4
யாரிடமும் இனிமையாக தன்மையாக மிகவும் மரியாதையாக நடந்து கொள்பவள். அதிலும் தொழிலே அவளுக்கு மார்கெட்டிங் என்று ஆனதால், எல்லோரையுமே கஸ்டமரை போன்றே நடத்துவாள். பண்பாடானவள்.
அவளுடைய இருபத்தி மூன்றாவது வயதில் அவளுக்கு திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்று தீவிரமாக தான் மாப்பிள்ளை பார்த்து கொண்டிருந்தார்கள். ஆனால் அந்த நேரத்தில் காஞ்சனா சண்டையிட்டு வீட்டிலிருந்து பிரிந்து போன நேரம். பெற்றோர்களுக்கு அந்த பஞ்சாயதிற்கே நேரம் சரியாக இருந்தது. அதில் பாதி காலம் போனது.
மணிமாலா திருமணம் முடிந்து மூன்று வருடங்களாகியும் பிள்ளை இல்லாமல் இருந்ததால் அவள் கணவனின் பாராமுகமும் மாமியாரின் நச்சரிப்பும் தாங்காமல் அவள் பிறந்த வீட்டிற்கு வந்து விட்டாள். பிறகு பெரியவர்களை வைத்து பேசி அவளை கணவன் வீட்டிற்கு அனுப்பி வைக்க போதும் போதும் என்றாகி விட்டது அவர்களுக்கு. ஒருவழியாக மணிமாலா கருத்தரித்து அதன் பின் தொடர்ச்சியான சடங்குகளுக்கும் பிள்ளை பேறுக்கும் என்று அலைச்சல். அதில் மீதி காலம் போனது. என்ன தான் செய்வார்கள் நிவியின் பெற்றோர்கள். சாருவின் படிப்பு வேலை அதற்கான செலவு அலைச்சல் என்று கொஞ்சம் இடைவெளி அதிகமாகவே போய் விட்டது.
இந்த இடைப்பட்ட நேரத்தில் அக்காவுடையதும் அண்ணனுடையதுமான திருமண வாழ்க்கையை பார்த்து வெறுத்து போய் அவர்கள் இருவராலும் பெற்றோர் பட்ட பாட்டை கண்டு திருமணத்தில் நாட்டம் இல்லாமல் போய் விட்டிருந்தது நிவிக்கு.
நம்மாலும் அவர்களுக்கு எந்த வகையிலும் கஷ்டம் வரக் கூடாது என்பது அவளுடைய எண்ணம். ஆனால் பிள்ளைகளுக்காகவே வாழ்வது ஒன்று தான் பெற்றோருக்கு மன நிம்மதியை தரும் என்றும் அதற்காகவேனும் நிவி திருமணம் செய்து கொள்ள வேண்டியது அவசியம் என்று மீண்டும் மீண்டும் சொல்லி சொல்லி உருவேற்றி அவளை திருமணதிற்கு சம்மதிக்க வைப்பதற்குள் பெற்றோருக்கு பெரும்பாடாய் போயிற்று.
அதிலும் கடந்த ஒரு வருட காலமாக மணிமாலாவின் குடும்பமும் கலையரசனின் குடும்ப வாழ்வும் எந்த பிரச்சினையும் இல்லாமல் போய் கொண்டிருப்பதால் ஒருவழியாக திருமணதிற்கு சம்மதித்தாள் நிவி. ஆனால் அவளை பார்க்க வந்த மாப்பிள்ளைகள் ரொம்ப சப்பையும் குப்பையுமாக வரவே மனதளவில் ரொம்பவே வெறுத்து போய் இருந்தாள். இனி இத்தகைய பெண் பார்க்கும் சடங்குகளுக்கு ஒப்பு கொள்ளவே மாட்டேன் என்றும் அதிலும் இதற்காக இனி ஊருக்கே வரப்போவதில்லை என்றும் உறுதி பட சொல்லி விட்டதால் தான் இன்று இங்கே அவளை பெண் பார்க்க ஏற்பாடு செய்து விட்டு அவர்கள் யாரும் கூட இருந்து நடத்தி வைக்க வராமல் பின்னால் மறைந்து கொண்டார்கள்.
அது மட்டுமல்லாமல் காலையில் அவளுடைய தங்கை சாரு போன் செய்து சொன்ன விவரங்கள் மனதிற்குள்ளே அப்படியே இருந்தது.
கெஞ்சும் குரலில் சாரு சொன்னாள், “அக்கா இந்த வரனை வேண்டாம் என்று சொல்வதற்கு முன்பு என்னை ஒரு நிமிடம் நினைத்து பார். நீ அவசியம் இந்த கல்யாணத்திற்கு ஒப்பு கொண்டே ஆக வேண்டும் எனக்காக.”
“நிவி பெரிய மனது வை. இந்த பையன் நீ விரும்பியது போலவே பெரிய படிப்பெல்லாம் படித்திருக்கிறான். அப்பா அம்மாவிற்கு ஒரே பையன். திருவண்ணாமலை பக்கம் கிராமம். ஆனால் அவன் இங்கே சென்னையில் மேல் படிப்பு படித்து கொண்டிருக்கிறான். நீ இருக்கும் இடத்தில தான் கல்லூரியில் வேலை செய்து கொண்டே படிக்கிறான். எல்லாம் நீ கேட்டது போலவே அமைந்து விட்டது. ஜாதகமும் பத்து பொருத்தமும் பாந்தமாக இருக்கிறது.”
அம்மா திரும்ப திரும்ப அவன் அதிகம் படித்திருப்பதையே சொல்லி கொண்டிருந்தாள். என்னவோ நிவிக்கு படிப்பு மட்டும் தான் முக்கியம் என்று நினைத்து கொண்டு.
ஆனால் நிவியின் மனது சொல்லியது அவளுடைய அம்மாவின் காதில் விழுந்திருக்காதே. “என்ன பெரிய படிப்பு அம்மா. பையன் பார்க்க நன்றாக இருக்க வேண்டும்.”
உண்மையில் பையனின் அம்மாவின் ஊர் தான் திருவண்ணாமலை பக்கம் ஒண்டிபாளையம் என்னும் கிராமம். ஆனால் அவனுடைய அப்பாவிற்கு திருச்சி பக்கம் புதுக்குடி என்னும் கிராமம் என்பதும் அது நிவியின் தந்தையின் பூர்விக கிராமம் என்பதும் அவனுடைய தாத்தாவை அவருக்கு தெரிந்திருந்ததும் ஒரு காரணம், நிவிக்கு இந்த மாப்பிள்ளையை பார்ப்பதற்கு.. இருவருடைய தந்தைக்கும் ஒருவரை ஒருவர் தெரிந்திருந்தது. இருவருக்குமே பூர்விக கிராமத்துடன் தொடர்பில் இல்லாமல் இருப்பதும் பொது காரணமாக இருந்தது.
ஆக, எல்லா வகையிலும் இந்த திருமணம் நடந்தேற வேண்டும் என்பதில் பெரியவர்கள் மிகுந்த ஆவலுடனே இருந்தார்கள். சின்னவளான சாரு அவசியத்தில் இருந்தாள்.
படியில் இறங்கி வந்தவளை கண்டதும் நின்று கொண்டிருந்தவன் மீண்டும் ஒருமுறை முறுவலித்தான். நீண்ட சோபாவில் நடுத்தர வயதில் தாய், நல்ல கிராமத்து பெண்கள் போல ஒத்தை நாடியாக உழைத்து உரமேறிய உடல்வாகுடன் இருந்தாள். தந்தை நாலு முழம் வெள்ளை வேட்டி வெள்ளை அரைக்கை சட்டை அணிந்து வெள்ளை மேல் துண்டு போட்டு ஒரு விவசாயி என்று பார்த்த மாத்திரத்தில் கண்டு கொள்ளும் வகையில் இருந்தார். நெற்றியில் வீபூதி பட்டையும் கண்களில் ஒரு சாந்தமும் மிகவும் அமைதலானவர் போலும். அக்கா போலும் கொஞ்சம் கிராமத்து சாயல் இருந்தது. கண்களில் ஒரு குறுகுறுப்பு இருந்தது.
அவள் அருகில் ஒருவன் அவளுடைய கணவன் போலும் தலையை படிய வாரி கண்களில் கண்ணாடி அணிந்து இந்த கால நாகரீகத்திற்கு சற்றும் பொருந்தாமல் நல்ல கிராமத்தான் போல இருந்தான். கிட்டத்தட்ட தொம்மை போல என்றால் சரியாக இருக்கும். கையில் ஒன்றரை வயது ஆண் குழந்தை அவன் கவனத்தை கலைத்து கொண்டிருந்தது. ஆனால் அதையும் மீறி நிவியை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தான்.
Interesting😍