Skip to content
Home » ஐயங்காரு வீட்டு அழகே-22

ஐயங்காரு வீட்டு அழகே-22

அத்தியாயம்-22.

Thank you for reading this post, don't forget to subscribe!

மாலை அலுவலகத்திலிருந்து கிளம்பும் போது சாவியை அவளிடம் நீட்ட, “இல்லை நீங்களே ஓட்டுங்கோ” என்று மறுக்க, ராவணன் நமுட்டு புன்னகையோடு இயக்கினான்.‌

“வீட்ல மாவு தீர்ந்திடுச்சு. மாவு வாங்கிடுங்கோ. சட்னி மட்டும் நம்மாத்துல வச்சிடலாம்” என்றாள்‌.

எப்பவும் கோவில் பக்கத்தில் இருக்கும் இந்த கடையில் மாவு சுத்தமாக அரைப்பதை கவனித்ததாள். “இங்க மாவு வாங்க நிறுத்துங்கோ” என்று கூற, ராவணன் செவியில் விழாமல் போகவும், தோளைத்தட்டி, “செத்த வண்டியை நிறுத்துங்கோன்னு சொன்னேன். மாவு வாங்கணும்.” என்று கூற, அவள் வெண்டக்காய் விரல் தீண்ட வண்டியை நிறுத்தினான்.

மாவு வாங்க காருண்யா செல்லவும், வண்டியை அணைத்துவிட்டு மண்ணில் காலூன்றி, தன் மனைவியின் நடையை ரசித்தான். அவளாக தன் தோளை தட்டி தீண்டியதில் மயக்கத்தில் மிதந்தான்.

துப்பட்டாவை ஒரு பக்கம் போட்டு, மறுகையில் ஹாண்ட்பேக் அணிந்து அங்கே மாவுக்கடையில் பணம் நீட்டி மாவு வாங்கினாள்.

வெளியே வரவும் அங்கே கோவிலுக்குசெல்லும் போது தனக்கும் தினமும் பூ வாங்கும் பூக்கடை அம்மாவோ, “பாப்பா… மல்லிப்பூ வாங்கிட்டு போ.” என்று நீட்ட, “காத்தால வாங்கிக்கறேன் அக்கா.” என்று மறுத்தாள்.

“மூன்று மொழம் தான் இருக்கு. உனக்கு தான் முடி நீளமா இருக்கே. மொத்தமா வாங்கிட்டா கடையை ஏறக்கட்டுவேன்” என்று கூற காருண்யா மறுக்கும் விதமாக, கூறும் முன், ஸ்கூட்டிக்கு ஸ்டாண்ட் போட்டுவிட்டு ராவணன் பணத்தை கொடுக்க பூக்காரம்மா பூவை காருண்யாவிடம் நீட்டினார்.

இனி மறுக்க முடியுமா என்ன? வாங்கிக் கொண்டவள் லேசான நடுக்கத்துடன் ராவணனை காண, அவனோ, ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து திரும்பினான்.‌

காருண்யா கலக்கமாய் அமர்ந்திருப்பது புரியவும், வீட்டுக்கு வந்து சேர, கதவை திறந்து உள்நுழைந்தாள்.

மாவையும் பூவையும் டைனிங் டேபிளில் வைத்துவிட்டு, குளிக்க சென்றாள். இந்த வாகன நெரிசலில் தூசி வேர்வை என்று வந்ததும் குளித்து பழகியது‌. ராவணனும் வந்ததும் குளிப்பான்.

நைட்சூட்டில் தலையில் க்ளிப் அணிந்து இட்லி அவிக்க சென்றாள்‌. கூடவே வெங்காய சட்னி அரைப்பதற்கு சின் வெங்காயத்தை உறிக்கும் நேரம், ராவணன் டேபிளிலிருந்த பூவை எடுத்து காருண்யாவுக்கு சூடிவிட்டான்.

சட்டென்று சமையல் செய்யும் நேரம் பின்னாலிருந்து ராவணன் அவள் தலையில் பூவை சூடவும், தேகம் விரைத்தது காருண்யாவிற்கு.

ராவணனோ அவளுக்கு தலையில் சூடியப்பின் ஹாலுக்கு வந்து ஸ்போர்ட்ஸ் சேனலில் கிரிக்கெட்டை பார்வையிடுவதில் மும்முரமானான். ஒரு நிமிடம் காருண்யாவுக்கு இரத்த நாளங்கள் எல்லாம் வேகமாய் பயணித்து கிலியை ஏற்படுத்திவிட்டது.

காருண்யா போனில் அமிர்தம் பாட்டி அழைக்க, பேசியப்படி, வெங்காயம் வதக்கி, காரமிளகாய் பேட்டு மிக்ஸியில் அரைத்தாள்.

மாவு கடையில் வாங்கியதை எல்லாம் பாட்டியிடம் கூறவில்லை. அப்படி கூறினால் அதற்கொரு சொற்பொழிவே ஆற்றிவிடுவார்.

“மூட்டுவலிக்கு தைலம் தேய்ச்சேளா பாட்டி. ஒருதடவை டாக்டரிடம் காட்டி பாருங்கோ. அவா மாத்திரை தருவா. ஏன் இப்படி ஹாஸ்பிடல் என்றாலே பத்தடிக்கு ஓடுறேள்” என்று கூறி இட்லியை ஹாட் பாக்ஸில் மாற்றினாள். பேசியபடி எல்லாம் எடுத்து வைத்துவிட்டு பாட்டியிடம் பேசி துண்டித்தாள்.

சாப்பிடும் நேரம் காரு சிரிப்பை துடைத்து விட்டவளாக, பரிமாற, “காரு… ஏன் உம்முன்னு இருக்க.” என்று சீரியஸாக மாறி கேட்டான்.

“இ…இல்லையே.” என்று பதற, “இல்லை.. காலையில இருந்து மாறிட்ட. கேன்டீன்ல என் மனநிலையை சொன்னேன். இத்தனை நாளா சிநேகிதியா பார்த்ததால் உன்னை என் லைப் பார்ட்னரா நினைக்க முடியாம தவிச்சேன். இன்னிக்கு சிநேகிதியா பார்க்க முடியலை. என்னோட…. என்‌ பெட்டர் ஆஃப்பா மனசுல பதிவாகிட்டன்னு சொல்லிட்டேன். அதுக்காக உன் மனநிலை மாறுவதுக்கு முன்ன நெருங்கலையே. உனக்கும் என்னை பிரெண்டா பார்த்தபீல் இருக்கும். ஹஸ்பெண்டா பார்க்கும் வரை உன்னோட ஸ்பேஸுக்கு வெயிட் பண்ணுவேன். பிறகு ஏன் இன்னிக்கே மிரளுற?” என்று வார்த்தைக்கு வலிக்குமோயென நிதானமாய் இடைவெளியிட்டு பேசினான்.

“பூ..பூ.. வாங்கினேளே?” என்று திக்க, “அந்தம்மா கொடுத்தாங்க. நான் என் மனைவிக்கு வாங்கி தந்தேன். பூ வாங்கினா மத்ததும் நடக்கணும்னு அர்த்தயில்லயே. என்‌ பக்கம் க்ளியர். உன் பக்கம் க்ளியர் ஆகலை என்று எனக்கு தெரியுது. எப்பவும் நீ காலையில் பூ வைக்கிற. அந்த பாட்டி இந்த டைம்ல கொடுக்கவும், வாங்கிட்டேன். வீட்ல டேபிள்ல இருக்கவும் வச்சிவிட்டேன்.” என்றதும், இட்லியை விழுங்க முடியாமல் இருந்தவளுக்கு நீரை கொடுத்தான்.

“சாப்பிட்டு தூங்கு. ஆஹ்… நான் இன்னிக்கு மேட்ச் பார்க்கணும். அதனால் தூங்க வரமாட்டேன். ரிலாக்ஸா தூங்கு.” என்றான்.

காருண்யாவுக்கு இமை மூடி திறந்து ராவணனை ஏறிட்டாள். ஏதோவொன்று இதமாக தான் இருந்தது. ராவணனன் இந்தளவு பேசி முடிக்க, லேசான புன்னகையோடு பாத்திரம் கழுவி வைத்தாள்.

“உனக்கு கிரிக்கேட் பார்க்க பிடிக்குமா?” என்று கேட்டான்.

“முன்ன எங்காத்துல இருந்தப்ப, பார்ப்பேன். ஹாஸ்டல் வந்தப்பிறகு கிரிக்கெட் பார்ப்பதெல்லாம் நிறுத்திட்டேன். ஆர்வமும் குறைஞ்சிடுச்சு, அதோட நேக்கு இப்ப தூக்கம் வருது. நீங்களே பாருங்கோ” என்று என்றாள்.

காருண்யா இரவெல்லாம் ராவணனின் விருப்பத்தை எண்ணி அசைப்போட்டவளாக உறங்கினாள்.

ராவணன் கிரிக்கேட் பார்த்து அங்கேயே உறங்கி வழிந்தான்.

அடுத்த நாள் காலை காருண்யா விழித்தப்போது, ராவணன் அருகே இல்லை என்றதும், ஹாலில் எட்டி பார்த்தாள்.

அவன் அங்கேயே சோபாவில் நீட்டி நிமிர்ந்திருக்க, அவனது போர்வையை கொண்டு சென்று போர்த்திவிட்டாள்.

அதன்பின் அவளது அன்றாட பணியில் மூழ்கினாள்.

ராவணன் இரவெல்லாம் விழித்திருந்த காரணத்தில் இன்னமும் உறங்கியிருக்க, குக்கர் சத்தமும், கிச்சனில் காருண்யா உருட்டல் சத்தமும் அவனை அசைக்கவில்லை.

கடிகாரத்தை பார்த்து பார்த்து, “என்னங்க என்னங்க” என்று அவன் தோளைத்தட்டினாள்‌

எதற்கும் அசையாதவனாக கும்பகர்ணன் அவதாரத்தில் இருக்க, “அய்யோ ராவணா… ஆபிஸுக்கு போக வேண்டாமோ? நாழியாகுது…” என்று உலுக்க, ராவணனோ தன் பெயரென்றதும் கண்ணை கசக்கி எழுந்தான்.

அழகோவியம் ஒன்று உயிருள்ள மானிட பிறவியாக உருவமெடுத்து வந்தவளை போல இருக்க, “ஏய்.. ப்யூட்டிஃபுல். அழகாயிருக்க” என்று கூறி எழுந்தான்.

  அவன் இயல்பாய் சொல்லிவிட்டு செல்ல, கண்ணாடியில் தன்னை அடிக்கடி பார்த்து, மகிழ்ந்தாள்.

   இன்னிக்கு ஆப்டே என்பதால் காலை உணவு மட்டும் எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.
  
  “நீங்களே ஒட்டுங்கோ” என்று அவளும் “நீயே ஓட்டு” என்று அவனும் கூற இருவரும் ஒருமித்தமாக கூறியதில் சிரித்துவிட்டு, “ஓகே… இதான் லாஸ்ட்‌. இனி ஸ்கூட்டியை நான் ஓட்ட மாட்டேன்” என்று அழைத்து சென்றான்.

   அலுவலகம் வந்ததும் வேலையில் மூழ்கினார்கள்.

“இல்லை காரு… இதை மாத்து, ஜெயந்த் இந்த அப்டேட் சரியாக மாட்டேக்குது பாருங்க.
  கோடிங் தப்பா இருக்கு யாரு ஷாலுவா? காரு.. முடிச்சிட்டியா? காரு.. ரோஸ்லினிடம் இதை ஆட் பண்ண சொல்லிடு. காரு பசிக்கு.. டீ வேண்டும்‌ வாங்கிட்டு வர்றியா எந்திரிச்சு போனா கன்டினியூட்டி மிஸ்ஸாகுற பீல் ஆகும்” என்று பத்து வார்த்தையில் காருண்யா ஐந்து முறையாவது இடம் பெற்றிருந்தாள்.

  இத்தனைக்கும் பத்து பேர் கொண்ட குழுவில் சரிபங்காக தான் வேலை வாங்கினான்.

   மதியம் இருவரும் சேர்ந்து சாப்பிட, ராவணன் போனில் பேசியபடி, “ஆஹ்… வந்துடறேன் சார்’ என்று சந்தோஷமாய் கூறி அணைத்தான்.

“என்னாச்சு… முகம் பிரகாசமா தெரியுது. என்னான்ட சொல்ல கூடாதுனா வோண்டாம்.” என்றாள்.

  “ஏய் லூசு… இனி என் லைப்ல எங்கம்மாவை விட நீ தான் எல்லாம் தெரிந்து வச்சிக்கணும். உன்கிட்ட சொல்லாம” என்றவன், “ஒரு சர்பிரைஸ் காத்திருக்கு. சாப்பிடு போகலாம்‌” என்றான்.

  அவன் இருவிழிகளிலும் அத்தனை பளபளப்பு, சந்தோஷம் கண்டவளுக்கு அவனது சந்தோஷமும் தோற்றிக்கொண்டது.

சனி என்பதால் இரண்டு மணிக்கே வேலை முடிவுப்பெற்றது.
 
   ராவணன் ‘SS பைக் ஷோரூம்’ இருக்குமிடம் சென்றான். சென்னையில் பிரசித்தி பெற்ற பைக் ஷோ ரூமில் முதன்மையானது. அங்கே வந்து நிறுத்த, நொடியில் காருண்யாவோ, “பைக் வாங்கப்போறேளா? ஏதோ ஏழரை ஆண்டு வாகனம் வாங்கக்கூடாதுன்னு மாமி சொன்னதா சொன்னேள். ஏழரை முடிஞ்சுதா?” என்று கேட்டாள்.

“இன்னும் ஏழரை முடிய நாலு மாசம் இருக்கு. அதுவரை பொறுத்திருக்க முடியலை. இதுக்கும் முன்ன பேட்சுலரா இருக்கறப்ப ஒன்னும் தெரியலை. பெங்களூர்ல காலேஜ் படிக்கும் போது பக்கத்துலயே ஹாஸ்டல். வேலை பார்க்கறப்பவும் ஆபிஸ் பக்கத்துல ரூம் பார்த்துக்கிட்டேன். பெருசா ஊர்ச்சுத்தறது எல்லாம் கேப் புக் பண்ணிட்டு ஹாயா போன் நோண்டிட்டு இருப்பேன்.

இங்க சென்னை வந்ததும் அப்படி தான். இப்ப… உன் ஸ்கூட்டில ஓட்டறேன். அதுக்கு நானே வாங்கிடலாம்னு தாட்ஸ் வந்துடுச்சு. எப்படியும் ஏழரையில் அம்மாவுக்காக இத்தனை நாள் அமைதியா விட்டாச்சு. நாலு மாசம் தானே…
   உன் பைக்ல ஏறுறப்ப ஒரு மாதிரி ஒரு கெத்து பீல் வரலை. சைக்கிள் ஓட்டுற பீல் தான். அதுவும் உன்னை வச்சிட்டு இந்த பைக்ல போனா.. வாவ்… செமையா இருக்கும். ஆல்ரெடி போன்ல பேசி விசாரிச்சிட்டேன். இனி பைக் எது வாங்கலாம்னு பார்த்து முடிவெடுக்கறது தான் பாக்கி. சொலக்ட் பண்ணு” என்று அங்கிருந்த ஷோ ரூமில் கையை காட்டினான்.

  பெரிய ஹால் போன்றதொரு வடிவம் அதில் கீழே பைக்குகள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தது. நூறு பைக் ஆவது வரிசையாக நிறுத்தப்பட்டிருக்க, வாங்க வேண்டாம் நாலு மாசம் கழித்து பார்ப்போமென காருண்யாவுக்கு சொல்லவும் வாய் வரவில்லை.

  ஆச்சரியப்பட்டவளாக நடந்துவர, “மே ஐ ஹெல்ப் யூ சார்” என்று வந்தான் கடை சிப்பந்தி.

  “என் வொய்ஃப் எந்த பைக் டிசைட் பண்ணட்டும். அந்த பைக் டீட்டெயில் சொல்லுங்க” என்றான்.

காருண்யாவுக்கு கூடுதல் சந்தோஷம். என் வொய்ஃப் என்று அல்லவா முக்கியத்துவம் கொடுத்துவிட்டான். இதுவரை ‘நீயே செலக்ட் பண்ணு’ என்று அவளை முன்னிருத்தி எந்த முக்கியத்துவமும் அவள் வீட்டில் கூட கொடுத்ததில்லை.
 
  அமிர்தம் பாட்டி எப்பொழுதும், ‘சின்ன பொண்ணுக்கு என்ன தெரியும் சீனிவாசா. நீ முடிவெடு. ஆம்பளை நோக்கு தெரியாததா” என்றிடுவார்.

  காருண்யாவுக்கு அதற்காகவே இன்று ராவணன் தன்னை தேர்ந்தெடுக்க கூறவும், மகிழ்ச்சியில் திரிந்தாள் கூடுதலாக நல்ல பைக்கை அவனுக்கு தேர்ந்தெடுக்க வேண்டுமென்ற பொறுப்பும் உருவானது.

  கடை சிப்பந்தியிடம் ஒவ்வொரு பைக்காய் கேட்டு விசாரித்தாள்.

“இது விலையெல்லாம் லட்சக்கணக்குல சொல்லறாங்க” என்று ராவணன் முகத்தை பார்த்தாள்.

  “நீ கை காட்டு அந்த பைக் வாங்குவோம். இத்தனை நாள் சேவிங்ஸ் எல்லாம் நிறையவே இருக்கு.” என்றான். அவனுக்கு காருண்யாவின் செலக்ஷனில் வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டான்.‌

  கடை சிப்பந்தியிடம் “இந்த ஆபிஸுக்கு ரெகுலரா போக வர ஏத்த மாதிரி பைக் வேணும். இந்த பொறுக்கி பசங்க ஓட்டுற மாதிரி வண்டில்லாம் வேண்டாம். நன்னா சமத்தா, டீசண்டா, இருக்கற வண்டி ரொம்ப காசு அதிகமும் இல்லாம, ரொம்ப குறைச்சலும் இல்லாம இப்பத்திக்கு மாடலா வண்டி வேண்டும். கலர் மட்டும் அந்த கண்ணன் நிறமான கருப்புல காட்டுங்கோ. கூடவே மைலேஜ் அதுயிதுன்னு எல்லாம் கொடுக்கணும்.” என்று பட்டியல் கூற, கடை சிப்பந்தியோ ராயல் என்பீல்டை கைகாட்டினான்.

  ராவணன் வண்டியை தடவி அங்கே காருண்யாவை பார்வையிட, “இது எவ்ளோ? இது நன்னா இருக்கு” என்றாள்.

  இதுவரை விலையெல்லாம் ஸ்கூட்டி பெப் வாங்கியதால் அதை விட கூடுதலாக கொஞ்சம் கூட இருக்குமென்ற மெத்தனத்தில் இருந்தாள். மிஞ்சி மிஞ்சி  ஒரு லட்சம் ஒன்றரை லட்சம் இருக்குமென்று நினைத்தாள்.

  காருண்யா சொன்னதும் வாங்குவதற்கான விதிமுறையில் அவன் சென்றான்.

  ஷோரூமிலிருந்த காருண்யா சோபாவில அமர்ந்திட, காருண்யாவை பார்த்து கையெழுத்திடும் பத்திரத்தில் கவனத்தையும் செலுத்தினான்.

சாவி கொடுக்கும் போது, காரு.. வந்து வாங்கு” என்று கூப்பிட, “நான்.. நானா” என்று தயங்க, “என் வொய்ஃப் நீ தானே” என்று அழைத்தான்.

  “காரு பைக் வாங்குதே… அடடா ஆச்சரிய குறி!” என்று சிரிக்க, “செத்த சும்மாயிருக்கேளா” என்று கைமுட்டியை வைத்து அவன் நெஞ்சில் இடிக்க, அதெல்லாம் ராவணனுக்கு இதமாய் இருந்தது.

  “எவ்ளோ ஆச்சு” என்று சாவியை கொடுத்து கேட்க, “த்ரி லேக்ஸ் தேர்டின் தௌவுசண்ட்” என்றான்.

“ஏதே..” என்று முட்டைக்கண்ணை விரிக்க, “இதுக்கே முழிக்கற. வாகன தோஷம் அதுயிதுன்னு உருட்டுறதெல்லாம் முடியட்டும் காரு வாங்கறேன்.” என்று சிரிக்க, “இப்ப இந்த பைக் வாங்கறேளே மாமி திட்டமாட்டாளா? அவசரப்பட்டு வாங்கிட்டேளே. நானும் ஏதோவொரு சந்தோஷத்துல மறந்துட்டேன்” என்று கேட்டதற்கு, “நாலு மாசம் தானே‌.. அம்மா ஏதும் கேட்டா ஆப் பண்ணிடுவேன். என்னையெல்லாம் ஏதும் கேட்க முடியாது” என்றான்.

  “ஆஹாங் சொல் பேச்சு கேட்டிருந்தா நீங்க தான் பெங்களூர் போயிருக்க வேண்டியதில்லையே. தோப்பனார் பேச்சை எங்க கேட்டேள்.” என்றாள்.

   “ஆக்சுவலி பைக் வாங்கிட்டு சோர்ந்து ஹோட்டல் போகலாம்னு இருந்தேன். நீ சமைத்ததை சாப்பிட்டாச்சு. பீச் போகலாமா‌ ஆனா இந்த வண்டி வேற இருக்கு.” என்றான்.‌

“நன்னா பேசறேள். முதல் முதல்ல பைக் வாங்கி ஹோட்டலுக்கு போவாளா? கோவிலுக்கு போங்கோ. அங்க ஒரு அர்ச்சனை முடிச்சி திருஷ்டி கழிச்சிட்டு ஆத்துக்கு போவோம்” என்றாள்.

  “ஆத்துக்கா.. இங்க ஆறும் இல்லை குளமும் இல்லை.” என்றான் சீண்டும் விதமாக.

“கேலி செய்யாதேள். நேக்கு பிடிக்காது.” நான் என் ஸ்கூட்டி கொண்டு போய் வீட்ல நிறுத்திட்டு அங்கிருந்து அப்படியே கோவிலுக்கு போவோம்.” என்று கூற, ஆமோதிப்பாய் தலையாட்டினான்.

  அதே போல வீட்டுக்கு போய் ஸ்கூட்டி பெப் நிறுத்திவிட்டு, அவளை புது வண்டியில் ஏற்றி கொண்டு கோவிலுக்கு சென்றான்.

அர்ச்சனை தட்டு வாங்கி இருவர் பெயரிலும் அர்ச்சனை செய்ய சொன்னாள்.

    இமை மூடி காருண்யா வேண்ட, ராவணனோ காருண்யாவின் ஸ்டாபெர்ரி உதடுகள் தனக்காக வேண்ட, ரசித்தான்.

  பக்கத்தில் ஒரு சிற்றுண்டி சென்று பாவ் பஜ்ஜியும், தாஹி பூரியும் சான்ட்வெச் என்று ஆர்டர் தந்துவிட்டு இருவரும் எதிரெதிரே அமர்ந்தனர்.
  ராவணன் விழி அம்பை தாக்க காருண்யாவின் மலர் விழிகள் அதில் தொலைந்து மூழ்கியது.

-தொடரும்.

9 thoughts on “ஐயங்காரு வீட்டு அழகே-22”

  1. M. Sarathi Rio

    ஐயங்காரு வீட்டு அழகே..!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 22)

    பைக் வாங்கினது சந்தோஷம் தான். அதுவும் ராயல் என்ஃபீல்ட் வாங்கினது ரொம்ப ரொம்ப சந்தோஷம். எனக்கும் புடிச்ச வண்டி. ஆனா, இவனுக்கு தான் ஏழறை மிச்சம் இருக்கே, அந்த ராவேணஸ்வரனுக்கே ஏழறையால தான் சீதா தேவி மேல கண்ணை போட்டு ஒரு வழியாக்கிடுச்சு. இப்ப இந்த ராவணன் இந்த ஏழறையால எந்த சொச்சத்தை இழுத்து வரப் போறானோ தெரியலையே.
    வாலண்ட்ரியா போய் வாண்டட் ஆகிட்டானோ…? பெரியவா சொன்னா பெருமாள் சொன்ன மாதிரி, அதெல்லாம் இந்த அபிஷ்டுக்கு எங்கயிருந்து தெரியப் போகுது. இந்த காருவும் கூட சேர்ந்து மண்டைய மண்டைய ஆட்டிட்டா. பெருமாளே எதுவும் நடக்காம இருந்தா சரி தான்.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  2. Awesome narration sis. Ravana excellent. You gave importance for wife. So good. Cute romance. Kaaru u too started to accept ravana as husband. Intresting sis.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *