Skip to content
Home » உயிரில் உறைந்தவள் நீயடி-5

உயிரில் உறைந்தவள் நீயடி-5

அத்தியாயம்-5

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

மதிய உணவாக வீட்டில் சொந்தங்களுக்குப் பந்தி பரிமாறப்பட்டது. திருமணமான இவர்கள் மட்டும் இன்னமும் சாப்பிடாமல் போகத் தனியாக உணவை சாப்பிட வந்தார்கள்.

யுகேந்திரன் வீட்டை சுற்றி முற்றி பார்த்து, “சொந்தக்காரங்க எல்லாம் போயிட்டாங்க போலயே” என்றான் தந்தையிடம்.

“அட தூரத்துச் சொந்தம் கல்யாணம் முடிந்தா போட்டோ எடுத்துப் போகத்தான் செய்வாங்க” என்றார் தட்சிணாமூர்த்தி. அவருக்கு நெருக்கமான உறவு தங்கை மட்டும் தானே?!

தந்தை கூடத்தில் அமரவும் விரசாய் சாப்பிட்டுக் கை அலம்பியவன் தந்தை அருகே பேச சென்றான். தன்னோடு ஒரு ஜீவன் அமர்ந்திருக்க ஒரு கடமைக்காவது காத்திருந்திருக்கலாம் யுகேந்திரன். தனியாளாக ஜீவிதா உணவு மேஜையில் வீற்றிருந்தாள். “உனக்கு ஏதாவது வேணும்னா தயங்காம பொன்னம்மாவிடம் கேளு” என்று உமாதேவி குரல் கொடுக்க, தலையாட்டி விழுங்கினாள்.

“அண்ணி சீர் முறையில் எதுவும் குறையிருந்தா கேளுங்க. அடுத்த நொடி டவுன்ல போய் வாங்கிட்டு வந்துடறோம்.” என்று ரேகா பொறுப்பான அன்னையாகக் கேட்டார்.

“அட நான் கொண்டாந்து சீர்செனத்தியே இன்னும் உபயோகப்படுத்தாம ஸ்டோர் ரூமுக்கு மேல பரணையில கிடக்கு. இப்ப மருமகள் கொண்டு வந்து தான் உபயோகப்படுத்தணுமா? அதெல்லாம் ஒன்னும் வேண்டாமுங்க அண்ணி.

யுகேந்திரன் பாட்டி புழங்கின பாத்திரமே இன்னமும் உருகுலையாம இருக்கு. பரம்பரை பரம்பரையாக அதையே உபயோகப்படுத்த அவர் விரும்புவார். உங்களுக்குப் பார்த்தாலே தெரியுமே‌‌ உங்கம்மா உபயோகப்படுத்தியதையே தான் வீடு நிறைஞ்சியிருக்கு” என்றார்.

உண்மை தான் தன் அம்மா பித்தளை வெண்கலம் என்று நிறையக் கிச்சனில் குவித்திருக்க, அதெல்லாம் இன்னமும் பளிச்சென அண்ணியார் பாதுகாத்திருந்தார். அதுமட்டுமா? பூஜை அறையில் கூடப் பெரிய வெள்ளி விளக்கு இன்னமும் மழுங்காமல் பளிச்சென ஒளியை வீசுகின்றதே.!

அப்பொழுது எல்லாம் தழைய தழைய பாவாடை தாவணி அணிந்து மகிழ்ந்து திரிந்த இடம். இன்று சற்று நவீன எலக்ட்ரானிக் வசதி கொண்ட பொருட்கள் மட்டும் மாறியிருந்தது. இன்னமும் மாலையானால் துளசிமாடத்து விளக்கை ஏற்றி வழிபடுவதை ஆச்சரியமாகப் பார்த்தார்‌.

மகள் அந்த விளக்கிலும் விளக்கு ஏற்றினாளே. ரேகாவோடு ஜீவிதா இருக்க உமாதேவி பையன் இருக்கும் இடம் நோக்கி வந்தார்.

சடங்கு சம்பிரதாயமென்று ஜீவிதா வீட்டிற்கு யுகேந்திரனை அனுப்ப முயன்றார் தட்சிணாமூர்த்தி. அதுக்குறித்து ஏதேனும் தேவைப்படுமா என வினாத்தொடுக்க வந்தார்.

“இப்ப என்ன சம்பிரதாயம் வேண்டியிருக்கு? அவங்க வீட்ல ஏற்கனவே ஒரு பொண்ணு ஓடிப்போயாச்சு. அவளுக்கு எந்தச் சம்பிரதாயமும் செய்தாங்களா? சின்ன மகளுக்கு மட்டும் சம்பிரதாயம்னு‌ என்னை ஏன் அங்க இழுக்கறாங்க. எதுனாலும் இங்கேயே செய்யுங்க. நான் யார் வீட்டுக்கும் போக மாட்டேன்” என்று கூறி முடிக்க, உமாதேவியோ எதுவும் பேசாமல், கணவரை பார்த்து அவ்விடம் விட்டு அகன்றார். இப்பொழுது உள்ளே வந்து பேசினால் நன்றாக இருக்காதே.

தட்சிணாமூர்த்தி மகனிடம் தொண்டையைச் செருமி, “யுகேந்திரா… இந்தச் சாந்தி முகூர்த்த சடங்கு எல்லாம் பொண்ணு வீட்ல தான் நடக்கும். நீ அவங்க வீட்டுக்கு போகணும். வேண்டுமின்னா இரண்டாவது நாளே வேலையிருப்பதா காரணம் சொல்லி, இங்க வந்துட உங்க மாமாவிடம் பேசி பாரு.‌ சாந்தி முகூர்தத்திற்கு நீ முரண்டு பிடிக்க முடியாது. காலங்காலமாகப் பொண்ணு வீட்ல நடத்தறது. பெரிய பொண்ணு மறுத்ததால நீ அந்த வீட்டு படியை மிதிக்கலைன்னு பேசுவாங்க. எவ ஓடிப்போனாலும் நீ அந்த வீட்டு மாப்பிள்ளை, உரிமை இருக்குன்னு காட்டணும். நாளைக்கு நாமளே ஊருக்கு மெல்ல அவலை கொடுக்கக் கூடாது. யார் கிடப்பா என்ன பேசலாம்னு இருப்பாங்க.” என்றதும் கையைக் கோபமாக மார்பில் கட்டினான் யுகேந்திரன்.

ஊரில் தான் தன்னிடமே வினிதா ஓடி போனதை கேட்டு நின்றனரே. அதனால் இருந்த கோபத்தில் பேசாமல் அறைக்குச் சென்றான், உணவை முடித்துக் காலில் கொலுசு இல்லாமல் போகவும் அறைக்கு வந்திருந்தாள் ஜீவிதா.

புதுக் கொலுசு மெத்தையில் அவிழ்ந்திருக்க அதனை மாட்டும் முனைப்பில் ஜீவிதா இருந்தவள் யுகேந்திரன் வரவும் திடுக்கென எழ, அவளது வளையல் கொலுசு என்று ஓசையெழுப்பி அடங்கியது‌.

அவளைக் கடுகடுவென முறைத்து விட்டு மெத்தையில் நீட்டி நிமிர, ஜீவிதா கொலுசை மாட்டி வெளியே அன்னையைத் தேடி ஓடிவந்தாள். சிங்கத்தின் முன் நிற்க இந்தப் புள்ளிமானுக்கு அச்சம்.

கூடத்திற்கு மறுபுறம் ஓட்டிய இருக்கையில், கையைப் பிசைந்து இருந்தனர் ரேகா.

“அம்மா நம்ம வீட்டுக்கு எப்ப போகணும். என்னால இங்க நிற்க முடியலை. ஒவ்வொரு நிமிஷமும் குத்தி பேசறது போலவேயிருக்கு. ஏன்மா என்னை இங்க மாட்டிவிட்டிங்க. இதுக்குக் குடும்பத்தோட செத்து போயிருக்கலாம்.” என்று முகம் புதைக்க அழுதாள்.

“அய்யோ… அழுவதை நிறுத்துடி. யாராவது பார்த்துத் தொலைக்கப் போறாங்க. இங்க பாரு… உங்க அக்கா மட்டும் ஓடிப்போகலை. இங்க நானுமே உங்கப்பாவை நம்பி காதலிச்சுக் கல்யாணம் செய்தவ. அம்மா அக்கான்னு இரண்டு காதலை பார்த்து, உங்கக்கா கல்யாண பத்திரிக்கை வரை வந்து நின்று போனது, இந்த வீட்டுக்கு அவமரியாதையைத் தந்ததா நினைக்கலாம். நாம பொறுத்து தான் ஆகணும். எங்கண்ணன் பையனோட நீ வாழ்ந்து தான் புரிய வைக்கணும்‌. இப்ப எவ்ளோ குத்தி பேசினாலும் பொறுத்துக்கோ” என்று எப்பொழுதும் தாய் கூறவும் அறிவுரையை அச்சுபிசகாது கூறினார்.‌

உமாதேவி வரவும் அண்ணி என்ற மரியாதைக்கு எழுந்தார் ரேகா. ஜீவிதாவுக்கு மாமியார் வருவதால் அவளும் கண்ணீரை மறைத்து எழுந்தாள்.

”இது சாந்தி முகூர்த்த சேலை‌. வீட்டுக்குப் போய்க் கொடுங்க அண்ணி‌” என்று நீட்டவும், ஜீவிதா கண்கள் மிரண்டது‌.

உமாதேவி மருமகளிடம், “புரிஞ்சுக்காத வரை அண்ணாச்சி பழமும் பலாப்பழமும் குத்ததான் செய்யும் ஆனா அது மனசை துறந்தா இனிக்கும். நான் பழத்தை சொன்னேன். உனக்குப் பலாப்பழம் பிடிக்குமா? நம்ம மரத்துல விளைந்தது.” என்று பொன்னம்மா எடுத்து வந்த பழத்தை வைத்தே மகனும் அப்படித் தான் என்று இலைமறையாக உரைத்தார்.

ஜீவிதாவுக்குக் கூட மாமியார் அறிவுறுத்தி ஆறுதல் உரைப்பது போலத் திகழ்ந்தது.

லேசான தேன் மழை இதயத்தில் குளிர்விக்க, பதில் தராமல் பலா பழத்தை எடுத்தாள்.

“இதுல நாளை காலையில யுகேந்திரா போடவேண்டிய புதுத்துணி எல்லாம் இருக்கு. எப்படியும் சாப்பிட்டதும் கிளம்பினாலும் கிளம்புவான். உன் போன் சார்ஜர், தினசரி உபயோகப்படுத்தற எல்லாம் அப்பவே எடுத்துட்டு வந்துடு.” என்று கூற தலையாட்டினாள்.

கதிரவன் தட்சிணாமூர்த்திக்கு சரிக்குச் சமமாக உட்கார்ந்து முன்பு போல உரையாடினாலும், ஏதாவது பேசிவிடுவார்களோயென அஞ்சி தவித்தார்.

தட்சிணாமூர்த்தியை காட்டிலும் யுகேந்திரனின் பார்வை செயல், நடை என்று அவரைக் கலவரப்படுத்தியது.

ஏதாவது குற்றம் குறையென்று சண்டை வலுக்காமல் நேரம் கழியவே விரும்பினார்.

இருவரையும் பூஜையறையில் நிற்க வைத்து கடவுளை வழிப்பட, தாத்தா பாட்டியிடம் ஆசிபெற்றுக் கொண்டவனாய் எழவும், ஜீவிதாவும் தாத்தா ஆச்சி முறைக்குப் புகைப்படத்தைத் தொட்டு வணங்கினாள்.

உமாதேவி விபூதி குங்குமம் என்று மருமகளுக்கு வைத்து விட, யுகேந்திரன் அன்னை தந்தையை வணங்கிவிட்டு காரை நிறுத்தியிருந்த இடத்தில் வந்து “சண்முகம்… யோவ் சண்முகம்” என்று கூப்பிட, “அய்யா இங்க இருங்கேனுங்க” என்று குரல் கொடுத்து வந்தான்.

இந்த வீட்டில் கார் ஓட்டும் சாரதி சண்முகம். பொன்னம்மாவின் புருஷன்.

“கார் சாவியைக் கொடு.” என்றான்‌ யுகேந்திரன்.

யுகேந்திரன் புறப்படும் போது அவனே தான் காரை இயக்க பிடிக்கும். அவர் தந்தை தட்சிணாமூர்த்திக்கு சண்முகம் ஓட்டுவது வழக்கம்.

“மாப்பிள்ளை நீங்க இன்னிக்கு வண்டியோட்ட வேண்டாமே, சண்முகமே வண்டி ஓட்டட்டும்” என்று கதிரவன் கூற, “சண்முகம் அப்பாவுக்குத் தான் டிரைவர். எனக்கில்லை‌ மாமா” என்றான். அவன் குரலே கறாராய் வந்து விழவும் கதிரவன் மௌனமாய் மாறினார். ஓரடி மாப்பிள்ளை என்று நெருக்கம் கட்டினால் நாலடி விலகி நிறுத்தி பேசுகின்றான். அது கதிரவனுக்குப் புரியாமல் இல்லை.

“அம்மாடி நீ முன்ன உட்காரு” என்று கதிரவன் கூற ஜீவிதா கணவனை ஏறிடவும், அவன் அதை ஆமோதிப்பதாகச் சீட்பெல்ட் அணிந்திருந்தான்.

அடக்கம் ஒடுக்கமாய் முன்னே அமரவும், கைகள் சேலையை இறுக்கமாய்ப் பிடித்தது.

“போயிட்டு வர்றோம் அண்ணா” என்று ரேகா கூற, “வர்றோம் மச்சான்” என்று கதிரவன் கூற, “போயிட்டு வாங்க சம்பந்தி” என்றார் தட்சிணாமூர்த்தி.

உமாதேவியோ கணவரை கண்டு அதிர்ந்தார். தங்கையைத் தங்கை வீட்டுக்காரர் இருவரும், அண்ணன் மச்சான் என்றுரைக்க, இவர் சம்பந்தி என்றால் நியாயமா?

அதனால் உமாதேவி துணிந்து “பார்த்து போங்க நாத்தனாரே. என் மருமக பத்திரம்” என்று கூறவும் தட்சிணாமூர்த்தி மனைவியைக் கனலாய் சுட்டெரிக்க, கார் புறப்பட்டது.

வழிநெடுகில் நிசப்தமாய்க் கழிய, அரை மணி நேரம் கழித்து, மாமனார் வீட்டை வந்தடைந்தான் யுகேந்திரன்.

ஆலம் கரைத்து வரவேற்க ரேகா மின்னலாய் செல்லவும், மாப்பிள்ளை முறுக்கோடு காலையில் அணிந்த பட்டுவேஷ்டி சட்டையில் யுகேந்திரனும், ஜீவிதா பட்டுபுடவையெனத் திருமணக் கோலத்தில் இருந்தார்கள்.

இருவரையும் ஒன்றாக நிற்க வைத்து ஆலம் கரைக்க, பணத்தைப் போட்டான். கதிரவன் வீட்டுக்குள் அழைக்க, ரேகா ஆலம் கரைத்ததை வாசலில் கொட்ட சென்றார்.

யுகேந்திரனோ நக்கலாய் சிரித்து, “இந்நேரம் வினிதா ஓடிப்போகாம, யாரையும் காதலிக்காம இருந்து, அவ என்னைக் கல்யாணம் பண்ணிருந்தா மச்சினிச்சா நீ தான் ஆலம் கரைத்திருக்கணும். நீ தங்க செயின் கேட்டு என்னை வழிமறைக்கலாம். நானும் அழகான மச்சினிச்சின்னு உன் கழுத்துக்குத் தங்க செயினே போட்டிருப்பேன்.

நேரத்தை பார்றேன் தங்க செயினுக்குப் பதிலா உன் கழுத்துல மஞ்சகயிறு கட்டியிருக்கேன். உன்னையே தாலி கட்டி பொண்டாட்டியா மாத்திட்டேன். கவலைப்படாத… நல்ல நாள் பார்த்து தாலி பிரிச்சி கோர்த்துத் தங்கமா போடுவாங்க” என்று பேசினான்.‌

“ஏன் இப்படி முடிஞ்சதையே பேசறீங்க மச்சான்?” என்று கேட்டதும், “கல்யாண கனவுகள்ல இதெல்லாம் சேராதா? மச்சினிச்சு அக்கா கணவனை வழி மறைச்சு மச்சானிடம் பணம் மோதிரம் என்று‌ பிடுங்குவாங்க. செல்வாக்கான ஆளுன்னா தங்க செயின் தானே கழட்டி போடணும்.” என்று பேசவும் கூனிப் போனாள்.

ஒரு நேரம் யுகேந்திரன் மனம் இப்படிப் பேச, அவன் காயப்பட்டதால் தானே என்று அவளும் தாங்கிக் கொண்டாள். ஏன் தானுமே அக்கா திருமணம் என்று ஆயிரம் கனவு கண்டிருந்தாள்.

மச்சினிச்சி என்று மச்சானை இடித்துக் கேலி கிண்டல் செய்யத் துடித்தவளே. இன்று அதே மச்சானிடம் உரிமையானவளாய் மனைவியாக மாறியும், நிற்கவோ, பேசவோ, பயம் தான் வந்து தொலைகிறது.

மாப்பிள்ளை யுகேந்திரனுக்கு நொறுக்குத் தீனியாக முறுக்குச் சீடை, ஸ்வுட், சீவல் அடை என்று வைக்க, கூடுதலாக டீ போட்டு கொடுத்தனர்.

கால் மேல் காலை போட்டு சுவைத்தவன், போனில் தீவிரமாகச் சமூக வலைத்தளப் பக்கத்தைப் பார்வையிட்டான்.

முதல் காரணம் அவனுக்கு அங்கே யாரிடமும் பேச இஷ்டமில்லை. இரண்டாம் காரணம் அவன் கத்தி வைத்து குடைய, ‘நேர்ந்து விட்ட ஜீவன்’ ஜீவிதா மட்டுமே.

கதிரவனிடமோ ரேகாவிடமோ அதிகம் பேசி, சட்டென அவர்கள் காலில் விழுந்துவிட்டால்? அதன் பின் இந்தக் குத்தல் பேச்சால் பழிவாங்க இயலாதே, அதனால் ஜீவிதாவை மட்டும் குறிவைத்துக் கொத்தினான்.

மணி ஏழாகவும் இட்லியை குழம்பு என்று வயிற்றை நிரப்பிக், குளித்துவிட்டு முதலிரவுக்குத் தயாராக நேரத்தை சுட்டிக் காட்டினார்கள்.

மாப்பிள்ளைக்கான அறையில் புலியாகப் பதுங்கி ஜீவிதாவிடம் பாயத் தயாரானான்.

ஜீவிதா குளித்து முடித்து உமாதேவி கொடுத்த பட்டை அணிந்து நிற்க, ரேகா தளர தலைவாறி பின்னலிட்டார்.

ஜீவிதா கண்ணீர் சுரப்பியில் வற்றாமல் கண்ணீர் வர, “எதுக்குடி அழற? கல்யாணமான இதெல்லாம் நேரத்துக்கு நடப்பது தான்” என்றார்.‌

“எனக்கு இப்படிச் சட்டுன்னு கல்யாணம் பண்ணுவிங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லையே அம்மா. இதுல இப்படி அனுப்பினா என்ன அர்த்தம்? ப்ளீஸ் மா.. நீ மச்சானிடம் பேசு. இதெல்லாம் வேண்டாம்” என்று கெஞ்சினாள்.

“தப்பு ஜீவிதா..‌ என்னிடம் இப்படிக் கேட்காத. அப்பறம் யுகேந்திரன் காதுல விழப்போகுது. உன்னிடம் தன்மையா பேசினா நீயே என்‌ அண்ணன் மகனிடம் பேசு. நீயே கொஞ்சம் டைம் கேளு.” என்று கூறவும் கொஞ்சம் அழுகை நின்றது.

“பால் ஆத்தி வச்சியிருக்கேன். எடுத்துட்டு உன் ரூமுக்கு போ.” என்று கூற கண்ணாடி டம்ளரில் எடுத்து நடந்தாள்.

கைகள் நடுங்க, பாதங்கள் சில்லிட, இதயம் கலங்கி அறைக்குள் எட்டி பார்த்தாள்.

யுகேந்திரன் அவனது மெத்தைப் போலச் சொகுசாய் காலை நீட்டி அதே தொடுத்திரை நரகத்தை நோண்டிக் கொண்டிருந்தான். தனிமை என்பதை அலைப்பேசி தானே நிவர்த்திச் செய்கின்றது. சில நேரம் தொலைப்பேசியே நரகம் தான்.

“உங்க வீடு தானே..? உன் ரூம் தானே.? எதுக்கு இந்தத் தயக்கம். ஓ… நான் இருக்கேனோ? ஆனா வேற வழியில்லை… காலையில அக்னி சாட்சியா மந்திரம் எல்லாம் சொல்லி தாலி கட்டியிருக்கேன்.” என்று தோளைத் குலுக்கினான்.

ஜீவிதாவுக்குக் கோபம் துளிர்க்க, “பால்” என்று கொடுக்க, “கால்ல எல்லாம் விழமாட்டிங்களோ? ஓடிப்போன அக்கா, அம்மாவும் அந்தக் காலத்துல காதல் தான் முக்கியம், உறவு எல்லாம் மசிருக்கு சமம்னு போனவங்க. இப்ப அதையெல்லாம் தாண்டி உனக்குக் கல்யாணம். நான் தாலி கட்டியிருக்கேன். கால்ல விழலாம், வயசுலயும் பெரியவன். சம்பிரதாயப் பிரகாரம் சீர்வரிசை எல்லாம் வேண்டாம்னு சொன்னாலும் வீட்ல நிரப்பினிங்க. நான் கால்ல விழுன்னு கேட்கறேன். அதைச் செய்ய யோசிக்கிற?” என்று நஞ்சாய் வார்த்தை தெளிக்க, அடுத்த நொடி காலில் விழுந்து வணங்கினாள்.

மஞ்சள் தாலி கயிறு‌ சேலைக்குள்ளிருந்து வெளிப்பட்டது.

அதனைத் தீண்ட சென்றவனின் கரத்தை பார்த்து இரண்டடி பின் நகர்ந்தாள்.

அவளது விலகலில் நெற்றிச் சுருக்கினான் யுகேந்திரன்.

அவளோ “நாம கொஞ்சம் பேசலாமா மச்சான். நீங்க இன்னும் கோபமா இருக்கிங்க.

அக்கா போனதால என்னைத் திட்டிட்டு இருக்கிங்க.” என்று ஆரம்பித்தவளிடம், “என்ன பேசணும்? ஏதாவது பேசி நாம பழகற வரை இந்த முதலிரவை தள்ளி வைக்கணும்‌. அப்படித் தானே?” என்றதும் தலைக்குனிந்தாள்.

அவளது பேச்சுக் கடைசியில் அதைத் தான் அவனிடம் பேச நினைத்தது.

“தலைக்குனிந்தா என்ன அர்த்தம்? ஓ.. அப்ப முதலிரவை தள்ளி போட்டு, கொஞ்ச நாள் என்னை மாங்கா மடையனா மாத்தி, மேடம் வேற யார் கூடவாது ஓடிப்போகப் போறிங்களா?” என்றதும், “ஏன் அப்படிப் பேசறிங்க? காதல் ஒன்னும் தப்பில்லை. காதலிச்சவனைக் கட்டிக்கறது கொலை குத்தமில்லை. அக்கா இதைச் சம்மந்தப்பட்டவங்களை ஒன்னா சேர்த்து பேசி, அவகாதலை சொல்லி, அம்மா அப்பா மூலமாவே அவ காதலனை கல்யாணம் பண்ணிருக்கலாம். நீங்க என்னைக் கல்யாணம் பண்ணிக்கறது சுமூகமா இருந்திருக்கும். நான் அட்லீஸ்ட் உங்களோட இயல்பா பேசி பழகி இங்க நின்றுயிருப்பேன். இப்படி நீங்க என்‌ மனசை நொடிக்கு ஒரு முறை நோகடிக்க மாட்டிங்க” என்றாள். லேசாகக் குரல் உயர்த்திவிட்டாள்.

“காதல் தப்பில்லை. கொலை குத்தமில்லை…‌ நீ காதலுக்குச் சப்போர்ட் பண்ணறதை பார்த்தா… நீ எவனையாவது காதலிக்கறியா?” என்று அவள் பேச்சிலிருந்து நூல் பிடித்து வினா தொடுத்தான். அவன் நோக்கம் அவளைக் கண்ணீர் விட வைக்க வேண்டும்.

“நான் யாரையும் காதலிக்கலை.” என்று முகம் கருத்து கூறினாள்.

“அப்ப என்ன மயிருக்கு இங்க பேசிட்டு இருக்க? இது முதராத்திரி‌ இங்க பேச அனுப்பலை. உட்காரு” என்று அதட்டி கூறவும், திகைத்தபடி அமர்ந்தாள்.

“அந்தக் குலோப்ஜாமுனை எடு” என்றான். தனக்குப் பிடிக்காது என்று அறிந்தும் வேண்டுமென்றே திணிக்க முற்படுகின்றார் என்று புரிய எடுத்து அவனிடம் நீட்டினாள்.

“உனக்குத் தான்” என்று அவள் எண்ணியது போலவே கொடுக்க, “எனக்குச் சர்க்கரையில் ஊறிய ஜாமூன் பிடிக்காது. டிரை ஜாமூன் பிடிக்கும்” என்று விருப்பு வெறுப்பைக் கூறினாள்.

“எதுனாலும் குதற்கமா பேசணும்னு வந்தியா. அது பிடிக்காது இது பிடிக்காதுன்னு.” என்றவன் இனிப்பை வலுக்கட்டாயமாகச் சாப்பிட வைத்தான்.

அவளும் வேறு வழியின்றி விழுங்க, “பிடிச்சுதோ பிடிக்கலையோ இனி நாம வாழ்ந்து தான் ஆகணும்” என்று விளக்கை அணைத்தான். அவள் விழுங்கியது தித்திப்பை ஆனால் கசப்பாய் இறங்கியது.

இருட்டில் அவளது சேலையில் ஆங்காங்கே யுகேந்திரன் கைகள் தீண்டுவது உணர, “அம்மா.” என்று அலறினாள்.

“ஏய்… கத்தாத, கத்தின குரல் வளையைக் கடிச்சிடுவேன். மொத்தம் எட்டுச் சேஃப்டிபின் குத்தி சேலை கட்டியிருக்க, ஒவ்வொன்னா கழட்ட வேண்டாம். சேஃப்டிபின் என்னைக் குத்தறதுக்கா?” என்றதும் ‘ஏன் கழட்டறிங்க’ என்று நுனிநாக்கு வரை கேட்க வந்தவள் மௌனமாய் அவன் தீண்டலுக்கும் செயலுக்கும் மௌனியானாள். அவன் நோக்கம் அறிந்தபின் கேள்விகள் மடத்தனமானது என்பதை அவள் அறிவாள்.

-தொடரும்.

6 thoughts on “உயிரில் உறைந்தவள் நீயடி-5”

  1. M. Sarathi Rio

    உயிரில் உறைந்தவள் நீயடி…!
    எழுத்தாளர்: ப்ரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 5)

    அட போடா… அவசரத்துக்கு பிறந்தவனே.. எல்லாத்துலேயும் அவசரம், பொண்டாட்டிகிட்ட அலட்சியம், பேச்சுல குதர்க்கம்ன்னு இருந்தால், கடைசியில வாழ்க்கைத்தான் சிக்கலாயிடும். அது இவனுக்கு போக போகத்தான் புரியும் போல.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!