Skip to content
Home » அந்த வானம் எந்தன் வசம்-39

அந்த வானம் எந்தன் வசம்-39

39

அருளை பற்றி அறிந்த செல்விக்கு நிவேதிதாவை பற்றி ஒன்று தெரிய வேண்டியது இருந்தது. எனவே யாசிக்கும் குரலில் நிவியை கேட்டாள்.“உங்களை ஒன்றே ஒன்று கேட்கிறேன். நீங்கள் அருளை மீண்டும் மணமுடிக்கும் எண்ணம் இருக்கிறதா? தயவு செய்து உண்மையை சொல்லுங்கள்”

இந்த கேள்வியை பத்து நாட்களுக்கு முன்பு கேட்டிருந்தால் யோசிக்கவே யோசிக்காமல் பதில் சொல்லி இருந்திருப்பாள் நிச்சயமாக அப்படி ஒரு எண்ணம் இல்லவே இல்லை என்று.  ஆனால் இன்று அப்படி அவளால் உடனடியாக பதில் சொல்ல முடியாது. மனதாலும் உடலாலும் வறண்டு போயிருந்த தன்னை இந்த பத்து பதினைந்து நாட்களில் அருள் எப்படி எல்லாம் கையாண்டான் என்று நினைத்து பார்த்து இன்று அவன் இல்லாமல் தனக்கு என்று ஒரு எதிர்காலமே இல்லை என்ற நிலையில் அவனுடைய சுய ரூபத்தை கண்டு அவனை வெறுத்து அவனிடமிருந்து விலகி பயணம் கிளம்பிய  நிவேதிதா ஒரு நிமிடம் கண்களை மூடி திறந்தவள்  நீண்ட பெருமூச்செடுத்து சொன்னாள்.

“அவனை மணமுடிக்கும் எண்ணம் மட்டுமல்ல என் வாழ்நாளில் திரும்ப ஒருமுறை அவனை பார்க்கும் துர்பாக்கியம் எனக்கு நேராமல் இருக்கட்டும்.”

“நல்லது. உங்களை எங்கள்  திருமணத்திற்கு அழைக்கலாம் என்று நினைத்து கொண்டிருந்தேன்.” இப்போது செல்வியின் முறை நிவியை கேலி செய்ய. 

ஓ அப்படியா என்று அவளின் நினைவை அறிந்து கொண்டவள் சொன்னாள். “எனக்கு நேரிட்ட துன்பத்தை நீங்கள் வலிய ஏற்று கொள்வதை காண எனக்கு சகிக்காது”

செல்விக்கு நன்றாக திருப்பி கொடுத்தோம் என்று இருந்தது நிவிக்கு. அதற்கு மேல் பேச ஒன்றும் இல்லாமல் போகவே அமைதியாக வந்தாள்

“ஏன் செல்வி, என்னிடம் இதை சொல்லவா இவ்வளவு தூரம் வந்தீர்கள்? அன்றே அருளிடம் தப்பி நான் ஓடியதை நீங்கள் பார்த்து இருந்திருப்பீர்களே. அப்போது கூட உங்களுக்கு புரியவில்லையா? பாவம் என்னிடம் அங்கேயே கேட்டிருந்தால் இவ்வளவு தூரம் வரும் சிரமம் இருந்திருக்காதே”

ஆனால் செல்விக்கு தானே தெரியும் நிவியை பற்றி அருள் எடுத்திருக்கும் தீர்மானம். அது இத்தனை நாள் அவனோடு ஊரெல்லாம் சுற்றியவள் இலவு காத்த கிளியாகி போனது என்று. 

செல்வியை நன்றாக கேலி செய்தவளுக்கு அடி மனதில் அருளின் நடிப்பை நம்பி ஏமாந்து போனோமே என்று ஒருபுறம் இருந்தாலும் நாடகமாக இருந்தாலும் நன்றாக தானே இருந்தது. இது அப்படியே நீடித்து இருக்க கூடாதா என்று ஏக்கமாகவும் இருந்தது.

தோற்று போய் வந்தேன் என்று அருள் புலம்பியதும் அது எத்தகைய வலியை கொடுக்க கூடியது என்பதும்  இப்போது நிவிக்கே  புரிந்தது.

ஏனெனில்…..!

நிவேதிதாவும் இன்று தோற்று போய் தான் போய் கொண்டிருக்கிறாள். அந்த வலி எப்படி இருக்கும் என்று வலியினால் துடித்து கொண்டே தான் போகிறாள்.  

“ஏன் நிவி, இன்று மாலை வேலை முடிந்ததும் உடனே கிளம்பி விடாதே. எனக்காக காத்திரு. நானும் வருகிறேன்”

“சரி லலிதாக்கா.”

ஆனால் சொன்னதற்கு மாறாக மாலையில் லலிதா தான் நிவிக்காக காத்திருக்கும் படி ஆயிற்று. நிவி தாமதமாக தான் வந்தாள். இருவரும் வழக்கமாக தாமதமாக கிளம்பும் நாட்களில் என்றேனும் டீ அருந்தும் டீ ஷாப்பில் அன்றும் நுழைந்தார்கள்.

“ஒரே தலைவலி நிவி.”

“ம்.”

“என்ன சுரத்தே இல்லாமல் இருக்கிறாய்?”

“இல்லையே”

“நானும் கடந்த மூன்று மாதங்களாக பார்த்து கொண்டே தான் இருக்கிறேன். நீ ஊருக்கு போய் வந்ததிலிருந்து என்னவோ பிரமை பிடித்தது போலவே இருக்கிறாய். ஊரில் என்ன ஆச்சு?”

“ஊரில் என்ன…? ஊரில் என்ன ஆச்சு?”

“கேள்வி கேட்டால் பதில் சொல்லணும். திரும்ப என்னையே கேள்வி கேட்க கூடாது”

“கோவிச்சிக்காதீங்க. என்னமோ ஞாபகம். என்ன கேட்டீங்க?”

“அதை தான் கேட்டேன். எங்கே உன் ஞாபகம்?”

“அதெல்லாம் ஒன்னும் இல்லைக்கா. ராம் கொடுத்த வேலையில் செய்து முடிக்காமல் விட்டது பாதி இருக்கிறது. அதை பற்றி யோசித்து கொண்டிருக்கிறேன்.”

“ஆஹாஹா. எப்படி சமாளிக்கிறே? கடந்த மூன்று மாதங்களாக என்னவோ பேயறஞ்ச மாதிரி இருக்கே. அதை பற்றி கேட்டால் என்னமாக சமாளிக்கிறே”

டீ வந்தது. தனக்கு ஒரு கப்பை எடுத்து கொண்டு மற்றதை நிவியின் அருகாமையில் நகர்த்தி விட்டு மீண்டும் கேட்டாள். இப்போது நிவிக்கு மறுப்பு சொல்ல முடியவில்லை. நிவியின் அந்தரங்கம் முழுதும் அறிந்தவள் லலிதா. மூன்று வருடங்களுக்கு முன்பு நிவி தில்லிக்கு வந்த புதிதில் அவளுக்கு நண்பனாக, நல் ஆசிரியனாக, தாயாக, தந்தையாக, சகோதரியாக எல்லாமுமாக இருந்தவள் லலிதா. அவள் அறியாத விஷயம் ஏதும் இல்லை நிவியிடம்.

“அருளை பார்த்தேன்”

“அருள்………..உன் முன்னாள் கணவரையா?”

‘ஆமாம்.”

“எங்கே?”

“ஊரில்”

“ஏதும் தொல்லை செய்தானா?”

“இல்லை.”

“ஏய், வெறுப்பேற்றாமல் என்ன நடந்தது என்று முழுமையாக சொல்.”

சொன்னாள். மூன்று வருடம் கழித்து பார்த்த அருள் இன்று எப்படி இருக்கிறான் என்று சொன்னாள். அவன் பார்வையை அவன் விருப்பத்தை அது எந்த அளவு தன்னை பாதித்தது என்பதை எல்லாம் சொன்னாள்.

“நல்ல விஷயம் தானே. அதற்கு ஏன் இப்படி இருக்கிறாய்?’”

பதில் சொல்லாமல் லலிதாவையே உற்று பார்த்தாள். அவள் சிந்தனை எங்கோ தொலை தூரத்தில் இருந்தது. 

நிவி என்று அவளை பிடித்து உலுக்கினாள் லலிதா.

பின் தொடர்ந்து சொன்னாள் நிவி. அருளின் அறையில் அவளுடைய புகைப்படம் இருந்ததையும் அது ஏன் அங்கே இருந்தது என்பதையும் செல்வியை பற்றி அருளே சொன்னவைகளும் செல்வியை பேருந்தில் சந்தித்ததையும் சொன்னாள். கேட்டு கொண்டிருந்த லலிதா அவளை கேட்டாள்.

“அது தான் எல்லாம் முடிந்து போய் விட்டதே. பிறகு ஏன் அதையே நினைத்து கொண்டிருக்கிறாய்?”

“அது தான் எனக்கும் புரியவில்லை.”

அவளை பரிவோடு பார்த்த லலிதா அவள் தோளில் கையை வைத்து அவள் முகத்தை நன்றாக நிமிர்த்தி கண்களை உற்று பார்த்து மென்மையாக  கேட்டாள்.

“நிவி. நீ அருளை விரும்புகிறாயா?”

இந்த கேள்விக்கு பதில் சொன்னாளில்லை. கண்கள் தாரை தாரையாக கண்ணீரை சிந்தியது. அது தானே தொன்று தொட்டு உலக இயல்பு. வாய் வேலை செய்ய முடியாத நேரத்தில் கண்கள் தானே கண்ணீரை கொட்டும் வேலையை செய்யும்.

“பைத்தியக்காரி, நீ அவரை விரும்புகிறதை அவரிடம் சொன்னாயா?”

மறுப்பாக தலையசைத்தாள் நிவி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *