14
என்னை பார்த்து விட்டு தானே கல்யாணத்திற்கு சம்மதித்தாய்?என்று கேட்டான் அருள்.
இந்த கேள்வி கேட்பான் என்று எதிர்பார்த்து இந்த தடவை சரியான பதிலை யோசித்து வைத்திருந்தாள். “நீ என்னை பெண் பார்க்க வந்த போது சோபாவில் உட்கார்ந்து இருந்தாய். அதனால் உன் முகத்தை மட்டும் தான் பார்த்தேன். உன் பெர்சனாலிட்டி தெரியவில்லை.” என்றாள் இப்போ என்ன அதுக்கு என்றது பார்வை.
“எழுந்துக்க சொல்லி பார்த்திருக்கலாம் தானே”
“செய்திருக்கணும். ஆனால் செய்யலை. அது தப்பு தான்”
“இதெல்லாம் ஒரு காரணமா நிவி. நாம் சேர்ந்து வாழ தொடங்கி விட்டால் காலப்போக்கில் ஒருவரை ஒருவருக்கு மிகவும் பிடித்து விடும். ஏன், ஒருவர் இல்லாமல் ஒருவரால் வாழவே முடியாது என்றாகி விடும்.”
“அதெல்லாம், ஒருவரை ஒருவர் பிடித்து கல்யாணம் செய்து கொள்பவர்களுக்கு.”
“நமக்கு கூட அப்படி ஆகி போகும். தாலி கயிற்றின் மேஜிக் அப்படி”
“இந்த மஞ்சள் கயிற்றின் மகிமை, சினிமா கதை எல்லாம் பேசாதே. எனக்கு ஒருநாளும் உன்னை பிடிக்கவே பிடிக்காது.”
“எப்படி அத்தனை உறுதியாக சொல்கிறாய்?”
“இங்கே வா”
“……..”
“சட்டையை கழட்டு”
“……….”
“கண்ணாடியில் பார்’”
அவன் சட்டையை கழட்டி விட்டு ஆளுயர கண்ணாடியில் பார்த்தான். சராசரி உயரத்தை விட கொஞ்சம் கூடுதல் உயரம். கோதுமை நிறம். என்ன சற்று குண்டாக இருக்கிறான் தான். ஆனால் முகம் அழகாக இருக்கிறதே. ஆனால் இவளின் வெறுப்பின் காரணம் புரியாத குழப்பம் கண்களில் இருந்தது. அது முகத்தின் சோபையை குறைத்து காண்பித்தது. அவள் அவன் அருகில் வந்து இடுப்பில் சதை மடிப்பை கையால் பிடித்து அவனிடம் காண்பித்தாள்.
“சொல்றேன்னு கோவிச்சிக்காதே. எனக்கு சொல்ல கஷ்டமாக தான் இருக்கு.”
அவனுக்குமே, கண்ணாடியில் அவன் உருவத்தை பார்க்க பார்க்க கொஞ்சம் அசூசையாக தான்
இருந்தது. இந்த அம்மாவை சொல்லணும். ஒரே ஒரு பையன் என்று பாலும் தயிருமாக கொடுத்து உருண்டு திரண்டு வளர்த்து வைத்திருக்கிறாள்.
“நல்லா, நூறு கிலோ அரிசி மூட்டை மாதிரி இருக்கியே. உன்னை எந்த பெண்ணுக்கு தான் பிடிக்கும்?”
அவள் அப்படி சொல்லும் போது அறையலாம் போல இருந்தது. ஆனால் அவள் சொல்லுவதும் உண்மை தானே. இவளை போன்ற பேரழகிக்கு தன்னை பிடிப்பதற்கு கொஞ்சமும் வாய்ப்பில்லை தான். இதை நான் ஏன் முன்பே யோசிக்காமல் விட்டேன்?
ஆம். யோசிக்க இயலாதவகையில் அவளுடைய பேரழகு அவனை மூச்சு திணற வைத்து விட்டது. இத்தனை அழகும் நம்மை கல்யாணம் செய்து கொள்ள சம்மதிக்கிறதே என்று மதி மயக்கம் ஆகி போனது. ஆசை கொண்ட மனது அறிவை அடக்கி விடுவது இயல்பான ஒன்று தானே. அவனுடைய அறிவோ சுத்தமாக முடங்கி போனது தான் நிஜம்.
அசந்தர்ப்பமாக அவனுக்கு அம்மாவின் நினைவு வந்தது. எத்தனை பெண்களை பார்த்து விட்டு வந்து இவள் குள்ளம் இவள் குட்டை இவள் நெட்டை என்று ஏதேதோ அல்ப காரணங்கள் சொன்னாள்.
சிறுவயதில் செவி வழி கதை கேட்டது நினைவிற்கு வந்து சிரிப்பு வந்தது.
நாம் சாப்பிடும் உணவை கீழே சிந்தினால் அந்த அரிசி சோறு ஊர் கோடியில் இருக்கும் குளக்கரையில் போய் உட்கார்ந்து கொண்டு அழுமாம். அதன் அழுகையை கேட்ட கடவுள் சோற்றை சிந்தினவனுக்கு சாப்பிட சோறு கொடுக்க மாட்டாராம். ஆகையினால் சோற்றை சிந்தாமல் சிதறாமல் சாப்பிட வேண்டும் என்பார்கள்.
அது போல இவன் தாயால் அல்ப காரணங்களுக்காக நிராகரிக்க பட்ட பெண்களின் அழுகையும் சாபமும் தான் இன்று தன்னுடைய இந்த நிலைக்கு காரணமாக இருக்குமோ? என்று நினைத்து சிரித்து கொண்டான்.
இதற்கு தானே ஆசை பட்டாய் அருள் மொழி வர்மா.
இவள் மட்டும் நம்மை ஒரு சிறு கடுகளவு அன்பு செய்தால் எத்தனை நன்றாக இருக்கும் என்று கற்பனை செய்தவண்ணம் அருகில் இருந்த சோபாவில் போர்வையால் போர்த்தி கொண்டு படுத்தான்.