இதயத்திருடா-5
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
இன்று வீட்டிற்கு வந்து சேரும் நேரம் வாசலில் மாமா அக்கா அமர்ந்திருக்க கண்கள் இன்றுமா என்று மெதுவாய் பைக்கை நிறுத்திவிட்டு வந்தான்.
செவ்வந்தி அவள் பாட்டிற்கு கை கட்டி அமர்ந்திருக்க, கைலி பனியன் அணிந்து வந்தவன், அவனாகவே உணவை எடுத்து போட்டு சாப்பிட ஆரம்பித்தான்.
கணேசன் நடப்பதை வேடிக்கை பார்த்தார். மதிமாறன் கையலம்பி மேலே செல்லும் நேரம், “இனி என் கையால சாப்பிடாதே.” என்று பொட்டிலடித்தார் போன்று கூறினார் செவ்வந்தி.
“சரிக்கா இனி நானே எடுத்து போட்டு சாப்பிட்டுக்கறேன்.” என்றான் மாறன்.
“இனி உனக்கு சாப்பாடு இங்க ஆக்க மாட்டேன்.” என்று கூறினார்.
“இட்ஸ் ஓகே அக்கா. நான் கடையிலயே சாப்பிட்டு வந்துடறேன்” என்று படியேற முயன்றான்.
“இனி இங்க வராதே. அக்கா வீடு இருக்கறதை மறந்துடு. மேல் போர்ஷன் மட்டும் போகலாம்.” என்று கூறவும் “நான் வீட்டுக்குள்ள வருவேன் அக்கா. உன்னால என்னை தடுக்க முடிஞ்சா தடு. ஆனா தடுக்கலைனா கூட ஓகே சாப்பாடை ஆக்கி வைக்காதே. அப்படி இருந்தா நாய் மாதிரி இங்க தான் வருவேன்.” என்றவன் படியேறி அக்கா அன்பிலிருக்கும் ஆணவத்தில் மேலேறினான்.
செவ்வந்தியோ கதவில் கைவைத்து, “என்ன சொன்னா மாறுவான். சத்தியமா
தெரியலைங்க” என்று அழுவது மதிமாறன் அறை வரை கேட்டது.
கணேசனோ துண்டை போட்டு கதவை தாழிட்டு, எனக்கு பொண்ணு இருந்தா செத்துட்டா… அதோட கவலை மட்டும் தான். உனக்கு உன் தம்பி வாழ்வும் போச்சேனு இருக்கு. நான் என்ன செய்ய பேசி பார்த்துட்டேன். இதுக்கு என் மக மதுவந்தி தான் மேலயிருந்து வழி சொல்லணும்.” என்று கூறியதும் கேட்டவன் மதுவந்தியின் புகைப்படத்தை எடுத்து பார்த்தான்.
“மாமா என்னை படிக்க வச்சி ஐஏஎஸ் ஆக்கிட்டு நான் உனக்கு செட்டாக மாட்டேன்னு என்னை கல்யாணம் பண்ணாம இருக்க மாட்டியே.” என்று மதுவந்தி கேட்டது இன்று நடந்தது போல காதில் விழுந்தது.
“படிப்புல என்ன இருக்கு மது. கல்யாணத்துக்கு விருப்பம் முக்கியம். உனக்கு என்ன பிடிக்கும்னு தெரிந்தும் என் அக்கா மகளோட மனசை உடைக்க மாட்டேன். உனக்கு நடுவுல யாரையாவது பிடிச்சிருந்தா சொல்லு சேர்த்து வைப்பேன்.” என்று கூறியதற்கு மதுவந்தி முகம் தூக்கி வைத்தாள்.
“ஏன் மாமா இப்படி சொல்லற. படிச்சாலும் நான் வந்ததும் உன்னை தான் கல்யாணம் பண்ணுவேன்.” என்று தன் சட்டையில் சாய்ந்தவளின் எண்ணங்கள் மனதில் ஊர்வலமாக போக, அவளிடத்தில் வேறொருத்தி நிற்க முடியுமா என்று துடித்தான்.
“நான் ஒருத்தி உன் இதயத்தில உட்கார்ந்திருக்கேன். டபாய்க்கிற பார்த்தியா.” என்று நற்பவி குரல் அருகே கேட்க, புகைப்படத்தை நழுவவிட்டான்.
“நான் விரும்பலை நற்பவி.. நான்” என்று பதறினான்.
மதுவந்தி புகைப்படம் கீழே விழுந்து சிதறவும் அவளின் போட்டோ மட்டும் எடுத்து வைத்தவன் கண்ணாடியை எடுத்து கீப்பையில் போட்டு சுத்தம் செய்தான்.
கண்ணாடியில் கீறி வலது உள்ளங்கை லேசாக இரத்தம் வரவும் அதனை பொருட்படுத்தாமல் படுத்து கொண்டான். அப்படியொன்றும் இரத்தம் பீறிட்டு வரவில்லை. சற்று நேரம் கசிந்தவை பின்னர் கெட்டியாகி இறுகி விட்டது.
அடுத்த நாள் காலை எழுந்தவன் குப்பை வண்டி விசிலில் தான் எழுந்தான்.
கண்ணை கசக்கி கீழே வந்து போடும் நேரம் செவ்வந்தி தம்பி இன்னமும் கடைக்கு கிளம்பவில்லையா என்று கண்கள் முழுவதும் அவனை காணாது கண்டது.
அவன் கையில் இருந்த காய்ந்த ரத்தம் பதற வைத்து “என்ன ஆச்சு டா. ஏன் ரத்தம்? அய்யோ என்னங்க இங்க வாங்க” என்று கணவர் கணேசனை அழைக்கவும் ஓடிவந்தார்.
“ஒன்னுமில்லை அக்கா. மது போட்டோவை வச்சிட்டு தூங்கினேன் புரண்டு படுக்குறப்ப கண்ணாடி உடைச்சிடுச்சு.” என்று முன்பு செய்யும் செயலை தான் கூறினான்.
“கடவுளே….” என்று கையலம்பி பஞ்சு துணியால் கட்டுப்போட்டு முடித்தார். கண்கள் அருவியாய் பொழியவும், “ஏன்டா இப்படி கஷ்டப்படணும்.” என்று தினமும் கேட்கும் கேள்வியை கேட்டு வைத்தார்.
“அக்கா… போதும் கடைக்கு போகணும்.” என்று சென்றான்.
கணேசனோ “அவனை நாம பாரமா நினைச்சிட்டோமோனு பீல் பண்ண போறான். முதல்ல சமைச்சிடு” என்று கூறவும் செவ்வந்தி சமைக்க போக, குளித்து முடித்து ஈரத்தலையோடு வண்டியை எடுத்து புறப்பட்டிருந்தான்.
செவ்வந்தி டிபன் பாக்ஸை எடுத்து விழித்தவராய் கணேசனை பார்த்தார்.
மதிமாறன் சென்ற போது வடிவேல் கடையை திறந்து பரபரப்பாய் வேலைப் பார்த்து கொண்டிருந்தார்.
“என்ன தம்பி இன்னிக்கும் லேட்டா..?” என்றதும் மதிமாறனுக்கே தன் மீது சினம் வந்தது.
யாரிடமும் அதிகம் பேசாமல் தவிர்த்து கடமையே கண்ணாக கல்லாபெட்டியில் உட்கார்ந்து சிரிப்பை மருந்துக்கும் முகத்தில் அண்டவிடாது கடுமையாய் இருந்தான்.
மதிய உணவையும் தவிர்த்து டீ மட்டும் அருந்தி உலாவினான்.
இரவு பதினொன்றுக்கு கடையடைத்து வீட்டிற்கு திரும்பினான்.
பாதி வழியில் போலீஸ் வண்டி நின்றது.
“ஹாய்… ரொம்ப லேட்டா கடையடைக்கறிங்க. வருமானம் ஜாஸ்தியோ” என்று கேட்டாள்.
“அப்படி தான்” என்று பைக்கை நிறுத்திவிட்டு மறுபக்கம் செல்ல முயன்றான்.
நற்பவி அதற்குள் போலீஸ் காரிலிருந்து இறங்கி “நீங்க போங்க மணியண்ணா நான் இனி வீட்டுக்கு போயிடுவேன்.” என்று கூறினாள்.
மதிமாறன் சுற்றி முற்றி பார்த்தான் ஒரு ஈ, காக்கா இல்லை.
“நான் யாரையும் டிராப் பண்ணுவேன்னு கனவு காண வேண்டாம்.” என்று பேசவும் மணி என்ற ஓட்டுனரோ நற்பவியை கண்டு விழித்தார்.
“நான் தனியா போயிடுவேன் அண்ணா நீங்க போங்க.” என்று நற்பவி ஆணித்தரமாய் கூறவும் மணி என்பவர் கிளம்பினார்.
“ஏன் இப்படி பண்ணற. இந்த அர்த்தராத்திரியில தன்னந்தனியா சுத்தற. என்ன போலீஸ்னு திமிரா… ஒரு பொண்ணு அழகாயிருந்தா போலீஸ், ஐஏஎஸ் என்றெல்லாம் பார்க்க மாட்டாங்க. துணியை உருவி அசிங்கப்படுத்திடுவாங்க.” என்றான் கோபமாய்.
“பச்…. நான் பிறக்கறப்ப டிரஸே போடாம தான் பிறந்தேன். அப்ப என்னை எத்தனையோ பேர் பார்த்திருக்காங்க. எனக்கு அது அசிங்கமா தெரியலையே. ஏன்னா நான் குழந்தையா இருந்தேன்.
என் மனசுக்கு அவமானம் என்று உணர்ந்தா தான் எதுவும் என்னை பாதிக்கும். எனக்கு இந்த மானம் அவமானம் என்றதுல பெரிசா மதிப்பில்லை.
பாரு… தன்னந்தனியா இருட்டுல சுத்தறேன். மணி பன்னிரெண்டு ஆகறப்ப கூட இருப்பேன்.
காந்தி சொன்னரே ஒரு பொண்ணு தனியா இரவு பன்னிரெண்டு மணிக்கு நகையெல்லாம் போட்டும் ஒன்னும் நடக்கலைனா அது தான் சுதந்திரம்னு. எனக்கு பொருந்துதுல.” என்றவளை மூக்கு முட்ட முறைத்து வண்டியை உதைக்க அவளோ பைக் கீயை எடுத்து விட்டு, “எப்படியும் பைக்ல என்னை ஏத்த மாட்ட? ஜஸ்ட் வாக் பண்ணி பேசிட்டே போகலாமே.” என்று வேண்டினாள்.
“விடாது கருப்பு நீ” என்று அவளோடு நடந்தான்.
சில்லென்ற காற்று அடிக்கடி வீசவும் கட்டிடத்தின் இடுக்கில் ஒளிந்து பார்த்த வெண்ணிலாவும், சில இடத்தில் குடிக்காரன்களும், பிச்சைக்காரன்களும், ரோட்டில் வசிக்கும் மனிதர்களும் என்று பார்வையிட்டு கொண்டே நடந்தனர்.
“எவனாவது மானங்கப்படுத்தினாலும் இதே மாதிரி பேசுவியா.” என்று கேட்டதும், இடது புருவமேற்றி அவனை கண்டு, “என் உடம்பு எனக்கு கோவில் மாதிரி. அதை இதயத்திருடனுக்கு கொடுப்பேன். அதை மீறி என் அனுமதி இல்லாம பலவந்தமா திருடறவனுக்கு மேலோகத்துக்கு டிக்கெட் போட்டு தருவேன்.
சாகறதுக்கு தைரியம் இருக்கறவன் என்ன டச் பண்ணட்டும்” என்று கூறவும் மதிமாறனோ ‘இவ மதுவந்திக்கு மேல இருக்கா. அவளாவது சாப்டா சொன்னா கேட்பா. இது கேட்கற ரகமில்லை” என்று நடந்தான்.
“அப்பறம்… உங்க வீடு எது?” என்று கேட்டாள்.
இன்னமும் பத்து வீடு வந்தால் தனது வீடு என்றதும் மதிமாறன் அவளிடம் சொல்லாமல் இன்னமும் தூரமா போகணும். நீ எப்படி போவ? உன் டிரைவருக்கு போன் போட்டு வர சொல்லி கிளம்பு” என்றதும், சரியாய் அவன் வீடு வந்ததும், “உங்க அக்கா மாமா எப்பவும் வாசல்ல இருப்பாங்களே. இன்னிக்கு காணோம்” என்று கேட்டு அவனை திகைக்க வைத்தாள்.
“அவங்க சம்டைம் தூங்கியிருப்பாங்க” என்று வண்டியை நிறுத்திவிட்டு, போன் பண்ணி வரச்சொல்லி கிளம்பு” என்றான்.
“சொன்னதை சொல்லுமாம் கிளிப்பிள்ளை. நீங்க கிளிப்பிள்ளையா மாறா. வீட்டுக்கு வானு ஒரு வார்த்தை கூப்பிட மாட்டிங்களா?” என்று அவனை ஊடுருவிக் கொண்டே பார்ததாள்.
“முடியாது.” என்று சாவியை எடுத்து கொண்டு கேட்டை திறந்து உள்ளே வரவும் செவ்வந்தி வாசலில் வந்து நற்பவியை கண்டு ஏதேனும் பிரச்சனையோ என்று பயந்தார்.
இப்படி நேரம் தாண்டி வந்தால் போலீஸ் விரட்டாதா என்ற கவலையில் பதட்டமாய் வரவும், இதற்கு மேல் என்ன செய்ய என்று மதிமாறனே அக்காவிடம் “அக்கா அவங்க நற்பவி. என் பிரெண்ட்” என்று அறிமுகப்படுத்தினான்.
“வணக்கம் அம்மா. அப்பறம் மாறா.. அக்காவே முழிச்சிருக்காங்க. இப்ப வீட்டுக்கு அழைக்கலாமே.” என்றதும் மாறன் வாயை திறக்கவில்லை.
“உள்ள வாங்க” என்று செவ்வந்தி அழைக்க, அவனை போலவே கண்சிமிட்டி செவ்வந்தி வீட்டினுள் நுழைந்தாள்.
-இதயம் திருடுவோம்.
-பிரவீணா தங்கராஜ்.

vidathu karuppu than aana athu unaku mattum than mara pavi una vida mata un manasila irukira aasaiya veliya kondu vanthu un kuda sernthu vazha pora paru
Super super. Narpavi excellent..Mathieu dont have option. Intresting sis.
Super super super super super super super super super super
கதை நல்லாருக்கு. முழுக்கதையை படித்து முடித்தபின் கமெண்ட் செய்றேன், ப்ளீஸ்.