Skip to content
Home » உயிரில் உறைந்தவள் நீயடி-8

உயிரில் உறைந்தவள் நீயடி-8

அத்தியாயம்-8

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

இரவில் நடந்தேறிய அக்கப்போரில் எதுவும் அதன் பின் சப்தம் ஏற்படுத்தவில்லை. யுகேந்திரன் வசமாக மாறியவள் கண்ணீரை மட்டும் உகுத்திருந்தாள். அதிகாலை வெளிச்சத்தில் கன்னம் உப்பசமாக ரத்தம் கட்டியிருக்க, சோர்வாக எழுந்தாள்.

வாங்கிய அடி லேசாக விண்விண்ணென்று வலித்தது. தன்னை அணைக்கும் போது என்ன பேச்சுப் பேசுகின்றார் என்று கோபமாய் நெஞ்சில் சரமாரியாக அடித்தாள்.

பதிலுக்கு இப்படி மூர்க்கத்தனமான அறைந்திடுவானென்று எதிர்பார்க்கவில்லை‌. அடித்த அடுத்தக் கணமே சூறாவளியாக இழுத்து சென்ற காட்டாறு போல வன்மையாய் முத்தங்கள் பொழிந்தான். யுகேந்திரன் செய்கையில் அவன் அடித்த வலிக்கூட அந்த நேரம் உணரவில்லை.

அவிழ்ந்திருந்த சேலையைக் கட்டி முடித்து நிற்கும் போது, யுகேந்திரன் குளித்துத் தலைதுவட்டியபடி வந்தான்.

அவளைக் காண கூடாதென்ற வீம்போடு தலைவாறி, உடலுக்கு நறுமணம் கமழும் வாசனை திரவியத்தை அடிக்க, கண்ணாடியில் சேலை கட்டி அவிழ்ந்த சிகையை அள்ளி முடித்திருந்தாள் ஜீவிதா.

கன்னம் ரத்தகட்டு போலச் சிவப்பேறியிருக்க, அவன் கைகள் அனிச்சையாக நின்றது.

அவன் அவள் பக்கம் திரும்பி பார்க்கும் நேரம் குளியலறைக்கு ஜீவிதா சென்றிடவும், நெற்றியை ஆள்காட்டி விரலால் கீறி ‘பச் இந்தக் கடவுள் ஏன் என்னை அரக்கனா மாத்தறார். இப்ப அப்பா அம்மாவுக்கு நான் பதில் சொல்லணும். அறிவேயில்லை யுகேந்திரா.’ என்று அவன் மனசாட்சியே கண்டித்தது.

ஜீவிதா வெளியேறும் வரை காத்திருக்க, அவளோ குளியலறையில் தண்ணீரை திறந்துவிட்டு தேம்புவதைக் கேட்க நேரிட்டது.

சற்று நேரம் வரை பொறுத்திருந்து பார்த்தான். அவள் அழுகை யுகேந்திரனுக்கு இம்சை கூட்டியது.

“ஏய்… கதவை திற” என்று அதட்டினான்.

நிசப்தமே பதிலாக வரவும், “என்ன ஏத்தம்? அடி வாங்கியும் திமிரு அடங்குதா பாரு” என்று கதவை தட்டி, “ஏய் ஜீவிதா. கதவைத்திறடி” என்றான்.

அப்படிக் கத்தியும் தாமதமாய்த் திறக்க, குளித்து வெளியேறும் விதமாக அவனைக் கடந்தாள்.

அவள் கன்னத்துக் காயத்திற்கு மஞ்சள் தடவியிருக்க, நறுமணம் கமழும் சோப்பு வாசனையோடு யுகேந்திரனை இழுத்தது.

எப்பவும் போல அவளது கை புஜத்தை பிடித்து நிறுத்தினான்.

“கூப்பிட்டா கதவை திறக்க என்ன? சத்தமே கொடுக்காம சுத்தற?” என்றதும் உதட்டை கடித்து வலியை பொறுப்பதைக் கண்டான்.

அவளது மற்றோரு கை அவன் கையை எடுத்து விடப் போராடியது.

தன் பிடியில் முகம் சுணங்குபவளின் தாடை பிடித்து அவன் முகத்தைக் காண வைத்தான்.

“பதில் சொல்லு.. இங்க பாரு, என் நெஞ்சில் கீறியது யாரு? ” என்றவன் கைரேகை பதிய அடித்த மடத்தனத்தை எண்ணி நொந்தான். அவள் கீறியது இப்பொழுது சின்ன எறும்பு கடியாக இருந்தது அவனுக்கு.

ஜீவிதாவுக்கு அவள் கீறிய இடத்தைக் கண்டாள். அப்படிப் பார்த்தாலும் இவளை விட அவன் அடி தான் பெரிதாகக் கன்னத்தில் வீக்கம் கட்டியது. “நான் இனி எதுவும் பேசலை. நீங்க கேட்டா பதில் வரும்.

நீங்க இழுத்த இழுப்புக்கு வந்துடுவேன். உங்களுக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டமில்லாம பண்ணிருக்கிங்க.

காதலிச்ச பையனோட ஓடிப்போனவளை வச்சி என்னைப் பழிவாங்கறிங்க. அதுக்குத் தானே கல்யாணம் பண்ணிருக்கிங்க.

இனி மாமன் மகன், மச்சான்‌ முறை, எதுவும் வேண்டாம். உங்க மனைவி அவ்ளோ தான்.‌ பழிவாங்கணுமா வாங்குங்க. அடிக்கணுமா அடிங்க. திட்டணுமா திட்டுங்க? கத்தி வச்சி குத்தற மாதிரி வார்த்தையால குத்தணுமா குத்துங்க. இல்லை சாகடிக்கத் தோன்றினாலும் செய்யுங்க.

என்னைப் பழிவாங்கி உங்க மனசு ஆறர வரை என்னவோ பண்ணுங்க.

நானும் பேசி பார்க்க முயற்சி பண்ணிட்டேன். நீங்க பிடிச்ச முயலுக்கு மூன்று கால்னு பிடிவாதம் பிடிக்கறிங்க. மூன்று காலாவே இருக்கட்டும்” என்றாள்.

யுகேந்திரனோ அவள் கையை விட்டு, “என்ன ரொம்பப் பேசற?” என்றான். பின்ன சாகடிக்க வேண்டுமென்றாலும் செய்யுங்கள் என்கின்றாளே அவன் என்ன கொலைக்காரனா?

“இனி பேசலை. எதுக்குக் கூப்பிட்டிங்க?” என்றாள் ஜீவிதா.

அவள் அழுவதைத் தான் மனம் தாளாமல் ரத்தகட்டை ஆராயவும் தான் அழைத்தது. ஆனால் ஈகோ இறங்காமல் அதை மனையாளிடம் ஒப்புக்கொள்ள மனமின்றி, “காலையில எதுக்குக் கூப்பிடுவாங்க? டீ கொண்டா” என்று பேச்சை மாற்றினான்.

ஜீவிதாவும் கிச்சன் பக்கம் சென்றாள்.

அவள் பாதித் தூரம் சென்றதும் தான், இந்தக் காயத்தோட அம்மா பார்த்தாங்க. என்னை உண்டுயில்லைனு கேள்வி கேட்பாங்க’ என்றது நினைவு வர, தலையில் அடித்தான்.

அவன் எண்ணியதற்குச் சரியாக, அவளை அடுப்பங்கரையில் வரவேற்ற உமாதேவி மருமகளின் கன்னத்தைத் தான் முதலில் கண்டார்.

“வந்துட்டியா டீ இரண்டு பேருக்கும்…” என்று பேசியவர் வார்த்தை மருமகள் வாட்டமான முகத்தில் நிலைத்தது, காயத்தை ஏறிட்டார்

‘தன் மகனா? இந்தளவு ஒரு பெண்ணை வதைத்தது?’ என்ற ஆச்சரியத்தோடு உமாதேவி பேச்சிழந்து மாறினார்.

அதற்குள் டீயை எடுத்துக்கொண்டு அறைக்குத் திரும்பிவிட்டாள்.

யுகேந்திரன் முன் நீட்ட, அவனுக்கானதை எடுத்துக் கொண்டான்.

அடித்ததிற்கு மன்னிப்பு கேட்க மனம் பிராண்டியது. ஆனால் நிஜமாகவே இவளை பழிவாங்க மணமுடித்துவிட்டு மன்னிப்பு கேட்க முரணாக இருந்தது.

அதனால் மன்னிப்பு என்ற வார்த்தையோ விளிக்கக் கூடாதென்று காரணமே அளிக்காமல் அவசரமாய் வெளியே கிளம்பினான்.

சாப்பிடாமல் கொள்ளாமல் அவசரமாய்ச் சென்றவனால் உமாதேவி நிற்க வைத்து எந்த வினாவும் தொடுக்கவில்லை.

கணவர் எழுந்ததும் வீட்டு விவகாரத்தை உரைத்திட முடிவெடுத்தார்.

ஜீவிதா டீயை பருகியபடி தலையணையை மடியில் கட்டி கொண்டு அழுதாள்.

இனி சாப்பிட வெளியே செல்வோமென முட்டிகட்டி ஜன்னல் பக்கம் வெறித்தாள்.

தான் இந்தத் திருமணத்திற்குச் சம்மதித்த நாட்களை எண்ணி பார்த்தாள்.

வினிதா அக்கா லெட்டர் எழுதி வைத்துச் சென்றதும், தாய் தந்தையர் யுகேந்திரன் வீட்டிற்குச் சென்று, அக்கா எழுதிய கடிதத்தை மாமா அத்தையிடம் காட்டி திருமணம் நின்றதை கூறிவிட்டு, மன்னிப்பு கேட்டு திரும்புவார்கள் என்று மட்டுமே ஜீவிதா எண்ணியிருக்க, மாமா வீட்டில் மாப்பிள்ளை யுகேந்திரன் மற்றோரு மகளான, தன்னை மணக்க அனுமதி கேட்டு அனுப்பியது அதிர்ச்சியே.

தாய் தந்தையும் இதற்கு மேல் மானம் இழந்து, ஊராரிடம் பேச்சு வாங்குவதைக் காட்டிலும், உறவையாவது இந்தத் திருமணத்தில் தக்க வைக்க உயிரோடு நடமாட பெற்றவர்களுக்காக மனப்பூர்வமாகச் சம்மதித்தாள்‌.

பக்கத்து பக்கத்து ஊர் என்றாலும் யுகேந்திரனை முதன் முதலில் கண்டது, கடந்துப்போன மாட்டுப் பொங்கலில் ஊர் கோவிலில்…

மாட்டைக் குளிப்பாட்டி ஒவ்வொருத்தரும் தங்கள் வீட்டுப் பசுமாட்டைக் கன்றை, மற்றும் ஏர் உழும் காளையை அலங்கரித்து அம்மன் கோவிலை சுற்றி வணங்கி அழைத்துச் சென்றனர். சிலர் நடந்து அழைத்துச் செல்வார்கள். சிலர் மாட்டு வண்டியில் ஓட்டி செல்வார்கள். மாட்டு வண்டியில் ஒட்டி செல்லும் நேரம், மாமன் மகன் என்ற அடையாளத்தை விட, அக்காவிற்குப் பார்த்த மாப்பிள்ளை என்று யுகேந்திரனை முதன் முதலில் கண்டாள் ஜீவிதா.

அக்கா இப்படிக் காதலித்தவனைத் தேடி சென்றிட, தன்னை யுகேந்திரன் மணக்க நேருமென்று அவள் எண்ணியதில்லை‌.

ஆனால் அப்படி அமைந்ததிலும் வெகுவாய் தன்னை அவன் மனைவியாகப் பொருத்திக்க முனைந்தாள். முதலிரவில் முதலில் மிரண்டாலும், அதன் பின் அவனை மனதார ஏற்றாள்.

யுகேந்திரன் மனதில் உள்ள பழிவாங்கும் எண்ணம், தன்னை இப்படி வாட்டி எடுக்கும் என்று சிந்திக்க மறந்தாள்.

ஏதோ என்றாவது குத்தி பேசுவான் என்று நினைத்து அசட்டையாக இருந்தாள்.

ஆனால் மணமுடித்து மூன்று நாட்கள் முழுதாக முடியவில்லை, இந்த இரண்டு நாளிலேயே அவளுக்கு அவள் எதிர்காலம் அச்சுறுத்தப்பட்டுவிட்டது.

பேசி புரிய வைக்க முயன்று வாழ்க்கையில் தோற்றிடுவோமோயெனப் பயந்தாள்‌.

இனி நரகமான வாழ்க்கையா? என்று எண்ணி கலங்க வழிந்த கண்ணீரால் கன்னம் எரிய துவங்கியது.

தன் அம்மா ரேகாவை தேடியது ஜீவிதாவின் குழந்தை உள்ளம்.

ஆதரவாய் உமாதேவி கைகள் மருமகளை வருட, அன்னையை எதிர்பார்த்த தருணம் என்பதால் என்ன நினைத்தாளோ அத்தையின் இடுப்பை கட்டிக்கொண்டாள்.

சற்று அழுது முடிக்க நேரம் கொடுத்து மருந்தை பூசினார் உமாதேவி.

அப்படியே பேச்சு தொடுத்தார்.”யுகேந்திரன், அண்ணி அண்ணாவிடம் உன்னைக் கட்டி வைக்கக் கேட்டப்பவே மனசுல பகீர்னு இருந்துச்சு. இப்படி ஏதாவது மனசுல வச்சிட்டு பண்ணுறான்னானு.

ஆனா உன்னைப் பார்த்தா சண்டைப்போட மனசு வராதுன்னு நினைச்சேன். ஆனா என் எண்ணத்துல, வளர்ப்புல நெருப்பை அள்ளி கொட்டிட்டான்.” என்று வருத்தமாய்ப் பேசினார்.

ஒரு பெண்ணை எப்படிப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று ஒர் ஆண் குழந்தைக்குச் சொல்லி வளர்க்காமல் போய் விட்டோமோ என்ற வருத்தம் உமாதேவி அம்மாவிற்கு.

ஜீவிதாவோ ”நான் என்ன செய்வேன் அத்தை. அக்கா போனா நான் தான் அவருக்குக் கிடைச்சேனா? அவருக்குப் பழிவாங்க தான் என்னைக் கல்யாணம் செய்திருக்கார். உறவை மதிச்சு என்னைப் பிடிச்சு ஏத்துக்கலை” என்று கேவினாள்.

இதில் அழுதபடி ”அவரை நல்லவர்னு நினைச்சேன்.” என்று தேம்பினாள்.

‘இல்லை நீ தவறாக எண்ணாதே என்‌மகன் நல்லவன்’ என்று வாய் வரவில்லை உமாதேவிக்கு.

இப்படி அடித்தவனை எப்படி நல்லவன் என்பார்.

ஆறுதலாக எது கூறினாலும் இந்த நேரம் அபத்தமாகத் தோன்றும். அதனால் “நான் யுகேந்திரன் அப்பாவிடம் சொல்லி கண்டிக்கச் சொல்லறேன்.” என்று ஆறுதலுரைத்தார்.

“அவரை நீங்களும் மாமா கண்டிச்சாலும், அதுக்கும் என் மேல தான் கோபம் காட்டுவார்‌. நான் வாங்கி வந்த சாபம்” என்று பேச பேச உமாதேவி துடித்தார்.

மகனை மணந்தது சாபமா? ஒர் அன்னையாக இதைச் செவியில் கேட்க கூடுதலாய் வலித்தது

அன்னையிடமே அவரது மகனின் வளர்ப்பை குறை சொல்ல, அன்னை துடிப்பதை கண்டு சில நிமிடம் முன் வந்த யுகேந்திரனோ “அம்மா… அப்பா உங்களைத் தேடினார். காலையிலே டீ கூடக் கொடுக்காம இங்க வேண்டாததைப் பேசிட்டு இருக்கிங்க” என்று அறைவாசலில் நின்று இவர்கள் பேசியதை கேட்டபடி வந்தான்‌.

மகன் இங்கு வந்ததும் கண்டிக்கும் விதமாக “ஏன்‌ யுகேந்திரா இப்படிப் பண்ணிருக்க? ஒரு பொண்ணை அடிக்கலாமா? தப்பில்லையா? இதான் நான் உன்னை வளர்த்த லட்சணமா? நீ யாரிடமும் இப்படி மூர்க்கத்தனமான நடந்ததில்லையே? வினிதா மேல் கோபம் இருக்கட்டும். அதுக்கு ஜீவிதா என்ன செய்வா? அவ இப்ப உன் மனைவி” என்று அறிவுறுத்தி கேட்டார்.

“அம்மா… அதான் தெரியுதுல பழிவாங்க தான் இவளை கல்யாணம் பண்ணிருக்கேன்னு. நான் நல்லவன் இல்லைன்னு உன் மருமக பட்டம் கொடுத்துட்டா. சந்தோஷமா கேட்டாச்சா… உங்க வேலையைப் பாருங்க.

அவங்க அவங்க தப்பு அவங்க அவங்களுக்குத் தெரியாது. அவங்க அவங்க நியாயமும் அவங்க அவங்களுக்கு மட்டும் புரியும்‌. அப்படிப் பார்த்தா என் தப்பு எனக்குத் தெரியலை. நான் நியாயமா தான் நடந்துக்கறேன்” என்று வீராப்பாய்ப் பேசினான்.

ஜீவிதாவை அனலாய் பார்த்து, “சாபத்தை ரசிச்சு வாழ உன்‌மருமகளுக்குப் பழகிடும். இல்லையா…. வீட்டுக் கதவு திறந்தே இருக்கு. எப்ப வேண்டுமென்றாலும் அவகொண்டு வந்த நகையை, சீர்செனத்தியை, எடுத்துட்டுப் போகச் சொல்லுங்க.

பக்கத்து ஊருக்குத் தனியா போகப் பயம்னா, நம்ம சண்முகாவை வச்சி கார்ல கொண்டு போய் இறக்கி விடச் சொல்லிடுங்க.” என்று ‘பிடிக்கலைன்னா உன் அப்பா வீட்டுக்கு போ’ என்ற ஆண்களின் தாரக மந்திரத்தை திருமணமான மூன்றாவது நாளே வஞ்சனையின்றி மணந்தவளை பார்த்து அள்ளி வீசினான்.

போதாதக் குறைக்கு, “முதல் பொண்ணு ஓடியாச்சு. இரண்டாவது பொண்ணு வாழாவெட்டியா வந்தாலும் ஏத்துப்பாங்க” என்றான்.

உமாதேவியோ மகனின் தொடர் பேச்சில் கோபம் கொண்டு அவனை அறைந்தார். ”என்னடா இஷ்டத்துக்குப் பேசுற? கல்யாணம் என்ன உனக்கு விளையாட்டா போச்சா?

நானும் நம்ம பிள்ளை… எடுத்துச் சொன்னா புரிஞ்சிப்பான்னு இருந்தேன். அத்து விடற மாதிரி பேசற. இப்படி வாழ தான் கல்யாணாமா? பாவம் ஒரு பக்கம், பழி ஒரு பக்கமா?

இனி அவளை அடிக்குற வேலை வச்சிக்கிட்ட அவ்ளோ தான்‌.” என்று கூற, அவன் முகமோ பாறை போல ஜீவிதாவையே ஏறிட்டது.

ஜீவிதா உமாதேவியின் முதுகுக்குப் பின் மறைந்து ஒடுங்கி நின்றாள்.

“கல்யாணம் செய்து வச்சது ஒழுங்கா குடும்பம் நடத்த. தேவையில்லாம அடிக்கவோ, வாழ தெரியாம மண் அள்ளி போட்டுக்கவோ இல்லை” என்று கூறிவிட்டு, மருமகளிடம் “நீ ரெஸ்ட் எடு. காலை சாப்பாடு இந்த அறைக்கே எடுத்துட்டு வந்துடறேன்” என்று வெளியே சென்றார்.

அவர்கள் சென்றதும் யுகேந்திரன் மீண்டும் தன்னில் பாதியானவளை பார்த்து, “ஒரு நிமிஷம் ஆகுமா? சட்டையைக் கழட்டி, நீ என் நெஞ்சை கீறி வச்சி இருக்கியே அதை என் அம்மாவிடம் காட்ட?

முதலில் அணில் மாதிரி பிராண்டி கீறியது நீ. அந்த இடம் கபகபனு எரியவும் அடிச்சேன். சும்மாவா கையை ஓங்கினேன்?

இருபத்தி எட்டு வருஷம்… எங்கம்மா என்னை எதுக்காகவும் அடிச்சதில்லை. உன்னால முதல் முறை, நான் எங்க அம்மா கையால அறை வாங்கி நிற்கறேன்.” என்றவன் கோபத்தை மொழிந்து இந்தமுறை நிஜமாகவே பேக்டரி சென்றிட முடிவெடுத்தான்.

-தொடரும்‌.

6 thoughts on “உயிரில் உறைந்தவள் நீயடி-8”

  1. M. Sarathi

    உயிரில் உறைந்தவள் நீயடி…!
    எழுத்தாளர்: ப்ரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 8)

    அட போடா கிறுக்குப் பிடிச்சவனே..! இவன் அடிச்சதும், அவ கீறி விட்டதும் ஒண்ணாயிருமா ?
    வினிதா ஓடிப் போனதும், ஜீவிதா ஒட்டி வந்ததும் ஒண்ணாயிருமா ? அக்கா செஞ்ச தப்புக்கு, தங்கச்சியை பழி வாங்குறது எந்த விதத்துல நியாயம் ?
    இவனுக்குத்தான் இப்ப வினிதா இருக்கிற இடம் தெரியும் தானே, அப்ப அவளை தேடிப்போய் இழுத்திட்டு வந்து என்ன பண்ண நினைக்கிறானோ அதை பண்ணட்டும். அதை விட்டு அவளை வார்த்தையால வதைக்குறது, கையால அடிக்கிறதுன்னு பண்ண அது அவனுக்குத்தான் அசிங்கம், அவனோட ஸ்டேட்டஸூக்கும் வளர்ப்புக்கும் தான் இழுக்கு.
    அதுவாவது அவனுக்கு புரியுதா, இல்லையான்னுத் தெரியலை.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!