அந்த வானம் எந்தன் வசம்
1
சித்திரை மாதத்தின் உக்கிரமான வெயில், அந்த மாலை நாலரை மணி வேளையிலும் மண்டையை பிளந்தது. இட்டிலி சட்டிக்குள் வைத்து அவித்தது போல ஒரே கசகசப்பு. ஒரே உப்புசமாக இருந்தது. அது நேரம் வரை ஏசி யில் இருந்து விட்டு வெளியே வரவும் வெப்பத்தின் வீச்சு அதிகமாக இருந்தது நிவேதிதாவுக்கு. வெயிலுக்கு மேனி கருத்து விடாமல் இருக்க கண்களை தவிர மீதி உடல் முழுவதும் துப்பட்டாவால் மூடி சகல பந்தோபஸ்தும் செய்து கொண்டு வந்து அவளுடைய வண்டியை வெளியே எடுத்தாள்.
சோளிங்கநல்லூர் சிக்னலை கடக்க அரை மணி நேரம் ஆயிற்று. நடந்தே வந்திருந்தால் கூட பத்து நிமிடத்திற்கு மேல் ஆகாது அவள் தங்கி இருந்த பெண்கள் விடுதி. நகரத்தின் அதி சொகுசான விடுதி அது. மற்றைய விடுதிகளை விட கட்டணம் அதிகமாக இருந்தாலும் இருவருக்கு ஒரு அறை ஏசி வசதி, நல்ல காற்றோட்டமான அறைகள், தரமான உணவு. பாதுகாப்பு என்று அதிகப்படி படாடோபமாக தான் இருந்தது அந்த விடுதி.
என்றைய தினத்தையும் விட அன்று சீக்கிரமாகவே வந்தவள் வண்டியை ஸ்டாண்டில் நிறுத்தி விட்டு தலைக் கவசத்தையும் பாதுகாப்பு முஸ்தீப்புகளையும் களைந்து விட்டு வந்தவள் எதிரே வந்த காவலாளி முனியனை பார்த்தும் பார்க்காதது போல சென்று விட முயன்றாள்.
எப்போதும் நின்று இரண்டு வார்த்தை பேசாமல் போக மாட்டாள். அன்று அப்படி போகவும், “என்ன பாப்பா, சீக்கிரம் வந்துட்டே. உடம்பு கிடம்பு சரியில்லையா?”என்று வாஞ்சையுடன் கேட்டார் அவர்.
“இல்லைங்கய்யா. நல்லா தான் இருக்கேன்.” மேல்கொண்டு பதில் சொல்லி கொண்டிருக்காமல் உள்ளே வந்தவள் சீனியம்மாவை கண்டதும், “ஆயா, கொஞ்சம் சூடா டீ போட்டு கொடுத்து அனுப்பு.” என்றாள்.
“ஏன் கண்ணு, சீக்கிரமே வந்துட்டே. உடம்பு கிடம்பு சரியில்லையா?
காவலாளி கேட்ட அதே கேள்வி. அலுப்பாக இருந்தது. பதில் சொல்லும் மனநிலையில் இல்லை அவள்.
அதற்குள் அவளருகில் வந்து நெற்றியை தொட்டு பார்த்தாள் சீனியம்மா. “என்ன கண்ணு, காய்ச்சல் கூட இல்லையே.”
“ம்…”
“என்ன எது கேட்டாலும் பதில் சொல்ல மாட்டேங்குறே?”
“உக்கும்.சொல்றாங்க. வெத்திலைக்கு சுண்ணாம்பு இல்லை என்று. போ ஆயா”
“சரி, இன்னைக்கு என்னவோ நீ சரியில்லை. நீ மேல ரூம்புக்கு போ. டீ கொடுத்து விடறேன்.”
படி ஏற போனவள், எதையோ நினைத்து கொண்டவளாக “ஆயா ஒரு ஆறு மணிக்கா அஞ்சாறு காப்பி போடணும்.”
“ஓஹோ, அப்படியா சேதி” வாயெல்லாம் பல்லாக அவளை பார்த்து சிரித்தாள் சீனியம்மா.
“என்ன சேதி?”
“என்னவோ புதுசா என்னை கேக்கறே?”
“நீ தானே சொன்னே. மீதியையும் நீயே சொல்லிடு.”
“வேறே என்னம்மா. இன்னைக்கு உன்னை பொண்ணு பார்க்க மாப்பிள்ளை வீடு வருது. சரிதானே.”
“ஆமா..”அவளுடைய எரிச்சல் அப்பட்டமாக குரலில் இருந்தது.
அந்த வயதான அனுபவசாலிக்கு புரியாமல் இல்லை. “ஏன் பாப்பா இப்படி அலுத்துக்கறே?”
“வேறே என்னவாம். எனக்கு தான் கல்யாணம் என்றாலே பிடிக்க மாட்டேங்குதே”
“பொண்ணா பொறந்தவ அப்படி சொன்னா ஆச்சா?”
“பின்னே எப்படி சொல்லனுமாம்?”
“உங்க அப்பன் ஆத்தா அப்படி சொல்லி இருந்தா இன்னைக்கு நீ இங்கே நின்னு கிட்டு அழிச்சாட்டியமா பேசுவியா?”
அவளுக்கு ஆயாவிடம் சற்றே வம்புக்கு இழுக்கும் எண்ணம் வந்தது. எப்போதுமே ஆயாவிடம் மிகுந்த அன்பும் அக்கறையுமாக இருக்கும் நிவியை ஆயாவிற்கு மிகவும் பிடிக்கும். பதிலுக்கு நிவிக்கென்று சற்று அதிகப்படியான உபசரிப்பு நடப்பது உண்டு. சுடச்சுட உணவை தனியாக அவளுக்கு என்று எடுத்து வைப்பதாகட்டும். ஒரு தலைவலி காய்ச்சல் என்றால் கை வைத்தியம் செய்வதாகட்டும், நிவி அவளுக்கு ஸ்பெஷல் தான். அதற்கேற்றார் போல நிவியும் அவளை நல்ல நாளுக்கு என்று தனியாக கவனிப்பது உண்டு. வெளியே தெரியாத ஒரு பாசப்பினைப்பு இருவருக்கும் இடையில் உண்டு.
“கல்யாணம் எல்லாம் ஒரு பெரிய விஷயமா ஆயா?”
“இல்லையா பின்னே?”
“அதெல்லாம் உன் காலத்தில் ஆயா.”
“என்னடி இது அதிசயமா இருக்கு. எந்த காலமா இருந்தா என்ன? பொண்ணா பொறந்தவ ஒருத்தனை கண்ணாலம் கட்டிக்கிட்டு புள்ளை குட்டி பெத்து கிட்டு.!” என்று நீட்டி முழக்கியவள் கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு அதிசயப்பட்டாள். “இப்படி தானே எல்லாரும் இருப்பாங்க. நீ மட்டும் விசித்திரமா பேசறே.”
ஆயாவின் அருகில் வந்து அவள் தோள் மீது கையை போட்டு கொண்டு சொன்னாள். “ஆயா, நீ கண்ணாலம் கட்டிகிட்டதாலே புள்ளைகுட்டி பெத்துகிட்டே. அப்படி கண்ணாலம் பண்ணலேனா என்ன பண்ணிருப்பே?”
“ஆங். அதெப்படி கண்ணாலம் கட்டாமல் இருக்க முடியும்?’”ஆயாவை பொறுத்தவரை, கிழக்கே சூரியன் உதிப்பது எப்படி நியதியோ அது போல பெண்ணாக பிறந்தவள் கல்யாணம் செய்ய வேண்டியது நியதி. ஆகையால் அவளுக்கு அதை பற்றிய கற்பனை கொஞ்சம் கூட இல்லை.
அவளுடைய கழுத்தை ஆசையாக நெருக்கி விட்டு சொன்னாள் நிவேதிதா. “ஆயா, நீ மட்டும் கண்ணாலம் கட்டாமல் இருந்திருந்தால் என்னை மாதிரி பெரிய படிப்பு படிச்சு என்னை மாதிரியே ஐ.டி. கம்பனியில் வேலைக்கு போய் என்னை மாதிரியே வண்டி ஓட்டிட்டு என்னை மாதிரியே ஜாலியா இருந்திருப்பே.”
“உக்கும், இருந்திருப்பேன், இருந்திருப்பேன்.”
“என்ன இப்படி நம்பிக்கை இல்லாமல் பேசறே.”
“அது என்னவோ தாயி, நான் கட்டிக்க மாட்டேன்ன்னு சொன்னாலும் என் முறைமாமனுங்க விட்டுடுவானுன்களா?”
“அதானே பார்த்தேன். உனக்கு முறைமானுங்க இருக்கானுங்க. எனக்கு அப்பிடி யாருமே இல்லையே ஆயா” அவள் குரலில் பரியாசம் பரிபூரணமாக இருந்தது.
அது ஆயாவுக்கும் புரிந்தது. அவள் முகவாயில் கையை வைத்து அதிசயித்தாள். “என்னமோ போ பாப்பா, இன்னைக்கு வர சம்பந்தம் நல்லபடியா குதிரனும்னு அந்த முண்டகன்னிய தான் வேண்டிக்கறேன்”
விடுதிக்கு வந்த போது இருந்த எரிச்சல் சற்றே மறைந்திருந்தது.
“உனக்காக முண்டகண்ணி இறங்கினால் தான் உண்டு.”
அவள் தலையை ஒரு முட்டு முட்டி விட்டு படி ஏறி அவள் அறையை அடைந்தாள். நல்லவேளையாக அவளுடைய அறையை அவளுடன் பகிர்ந்து கொள்ளும் நம்ருதா முன்பே வந்து அறையில் ஏசியை போட்டு வைத்திருந்தது அவளுக்கு இதமாக இருந்தது.
தொடரும்
ஷியாமளா கோபு
Super starting sis! New storyah?
@Mala Priyadharshini sister G.syamala gopu ammavin new story
அருமையான பதிவு
இந்த நிவேதிதாவுக்கு ஏன் கல்யாணத்துல இன்ஸ்ட்ரெஸ்ட் இல்லைன்னு தெரியலையே…?
ஒருவேளை, கடைசி வரைக்கும் பிக்கல் பிடுங்கல் இதெல்லாம் இல்லாம இப்படியே தனிக்காட்டு ராணியா இருந்துடலாம்ன்னு இருக்காளோ….???
😀😀😀