அத்தியாயம்-7
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
விளக்கு வைக்கும் நேரம் முன்னதாகவே வந்துவிட்டான் யுகேந்திரன். அறைக்கு வந்து பார்க்கும் போது கன்னத்திற்கு இரண்டு கையை முட்டு கொடுத்து, காலை குறுக்கி படுத்திருந்தாள் ஜீவிதா.
கடிகாரத்தைப் பார்த்துவிட்டு முகம் கை, கால் கழுவ சென்றான் யுகேந்திரன்.
ஆண்மகன் ஒருவன் வந்தது கூட அறியாது நன்றாக உங்குபவளை எழுப்பினான்.
அசையாமல் நித்திரையின் பிடியில் இருந்தாள் ஜீவிதா.
இரண்டு நாளாக அலைச்சல், திருமணம், அம்மா வீடு, என்று நீண்ட நேரம் நின்றதும் காரில் பயணமும், கூடுதலாய் நேற்று யுகேந்திரனும் மெத்தையில் படுத்தியெடுத்திருக்க, விட்டால் போதுமென்று நேரகாலமின்றி, இலவம் பஞ்சு மெத்தையில் சுகமாக உறங்க, நறுக்கென்ற கிள்ளும் அதனைத் தொடர்ந்து அவள் கைபுஜத்தை யுகேந்திரன் பிடித்து எழுப்பவும் விசுக்கென எழுந்தாள்.
“மணி ஆறாகப் போகுது. வீட்டுக்கு வந்த முதல் நாளே தூங்கி வழியணுமா? போய் விளக்கு ஏத்து” என்று கத்தினான் யுகேந்திரன்.
மலங்கமலங்க விழித்தவள் கையைத் தேய்த்து, யுகேந்திரனை திட்ட முடியாத சோகத்தில் எழுந்து அறை கதவுதிறக்க முற்பட்டாள்.
“ஏய்… போன்னா அப்படியே போயிடுவியா? முகம் கழுவி லைட்டா தலைவாரிட்டு போ. ஒவ்வொன்னும் சொல்லி தரணுமா?” என்று பாய்ந்தான்.
தன் மீது தான் தவறென முகம் அலம்பச் சென்றாள் ஜீவிதா.
“பூஜை ரூம்ல மட்டுமில்லை. துளசி மாடத்துலயும் ஏத்தணும்” என்று கூற தலையாட்டினாள்.
யுகேந்திரன் வீட்டில் மற்ற நேரம் பனியன் லுங்கி என்ற உடையே போடுவதால் அவன் அன்னை போட்டு தரும் கருப்பட்டி தேனீரை ருசிக்க ஓடினான்.
முகமலம்பி லேசாகத் தலைவாரி பவுடர் பொட்டு வைத்தாள். தலைவாரி மணமான பெண் வைக்கும் குங்குமத்தை வகிட்டில் வைத்தாள்.
வேகமாக ஆறாகப் போகின்றதெனப் பூஜையறையில் விளக்கு ஏற்ற, சென்றாள்.
அங்கே மல்லி பூக்களைப் பறித்துக் கடவுளுக்குத் தொடுத்து மாலையிட்டதை அணிவித்தார் உமாதேவி.
மருமகளைக் கண்டதும் ஒரு சிறு முறுவல்.
”நான் என்ன செய்யணும் அத்தை” என்றாள்.
விளைக்கை மட்டும் ஏற்றிட கூறவும் பூஜையறையிலிருந்த வெள்ளி விளக்கும் காமாட்சி அம்மன் விளக்கு, துணை விளக்கு என்று மூன்றை ஏற்றினாள். அங்கே பாட்டி தாத்தா புகைப்படத்தைக் கண்டாள்.
மகேந்திரன் தாத்தா, யுகேந்திரனாக மாறி துளசிமாடம் சொன்னேன் நினைவில்லை என்று மிரட்ட அங்கே விளக்கேற்ற ஓடினாள்.
அப்படியே துளசி மாடம் இருந்த இடத்திற்குச் சென்றும் திரியை திருகி விளக்கு ஏற்ற, யுகேந்திரன் கண்கள் மெதுவாக மனையாளை தழுவியது.
சுற்றி மாலை நேரத்து சிறு வெளிச்சம். இதில் துளசி மாடத்தில் ஒளியேற்றிய பெண்ணவள் ஓவியன் தீட்டிய தூரிகை பெண்ணாகத் தெரிந்தாள். ஜீவிதா சாதாரணமாகவே அழகி. அதிலும் கையில் திருமண மெகந்தி, தலை நிறையப் பூ, நெற்றியில் சிவப்புக் குங்குமம் என்று தெவிட்டாத தெய்வீக அழகு. அவளையே பார்த்தாலும் திகட்டது. யுகேந்திரன் உதடு லேசான முறுவல் பூத்தது.
கையைச் சுட்டதும் அவள் உதட்டால் ஊதி கையை உதற, இவனுக்கு லேசான பதற்றம்.
ஜீவிதா அடுத்து தான் இருக்கும் திசையைப் பார்வையிடுவதை யூகித்தவன் தன் பார்வையைச் சட்டென மாற்றினான்.
“அச்சோ… என்னையே நோட்டமிட்டுட்டு இருக்கார். ஏதாவது குற்றம் குறை பார்த்து திட்டறதுக்கு என்னவொரு பேராசை” என்று எழுந்து வீட்டிற்கு வெளியே ‘நந்தவனம்’ என்ற பெயர் பலகை இருக்குமிடத்தில் சிறு பிள்ளையாரும் இருக்க அங்கே அகல் விளக்கேற்றினாள்.
அதற்கே பதினைந்து நிமிடம் ஓடியது.
நிதானமாக மாமியார் உமாதேவி அருகே வந்தவள், “மன்னிச்சிடுங்க அத்தை. படிப்பு எல்லாம் ஊட்டில தான். அதனால் சமையலோ, மத்த வீட்டு வேலையோ என்ன தான் தெரிந்தாலும், நேரத்துக்குச் சரியாகச் செய்து பழகலை. நீங்க சொல்லிட்டா எல்லாம் நேரத்துக்குப் பண்ணிடுவேன். வேலை எல்லாம் செய்யத் தெரியும்” என்று சங்கடமாய் நின்றாள்.
“இந்த வீட்ல வீடு பெருக்க, கூட்ட, பாத்திரம் கழுவ, எடுபிடி வேலை, மேல் வேலை எல்லாத்துக்கும் பொன்னம்மா இருப்பா. காலையில வந்துட்டு நைட்டுக்கு கிளம்பிடுவா. துணி துவைக்க மெஷின் இருக்கு. கையில துவைக்க வேண்டிய துணின்னா அதுவும் பொன்னம்மா பார்த்துக்கும்.
அப்பாவுக்கும் பையனுக்கு வெளியாட்கள் சோறு ஆக்கினா பிடிக்காது. வீட்டு பொம்பளைங்க தான் மணக்க மணக்க சமைக்கணும். அதுக்கு மட்டும் நம்ம தான் அடுப்படியில் நிற்கணும். எப்படியும் உங்க மாமாவுக்கு உன் சமையல் பிடிக்க நேரமெடுக்கும். அதோட இப்பவே கிச்சனை உன் பொறுப்புல தூக்கி தர எனக்கு இஷ்டமில்லை. இரத்தம் சுண்டி ஒருயிடமா இருக்கற வரை நானா தான் சமைப்பேன். அதுக்காக உன்னை அடுப்படியில் விடமாட்டேன்னு அர்த்தமில்லை, நடுவுல நடுவுல நீயும் சமைக்கலாம்.
மத்தபடி வேலைன்னு பார்க்கிறதுதுது… உன் புருஷனை கண்ணுக்குள்ள வச்சி கவனிச்சிக்கறது தான்.” என்று கூறினார்.
ஜீவிதா முகம் வாடியது. அதனைக் கவனிக்காமல் உமாதேவியோ “உங்க மாமா பார்வைக்கு ஒர் அர்த்தம், தொண்டையைச் செருமினா ஒர் அர்த்தம், அவர் சூழ்நிலையைப் பொறுத்து பார்க்கற பார்வைக்கு ஒர் அர்த்தம் இருக்கும். அப்ப எல்லாம் அவங்க என்ன சொல்ல வர்றாங்க. என்ன தேவை என்று தெரிந்து நடந்துக்கணும்.
அப்பாவை மாதிரியே யுகேந்திரனும் வளர்ந்துட்டான். என் பையனை நல்லா புரிஞ்சிக்கிட்டா, அவன் தேவை என்னன்னு கண்ணைப் பார்த்து கவனிக்கணும்.
பையனை பெத்த அம்மாவுக்கு இதான் தேவை. மருமகளும் பையன் மனசு அறிந்து வாழணும்.” என்று கூறவும், பேசா மடந்தையாக நின்றாள் ஜீவிதா.
ஏதெனும் கருத்து கூறி, வந்த இரண்டாம் நாளே வாதம் செய்ய மனமில்லை. யுகேந்திரன் மச்சான் தன்னைக் காயப்படுத்தும் நோக்கில் மணந்திருக்க, அவரிடம் எப்படி?
அப்படிப் பார்த்தால் அவர் மனசறிந்து தான் இந்த வீட்டில் அல்லல்படவேண்டும். அவருக்கு அது தான் சந்தோஷம்.’ என்று மலைப்பாகச் சிந்தித்தவளை, ”புரிந்து நடக்குற பக்குவம், போகப் போக வாழ்க்கை பாடம் கத்துக் கொடுக்கும். அதுவரை கொஞ்சம் கஷ்டம் தான். இந்த டீயை குடி” என்று உமாதேவி கூற, பொன்னம்மா நீட்டிய டீயை வாங்கிப் பருகினாள்.
கண்டதையும் போட்டு மனதில் குழப்பம் கொண்டிருக்க இந்த டீ இதமாய் இறங்கியது.
அதன் பின் மாமியார் மருமகள் பேசி சிரிக்க, யுகேந்திரன் அடிக்கடி மனைவியை நோட்டமிட்டவனுக்குச் ‘சிரிச்சு பேசறா, இந்த அம்மாவுக்கு அறிவேயில்லை. மருமகளை அடக்கி வைக்க வேண்டாம் ‘ என்று முனங்கினான்.
தட்சிணாமூர்த்தி வந்தவர் மகன் அருகே அமர்ந்து, “கல்யாணம் ஆனாதும் பேக்ட்ரிக்கு போயிருக்கிங்க. என்னாச்சு தம்பி” என்று கேட்டு முடிக்க, “ஒன்னுமில்லை அப்பா. ஜீவிதாவோட அக்காவை பத்தி நம்ம ஜெகன் விவரம் சொன்னான். அவளும் அவ காதலிச்ச பையனோட திருப்பதியில கல்யாணம் பண்ணிட்டு ரேனிகுண்டா பக்கம் எங்கயா வீடு எடுத்து இருப்பதா அவன் கேள்விப்பட்டானாம். அந்தப் பையனுக்கு அங்கயேங்கயோ ரோமிங்கல வேலை.” என்றான்.
“அந்த ஓடுகாலி கழுதை பத்தி நமக்கு என்ன கவலை?
நீயேன் அதைத் தெரிந்து வச்சிட்டுயிருக்க?” என்று கோபமாய்க் கேட்டார்.
“நம்ம ஜெகன் அவன் பொண்ணுக்கு மொட்டை போட திருப்பதி போகணும். கூட்டம் குறைச்சாலா இருக்கா என்ன ஏதுனு விசாரிச்சு இருக்கான். அப்ப அவன் சொந்தக்காரங்க ஒருத்தன் திருப்பதி போயிருக்கான். அங்க ஜீவிதாவோட அக்காவை பார்த்திருக்கான். இத்தனை நாளா ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிருந்தாங்க போல. நேத்து அவங்க அப்பா பார்த்த முகூர்த்த நாள்ல திருப்பதி போய்க் கல்யாணம் பண்ணணும்னு அந்தப் பொண்ணு ஆசையாம்.” என்று கதை கூறினான்.
“இதெல்லாம் நீ எதுக்குத் தெரிந்து வச்சிக்கணும்? கண்ணுக்கு லட்சணமா உன் பொண்டாட்டி இங்க இருக்கா. அவளிடம் கோபம் காட்டாம சந்தோஷமா வாழப்பாருங்க.” என்றதும், “இல்லைப்பா… நானா தெரிந்து வச்சிக்கலை. ஜெகனிடம் அவங்க பார்த்ததைச் சொல்ல,ஜெகன் தான் பேசணும்னு என்னைக் கூப்பிட்டான். ஜீவிதா அக்கா விஷயம்னு சொன்னான்.” என்று கூறினான்.
தட்சிணாமூர்த்தி “பெத்த ஆத்தா அப்பா வேண்டாம்னு போனவங்களைத் தலைமுழுகணும் தம்பி. மாமனாரிடம் விஷயத்தைக் காதுல போட்டு வைக்கிறேன்னு நீ எதுவும் சொல்லாத. பிறகு நீ தான் நாட்டாமை செய்து பெரிய மகளை அந்த வீட்ல சேர்த்து வைக்கக் கேட்டாலும் கேட்பாங்க. நமக்கு அந்த வேலையே வேண்டாம். அதோட உன் பொண்டாட்டியிடம் சொல்லிட்டு இருக்காத.” என்று சென்றார்.
யுகேந்திரனோ என்ன செய்வதென்று சிந்திக்க, தாலி கட்டியவளை இதை வைத்து அழ வைக்கும் யுக்தி கிடைத்த திருப்தியுடன் அவளைத் தேடினான்.
புதிதான திருமணம் ஆனா ஜோடி தேடுவதில் தவறில்லை. ஆனால் விருப்பமின்றித் தாலி கட்டியதாக இருக்க, இப்படித் தேடினால் ஜீவிதாவுக்குத் தன்னைத் தேடும் கணவன் என்ற ரீதியில் கொம்பு முளைக்கும்.
ஜீவிதா இவ்வீட்டில் அழவந்தவளாகத் தான் இருக்க வேண்டும். அவளாகச் சிரிக்கவே கூடாது.’ அதனால் இப்பொழுது தேடுவதை நிறுத்திவிட்டு இரவு தனிமையில் சந்திக்க முடிவெடுத்தான்.
அதற்கு ஏற்றது போல ஜீவிதா மாமியாரிடம் இணக்கமாய்ப் பேசி சிரித்தாள்.
இரவு உணவு மேஜையில் இட்லியும் இரண்டு வகைச் சட்னி சாம்பார் என்று மணக்க, யுகேந்திரனுக்குப் பரிமாறு என்று மாமியார் தள்ளிவிடும் வரை புன்னகை நிலைத்தது. அவனிடம் செல்லவும் கால்கள் தள்ளாடியது.
கைகள் லேசாக நடுங்க, ஒழுங்காகப் பரிமாற முயன்றாள்.
உமாதேவி தட்சிணாமூர்த்திக்கு பரிமாற, ஜீவிதா யுகேந்திரனுக்குப் பரிமாறினாள்.
இரண்டு கரண்டி குழம்பு ஊற்றவும் கையை வைத்து தடுக்க, அமைதியானாள்.
அவள் அடுத்த இட்லி வைத்து விட்டுத் திரும்பப் போனில் அழைப்பு வந்தது.
உமாதேவி “போய்ப் பேசு.” என்றதும் ஜீவிதா செல்ல, யுகேந்திரன் பல்லை கடித்தான்.
அன்னை அனுப்பினால் சென்றிடுவாளா? என்ற கோபம் சூழ்ந்தது.
இதில் போனில் ஜீவிதா அன்னை ரேகா பேசவும் நிமிடங்கள் கரைவதை உணராது பேசி முடித்து வர, கையைக் கழுவி உதறினான்.
“சாப்பிட்டிங்களா?” என்று கேட்க, அன்னை கிச்சனுக்குச் சென்றதிலும் தந்தை சாப்பிட்டு வெற்றிலை போட போனதாலும், தனியாக அகப்பட்டவளிடம், “புருஷன் ஒழுங்கா சாப்பிட்டானா இல்லையானு பார்க்கறதில்லை. போனை எடுத்துட்டு பேச போயிட்ட. இப்ப வந்து சாப்பிட்டிங்களானு கேள்வி. எங்கம்மாவை கேளு. எங்கப்பா எத்தனை சாப்பிட்டார் வயிரு நிறைச்சி சாப்பிட்டு போனாரா? சாம்பார் சட்னி பிடிச்சு சாப்பிட்டாரா? எது ரசிச்சு ருசிச்சு சாப்பிட்டார்னு புட்டு புட்டு வைப்பாங்க. நீயெல்லாம்…. ” என்று முகம் காட்டி செல்ல ஜீவிதா தன்தவறை உணர்ந்து வாடினாள்.
‘அவருக்குப் பரிமாறுகின்றேன் வந்து பேசறேன்னு அம்மாவிடம் சொல்லிருக்கலாம். எல்லாம் என்தப்பு’ என்று வருந்திட, உமாதேவி சாப்பிட அமர வைத்தார்.
“ஏன் அத்தை பரிமாறும் போது போன் பேசிட்டுப் போயிட்டேன். சாரி.” என்றாள்.
“அடுத்த முறை இப்படி நடக்கமா பார்த்துக்கோ. இந்தா பசும்பால். யுகேந்திரா தினமும் காலையில கருப்பட்டி டீ, ஈவினிங்கும் கருப்பட்டி டீ , நைட்டு மட்டும் பசும்பால் குடிப்பான்” என்று கொடுக்க வாங்கிக் கொண்டாள்.
அறைக் கதவருகே வந்ததும் நேற்றைய அனுபவம் திகிலை தர, நுழையாது வீட்டை சுற்றி பார்த்தாள்.
அத்தை மாமா அறைக்குள் உறங்க சென்று விட்டார்கள். பொன்னம்மா மாலை ஆறரை மணிக்கு நடையைக் கட்டிவிடுவார்.
தனியாக யுகேந்திரன் அறைக்குள் கையை வைக்க, கதவு திறந்தது.
எதிரே முரட்டுக்காளையாக நின்றிருக்க, “நல்ல நேரம் பார்த்து தான் வருவியோ? நேத்து நல்ல நேரம் முடிஞ்சிடுச்சு. ஒவ்வொரு நாளுக்கும் நல்ல நேரம் பார்க்கணும்னு அவசியம் இல்லை.” என்று இழுக்க, செம்பில் பால் லேசாய் சிந்தி சிதறி உள்ளே நுழைந்தாள்.
“என்ன போன்ல கதையடிக்கறியா? உங்க அக்கா மச்சான் பத்தி கேட்டு தெரிஞ்சுக்க ஆசையோ?” என்று மீசையை முறுக்கி முன்னே வர, “இல்லைங்க நான் அதுபத்தி பேசலை. அம்மா சாப்பிட்டிங்களா? என்ன பண்ணுறனு நார்மலா கேட்டாங்க பதில் சொன்னேன்.” என்றாள்.
“பொய் சொல்லாத” என்றான்.
”நான் ஏன் பொய் சொல்லணும்?” என்று சலிப்படைய, “ஏன்னா உங்கக்கா எங்க இருக்கான்னு எனக்கே தெரியும். உனக்குத் தெரியாம இருக்குமா?” என்று கூற, ஜீவிதா அவனை விசுக்கெனப் பார்க்க, “என்னடி தெரியாதது போல லுக்கு விடற” என்று கை புஜத்தை பற்றி இழுத்தான்.
அவன் இழுப்பில் “மச்சான் ப்ளீஸ் விடுங்க. எப்ப பாரு என்னைத் தப்பா புரிஞ்சு திட்டறிங்க” என்ற நேரம் “மச்சான்னு சொன்ன பல்லை தட்டிடுவேன்னு சொல்லிட்டேன், திரும்பக் கூப்பிடற, நான் என்ன உன் அக்கா புருஷனா” என்று கடித்துக் குதறிடும் வார்த்தையில் பேச, ஜீவிதா பலத்துடன் யுகேந்திரனை தள்ளிவிட, கல்லூரியில் படித்த பெண் அவளோ நகத்தைக் கத்தி போல வைத்திருக்க அவன்நெஞ்சில் குத்தியது. இதில் அவள் மென்கரங்கள் அவன் நெஞ்சில் பலமாய் அடித்தாள்.
அவளுக்கு அந்தப் பேச்சுச் சுத்தமாய்ப் பிடிக்கவில்லை.
யுகேந்திரன் அவள் நகம் பட்டு கீறவும், தள்ளிவிடப் பார்த்ததை, கைநீட்டுவதாக அவ்விருட்டில் எண்ணி ‘பளீரென்ற’ அறையைக் கன்னத்தில் வழங்கி, அவளை மெத்தையில் தள்ளி விட்டான்.
-தொடரும்.

Intresting
Hmm ennum yethana naalaiku ethu continue aaga pogutho
உயிரில் உறைந்தவள் நீயடி…!
எழுத்தாளர்: ப்ரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 7)
அடேய் கிறுக்கா ! அவலை நினைச்சு உரலை இடிச்ச கதையா இல்ல இருக்குது இந்த யுகன் நடந்துக்கிறதைப் பார்த்தால்..
இப்படியே பண்ணிட்டிருந்தால் ஒருநாளைக்கு போடா போன்னு எல்லாத்தையும் விட்டுட்டு ஓடப்போறா பாருங்களேன்.. அப்ப தவிப்பான் போல.
😀😀😀
CRVS (or) CRVS 2797
neya ethana ninachitu pesina ava ena panuva unaku pathil thana solra athuku ippadi kai netuviya nee