Skip to content
Home » ஒரு ஊரில் ஒரு நிலவரசி-5

ஒரு ஊரில் ஒரு நிலவரசி-5

5
சாயரட்சை நேரத்தில் கன்னியப்பன் ஒவ்வொரு மாட்டையும் அவரவர் வீட்டருகே விட்டு
விட்டு தன் வீட்டை நோக்கிப் போய்க் கொண்டிருந்தான். அவனுடைய புல்லாங்குழல்
இடுப்பில் சொருகியிருந்தது. அவனுடைய மாடு மட்டும் அவன் பின்னால் நடந்து வந்து
கொண்டிருந்தது.
மணியக்காரர் வீட்டு வயக்காட்டில் அவருடைய ஆடுகளை கிடையில் அடைத்து விட்டு எதிரே
வந்து கொண்டிருந்தான் செவந்தி.
“ஏலே எங்கேடா கிளம்பிட்டே?”
“கசகசன்னு இருக்குண்ணே. குலத்துக்குப் போய் ஒரு குளியலைப் போடப் போறேன்”
“வீட்ல சுடுதண்ணி போட்டி வெச்சிருக்க மாட்டாங்களா?”
“அதெல்லாம் உங்க வீட்ல அண்ணே. நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாலும் அண்ணி உனக்கு
எல்லாம் அஞ்சு மூணும் அடுக்கா செஞ்சி வைக்கும். எல்லாருக்கும் அந்த கொடுப்பினை
கிடைக்குமா?”
“ஏண்டா இத்தனை பெருமூச்சு விடறே? சொன்னால் செஞ்சி வைக்கப்போவுது உன் சம்சாரம்”
“அதுக்கு ஏதுண்ணே நேரம்? எங்க அம்மாவோட சண்டை போடவே நேரம் பத்தலை”
“சரிடா. நான் வீட்டுக்குப் போறேன்”
“அண்ணி என்ன சமையல் செஞ்சி வெச்சிருக்கும்னே”
“கருவாட்டுக் குழம்பு தான். காலையிலேயே சொல்லிருச்சுடா”
“குளிச்சிட்டு வீட்டுக்கு வாறன். ஒரு பிடி சோறு போடுன்னே”

Thank you for reading this post, don't forget to subscribe!

“என்னடா புதுசா கேட்டுக்கிட்டு. வழக்கம் போல வர வேண்டியது தானே”
அப்போது கன்னியப்பனின் வீட்டருகே குடியிருக்கும் அவன் மாமன் இவனைப் பார்த்து
விரைந்து வந்தான்.”ஏலே கன்னிப்பா. உனக்கு ஆம்புளை புள்ளை பொறந்திருக்குடா”
“அம்மா காளி இந்த புள்ளைக்ககாவது ஆயுசைப் போடுப்பா” என்றவாறு வீட்டை நோக்கி
விரைய நகர்ந்தான்.
“ஆ…………….!”
“என்னடா ஊளையிடரே?”
“ஐயோ………அதா பாரு”
செவந்தி கை காட்டிய திசையில் கன்னியப்பன் பார்த்தான். அவனுமே வியந்து தான்
போனான். “டேய் என்னடா இது?” கண்கள் ரெண்டும் வியப்பில் விரிய தலையை
அண்ணாந்து வானத்தில் பார்த்தார்கள் இருவரும்.
ஒரு பனை உயரத்தில் ஆடு மாடுகளுடன் மனிதர்களும் மிதந்து வந்து கொண்டிருந்தார்கள்.
மேலே மிதந்து கொண்டிருந்தவர்கள் அனைவருமே ஏதோ கயிற்றினால் கட்டி இழுத்து
செல்வதைப் போன்று கூட்டமாக சென்று கொண்டிருந்தார்கள். காப்பாற்றுங்கள் என்று
வாயால் கூவ முடியவில்லை போலும். இதிலிருந்து விடுபட முழு பலத்துடன் திமிறிக் கொண்டு
சென்றார்கள். மாடுகள் தண்ணீர் தொட்டியுடனும் ஆடுகள் பச்சை இலை தழைகளுடனும்
போய்க் கொண்டிருந்தது.
“அண்ணே, அதோ பாரு நம்ம கருப்போட அப்பன்” என்று அலறியவன் மேல் நோக்கி
அவரைப் பார்த்து “ஏய் மாமா என்ன இது? என்னாச்சு?”என்று சத்தமிட்டான்.
கன்னியப்பனின் மாடு துள்ளியது. அதைத் திரும்பிப் பார்த்து “தே சும்மா இரு. நீ வேறே” என்று
கடிந்து கொண்டான்.
கிராமத்து ஜனமே தெருவில் கூடி நின்றது. வானத்தை அண்ணாந்து பார்த்து “ஐயோ இது
என்ன கொடுமை. போறாங்களே. யாராவது அவுங்களைக் கீழே இறக்குங்களேன்.
காப்பாத்துங்களேன்” என்று அலறிக் கொண்டிருந்தார்கள். தங்களுக்கு வேண்டியவர்களோ
சொந்தக்காரர்களோ போவதைக் கண்டால் அவர்களுடன் தங்களுக்கான உறவை “அத்தை
மாமா தாத்தா யப்போய் ஆத்தா” என்று சொல்லிக் கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தார்கள்.
மணியக்காரர் அப்போது தான் வெளியூருக்குப் போய் திரும்பி வந்து கொண்டிருந்தார்.
ஜனங்கள் மொத்தமாக இந்த இடத்தில் கூடி நிற்பதைக் கண்டு விட்டு என்னாச்சு என்று
விசாரித்தார். யாருக்கும் முழு விவரமும் தெரியவில்லை. அவர்கள் அண்ணாந்து வானத்தைப்
பார்ப்பதைக் கண்டு விட்டு அவரும் தலையைத் தூக்கி வானத்தைப் பார்த்தவர் அதிர்ந்து
விட்டார்.
பதறியவராக “ஹே, என்னப்பா……..என்னாச்சு?” என்றவர் வானத்தைப் பார்த்து எ எங்கேடா
போறீங்க?” என்று கூப்பாடு போட்டார்.


“ஏலே கன்னியப்பா……! யாராச்சும் விவரம் சொன்னாத் தானே ஆச்சு! பிடிச்சி வெச்ச
புள்ளையார் போல இருந்தால் நானும் தான் என்ன செய்வேன்?”
“எனக்குத் தெரியலை அய்யா”
“யாராவது சொல்லுங்க. கேக்கறேன் இல்லே”
எனக்குத் தெரியாது உனக்குத் தெரியாதா என்று தங்களுக்குள் ஒவ்வொருவரும் பேசிக்
கொண்டிருந்தார்களேத் தவிர விவரம் சொல்வார் தான் யாரும் இல்லை. அப்போது வடக்குத்
தெரு செல்லாயி வீட்டுத் திண்ணையில் கிடக்கும் கூனிக் கிழவியைத் தூக்கிக் கொண்டு
வந்தார்கள் இருவர். மெல்லமாக அந்த கிழவியை தரையில் இறக்கி வைத்தார்கள்.
“அய்யா இந்த பெரியம்மா உங்கள்ட்ட என்னவோ சொல்லணுமாம்”
மணியக்காரருடன் கூட்டம் மொத்தமும் திரும்பி அந்த கூனிக் கிழவியைப் பார்த்தது. வயது
முதிர்ந்து முகமெல்லாம் சதை தொங்கி கண்கள் இடுங்கிப் போய் பொக்கை வாயுடன் இன்றோ
நாளையோ என்று சாவை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருந்த அந்த கிழவியை யாருமே ஒரு
பொருட்டாக மதித்ததில்லை. எப்போதும் செல்லாயி வீட்டுத் திண்ணையில் இருக்கும். நல்ல
நாள் திருநாள் என்று எதற்குமே இடத்தை விட்டு அது நகர்ந்தது இல்லை. செல்லாயியின்
பாட்டியின் தாய் அது. செல்லாயி ஊற்றும் ஒரு வாய் காஞ்சி தான் அதற்கு ஆகாரம். யாரேனும்
அந்த பக்கம் சென்றால் என்ன எது என்று விவரம் கேட்கும். சிலர் பொருட்படுத்த மாட்டார்கள்.
சிலர் போனால் போகிறது என்று நின்று விவரம் சொல்லி செல்வதுண்டு. இன்று வழக்கத்திற்கு
மாறாக தன் இருப்பிடம் விட்டு இவ்வளவு தூரம் வந்திருக்கிறது என்றால் அதற்கு ஏதோ
விவரம் தெரிந்திருக்க வேண்டும்.
“என்ன பெரியம்மா”
“அதோ அங்கன………..!” வானத்தைக் காட்டியது தன்னுடைய சுருங்கிய கையினால்.
“அது தான் எல்லோரும் பார்த்துக்கிட்டு இருக்கோமே. நீ வேறே வந்துட்டே புதுசா
சொல்றதுக்கு” கூட்டமே கடுப்படித்தது.
இல்லை என்பதுப் போல கையை வீசினாள் கூனி. ஏதோ சொல்லப் போகிறாள் போலும்
என்று கூட்டமே அமைதியாக இருந்தது. இந்த முறை அவர்களை ஏமாற்றவில்லை கிழவி.
சொல்லத் தொடங்கியவளாக மெல்ல ஆரம்பித்தாள். எள் விழுந்தால் எண்ணை எடுத்து
விடலாம் அத்தனை கூட்டம். அத்தனையும் அமைதியாக நின்றது விசித்திரம்.
“ஒரு நாழிகைக்கு முன்னாடி சில்லென்னு ஒரு காத்து வந்தது. இந்த வெய்யிலுக்கு சுகமா
இருந்தது. ஆடு மாடுகள் மேய்ச்சலுக்குப் போய் விட்டு வந்து கழநீர் தொட்டியில் தண்ணி
குடிச்சிக்கிட்டு இருந்தது. பிள்ளைகள் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
பெரியவர்கள் வயக்காட்டுக்குப் போய் விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்கள். அப்போது
தான்………..!”
“அப்போது என்னாச்சு?” கூட்டமே பரபரப்பத்தது.
பேச்சை தொடங்கும் முன்பு ஏதோ திகிலடித்ததைப் போல உடம்பைக் குலுக்கி விட்டவள்


தொடர்ந்தாள். “சில்லுன்னு அடிச்சிக்கிட்டு இருந்த காத்து அப்படியே சட்டென்னு ஊ ஊ
ன்னு ஊங்காராம் விட்டு வேகமா அடிக்க ஆரம்பிச்சது. அவ்வளவு தான் கண் இமைக்கும்
நேரத்தில் அப்படியே ஆடு மாடுகளும் நின்று கொண்டிருந்த பெரியவர்கள் விளையாடிக்
கொண்டிருந்த சிறுவர்கள் எல்லோரும் மேலே மிதக்க ஆரம்பிச்சிட்டாங்க”
“காத்து வந்து தான் இவங்களை எல்லாம் தூக்கிருச்சா?”
“ஆமாம். காத்து பலமா வந்தது”
“ஒருவேளை இது அந்த மகாசுரன் வேலையா இருக்குமோ?”
“இருக்குமோ என்ன இருக்குமோ. கண்டிப்பா அவன் வேலை தான்.”
இவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே வானத்தில் மிதந்தவர்கள் அத்தனை பேரும்
காட்டின் திசையில் சென்றார்கள்.
“இது கண்டிப்பாக மகாசுரன் வேலை தான். காட்டுல அந்த பக்கத்தாலத் தான் அசுரன்
இருக்கான்” திட்டவட்டமாக சொன்னான் கன்னியப்பன். ஆளாளுக்கு அந்த அசுரனை என்ன
செய்வது என்று திகிலுடன் பேசிக் கொண்டே கலைந்து சென்றார்கள்.
வீட்டுக்கு வந்த கன்னியப்பன் அவன் மனைவி மாரியம்மா வீட்டு வாசலில் தலைவிரி
கோலமாக நின்று ஒப்பாரி வைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு “என்ன புள்ளை?”
என்று அருகில் வந்தான்.
“எ மச்சான், பொறந்த புள்ளைய குளிப்பாட்ட வெளியே கொண்டு போச்சு உன் ஆத்தா.
அப்போது பலமா காத்து அடிச்சது. வீட்டுக்குள்ளே ஓடியாரத்துக்குள்ள அப்படியே
சொயன்ன்னு காத்து நம்ம குழந்தையும் உன் அம்மாவையும் தூக்கிட்டுப் போயிருச்சு” என்று
மீண்டும் ஒப்பாரி வைத்தாள்.
திக்பிரமை அடைந்த கன்னியப்பன் அப்படியே சோர்ந்து தரையில் அமர்ந்து விட்டான். ஊரே
கூடி நின்றது சாவடியில். கன்னியப்பன் இனி மாடு மேய்க்க போக மாட்டேன் என்று
திட்டவட்டமாக சொல்லி விட்டான். அவன் மனைவி மனநிலைமை சரியில்லாமல்
இருக்கிறாள். அவளைக் கவனித்துக் கொள்ள வேண்டும். அவன் இல்லாமல் தன்னால் போக
முடியாது என்று பிடிவாதமாக சொல்லி விட்டார்கள் செவந்தியும் கருப்பும்.
எல்லோர் வீட்டிலும் யாரேனும் காற்றில் போய் விட்டிருந்தார்கள். எனவே எல்லோர் வீட்டிலும்
சோகம் தாண்டவம் ஆடியது. கோயிலில் குறி கேட்டார்கள்.
சாமியாடி சாமி வந்து சொன்னான். அவன் குரல் மகாசுரனைப் போல கரடுமுரடாக பலத்து
இருந்தது. “ஆமாம். நான் தான் வந்து உங்கள் ஊர் மக்களையும் ஆடுமாடுகளையும் கொண்டு
போனேன்”
“வீரனா அழகா நேருக்கு நேர் வந்து கொண்டு போகாமல் காத்துல வந்தது உனக்கு
அசிங்கமாக இல்லையா?”
“உருவத்தோடு வந்தால் நீங்கள் உண்டி வில்லால் அடித்து அசிங்கப்படுத்தி அனுப்பினீர்கள்.


எங்கேனும் ஒரு அசுரனை உண்டி வில்லால் அடித்தார்கள் என்று கேள்விப்பட்டது உண்டா?
எத்தனை அசிங்கம். ஒரு அசுரனுக்கு இது அழகா?”
“நீ சின்ன பிள்ளைகளிடம் வைத்துக் கொண்டாய். அவர்கள் சிறுவர்கள். என்ன செய்ய முடியும்”
“இருந்தாலும் உங்களுக்கு தண்டனை தராமல் விட்டு விட முடியுமா?”
“எங்களை விட்டு போய் விடு”
“இப்போதைக்கு போகிறேன். மீண்டும் வருவேன்”
சொன்னதைப் போல கொஞ்ச நாட்கள் கிராமமே அமைதியாக இருந்தது.
அசுரன் பதுங்குவது மீண்டும் பாய்வதற்கா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *