6
திருவண்ணாமலை அருள்மிகு. அருணாசலேஸ்வர் பெரிய கோயிலில் முருகன் சன்னதியின் முன் கூடியிருந்தது அருளின் உறவினர் கூட்டம். பெண் வீட்டார் வர வேண்டியது தான். அலங்கரிக்கப்பட்ட சாரட் வண்டி கோயிலின் வெளியே நிற்கிறது. பெண் வந்ததும் சீர் வரிசை தட்டுக்களை வைத்து கும்பிட்டு கிளம்ப வேண்டியது. மண்டபத்தில் இரவு நிச்சயம். காலையில் முதல் முஹூர்த்தம். ஆறு ஏழரை.
போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்ட நிவியின் பேருந்து மெல்ல அதிலிருந்து மீண்டு ஒருவழியாக கோயிலின் பக்கவாட்டில் பார்க்கிங் செய்யப்பட்டு எல்லோரும் இறங்கி அவசர அவசரமாக சற்று விரைந்தே நடந்து வந்தார்கள்.
கோயிலின் முகப்பில் அவன் நின்று கொண்டிருந்தான். எல்லோரையும் வழிகாட்டி அழைத்து சென்றான். குந்தவை நிவிக்கு மாலை போடவும் வானதி சந்தனம் குங்குமம் இடவும் செய்தார்கள். நிவியின் அண்ணன் கலையரசன் மாப்பிள்ளைக்கு மாலையிட முன்னே வந்தான். அதுவரை கூட்டத்தின் நடுவில் நின்று கொண்டிருந்த மாப்பிள்ளையை அவன் தந்தை அருள் என்று அழைக்கவும் நிவி நிமிர்ந்து அந்த நெடியவனை பார்த்தாள். அப்போதும் அவன் அவளை பார்த்து மையமாக புன்னகைத்தான். இவளும் அவனை பார்த்து முறுவலித்தாள்.
“மாப்பிள்ளை, தலையை சற்று குனியுங்கள். இப்படி நிமிர்ந்து நின்றால் எப்படி மச்சான் மாலையிடுவார்?”
கூட்டத்தில் யாரோ நிகழ்ச்சியை கலகலப்பாக்கி கொண்டிருந்தார்கள்.
நிவியும், அண்ணனை விட இவர் உயரம். அதனால் தான் அண்ணன் தடுமாறுகிறான் என்று
நினைத்து கொண்டே குரல் வந்த திசையில் பார்த்தாள்.
என்ன ஒரு பேரதிர்ச்சி.!
பட்டு வேட்டி பட்டு சட்டையில் நிவேதிதாவின் எதிரில் நின்று கொண்டிருந்தது அந்த தொம்மை. அவளை பார்த்து காதுவரை சிரித்தான்.
ஒருநிமிடம் அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. இவனா.? இவனா? எப்படி.? இவனா மாப்பிள்ளை! அடக் கடவுளே. அதிர்ச்சியுடன் அருகில் நின்று கொண்டிருந்த நம்ரூவை பார்த்தாள். அவளும் கூட நம்ப மாட்டாமல், திகைத்த விழிகளுடன் அவனை பார்ப்பதும் மீண்டும் இவளை பார்ப்பதுமாக இருந்தாள்.
அப்படியானால் தான் மட்டும் அந்த நெடியவனை மாப்பிள்ளை என்று நினைக்கவில்லை. இதோ இந்த நம்ரூவும் தான் அப்படி நினைத்திருக்கிறாள். தான் மட்டும் அப்படி நினைத்திருந்தால் தவறு தன்னுடையது தான். இவளும் அப்படி நினைத்து இருந்திருக்கிறாளே. அப்படி என்றால் அவர்கள் தான் வேண்டும் என்றே திட்டமிட்டு அவளை நம்ப வைத்து மோசம் செய்திருக்கிறார்கள்.
ஐயோ கடவுளே, ஏமாந்து விட்டோமே. இப்போது என்ன செய்வது?
அவள் மேற்கொண்டு யோசிக்கும் முன் அவளை அவனுடைய சகோதரிகள் இருவரும் இருபுறமும் அண்டை கொடுத்து ஊர்வல வாகனத்திற்கு அழைத்து சென்றார்கள். நாதஸ்வர மங்கல இசை அந்த சூழ்நிலையை அடியோடு மாற்றி இருந்தது.
அன்றிரவு நடந்த சடங்குகளில் அவளுடைய விருப்போ வெறுப்போ இன்றி அவள் கொண்டு செலுத்தப்பட்டாள். எல்லாம் முடிந்து இரவு, மண்டபத்தில் அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்டிருந்த பகுதியில் தாயிடம் மல்லுக்கு நின்றாள்.
“நான் என்ன செய்ய. நீ மாப்பிள்ளையை பார்த்து சம்மதம் என்று சொன்ன பிறகு தானே நாங்கள்
கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்தோம்”
“நான் அந்த மற்றொருவனை அல்லவா மாப்பிள்ளை என்று நினைத்தேன்.”
“யாரு.?”
“உயரமாக நல்ல நிமிர்வாக இருந்தானே. அவன் தான்”
“அய்யயோ, அது மாப்பிள்ளையின் அக்கா புருஷன்.”
“எனக்கு என்ன தெரியும்? அவர்கள் அறிமுகப்படுத்தவில்லை. அந்த அளவிற்கு கூட அடிப்படை நாகரிகம் தெரியாதவர்கள்”
“அதற்காக நீயாகவே தப்பான ஆளை மாப்பிள்ளை என்று நினைப்பாயா?”
“நான் வரும் போது அவன் தான் என்னை பார்த்து சிரித்தான்”
“ஆமாம். அவன் உனக்கு அண்ணன் முறை ஆக வேண்டும். அதனால் ஒரு சகோதர வாஞ்சையில் சிரித்திருப்பான். அதை கூடவா உன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.”
உண்மை தான். அவன் சிநேகமாக தான் அவளை பார்த்து புன்னகைத்தான். ஆனால் இவனோ நம்மை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டே இருந்தானே. நாமும் இவன் பார்வையின் பொருள் விளங்காமல் எரிச்சல் பட்டோமே.
“அதுக்கு தான் போட்டோ கேட்டேன். கொடுத்திருந்திருக்கலாம் இல்லே”
“எப்போ போட்டோ கொடுத்தாலும் அதை பார்த்து விட்டு எதாவது சொல்லி கல்யாணத்திற்கு சம்மதிக்க மாட்டேன் என்றாய்.”
“அதற்காக இப்படி என்னை பழி வாங்குவியா அம்மா”
“பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதே. யாராவது பெத்த பெண்ணையே பழி வாங்குவாங்களா?”
“நீங்க யாராவது பெண் பார்க்க வந்த அன்றே, கூட இருந்திருக்கலாம் இல்லே.”
“பயம் தான். நீயும் ஊருக்கு வர மறுத்து விட்டாய். சென்டிமென்டலா நாங்கள் கூட இருக்கும் வரை எந்த வரனும் உனக்கு குதிராதுன்னு நினைத்தோம். அதற்கேற்றார் போல நாங்கள் கூட இல்லாமல் இருந்ததால் தானே நீயும் இந்த வரனுக்கு சம்மதித்தே”
“என்னது, நான் இவனை கல்யாணம் செய்துப்பேன் என்றா நினைத்தாய்?”
“அடிப்பாவி, என்னடி இப்படி சொல்றே?. விடிஞ்சா கல்யாணம். மேடை வரை வந்து விட்டு கல்யாணம் நின்னு போனால் அவனுக்கு மட்டுமல்ல அது உனக்கும் தானே அசிங்கம்”
“அம்மா, எனக்கு கல்யாணமே ஆகவில்லை என்றாலும் கூட பரவாயில்லை. ஆனால் நிச்சயமாக இந்த தொம்மையை கண்டிப்பாக நான் கட்ட மாட்டேன்”என்றாள் பிடிவாதமாக
Nice epi😍😍