Skip to content
Home » அழகே அருகில் வர வேண்டும்-23-24

அழகே அருகில் வர வேண்டும்-23-24

23

ராகவன் அருகில் வந்து அமர்ந்தான். தன்னையறியாமல் நத்தை கூட்டிற்குள் சுருட்டி கொள்வது போல தன்னை ஒடுக்கி கொண்டு அமர்ந்தாள் சாரு.

“சாரு”

“ம்”

“ரொம்ப நாளாக உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும்”

“…………………….”

“என்னவென்று கேட்க மாட்டாயா?”

எதற்கு கேட்பது? அவளுக்கே தான் தெரியுமே. இவனுக்கு புரியவே புரியாதா ரேணு இவனிடம் பைத்தியமாக அலைகிறாள் என்று?

உயரத்தில் இருக்கும் பலாக்காயை விட கையில் இருக்கும் கலாக்காய் உசத்தி என்று இவனுக்கு புரியுமா?

அவளிடமிருந்து பதில் வராது போகவே அதுவே அவளுடைய சம்மதமாக கொண்டு ராகவன் மேற் கொண்டு பேசி கொண்டே போனான்.

“சாரு, நான் ஒன்று கேட்டால் தப்பாக எடுத்து கொள்ள மாட்டாயே?”

“சொல்லுங்கள்”

“நாம் இருவரும் ஒரே இடத்தில் வேலை பார்க்கிறோம். ஒரே படிப்பு படித்திருக்கிறோம். ரெண்டு பேர் குடும்ப பின்னணியும் ஏறத்தாழ ஒன்று தான். அதனால்……………….!”

“ம்.”

“தப்பா நினைத்து கொள்ள கூடாது”

“இல்லை. சொல்லுங்கள்”

“நாம் ஏன் கல்யாணம் செய்து கொள்ள கூடாது?”

அப்படியே நங்கென்று தலையில் ஒரு குட்டு குட்டலாமா? என்றிருந்தது அவளுக்கு. ஒரே இடத்தில் வேலை செய்வதால் கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமா? என்ன லாஜிக் இவனுடையது.

பிராக்டிகலான ஆள் தான். அதற்காக வாழ்க்கையின் அடித்தளமான கல்யாணத்தில் கூடவா பிராக்டிகலாக இருக்க வேண்டும்.

கல்யாணத்திற்கு அடிப்படையான மனவிருப்பம் என்று ஒன்று இருக்கிறது இவனுக்கு தெரியுமா?

பெரியவர்கள் மற்றும் பெற்றோர்கள் பார்த்து செய்து வைக்கும் அரேன்ஞ் மேரேஜில் கூட கல்யாண பெண்ணிற்கும் பையனுக்கும் ஒருத்தரை மற்றவருக்கு பிடித்திருக்கிறதா என்று கேட்டு

பிடித்திருக்கிறது என்று சம்மதம் சொன்ன பிறகு தானே கல்யாணத்தை நடத்துவார்கள்.

“இல்லை ராகவன். எனக்கு இப்போதைக்கு கல்யாணம் செய்து கொள்வதாக உத்தேசமில்லை.”

“வேண்டாம். இப்போதே வேண்டாம். இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்”

“எனக்கு கல்யாணமே விருப்பமில்லை.”

“அப்படி கூட இருக்க முடியுமா?”

“அது தான் நான் இருக்கிறேனே”

“நன்றாக யோசித்து சொல் சாரு”

“யோசிப்பதற்கு ஒன்றுமே இல்லை”

“கல்யாணமே பிடிக்கவில்லையா? அல்லது என்னை கல்யாணம் செய்வது பிடிக்கவில்லையா?”

“தெரியவில்லை. இப்போதைக்கு கல்யாணமே பிடிக்கவில்லை”

“ஒருவேளை கௌதம் உன்னை கல்யாணத்திற்கு கேட்டிருந்தால்?”

“கௌதமா? அவர் எங்கே இங்கே வந்தார்?”

“வந்தால்?”

“வந்தால்……….?”

“கல்யாணம் செய்ய ஒப்பு கொண்டிருப்பாயா?”

“உங்களுக்கு ஏன் அப்படி கேட்கத் தோன்றியது?”

“உன் வயதில் யாரும் இப்படித் தனிமையில் உட்கார்ந்து இருக்க மாட்டார்கள். அதனால் நீ யாரையாவது காதலிக்கிறாயோ? என்ற சந்தேகம்.”

“சரி, சந்தேகபட்டீர்கள். ஆனால் எதற்காக இங்கே இல்லவே இல்லாத கௌதமை சந்தேகப்படனும்?”

“பொதுவாக கையில் இருக்கும் கலாக்காயை விட தூரத்தில் இருக்கும் பலாக்காய்க்கு தானே மனசு ஆசைப்படும்”

இவனைப் பற்றி நான் நினைத்தததை இவன் திரும்ப தனக்கே சொல்கிறானே? அதையே தான் நான் ரேணுவிற்காக யோசிக்கிறேன் என்று சொல்லலாமா?.

“ஓஹோ, தூரத்தில் இருப்பதினால் அது பலாக்காயாக இருக்கும் என்று நீங்களே தீர்மானித்து விட்டீர்கள்”

“அப்படி இல்லையா?”

“அதைப் பற்றி உங்களுக்கு என்ன?” குரலில் எரிச்சல் மறையாமல் சொன்னாள்.

“அவனுக்கு எப்போதுமே அதிர்ஷ்டம் அதிகம்” சொன்னவன் குரலில் வன்மம் இருந்தது.

அவள் மெளனமாக இருந்தாள். என் மனதில் கௌதம் இல்லாவிட்டாலும் கூட உன்னை என்னால் கல்யாணம் செய்ய முடியாது என்று சொன்னால் இவனுக்கு எப்படி இருக்கும்?

“அவனைப் பற்றி எனக்கென்ன? என் கேள்விக்கு பதில் என்ன?”

“ஒரே பதில் தான்”

“உங்கள் வீட்டில் பேசி பார்க்கவா?”

”எங்கள் வீட்டிலும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்”

“இவ்வளவு உறுதியாக சொல்கிறாயே. மறுமுறை யோசி.”

“இல்லை. இதில் யோசிக்க ஒன்றுமே இல்லை”

அடேய் ரேணு உன்னை விரும்புகிறாளடா என்று சொல்ல நாக்கு துடித்தது. வேண்டாம். அது அவள் பாடு. அவளே சொல்லி கொள்ளட்டும். நான் மறுத்து விட்டதால் கொஞ்ச நாட்கள் கழித்து அவனே அதை மறந்து விடுவான்.

அதற்கு மேல் பேசி கொண்டு இருப்பதற்கு அவர்களுக்கு இடையில் ஒன்றும் இல்லை என்று அவனுக்கு உணர்த்துவது போல் சட்டென்று எழுந்து நடக்கத் தொடங்கினாள் சாரு. அவளுடன் இணையாக நடந்து வந்த ராகவன் சாருவின் விரலை மென்மையாக பற்றினான். பற்றி எறிந்தாள் அவள். கையை பட்டென்று உதறி விடுவித்து கொண்டவள் மேற்கொண்டு எதுவும் பேசாமல் விறுவிறுவென்று நடந்தாள். அவளுடைய செய்கையின் மூலமாக அவளுடைய மனநிலையை உணர்ந்தவனாக ஒரு நிமிடம் நின்று அவள் திரும்புகிறாளா என்று பார்த்தான்.

அவள் திரும்பியும் பார்க்காமல் நடந்து போய் விட்டதால் அதற்கு மேல் அவனுக்கும் என்ன செய்வது என்று புரியவில்லை.

அதன் பிறகு அவன் அவளுடன் பேசுவதே இல்லை. என்ன காரணமோ ரேணுவும் ரூமை காலி செய்து கொண்டு போய் விட்டாள். கொஞ்ச நாட்கள் கழித்து ரேணுவிற்கும் ராகவனுக்கும் திருமணம் நடந்தது. ஏனோ இவளுக்கு அழைப்பில்லை.

போகட்டும். மனதிற்கு பிடித்தவர்களே நம்மை விட்டு போன போது அதற்காக நாம் மனமடிந்து போய் விடவில்லை. சுயநலமிகள். போய் தொலையட்டும்.வேறு ரூம்மேட். வேறு சூழல். இன்னும் ஒன்று ரெண்டு வருடங்கள் இந்த ஊரில் இந்த வேலையில் தொடர்ந்தால் போதும்.அதற்குள் இங்கேயே வந்து விடும்படி ஆயிற்று. 

எல்லாம் இந்த பாட்டியால்!

24

நடுவில் கிடைத்த பதினைந்து நாட்கள் விடுமுறையில் இவள் வந்து விட்டு திரும்ப கிளம்பிய அன்று பாட்டி செய்த ரகளை இருக்கிறதே.

“பாப்பா, திரும்பவும் நீ அந்த ஊருக்கு போகத் தான் வேணுமா?”

“இதென்ன கேள்வி பாட்டி?”

“இங்கேயே ஏதாவது வேலை தேடிக் கொள்ளக் கூடாதா?”

“நான் படிச்சிருக்கும் படிப்பிற்கு அங்கே என்றால் நல்ல சம்பளம் கிடைக்கும் பாட்டி”

“நீ அப்படி சம்பாதித்து என்ன ஆகணும்?”

“இந்த ஒரு வருடம் சம்பாதித்து தானே பாட்டி இந்த வீட்டின் மேல் இருந்த கடனை அடைக்க முடிந்தது”

“ஆமாம். அதுவும் உண்மை தான். உன் படிப்பிற்காகவும் இந்த வீட்டின் மேல் நிறைய கடன் வாங்கித் தான் இருந்தது. எங்களுக்கும் தான் வேறு வரும்படி இல்லையே”

“அதனால் என்ன பாட்டி? அது தான் நான் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டேனே”

“நீ சம்பாதித்து நாங்கள் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கனுமா?”

“அதில் என்ன தப்பு?”

“பொம்புளை பிள்ளை சம்பாதித்து நாங்கள் உட்கார்ந்து சாப்பிடுவதாவது? ரொம்ப நல்லா இருக்கு”

“கடமை பாட்டி. என்னுடைய கடமை. உங்களை பாதுகாப்பது என் கடமை இல்லையா?”

“அதை நீ இங்கிருந்தே செய். நான் வேண்டாம் என்று சொல்லவில்லை”

“இங்கே அவ்வளவு வருமானம் கிடைக்காது பாட்டி. கடன் அடஞ்சிரட்டுமே”

“அது தான் இப்போது கடன் அடைந்து போய் விட்டதே. இனி எதற்கு அங்கே போய் சம்பாதிக்கணும்?”

“இந்த வீட்டை பார்த்தாயா? இதை மராமத்து பண்ணனும். பராமரிக்கணும். இதெற்கெல்லாம் பணம் வேண்டாமா?”

“நம் தேவைகள் அனுமார் வால் போல நீண்டு கொண்டே தான் இருக்கும். அதற்காக நீ எங்களை பிரிந்து இருக்கனுமா?”

“இங்கே இருந்தாலும் இந்த ஊரில் வேலை கிடைக்காதே.”

“ஏன் கிடைக்காது? எல்லாம் கிடைக்கும்.”

“இந்த பட்டிகாட்டில் என்ன வேலை கிடைக்கும் பாட்டி?”

“இந்த ஊர் பள்ளிகூடத்தில் வேலை கிடைக்கும். நம்ம செட்டியார் வீட்டிலே போய் தாத்தாவை கேட்க சொல்கிறேன்”

“பள்ளிகூடத்திலா?”

“ஆமாம். அதுக்கு என்ன? பொம்பிளை பிள்ளைகளுக்கு டீச்சர் உத்தியோகம் தான் லாயக்கு”

“டீச்சர் வேலைக்கா போக சொல்கிறே?”

“நீ தான் வெள்ளைக்கார துரைசானி மாதிரி நல்லா இங்க்லீஷ் பேசறியே. அப்புறம் டீச்சர் வேலைக்கு போனா என்ன?”

“அதுக்கு நான் டீச்சர் படிப்பு படித்திருக்கணும் பாட்டி”

“நீ படிச்சிருக்கறதுக்கு ஏத்த மாதிரி செட்டியார்ட்ட சொல்லி வேலை வாங்கி தருவாரு தாத்தா”

அதற்கும் செட்டியார் தானா? ஆக மொத்தம் செட்டியார் மட்டும் தான் பாட்டிக்கு தெரிந்திருந்த ஒரே ஒரு சர்வ வல்லமை படைத்த பெரிய ஆள். அவரிடம் சொன்னால் சாருவிற்கு எத்தகைய உதவியும் கிடைத்து விடும். அவளும் இங்கேயே இருந்து விடலாம். என்ன ஒரு மனக்கணக்கு இந்த பாட்டிக்கு?.

லண்டனில் தொழில் நிர்வாகம் படித்து அங்கேயே ஒரு வருடம் நல்லதொரு கம்பனியில் நிர்வாக பொறுப்பில் பணியாற்றி அனுபவப்பட்ட அவளால் இந்த மூதாட்டியை சமாளிக்க முடியவில்லை.

என்ன சொல்வது? எப்படி சொல்லி அவளுக்கு புரிய வைப்பது? தூக்கி போட்டு விட்டு போய் விட முடியாதபடி பந்தம் அவள் கால்களை கட்டி வைத்திருக்கிறதே.

இழுத்து பிடித்த பொறுமையுடன் பாட்டியை பார்த்தாள் சாரு. மூப்பின் வடு முகத்தில் தெரிந்தது. ஆயாசம் உடலில் இருந்தது. கண்களில் மட்டும் ஜீவன் தொக்கி இருந்தது. இருவரும் வாழ்நாளெல்லாம் நமக்காகத் தானே வாழ்ந்திருக்கிறார்கள். பாவம். அவர்கள் வேறு எதை நம்மிடம் எதிர்பார்க்கிறார்கள்?

குரலில் மிகுந்த தன்மையுடன் உலகம்மையிடம் நெருங்கி அமர்ந்தவளாய் அவள் கரங்களை தன் கைகளில் ஏந்தியவாறு மெல்ல சொன்னாள் சாரு.

“பாட்டி. எனக்கு சென்னையில் தான் வேலை கிடைக்கும்”

“பரவாயில்லை. எங்கோ கண்காணாத இடத்திற்கு போவதற்கு பதிலா நீ சென்னைக்கே போ.”

“பரவாயில்லையா?”

“பரவாயில்லை”

“நிஜமா?”

“நிஜம் தான்”

“கோபம் இல்லையே?”

“இல்லே பாப்பா. உன்னை அப்பப்போ கண்ணால பாத்துக்கலாம்னு ஒரு நெனப்பு தான்”

“சரி. நிம்மதியாக இரு. நான் பார்த்து கொள்கிறேன்”

“அது போதும். இந்த ஒரு வார்த்தைக்காகத் தான் காத்திருந்தேன்”

அதிலிருந்து இங்கே வேலைக்கு முயற்சி செய்து இந்த கம்பனியில் வேலை கிடைத்து ஆறு மாதம் ஆகிறது. மாதம் ஒருமுறை பாட்டி தாத்தாவை பார்த்து விட்டு வருவது அவர்களுக்கு உயிரை திரும்ப கொடுத்தது போல் ஆயிற்று. இவளுக்குமே பாவம் இவர்களை இத்தனை நாள் மிஸ் பண்ணி இருந்திருக்கோமே என்று இருந்தது.

####

“குட்மார்னிங் சாரு”

“ஹாய் குட்மார்னிங் நந்தினி”

“நேற்றைக்கு மீதம் வைத்து போயிருந்த ரிப்போர்ட்டை எடுத்து வா நந்தினி. முதல் வேலையாக அதை முடித்து விடலாம்”

“நீ கேட்பாய் என்று தெரிந்து முதலிலேயே அதை எடுத்து வைத்திருக்கிறேன்”

அவள் எடுத்து வைத்திருந்த கோப்பை எடுத்து கொண்டு நாற்காலியில் அமர்ந்தவளுக்கு அதை கணினியில் சரி பார்த்து கையெழுத்து இட்டு நிமிர ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாயிற்று. அப்பாடா, ஒருவழியாக இந்த வேலை முடிந்தது.

நந்தினி அதாவது சாருவின் செக்ரடரி அவளுக்கு டீயை கொண்டு வந்து வைத்தாள். அதை எடுத்து கொண்டு சாரு அந்த நான்கு மாடி கட்டிடத்தின் நான்காவது தளத்தின் கண்ணாடி சுவற்றின் வழியே வெளியே பார்த்தாள்.

வீ. எஸ் எண்டெர்ப்ரைஸ். படப்பையை தாண்டி இருந்த அந்த கம்பனியில் இரும்பு கம்பிகள் கட்டுமானப் பொருட்கள் தயாரிப்பு தான் பிரதானமாக இருந்தது.

இந்த கம்பெனிக்கு இன்டர்வியூவிற்கு வந்த போது இணையத்திலிருந்து அத்தனை அடிப்படை விஷயங்களையும் படித்து அறிந்து வந்திருந்தாள் சாரு.

முதன் முதலில் இரும்பு கழிவுகளை எடை போட்டு வாங்கி வந்து அதை தரம் பிரித்து மறு சுழற்சிக்கு விற்பனை செய்தது தான் இந்த கம்பனியின் ஆரம்ப அடிச்சுவடி.

பிறகு அந்த இரும்பு கழிவுகளை அவர்களே மறுசுழற்சி செய்தார்கள்.

அடுத்த தலைமுறை அதை இரும்பு கம்பியாக தயாரித்தது. அதையே கட்டுமான பொருளாக விரிவுபடுத்தியது.

இனி வரும் தலைமுறை இதே கம்பனியின் வெளிநாட்டு கிளைகளை ஆரம்பிக்கும் நோக்கில் உலகநாடுகளுக்கு போய் இருப்பதாக கேள்வி. இன்னும் அதிகதிகமாக தன்னுடைய விஸ்தீரணத்தை பரப்பி இன்று பெரியதொரு தொழில் உலக பேரரசாக விரிந்திருந்தது இந்த நூறு வருட பழைமயான கம்பனி.

1 thought on “அழகே அருகில் வர வேண்டும்-23-24”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *