நினைவில் மட்டுமே நீ
பள்ளியில் சேர்த்தாய்
கடமை முடித்தாய்
முடிந்தது கடமை என்று
வாழ்வின் முடிவுக்கு சென்றாய்
நினைவில் மட்டுமே நீ
பள்ளியில் தோழியரின்
தந்தை பற்றி ஆனந்த கூற்றில்
தவிப்புடன் தேடினேன்
நிந்தன் நினைவுகளை
நினைவில் மட்டுமே நீ
உன் உரு தேடினேன்
புகையாய் இருந்து
தெளிவாய் தேடிட விழைந்தேன்
கண்டேன் புகைப்படம் அதில்
புன்னகையுடன் இருந்தாய்…….
நினைவில் மட்டுமே நீ
2021 தந்தையர் தினம் அன்று முதன்முதலில் பிரதிலிபியில் பதிப்பித்தது.
அதற்கு முன் தோன்றும் போதெல்லாம் ஏதாவது கிறுக்கி கொண்டு தான் இருப்பேன்.
இதில் எழுதியது போல என் அப்பாவின் முகம் எனக்கு நினைவில்லை. புகைப்படங்கள் பார்த்துதான் அப்பாவை தெரிந்து கொண்டேன். என் பதினோராம் வயதில் அப்பா இறந்துடாங்க. அதற்கு முன்பும் எனக்கு நினைவில்லை. இன்றைய பிள்ளைகள் அவர்களின் சிறுவயதில் அவர்கள் அப்பாவுடன் உள்ள நிகழ்வை சொல்லும் போது, என்னை நினைத்து வெட்கம் கொள்வேன்.
பின்னர் இவர்களை போல் நான் என் அப்பாவுடன் இருந்தது இல்லை என்று புரிந்து என்னை தேற்றிக் கொள்வேன்.
முன்பு தந்தையர் தினம், அன்னையர் தினம், மகளிர் தினம் என்றெல்லாம் எதுவும் தெரியாது. இப்போது ஃபேஸ்புக் வந்த பிறகு அனைத்து தினங்களும் தெரிகிறது. வாழ்த்துகள் பகிரப்படுகிறது. மகிழ்ச்சியாக இருந்தாலும், இன்று என்னருகில் அப்பா இல்லையே என்ற ஆழ் மனதில் உள்ள வருத்தம் மேலெழும்பி ஒரு அழுத்தத்தை தருகிறது. இதை எழுதும் போது கூட கண்கள் கலங்குகிறது.
அப்பாவின் இழப்பு பிள்ளைகளுக்கு மீளா துயரம் தான்.
அதுவும் பெண் பிள்ளைகளுக்கு அது பேரிடி. அவர்களின் முதல் ஹீரோ அல்லவா…
அதுவும் பதினொன்றாம் வயதில் தகப்பனை இழந்த என் போன்றோரின் நிலைமை…..
எட்டு பிள்ளைகள் இருக்க, வீட்டில் சம்பாதிக்கும் ஒரே ஜீவனான என் தந்தை இறந்ததும் நாங்கள் தவித்து போனோம்.
அதன்பின்னர் ஒவ்வொருவராக தலையெடுக்க இன்று இருக்கும் ஆறு பேரும் நல்லவிதமாக வாழ்வதை பார்க்க நீங்கள் இல்லையே அப்பா.
தெய்வமாக இருந்து எங்களை கவனித்து காத்தருள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்து கொண்டு இருக்கும் உங்கள் அன்பு மகள்
– அருள்மொழி மணவாளன்
Super👏
நன்றி 😊😊