வேதங்கள் துறந்து மாதங்கள் கடந்து நிலமகளடி மடிந்த கதிரவனின் சொப்பன நேரமதனில், ஈன சுவரத்தை இரசிப்பதை போல் வலியில் துடிதுடித்து அலறி கொண்டிருந்த அவனின் மரண ஓலத்தை காது குளிர கேட்டு கொண்டே விடாது தன் கரங்கள் இறுக்கியிருந்த ராடால் அவனின் தோலை மெதுமெதுவாய் கத்தியை கொண்டு கீறிக் கீறி, அவன் அனுபவிக்கும் ஒவ்வொரு நொடி வேதனையையும் இரசித்து இரசித்துக் கொல்லாமல் கொன்று கொண்டிருந்தான் அந்த முகமூடிக் கொலைகாரன்…
உடலை இறுக்கி தழுவியிருந்த பலுப்பு நிற ஆடை, கொரானா விழிப்புணர்வுக்கு ஏற்ற கருப்பு நிற முக கவசம், கை கவசம் என தலையை ஹுடி அணிந்து மறைத்திருந்தான்.
நாற்காலியில் இரும்பு சங்கிலியால் பிணைந்திருந்தவனின் வயதோ ஒரு நுப்பது நுப்பத்தி இரண்டை தொட்டு விடும். ஆடை எதுவுமின்றி உள்ளாடையை மாத்திரம் விட்டிருந்தான் போலும் கொலைகாரன். அவனது கழுத்தில் இன்னமும் ஒரு அடையாள அட்டை தொங்க, அதில் இவனது சிரித்த முகத்துடன் கீழே சம்பத் என்ற பெயரும் அச்சிட்டிருந்தது.
அவன் முகத்தில் தொடங்கி, பாதிக்கும் மேலான உடலில் கொலைகாரன் கத்தியால் கீறிக் கீறியே தோலை சேமித்திருந்தான். அவனது உடல் வலி கண்களில் இருந்து கணக்கின்றி கண்ணீரை சுரக்கச் செய்ய, கண்ணீர் விட கூட அனுமதியின்றி அவன் இரு கண்களிலும் ஒரு நீண்ட குழாயை சொருகி வைத்து அவன் வலியுடன் வடிக்கும் அக்கண்ணீரையும் விடாமல் தனியே சேமித்துக் கொண்டிருந்தான்.
சம்பத் ” எ—என்ன எதுக்கு இன்னும்— இன்னும் உயிரோட வச்சிருக்க? தயவு செஞ்சு— ஆ!! என்ன கொன்னுடு! இப்ப— இப்படி சாகாம சாகுரத விட நா செத்துட்டா நிம்மதியா போய்டுவேன் டா! ” என கதறியவனை ‘ உன்ன நிம்மதியா சாக விடனுமா? ‘ என்பதை போல் எகத்தாளமாய் நிமிர்ந்து பார்த்து விட்டு, மீண்டும் அவன் வேலையை தொடர்ந்தான் அவன்.
சம்பத் ” வேணாம்— தயவு செஞ்சு— ப்— ஆஆ— இந்த ட்யூபையாவது என் கண்ண விட்டு எ— எ—என்னால தாங்க முடியல ஆ ஆ உன் கால்ல வேணாலும் விழுறேன்! என்ன வெட்டி கூட போடு! ஆனா—தயவு செஞ்சு இப்படி என் கண்ணுல— ஆ இந்த ட்யூப வைக்காத ப்லீஸ்!! ” என அவன் கத்திய கத்தல்கள் அனைத்துமே அந்த அடர்ந்த குடௌனில் கானலாய் தான் மறைந்து கொண்டிருந்தது.
அவனை நிமிர்ந்து கூட பார்த்திராத அவன் சிறத்தையாய் அமர்ந்து கத்தியிலே தன் கவனத்தை பதித்திருந்தான். வலியில் சம்பத்துடைய கண்கள் இப்போது சிவக்க தொடங்கியிருக்க, குழாய் வழி சென்று கொண்டிருந்த கண்ணீரில் அவனது இரத்தமும் கலக்கத் தொடங்கியது.
இரத்தக் கண்ணீர் வடிக்கிறேனென மிகவும் இளகுவாய் சினிமா வசனம் பேசியிருப்பான், ஆனால் அந்நொடி தான் அதன் வீரியத்தை உணர்ந்து கொண்டான் சம்பத்.
அவன் கதறகதற பொருமையாய் தன் கத்தியை கொண்டு ஏதோ ஒரு கலையை அவன் கழுத்தில் செதுக்கிக் கொண்டிருந்தான் கொலைகாரன்.
சம்பத்தின் அலறலும் ஓயாது ஒலித்துக் கொண்டே இருக்க, தன் கலை பணியை ஆற அமர நான்கு மணி நேரம் இழுத்து இழுத்து முடித்த அவன், சம்பத்தின் உடலில் இருந்த இரத்தத்தை கீறி கீறியே வடிய வைத்ததோடு அவன் கண்கள் வழியே கண்ணீரையும் உறிஞ்சு எடுத்திருந்தான் ஈரமற்ற மனம் கொண்ட அந்த கொலைகாரன்.
தன் உடலில் நீரும் இன்றி, இரத்தமும் இன்றி சம்பத் அல்லாட, மெதுவாய் எழுந்து அவனை கட்டியிருந்த இரும்புச் சங்கிலியில் இருந்து அவனை விடுவித்தான்.
அந்த நாற்காலியை விட்டுத் தட்டுத் தடுமாறி எழுந்த சம்பத், தள்ளாடலுடன் இப்போதாவது தப்பிக்க வேண்டுமென்ற ஒரு எண்ணத்துடன் ஓரடி எடுத்து வைக்க, அடுத்த நொடி தன் ராடால் அவன் தலையிலே ஒரே ஒரு அடி அடித்தான் அவன்.
அதன் பின் தொடர்ந்த நிசப்தம் சம்பத்தின் இறுதி நொடிகளை மெல்ல விழுங்கிக் கொண்டது.
சம்பத் மூச்சு பேச்சின்றி கீழே விழ, அதே ராடால் எண்ணிக்கையின்றி, தலையிலிருந்த ஓடு உடைந்து இரத்தம் ஆறாய் ஓடிய பின்னும் கூட அடித்து, அடித்து, அடித்து, சம்பத்தின் தலையை சிதைத்து அவனை குரூரமாய் கொன்றான்.
தன் இறுதி நொடிகளில் அவனது கண்ணீருடன் கலந்த வேறேதோ ஒன்றை அந்த கொலைகாரன் தன் மீதே கொட்டுவதை உணர்ந்தும், அது தன் உணர்வற்ற உடலில் தந்த மின்சாரத்தை போல் பாய்ந்த வலியினால் கதற கூட வழியற்றுப் போய் உடல் கருகி மூர்ச்சையானான் சம்பத்.
சம்பத் அனுபவிக்கும் வேதனையை கண்குளிர கண்ட அவனோ, அவனது ஒரு காலை பிடித்து இழுத்துக் கொண்டு அந்த குடௌனை விட்டுத் தரையில் அவன் உடலை தேய விட்டு இழுத்துச் சென்றான்.
#
காலை பட்சிகள் சிறகடித்துப் பறக்க, யோவான் நேஷ்னல் பார்க்கில் என்றுமில்லாமல் அன்று அதிகமாய் கூட்டம் கூடியிருக்க, காலை ஓட்டத்திற்காகவும் உடல் பயிற்சிக்காகவும் வந்திருந்த பலருக்கு மத்தியில் சில பெரியவர்கள் தங்களுக்குள்ளே ‘ பாவம் யாரு பெத்த புள்ளையோ தெரியல… ‘ — ‘ மனுஷன் சைக்கோ கொலகாரனா இருப்பான் போலப்பா… ரொம்ப கொடூரமா இருக்கு! ‘ — ‘ ஆமா செத்தது யாருன்னு கூடத் தெரியல, ‘ என பல விதமாய் பேசிக் கொண்டு அமர்ந்திருந்தனர்.
அந்த நேரம், கூட்டத்தை கலைத்துக் கொண்டு வேகமாய் வந்து நின்றது அந்த காவல் வண்டி. அதன் பின் பக்கத்திலிருந்து தன் தொப்பியை சரி செய்து கொண்டு வேகமாய் இறங்கிய இளைஞனின் நெஞ்சில் ஸ்டீஃபன் என்ற பெயர் பலகை அழகாய் மிளிர, தன் உயர் அதிகாரி இறங்கும் முன்பாக சம்பவ இடத்தை நோக்கி வேக எட்டுக்கள் எடுத்து வைத்தான் ஸ்டீஃபன் என்ற எஸ்.ஐ.
அவன் சென்ற வேகத்திற்கு தள்ளி விடாத குறையாக, வந்த வழியிலே தடுமாறி அவன் வந்த அதே காவல் வண்டியின் ஓட்டுனர் இருக்கையிலிருந்து இறங்கியவன் மீது மோதி நின்றான்.
பதறி அடித்துக் கொண்டு சல்யூட் அடித்த படி ஸ்டீஃபன் ஒதுங்கி நிற்க, ஸ்டீஃபனின் தோளைத் தட்டி விட்டு தன்னிடமிருந்த வேறொரு கை குட்டையை ஸ்டீஃபனிடம் நீட்டினான் அவன்.
ஸ்டீஃபனுக்கு குறையாத உயரம், நல்ல மாநிறம், அமைதி குடியேறிய வதனம், கட்டுமஸ்தான தேகமில்லையெனினும் அதை கட்டுக்கோப்பாய் வைத்திருப்பான் போல என சுற்றத்தார் கிசுகிசுத்தபடி அவனை நோட்டமிட்டனர். அவனே நம் கதாநாயகன், இன்ஸ்பெக்ட்டர் அபிமன்ய ஷேக்கர்.
தனக்கொரு கைகுட்டையையும் மூக்கிற்கு நேராய் கட்டியிருந்த அபிமன்யூ, கதைகதையாய் பேசிக் கொண்டு பத்தடி தள்ளி அமர்ந்திருந்த கூட்டத்தினரை தாண்டி அந்த குறிப்பிட்ட பகுதியை நோக்கிச் சென்றான்.
ஸ்டீஃபன் அவனின் நடைக்கு நிகராய் பின்னே ஓடி வந்தான். அவ்விடத்தை அடைந்ததுமே அந்த இளங்காவலர்கள் இருவரின் முகமும் பட்டையடித்தது போல் சட்டென சுருங்கியது. ஒரு பெரிய ஆலமரத்தின் கிளையில் கைகள் கட்டப்பட்ட நிலையில் தொங்கிக் கொண்டிருந்தது ஒரு பெண்ணின் உடல்.
அவளின் உடல் பாதிக்கும் மேலாக எரிந்து தோல் பொசுங்கியிருந்தாலும் இரத்தம் உறைந்து கொடூரமாய் காணப்பட்டது. அதை கண்டதும் வேகமாய் சுற்றி நோக்கிய ஸ்டீஃபன் அப்போதே அங்கு அம்புலன்ஸ் வருவதை கண்டு,
” ஏன்யா இவ்வளவு நேரமா இன்ஃபார்ம் பண்ணாம என்னையா பண்ணீட்டு இருந்தீங்க?! யாரு இத ஃபர்ஸ்ட்டு பாத்தது? ” என கூட்டத்தை நோக்கி ஆவேசமாய் குரலெழுப்பிய நேரம், ” ஸ்டீஃபன், அமைதியா இருங்க… ” என அவனின் தோளை பொருமையுடன் தட்டினான் அபிமன்யூ
அடுத்த பத்தே நிமிடத்தில் அப்பெண்ணின் உடல் கீழிறக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காய் உடனடியே அங்கிருந்து கொண்டு செல்ல பட்டது. இது நிச்சயம் கொலையாகத் தான் இருக்கக் கூடுமென உறுதியாகியிருந்த ஸ்டீஃபன், அபிமன்யூவின் ஒப்புதலுடன் சுற்றி இருந்த கண்காணிப்பு கேமராக்களின் ஒளிபதிவுகளை பெறச் சென்றிருந்தான்.
அவன் மீண்டும் வந்த போது அபிமன்யூ விசாரணையை முடித்து விட்டு தனியாய் ஏதோ ஒரு சிந்தனையில் மூழ்கிக் கொண்டிருந்தான்.
” ஸ்டீஃபன், பாடிய பாத்துட்டு நமக்கு இன்ஃபார்ம் பண்ணவரு இங்க எங்கையும் இல்ல. நாம அவர சீக்கிரமே ட்ரக் பண்ணனும், ” என அபிமன்யூ சாந்தமாய் கூறிக் கொண்டிருக்க ஸ்டீஃபனோ, “சர், சீசீடீவீ ஃபூட்டேஜ் எதுவுமே கிடைக்கல சர். பார்க் உள்ள கமெராவே செட் பண்ணல. ” என்றான் தோய்ந்த வதனத்தோடு.
அபிமன்யூ ” அதெப்படி இல்லாம இருக்கும்? ” என புருவமுயர்த்தி வினவியவன், பின், ” ஸ்டீஃபன், ஒன்னு பண்ணுங்க. என்ட்ரன்ஸ்ல ஒரு கமரா இருக்கு, அந்த ஃபூட்டேஜ வாங்குங்க… “
ஸ்டீஃபன் ” ஓ…ஓக்கே, சர், ஓக்கே, சர்! ” என வேகமாய் வாயிலை நோக்கி நடந்தான்.
அந்த கொலை நடந்த இடத்தையே உருத்து நோக்கிக் கொண்டிருந்த அபிமன்யூவை தூரத்திலிருந்து பார்த்து கொண்டிருந்தான் அவன். இறுதிப் போயிருந்த அவனின் முகம் முழுவதும் ஒரு வெறியும் வெற்றியின் மகிழ்ச்சியும் படர்ந்திருந்தது.
” ஹாய், ஹலோ வணக்கம் வந்தனம் நமஸ்தே!!! நான் தான் உங்க விக்ராந்த், கண்ணும் கண்ணும் நோக்கியா காதல் குயில்களின் சங்கீத சுவரங்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்! ” என மைக்கைப் பிடித்து கொண்டு காட்டுக் கத்து கத்திக் கொண்டே அங்கு கூடியிருந்த கூட்டத்தை நோக்கி கைத்தட்டினான் பேச்சாளன் விக்ராந்த்.
அந்த இசை போட்டிக்கு இளைஞர்கள் கூட்டம் கூட்டமாய் பங்கேற்றிருந்தாலும் குறிப்பிட்ட இருவத்திமூன்று பேரே போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர்…
” நம்ம அன்பிற்குரிய, மரியாதைக்குரிய தலைகள வரவேற்த்துடுவோமா? இதோ வந்துட்டாங்க, நம்ம இசை கிளி காவியா மம்! வாங்க, மம், நல்லா இருக்கீங்களா?! என்ன சாப்டீங்க?! அப்படியே பதில் சொல்லீட்டே போய் உங்க சீட்ல உக்காந்துருங்க கால் வலிக்க போகுது, ” என சுமூகமாய் நுப்பதிலிருந்த அந்த அழகிய பெண்மணியை அவன் வரவேற்க, சிரிப்பலையுடன் தன் இருக்கையில் சென்றமர்ந்தார் பாடகி காவியா.
இவ்வாறே மூன்று பேரை அறிமுகப்படுத்தி விட்டு ஒருவழியாக பொருமையின்றி காத்துக் கொண்டிருந்த இளைஞர்களை அறிமுகப்படுத்தத் தொடங்கினான். அந்த இடமே இருள் சூழ்ந்ததும் நடு மேடையில், ஐந்தரையடியில் ஊதா நிற கௌன் அணிந்துக் கொண்டு முகம் கொள்ளா புன்னகையுடன் நின்றிருந்தாள் ஒரு தேவதை.
” ஹாய் எல்லாருக்கும்! நான் தான் உங்க ப்ரின்சி பெக்யூரா. என்ன எல்லாரும் நல்லா பாத்துக்கோங்க! ” என கூறி விட்டு அவள் குடுகுடுவென ஓடி விட, ” எலி குட்டிக்கு எவன் டா மைக்க குடுத்தது?! ” என கத்தி கொண்டே வந்தான் விக்ராந்த்.
ப்ரின்சியின் அறிமுகத்தின் பின் எழுந்த சிரிப்பலையோடு பாடகர்கள் அனைவரும் அழகாய் அறிமுகமாகினர். இறுதியாக தங்க நிற பாடரிட்ட புடவை அணிந்து, நடக்கத் தெரியாமல் நடந்து வந்து அழகே ஓவியமாய் நின்றாள் ஒரு யுவதி. நம் கதாநாயகி லினா பெக்யூரா.
தொடரும்
DhiraDhi❤️