33
அவனுடைய அறையில் அவன் செய்து வைத்திருந்த வேலையில் உரிய பொருத்தமான திருத்தங்களை செய்து அதை இன்னும் மெருகூட்டினாள் நிவி.அங்கே அவன் எழுதி வைத்திருந்த சிறு சிறு கவிதைகளை பார்த்து சிரித்து கொண்டாள்.
“அண்ணலும் நோக்கினான்.
அவளும் நோக்கினாள்.
இடம் பெயர்ந்தன இதயங்கள்.
நிகழ்ந்தது ராமாயணம்.
தொடர்ந்தது மகாபாரதம் “
ராமாயணத்தில் கல்யாணம் நிகழ்ந்தது. பட்டாபிஷேகம் நடந்தது. அது போல் காதலித்தவர்கள் திருமணம் செய்தார்கள். ஆனால் அதை ஒப்பாத பெற்றவர்களால் மகாபாரத போர் தொடர்ந்தது.
“இந்தா நிவேதி டீ குடித்து விட்டு வேலையை பார்”
“டீ ரொம்ப நன்றாக இருக்கிறது. உங்கள் பாட்டிக்கு தாங்க்ஸ் சொல்லி விடுங்கள்”
“எனக்கு தான் சொல்லணும்”
“நீங்களா டீ போட்டீர்கள்?”
“ஆமாம்.”
“பார்ரா. ம். எப்போதிலிருந்து டீ போட கற்று கொண்டீர்கள்?”
“இங்கு வந்ததிலிருந்து”
“நன்றாக இருக்கிறது”
“இங்கே அடுப்படியும் இருக்கிறது. கிட்சனும் இருக்கிறது. எனக்கு ரெண்டிலும் டீ மட்டுமல்ல சமைக்கவுமே தெரியும்”
ஓ, இவன் எதையுமே மறக்கவில்லை. பால் காய்ச்ச தெரியாமல் தன்னிடம் திட்டு வாங்கியவன் இல்லை இவன். நாமும் தான் அன்று எரிச்சலில் அவனை எப்படி எல்லாம் ஏகடியம் செய்தோம்.
“போகட்டும். உங்களுக்கு சமைக்க தெரிந்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம்”
ஏதாவது பதிலுக்கு சொல்லணுமே என்பதற்காக சொன்னாள். ஆனால் அவன் எங்கோ பார்வையாக தொடர்ந்தான்.
“என் வாழ்நாளில் ஒரு ஆறு மாதம் எனக்கு சமைக்க கடும் பயிற்சி கொடுக்கபட்டது.”
அடி வாங்கி பாடம் படித்தவனால் வாங்கிய அடியையும் மறக்க முடியவில்லை. வலியையும் தாங்கி கொள்ள முடியவில்லை.
“பரவாயில்லை. உங்கள் பயிற்சியாளரை பாராட்ட தான் வேண்டும். இந்த டீ ஒரு சின்ன சாம்பிள் தான். இதுவே நன்றாக இருப்பதால் கண்டிப்பாக உங்கள் சமையலும் மிக நன்றாகவே இருக்கும்.”
சொன்னாள் ரொம்பவுமே கெத்தாக. அவனுக்கு தான் இப்போது இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. ராட்சசி என்ற மனதிற்குள் திட்டி கொண்டான் செல்லமாக.
“வாக்கா, போய் குளித்து விட்டு வரலாம்”
“நான் வரவில்லை ரம்யா”
“அப்போதிலிருந்து கூப்பிட்டு கொண்டே இருக்கிறேன்”
“நானும் தான் அப்போதிலிருந்து சொல்லி கொண்டே இருக்கிறேன்.”
“ஏனக்கா?”
“அந்த பம்ப்செட் எங்கே இருக்கிறது என்று சொன்னாய்?”
“கீல்வரத்து கோடியிலே”
“அது என்ன கீல்வரம்”
“அதுவா………கீல்வரம்னா கிழக்கு புறம்”
“யாருடைய வயல்காட்டில் இருக்கிறது?”
“யாருடைய வயக்காட்டில்?”
“என்னை ஏன் கேட்கிறாய்?”
“ஓ, அதுவா. நம்ம வர்மா சார் வயக்காட்டில் இருக்கிறது.”
“இப்போது புரிகிறதா நான் ஏன் வர மாட்டேன் என்று சொல்கிறேன்னு?”
“அக்கா, உனக்கே கொஞ்சம் ஓவரா இல்லை. நாம என்ன அவர் வீட்டிலா போய் குளிக்க போகிறோம்? அவருடைய வீட்டுக்கு போகும் வழி தான். ஆனால் அவங்க வீட்டுக்கு முன்பே இடது கை பக்கம் திரும்பினால் அங்கே போய் விடலாம்”
“உன் கூட ரோதனையாக போய் விட்டது. சரி வா”
இருவரும் துவைப்பதற்கு கொஞ்சம் துணியும், மாற்று துணியும் எடுத்து கொண்டு பம்ப் செட்டிற்கு புறப்பட்டார்கள். போகும் வழியில் எதிர் திசையில் அருள் மோட்டார் பைக்கில் இவர்களை பார்த்து கொண்டே சென்றான். அவன் பின் இருக்கையில் ஒரு பெண் இருந்தாள். அவள் தான் செல்வி போலும். ஆம் என்றாள் ரம்யா. மனதிற்குள் யார் யாரோடு போனால் நமக்கென்ன என்று சலித்து கொண்டவள் தன்னையறியாமல் அவர்கள் இருவரும் சென்ற திசையில் திரும்பி பார்த்தாள்.
உண்மையில் பம்ப்செட்டில் குளிக்க வந்தது நல்ல அனுபவமாக இருந்தது. தண்ணீர் விழும் தொட்டியில் நன்றாக முங்கி குளித்தது நீரில் துளாவியது என்று இருவரும் தண்ணீரை அதகளபடுத்தினார்கள். இருவரும் குளித்து துணிகளை துவைத்து கொண்டு வரப்பின் வழியாக வந்து கொண்டிருந்தார்கள். அதற்குள் ரம்யா அருகில் இருந்த மாந்தோப்பில் மாங்காய் பறிக்க ஓடினாள்.
“ஏ ரம்யா, எங்கே போகிறாய்?”
“அக்கா, அங்கே பார். மாந்தோப்பில் மாங்காய் எப்படி காய்ச்சிருக்கு. போய் ரெண்டு மாங்காய் பறித்து கொண்டு வருகிறேன்.”
“இரு. இரு. நானும் வருகிறேன்”
“வேண்டாம். தோப்புக்காரன் வந்துட்டா நான் ஓடியாந்துடுவேன். நீயானா வரப்பில் வழுக்கி விழுந்துடுவே. நீ அதோ அந்த வரப்போடு போய் நாம வந்தோமே அந்த மண் ரோடில் நில்லு. இதோ ஓடியாந்திடறேன்”
சொன்னவள் இவள் பதிலுக்கு காத்திராமல் விரைந்து ஓடி விட்டாள். இவள் நிதானமாக வரப்பில் நடந்து சென்றாள். அதே வரப்பின் எதிர் திசையில் அருள் இவளை பார்த்த மாதிரி வந்து கொண்டிருந்தான். இவள் அருகில் நெருங்கிய போது அவளும் அவனையே பார்த்து கொண்டு வரப்பில் வழுக்கி கொண்டு போய் கீழே விழப்போனாள். சட்டென்று அவளை தாங்கி பிடித்து கொண்டவன் அவள் காதருகில் மென்மையாக கேட்டான்.
“அது எப்படி, என்னை கண்ட மாத்திரத்தில் சரியாக கீழே விழுகிறாய். நான் தாங்கி பிடிப்பேன் என்பதாலா?”
“ஆமாம். நானும் கேட்கிறேன், அது எப்படி நான் விழும் போதெல்லாம் மிக சரியாக நீங்கள் அங்கே வருகிறீர்கள்?”
இருவருமே ஒருவரை ஒருவர் குறும்பாக பார்த்து கொண்டே சிரித்தார்கள்.
“எங்கேயோ மிகவும் வேகமாக போனீர்கள்?”
“ஆமாம். அவர்கள் தோட்டத்தில் ஒரு வேலை இருந்தது.”
“அதற்குள் வந்து விட்டேர்களே. வேலை முடிந்து விட்டதா?”
முடித்து விட்டு விரைந்து வர நான் பட்ட பாடு எனக்கல்லவா தெரியும் என்று மனதிற்குள் நினைத்து கொண்டான்.
“அவர்கள் யார்?”
“அவள் பெயர் செல்வி. இங்கே பக்கத்து கிராமத்தில் இருக்கிறாள். என்னோடு கல்லூரியில் வேலை பார்க்கிறாள்.”
“ஓ, உங்களுக்கு நல்ல தோழி போல?”
“ஆமாம். எனக்கு நல்ல தோழி தான்.” அவளையும் அந்த காலகட்டத்தையும் நினைத்தவன் பெருமூச்செரிந்தான்.
💜💜💜💜
Interesting
Interesting😍