Skip to content
Home » உயிரில் உறைந்தவள் நீயடி-9

உயிரில் உறைந்தவள் நீயடி-9

அத்தியாயம்-9

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

திருப்பூரில் ஆடை நெய்யும் தொழிற்சாலை அதிகம். இது தன் தாத்தாவுக்கு அப்பா துவங்கிய தொழில். தந்தை தட்சிணாமூர்த்தி இங்கு வருவதைக் குறைந்து கொண்டார். இங்கு மேற்பார்வையிடுவது, தன் அறிவை உழைப்பை போடுவது எல்லாமே யுகேந்திரன் மட்டுமே‌.

லாபம் ஈட்டும் தொழிலும் ஏற்றுமதி நிறுவனத்தோடு ஒப்பந்தம் வைத்திருக்க, ஆடைகள் உருவாக்கி விற்க தனித்தனியாக ஆட்களை நியமித்திருந்தான்.

இங்கு வந்து ஏசியைக் கூட்டிவிட்டுச் சாய்விருக்கையில் சாய்ந்தான்.

‘இவளை பார்த்திருக்கக் கூடாது. கல்யாணம் பண்ணிருக்கக் கூடாது. ரோஷப்பட்டு இவளை கட்டிக்கிட்டு என் சுபாவத்தைத் தொலைச்சிட்டு இருக்கேன். என் அம்மா முன்ன, நல்ல மகனா என்னால தலை நிமிர்ந்து நிற்க முடியலை.

அம்மாவே இப்படி என்றால்? அப்பா என்னயென்ன பேசுவாரோ?’ என்று யோசிக்கத் தலைவலித்தது யுகேந்திரனுக்கு.

நேரத்திற்குச் சாப்பிடாமல் சுற்றுவது கூடுதலாகத் தலைவலியை பாரமேற்றியது.

இதில் என்ன தான் கதவை மூடியிருந்தாலும் ஃபேக்டரி தையல் இயந்திரத்தின் சப்தம் செவியில் விழுந்தது.

அதனைத் தாண்டி தண்ணீர் விழும் சப்தத்தோடு ஜீவிதா அழுத சத்தம் யுகேந்திரன் காதில் கேட்டுக்கொண்டே இருந்தது.

தன் மனதின் நிலவரம் என்னவென்று சிந்திக்கப் பிடிக்காமல், கடையில் வேலை செய்தவனிடம் உணவை வாங்கிவர கூறினான்.‌ உணவு வந்ததும் பூரியில் கை வைக்க, தந்தை தட்சிணாமூர்த்தியிடமிருந்து அழைப்பு வந்தது.

இன்னிக்கு சாபிட்ட மாதிரி தான் என்று ”சொல்லுங்கப்பா” என்றான். எப்படியும் திட்டி தீர்க்க நினைக்கலாம் அந்த எண்ணத்தில் அப்பாவின் திட்டை கேட்க தயாரானான்.

“வீட்ல சாப்பிடாம பேக்டரி கிளம்பிட்டதா அம்மா சொன்னா. ஏன் சாப்பிடலை” என்றார்.

“இங்க வேலையிருந்தது வந்துட்டேன் அப்பா. பக்கத்துலயிருக்கற டிபன் கடையில் பூரி வாங்கியிருக்கேன்‌, சாப்பிட்டுட்டு இருக்கேன்.” என்றான்.‌

“உங்க அம்மாவும் இங்க பூரியை தானே செய்திருக்கா? இரண்டு நிமிஷம் இருந்து சாப்பிட என்னவாம்?” என்றார்‌.

“அது வந்துப்பா… கொஞ்சம் வேலை அதனால இங்க வந்துட்டேன்” என்று கூற முடியாது தவித்தான்.

“மதியம் வீட்ல வந்து சாப்பிட வாங்க” என்றிட, “சரிங்கப்பா” என்றான்.

உடனே போன்‌ துண்டிக்கப்பட, ‘என்ன அப்பா ஜீவிதாவை அடிச்சதை பத்தி மூச்சு விடலை. ஒரு வேளை மதியம் நேர்ல அதட்டுவாரா?’ என்றவன் வீட்டு எண்ணங்களை ஒதுக்கி வைத்து, வேலையைப் பார்வையிட்டான்.

இங்கு உமாதேவியோ “நான் என்ன சொன்னேன். நீங்க என்ன மகனோடு கொஞ்சிட்டு இருக்கிங்க” என்றார்.

தட்சிணாமூர்த்தியோ “பொன்னம்மா காதுல விழணுமா. கொஞ்சம் மெதுவா பேசு. மருமக வந்தாச்சுன்னு உனக்கும் குரல் கொஞ்சம் கூடதான் வருது” என்றார்.

“நீங்க ஜீவிதாவை பார்க்காம பேசறிங்க. உங்க பையன் கைரேகை அவ கன்னத்துல அப்படியே பதிஞ்சு இருக்கு. எதுக்கு இப்படிப் பண்ணறான்? பிடிக்கலைன்னா கல்யாணம் பண்ணாம கடந்து போயிருக்கலாம்ல. நம்ம வளர்ப்புல எங்கயோ தப்புயிருக்கு” என்று துவண்டார்.

“சும்மா நொய்யு நொய்யுன்னு பேசாத உமா. எங்கப்பா அம்மா வளர்த்த வளர்ப்பு கூடத் தான் தப்பா போயிருக்கு. என் தங்கை காதலிச்சு ஓடலை.

யார் லைப்பும் யாரோட வளர்ப்பு முறையால மாறாது. உன் பையனிடம் நான் ஏதாவது கேட்டு, அவன் ஏதாவது அந்தப் பிள்ளையை முறைக்கவா?

புருஷன் பொண்டாட்டின்னா இன்னிக்கு அடிச்சிப்பாங்க. நாளைக்குக் கூடிப்பாங்க. நீ குறுக்காலத் தலையிடாமயிரு. அதுவே சரியாகிடும். கல்யாணமாகி மூன்று நாள்ல என்ன வாழ்ந்திட்டு அந்தப்புள்ள என் பையானோட வாழறது சாபம்னு சொல்லுது.

என் பையனோட ஒரு நாலு வருஷம் வாழ்ந்துட்டு, அப்புறம் சாபம்னு சொல்ல சொல்லு பார்க்கலாம்.” என்றார் தட்சிணாமூர்த்தி.‌

கணவர் பேசுவதும் சரியென்று தோன்றியது. தன் பிள்ளையோடு வாழ்வது சாபம் என்று கூறினால் தகுமா?

“மருமக சாப்பிட்டாளா?” என்று கேட்டார் மாமனார். அவர் ஜீவிதாவுக்குத் தாய் மாமன் அல்லவா?! அன்னை பாசமும் உண்டு தானே?!

“பூரியை தட்டுல கொண்டு போய் வச்சி சாப்பிட சொல்லிருக்கேன்” என்று பரிமாற, ”உன் மகன் சாப்பிட்டான். நீ அவன் சாப்பிடலைன்னு யோசிக்காம உட்கார்ந்து சாப்பிடு.” என்று எழுந்து சென்றார்.

உமாதேவி மருமகள் அறையை எட்டி பார்த்தார்‌.

உணவை சாப்பிட்டு தான் படுத்திருந்தாள்.

பொன்னம்மாவை விட்டுத் தட்டை எடுத்துவிட்டு கதவை சாற்றி வர கூறினார்.

அதன் பொருட்டு உறக்கத்தில் சென்றிருந்தாள் ஜீவிதா.

இன்றும் தூங்கி எழுந்த போது, தன் கண்ணெதிரில் ‘ஏன்டா நான் இவ்ளோ சொல்லறேன் உனக்கு அறிவில்லை. இப்ப அது ரொம்ப முக்கியம்” என்று கடுகடுக்கும் கணவனைக் கண்டு வேகமாய் எழுந்தமர்ந்தாள்.

காலையில் லேசாக க்ளிப் போட்டு அடக்கியிருந்த கூந்தல், தற்போது எழுந்து அமரவும் கலைந்த கூந்தலாய் யுகேந்திரன் விழிக்குத் தரிசனம் தந்து காட்சிக்கு வந்தாள்.

மறுபக்கம் போனில், “மச்சி..‌ விருந்துக்குத் தானடா கூப்பிடறேன். கல்யாணத்துல எல்லாம் பந்தி பரிமாறினப்ப, அந்தப் பிள்ளை தலைநிமிர்ந்து கூட என்னைப் பார்க்கலை‌. உன் பிரெண்ட்னு தெரிய வேண்டாம். இங்க என் பொண்டாட்டி பிள்ளைங்க உன்னையும் உன்‌ பொண்டாட்டியும்‌ விருந்துக்குக் கூப்பிடுங்கன்னு ஒரே தொந்தரவு. ஏன்டா தேன்நிலவும் வேண்டாம்னு சொல்லற, விருந்துக்கும் வரமாட்டேங்குற, பிறகு வீட்லையே ரூமுக்குள்ளயே அடைகாக்கா போறியா?” என்று கேலி செய்தான்.

”நான் என்னவோ அடைக்காத்துக்கறேன்.‌ நீ மூடிட்டுயிரு” என்று நண்பனை பாகுபாடுயில்லாமல் திட்டினான்.

ஜீவிதா தலைவாற ஆரம்பித்தாள். வெளியே சென்றிடலாமா என்று கூட யோசித்தாள். ஆனால் இந்தக் கன்னத்து வீக்கம் மற்றவர் பார்வைக்குப் படலாம். ஏதோ தோட்டக்காரன் நல்லன், சண்முகா வண்டியோட்டுபவர், சமைக்காரி பொன்னம்மா, என்று மற்றவர் கண்டால் இந்த வீட்டுக்கும் அசிங்கம் தனக்கும் சங்கடமென இருக்க உமாதேவி அறைக்கே சாப்பாடு எடுத்து வந்தார்.

“இல்லை ஜெகா… அதுக்குன்னு ஒரு நாள் வரும். அப்ப வர்றோம்‌” என்றான்.

“ம்ம் வைக்கறேன் டா” என்று உலாத்திட, “நீ உட்கார்ந்து சாப்பிடு” அதட்டினார் மருமகளை.

ஒரு புறம் அதட்டும் மாமியாரும், மறுபுறம் கணவனைக் கண்டு அஞ்சி குழந்தை உணவை கொறிப்பது போலச் சாப்பிட்டாள்.

“ஏதாவது வேண்டும்னா தயங்கமா கேளு, அத்தைன்னு ஒரு குரல் கொடு” என்று அகன்றார் உமாதேவி.

உமாதேவி தலை மறையவும், யுகேந்திரன் ஜீவிதா அருகே வந்தான்.

தட்டில் இருந்த உணவை பார்த்து “சாம்பார், ரசம், உருளை பொரியல், பீன்ஸ் பொரியல் அப்பளம்… ம்ம்ம்.‌ இதுல முட்டை அடை ஊத்தியிருக்காங்க. நல்லா…‌ இருந்த இடத்துலயே ருசியா வெளுத்து வாங்கற. காலையில புருஷன் சாப்பிட்டானானு தெரியுமா? நான் என்ன சாப்பிட்டேன்” என்று வம்புக்கு வந்தான்.

அவன் தட்டை தட்டி விடுவானென்று பயந்து நிற்க, யுகேந்திரனோ இதமான சூட்டில் அவள் தட்டில் இருந்த முட்டையை, அப்படியே மொத்தமாய்ப் பேப்பர் போல மடக்கி வாயில் அதக்கினான்.

தன் எச்சி தட்டில் எடுத்து சாப்பிடுவதை விழி விரித்து ஆச்சரியமாகக் காண, ”ஏதாவது வேண்டுமின்னா உன் மாமியார் தான் கேட்டு வாங்கிக்கச் சொன்னாங்களே. முட்டையை உங்க பையன் சாப்பிட்டார். எனக்கு வேற முட்டை அடை ஊத்தி தாங்கன்னு கம்பிளைன் பண்ணு. அவங்க என்னை வந்து திட்டட்டும். மனசுல இன்னும் எல்.கே.ஜி பால்வாடி பாப்பான்னு நினைப்பு. ” என்று விரலை சப்புக் கொட்டினான்.

ஜீவிதா அவனை நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை. தன்னை வேண்டுமென்றே வம்பு செய்பவனிடம் வாயை கொடுத்திட பிடிக்காமல் இருந்தாள். அவனோ அவள் அமைதி அவனுக்கு வசதியாக, அவள் சேலையில் கையைத் துடைத்தான்.

ஜீவிதாவிற்குக் காலையில் தட்சிணாமூர்த்தி மாமா பேசியது கேட்டதே. ‘புருஷன் பொண்டாட்டின்னா இன்னிக்கு அடிச்சிப்பாங்க. நாளைக்குக் கூடிப்பாங்க. நீ குறுக்காலத் தலையிடாமயிரு. அதுவே சரியாகிடும். கல்யாணமாகி மூன்று நாள்ல என்ன வாழ்ந்துட்டு அந்தப்புள்ள என் பையன் கூட வாழறது சாபம்னு சொல்லுது.

என் பையனோட ஒரு நாலு வருஷம் வாழ்ந்துட்டு அப்புறம் சாபம்னு சொல்ல சொல்லு பார்க்கலாம்’ மூன்று நாள்ல பஞ்சாயத்தா அடப்போம்மா’ என்பது போல இருந்ததே அவர் பேச்சு.

ஒரு வேளை வீங்கிய கன்னத்தை மாமா பார்த்தாரெனில், தன்னை வம்பு செய்யும் யுகேந்திரன் மச்சானை உதைக்க வாய்ப்புண்டு.

அத்தை அறைந்தாரே? ஒரே பையனை, அதுவும் இவ்வளவு உயரத்திற்கு வளர்ந்த பிள்ளையை அடித்தது மனதின் வலியை கூட்டியிருக்கும். அதுவும் நேத்து வந்த என்‌ முன்னால் இதுவரை உண்மையாகவே அடியே வாங்காதவராக இருந்து, என்னால் அறை வாங்கியிருந்தால் நிச்சயம் அதுவும் வன்மத்தில் வரவு ஏற்றிக் கொள்வாரே கணவர்.

இன்று இரவும் அடித்து வார்த்தையைத் துப்புவாரா? என்று கலக்கமானாள்‌.

வெளியேறவும் முடியாது அறைக்குள் முடங்கவும் இயலாது அவனைப் பாராமல் தவிக்க, பக்கத்தில் கதவு போன்று இருந்ததை அழுத்தி திறந்தான்.

அது வழியே பால்கனி இருந்தது. கதவை திறந்தவன் அவன் பாட்டிற்குச் சாப்பிட சென்றான்.

இங்கவொரு பால்கனி இருக்கா? நான் இதைக் கப்போர்ட்னு இல்லை நினைச்சேன். என்றவள் வெளியே எட்டியேட்டி பார்த்தாள்.

கீழே அழகான நந்தவனம் காட்சிக்கு விருந்தானது‌.

வண்ண மலர்கள் பூத்துக் குலுங்க, வண்டுகள் சுற்றிக்கொண்டிருந்தது‌.

தன் வலியெல்லாம் மறந்துவிட்டு இயற்கையை ரசிக்க ஆரம்பித்தாள்.

அங்கே ரோஜா, மல்லி, முல்லை, செம்பருத்தி, செவ்வரளி, மஞ்சளரளி, சங்கு பூ, நித்யகல்யாணி, கல்வாழை, நீல சம்பங்கி, குண்டு மல்லி, பவளமல்லி, ரங்கூன் மல்லி, நந்தியாவட்டை, நீலமுல்லி, போன்ற வண்ணமலர்கள் மேலே தேனீக்கள் மொய்த்துக் கொண்டிருந்தது. வண்டுகள் ரீங்காரமிட்டது.

கொய்யா சப்போட்டா மரத்தில் அணில்கள் ஓடியாடி விளையாடியது. மாமரத்தில் கிளி ஒன்று கொத்தி சுவைத்தது.

அரைமணி நேரத்துக்கு மேலாக எட்டியெட்டு பார்த்துக் கொண்டிருக்க, கதவை தாழிடும் சப்தம் கேட்டதும் திரும்பினாள்.

யுகேந்திரன் ஷர்ட் பட்டனை ஒவ்வொன்றாய் கழட்டி ஜீவிதா அருகே வரவும் கால் விரல்கள் நின்ற இடத்தை இறுக பற்றியது.

அவள் எதிர்பார்த்ததிற்கு முரணாக அவளையும் அவள் பார்வை செல்லும் தோட்டத்திலும் கண்டு, மெத்தையில் குப்புறப்படுத்து விட்டான். நெஞ்சில் கைவைத்து, நிம்மதியைடைந்தாள்.

“தினமும் எப்ப வருவேன் எப்படி வருவேன்னு தெரியாது. மதிய நேரம் சாப்பிட வந்தா குட்டி தூக்கம் போடாம போக‌மாட்டேன். நினைவு வச்சிக்கோ. அப்பறம் இவன் ஏன்டா வந்து தூங்கறான்னு மனசுல திட்டாத” என்று குப்புறப்படுத்து பேசவும் உதட்டை கோணித்துக் கொண்டாள்.

லேசாகக் கன்னம் சுருக்கென்றதும் பால்கனி சுவரில் கையை மடக்கி, அதில் முகம் புதைத்துத் தோட்டத்தில் இருக்கும் ஒவ்வொரு நிறமலர்களையும், செடி கொடி மரத்தையும் அதன் பெயர்களையும் தனக்குத் தெரிகின்றதா என்று பொழுதை நீட்டினாள்.

கொஞ்சம் கண் அசந்துவிட்டுச் சத்தமின்றிப் பேக்டரிக்குக் கிளம்பினான் யுகேந்திரன்.

உட்கார்ந்தே இருக்க அலுப்பு தோன்ற, சோம்பல் முறித்துத் திரும்பினாள் ஜீவிதா.

‘இவர் எங்க போனார்? எப்ப போனார்? இங்க தானே குப்புறப்படுத்துட்டு இருந்தார்?

அவர் சொல்லற மாதிரி புருஷன் என்ன சாப்பிட்டார்? எப்ப போறார் வர்றார் ஒன்னுமே தெரியாம இருக்கேன்.

அத்தையெல்லாம் மாமாவோட ஒவ்வொரு செய்கைக்கும் அர்த்தம் தெரிந்து வச்சிக்கறாங்க. எனக்கு இதெல்லாம் ரொம்பக் கஷ்டம்.

மூன்று நாள் கல்யாண வாழ்வில், அவருக்குப் பிடிக்காத மாதிரி தான் நடந்துட்டு இருக்கேன்.

ஆனா அவர் பழிவாங்க என்னைக் கல்யாணம் பண்ணிருக்க, என்னால் எப்படி நிம்மதியா அவரோட வாழறது?’ என்றும் சிந்தனைவயப்பட்டாள்.

நேரம் உருண்டோடி மாலை டீயும் இருந்த அறைக்கே வந்தது.

”சாரி அத்தை. இங்க வந்ததும் உங்களுக்கு வேலை வாங்கறேன். எனக்கே கஷ்டமா இருக்கு. நான் வேண்டுமின்னா வெளியே வர்றேன்.” என்றாள்.

உமாதேவியோ தாமரை விதையால் செய்த மசாலா தூவலுடன் வெங்காயம், தக்காளி, ஓமப்பொடி கலந்து செய்து, தட்டில் டீயுடன் எடுத்து வந்து கொடுத்து, “நீ அப்படியே வெளியே வந்தா என் மகனை இத்தனை நாளா மதிப்பா பார்த்தவங்க ஒரே நாள்ல கீழிறக்கி பேசினாலும் ஆச்சரியமில்லை.

ஏன்னா.. உன் முகம் அந்தளவு அவனைக் கெட்டவனா சித்தரிக்க வச்சிடும்.

ஏன்டா இந்தளவு அடிச்சி காயப்படுத்தினனு கேட்டதுக்கு, ‘நான் சும்மா தான் தட்டினேன். அடிக்கணும்னு அடிக்கலை. அவளுக்கு அதுக்கே கன்னம் பன்னு மாதிரி வீங்கிடுச்சு’னு சமாளிக்கறான்.

என்ன சமாளிச்சாலும் அவன் பழிவாங்க தாலி கட்டியிருப்பது தெளிவா தெரியறதால என்னால தாங்க முடியலை. அவனுக்குப் புத்திமதி சொல்ல வேண்டியது இல்லை இருந்தாலும் சொல்லி இருக்கேன். கன்னத்துக் காயம் ஆறுற வரை நீ ரூமுக்குள்ளயேயிரு” என்று கோரிக்கை வைத்திட, தலையாட்டினாள் ஜீவிதா.

அறைக்குள் பொழுது போவதற்குத் தோதாகப் பறித்த பூக்களைத் தொடுக்கக் கொடுத்தார். ஜீவிதாவும் பூவை தொடுத்து நீட்ட அவள் தலையில் இரண்டு மல்லிப்பூவை வைத்துவிட்டு, மீதியை இறைவனுக்கு வழிப்படவும் வைத்து அழகு பார்த்தார்.

அதன் பின் இரவு உணவும் உமாதேவியே எடுத்து வந்தார்.

நன்றாகச் சாப்பிட்டு முடிக்கும் தருணம், யுகேந்திரன் அறைக்குள் வந்தான்.‌

மதியம் போலவே அவளை மேலிருந்து கீழ்வரை நோட்டமிட்டு கூடத்திற்கே திரும்பி சாப்பிட அமர்ந்தான்.

கைகள் தட்டில் கோலமிட, உமாதேவி மகனின் கையில் கரண்டியால் அடித்து, “என்னடா யோசனை?” என்றார்.

“ஒன்னுமில்லைம்மா” என்று சாப்பிட தட்சிணாமூர்த்தி மகன் முன் அமர்ந்தார்.

தந்தை திட்டாமல் பேக்டரி நிலவரத்தை மட்டும் கேட்டுக்கொண்டார்.

அதுவே யுகேந்திரனுக்குத் தெம்பு வந்தது.

உமாதேவி பொன்னம்மாவிடம் மீந்துப்போன உணவை கொடுத்துவிட்டுப் பேசிக்கொண்டிருக்க, தந்தையிடம் “நான் தப்பு பண்ணிட்டேன்னு அம்மா திட்டினாங்க அதோட அறைஞ்சுட்டாங்க” என்றான் வாக்கு மூலமாக.

“ம்ம்ம்ம். தெரியும் சொன்னா. நான் இன்னமும் திட்டலை. திட்டுற மாதிரி வச்சிடாத.

கதிரவனிடம் ‘எனக்கு உங்க இரண்டாவது பொண்ணைக் கட்டி வையுங்க’ன்னு வாயை திறந்து கேட்டது நீதான். நாங்க இல்லை.” என்றார்.

யுகேந்திரன் “புரியுதுப்பா” என்று எழுந்து கொண்டான்.

அதற்கு மேல் அவரும் எதுவும் கூற என்னயிருக்கின்றது.

ஒன்பதரைக்கு அறைக்கு வந்தவன் கண்டது கண்ணாடியை பார்த்து முகத்திற்கு க்ரீமை தடவும் ஜீவிதாவை தான்.

அமைதியாக மெத்தையில் குப்புறப்படுத்து கொண்டவன், சற்று நேரம் திரும்பி திரும்பி பார்த்து, பக்கத்திலிருப்பவளை வெறிக்க, அவளோ முதுகை காட்டி திரும்பி படுத்திருந்தாள்.

தன் வலிய கரத்தை அவளது இடையில் வளைத்து இழுக்க, ‘அவுச்’ என்று கத்தினாள்.

அவளைத் தன்னைப் பார்க்க வைத்து, “ருசிகண்ட பூனை தெரியுமா? என் நிலைமை அப்படித் தான். என்னால உன்னைய வச்சிட்டு திரும்பி படுத்துத் தூங்குறது சாத்தியமா தோணலை. நீ வேற இந்த ரூமையே மல்லிகைப்பூ வாசத்தை வச்சி மயக்கத்தைக் கொடுத்துட்டு இருக்க. அதனால் பலியாடு எப்பவும் போல நீ தான்” என்று கிசுகிசுப்பாய் பேசியவன், கணவனின் கடமையைத் தவறாமல் நிறைவேற்ற ஆரம்பிக்கும் பொருட்டு முத்தமழையில் ஆரம்பித்து மோகமழையில் நனைய கூடலில் அழைத்துச் சென்றான்.

-தொடரும்.

5 thoughts on “உயிரில் உறைந்தவள் நீயடி-9”

  1. M. Sarathi Rio

    உயிரில் உறைந்தவள் நீயடி…!
    எழுத்தாளர்: ப்ரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 9)

    அதாவது அடிக்கிற கை தான் அணைக்கும் என்கிறதை சிம்பாலிக்கா சொல்றானோ ?
    அதுக்கு அடிக்காமலே, அணைச்சால் அவன் மரியாதையை காப்பாத்திக்கலாம் எல்லார் முன்னாடியும்.

    ஐ திங்க், வினிதா கடைசி நிமிடத்துல அவனை வேணாம்ன்னு விட்டு விலகி ஓடிப் போனது அவனோட ஈகோவை ஹர்ட் பண்ணிச்சுன்னு நினைக்கிறேன். போக, போக அவளோட முந்தானை வாசம் இல்லாமல் அவனால தூங்க முடியாது பாருங்க, அவளோட முந்தானையை பிடிச்சுக்கிட்டு நாய் குட்டி மாதிரி சுத்தியும் வருவான் பாருங்கள். என்னவொன்னு, அப்பப்பப கொஞ்சமா கடிக்கவும் செய்வான், அது பிறவி குணம் மாத்த முடியாது தானே ?

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!