Skip to content
Home » உயிரில் உறைந்தவள் நீயடி-2

உயிரில் உறைந்தவள் நீயடி-2

அத்தியாயம்-2

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

தட்சிணாமூர்த்தியின் மனைவி உமாதேவி தன் கணவருக்குத் தண்ணீர் கொடுக்க, வாங்கிப் பருகினார்.‌

கூடத்தில் இருந்த தந்தை மகேந்திரன் தாய் அம்பாள் புகைபடத்தைப் பார்த்தார். அதில் உங்கள் நிலையில் தங்கை இருக்கின்றாள். நான் தவறாகப் பேசி அவளைக் காயப்படுத்திடக்கூடாது நீங்கள் தான் எனக்கு வார்த்தையில் நிதானத்தைத் தர வேண்டுமென்று பார்த்துக் கொண்டார்.

அதன் பின்னரே தொண்டையைச் செருமி, “வீட்டுக்கு வந்தவங்களுக்கு டீ காபி குடிக்கக் கொடுத்தியா உமா?” என்றார் தட்சிணாமூர்த்தி.

“டீ கொடுத்தாச்சுங்க… ஆனா ஏடு விழுந்து ஆறுது. உங்களிடம் பேசாம தொண்டையில் தண்ணி கூட இறங்க முடியாது தவிக்கறாங்க போல.” என்றார்‌ உமாதேவி.

பதியை அறிந்த சதியாக…

தட்சிணாமூர்த்தி வரவும் வீற்றிருந்த தங்கை ரேகா, மச்சான் கதிரவன் எழுந்தனர்.

ரேகா உடைந்திடும் மனநிலையில், “அண்ணா… அந்தப் பாவி நம்பி கழுத்தறுத்துட்டா அண்ணா” என்று குலுங்கி அழுதார்.

“மச்சான்… எங்களை மன்னிச்சிடுங்க வினிதா இப்படிப் பண்ணுவான்னு நினைக்கலை. நம்பிக்கை துரோகம் பண்ணிட்டா. அவளை நல்லா தான் வளர்த்தோம். ஏன் புத்தி மாறுச்சுன்னு புரியலை” என்றார் கதிரவன்.‌

ரேகாவுமே கதிரவனும் காதலித்து மணந்தவர்கள் என்றதை அச்சூழலில் மறந்து பெற்றவராகப் பேசினார்கள்.

தட்சிணாமூர்த்தித் தொண்டையை மீண்டும் செருமி, “காதலிச்சு ஓடியதும் வீட்ல பெத்தவங்க மனசு எப்படித் துடிக்கும்னு தெரியும் மாப்பிள்ளை. எங்கப்பா அம்மா அனுபவிச்சிருக்காங்க.

கூடவே நம்ம வீட்ல வளைய வந்த பொண்ணு, கல்யாணம் பேசறப்ப, நான் ஒருத்தனை விரும்புறேன், அவனைத் தான் கட்டிப்பேன்னு முகத்துல கரியை அள்ளி பூசி, துரோகம் பண்ணிட்டு படி தாண்டிபோறதும், புத்தி மாறுவதும் எல்லாம் சகஜம் தான். எங்களுக்கு ஏற்கனவே பழகியது தான். கர்மான்னு ஒன்னு இருக்கு இல்லையா.

நாம மறந்தாலும் அது திருப்பிக் கொடுக்குது.

அதனால் நாங்க வேற உங்களிடம் சம்பந்தம் பேசிட்டோம்னு வார்த்தையால வதைக்க மாட்டோம்.

கவலைப்படாதிங்க..‌ நல்ல வேளை கல்யாணமானப் பின்ன வீட்டை விட்டு ஓடலைன்னு சந்தோஷப்படலாம்.

என்ன… நாங்களா வந்து தங்கை உறவு வேண்டும்னு திருமணம் பேசி இப்ப எங்க கௌரவம் சேர்ந்து போச்சு.” என்று வாழைப்பழத்தில் ஊசியேற்றி வதைக்கும்படி பேசினார்.‌

தட்சிணாமூர்த்திக்கு தங்கையா? தன் மகனா? என்ற தராசு தட்டில் வைக்க, தன் மகனை வேண்டாமென்று எவனையோ காதலித்து ஓடிய ஓடுகாலியை வஞ்சனையின்றி நாகரீகமாய்த் திட்டினார்.

கதிரவன் கூனிக்குறுகி, “எங்களை மன்னிச்சிடுங்க‌ மச்சான். இப்ப என்ன செய்யறதுன்னு சத்தியமா தெரியலை. யாரோ வந்து சொல்லி நீங்க கேட்கறதை விட, நாங்களே எங்க வளர்ப்பில் வீட்டை விட்டு ஓடியவளை பத்தி சொல்லிட்டு போக வந்தோம்.

இப்ப புரியுது.. அத்தை மாமா எந்தளவு கலங்கி துடிச்சிருப்பாங்கன்னு.” என்று கண்ணீர் வடித்தார்.

முன்பு செய்தவைக்கு இன்று மன்னிப்பு கேட்டு என்ன மாற்றம் நிகழப்போகின்றது. அன்று காதலித்த இவர்கள் வாழ்வு மாறிவிடுமா? அல்லது இன்று காதலித்து ஓடிப்போன மகளின் நிலை தான் மாற்றம் பெறுமா?

விதி எதையும் மாற்றாதே.

அறைக்குள் இவ்வளவு நேரம் அங்குமிங்கும் நடையிட்ட நாயகன் யுகேந்திரனோ நிதானமாய் வெளியே வந்தான். ”இப்ப எதுக்கு அத்தை மாறிமாறி மன்னிப்பும் வேதனையும்.

வினிதா ஒன்னும் என்னைப் பிடிக்கலைன்னு கட்டிக்காம ஓடலையே மாமா. அதுக்கு எனக்கு அவளைப் பேசி முடிக்கும் முன்ன, இன்னொருத்தரை பிடிச்சதால போயிடுச்சு. என்ன… எப்படியிருந்தாலும் எங்கத்தை இந்த வீட்லயிருந்து போறப்ப தாத்தா பாட்டி எதிர்ல தாலி கட்டின கௌரவமா போனதா கேள்விப்பட்டிருக்கேன். வினிதா அவசரப்பட்டு ஊர் வாயில விழுந்து ‘ஓடுகாலி’னு பெயர் வாங்கிட்டா.

சொந்தம் ஒன்னா சேருதுன்னு ஆசை ஆசையா இருந்திங்க. அப்பாவும் அத்தையும் இப்ப மறுபடியும் கலங்கி போய் நிற்கறாங்க.

இதுக்கு நான் ஒரு தீர்வு சொல்லட்டா?” என்றான் எல்லாரையும் பொதுப்படையாகப் பார்த்து.

ரேகா என்ன என்பது போல அண்ணன் மகனை பார்த்தார்.

“உங்களுக்கு அப்பாவை மாதிரி ஒரே வாரிசு இல்லையே. இரண்டு பொண்ணுங்க இருக்காங்க. நீங்க ஜீவிதாவை எனக்குக் கட்டிக்கொடுங்க மாமா.

கல்யாண பத்திரிக்கையில பொண்ணு பெயர் மட்டும் மாறும். மத்தபடி சொந்தம் பந்தம் அதே பெயரை தானே எழுதப் போறோம்.

அப்பா… நீங்களும் எனக்கு வந்த வரன் எல்லாம் தவிர்த்து ரேகா அத்தை மகளைக் கட்டி வைக்கத் தானே யோசித்திங்க. உங்க விருப்பம், ரேகா அத்தை மகளைக் கட்டிக்கணும்னு ஆசை இருந்தா ஜீவிதாவை கல்யாணம் பண்ணிக்கறேன். எனக்குத் தோன்றியதை சொல்லி கேட்டேன். மத்தது உங்க இஷ்டம்.” என்று தோளைக் குலுக்கினான்.‌

ஆறடி உயரம் அதற்கு ஏற்ற உடற்கட்டு, அலையலையாகப் புரளும் கேசம், எதிரில் இருப்பவரை எல்லாம் யோசிக்காமல், தன் பேச்சுச் சாமர்த்தியத்தில் வளைத்து விடும் குணம்.

யுகேந்திரனுக்குத் தந்தை பேசும் முன் நடுவே வருவது பிடிக்காதது. அதனால் பெரும்பாலும் அவர் இருந்தால் நடமாடுவதைக் குறைத்து கொள்பவன். அவராக வாக்கு தந்துவிட்டு வந்து உரைத்த பொழுது, பெற்றவர் சொல்லுக்குக் கட்டுப்பட்டு வினிதாவை மணக்க தயாராக இருந்தான். இன்று அவனாக வந்து கூடத்தில் தன் கருத்தை முன்னிறுத்தினான்.‌

தட்சிணாமூர்த்திச் சிந்தனைவயப்பட்டவராய் மைந்தனை பார்த்திட, அவனோ கழுகு போலக் கதிரவனை ஏறிடுவதைக் கண்டார்.

கதிரவன் சில நிமிடம் தலைக்குனிந்து யோசித்தவர் முடிவெடுத்தவராக “மச்சானுக்கு இப்பவும் என் குடும்பத்துல பொண்ணு எடுக்க விருப்பம்னா, அப்படியே செய்திடலாம்” என்றார்.

இது நல்ல யோசனை தான். எத்தனையோ திருமணம், மேடை வரை வந்து அக்காவிற்குப் பதிலாகத் தங்கையை மணம் முடித்ததாக, விஷயம் கேள்விபட்டதுண்டு. இங்கே அதற்கு முன்னே அறிந்ததால் கல்யாணப் பத்திரிக்கையில் பெயரை மாற்றம் செய்திடலாம்.

தட்சிணாமூர்த்தி மைந்தன் யுகேந்திரனை காண, அவனோ தந்தையைப் பார்த்துப் பவ்வியமாகக் கையைக் கட்டி நின்றான். இதற்கு மேல் நீங்கள் தான் முடித்து வைக்க வேண்டும் என்பதைப் போல.

“என் மகன் அவனா ஒரு விஷயத்தைக் கேட்கறான்னா, அவனுக்கு அதுல உடன்பாடு உண்டுன்னு அர்த்தம்.

அப்படியிருக்க இதுல நான் தலையிட என்னயிருக்கு?

கல்யாணத்துல பொண்ணு தான் வேற, இந்தக் கல்யாணம் அதே நாளில் அதே முகூர்த்தத்தில் நடக்கும்னா தாராளமா நடத்திடலாம்” என்றவர் தங்கையிடம் தண்ணீரை கொடுக்க, ரேகா வாங்க மறுத்து அண்ணன் தோளில் சாய்ந்து தழுதழுத்தார்.

கதிரவனோ “உங்க நல்ல மனசுக்கு நன்றி மச்சான்” என்றுரைத்து வணங்கினார்.‌

யுகேந்திரனோ “அதுக்குள்ள நன்றியெல்லாம் வேண்டாம் மாமா. முதல்ல உங்க இளைய பொண்ணிடம் கல்யாணத்துக்குச் சம்மதமானு வீட்ல போய்க் கேட்டுக்கோங்க. ஏன்னா அவளும் யாரையும் காதலிச்சிருக்ககூடாது. நீங்க முதல்ல மாதிரி தலையாட்டிட்டு பிறகு அந்தப் பொண்ணும் கல்யாணம் வேண்டாம்னு சொல்லிடப்போகுது.

வீட்டுக்கு போய் நிதானமா அதுக்கிட்ட கேட்டுட்டு, பிறகு கல்யாண சேதியை பேசுவோம்.” என்றவன் “பொன்னம்மா..‌. டீ ஏடு விழுந்து கிடக்கு, அதை எடுத்துடு. நம்ம வீட்ல கடைந்த சுத்தமான மோரை கொண்டாந்து கொடு வெயிலுக்கு இதமா இருக்கும்” என்று வேலைக்கார பெண்ணிடம் உரைத்தான்.

கதிரவனோ “சின்னது அப்படிச் செய்யாதுங்க மாப்பிள்ளை‌‌.” என்றார்.

யுகேந்திரனோ “எதுக்கும் நேர்ல கேட்டே முடிவெடுத்துட்டு சொல்லுங்க மாமா. அந்தபுள்ள தலையாட்டினா கல்யாண பத்திரிக்கை அடிக்கக் கொடுப்போம். இல்லைன்னா… அப்பாவுக்குத் தங்கையா மட்டும், அத்தை இங்க வந்துட்டு போகட்டும். மாப்பிள்ளைன்னு என்னைச் சொல்ல தேவையில்லை பாருங்க. இப்ப எல்லாப் பொண்ணுங்க பசங்க எல்லாம் கல்யாணத்தை அவங்க அவங்க விஷயமா முடிவெடுக்கறாங்க. அதுவும் பொம்பள பிள்ளைங்க, படிச்சதுங்க சம்பாதிக்குதுங்கன்னு வையுங்க கையில பிடிக்க முடியாது‌” என்றான்.

கதிரவனுக்கு நெஞ்செல்லாம் அழுத்தியது. ஒரு காலத்தில் ரேகாவை இதேயிடத்தில் தாலி கட்டி அழைத்து, ஆணாக வீராப்பாய் மாமனார் மகேந்திரன் முன் பேசியது. அதெல்லாம் தனக்குச் சவுக்கடியாக இன்று அவர் பேரனிடம் விழுகின்றது. அது புரிந்ததால் “சரிங்க மாப்பிள்ளை” என்று முடித்துக்கொண்டார். இன்று மறுத்து வாதாடவும் மனமில்லை, தெம்புமில்லை. கதிரவனும் யுகேந்திரனிடம் வார்த்தை கூடுதலாக விடச் சற்று பம்மினார்.‌

ரேகாவோ மகளின் செய்கையிலேயே ஆடிப்போனார். அதனால் இந்த விவகாரத்தில் தலையீடுவதைக் காட்டிலும், “என்னைச் சம்பந்தியா பார்க்காத அண்ணா. எப்பவும் உன் தங்கையா பாரு. நான் இந்த வீட்டு பொண்ணு” என்று அண்ணன் காலைப் பிடித்து அழுதார்.

உமாதேவியோ ‘என்னங்க அண்ணி பண்ணறிங்க எழுந்து நில்லுங்க. வேலைக்காரங்க பார்த்து ஏதாவது பேசவா?” என்று எழுப்பினார்.

தட்சிணாமூர்த்தியுமே “ஏங்கண்ணு தங்கை உறவு வேண்டுமின்னு தான், வந்த வரனை தவிர்த்து வினிதாவை கேட்டது. அந்தக் கழுதை அப்படிப் போகும்னு யார் கண்டது. சின்னப் புள்ளயை கல்யாணம் கட்டிக்கிறதா, அந்தா… உம் மருமகன் சொல்லறாரே. கண்ணைத் துடைச்சி மோரை குடி” என்று இருக்கையில் அமர வைத்தார்.

வேலைக்கார பெண் பொன்னம்மாவால் டீயை எடுத்துவிட்டு, அங்கே மோர் வழங்கப்பட்டது.

கதிரவன் எடுக்கத் தயங்க, யுகேந்திரனோ “தயங்கமா எடுத்து குடிங்க மாமா. அடுத்து உங்க சின்னப் பொண்ணு கல்யாணத்துக்குச் சம்மதிச்சலும் சம்மதிக்காட்டியும் எங்கப்பாரு அத்தையைத் தங்கையாக ஏற்றுப்பார்” என்றான்.

அடுத்த நிமிடம் கதிரவன் மோர் டம்ளரை கையில் எடுத்து பருகினார். எப்படியும் ஜீவிதாவை மணக்க இவர் தான் பேச வேண்டும். அதற்காகவே இலைமறையாய் கனலை கொட்டினான். நிச்சயம் இதே புகைச்சல் அங்கே ஜீவிதாவிடம் இவர் பேசினால் தீயாக எரியும். சாணக்கியனாகக் காய் நகர்த்தினான் யுகேந்திரன்.

கதிரவனும் வீட்டுக்கு சென்று ஜீவிதாவிடம் திமணத்திற்குப் பேச வேண்டும். என்று ரேகாவை அழைத்து நந்தவனம் வீட்டில் இருப்பவர்களிடம் விடைபெற்று எழுந்தார்கள்.

ஜீவிதா மூன்றாண்டு காலமாக ஊட்டியில் தங்கி இளங்கலை படிக்கச் சென்று திரும்பியவள். விடுமுறை, திருவிழா என்றால் மட்டுமே இவ்வூர் பக்கம் தலையைக் காட்டுவாள்.

தற்போது முதுகலை எம்.எஸ்.சி படிக்க இங்கே இருக்கும் கல்லூரியில் விண்ணப்பம் போட்டு இரண்டு மாதம் முடிய, எப்படித் திருமணத்திற்குச் சம்மதிக்கப் போகின்றாளோ? நெஞ்சில் கிலியிருந்தும் மகள் காலில் விழுந்தாவது இத்திருமணத்திற்கு ஏற்க வைக்கும் பொருட்டு முடிவெடுத்தார் பெற்றவர்கள். அப்படி மறுக்கும் பட்சத்தில் இறப்பை நாடிட முடிவெடுத்தார்கள்.

-தொடரும்.

-பிரவீணா தங்கராஜ்.

4 thoughts on “உயிரில் உறைந்தவள் நீயடி-2”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!