7
எனக்கு கல்யாணமே ஆகவில்லை என்றாலும் கூட பரவாயில்லை. ஆனால் நிச்சயமாக இந்த தொம்மையை கண்டிப்பாக நான் கட்ட மாட்டேன்”என்றாள் பிடிவாதமாக.
“கல்யாணத்தை நிறுத்த என்ன காரணம் சொல்வது?” என்று அதீத நிதானமாக கேட்டாள் நிவியின் அம்மா.
“சொல்லு. மாப்பிள்ளையை பிடிக்கவில்லை என்று”
“அப்படியே கூடவே சொல்கிறேன். என் பெண் அடுத்தவள் புருஷனை தான் மாப்பிள்ளை என்று நினைத்து பார்த்தாள் என்று”
“என்னம்மா, நீயே இப்படி அபாண்டமாக சொல்கிறாய். அவள் அடுத்தவன் புருஷன் என்று எனக்கு எப்படி அம்மா தெரியும்?”
“வாயிருக்கிறது தானே. படித்தவளும் கூட. அவர்கள் அறிமுகப்படுத்தி வைக்கவில்லை என்றால் என்ன? நீயாக கேட்டு தெரிந்து கொண்டிருந்திருக்கலாம் இல்லையா? நீ சொல்வதெல்லாம் ஒரு காரணமா?”
அவள் தாய் கேட்டதில் நியாயம் இருக்கிறது. இவள் கேட்டு தெரிந்து தெளிந்து இருந்திருக்கலாம். ஏன் அப்படி செய்யாமல் போனோம்? உடை மாற்றி கொள்ள போனதில் அதிலும் புடவையை சுற்றி கொள்ள முயன்றதில் சற்று நேரம் அதிகப்படி ஆனதினாலும் அந்த கைக்குழந்தை நசநசவென்று அழுது கொண்டே இருந்ததினாலும் சூழ்நிலை இறுக்கமாக போய்விட்டிருந்தது. அவர்களும் மேற்கொண்டு ஏதேனும் கேட்கனுமா என்று கேட்டார்களே. நாம் தான் அந்த குழந்தையின் அழுகையில் எரிச்சலுற்று எதையும் கேட்க மறுத்து விட்டோம். எல்லாவற்றுக்கும் மேலாக நாம் எதிர்பார்த்தது போல அந்த நெடியவன் இருக்கவும் நாமாகவே அவன் தான் மாப்பிள்ளை என்றே தீர்மானித்து விட்டோம்.
அவளுடைய நியாய புத்தி அவளின் எல்லா கேள்விக்கும் பதில் சொல்லியது என்றால் அவளுடைய அறிவு அதற்காக இந்த தொம்மையுடன் எப்படி வாழ் நாளெல்லாம் சேர்ந்து வாழ முடியும் என்று எதிர் கேள்வி கேட்டது.
அவனும் ஆளை விழுங்குவது போன்ற அவன் பார்வையும். சகிக்கவில்லை.
அந்த நினைவில் முகம் கோணி உடல் சிலிர்த்து தலையை உலுப்பி கொண்டவளை அவளுடைய தாயும் சகோதரிகளும் பார்த்து கொண்டு தான் இருந்தார்கள்.
அவளுடைய சிந்தனையில் ஓடிய எண்ணங்களை அருகில் அமர்ந்து அவளையே பார்த்து கொண்டிருந்த அவளுடைய தாய் அவள் காதருகில் குனிந்து மெல்ல சொன்னாள்.
“நிவி, உனக்கு விருப்பம் இல்லாமல் இந்த கல்யாணத்தை நடத்த வேண்டி இருக்கிறது. என்னை மன்னித்து விடம்மா.”
அதை ஏன் இவ்வவளவு ரகசியமாக இத்தனை அருகில் வந்து சொல்கிறாள் என்று நிமிர்ந்து தாயை பார்த்த நிவியை நான் சொல்வதை சரியாக புரிந்து கொள்ளேன் என்று பார்த்தாள் அந்த தாய்.
“ஏனம்மா, அப்படி என்ன கட்டாயம்?”
எடுத்தெறிந்து பேசாமல் அவளுடைய தாயின் ரகசியத்தில் பங்கு கொண்டவளாக அவள் கேட்டாள், என்னவோ அவசியம் இருக்கிறது என்பதை புரிந்து. துக்கம் தொண்டையை அடைத்த குரலில் சொன்னாள் அம்மா.
“சாரு”
“சாரு! சாருக்கு என்ன?”
இந்த கேள்விக்கு அன்னை பதில் சொன்னாளில்லை. நிவேதிதாவின் அருகில் வந்து நின்ற அக்கா மணிமாலாவும் அவளுடைய காலை பிடித்து கொண்டு உட்கார்ந்த தங்கை சாருவும் அவளுக்கு எதையோ உணர வைத்தார்கள்.
அக்கா மணிமாலா தான் பதில் சொன்னால் தந்தி பாஷையில்.
“சாரு!”
“யார்?”
“சிவா தான்.”
“எந்த சிவா?”
“எந்த சிவா?” இகழ்ச்சியுடன் சொன்னாள்.
“நம் அருமை அத்தை மகன் சிவா தான்”
“நம் சிவகாமி அத்தையின் மகனா?”
“அவள் ஒருத்தி தானே நமக்கு அத்தை”
“சரி. ஆனால் அவர்கள் எங்கோ திருச்சிக்கு பக்கத்தில் இருப்பவர்கள். நமக்கும் அவர்களுக்கும் அவ்வளவாக போக்குவரத்து கிடையாது. பின் எப்படி?”
“நல்லா கேளு அந்த சின்ன சனியனை.”
“சொல்லு. பண்றதை எல்லாம் பண்ணி விட்டு இப்போது அவளுடைய காலை பிடித்து கொண்டு உட்கார்ந்திருக்கிறாய்”
தலையை குனிந்து கொண்டிருக்கும் சாருவின் மோவாயை விரலால் நிமிர்த்தினாள் நிவி.
“சொல்லு.”
“அக்கா.!”
“சும்மா அழாதே. செய்வதையும் செய்து விட்டு என்ன அழுகை. சொல்லு”
“என்னோடு பெங்களூருவில் பழக்கம்.”
“எந்த அளவிற்கு?” தாங்கமாட்டாமல் மணிமாலா கேட்கவும் திகைப்புற்று நிவி பதறியவளாய் சாருவின் முகத்தை பார்த்தாள்.
“அக்கா.” குத்துபட்ட வலியுடன் கதறினாள் சாரு.
அழும் அவளையே பரிதாபமாக பார்த்த நிவியை பார்த்து மணி சொன்னாள். “மூன்று மாதம்”
அம்மா புடவை தலைப்பால் கண்களை துடைத்து கொண்டு மூக்கை உறிஞ்சினாள். இப்போது புரிந்ததா என்று நிவியை பார்த்தாள். மனம் ஒரு நிமிடம் அம்மாவிற்காகவும் சாருவிற்காகவும் பரிதாபபட்டாலும் அந்த தொம்மையை நினைத்த மாத்திரத்தில் அதை உதறி கொண்டாள்.
“சரி, இப்போது அதற்கு என்ன? நாம் முதலில் சாருவின் திருமணத்தை முடித்து விடலாம்”
அவ்வளவு தானே. பிரச்சினைக்கு தெளிவாக பதில் சொன்னாள் நிவி.
இன்றைய இந்த நிமிட பிரச்சினையிலிருந்து முதலில் நாம் தப்பி விட மாட்டோமா என்ற அவள் கவலை அவளுக்கு.
இந்த பிரச்சினையின் முடிவு அவ்வளவு சுலபமானதா?
ஆனால் நிவேதிதாவிற்கு வாழ்க்கை என்னவிதமான புதிர்களையும் எத்தகைய திருப்பங்களையும் வைத்திருக்கிறதோ?
Nice epi👍👍