Skip to content
Home » ஐயங்காரு வீட்டு அழகே-29

ஐயங்காரு வீட்டு அழகே-29

அத்தியாயம்-29

Thank you for reading this post, don't forget to subscribe!

காருண்யா-ராவணன் வாழ்வு எவ்வித தடங்கலின்றி இனிமையாக கழிந்தது.
  
   சேர்ந்தே அலுவலகம் செல்வது, திரும்பி வருவது, வரும் பொழுதே காய்கறி, மளிகை ஐயிட்டம் எல்லாம் தேவைகளுக்கு ஏற்ப வாங்கி வந்துவிடுவார்கள்.
  சில நேரம் சோர்ந்தே கிச்சனில் உதவிக்கொள்வார்கள். மற்றபடி ராவணன் தன் சரிபங்காக வீட்டு வேலையிலும் செய்தான்.
  அவனுக்கு முன்பிருந்தே தனக்கு வேண்டிய வேலைகளை தானே பார்த்ததில் மனைவி வந்துவிட்டால் அவளிடம் உதவுவதை நிறுத்தவில்லை.

   சனி ஞாயிறு என்றால் எங்கேனும் சுற்றி திரிந்து வரும் பறவையாக மாறினார்கள்.

  ரோகிணியோ “காஞ்சிபுரம் வரலாம்லடா?” என்று கெஞ்ச, “அதே ஊர்ல தான் இத்தனை வருடம் இருந்தேன். பொறுமையா வர்றேன்” என்று மறுத்திடுவான்.

   “பாட்டி கூட ஆத்துக்கு வரலாமேனு கேட்டுட்டு இருந்தா” என்று காருண்யா கூற, “போலாம் முதல்ல பிராஜக்ட் முடியற நிலை தானே‌. கவனிப்போம்.” என்றான்.

உண்மையில் வேலைகள் தலைக்கு மேல் இருந்தது. அதிக நேரம் அலுவலகத்தில் இருக்க வேண்டிய சூழல் வந்தது.
 
  இதில் புதுமணதம்பதிகள் தங்கள் வேலை டென்ஷனை தங்களுக்குள்ளாக, தங்களை பகிர்ந்து தீர்த்துக்கொண்டனர்.
  அதைவிட பெரிய ஸ்ட்ரஸ் நிவாரணியாக இருவருக்கும் தேவைப்படவில்லை.

   இப்படியான சமயத்தில் ஷாலினி சில நாட்களாக அசைவம் கொண்டு வர, அதை ராவணனிடம் பகிர்ந்தாள்.
  பழகியப்பின் பிடித்ததை அன்போடு யார் கொடுத்தாலும் சுவைப்பான் ராவணன்.
   அவ்விடத்தில் சேர்ந்து சாப்பிடும் கூட்டத்தில், “ராவணன் சிக்கன் தொக்கு வேண்டுமா” என்று கேட்க ‘தள்ளுங்க’ என்பது போல செய்கை செய்தான்‌.

   அன்று பார்த்து காருண்யா ரசமும், துவையலும் வைத்திருக்க, சிக்கன் தொக்கு ருசிக்கும் என்று வாங்கிவிட்டான். காருண்யா பக்கத்தில் அமர்ந்து சுவைக்க, காருண்யா ராவணனை ஓரக்கண்ணால் பார்த்து பாதி சாப்பாட்டில் எழுந்துவிட்டாள்.
  ரோஸ்லினோ காருண்யாவின் குணமறிந்து, ராவணன் செய்கையில் தோழியின் மனநிலை புரிந்தது. இதில் ஷாலினியோ காருண்யா அகன்றதும், ‘நல்லாயிருக்கா? நானே வச்சேன். முதல்முறையிலேயே நல்லா வந்திருப்பதா அம்மா சொன்னாங்க” என்று அபிப்ராயம் கேட்க, “ரியலி பெண்டாஸ்டிங்.” என்று பாராட்டினான்.

     தாமதமாக தான் காருண்யா சென்றது புத்திக்கு உரைத்தது. அதற்காக உடனே மனைவியை தேடி ஓடவுமில்லை.

   டிபன் பாக்ஸை கழுவி தன்னிருப்பிடம் வந்து சேர, ரோஸ்லினோ ‘எதுக்கும் ஜாக்கிரதை. இன்னமும்” என்றவள் ராவணன் வருகையால் நழுவியிருக்க, காருண்யாவோ, மறுபுறம் திரும்பி வேலையில் மூழ்கினாள்.

   மாலை வரும் வரை, அவன் புறம் திரும்பாமல், இருக்க, ராவணன் “இன்னிக்கு மூவி டிக்கெட் எடுக்கவா காரு” என்றான்.

  ‘நேக்கு தலைவவி… பிராணம்  போகுது. வேண்டாமே” என்று மறுத்துவிட்டாள்.

  வீட்டிற்கு திரும்ப வரும் நேரம்  கடையில் தலைவலி மாத்திரை வாங்கி தர, “நேக்கு தைலமே போதும். மாத்திரை வேண்டாம். இதை திருப்பி கொடுத்திடுங்கோ” என்றாள்.

  “விளையாடறியா? என்ன பிரச்சனை உனக்கு?” என்று ராவணன் அதட்டவும், ஷாலினியுடன் இவன் பேசி அசைவம் சாப்பிட்டதில் தன் கோபம் என்ற குட்டு அறிந்துவிட்டானோ என்று சமாளிக்க முயன்றாள்‌.

  “நேக்கு மாத்திரை விழுங்க பிடிக்காது. சரி கொடுங்கோ.” என்று பெற்றுக்கொண்டாள்.
  இவளை போலவே ராவணனும் ஷாலினி கொடுத்த சிக்கன் தொக்கால் சண்டை இல்லை என்று பேச்சை மூட்டைக்கட்டினான்.
  அவள் ஏதாவது ஆரம்பித்தால் இவன் எகிற வாயப்புண்டு. அவள் சமார்த்தியமாக மாற்றிட, அவனும் தவிர்த்துவிட்டான்.
 
   வீட்டுக்கு வந்து குளித்து முடித்து, சமைத்து சாப்பிட, சண்டை வாக்குவாதம் இல்லையென்றாலும், தலைவலியை காரணம் காட்டி இருவருமே சற்று இடைவெளி விட்டு படுத்துக் கொண்டார்கள்‌.

   ராவணனுக்கு திரும்பவும் இவளுக்கு நான் சாப்பிட்டதுல பிரச்சனையா? ஆனா அன்னிக்கே அப்படி தான் சாப்பிடுவேன்னு அழுத்தமா சொல்லிட்டேனே. பிறகென்ன, தலைவலின்னு பொய் சொல்லிட்டு திரியறா. மாத்திரை வாங்கி ஹாண்ட்பேக்ல இருக்கு. தைலமாவது தடவுவானா அதுவுமில்லை. இப்படி வாரம் வாரம் அசைவம் சாப்பிடுவதுக்கு சண்டை போடுவதா இருந்தா என் நிம்மதி போகும். இதுல ரோஸ்லின் வேற’ என்று மனதோடு பேசி தலையனையில் குப்புறப்படுத்துக் கொண்டாள்.

  மறுபுறம் காருண்யாவோ ‘இவாளுக்கு சின்னதுலயிருந்து மாமிசம் சாப்பிட பிடிக்கும். பாட்டி சொல்லறது போல அதெல்லாம் முந்தானையில் முடிஞ்சி, பழக்கத்தை மாத்த முடியாது. தலைகீழா நின்றாலும் இவா மாறமாட்டா. அதோட பாட்டி சொல்வதை கேட்டா ராவணன் முககாட்டிடுவார். பாட்டி வீட்டுக்குள்ள வராதேனு சின்னதுல சொன்னதிற்காகவே அந்த வயசுல வராதவர்.
   பெத்தவா சொல் பேச்சை கேட்கறவாளா இருந்தா ரோகிணி மாமியிடம் சொல்லலாம். ஆனா மாமி மாமா பேச்செல்லாம் சரின்னா தான் கேட்கறார். இல்லைன்னா அவாளிடமே நறுக்கு வச்சி பேசிடறார்.‌
   சாப்பிடக்கூடாதுன்னு சொல்ல முடியாது.. ஆனா இந்த ஷாலினி கொடுத்தா சாப்பிட வேண்டாம்னு சொல்லணும். ஏதாவது சொன்னா இப்பவே சண்டை வரும்‌. முதல் சண்டைக்கே சமாதானம் என் பக்கம் தான்‌. மறுபடியும்னா ராவணன் பேச்சு பேசிட்டா பயமா தான் இருக்கு.’ என்று நினைத்தவள் மனதில் பட்டதை பேச தைரியமில்லை.

  ராவணன் சிறுவயதில் காருண்யாவிடம் பழகியதை எப்படி மறக்காமல் இருக்கின்றானோ, அதே அளவு பாட்டியும் இவளும் காட்டிய முகத்திருப்புதலையும் இவன் மறக்காமல் வைத்திருப்பது மனதில் உள்ளதை அப்படியே பேச தடையாக இருந்தது‌.

  ஏதேதோ நினைத்து இமை மூட உறங்கிவிட்டாள்.

  அடுத்த நாள் ராவணன் பல் விலக்கியபடி எழுந்து கிச்சன் பக்கம் வர, சாப்பாட்டை கட்டிய காருண்யாவோ டிபன் பாக்ஸ் மூடியை மோந்து பார்த்தாள். என்ன நினைத்தாளோ மீண்டும் இரண்டு மூன்று முறை நன்றாக மூடியை ப்ரில் லிக்யூட், சோப் என்று தேய்த்து கழுவி வாசம் பிடித்து மூடியை துடைத்து மூடினாள்.
  ராவணனுக்கு எரிச்சலாக வந்தது. ஷாலினி அந்த தட்டில் தான் சிக்கன் தொக்கை தந்தது. ஆனால் எழுந்ததும் ஆரம்பிக்க பிடிக்காமல் குளியலுக்கு சென்று விட்டான்.

   எக்காரணத்தை கொண்டும் பிரச்சனை தன்னால் ஏற்பட கூடாதென்று புறப்பட்டான்.
   
   பைக்கில் மௌனமாக வந்திட, சிக்னலில் பக்கத்தில் காதல் ஜோடிகள் சில்மிஷத்துடன் பேசி சிரித்து வந்து நின்றதில் இருவர் பார்வையும் தழுவி மீண்டது.
 
  கல்யாணமாகி ஐந்து மாசம் ஆகுது. இதுக்கு முன்ன எல்லாம் இது போல எவ்ளோ அழகா வாழ்ந்தோம். இப்பலாம் அடிக்கடி முட்டிக்குது.’ என்று ராவணன் பொறும, காருண்யாவுமே, ‘என் மேலயிருந்த மோகம் தீர்ந்துடுச்சு. இல்லைன்னா எப்படி ஒட்டி உரசி இசிண்டு இருந்தார். ஏன் இப்படி மாறிட்டார்.’ என்று அவளுமே மனதோடு புழங்கினாள்‌.

   அலுவலகம் வரவும், ஷாலினி தனக்கு பிறந்தநாளென்று சாக்லேட் கேக் எடுத்து நீட்டினாள்.
  காருண்யா வேண்டாவெறுப்பாக நின்று நிதானமாக கூட பேசாமல், ஒரு வாழ்த்தை மட்டும் கடமைக்கு தெரிவித்து நழுவினாள்.

  ராவணனுக்கு ‘வாழ்த்து’ என்பது ஒருவர் மற்றவருக்கு ஆத்மார்த்தமாக வாழ்த்துவது. அதை இப்படி போற போக்கில் சொல்லி சென்ற மனையாளை கண்டு அதிருப்தி அடைந்தான்.
 
  ராவணன் வாழ்த்து சொல்லி கேக்கை எடுத்து, “உங்க பிறந்தநாள் வேண்டுதல் விரைவில் நிறைவேறட்டும்” என்று வாழ்த்தி கேபீன் வந்தான்.

   காருண்யா கேக் எல்லாம் எடுத்துக்கவில்லை. சாக்லேட் மட்டும் எடுத்து வந்திருந்தாள். அது கூட கவரை பிரிக்காமல், அலட்சியமாக டெஸ்கில் வைத்திருந்தாள்.

   “இன்னமும் தலைவலி போகலையா காரு” என்றான் ராவணன்.

  காருண்யா பதில் தரும் முன் ஜெயந்த் அருகே இருந்தவன், “இன்னியோட ஆபிஸ் பிராஜெக்ட் முடிந்தது காருண்யா. தலைவலி பறந்திருக்கணுமே.” என்று கூற, ‘கொஞ்சம் ஹெல்த் இஸ்ஸு சரியில்லாத மாதிரி இருக்கு. சிஸ்டம் அதிக நேரம் பார்க்கறேன்னோ?” என்று சமாளித்தாள். ராவணன் காது கேளாதவன் போல ஜவஹரை காண சென்றான்.

    நேரங்கள் நகர கொடுக்கப்பட்ட வேலை இனிதாக முடிந்ததற்கு வரும் சனிகிழமை அதாவது நாளை கம்பெனியே உணவு வினியோகம் செய்வதாக கூறினார்கள்.
 
  மகிழ்ச்சியாக கைதட்டி அங்கிருந்தவர்கள் ஆர்ப்பரிக்க, காருண்யாவோ, “நீங்க அப்ப திரும்ப பெங்களூர் போவேளா?” என்று மட்டும் பதறியபடி கேட்டாள்.

  “இல்லைடி. உன் கூட இருப்பேன்.” என்று சிரித்துக் கூறினான்.
  காருண்யா முகம் மலர புன்னகைக்க மகிழ்ந்தாள். காருண்யாவின் மகிழ்ச்சியின் ஆயுசு குறைவு தான். மதிய உணவு இடைவெளியில் ஷாலினி டிபன் பாக்ஸை திறக்க, காருண்யா எரிச்சலானாள்.

  அதில் பருப்பும் இரண்டு வகை கூட்டும், அல்வா என்றிருக்க கூடவே அவளை முகம் சுழிக்க வைக்கும் மீன் வறுவலும் இருந்தது‌.
  இதற்கு முன் எல்லாம் அசைவம் வைத்திருந்தால், தானாகவே மற்றவர்கள் தனித்து ஒதுங்கிடுவதுண்டு. அல்லது காருண்யா ஒதுங்கிடுவாள். ராவணன் சேர்ந்து சாப்பிடும் நேரம், கையறுநிலை தான். அவனை விட்டு ஒதுங்கி அவளால் செல்ல முடியாத நிலை.

  ‘வெள்ளி கிழமை அதுவுமா மீனை திங்கறாளே கொஞ்சமாவது நாளும் கிழமையும் பார்க்கறாளா’ என்று மனதில் திட்டினாள்.

  ‘உன் தட்டலையா என்வி இருக்கு. தனியா போற. உன் உணவை நீ சாப்பிட போற.’ என்ற ராவணன் பேச்சால் தனித்து சென்றதை கூட தவிர்த்துவிட்டாள்.

  இன்று ஷாலினி பொரிச்ச மீனை கொண்டு வந்தவள் சாப்பிடுபவர்களுக்கு பரிமாற மட்டும் செய்திருக்கலாம்.
  “ராவணன்.‌… இந்த மீன் உங்களுக்காக செய்ய சொன்னது. அம்மாவிடம் எப்பபாரு சிக்கன் மட்டன் எதுக்குன்னு பருப்பு சாதத்துக்கு பொரிச்சி தர சொன்னேன். அன்னிக்கு நீங்க மீன் பிரியாணி தான் பேவரைட்னு சொன்னிங்களா… பிஷ் பிரியாணி செய்ய சொன்னேன். ஆனா இந்த மீன் பொரிச்சா தான் டேஸ்ட்னு அம்மா சொல்லிட்டாங்க.” என்று ஒரு மீனை அப்படியே அவன் தட்டில் கடத்தினாள்.

  ராவணனுக்கு நேற்றே சிக்கன் தொக்கு வைத்து வாழ்க்கையை தொங்க வைத்திடும் அளவிற்கு இலைமறையாக சம்பவங்கள் சென்றதில், அவனாக அசைவத்தை இனி அலுவலகத்தில் காருண்யா காணும் நேரம் சாப்பிடுவதை தவிர்க்க எண்ணினான். முன்பு அலுவலகத்தில் தவிர்த்தது போல.‌‌

  ஏனோ விடாமல் துரத்தி வரவும், இன்று பிறந்தநாள் வேறு என்பதால் தவிர்க்கமாட்டாமல், நன்றி கூறி இச்சம்பவத்தை எல்லாம் இனி தவிர்க்க சிந்தித்தான்.

  காருண்யா வேகமாய் வயிற்றுக்கு தள்ளிவிட்டு சென்றுவிட்டாள்.
  ராவணனுக்கு அதுவே வலித்தது. எத்தனையோ ஐயர் பெண்கள் அசைவத்தை சாப்பிடும் ஆட்களுக்கு நேரதிரே உணவை சாப்பிட்டு பொழுதை கழிப்பதை கண்டுள்ளான். இங்கே தன் மனைவிக்கு  ஏன் அந்த பழக்கமில்லை என்ற வருத்தம்.
   ஆனால் அவன் மறந்தது, எல்லா சைவம் விழுங்கும் ஆட்களும், தன் துணையும் ஐயரில் தேர்ந்தெடுத்து அவர்கள் வரை அசைவத்தை தவிர்த்து வாழ்பவர்கள். இங்கே தன் கணவன் இப்படி எதிர்பதமாக உணவில் விருப்பம் கொண்டவர் என்ற ஒன்று உறுத்தும். அது கூட ஏற்றுக்கொண்டாலும், ஷாலினி ராவணனுக்காக மெனக்கெட்டு கொண்டு வருவது அவளுக்கு எரிச்சலை தந்தது.

முன்பாவது ராவணன் தனிமனிதன், எத்தனை லிட்டர் ஜொள்ளு விட்டாலுமா அதில் காருண்யா தலையீடல் இருக்காது. இப்பொழுது தன்னவனாக மாறியப்பின், ராவணனை யார் வேண்டுமென்றாலுமா ரசிப்பதை அவள் ஏற்பாளா? இதே போல ரோஸ்ஸின் நடந்துக்கொண்டாலும் முகத்தை காட்டும் குணம் தான் காருண்யா. எதுவென்றாலும் ராவணனுடன் சண்டை எல்லாம் போடுவதில் அவளுக்கு உடன்பாடில்லை.
 
   விதி வலியது போல, நாமே தவிர்க்க நினைத்தும், அச்சம்பவம் நிகழ்ந்தது.

மாலை கிளம்பும் நேரம் ஷாலினி ராவணனை நிற்க வைத்து பேசி சிரிக்க, எரிச்சலில் உழன்றாள்.  மற்றவர்கள் ஒருவர் மாற்றி ஒருவர் கிளம்பவும், காருண்யா “ராவணா போகலாமா” என்று கேட்க, “ஃப்யூ மினிட்ஸ்… ஷாலினி கூட பேசிட்டு வந்துடறேன்” என்று கண் சுருக்கி கூறினான்.

   ரோஸ்லினோ “இவ அலும்பு தாங்கலை. ப்ப்பா… ராவணன் கிறிஸ்மஸ்ல இருந்து ஆபிஸ்ல என்வி சாப்பிட்டார்னு தெரிந்ததிலயிருந்து, டெய்லி ஏதாவது எடுத்துட்டு வந்து இம்சை பண்ணறா. அதுவும் ராவணன் எது எல்லாம் பிடிக்கும்னு சொன்னாரோ அதெல்லாம் லைன் கட்டி வீட்ல அவ கையால செய்து கொண்டுவர்றா. கொழுப்பு தான்… கல்யாணமாகிடுச்சு, நீ கூடவே வேலை பார்க்கற, அப்படியிருந்தும் தனியா தள்ளிட்டு போய் பேசி சிரிக்கா‌” என்றுரைத்தாள்.
 
  ஏற்கனவே கடுகு போட்டால் பொரிந்திடும் நிலையில் காருண்யா மனம் கொதித்துக் கொண்டிருக்க, ரோஸ்லின் பேச்சு எரிகின்ற தீயில் நெய்யை ஊற்றியது போல இருந்தது.

    ஒருவித கோபம் அலுவலகத்தில் இருந்தவர்களில் பாதி பேர் கிளம்பியிருந்ததில், “ராவணா… வர்றேளா இல்லையோ? நான் ஆட்டோ பிடிச்சி போயிடுவேன். அடுத்தவா புருஷனிடம் தான் கொஞ்சி குலாவறதே வேலை.” என்று முனங்க, ஷாலினியோ, “ராவணன் நீங்க கிளம்புங்க” என்றாள் ஷாலினி.

  ராவணனுக்கோ காருண்யா இவ்வாறு பேசுவதில் கோபம் துளிர்க்க, “காரு… என்ன பேசறனு தெரிந்து தான் பேசறியா? வார்த்தையை அளந்து பேசு‌. இன்னிக்கு அவளுக்கு பெர்த்டே” என்று அதட்டிவிட்டு, “நீ கிளம்பு ஷாலினி” என்றான்.‌

  “நான் அளந்து தான் பேசறேன். பிறந்தநாள் என்றால் உங்களை தூக்கி கொடுத்திடணுமோ? இவ தான் அலையறா. ஏன்.. இங்க தாமஸ், தேவேந்திரன், சுந்தர், ஜவஹர் சார், கமலேஷ், ஜெயந்த், விக்னேஷ் எத்தனை பேர் இருக்கா. இதுல கல்யாணமாகாதவளா பார்த்து பல் இளிக்க வேண்டியது தானே. அவ பேசி இளிக்க என் ஆத்துக்காரர் தான் கிடைச்சேளா?” என்று பொரிந்தாள்.

  “காரு ஷட் அப்… யுவர் கிராஸிங் யுவர் லிமிட்.” என்றான்.‌

  காருண்யா விட்டால் தானே? “நான் என் வட்டத்துல தான் எப்பவும் இருப்பேன். இவா தான் நீங்க வந்ததிலருந்து நாக்கை தொங்கப்போட்டு பின்னாலயே வந்தா. உங்களுக்கும் எனக்கும் விவாஹம் ஆகிட்டப்பிறகும் உங்களை மிஸ் பண்ணியதா ஓவரா வழிந்தா‌. ஆம்பளைக்கு சபலம் வராதோனு. உங்களை மயக்க நேக்கு பிடிக்காத என்வி புட்டா எடுத்துட்டு வந்து மயக்கறா.
  பொண்டாட்டி கூப்பிட கூப்பிட நீங்களும் வழிஞ்சி பேசிட்டு சுத்தறேள். உங்களை சொல்லியும் குத்தமில்லை. ஆம்பளை புத்தி இப்படி தான் பொண்ணுன்னா இறங்கி வந்து உதவுவேள்” என்று பேசிட, “ஏய்” என்று கையை ஓங்கியிருந்தான்.

  “அச்சோ” என்ற ரோஸ்லினின் குரலும், ”ராவணன் ப்ளிஸ்” என்று ஷாலினி அடிக்கும் முன் கையை பிடித்து நின்றாள்.
 
  ராவணன் நெஞ்சு ஏறயிறங்க கோபமாய் நின்றான்.

  அங்கே ரோஸ்லின் ஷாலினி ராவணன் காருண்யாவோடு சுந்தர் நின்றிருந்தான். நல்லவேளை மற்றவர்கள் வெளியேறியிருந்தனர்.

  “அவாளுக்காக என்னை அடிக்க கை ஓங்கறேள்” என்று காருண்யா கண்ணீர் சிந்த, “அடிச்சி பல்லை பேத்திருக்கணும். ஜஸ்ட்டு மிஸ்ஸு.” என்றவன், “சாரி ஷாலினி நீ கிளம்பு இதுக்கு மேல பிறந்தநாள் விழாவுக்கு வரமுடியாது. நீ உன் நாளை சந்தோஷமா கொண்டாடு. இதெல்லாம் யோசிக்காத” என்றான்.

  ஷாலினியோ பயத்தில் வேகமாய் அவ்விடத்தை காலி செய்தாள்‌.

   காருண்யாவுக்கு ஷாலினியை பிடிக்காது. அதற்காக இப்படி ஒரு நாள் முகத்திலடித்தாற் போல, அதுவும் இப்படி பேசி தொலைப்பாளென்று கனவிலும் நினைக்கவில்லை.

  சுந்தரோ, “என்ன மச்சி அடிக்கலாம் கை ஓங்கற” என்று நிதானப்படுத்த, காருண்யாவிற்கு அசிங்கமாகவும் விறுவிறுவென வெளியேறினாள்.

ராவணனுக்காக காத்திருக்காமல் சென்றதும், ராவணனோ அவளை தேடி ஓடவில்லை.
  
  ரோஸ்லினை பார்த்து, ‘இப்ப சந்தோஷம் தானே. ஏதோதோ சொல்லிட்டு இருந்திங்க. அவ புஸுபுஸுனு மூச்சுவிட்டுட்டு வந்து கத்திட்டா. அதுக்காக உன் மேல மட்டும் குற்றம் சுமத்த மாட்டேன். அவளுக்கு அறிவுன்னு ஒன்னு இருந்திருக்கணும்” என்று கோபமானான்.

  “ராவணன் நான் எதுவும் செல்லலை. நீங்க பேசியது காருண்யாவுக்கு எரிச்சலா இருந்திருக்கலாம். ஷாலினி தான் உங்களை விரும்பியதா நேர்ல சொன்னாளே. அவளிடம் போய் வலிய பேசினா காருண்யாவுக்கு கோபம் வரத்தானே செய்யும்” என்றாள். தோழிக்கு ஆதரவாய் பேச முயன்றாள் ரோஸ்லின்.

  “அவ பிராங்கா விரும்பியதை சொன்னா. அதுல என்ன தப்பு. அதுக்காக இப்பவும் அதே மனநிலையில் பார்த்தான்னு சொன்னா அசிங்கமா இல்லை‌. ஒருத்தர் மனசுல என்ன ஓடுதுன்னு தெரியாம வார்த்தையை இறைக்காதிங்க.” என்று அவ்விடம் விட்டு வீட்டிற்கு செல்ல முடிவெடுத்தான்‌.
 
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

6 thoughts on “ஐயங்காரு வீட்டு அழகே-29”

  1. Dharshini

    Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 endha shalini venumney pandra mathiri dhan eruku adhuvum endha raavanan ku Puriyala evalum kovatha kattu padutha mudiyama pongita enna nadakka pogudho 🙄🤔 edhe eva vera yaarum kooda yavudhu pesina evanuku kovam varadha? Parpom enna nadakumo 😥

  2. Kalidevi

    Eppadium oru naal illa oru naal veliya varum ravana nee anth shalini kuda pesurathu pidikala athuku etha mari venumne thana avalum ippadi NV ah eduthutu vanthu una crt panra athu pirilaya unaku ava kovam crt tha but taknu ellathaium pesita

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *