அத்தியாயம்-4
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
காலை ஆறு ஆறரைக்குத் தாலி கட்டிய கையோடு யுகேந்திரன் முகம் கற்பாறையானது.
புகைப்படம் ஓரளவு எடுத்து முடித்த நிலையில், உணவை சாப்பிட உமாதேவி கூறவும், படிக்கட்டில் வேகமாகப் பயணித்தான்.
கூடவே ஒருத்தி தன்னோடு வர, சற்று நிதானமாகச் செல்ல வேண்டுமென்பதை வேண்டுமென்றே தவிர்க்க நினைத்தான். உமாதேவியோ மைந்தனிடம் ‘யுகேந்திரா… மருமகளையும் கைப்பிடிச்சி அழைச்சிட்டு போடா” என்று நிறுத்தி கூறவும், அவளைத் திரும்பி பார்த்தான்.
படியில் அந்தக் காஞ்சிபட்டை கட்டி, கால் தடுக்காமல் அழகாக, மெதுவாக நடந்து வந்தாள்.
அவளால் யுகேந்திரனின் நடைக்கு வேகம் கொடுக்க முடியவில்லை.
அன்னையின் பேச்சால் நின்றவன், அவளது அழகிய வதனத்தில் சில நொடி தொலைந்தான். ஆனால் அருகே வந்ததும் “உனக்கு என்னோடவே வேகமா வரத்தெரியாது. நிதானமா அன்னநடை போட்டு வருவியா? உன்னால எங்கம்மாவிடம் பேச்சு வாங்க வைக்கிற” என்று கைப்பிடித்து இழுத்தான்.
உமாதேவிக்கு மைந்தன் செய்கை பிடிக்கவில்லை. ஏதோ பிடிக்காத திருமணம் செய்து கொள்வதாக நடப்பதேனோ? அவனுக்கு வினிதாவை கொஞ்ச நாட்கள் முன் பார்த்தான். என்னவோ காதலித்தவள் கைவிட்டதாக ஜீவிதாவை நடத்துகின்றான். அப்படிப் பார்த்தாலும் இவளை இவனாகத் தானே மணந்து கொள்வதாகக் கேட்டான்?!
‘யுகேந்திரன் கூடவே வர ஜீவிதாவும் தான் நினைத்தாள். அவன் வேகம் விட்டுச் செல்லும் முடிவோடு ஓடுவதாகத் தானே தெரிந்தது.
இங்கு இவளிடம் எரிந்து விழுந்துவிட்டு, பந்தியில் உறவுகளில் ‘நல்லா சாப்பிடுங்க’ என்று சிரித்துப் பேசி அமர்ந்தான்.
மாப்பிள்ளை வந்துவிட்டதாக யுகேந்திரனின் நண்பன் ஜெகன் தனி இலை போட்டான். மணமகளுக்கு வழியை விட்டு அமர, ஜீவிதா யுகேந்திரன் அருகே அமர்ந்தாள்.
புகைப்படக்காரர் சூழ்ந்திருக்க வேண்டும். ஆனால் யுகேந்திரன் புகைபடக்காரனிடம் கீழேவே அவர்கள் வருகையை மறுத்துவிட்டான். சாப்பிடறதெல்லாம் எடுக்க வேண்டாம் அதுக்குப் பதிலாக நீங்க கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் பண்ணுங்க. இல்லை நீங்களும் சாப்பிடுங்க ‘ என்றான்.
தலைவாழை இலையில் தண்ணீர் தெளித்து இனிப்பை வைத்து கல்யாண சாப்பாடு பரிமாறப்பட்டது.
ஜீவிதாவிற்குப் பிடிக்காத ஸ்வீட் தவிர்க்க பார்க்க, “எதையும் வேண்டாமென்று சொல்லாம சாப்பிடு. இதுவொன்னும் உங்க அக்கா கல்யாண சாப்பாடு இல்லை. நம்ம கல்யாண சாப்பாடு” என்றான் யுகேந்திரன்.
”எனக்கு ட்ரை குலோப்ஜாமூன் பிடிக்கும். ஜீராவுல ஊறியது பிடிக்காது. வேண்டாம் மச்சான்” என்றாள்.
“உனக்கு இந்தக் கல்யாணமே பிடிக்காது. ஆனாலும் என் கையால் தாலி வாங்கியிருக்க. வாழ்க்கையே பிடிக்காம வாழ தயாராகிட்ட, குலோப்ஜாமூன் திங்க என்ன கேடு? திண்ணு தொலை” என்று கடித்துக் குதறினான்.
ஜீவிதா யுகேந்திரனை குழப்பமாய்ப் பார்க்க, “என்னடி முறைக்குற?” என்றான்.
ஒன்றுமில்லை என்று தலைசைத்து இலையில் கண்பதிக்க, “சாப்பிடு” என்று அழுத்தி கூறினான்.
எப்படியும் இதைச் சாப்பிட்டாவிட்டால் வேண்டுமென்றே சண்டை பிடிக்க நேருமோயெனச் சின்னக் கப்பில் ஊறிய குலோப்ஜாமூனை எடுத்து விழுங்கினாள். அதில் இரண்டு இருந்தது. மடமடவென மாத்திரை போலச் சாப்பிட்டுத் தண்ணீர் அருந்தினாள்.
”ஜீராவை உங்கப்பா வந்து குடிப்பாரா?” என்றதும் “எனக்கு அதிகப்படியான தித்திப்பு பிடிக்காது மச்சான்” என்றாள்.
“இன்னிக்கு நமக்குக் கல்யாணம். இது கல்யாண சாப்பாடு. இது பிடிக்காது அது பிடிக்காதுனு சொல்லாம எல்லாத்தையும் சாப்பிடணும்.” என்றவன் ஜீராவை குடிக்க வற்புறுத்தினான்.
ஜீவிதா கஷ்டப்பட்டுக் குடித்து முடித்து உணவை சாப்பிட ஆரம்பித்தாள். அவளுக்கு ஜீரா குடித்த பின் சாப்பாடு சாப்பிடவே அறவே பிடிக்காமல் போனது. ஆனாலும் கசப்பாகப் பேசுபவனிடம் இந்த நிமிடம் புரிய வைக்க முடியாது. திருமணத்திற்கு வந்தவர்கள் அவர்களைத் தானே பார்வையிடுகின்றனர்.
சாந்த சொரூபியாக மாறி தலைக்குனிந்து சாப்பிட, யுகேந்திரனோ அவளைக் கண்ணீர் விட வைக்கும் பொருட்டு, அவனது குலோப் ஜாமூனை அவள் இலையில் வைத்து, “என் வாழ்க்கைக்கு இனிமை சேர்க்க வந்த நல்லவ நீ. அதனால் என் இனிப்பும் உனக்குத் தான். சாப்பிடு ஜீவிதா.” என்றான் இனிக்கும் விதமாக.
கண்ணெல்லாம் கண்ணீர் திரள அவனை ஏறிட்டாள். கண்ணீர் உடைத்துக் கன்னம் வரவேண்டும் என்பது யுகேந்திரனின் பேராசை. ஆனால் தன்னைக் கட்டுப்படுத்திக் கண்ணீரை வெளியேற்றாமல் ஜீராவோடு குலோப் ஜாமூனை விழுங்கினாள் ஜீவிதா.
அவளது அமைதி யுகேந்திரனை வெறுப்பேற்ற, ‘ரியாக்ஷன் தராம இருக்காளே, கண்ணு முழுக்கக் கண்ணீர், ஆனா இரண்டு சொட்டு வெளிய வர விடறாளா ‘ என்றவன் பந்தியில் பரிமாறும் நண்பனிடம் “ஜெகன் கல்யாண பொண்ணுக்கு குலோப் ஜாமூன் வேண்டுமாம் இன்னும் நாலு எடுத்துட்டு வாடா” என்றான்.
ஜீவிதாவுக்கு நடப்பது திட்டமிட்ட பழிவாங்குதல். அக்காவால் தன்னைப் பாடாய் படுத்துவது புரிய, இலையில் எத்தனை வைத்தாலும் சாப்பிடும் முடிவோடு வைக்க வைக்க எடுத்து வாயில் அதக்கினாள். அவள் வேறு யாரையும் ஏறிட்டு பார்க்கவில்லை.
அவள் கடோத்கஜன் தங்கையாக விழங்க நண்பன் ஜெகனோ ‘ஏன்டா இப்படிச் செய்யுற?’ என்று பார்வையால் கேட்டுப் ‘பாவம் டா’ என்றான் மெதுவாக.
“போதும் ஜெகன்” என்று நண்பனுக்காக அவனிடம் கூறிவிட்டு, அவளை ஊடுருவி தன் இலையில் இருந்ததைச் சாப்பிட ஆரம்பித்தான்.
பத்து குலோப் ஜாமூனுக்கு மேலாக விழுங்கியது தொண்டையில் ஒரு விதமாகத் திகட்டலோடு நெஞ்சில் இறங்கியது. இதே ஜாமூனை பிடித்தவர்களுக்குக் கொடுத்தால் அது விருந்து. பிடிக்காமல் தொண்டையில் விழுங்கினால் அமிர்தம் கூட மாத்திரை தானே?! அது தான் ஜீவிதாவுக்குத் தோன்றியது.
கை அலம்பச் சேர்ந்து எழ வேண்டுமெனக் காத்திருக்க, யுகேந்திரனோ “உனக்கு வேறென்ன பிடிக்காது?” என்று கேட்டான்.
“ஏன் மச்சான் அதெல்லாம் வரிசையா சாப்பிட கொடுக்க ஆசையா? கவலைப்படாதிங்க உங்களுக்கு நிறைய நேரமிருக்கு. பொறுமையா என்னைச் சாப்பிட வச்சி அழகு பாருங்க. அதுக்குத் தானே கல்யாணம்” என்று நக்கலாய் பேசினாள். அவளும் எவ்வளவு நேரம் பொறுத்து பார்த்துவிட்டாள்.
யுகேந்திரனுக்குத் ‘திமிரா பேசற? இன்னிக்குன்னு இல்லைடி. தினம் தினம் அனுபவிப்ப’ என்றவன் மனதில் நினைத்து, அவளைப் பின் தொடர வைத்து முன்னே நடையிட்டான்.
இவர்களைப் பெற்ற புண்ணியவான்கள் கண்ணில் கருத்திலும் லேசாகப் பதிவானது.
தட்சிணாமூர்த்தி மைந்தனை ஏறிட்டு கதிரவன் மச்சானை பார்க்க, அவரோ அதிர்ச்சியாக மாறினாலும் முகத்தில் காட்டிக்காமல் நடித்தார். பெண் பிள்ளையைக் கட்டி கொடுத்து விட்டாயிற்று இனி கைகட்டி வேடிக்கை தானே பார்க்க முடியும்.
உமாதேவி கையைப் பிடித்து ரேகா அழுதேவிட்டார். “என் பெரிய மக ஓடிப்போனது மாப்பிள்ளைக்கு இன்னும் நெருஞ்சி முள்ளா குத்துது. அதுக்குச் சின்ன மக என்ன பண்ணுவா அண்ணி. எம்மகளை நீங்க தான் அண்ணி பார்த்துக்கணும்” என்று கையெடுத்து கும்பிட உமாதேவிக்கு இதயம் தைத்தது.
அப்பாவும் மகனும் தன் பேச்சை கேட்டு தான் அடுத்த வேலை பார்ப்பாரா? எதற்கும் இப்படி நெஞ்சில் பயத்தோடு கலங்குவரை தேற்றுவதற்காக, “அட அண்ணி கல்யாண டென்ஷன்ல இப்படி நடந்துக்கறான். கொஞ்சம் ஓய்வு எடுத்தா ஜீவிதாவோட நல்லபடியா பேசுவான். பேசி பழகினா அவங்களைப் புரிஞ்சுப்பாங்க.” என்று ஆறுதல்படுத்த ரேகா ஏதோ நம்பியவராகத் தலையாட்டினார்.
ஜீவிதாவுக்கு உலகம் ஒரு நாடக மேடை. அதில் நாமெல்லாம் நல்ல நடிகர் நடிகைகள். வெகு பிரமாதமாக நடித்துக்கொண்டு இருக்கின்றோம்’ என்ற ஷேக்ஸ்பியர் வரிகள் நினைவு வந்த பொழுதும் அவளால் இந்த வேடத்தில் நடிக்க முடியாது உள்ளுக்குள் மறுகினாள்.
திடீர் திருமணம், சரி சொந்த மாமன் மகன் என்று சூழ்நிலைக்குத் தலையாட்டி தொலைக்க, ஏதோ அக்காவால் தன்னைப் பழிவாங்கும் படலமாய், வார்த்தைகளும் செய்கையும் யுகேந்திரன் நடத்த, நடிக்கக் கடினப்பட்டாள்.
யுகேந்திரனை காணும் நேரம் இவனா தன்னை அழவைக்க முயல்கின்றான்? என்பது போல விசித்திரமாகப் பார்வையிட்டாள். ஆறடி அழகனுக்குள் ஒர் அரக்கன். எல்லா மனிதருக்குள் இருக்கும் மிருகம். யுகேந்திரனின் மிருக குணம் அவளிடம் அவன் காட்டுவதாக எண்ணாமல் இருக்க முடியவில்லை.
கனல் பார்வையை வீசி புருவம் உயர்த்தி யுகேந்திரன் பார்வையிட, தன் பார்வையை மாற்றிக் கொண்டாள் ஜீவிதா.
மீண்டும் புகைப்படத்திற்குக் கொஞ்சம் நிற்கும் கட்டாயம் நேரிட அளவான புன்னகை உதிர்த்து நடித்தாள்.
அதன் பின் வீட்டுக்கு வருவதற்கு நல்ல நேரம் பார்த்தனர். ரிஸப்ஷன் இழவு எல்லாம் வேண்டாமென யுகேந்திரன் உரைத்து விட்டான்.
மாமனாரிடம், “ரிஸப்ஷன் எல்லாம் வேண்டாம் மாமா கல்யாணத்துக்குக் கூட்டம் வந்தா தாலி கட்டின கையோட, இருந்து சாப்பிட்டு மொய் வச்சிட்டு போயிடுவாங்க. இதே ஈவினிங் ரிஸப்ஷன் என்றால் ஆரஅமர உட்கார்ந்து கதை பேசி, வினிதா காதலித்த கதைகள் எல்லாம் அலசுவாங்க. யார் அதைச் செவிக்கு ஏற்றி கோபத்தைக் கூட்டிக் கொள்றது?” என்றான்
மாப்பிள்ளை யுகேந்திரன் இப்படிக் கூற கதிரவனோ, “நீங்க என்ன சொல்லறிங்களோ அதுப்படி நடத்திடறேன் மாப்பிள்ளை.” என்றார்.
ஏனோ தட்சிணாமூர்த்தி மச்சானின் மகனென்ற உறவை விட, மாப்பிள்ளை என்ற உறவுக்கு அஞ்சினார்.
இல்லையா பின்னே பெண்ணைப் பெற்றவர் ஆயிற்றே.
இனி ஒவ்வொன்றும் திகிலை தந்தால் மனநிம்மதி என்னாவது?
மதியம் தொடுவதற்குள் ‘நந்தவனம்’ வீட்டிற்குச் சென்று, விளக்கு ஏற்றி வழிபட்டு வீட்டில் அவளது கையால் தீபாராதனை நடந்தது.
பூஜையறையில் யுகேந்திரன் தாத்தா மகேந்திரன், பாட்டி அம்மாள் புகைப்படத்தில் தொட்டு கும்பிட்டான்.
திருநீறு பூசி ஆண்கள் சட்டென வெளியேற, ரேகாவோ “நான் வாழ்ந்த பிறந்த வீட்டில், நீ புகுந்த வீடா காலடி எடுத்து வச்சியிருக்க ஜீவிதா. பெரியவங்களை மதிச்சு, கணவரை புரிந்து நடந்து சந்தோஷமா இருக்கணும்” என்றார்.
உமாதேவியோ வந்தவர்களை வரவேற்று உபசரிக்கச் செல்ல, அன்னையும் உபசரிக்கச் சென்றார்.
ஜீவிதா தனியாகப் பூஜையறையில் இமை மூடினாள். இதுவரை கட்டுப்படுத்திய அழுகை உடைப்பெடுத்து அருவியைப் பொழிய, சத்தம் வராமல் அழுவதற்குப் பயிற்சி எடுத்து,கொஞ்சம் அழுது முடித்து, முகம் துடைத்து வெளியேறினாள்.
அவள் என்னதான் அழுவதை மறைக்க முயன்றாலும், மேக்கப் அணிந்த கன்னங்கள் அவளது அழுத தடத்தை யுகேந்திரனுக்குக் காட்டி கொடுத்தது.
ஏதோ வெற்றி பெற்ற மமதையுடன் யுகேந்திரன் அவளருகே வந்து, “இன்னிக்கே இப்படியா? நிறைய இருக்கு” என்று செல்ல, திகிலாக அவன் பரந்த முதுகை வெறித்தாள்.
உமாதேவி வந்து கையைப் பிடித்து, அழைத்து யுகேந்திரன் அறைக்குச் சென்று, சற்று நேரம் இளைப்பாற கூறினார். ஜீவிதாவுக்கும் லேசான ஓய்வு தேவைப்பட்டது
யுகேந்திரன் அறையில் மெத்தையில் இருந்தவளுக்குக் கண்ணைக் கட்டியது.
தூக்கத்தைக் காட்டிலும், சுற்றிலும் அச்சுறுத்தும் யுகேந்திரன் முகமே.
கூர்ப்பெற்ற கொம்பின் காளையை அடக்குவது, மீசையை முறுக்கி பட்டுவேஷ்டி சட்டையில் மாப்பிள்ளை போல அம்சமாக நின்றது, ஊரில் இளவட்ட கல்லை நெஞ்சில் தூக்கி வேர்வை சொட்ட ஜம்பமாய் நிற்பது, கல்லூரியில் படித்த பொழுது சிம்லாவில் பனிசரிவில் சறுக்கி விளையாடியதில் எடுத்தவை என்று இத்யாதி அவன் பெருமை பேசும் விதமாகவே இருந்ததால், அவளது நெஞ்சு கூட்டை எகிற வைத்தது.
இப்படி முரட்டுதனமாக ஒருவன் தன்னைக் கட்டிக் கொள்வானென்று ஜீவிதா எண்ணியதேயில்லை.
“இங்க என்ன பண்ணற?” என்ற குரலில் திடுக்கிட்டு பயந்து எழுந்தாள்.
”புருஷன் வந்தா எழுந்து நிற்க எல்லாம் கற்றுத் தந்திருக்காங்க. நல்ல பழக்கம் எல்லாம் சில நேரம் எட்டி பார்க்குது” என்று பீரோவை திறந்தான். அவனது பேச்சு அடிக்கடி தன் தாய் தந்தை வளர்ப்பை கேலி செய்யத் துவண்டாள்.
கத்தை கத்தையாகப் பணமிருக்க, அதில் இரண்டு கட்டை எடுத்து, பீரோவை மூடினான். கல்யாண செலவு ஆயிரம் இருக்க அதில் புகைப்படக்காரனுக்குக் கொடுக்க எடுத்துச் சென்றான்.
”தூக்கம் வந்தா தூங்கு.” என்று கூறிச் சென்றான். ஏதோ முதல் முறையாகக் கனிவான பேச்சு. தூக்கம் வந்தால் உறங்க கூறிவிட்டான்.
தனக்கும் சற்று நேரம் உடலை சாய்த்தால் தேவலை என்பது போலத் தோன்றியது.
அதனால் உடலை குறுக்கி படுத்து கொண்டாள்.
மெத்தை என்னவோ யுகேந்திரனை போல முரட்டுத்தனமாக இல்லை. இலவம்பஞ்சு மென்மையாக அவளை ஏந்திட, படுத்ததும் உறங்கி விட்டாள்.
காதிற்கு மிக அருகில் நோட்டிபிகேஷன் சப்தம் வந்ததும் விழித்திருக்க அங்கே தனக்கருகில் யுகேந்திரன் போனில் பார்வை பதிந்திருந்தான்.
விசுக்கெனத் தன் மார்பில் கை வைத்து எழுந்து அமர்ந்தாள்.
அவளைப் பார்த்துப் போனை இறக்கி “எந்திரிச்சிட்டியா? சாப்பிட போகலாமா? அம்மா சேர்ந்து சாப்பிட சொன்னாங்க.” என்றான் யுகேந்திரன்.
அவன் எழுந்து சர்வசாதாரணமாகப் போனை வைத்தான்.
ஜீவிதா அவனது சட்டை இல்லாது பனியன் பட்டுவேஷ்டி என்றிருந்ததில் பீதியடைந்து இருந்தாள்.
யுகேந்திரனுக்குத் தனதறை, தன் வீடு, என்ற காரணத்தில் சட்டை கழட்டி வைத்து பட்டுவேஷ்டி பனியனோடு உலாத்திருந்தான். ஜீவிதா எழுந்ததும் சட்டையை எடுத்துப் பட்டனை போட்டான்.
“தரைக்குள்ள புதைஞ்சிட போற. சட்டையைக் கழட்டாம மெத்தையில் படுத்தேன் அயர்ன் செய்த புதுப் பட்டுசட்டை கசங்கிடும். அப்பறம் புதுசா கல்யாணம் ஆனவங்க, புதுப்பொண்டாட்டி கதவை சாற்றிச் சட்டை கசங்கினா இருக்குற சொந்தக்காரங்க கண்டதும் பேசுவாங்க.” என்றவன் சட்டையின் முழங்கையை மடங்கினான்.
“உன் சேலை மடிப்பு களைந்து அவிழ்ந்திருக்கு. சரி செய்துட்டு வர்றியா” என்றதும் தன்உடையைப் பயந்து நோக்கினாள்.
லேசாகக் களைந்து மடிப்பு இருந்ததே தவிர அவிழவில்லை.
“பதறாத அங்கங்க சேப்டி பின் குத்தியிருக்க, எப்படி அவிழும்? நான் சும்மா பயமுறுத்த பார்த்தேன்.” என்றவன் ‘நானா அவிழ்த்தா தான் உண்டு’ என்று முனங்கினான்.
முகமலம்பி லேசாக டவலால் பட்டும் படாமலும் துடைத்தாள். பொட்டு அழியாது பாதுகாத்துத் துண்டால் துடைக்க, அதில் நறுமணம் கமழ்ந்தது.
நுகர்ந்தவளுக்குத் தாமதமாய், அது யுகேந்திரன் துண்டு என்று புத்திக்கு புலப்பட, தூக்கி எறிந்தாள்.
அவன் கழுத்தை மெதுவாகத் திருப்பி, இடையில் கைவைத்து அவளைக் கூர்ப்பார்வை பார்க்க, அவனது துண்டை கைகள் நடுங்க எடுத்து, விரித்துப் பவ்யமாய்க் காயப்போட்டாள்.
நல்ல மனநிலையில் இருந்தானோ என்னவோ கதவை திறந்து வெளியேற தர்மபத்தினியாகப் பின்தொடர்ந்தாள்.
-தொடரும்.
Jeevitha too bad. But u have to accept it for sometime. Yogi tooo much. Intresting sis
Enime than koothe eruku.. athukulla aluthukitta yepdi