13
கௌதமிற்கு உள்ளூர கோபம் கும்மட்டி அடுப்பு போல உஷ்ணமாக இருந்தது. வெளியே பார்வைக்கு ஒன்றையும் காட்டிக் கொள்ளாமல் ஆனால் அதே நேரத்தில் உள்ளே நிகு நிகு என்று கனன்று கொண்டிருக்கும் கங்கு போல, நீறு பூத்த நெருப்பாக அனல் வீசிக் கொண்டு தான் இருந்தது. இவள் நம்மை என்ன நினைத்து கொண்டிருக்கிறாள்? என்னமோ நமக்கு வேறு யாரும் உடன் வருவதற்கு இல்லாவே இல்லாதது போல நினைத்து விட்டாளா? நாமும் தான் ஆகட்டும் ஏன் தான் இவளை போய் கெஞ்சி கொண்டிருக்கிறோமோ?
இன்னும் சொல்ல போனால் இவளைத் தவிர வேறு யாராக இருந்தாலும் ஊரு வேரு என்று போர் அடிக்காமல் நம்முடன் இயைந்து இந்த விடுமுறையை அதிகபட்ச சந்தோஷத்துடன் அனுபவித்து இருப்பார்கள். இவள் வந்து விட்டாலும்………….அடடா…………..! சரியான மிடில் கிளாஸ் மென்டாலிட்டி. தானும் அனுபவிக்காது. அனுபவிப்பவர்களையும் அனுபவிக்க விடாது. சரி போய் தொலையட்டும்.
ஆனாலும் ரொம்பத் தான். இவளுக்காக இவள் தோழியையும் உடன் அழைத்து செல்லலாம் என்று நினைத்தேன். பாவம் அவளாவது சந்தோஷமாக வந்திருப்பாள். இவள் நம்மை மட்டும் அல்ல ரேணுவின் சந்தோஷத்தையும் கெடுத்து விட்டாள். ராகவனையும் அழைத்து வருவதாக வேறு சொன்னாளே. நான் என்ன கோயிலுக்கு பக்தி சுற்றுலா போவதற்கா சாருவை அழைத்தேன்?. ராகவனாமே ராகவன்.
ராகவன் இவன் வகுப்பு மாணவன் தான். ரொம்ப நல்ல பையன் போன்ற ஒரு தோற்றம். அது உண்மையும் கூட. மிகவும் பொறுப்பானவன். நாள் கிழமை கோயில் குளம் பூஜை புனஸ்காரம் நெற்றியில் மெலிதாக திருமண் என்று மட்டும் அல்லாமல் படிப்பிலும் படு கெட்டி. அதென்னவோ ராகவனின் அருகாமையில் கௌதம் இன்னும் பேட்பாய் போன்றே இருப்பான். அதனால் தானோ என்னவோ கௌதமும் சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் சரி அவனை கண்டு விட்டால் வலிய ஒரு வம்பு இழுக்காமல் போக மாட்டான்.
இப்போது சாருவை அழைத்தால் அவள் இவனையும் அழைத்து கொண்டு வருகிறேன் என்கிறாள். நம்மை தவிர்ப்பதற்காக சொல்கிறாளா, அல்லது உண்மையில் ராகவன் இல்லாமல் வெளியே வர இயலாத அளவிற்கு இருவரும் அத்தனை நண்பர்களா? இருவருக்கும் வெறும் நட்பு மட்டும் தானா? அல்லது அதற்கும் மேலா?
ச்சே, ச்சே. நண்பர்களாக இருக்க முடியாது என்று தன்னை தானே தேற்றி கொண்டான். ஏனெனில்
அதை அவனால் நினைத்து பார்க்கவும் முடியவில்லை. அதற்கு பதிலாக சாரு வேண்டுமென்றே அவனை தவிர்க்கிறாள் என்று சொல்லி கொள்வது அவனுக்குமே சற்று ஆறுதலாக இருந்தது. அவனுடைய ஈகோ சற்று அமைதி அடைந்தது.
இவளை நம்பி திட்டத்தை மாற்றி கொண்டதால் இவனுடன் வருவதாக சொல்லி இருந்தவர்கள் வேறு வகையில் தங்களை என்கேஜ் செய்து கொண்டு விட்டதால் இவன் தனி ஆளாக விடுமுறைக்கு போக வேண்டியதாக ஆகிவிட்டது. நல்லவேளையாக லிடியா அவனுடன் வருவதாக ஏற்பாடாயிற்று.
லிடியா எலிசபெத் ஆண்ட்ரூஸ் அமெரிக்க மாணவி. இவனிடம் இதுவரை அதிகமாக பேசினவள் இல்லை. இவனுடைய குரூப்பில் இருக்க மாட்டாள். அவனுடைய உயரமும் நிறமும் ஆளுமையும் லிடியாவிற்கு பிடித்திருந்தது. அவன் மற்ற மாணவிகளுடன் இருக்கும் போது லிடியாவின் பார்வை அவன் மேல் தான் இருக்கும். ஆனால் அதை வெளிப்படையாக ஒப்புக் கொள்ள அவளுடைய வெள்ளை தோல் இடம் கொடுக்கவில்லை. அதனால் கௌதமை என்ன பெரிய இந்தியன் என்ற மனப்பான்மையினால் இதுநாள் வரை அவளும் சீண்டினாள் இல்லை.
கௌதமிற்கோ அவ்வளவு பெரிய ஈடுபாடு ஏதும் அவளிடம் இல்லை. உன் கர்வம் உன்னோடு என்று அவளை அவனும் சட்டை செய்தது இல்லை. இன்று ஏதோ பேச்சு போக்கில் கௌதம் யூரோப் டூர் பற்றி சொல்லவும் லிடியா தானாகவே முன் வந்து அவனோடு வருவதாக கேட்கவும் இவனுக்கு சாருவிடம் ஏற்பட்ட அகௌரவத்திற்கு கொஞ்சம் ஆறுதலாயிற்று. காயம் பட்ட நெஞ்சில் புனுகை தடவியது போல. அந்த கர்வம் பிடித்தவளுக்கு இந்த கர்வம் பிடித்தவள் தான் சரியான மாற்று. அவ்வளவு நேரமும் மனசிற்குள் சாருவை கறுவி கொண்டிருந்தவனுக்கு இப்போது தான் சற்று மனசு ஆறியது.
ரெண்டு வருட காலங்களிலும் இந்த லிடியாவிடம் அவன் கண் திரும்பியது கூட கிடையாது. வகுப்பில் அவளாக ஏதும் கேட்டாலும் கூட வாய் வார்த்தையாக பதில் சொல்லாமல் தோள்களை குலுக்கி விட்டு அந்த இடத்தை கடந்து போய் விடுவான். அவன் இயல்பே அவனை பல பெண்களும் சிநேகம் கொள்ள தூண்டியது.
அப்படியாகப்பட்ட கௌதமிற்கே இத்தகைய அனுபவம் இது தான் முதல் முறை.. சாரு அவனை இப்படி எடுத்தெறிந்து பேசுவதும். அதை இவனும் கேட்டுக் கொள்வதும். என்னவென்று சொல்வது?
எதனால் என்று யோசிக்க யோசிக்க அவனுக்கு காரணம் புரியவில்லை. ஒருவேளை அம்மா முருகன் கோயிலில் பொண்ணு கிடைக்கும் என்று சொன்னதால் அவள் தான் இவளோ என்று நம் மனது பிக்ஸ் பண்ணி கொணடதோ? இல்லையே அதை உடனே நம் அறிவு வேண்டவே வேண்டாம் என்று மறுத்து விட்டதே. பின்பு என்ன? உண்மையில் பார்த்த மாத்திரத்தில் தன்னை திணற அடித்த அவளுடைய அழகு இப்படி போதை கொள்ள வைக்கிறதோ? அல்லது அவளுடைய உயரமும் ஒயிலும் தோரணையும் கம்பீரமும் அவனை உயிர் வரை சென்று உலுப்பியதோ? எதுவோ ஒன்று.
“கிட்டாதாயின் வெட்டன மற” என்று தமிழில் படித்தது நினைவு வந்தது. ச்சே. சீ. இந்த பழம்
புளிக்கும் என்று அவள் நினைவை உதறி விட்டு லிடியாவுடன் விடுமுறைக்கு பாரிஸ் வந்தான்.
லண்டனிலிருந்து பாரிசிற்கு இரெண்டே கால் மணி நேர ஈக்கோ ஸ்டார் பயணம். ரயிலின் பக்கவாட்டு கண்ணாடியில் இருபுற அழகையும் பார்த்து கொண்டே செல்வது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. வாழ்நாள் காலத்தில் இத்தகைய அனுபவத்தை யாருமே தவற விட்டு விடக் கூடாது என்று நினைத்து கொண்டான். கூடவே தவற விட்டவள் நினைவும் வந்தது. என்னவோ இவனோடு வராததினால் அவள் இங்கே எல்லாம் வரவே வர இயலாதது போல ஏன் தான் நினைக்கிறோமோ? என்று அவனுக்கே அவன் மேல் அசூசையாக இருந்தது.
இனி அவளை நினைத்து கொள்ளக் கூடாது என்று தீர்மானித்து கொண்டவனாக கவனத்தை வேறு திசையில் செலுத்தினான். அதற்காக அவன் ரொம்பவே மெனக்கெடவில்லை. லிடியா அந்த பொறுப்பை எடுத்து கொண்டாள். அவளை கூட்டி வந்ததிற்கு பிரதிபலனாக அவனை முற்றிலும் அவளுடைய கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள முயன்றாள். அதில் ஓரளவிற்கு வெற்றியும் பெற்றாள்.
பாரிசில் கரே டூ நோர்ட் ஸ்டேசனில் இறங்கி டாப் ஓபன் பஸில் ஊரை சுற்றி பார்த்தார்கள். மதிய உணவிற்கு அங்கே இருந்த சரவண பவன் ஹோட்டலில் சாப்பிட அவளை அழைத்து சென்றான். நம் ஊர் உணவு அவளுக்கு கண்களிலும் மூக்கிலும் நீரை வரவழைத்தது. எனினும் மிகவும் ரசித்து சாப்பிட்டாள் லிடியா. அவள் சாப்பிடும் அழகில் அவனுக்கு வயிறு நிரம்பி போயிற்று. நம்மூர் உணவை அல்லவா இவ்வளவு விரும்பி உண்கிறாள்.
14
மதிய உணவிற்கு பிறகு ஈபில் டவரின் மேல் போய் ஊரின் மொத்த அழகையும் போட்டோ எடுத்து கொண்டு ஆற்றின் உல்லாச படகில் சுற்றி விட்டு பின்மாலையில் நார்த்தர்டாம் கதிட்ரல் சர்சிற்கு போனார்கள். லிடியா மனமுருக வேண்டிக்கொண்டதை பார்த்து கொண்டே அமர்ந்திருந்தான்.
ஏனோ மீண்டும் அவனுக்கு முருகன் கோயிலில் நமஸ்காரம் செய்த போது தரிசனம் தந்த செவ்வரி ஓடிய இரு வெண்பாதங்கள் நினைவு வந்தது.
தன்னை அறியாமல் லிடியாவின் பாதத்தை பார்த்தான். அதுவும் வெண்பாதங்கள் தான். ஆனால் அதில் கொஞ்சம் கூட உயிர் இல்லாதது போன்ற உணர்வேற்பட்டது.
எங்கே சுற்றினாலும், மனது, கயிற்றை நீளமாக விட்டு கட்டியிருக்கும் முலையில் கட்டிய மாடு போல, அவளை சுற்றியே வந்தது. லண்டனுக்கும் பாரிசிற்கும் உள்ள தூரம் முலையின் கயிற்றை போல நீளமாக இருந்த போதும் அவன் மனம் அவளிடமே இருந்தது.
லிடியாவின் தயவால் திட்டமிடப்பட்டிருந்த படி சுற்றுலா திட்டத்தில் மீதம் இருந்த நாடுகளையும் சுற்றி விட்டு வருவதற்கு தயாரானான். அதில் அவனுமே வெற்றியும் பெற்றான்.
“என்ன ரேணு? விடுமுறைக்கு எங்கும் செல்லவில்லையா?”
“ம்.ஊஹூம். நீங்கள் போகலையா ராகவன்?”
“இல்லை. ஆனால் நான் இன்று மாலை சுவாமி நாராயணர் கோயிலுக்கு போகப் போகிறேன். நீங்கள் வருகிறீர்களா?”
“எங்கே இருக்கிறது?”
“நீங்கள் போனதே இல்லையா? கேள்விபட்டாவது இருக்கிறீர்களா?”
“நான் கேள்விபட்டிருக்கிறேன்.”
“அப்படியா சாரு. நீ கேள்விபட்டிருக்கிறாயா? நானும் போகணும்னு நினைத்து கொண்டிருந்தேன். தோதாக ஆள் கிடைக்கவில்லை. அன்று திவ்யா மேனனும் கூட கேட்டாள்.”
“ஹார்ட் ஆப் தி சிட்டியில் இருக்கிறது. போகலாமா?”
“போலாம். என்ன சொல்றே சாரு.”
“ம். என்ன சொன்னே?”
“எங்கே இருக்கு உன் சிந்தனை? ராகவ் கோயிலுக்கு போகலாமா என்று கேட்கிறார். போகலாமா?”
“ம். போகலாம்”
ஏனோ கௌதம் கிண்டலடித்தது நினைவிற்கு வந்தது. “ம். போ. போ. ராகவன் உன்னை கோயிலுக்கு கூட்டி செல்வான். போய் பஜனை பண்ணு”
போனால் போகிறது இவன் நம்மை கோயிலுக்குத் தானே அழைக்கிறான். கௌதமை போன்று டூருக்கு அழைக்கவில்லையே.
ஆனாலும் கௌதம் கிண்டல் அடித்தது போலத் தானே இவனும் நடந்து கொள்கிறான். வேறு எங்கேனும் அழைத்து செல்லலாம் என்று ஏனோ இவனுக்கு தோணவில்லையே.
ஆனால் ராகவனும் என்ன செய்வான்? அவனும் நம்மை போல இருக்கும் சொல்ப பணத்தில் அவனால் இவ்வளவு தூரம் அழைத்து கொண்டு போகலாம் என்று யோசிக்கிறானே.
அது சரி. எப்படித் தான் கௌதமிற்கு அத்தனை செலவு கட்டுபடியாகிறதோ? அன்று ரேணு வியந்தது போல இன்று இவளுமே யோசித்தாள்.
“என்ன யோசனை சாரு உனக்கு?”
“ம். ஒன்றும் இல்லை.”
கோயில் வாசலில் வந்ததும் செருப்பை வெளியே வைத்து விட்டு உள்ளே நுழைந்தார்கள். பிரமிக்க வைக்கும் அழகு அந்த கோயில். வட இந்திய கட்டட மோஸ்தரில் பழைய மற்றும் பாரம்பரிய கட்டிட கலையில் கிரானைட் கற்களால் கட்டபட்டிருந்தது. அழகிய மரவேலைப்பாடு கண்களையும் மனத்தையும் நிறைத்தது.
கண்களை நிறைக்கும் அழகில் ராதாகிருஷ்னர் அற்புதமாக மிளிர்ந்தார். ஹரே ராம் ஹரே கிருஷ்ணா என்று பஜனை நடந்து கொண்டிருந்தது. இவர்களும் பிரகாரம் சுற்றி விட்டு பஜனையாளர்களுடன் சேர்ந்து அமர்ந்து கைகளை தட்டி உற்சாகமாக பஜனை செய்தார்கள்.
சாருவிற்கு மனதிற்குள் இருந்த சிரிப்பு அவளையும் அறியாமல் முகத்தில் விரிந்தது..பக்கத்தில் அமர்ந்திருந்த ரேணு அவளை விலாவில் தட்டி ஏன் சிரிக்கிறாய்? என்று கேட்டாள்.
ஒன்றுமில்லை என்று சொன்னவள் மீண்டும் சிரித்தாள். அடக்கி கொள்ள முடியவில்லை அவளால். கௌதம் என்ன ஒரு தீர்க்கதரிசனாமாக சொன்னான். அவன் சொன்னது போல அவளும் ராகவனுடன் கைகளை தட்டி கொண்டு பஜனையில் தான் இருந்தாள்.
முகத்தில் விகசித்திருந்த அதே புன்னகையோடு அருகில் அமர்ந்திருந்த ராகவனை எதேச்சையாக திரும்பிப் பார்த்தாள் சாரு. அவன் அவளை விழுங்கி விடுவது போல பார்த்து கொண்டிருந்தான். பொதுவாக சாத்வீகமாக இருக்கும் அவன் முகமும் கண்களும் வழக்கத்திற்கு மாறாக இருந்தது. என்னது இது……………..? அதில் தெரிந்த தாபமும் காதலும்……………….! புதிது. முற்றிலும் புதியது.
தான் தான் ஒருவேளை தவறாக புரிந்து கொண்டிருக்கிறோமா?. குழப்பமாக இருந்தது. ச்சே. ச்சே. இருக்காது. நாம் தான் கற்பிதம் செய்து கொண்டு விட்டோம். குழப்பம் தெளிந்தவளாக தனக்குத் தானே சமாதானப்பட்டு கொண்டவளாக அவனை மீண்டும் பார்த்தாள்.
இல்லை. அவள் தவறுதலாக நினைக்கவில்லை. அவள் பார்வை சரியாகத் தான் இருக்கிறது. அவன் அவள் பார்ப்பதை பார்த்து விட்டான். மிகவும் ஆத்மார்த்தமாக ஒரு புன்னகையை சிந்தினான். அது அவளுடைய கண்களுக்கோ அல்லது மூளைக்கோ அல்லாமல் மனதிற்கு எதையோ உணர்த்தியது.
ஏன் அப்படி? எல்லாம் நன்றாகத் தானே போய் கொண்டிருக்கிறது. இந்த ஊரில் இந்த கல்லூரியில் இடம் கிடைத்து படிக்க வந்த புதிதில் சூழ்நிலை எல்லாமே ரொம்ப பயமுறுத்துவதாக இருந்தது. சுத்தமான நகரம், சுத்தமான காற்று, எப்போதும் குளிர் அதற்கான ஆடைகள் வேறுபட்ட உணவு ஒழுங்கான வாகன போக்குவரத்து, சத்தம் குறைவான பேச்சுக்கள். இது நமது ஊர் இல்லை என்ற சுதந்திர குறைவு, உள்ளூர ஒரு தார்மீக பயத்தை கொடுத்திருந்த போது இவன் தான் பேருதவியாக இருந்திருக்கிறான். மனதளவில் நல்ல நண்பனாக அவனை அடையாளப்படுத்தி கொண்டிருக்கிறாள்.
அப்படி இருக்கையில் திடீரென்று ஏன் இந்த பார்வை மாற்றம்? எந்த வகையிலும் நான் அதற்கு காரணம் இல்லையே என்று நினைத்து கொண்டாள்.