Skip to content
Home » உயிரில் உறைந்தவள் நீயடி-10

உயிரில் உறைந்தவள் நீயடி-10

அத்தியாயம்-10

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

சண்டை மற்றும் பழிவாங்குதல் ஒரு பக்கம் நடக்கின்றதோ இல்லையோ, இரவில் அவளை ஆட்சிப் புரியும் வித்தையை மட்டும் தவறாமல் செம்மையாகத் தொடர்ந்தான் யுகேந்திரன்.

கன்னத்தில் வீக்கமும் ஒரு வாரத்தில் மாயமானது.

அதன் பின் கூடத்திலும், கிச்சனிலும் தோட்டத்திலும் என்று எல்லாயிடத்திலும் நடையிட்டாள் ஜீவிதா.

தினசரியாகக் காலை மாலை என்ற இருவேளையும் விளக்கேற்றி வழிப்பட்டு, யுகேந்திரன் சாப்பிட வரும் சமயம் பரிமாறுவாள். வேண்டுமென்றே பாதிக்குப் பாதிச் சோற்றை அப்படியே வைத்து எழுவான்.

“புருஷன் சாப்பிட்ட தட்டுல கூடப் பொண்டாட்டி சாப்பிடலாம். வேஸ்ட் பண்ணாம சாப்பிடு” என்று கூறியது போதாமல் அவளை வலுக்கட்டாயமாக உட்கார வைப்பான். முதலில் தயங்கி முகம் சுழிக்க, பின்னர் அதே வழக்கத்தில் தவிர்க்காமல் உட்கார்ந்தாள்.

பின்னர்ப் பேக்டரி சென்றவன் மதியம் சாப்பிட வரும்போதும் சேர்ந்து அன்னையோடு சாப்பிடுவார்கள். உமாதேவி இருப்பதால் வம்பிழுக்க மாட்டான். ஆனால் அதற்கும் சேர்த்து அறைக்குள் உறங்காமல் அவளை இழுத்து மேட்னி-ஷோ நடத்தி முடிப்பான்.

இரவெல்லாம் மென்னிருட்டில் கண்டதை விட, பகலில் கூடுதல் பித்தமேற்ற வைக்கும் அழகு, அவள் மறுத்து நழுவ பார்த்தாலும், விடாமல் போராட்டத்தைச் சத்தமின்றி நடைப்பெறும் கலையை நிகழ்த்தினான். ஒரு நாளைக்கு இருமுறை குளித்து முடிப்பதே ஜீவிதாவுக்கு வேலையானது.

பின்னர் மாலை வருபவன் டீ குடித்துச் சகவாசமாய் டிவி பார்த்து சாப்பிட்டு முடிக்க, இவளோ பூக்களைத் தொடுக்க ஆரம்பித்து விளக்கேற்றி முடிக்க, அவளைக் கொஞ்சம் போல வாட்டும் விதமாகப் பேசுவான். ஆனால் தற்போது எல்லாம் ஜீவிதா மௌனவிரதம் மேற்கொண்டவளாய் இருந்தாள். ‘நீ என்னவோ பேசு. நான் பழகிட்டேன்’ என்பது போல நடந்துக்கொண்டாள்.

இப்படியாக நாட்கள் உருண்டது.

மாடத்தில் தாய் விளக்கேற்றவும், ஜீவிதாவை காணாமல் “இவளுக்கு இங்க வேலையே கிடையாது. விளக்கேத்த வேலை செய்ய வந்தவ மருமகள். அதையே செய்யாம என்ன பண்ணறா’ என்று வந்தவன் “எங்கம்மா விளக்கேத்தறாங்க. ஏன் நீ தானே செய்வ? என்ன… அது கூட இந்த வீட்ல வேலையா நினைச்சி செய்ய முடியாதா?” என்று அதட்டலாய் கேட்டான். அவனுக்குத் துளசி மாடம் ஏற்றும் போது ஓவிய தூரிகையாகத் தோற்றமளிப்பதை வெகுவாய் ரசித்துப் பழகியதை ரசிக்க முடியாமல் போன வருத்தம்.

ஜீவிதாவோ “செய்ய முடியாது” என்று முகத்தை மறுபக்கம் திருப்பிக் கூறினாள்.

“ஏய்… என்ன கொழுப்பா” என்று தாடை பற்றித் திருப்ப, கண்கள் படபடவென அடிக்க, ”எனக்குப் பீரியட்ஸ். விளக்கேற்ற கூடாது” என்று தயக்கமாய் உதிர்த்தாள்.

மெதுவாகத் தாடையை விடுவித்து, “ஓ.” என்று கூறியவன் அதன் பின் அவளை வதைக்கவில்லை.

இரவில் அவளைக் கட்டிப்பிடித்து அவளை ஆள ஆரம்பித்தே பழகியவனுக்கு அவள் மெத்தையில் படுக்காமல் பாயில் படுத்திருப்பது என்னவோ போல் வாட்டியது.

நள்ளிரவு சத்தமின்றி அவளருகே படுத்து அணைத்துக் கொண்டான்.

அதிகாலை தன் பக்கம் யுகேந்திரன் இருக்க அவசரமாய் எழுந்து குளிக்கச் சென்றாள்.

சவகாசமாய் எழுந்து கண் திறக்கும் நேரம் யுகேந்திரன் தரையில் படுத்திருக்க, அவனைத் தாண்டி தாண்டி க்ளிப், ரப்பர்பேண்ட் என்று தன்னுடமையை எடுத்தாள்.

யுகேந்திரன் விழி திறந்ததும், தன்னவள் தரிசனம் என்று மகிழ, அவன் பாயில் படுத்திருப்பதும் அறிந்து எழுந்தான்.

ஜீவிதா அவனை ஒரு மார்க்கமாய்க் காண, “என்ன பார்க்கற? கட்டிலில் இருந்து புரண்டு படுக்கும் பொழுது விழுந்திருப்பேன். இல்லைன்னா நான் ஏன்‌ பாயில் படுத்துறங்கணும். எனக்கென்ன உன் பக்கத்துல படுக்கணும்னு ஆசையா?” என்றான்.

“ஆமா ஆமா மெத்தையிலருந்து விழுந்து, பாயில் படுத்தும் மீசையில மண்ணு ஒட்டலை.” என்று அவள் பங்கிற்கு வாரவும், யுகேந்திரனுக்குக் கோபம் வரவில்லை‌. மாறாகச் சிறு வெட்க சிரிப்பு உதிர்த்தது. தன் குட்டு வெளிப்பட்டு விட்டதே.

இரண்டு நாட்களைப் பல்லை கடித்து ஓட்டியவன், மீண்டும் சேர்ந்த நாளில் ஆத்மார்த்த தம்பதிகள் போல இணைந்தார்கள்.

ஏனெனில் அவள் தரையில் பாயில்படுத்த பொழுது அவளை அணைத்துக் கொண்டான். அது ஏதோ காமத்தை தாண்டி காதலை கூட்டியது.

பழிவாங்க மஞ்சள் கயிற்றைக் கட்டியவனென்ற மாயம் லேசாய் மாயமானது.

அடுத்து தாலி பிரித்துக் கோர்க்கும் சடங்கும் நிகழ்ந்தது. யாரையும் அழைத்துப் பெரிதாக நிகழ்த்தவில்லை. ரேகாவின் கணவர் கதிரவன் வழி சொந்தத்தில் இருவர், ரேகா மற்றும் உமாதேவி அவர்கள் வழியில் அவளது தங்கை என்று மட்டும் குழுமியிருந்தனர்.

வீட்டுக்கு வந்தவர்களை ஜீவிதா ஆனந்தமாய் வரவேற்றாள். அதுவே பெத்தவர்களுக்கு மனம் குளிர்ந்தது.

தட்சிணாமூர்த்தி உமாதேவி சம்பந்தியை உட்கார வைத்து பேச, “பொன்னம்மா அம்மாவுக்கு டீ போடுங்க. நேத்து செய்த முறுக்கு அதைத் தட்டுல வச்சி எடுத்துட்டு வாங்க.” என்று ஏவினாள் ஜீவிதா.

அண்ணி உமாதேவியைப் போல மகளும் பணியாளரை வைத்து வீட்டை நிர்வாகம் செய்ய ஆரம்பித்து விட்டாளே என்று பூரித்தார்கள்.

பேசிக் கொண்டே மகளைப் பார்த்து நீண்ட நாட்கள் ஆவதாக வீட்டில் விளைந்தவையை எடுத்துக் கொண்டு புதுத் துணியையும் கொண்டு வந்தார்கள்.

யுகேந்திரன் பைக் சப்தம் கேட்டு ஜீவிதா “அவர் வந்துட்டார்” என்று குதிக்காத குறையாகக் கூற, வாசலிலேயே தாய் தந்தை வந்ததை யுகேந்திரனிடம் தெரிவிக்க ஓடினாள்.

“அப்….அப்பா அம்மா வந்திருக்காங்க” என்று ஆசையாகக் கூறினாள்.

“ஏன் வந்தாங்க” என்று கேட்டான். ஜீவிதா முகம் அவ்வார்த்தையில் வாடினாள்.

“தாலி பிரிச்சி கோர்க்க” என்றாள்.

“ஓ” என்றவன் கூடத்திற்கு வரவும், கதிரவன் மாப்பிள்ளை வந்ததால் மரியாதைக்கு எழுந்தார்.

“வாங்க..” என்று இரண்டு பேரிடமும் பொதுவாய் உரைத்துவிட்டு அறைக்குச் சென்றான்.

ஜீவிதாவிற்கோ இவர் இன்னமும் மாறலை. அதே கத்தரித்த பேச்சு. மனசை வதைக்கிற செயல், என்று அறிந்தாலும் தாய் தந்தையிடம் நடிக்க ஆரம்பித்தாள்.

சற்று நேரம் பொதுப்படையாகப் பேசிட, யுகேந்திரன் தந்தை தட்சிணாமூர்த்திக்குப் பக்கத்தில் வந்து அமர்ந்தான்.

“மாப்பிள்ளை நீங்களும் மக பக்கம் போய் நில்லுங்க” என்றார் கதிரவன்.

”தாலி பிரிச்சி கோர்க்க நான் எதுக்கு? இங்கன இருக்கற இடத்துக்கு வாரத்துக்கு ஒரு முறை கூட வரலாம். நீங்க வராததால தூரமோன்னு நினைச்சிட்டேன். இன்னிக்கு நீங்க வந்தது விஷேஷத்திற்கா?” என்று ஊசியை இறக்கினான்.

ஜீவிதாவோ, ‘ஆமா இவர் மட்டும் வார வாரம் அம்மா வீட்டுக்கு அழைச்சிட்டு போறார். கல்யாணம் ஆன அடுத்த நாளே தங்கமாட்டேன்னு வீம்பு பிடிச்சு வந்தார்.’ என்று முனங்கினாள்.

“இனி மாசம் ஒரு முறை தலைகாட்டிட்டு பிள்ளையைப் பார்த்ததுட்டு போவோம் மாப்பிள்ளை. இது டவுனுக்குப் போனப்ப உங்களுக்கும் ஜீவிதாவுக்கு வாங்கியது” என்று உடைகளை எடுத்து கொடுத்தார். அவரால் வேறென்ன பதில் பேச முடியும்?!

யுகேந்திரன் எப்பவும் உடை வாங்குமிடமாகத் திருமணத்தில் கேட்டு வைத்திருந்ததால் அங்கே வாங்கியிருந்தனர்.

கணவனும் மனைவியுமாகச் சேர்ந்து, தாலி பிரித்துக் கோர்த்தப்பின் பெற்றவர்களிடம் ஆசி வாங்கிக் கொண்டார்கள்.

“உமா” என்று தட்சிணாமூர்த்திக் குரல் தர, உமாதேவி ஸ்டோர் ரூமிற்குச் சென்றார். அங்கே ஒரு நகைப்பெட்டியை சுமந்து வந்தவர், கணவரிடம் கொடுக்க, அதனை வாங்கித் தங்கையிடம் நீட்டி, “அம்மா கடைசியா உனக்குன்னு செய்தது. அப்பா உயிரோட இருந்தவரை அம்மாவை உன்னைப் பார்க்க விடலை, பேச விடலை, இந்த நகையையும் கொடுக்கவிடலை என்னைக்காவது பேசி சுமூகமானா கொடுத்திடுன்னு அம்மா என்னிடம் கேட்டுக்கிட்டாங்க. எனக்கும் அப்பா மீறி எதையும் செய்து வழக்கம் இல்லை.

அப்பா போனப்பிறகு இதெல்லாம் கொடுக்க எடுத்து வச்சது.

முன்ன கல்யாணம் பேசி முடிச்சதும் உன்னிடம் கொடுக்கலாம்னு இருந்தேன். ஆனா அப்ப நீ சம்பந்தி. இப்ப அப்படியில்லை. தங்கச்சிக்கு இந்த அண்ணா மனசாரத் தர்றேன்” என்று வழங்கினார் தட்சிணாமூர்த்தி.

ரேகா கண்கலங்கி “இருக்கட்டும் அண்ணா. நீங்க என்னை மன்னிச்சி, என்‌ மகளை, மருமகளா ஏற்றுக்கொண்டதே போதும். என் மக இந்த வீட்டு மருமக அவளே போட்டுக்கட்டும்” என்று மறுத்தார்.

“மருமகளுக்குப் பரம்பரை நகை போய்ச் சேரும். நீ இதை வாங்கு” என்று தட்சிணாமூர்த்திக் கொடுக்க, ரூபியில் செய்த ஆபரணம் கை மாறி ஜோலித்தது.

கொஞ்ச நேரத்தில் பிறந்த வீட்டில் கொடுத்த சேலை நகையை மாற்றி வந்தாள் ஜீவிதா.

ரேகா மகளை உச்சியிலிருந்து பாதம் வரை காணும் போது இடையில் இடுப்பில் வெள்ளி சாவி கொத்து அலங்கரித்தது. அதில் வீட்டில் காலம் காலமாக உபயோகிக்கும் சாவி கொத்து மிளிர்ந்தது.

ரேகா ஆச்சரியமாய்ப் பார்வையிட, பாதி வழியிலேயே யுகேந்திரன் வழிமறைத்து, ஜீவிதாவை அறைக்குக் கைப்பிடித்து அழைத்துச் சென்றான்.‌

“எதுக்கு இழுத்துட்டு வர்றிங்க? அங்க எல்லாரும் பார்த்திருப்பாங்க.” என்றாள்.

“எனக்குத் தான் உன்னைக் கல்யாணம் கட்டி கொடுத்திருக்காங்க. நான் உன் கையைப் பிடிச்சி இழுக்கலாம்.” என்றான் அழுத்தமாய்.

அறைக்கு வந்ததும் இடுப்பிலிருந்த சாவி கொத்தை எடுத்தான்.

“அ…அத்தை ஆசையா மாட்டிவிட்டாங்க ஏன் எடுக்கறிங்க” என்று கேட்டாள்.

“இப்பவே போடணும்னு அவசியமில்லை. முதல்ல எல்லாம் மாறட்டும்.” என்று கூறி சாவிக்கொத்தை அவன் லாக்கரில் வைத்தான்.

அழகான விழாவில் லேசாக அதிருப்தி. ஜீவிதா சாவி கொத்திற்கு எல்லாம் ஆசைப்பட வில்லை. ஆனால் இப்படிக் கூறினால்…

ஜீவிதாவிற்கு மனம் ரணமானது. இந்த வீட்டு மருமகளுக்கு இதை அத்தை போட்டு அழகு பார்த்தார்‌. இவரோ இன்னமும் தன்னைத் தன்னில் ஒருத்தியாகப் பாவிக்கவில்லை, தான் கொஞ்சம் கூட அவரது மனதை பாதிக்கவில்லையா? என்று சோர்ந்தாள்.

“ஏய்… முகத்தைத் தூக்கி வைக்காம போய் உங்க அம்மா அப்பாவை கவனி.” என்றான் யுகேந்திரன்.

கொலுசு கால்கள் தரை அதிர, வெளியேறினாள்.

மகள் வரும் போது சாவிக்கொத்து இல்லையென்றதும், சற்று முன் சென்ற யோசனைகள் கலைந்தது.

வீட்டு விஷயம் எதுவும் கேளாமல் அங்கே சாப்பிட்டு மகளோடு பேசி புறப்பட்டார்கள். ஏதோ எந்தச் சஞ்சலமும் வராமல் புறப்படுவதே நல்லதென மகிழ்ந்தனர்.

இதில் மகள் இவ்வீட்டில் சந்தோஷமாக இருப்பதாக எண்ணினார்கள்.‌ உண்மையும் அதுதான். முதலில் கொஞ்ச நாள் மனதை நோகடித்த பேச்சு இருந்தது. அத்தை ஆதரவாகப் பேசவும் அம்மாவிற்காக மாறிவிட்டானே யுகேந்திரன்.

ஜீவிதாவிற்கு அம்மா அப்பாவோடு தானும் செல்லும் எண்ணம் தோன்றியது. அவர்களைப் பார்த்து விட்டதால் வந்த எண்ணம்.

இங்கு ஒருவனிடம் கூறினால், ‘உங்க வீட்டுக்கு மொத்தமா போ’ என்று கூறுவான்.

எதற்கு வம்பு? என்று படுக்கச் சென்றாள். அவன் அப்படிச் சொன்னால் இப்பொழுது எல்லாம் மனம் வலிக்கின்றது.

இதுநாள் வரை மஞ்சள் கயிற்றில் பொன் தாலி மட்டும் இருந்தது. இன்றோ தங்க செயினில் மாங்காய், மகாலட்சுமி என்று என்னையென்னவோ கோர்த்து கொடுக்க, கணமாக இருந்தது.

தாலி மட்டுமல்ல அதைச் சுமந்தவளும் பாரத்தோடு இருந்தாள்.

எப்பொழுது திரும்பிபடுத்தவுடன், யுகேந்திரனின் கைகள் அழுத்தமாய் இடையில் பதிந்து தங்கள் உலகிற்கு அழைத்துச் செல்வான்.

இன்று இவ்வளவு நேரமாகியும் யுகேந்திரன் கைகள் தீண்டாமல் போகத் திரும்பி திரும்பி பார்த்தாள்.

அவளின் அசைவு அவனை அசைத்தது “என்ன?” என்றான்‌.

‘ஒ..ஒன்னுமில்லை.” என்று திரும்பிக் கொண்டாள்.

சற்று நேரம் பொறுக்க முடியாமல் யுகேந்திரனை பார்த்து மீண்டும் திரும்பினாள்‌.

அவனோ விட்டத்தைப் பார்த்துச் சிந்தனையில் மூழ்கியிருந்தான்.

தன்னை ஒருத்தி பார்வையிடுவதைக் குறுகுறுப்பில் உணர்ந்து திரும்ப, சட்டென இமை மூடினாள்.

அடிக்கடி இப்படியே இவன் திரும்ப அவள் கண்ணை மூட என்றிருக்க, யுகேந்திரன் மனைவி கண் திறந்து தன்னைக் காணவும், “என்ன விளையாடறியா? எதுக்கு என்னைப் பார்க்கற? என்ன வேணும்” என்று அதட்டினான்.

மறுப்பாய் தலையாட்டி திரும்பப் பார்த்தாள்.

“ஏய் திரும்பாதடி, இப்ப எதுக்கு என்னைப் பார்த்த? ஏன் கண்ணை மூடற?” என்று வினாக்கேட்டு கையைப் பிடித்தான்.‌

“ஒன்னுமில்லை” என்று மழுப்பிக் கூற, நம்பாமல் விடாப்பிடியாகக் கேட்டான்.

திக்கி திணறி “நீங்க தானே… அன்னைக்கு….

ருசிகண்ட பூனை தெரியுமா? என் நிலைமையும் அப்படித் தான். என்னால உன்னைய வச்சிட்டு திரும்பி படுத்துத் தூங்குறது சாத்தியமாயில்லை. நீ வேற இந்த ரூமையே மல்லிகைப்பூ வாசத்தை வச்சி மயக்கத்தைக் கொடுத்துட்டு இருக்க. அதனால் பலியாடு எப்பவும் போல…. நீ தான்னு என்னைச் சொன்னிங்க.

அன்னைக்கு அப்படிச் சொன்னதால… இன்னிக்கும் நான் தேவைப்படுவேனோனு திரும்பி பார்த்தேன்ன்ன்ன்…. ஏன்னா.. தூங்கிட்டா திரும்ப எழுந்துக்கணும்.” என்றதும் யுகேந்திரன் மனதில் சிலிர்ப்பு ஏற்பட்டது.

அவன் தீண்டல், சீண்டல் இவளுக்குப் பிடிக்காமல் வாழ்கின்றாளோ, என்று அல்லவா அவன் தற்போது சிந்தித்தது.

அவளாக இப்படிக் கேட்க, ஆனந்தம் வராமலா?

“நான் நெருங்கறது உனக்குப் பிரச்சனையில்லையா?” என்று கிசுகிசுப்பாய் கேட்டு, முகமருகே வந்தான்.

இல்லையென்று தலைக்குனிந்து தலையாட்டி அவனை ஏறிட்டு காண தயக்கம் காண்பித்து மொட்டு போலப் பார்வையை விரிக்க, அவளிதழில் வலிக்காமல் தினசரி கட்டுரை எழுத முத்தமெனும் முகவுரை துவக்கினான்.

-தொடரும்.

6 thoughts on “உயிரில் உறைந்தவள் நீயடி-10”

    1. M. Sarathi Rio

      உயிரில் உறைந்தவள் நீயடி…!
      எழுத்தாளர்: ப்ரவீணா தங்கராஜ்
      (அத்தியாயம் – 10)

      அதாவது அவளை குதர்க்கமா பேசி, அடிச்சு, திருத்தி…
      அவனுக்கேத்த மாதிரியே வளைச்சிட்டான்னு சொல்றிங்க..
      இரும்பை அடிக்க அடிக்க வளைஞ்சு கொடுத்து ஆயுதம் ஆகுற மாதிரி.
      அப்படித்தானே ?

      😀😀😀
      CRVS (or) CRVS 2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!