யாரோ-11
Thank you for reading this post, provide your thoughts and give encouragement.
நல்லதம்பியும் சாமுவேலும் பணத்திற்கு கொலை செய்பவர்கள் அவர்களே தங்கள் குற்றத்தை ஒப்புவித்து நிற்கவும் தரண் மனம் ஆட்டம் காண துவங்கியது.
நற்பவியை பார்த்து சுற்றி முற்றியும் பார்த்து தயங்கினான்.
எல்லாரும் சாப்பிட்டு வருவதற்கு சென்றனர். ஞானவேல் திவாகர் சென்றதும் இருந்த மற்ற இரண்டு போலீஸும் வெளியே சாப்பிட துவங்கினார்கள். நல்லதம்பி சாமுவேலிற்கு உணவை கொடுத்து விட்டு லாக்கப்பில் அடைத்தாள்.
ஜீப் டிரைவர் வாசு வெளியே அமர்ந்து காற்று வாங்க தரண் சாப்பிட வைத்து கேட்க ஆரம்பித்தாள்.
“எனக்கு கொலை செய்யறது தொழில் இல்லை மேடம். நான் என் தங்கை இதழினி செய்யாறு பக்கம் வாழ்ந்தோம். என் தங்கை இதழினி தான் டீச்சர் படிப்பு படிக்க ரொம்ப ஆசைப்பட்டுச்சு. என் சக்திக்கு மீறி கடனை வாங்கி படிக்க வச்சேன். இங்க அன்மருதையில மாதா டீச்சர் டிரைனிங் இன்ஸ்டியூட்ல தான் தங்கி படிச்சது.
அப்ப மாதம் ஒருமுறை பார்த்துட்டு வருவேன். தங்கைக்கு கல்யாணம் பண்ணிட்டு தான் கல்யாணம் பண்ணணும்னு உறுதியா இருந்தேன்.
அப்ப ஒரு முறை பார்க்கறப்ப இதழினி ரொம்ப அமைதியா கவலையா இருந்தா. என்ன ஏதென கேட்டப்ப ‘ஒன்னுமில்லை அண்ணா’ என்று மழுப்பிட்டா. அப்பவே சொல்லியிருந்தா ஒரு வேளை படிப்பும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம்னு கூட்டிட்டு வந்திருப்பேன். என் கிரகம் பொண்ணுங்க உம்முனு இருந்தா காரணம் எதாவது இருக்கும்னு அலட்சியமா இருந்துட்டேன்.” என்று குலுங்கி அழ ஆரம்பித்தான் தரண்.
“உங்க தங்கை இதழினிக்கு என்னாச்சு?” என்று சீரியஸாய் கேட்டாள்.
“அழகான அறிவான பொண்ணுக்கு என்னம்மா ஆகும். என் தங்கை நல்லா தொகுப்பாளியா இருப்பா. அதாவது மேடையில நல்லா பேசுவா. ஷண்முகசுந்தரம் இந்த ஊர்கட்சி தலைவர் என்ற முறையில் ஒரு தடவை அந்த கல்லூரிக்கு சிறப்பு விருந்தினரா வந்தார்.
என் தங்கை தான் அவரை வரவேற்று தொகுத்து பாராட்டி பேச நியமிக்கப்பட்டிருந்தா.
ரொம்ப நல்லா பேசினேன் அண்ணா. இனி வர்ற எல்லா மேடையிலும் என் ஆங்கில உரை கண்டிப்பா வேண்டும்னு மேடம் சொன்னாங்க. எனக்கு இதேவூர்ல ஒரு வேலை வாங்கி தருவதா கட்சி தலைவர் ஷண்முகசுந்தரம் கூட சொன்னார் என்று கூறினா.
ரொம்ப சந்தோஷமா இருந்தது. ஆனா கொஞ்ச நாள் கழிச்சு என்னிடம் பேசலை. உம்முனு இருந்தா. போன்ல முன்ன மாதிரி பேசலை. பெரும்பாலும் போனை அணைத்து வச்சிருந்தா. கேட்டதுக்கு போன் அணைத்து வைக்கணும் என்பது விதிமுறை என்று சொன்னா. நானும் நம்பினேன். அதனால குரலை கேட்க முடியலையேனு நேர்ல இரண்டு மூன்று முறை பார்க்க போனேன். ரொம்ப ஒடிசலா ஆளே மாறி போய் இருந்துச்சு. அதிக படிப்பு மனழுத்தம் கொடுக்குது சரியா சாப்பிடலைனு சொல்லுச்சு நம்பிட்டேன். நல்லா சாப்பிட சொல்லிட்டு வந்தேன்.
ஆனா அதுக்குப் பிறகு அவளை பிணமா தான் பார்த்தேன். யாரையோ காதலிச்சு அவன் இவளோட காதலை ஏற்றுக்கலைனு ஹாஸ்டல்ல தூக்கு போட்டு தற்கொலை பண்ணிக்கிட்டதா மேலிடம் சொன்னாங்க.
என் தங்கை நல்ல திறமைசாலி மேடம். மேடையில பேச பயப்படுற ரகமில்லை. அப்படியிருக்க காதலுக்காக சாக துணிந்தானு சொன்னது ஏற்றுக்க முடியலை. அவளோட திங்க்ஸ் எடுத்துக்கிட்டு வீட்டுக்கு வந்துட்டேன். அவ விரும்பின பையன்னு அவ தோழிகள் யாரையும் கையை காட்டடலை. அவ விரும்பியதே இறந்ததால தான் தெரியும் அண்ணானு சொன்னாங்க.
அதனால இதழினி எரிச்சிட்டு காரணம் தெரியாம வீட்ல அழுதப்ப தான் அவளோட போனை காணோம்னு தெரிய வந்தது.
அவங்க கொடுத்த பையில தேடினேன் கிடைக்கலை. காலேஜ்ல கேட்டேன். அவ ரூமை க்ளினா பார்த்தாச்சு இல்லைனு சொன்னாங்க. போதாததுக்கு என்ன வேண்டும்னா செக் பண்ண கூட சொன்னாங்க.
எனக்கு போன் கிடைக்கவே இல்லை. வீட்டுக்கு வந்துட்டேன் போன் தொலைந்தது உறுத்தலாவே இருந்துச்சு. இதுல காதலிச்சதா வேற கடிதம் எழுதி வச்சதை பார்த்தும் மனசு கேட்கலை. அதனால நேரா ஏர்டாக் கம்பெனிக்கு போய் இந்த நம்பரோட ரீசண்ட் ஆக்டிவிட்டி சாட் போன் கால் நம்பர்ஸ் கேட்டேன், ரொம்ப வற்புருத்தி கேட்டப் பிறகு
கொடுத்தாங்க.
எல்லாமே ஷண்முக சுந்தரத்தோட போன் வாட்ஸப் சாட். அதுல முதல்ல நல்லா படி நான் வேலை வாங்கி தர்றேன். இன்னிக்கு உன் பேச்சு எழுச்சியா இருந்தது. நீ பேசறப்ப கை ஆட்டறது வீணை வாசிக்கிற மாதிரி எனக்கு காட்சியா மனசுல ஓடுது, இப்படி ஆரம்பிச்சி நைஸா நீ அழகா அறிவா இருக்க, என்று ஒரே புகழ்ச்சியா இருந்தது.
போக போக இரட்டை அர்த்தமா பேசினாரு. அடுத்து ஆபாசமா இருந்தது. ஒரு கட்டத்துல என்னோட இருக்க கசக்குதா. அப்படியிப்படி கேட்டுட்டார். என் தங்கை போலீஸ் ஸ்டேஷனுக்கு போவேன். உன் பேச்சை மத்தவங்களுக்கு காட்டி உன் முகத்திரையை கிழிப்பேன்னு சொல்லிருந்தா. ஆனா எல்லாமே வேஸ்ட். அது உனக்காக மட்டும் உபயோகப்படுத்துற நம்பர் டி. என்னோடது என்று சொல்ல ஆதாரம் இருக்கா? நீயா நான்னு நினைச்சி யாரோடவோ பேசியதா சொல்லுவேன் மிரட்டியிருந்தார்.
அதுல இங்க இதுக்கு முன்ன இருந்த போலீஸ் சூர்யா என்பவர் ஷண்முகத்தோட ஆளு வேற. அதனால இதழினி யாரிடம் சொல்ல என்று தவச்சிருக்கா. இதுக்கு நடுவுல என் தங்கை மசியலைனு, அவ ரூம்ல அவளுக்கே தெரியாம கேமிரா வச்சி படம் எடுத்து வச்சி அதை அவளுக்கு அனுப்பி மிரட்டி சம்மதிக்க கேட்டுயிருக்கான். அவளால சம்மதிக்க முடியாம யார் யாரிடமோ உதவி கேட்டு போராடி, உதவி கிடைக்காம தூக்கு போட்டுக்கிட்டா.” என்று குலுங்கி குலுங்கி தரண் அழுதான்.
நற்பவி அவனுக்கு தண்ணீரை கொடுத்து குடிக்க வைத்து சீராக உதவினாள்.
“அப்ப தான் சந்தானகிருஷ்ணன் ஷண்முகத்துக்கு பகை என்று இந்த ஊர்ல வந்தப்ப தெரிந்தது. இரண்டு மாதம் தங்கை எதுக்கு இறந்தான்னு தெரிந்தது. ஆறு மாசம் என்ன செய்ய ஏது செய்யனு தெரியலை. ஏன்னா என் தங்கை மானமும் எனக்கு முக்கியம். யாருக்கும் தெரிய கூடாதுனு தானே இறந்தா. அதனால நானும் பகிரங்கமா எந்த முயற்சியும் எடுக்கலை. ஆனா ஷண்முகத்தை கொலை செய்ய நோட்டமிட்டேன்.
ஷண்முகத்துக்கும் சந்தானத்துக்கும் பகைனு தெரிய அவரோட சேர்ந்தேன். அவரோ ஊருக்கு ஒதுக்க இருக்கற வீட்டை பராமரிக்க என்னை வேலைக்கு சேர்த்துக்கிட்டார். இங்க ஊர்காரங்க பழக்கம் கிடைக்கலை. ஆனா சந்தானத்துக்கிட்ட நாயா வேலை செய்தேன். அதோட அவன் நம்பிக்கை கிடைச்சது.
ஒரு முறை குடிச்சிட்டு பேசினப்ப, நான் வேண்டுமின்னா… ஷண்முகத்தை கொலைப் பண்ணிடறேன்யா. என் மேல பழி வராம பார்த்துப்பிங்களானு கேட்டேன். அப்படியே வந்தா அவர் என்னை காப்பாத்துவாருனு நம்பினேன்.
ஆனா இருயா நான் சொல்லறப்ப பண்ணு என்று வெயிட் பண்ண சொன்னார். என் தங்கை இறந்து இரண்டு வருடம் ஆகியும் மூச்சு விடலை.
எனக்கு தனியா கொலை செய்யற அளவுக்கு தைரியமும் இல்லை. அதே போல ஷண்முகத்தையும் நெருங்க முடியலை. அதனால சந்தானம் சொல்லற வரை காத்திருந்தேன். இரண்டு வருடம் ஆகிடுச்சு. இப்ப தான் சந்தானம் கொலை செய்ய பிளான் பண்ணி இருந்தார்.
அவர் சொல்லி நான் போறது போல அவர் எண்ணம். ஆனா ஏற்கனவே ஷண்முகத்தை கொலை செய்ய தான் காத்திட்டு நாயா சுத்தறேன்னு தெரியாது.
அன்னிக்கு சந்தானத்தோட பிறந்த நாள் விழா, அப்ப ஷண்முகசுந்தரம் வீட்ல யாருமில்லை என்றும் அவர் பையன் கூட சினிமா போக போறதா தெரிந்தது. வேலையாட்களை எல்லாம் போக சொல்லிட்டாருனு தெரியவும் கொலை பண்ண போனேன்.
அங்க போய் கதவை திறந்தா நிசப்தமா இருந்தது. யாருமில்லை… சந்தானம் கொடுத்த வழியை வச்சி ஷண்முகத்தோட வீட்டுக்குள் அவரோட அறைக்கு போனேன்.
அங்க… அங்க… ஷண்முகசுந்தரம் இரத்த ஆறுல கிடந்தாரு. உடல்ல அங்கங்க குத்தி கண்கள் மேல சொறுகி உயிரை விட்டார்.
எனக்கு அதை பார்த்ததும் பயத்துல கத்திய கெட்டியா பிடிச்சிட்டு ஓடி வந்தேன். வண்டி ஸ்டார்ட் ஆகலை பயத்துல என்ன செய்யறதுனு தெரியலை. உடனே குறுக்குல ஓடி நேரா சந்தான வீட்டோட பின் கேட்டு தோட்டம் பக்கம் வந்தேன். அதுக்கு முன்னயே சையத் கார் அங்க இருந்தது.
சையத் சர்வீஸ் விட்டு ஈவினிங் தான் வந்தததுனு தெரியும். அதனால அதை எடுத்துட்டு ஓடி வந்துட்டேன். சையத் கார் சாவி என்னிடம் ஒன்று இருந்தது. தோப்பு வீட்ல வர்றப்ப ஒரு தடவை தொலைச்சிட்டு போனது. எதுக்கோ உபயோகப்படுத்தலாம்னு வச்சிருந்தேன். அன்னிக்கு உதவிச்சு
அதனால போன் பண்ணி சொல்லிப்போம். முதல்ல கொலை நடந்த இடத்துல இருந்து ஓடிடலாம்னு ஓடினேன்.
சத்தியமா கொலை செய்ய தான் வந்தேன். ஆனா நான் கொலை செய்யலை. என் தங்கை இதழினி மேல சத்தியமா பண்ணலை.
அதை சந்தானத்திடம் கூட சொன்னேன். அவர் தான் கொலை பண்ணலைனாலும் நீ அங்க போயிட்டு வந்தததுக்கு ஆதாரம் கிடைச்சா நான் மாட்டிப்பேன்னு சொன்னார்.
இதுல செழியன் என்ற பையன் வேற லைவ்ல போட்டு சந்தானத்துக்கு ஒரு ஆதாரமா பண்ணிட்டாருனு சையத் சொன்னார். போன் காண்டெக்ட் பண்ணாதே சொல்லற வரை தலைமறைவா இரு. வண்டியை எடுக்காதேனு சொன்னார். அதனால தான் மறைந்து இருந்தேன்.” என்று கூற ஞானவேல் சாப்பிடுவதாக சென்றவர் ஒட்டு கேட்டு ஷ்யாமிற்கு நடந்தவையை கூறினார்.
நற்பவி சிந்தனை வயப்பட்டு என்ன செய்ய என்று யோசித்து நின்றாள்.
-யாரோ தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.