Skip to content
Home » அந்த வானம் எந்தன் வசம்-10

அந்த வானம் எந்தன் வசம்-10

10

“இந்த வலது பக்க வழி தான்” என்றான் திடீரென்று அருள்.

“இப்படி கிட்டே வரும் போது சொன்னால் எப்படி? முன்கூட்டியே சொன்னால் தானே திருப்ப முடியும்” என்று சீறினாள் நிவி.

“சாரி…..!”

“உக்கும், சாரிக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.”

“விடு நிவி, ஏதோ கவனிக்காமல் விட்டிருப்பார்” என்றாள் அம்மா.

“உங்க ஊர் மாட்டு வண்டி என்று நினைத்தீர்களா”

காரை ஓட்டி கொண்டிருந்த அண்ணன் ரொம்பவே கஷ்டப்பட்டு ரிவேர்ஸ் எடுத்து பின் வலது புறம் திரும்பினார். கலையரசன் பட்ட கஷ்டத்தை கண்ட நிவி தன்னருகில் உட்கார்ந்திருந்த அருளை அடிக்குரலில் கேட்டாள்.  

“இதுக்கு முன்னாலே காரில் போய் பழக்கம் உண்டா?” 

“என்ன நிவேதி, இப்படி கேட்கிறே?”அழுது விடுபவன் போல அவளை விட அடிக்குரலில் சொன்னான். சொல்லி என்ன பிரயோஜனம்? அவன் சொன்ன வலது சாலை ஒரு முட்டு சந்தாக இருந்தது. 

“என்னது, நிவே..தி..யா? ம்…அப்புறம்” என்றாள் மிகவும் இகழ்ச்சியாக.

“அது.”

“இந்த செல்ல அழைப்பெல்லாம் இங்கே வேண்டாம்” என்றாள் கட் அண்ட் கறாராக.

இவர்கள் இருவரும் அடிக்குரலில் கிசுகிசு என்று பேசி கொண்டு, இல்லை இல்லை நிவி அவனை வறுத்து எடுத்து கொண்டு வருவதை அவள் அருகில் பின் சீட்டில் உட்கார்ந்து கொண்டு இருந்த அம்மா கவனித்து கொண்டே தான் வந்தாள். 

அவ்வப்போது நிவியை தொடையை பிடித்து கிள்ளி “சும்மா இரு, சும்மா இரு”

“என்ன மாப்பிள்ளை முட்டு சந்தாக இருக்கிறது?”

“அது.!” தலையை இருபுறமும் திரும்பி பார்த்தவாறு இடத்தை அடையாளம் காண தேடினான்.

“இங்கே ஒரு மரம் இருக்கும்” 

“கிராமத்து சாலையில் மரமெல்லாம் ஒரு அடையாளமா?”

“சாரி, பதட்டத்தில் தவறி சொல்லிட்டேன்.” இன்னும் இடத்தைக் கண்டுபிடிக்கவில்லை போலும். 

“எதுக்கு மாப்பிள்ளை பதட்டம்?”

சொல்ல முடியுமா அருளால்? உங்கள் மகள் என்னை மிரட்டும் மிரட்டலில் பதட்டமாக இருக்கிறது 

என்று.

“நிதானமாக  யோசித்து சொல்லுங்கள் மாப்பிள்ளை”

அப்போதும் தலையை திருப்பி திருப்பி வழியின் அடையாளத்தை தேடினான்.

“ஆமாம். இவர் யோசித்து முடிக்கும் வரை காரை மரத்தில் கட்டி போட்டு வைக்கலாம்.கொஞ்சம் வைக்கோலையும் போட்டால் சரியாக இருக்கும்”

“என்னம்மா சொல்றே?”

“ஆங், அது ஒண்ணுமில்லைப்பா. இவருடைய ஊருக்கு இவருக்கு வழி தெரியவில்லையே என்று சொன்னேன்”

“உங்க அம்மாவிற்கு போன் போட்டு கேளுங்கள்”

“இல்லை, எனக்கு தெரியும். அடுத்த வலது சாலை தான்”

“நன்றாக தெரியுமா? இல்லை அதுவும் இன்னொரு முட்டு சந்தா?” அடிக்குரலில் பல்லைக் கடித்தாள்.

“சும்மா இரு நிவி.” அடக்கினாள் அம்மா. 

“வலது பக்கம் திரும்பலாம் தானே” நிவியின் தந்தை கனகாரியமாக கேட்டார்.

“ஆமாம் மாமா, இந்த வழி தான்” ரொம்ப ரோஷம் இருந்தது அவன் குரலில்.

திருமணம் முடிந்து மண்டபத்திலிருந்து மாணிக்கவாசகம் குடும்பத்தார் கிளம்பும் போது அருளை அழைத்து சரோஜா சொன்னாள். “தம்பி, நாங்கள் முன்னால் போகிறோம். நீ அவர்களை அழைத்து கொண்டு திரௌபதி அம்மன் கோயிலுக்கு போ”

“நம்ம குல தெய்வம் கோயிலுக்கா?”

“ஆமாம். அங்கே அர்ச்சனைக்கு சொல்லி இருக்கேன். முடித்து கொண்டு நம் ஊருக்கு வா”

“நீங்கள் யாராவது என்னோடு வாருங்கள்”

“ஏண்டா, நாங்கள் எல்லோரும் வந்த வேன்லேயே போய் விடுவோம். நீ அவர்களோடு வா.”

“அம்மா..!”

தயங்கி தயங்கி நின்றவனை உறுத்து பார்த்து சொன்னாள் சரோஜா.

“பாரு, அவர்களுடைய காரில் அஞ்சு பேர் தான் வர முடியும். நீ, மருமகள், அவளுடைய அம்மா, அப்பா, அண்ணன். நாங்க இடிச்சிகிட்டா வர முடியும்”

“எங்களுக்கு தனியா கார் ஏற்பாடு பண்ணி இருந்திருக்கலாம் இல்லே.”

“அது எதுக்கு வீண் செலவு?. நாளை மறு வீட்டிற்கு அவர்கள் வீட்டுக்கும் அவர்கள் வண்டியிலேயே போய் விடலாம்”

“அப்படியானால், நாளை அவர்கள் வீட்டுக்கும் நான் தனியாக தான் போகனுமா?”

“என்னடா இப்படி பொட்டை புள்ளை மாதிரி சிணுங்கற?”

“நான் தனியா போக மாட்டேன்.”

“சரி நாளை கதை நாளை பார்த்துக்கலாம். இப்போ கோயிலுக்குப் போய் விட்டு ஊருக்கு வா”

“சரி.” என்றான் மீண்டும் சிணுங்கலுடன்.

“பாரு, நீ பாட்டுக்கு நேரே வீட்டுக்கு கூட்டியாந்துடாதே. ஊர் எல்லையிலே அய்யனார் கோயிலுக்கு வந்து விட்டு போன் அடி”

“சரி.”

புது பொண்டாட்டியுடன் காரில் பின் சீட்டில் நன்றாக நெருக்கமாக உட்கார்ந்து வருவது ஒரு புது அனுபவமாகத் தான் இருக்கிறது. அந்த புதுப் புடவை, பூ, வாசனை திரவியங்களின் மனம் நாசியில் ஒரு கிளர்ச்சியை கொடுத்தது ஒருபுறம் என்றால் அவள், காரின் அசைவிற்கு ஏற்ப அவன் மேல் பஞ்சு பொதி போல மெத் மெத்தென்று உரசுவது ஒரு கிளுகிளுப்பைக் கொடுத்தது.

ஆனால் ஒன்றே ஒன்று தான் புரியவில்லை. இவள் ஏன் நம்மிடம் இப்படி கோபப்படுகிறாள்?

அம்மா சொன்னது போல ஊர் எல்லையில் அய்யனார் கோயில் வாசலுக்கு அவர்கள் வந்த போது ஊரே திரண்டு நின்று கொண்டிருந்தது. கல்யாணத்திற்கு வர முடியாதவர்கள் அழைப்பு இல்லாதவர்கள் வயசானவர்கள் குழந்தைகள் என்று ஒரு பெருங்கூட்டமே கூடி இருந்தது.

நிவேதிதா இவ்வளவு கிராமத்தில் பழக்கம் இல்லாதவள். அவளுடைய தாயாரின் ஊர் தருமபுரி பக்கம் கிராமம் தான். ஆனால் எப்போதேனும் இரண்டு மூன்று நாட்கள் அங்கே போய் தாத்தா பாட்டியுடன் இருந்து விட்டு வந்து விடுவாள். அதுவும் வீட்டிற்குள் தான் இருப்பாள். ஆகையினால் இது போல கிராமத்து பழக்க வழக்கங்கள் எல்லாம் அவளுக்கு தெரியாது.

இவ்வளவு பெரிய கூட்டத்தை ஒரு சேர அங்கே கண்ட போது அவளுக்கு மட்டுமல்ல அருளுக்குமே ஒருமாதிரி ஆகி விட்டது. அந்த ஊரில் இன்றைய இளவட்டங்கள் எத்தனை எதிர்ப்பு தெரிவித்தும் இந்த ஊர்வலம் மட்டும் நின்றபாடில்லை. அது அந்த ஊரின் கலாசாரம் மட்டுமல்ல அந்த பக்கத்தில் நடைமுறை அடையாளமும் கூட.

நீண்ட தூரம் நடப்பது போல ஒரு உணர்வு ஏற்பட்டது நிவிக்கு. பொதுமக்கள் பார்வை வேறு குறுகுறுவென்று. உள்ளே மூண்ட எரிச்சலை அடக்கி கொள்வது பெரும்பாடாகி போயிற்று. 

3 thoughts on “அந்த வானம் எந்தன் வசம்-10”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *