து கொள்வார்”

திரும்பி அம்மாவை பார்த்தாள் நிவி. பாவமாக இருந்தது. 

மேலே மாடியில் உள்ள குளியலறையுடன் கூடிய அறையில் ஏசியின்  இதமான குளிரில் கட்டிலில் அமர்ந்து ஏதோ புத்தகத்தை புரட்டி கொண்டிருந்த அருள் கதவு திறக்கும் சத்தம் கேட்கவும் எழுந்து நின்றான். நிவி உள்ளே வந்து கட்டிலின் அருகில் நின்றாள். அவன் முகத்தை ஏறெடுத்தும் பார்த்தாளில்லை.

“நிவி..”

சட்டென்று நிமிர்ந்து அவனை ஒரு பார்வை பார்த்தாளே. கத்தியை கொண்டு இதயத்தின் ஆழம் வரை செருகி இழுத்தது போன்று காந்தல் எடுத்தது. அப்பா.! என்ன ஒரு நிஷ்ட்டூரம்.

நல்லவேளை உடை மாற்றி இருந்தாள். இல்லாவிட்டால் கொஞ்சமும் தயவு தாட்சண்யம் இல்லாமல்  வெளியே போ என்று சொல்லி இருப்பாள் என்று மனசுக்குள் நினைத்து கொண்டவன் மேற் கொண்டு ஏதும் பேச முயற்சிக்காமல் அவளையே பார்த்து கொண்டு நின்றான்.

அவள் அவன் புறம் திரும்பினாள் இல்லை.

விளக்கை அணைத்து விட்டு ஏறி படுக்கையில் படுத்தாள்.

அவனும் ஏறி படுத்தவன் இரவு விளக்கின் வெளிச்சத்தில் வரிவடிவமாக தென்பட்டவளை நெருங்கி இடுப்பில் தன்  கையை போட்டான்.  

அவ்வளவு தான்.

அவன் கையை தள்ளி விட்டாள். ஆனால் அவன் பிடி மேலும் இறுகியது. அவள் நகத்தால் அவன் கையை பிராண்டி கிள்ளி பிடுங்கி தூர வீச முயன்றாள். முடியவில்லை. பலமாக இருந்தது அவன் பிடி. சட்டென்று கையை எடுத்தான்.

அவள் தடால் புடால் என்று கட்டிலிருந்து கீழே இறங்கி குழல் விளக்கை போட்டாள். “என்ன தைரியம்?”

“தைரியத்திற்கு என்ன.?”

“ஓ, ஆம்பளை என்ற திமிரா?”

“அதில் ஒன்றும் தப்பில்லையே.”

“பிடிக்காதவளை  பலவந்தம் செய்வது தான் ஆம்பளைத்தனமா?”

“என்னவோ சினிமாவில் காட்டுவது போல் பலவந்தம் பண்ணியதாக  சொல்றே”

“அப்போ நீ செய்ததற்கு பேர் என்னவாம்?”

அவன் பதிலேதும் சொல்லாமல் அவளையே நேருக்கு நேர் பார்த்து கொண்டிருந்தான். அவள் சண்டை கோழி போல சிலிர்த்து கொண்டு நின்றாள்.“புருஷன் என்கின்ற உரிமை.”

“இல்லை. மனைவி என்கின்ற உறவு”

“உரிமையோ, உறவோ என் கிட்டே நெருங்காதே”

“ஒரு காரணமும் இல்லாமல் உனக்கு ஏன் இவ்வளவு வீராப்பு?”

“எனக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை”

“அப்போ கல்யாணம் பண்ணி இருந்திருக்க கூடாது”

“கல்யாணம் செய்தால் என்ன?”

“நிவி நீ புரிந்து பேசுகிறாயா? இல்லை வம்புக்கு என்று பேசுகிறாயா?”

“எல்லாம் புரிந்து தான் பேசுகிறேன். எனக்கு உன்னை சுத்தமாக  பிடிக்கவில்லை”

“ஆனால் எனக்கு உன்னை மி..க.வும் பிடித்திருக்கிறதே நிவேதிதா” கண்களில் ரசனையுடன் சொன்னான். 

அவள் மேலும் எரிச்சலானாள்.“அதற்கு நான் என்ன செய்யட்டும்?”

“ஒன்னும் கஷ்டப்பட வேண்டாம்.”

“தேங்க்ஸ்”

“உனக்காக காத்திருக்கிறேன்”

“இந்த கதை எல்லாம் என்னிடம் நடக்காது”

“ஏன்?”

“ஏனென்றால்  காத்திருக்கிறேன் என்று என்னை இம்சை பண்ணுவே”

“நான் எதற்கு இம்சை பண்ண போறேன்?”

“என்னை இம்ப்ரெஸ் பண்ணுவதாக நினைத்து கொண்டு ஏதாவது ஏட்டிக்கு பூட்டியா செய்து வெறுப்பேத்துவே”

“நாளைக்கு நான் என்ன செய்வேன் என்று இன்றே தீர்மானித்து கொள்வாயா?”

“பொதுவாக அப்படித்தானே நடக்கும்”

“நிவி நீ ரொம்ப சினிமா பார்த்து கெட்டு போயிருக்கே”

சின்ன குழந்தையிடம் பேசுவது போல சொன்னான். “என்னை பார்த்து விட்டு தானே கல்யாணத்திற்கு சம்மதித்தாய்?”

இந்த கேள்வி கேட்பான் என்று எதிர்பார்த்து இந்த தடவை சரியான பதிலை யோசித்து வைத்திருந்தாள்.

2 thoughts on “அந்த வானம் உந்தன் வசம்-13”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *